உக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு உதவி செய்வதற்காக சீனாவை வாஷிங்டன் மிரட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

உக்ரேனில் ரஷ்யாவுடனான போரில் வாஷிங்டன் ஒரு தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேட்டோ ஆதரவிலான உக்ரேனிய ஆட்சியை ரஷ்யா தோற்கடித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிகாரிகள் சீனாவை அச்சுறுத்தி வருகின்றனர்.

டிசம்பர் 2023 இல் வாஷிங்டனின் கேபிடல் ஹில்லில் துணை வெளியுறவு செயலாளர் குர்ட் காம்ப்பெல் [AP Photo/Mariam Zuhaib]

அமெரிக்க-சீன உறவுகளுக்கான தேசிய குழுவில் நேற்று பேசுகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலர் குர்ட் காம்ப்பெல், ரஷ்யாவின் வெற்றிகளுக்கு ரஷ்யாவுடனான சீன மற்றும் வட கொரிய வர்த்தகத்தைக் குற்றஞ்சாட்டினார். ஐரோப்பாவில் மூலோபாய ஸ்திரப்பாடு என்பது “வரலாற்று ரீதியில் நமது மிக முக்கியமான பணி” என்று காம்ப்பெல் தெரிவித்தார். உக்ரேனில் ரஷ்ய பிராந்திய வெற்றிகள், “வெளிப்படையாக, ஏற்றுக்கொள்ள முடியாத வழிகளில் ஐரோப்பாவில் அதிகார சமநிலையை மாற்றக்கூடும்” என்று காம்ப்பெல் எச்சரித்தார்.

“நாங்கள் சீனாவிடம் நேரடியாக கூறியுள்ளோம், இது தொடர்ந்தால், அது அமெரிக்க-சீனா உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும். நாங்கள் உட்கார்ந்து கொண்டு எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்ல மாட்டோம்,” என்று காம்ப்பெல் தொடர்ந்தார். “இதை ரஷ்யாவின் தனித்துவமான நடவடிக்கைகளாக மட்டுமல்லாமல், சீனாவின் ஆதரவுடன் மட்டுமல்லாமல் வட கொரியாவின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளாகவும் நாங்கள் பார்ப்போம். இது எங்கள் நலன்களுக்கு எதிரானது” என்று அவர் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டு உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு ரஷ்ய இராணுவத்தின் ஆரம்ப பின்னடைவுகளால் சீன அதிகாரிகள் எச்சரிக்கையடைந்தனர். மேலும், ரஷ்யாவில் “முழு அளவிலான திறன்களையும்” மீண்டும் கட்டியெழுப்பினர் என்று காம்ப்பெல் கூறினார். “ஆரம்பத்தில், இது ஒரு தற்காப்பு முயற்சியாக இருந்தது. அவர்கள் ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தைக் காண விரும்பவில்லை” என்று காம்ப்பெல் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும், “ரஷ்யா ஏறத்தாழ முற்றிலுமாக பின்வாங்கியுள்ளது, அவை இப்போது உக்ரேனுக்கு [மற்றும்] சுற்றியுள்ள பிராந்தியத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை முன்வைக்கின்றன,” என்று அவர் கூறினார்.

சீன வெளியுறவு அமைச்சரக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் உடனடியாக காம்ப்பெல்லின் கருத்துக்களை நிராகரித்தார். “சீனாவும் ரஷ்யாவும் சாதாரண பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் ஈடுபட உரிமை உண்டு,” என்று கூறிய மாவோ, “இந்த வகையான ஒத்துழைப்பில் தலையிடவோ அல்லது மட்டுப்படுத்தவோ கூடாது, மேலும் சீனாவும் விமர்சனம் அல்லது அழுத்தத்தை ஏற்காது” என்று கூறினார்.

அதற்கு முந்தைய நாள், ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் பெய்ஜிங்கிற்கு சீன வெளியுறவு மந்திரி வாங் யி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருடன் நட்புரீதியான பேச்சுக்களுக்காக பயணித்திருந்தார். அங்கு, வாங் இவ்வாறு உறுதியளித்தார்: “பெய்ஜிங்கும் மாஸ்கோவும் உலக அரங்கில் மூலோபாய கூட்டுறவைத் தொடர்ந்து பலப்படுத்தும் என்பதோடு, ஒருவருக்கொருவர் பலமான ஆதரவை வழங்கும்.”

தன்னுடைய பங்கிற்கு லாவ்ரோவ், சமீபத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பெய்ஜிங்கிற்கு நன்றி தெரிவித்தார். “தேர்தல் முடிவுகள் எங்கள் தலைவர் மற்றும் தற்போதைய உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் மீது ரஷ்ய மக்களின் ஆழமான நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன” என்று லாவ்ரோவ் கூறினார். “சீன மக்கள் குடியரசு உடனான மூலோபாய மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான போக்கிற்கு இது தொடர்புடையது.”

உக்ரேனில் ரஷ்யாவுடனான நேட்டோவின் போரானது, ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் உலக மேலாதிக்கத்தை உறுதி செய்ய தொடுத்த உலகளாவிய போரின் பாகமாகும் என்பதை, சீனாவுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்கள், நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் கட்டுப்பாட்டை மீறி தீவிரப்படுத்தி வருகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஏற்கனவே, அமெரிக்க அதிகாரிகள் வட கொரியாவில் இருந்து பீரங்கி குண்டுகளை ரஷ்யா இறக்குமதி செய்வதையும், சீனாவில் இருந்து அகழ்வு இயந்திரங்கள், செமிகண்டக்டர்கள் மற்றும் கோளப்பந்து உருளை அமைப்புக்களை (ball bearings) இறக்குமதி செய்வதையும் கண்டித்துள்ளனர். உக்ரேனிய துருப்புகள் தொடர்ந்து தோல்விகளால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மாஸ்கோவும் பெய்ஜிங்கும் நெருக்கமான கூட்டுறவுக்கும் தொடர்ந்து சூளுரைத்து வருகின்ற நிலையில், இந்த அச்சுறுத்தல்கள் பயனற்றதாக இருக்கிறது. ஆதலால், அமெரிக்க அதிகாரிகள் ஒரு தீவிரமாக அச்சுறுத்துவதைத் தவிர வேறெந்த விடையிறுப்பையும் காணவில்லை.

உக்ரேன் போர் ஆசியாவில் இராணுவப் பதட்டங்களை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம், ஆஸ்திரேலியா-பிரிட்டன்-அமெரிக்கா (AUKUS) கூட்டணியில் ஜப்பானை சேர்க்க காம்ப்பெல் அழைப்பு விடுத்தார். ஏனெனில், இது தைவான் மீது சீனாவுடனான போரை வெல்வதற்கு முக்கியமாக இருக்கலாம். இன்று, உயர்மட்ட சீன சட்டமன்ற உறுப்பினர் ஜாவோ லெஜி “சர்வதேச சூழ்நிலையின் ஆழமான மாற்றங்கள்” மீது “ஆழமான மற்றும் நெருக்கமான மூலோபாய தகவல்தொடர்பு” கொள்வதற்காக வட கொரியாவுக்கு மூன்று நாள் விஜயத்தை தொடங்குகிறார் என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

இந்த இராணுவ பதட்டங்களின் மையத்தில் சீனா மீதான அமெரிக்க பொருளாதார போர் அச்சுறுத்தல்கள் உள்ளன — 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை வாஷிங்டன் முறித்த பின்னர், அமெரிக்க டாலர் பரிவர்த்தனைகளில் இருந்து ஈரானை தடுப்பதற்கு வாஷிங்டன் பயன்படுத்தியதைப் போன்ற தடையாணைகளைக் கொண்டு சீனாவின் கழுத்தை நெரிக்க அமெரிக்க டாலரின் மேலாதிக்க உலக பாத்திரத்தைப் பயன்படுத்துகிறது. உலகின் பிரதான பொருளாதாரங்களில் பெரும்பாலானவற்றிற்கு மிகப் பெரிய அல்லது இரண்டாவது மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக உள்ள 17.5 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமான சீனாவை தனிமைப்படுத்துவதன் நாசகரமான உலகளாவிய தாக்கம், ஈரான் மீதான அமெரிக்க தடையாணைகளின் தாக்கத்தையும் கூட சிறியதாக்கும்.

ஏப்ரல் 8 அன்று, பெய்ஜிங்கில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், அமெரிக்க கருவூலச் செயலர் ஜேனட் யெலென் அப்பட்டமாக சீனாவை இவ்வாறு அச்சுறுத்தினார். “ரஷ்யாவின் பாதுகாப்பு தொழில்துறை தளத்தை ஆதரிக்கும் மற்றும் உக்ரேனுக்கு எதிராக போர் தொடுக்க உதவும் பொருட்களின் ஓட்டத்தைத் தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய ஜனாதிபதி பைடெனும் நானும் உறுதியாக இருக்கிறோம். ரஷ்யாவின் இராணுவக் கொள்முதலில், சீன மக்கள் குடியரசில் இருப்பவை உட்பட எந்தவொரு நிறுவனங்களும் வகிக்கும் பாத்திரம் குறித்து நாங்கள் தொடர்ந்து கவலை கொண்டுள்ளோம்,” என்றார்.

“சீன மக்கள் குடியரசில் உள்ளவை உட்பட நிறுவனங்கள் ரஷ்யாவின் போருக்கு பொருள் ஆதரவை வழங்கக் கூடாது என்றும், அவ்வாறு செய்தால் அவை குறிப்பிடத்தக்க விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் நான் வலியுறுத்தினேன்,” என்று யெலென் கூறினார். மேலும் இதைச் சேர்த்துக் கொண்டார்: அதாவது “ரஷ்யாவின் பாதுகாப்பு தொழில்துறை தளத்திற்கு இராணுவ அல்லது இரட்டை பயன்பாட்டு பொருட்களை வழிநடத்தும் குறிப்பிடத்தக்க பரிவர்த்தனைகளை எளிதாக்கும் [ஒரு] வங்கிகள் அமெரிக்க தடையாணைகளின் அபாயத்திற்கு தங்களை அம்பலப்படுத்திக் கொள்கின்றன.”

யெல்லெனின் கருத்துக்கள் குறித்து செய்தி வெளியிட்ட புளூம்பேர்க் செய்தி நிறுவனம் பின்வருமாறு குறிப்பிட்டது: “நிதி அமைப்புகளுக்கு எதிரான அமெரிக்காவின் இறுதி ஆயுதம், அமெரிக்க டாலர்களை அவை அணுகுவதைத் துண்டிக்கும் கருவூலத்தின் திறனாகும். இது சர்வதேச அளவில் செயல்படும் எந்தவொரு வங்கிக்கும் ஒரு உயிர்பிழைப்புக்கான அச்சுறுத்தலாகும்.” 2020 ஆம் ஆண்டில், ஈரானுக்கு எதிராக இந்த ஆயுதத்தைப் பயன்படுத்திய பின்னர், டிரம்ப் நிர்வாகம் ஹாங்காங் சுதந்திர போராட்டங்கள் மீதான பெய்ஜிங்கின் ஒடுக்குமுறையின் போது சீனாவை அச்சுறுத்தியது.

அமெரிக்க டாலரை சீனா அணுகுவதைத் தடுப்பது, குறைந்தபட்சம் ஒரு ஆரம்ப காலத்திற்கு, உலக வணிகத்தின் பெரும்பகுதியிலிருந்து சீனாவை விலக்கி வைக்கும். அமெரிக்க டாலர் இன்னும் உலக நிதியத்தில் ஒரு மேலாதிக்க பங்கைக் கொண்டுள்ளது. பல தசாப்தங்களாக அமெரிக்க தொழில்துறை வீழ்ச்சிக்குப் பின்னர், இப்போது அமெரிக்காவின் உண்மையான பொருளாதார எடையுடன் முற்றிலும் விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்டுள்ளது. 2022 இல் அமெரிக்கா உலகளாவிய பொருளாதார உற்பத்தியில் வெறும் 15 சதவீதத்தையும் உலகளாவிய ஏற்றுமதிகளில் 8 சதவீதத்தையும் மட்டுமே கொண்டிருந்த போதிலும், உலக வர்த்தகத்தில் முழுமையாக 88 சதவீதமும், வங்கி சேமிப்புக்களில் 60 சதவீதமும் அமெரிக்க டாலர்களில் குறிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய அமெரிக்கத் தடைகளுக்கு அஞ்சி பல நாடுகள் ஏற்கனவே டாலரை ஓரளவு தவிர்க்க முயன்று வருகின்றன. ரஷ்யா, கஜகஸ்தான், பிரேசில், ஆர்ஜென்டினா, துருக்கி, பாகிஸ்தான், சவுதி அரேபியா, தாய்லாந்து மற்றும் லாவோஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ளூர் நாணயங்களுக்கு சீன யுவானை நேரடியாக வர்த்தகம் செய்ய சீனா பரிமாற்ற ஒப்பந்தங்களை அமைத்துள்ளது. இந்த பரிமாற்றங்கள் ரஷ்யாவுடன் ஒரு நாளைக்கு 20 பில்லியன் யுவான் ஆகவும் (அமெரிக்க $ 2.76 பில்லியன்), பிரேசிலுக்கு மொத்தம் 190 பில்லியன் யுவான், ஆர்ஜென்டினாவில் 130 பில்லியன் யுவான் மற்றும் துருக்கியில் 23 பில்லியன் யுவான் மதிப்புடையதாகவும் இது உள்ளது.

சீனாவை இலக்கு கொண்ட அமெரிக்கத் தடைகள், மலிவான சீன நுகர்பொருட்களை வாங்குவதை நம்பியுள்ள, உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான உழைக்கும் மக்களுக்கு பேரழிவைக் கொடுக்கும்.

உக்ரேன் போர் என்பது பிப்ரவரி 2022 இல் முதலில் குண்டை யார் சுட்டது என்பதை விட அதிகமாக உள்ளது என்பது இப்போது தெளிவாகிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், முதலாளித்துவம் மீண்டும் மரண நெருக்கடியில் உள்ளது. மாபெரும் மார்க்சிஸ்டுகள் விளக்கியதைப் போல, 20 ஆம் நூற்றாண்டின் உலகப் போர்களின் கீழமைந்த அதே அடிப்படை முரண்பாடுகள் அதன் இதயத்தானத்தில் உள்ளன: அதாவது உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும், மற்றும் சமூகரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி மற்றும் இலாபத்தை தனியார் கையகப்படுத்திக் கொள்வதற்கும் இடையிலான முரண்பாடுகள்தான் அவைகளாகும்.

வாஷிங்டனும் அதன் நேட்டோ ஏகாதிபத்திய கூட்டாளிகளும், அதிகார சமநிலையிலும் உலக நிதியிலும் அவற்றின் இடத்தை பலப்படுத்த ஒரு உலகளாவிய மோதலைத் தொடங்கியுள்ளனர். ரஷ்யாவை எதிர்த்துப் போரிட பிரான்ஸ் உக்ரேனுக்கு தரைப்படை துருப்புகளை அனுப்பக்கூடும் என்று இந்த குளிர்காலத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்திருப்பது, எழுந்து வரும் இந்த மூன்றாம் உலகப் போர் அணுவாயுதச் சக்திகளுக்கு இடையிலான நேரடி ஆயுதமேந்திய மோதலுக்கு இட்டுச் செல்லும் அபாயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உக்ரேனில் ரஷ்ய வெற்றிகள் மற்றும் உலகப் பொருளாதாரத்துடன் 45 ஆண்டுகள் ஒருங்கிணைந்ததற்குப் பின்னர் சீனாவின் பரந்த வளர்ச்சி ஆகியவற்றிற்கு இடையே, மாஸ்கோவும் பெய்ஜிங்கும் ஏகாதிபத்திய போரை நிறுத்துவதற்கான எந்த முன்னோக்கையும் கொண்டிருக்கவில்லை. ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் சீனாவில் முதலாளித்துவ மீட்சி மற்றும் 1989-1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து எழுந்த ஆட்சிகள், போருக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கு விண்ணப்பம் செய்வதற்கு உயிர்ப்புடன் தகைமையற்றவையாக உள்ளன. அதற்கு பதிலாக, அமெரிக்க அதிகாரிகளின் கருத்துக்களானது, ஏகாதிபத்தியம் ஏதாவதொரு துறையில் இந்த ஆட்சிகளின் வெற்றிகளுக்கு வெறுமனே அவர்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலமாக எதிர்வினையாற்றுகிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தில் அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்கம் மட்டுமே போரை நிறுத்தக்கூடிய ஒரே சக்தியாகும்.

Loading