சீனாவுடன் சர்ச்சையிலுள்ள தனது எல்லையில் இந்தியா 10,000 மேலதிக துருப்புக்களை நிறுத்துவதால் பதற்றம் அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா-சீனா எல்லை மோதல் அதன் ஐந்தாம் ஆண்டை நெருங்கும் நிலையில், மேற்கு திபெத்தை ஒட்டிய இந்திய மாநிலங்களான உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் சீனாவுடனான சர்ச்சைக்குரிய எல்லையில் மேலதிகமாக 10,000 துருப்புக்களை புது டெல்லி “முன்னோக்கி” நிறுத்தியுள்ளது.

இந்த விரிவாக்கம் அணு ஆயுதம் கொண்ட பகையாளிகளுக்கு இடையே ஒரு முழுமையான போரின் அபாயத்தை உயர்த்துகிறது. இது வாஷிங்டனுடன் தெளிவாக ஒருங்கிணைக்கப்பட்டதாகும். சீனாவுடன் அமெரிக்கா போருக்குச் செல்லும்பட்சத்தில் பென்டகனுக்கு எப்படியான ஆதரவை இந்தியா வழங்கும் என்பதை விவரமாக கூறும்படி புது தில்லிக்கு வாஷிங்டன் அழுத்தம் கொடுத்ததாக கடந்த கோடையில் இந்திய அதிகாரிகள் வெளிப்படுத்தியிருந்தனர். இது, இந்தியா-சீனா எல்லை தகராறில் அமெரிக்கா தன்னைத்தானே முன்னெப்போதும் இல்லாத வகையில் நுழைத்துவரும் நிலையிலேயே நடைபெறுவதுடன் தாய்வான் ஊடாகவும் மற்றும் ஆசியாவில் அதனுடன் உடன்படிக்கை கொண்டுள்ள கூட்டாளிகளான ஜப்பான், தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஊடாகவும் சீனா மீது பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ மூலோபாய அழுத்தத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

10 பெப்ரவரி 2021 புதன்கிழமையன்று, இந்தியா-சீனா எல்லையில் லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரிப் பகுதியின் கரையில் உள்ள டாங்கிகள். [AP Photo/India Army via AP]

மே 2020 முதல் பல்லாயிரக்கணக்கான இந்திய மற்றும் சீன துருப்புக்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான வரையறுக்கப்படாத எல்லையான, உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) வழியாக ஒருவருக்கொருவர் எதிராக அணிவகுத்து நிறுத்தப்பட்டன. பல சந்தர்ப்பங்களில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சின், இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லடாக்கை சந்திக்கும் இடத்தில், இந்திய படையினரும் மக்கள் விடுதலை இராணுவ துருப்புக்களும் மோதிக்கொண்டமை, 1962 இல் ஒரு குறுகிய எல்லைப் போர் நடந்து நீண்ட காலத்தின் பின்னர், உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு இடையிலான மிகவும் குறிப்பிடத்தக்க எல்லை மோதலாகும். 2020 ஜூனில், 20 இந்திய மற்றும் நான்கு சீன இராணுவத்தினர் அவர்களுக்கு இடையிலான கைகலப்பில் கொல்லப்பட்டனர். அந்த ஆண்டு ஆகஸ்டில் பல ஆயிரம் இந்தியப் படைகள் எதிர்ப்பின்றி “மூலோபாய உயரங்களை” கைப்பற்றின. இதைப் பற்றி இந்திய அரசாங்க அதிகாரிகள் பின்னர் கூறுகையில், அது இலகுவாக சீனத் துருப்புக்களுடன் ஒரு பெரிய மோதலுக்கு வழிவகுத்து விரைவில் ஒரு போராக விரிவாக்கம் கண்டிருக்க கூடும் என்பதை ஒப்புக்கொண்டனர். 2022 டிசம்பரில் மேலும் ஒரு மோதலுக்குப் பிறகு, அமெரிக்காவின் “அவ்வப்போதைய” உளவுத்துறை தகவலுக்கு நன்றி கூறும் வகையில், சீன முன்னேற்றம் என்று அது கூறியதை தனது படைகள் முறியடிக்க முடிந்ததாக புது டில்லி பெருமிதம் கொண்டது.

நிலைமை உச்சபட்ச கொதிநிலையிலேயே உள்ளது. வாஷிங்டன் மற்றும் அதன் பிரதான ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவின் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர இராணுவ-மூலோபாய உறவுகளை வியத்தகு முறையில் விரிவுபடுத்த, பிரதமர் நரேந்திர மோடியும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (BJP) அரசாங்கமும் இந்த எல்லை மோதலை பயன்படுத்தினர். அதன் மூலமாக சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் உந்துதலில் இந்தியா அதன் இளைய பங்காளியாகவும் களமுனை அரசாகவும் அதன் பாத்திரத்தை பலப்படுத்துகிறது.

வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மார்ச் 5-8 திகதிகளில் தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொண்டு விரிவான இராணுவ ஒத்துழைப்பை வலியுறுத்திய நிலையிலேயே உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கு புதிய துருப்புக்கள் அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டது,

பாகிஸ்தானுடனான இந்தியாவின் மேற்கு எல்லையில் இருந்து துருப்புக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை, புது டெல்லியானது அதன் வரலாற்று எதிரியான பாகிஸ்தானை அன்றி இப்போது சீனாவையே அதன் பிரதான எதிரியாகப் பார்க்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எல்லையில், 2020 முதல் இந்தியா மற்றும் சீனா ஒவ்வொன்றும் முன்னோக்கி நகர்த்திய 50,000 துருப்புக்களுக்கு மேலதிகமாக இந்த படையினர் அனுப்பப்பட்டுள்ளதுடன் அவற்றுடன் கணிசமான எண்ணிக்கையில் டாங்கிகள், போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகளும் அனுப்பப்பட்டுள்ளன. துருப்புக்களின் விரைவான நகர்வு மற்றும் வசதியற்ற இமயமலை எல்லைப் பகுதிக்கு விநியோகத்தை எளிதாக்கும் நோக்கில், இருபுறமும் புதிய பாதுகாப்பு அரண்கள், விமான ஓடுபாதைகள், சாலைகள், சுரங்கப்பாதைகள், பாலங்கள், இரயில் இணைப்புகள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏறக்குறைய இரண்டு டஜன் சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், மிக சமீபத்திய பேச்சுவார்த்தை பெப்ரவரி 19 அன்று நடைபெற்றிருந்த போதிலும், ஒவ்வொரு தரப்பினரும் எதிரில் உள்ளவரை பின்வாங்க வலியுறுத்தும் நிலையில், விட்டுக்கொடுப்பற்ற நிலை தொடர்கிறது.

இந்தியாவின் சமீபத்திய ஆத்திரமூட்டலுக்கு சீனாவின் பதில் ஒப்பீட்டளவில் மந்தமாக உள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “பதற்றத்தைத் தணிக்க இது உகந்ததாக இருக்காது” என்றும், “எல்லைப் பகுதிகளின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா உறுதிபூண்டுள்ளது” என்றும் கூறினார்.

சீன-இந்திய எல்லை மோதலில் வாஷிங்டனின் இன்னும் அதிகமான இடையூறு தலையீடு

பதட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் மோடி மார்ச் 9 அன்று வடகிழக்கு இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் 4,000 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட இருவழி சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார். இந்த சுரங்கப்பாதையானது எல்லை மாநிலத்திற்கு இராணுவத்தினர் மற்றும் இராணுவ உபகரணங்களை எளிதாக எடுத்துச்செல்வதையும் தொலைதூர பகுதியில் ஆண்டு முழுவதும் நடமாட்டத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலதிகமாக, சாலை மேம்பாடு மற்றும் மின்சார உற்பத்தி உட்பட பல துணை உள்கட்டமைப்பு வேலை தொடக்கத்தையும் அவர் அறிவித்தார்.

மோடியின் பயணம், அருணாச்சலப் பிரதேசம் தொடர்பாக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தொடர்ச்சியான வாய்மொழி சண்டைக்கு வழிவகுத்தது. சீனா தனது சொந்தப் பகுதி என்று உரிமை கோரும் இப்பகுதியில் மோடியின் வருகையையும் அந்த பகுதியில் இந்தியா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் ஆட்சேபித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், மார்ச் 11 அன்று, “ஜாங்னான் பகுதி (அருணாச்சலப் பிரதேசத்திற்கு பெய்ஜிங்கால் பயன்படுத்தப்படும் பெயர்) சீனப் பிரதேசம்” என்று மீண்டும் வலியுறுத்தியதோடு அது “அருணாச்சல பிரதேசம் என்று அழைக்கப்படுவதை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை” என்றார். “ஜாங்னான் பகுதியை எதேச்சதிகாரமாக அபிவிருத்தி செய்ய இந்தியாவிற்கு உரிமை இல்லை” என்று அவர் வலியுறுத்தியதோடு “சீனா-இந்திய எல்லையின் கிழக்குப் பகுதிக்கு” மோடியின் வருகையை கடுமையாக எதிர்த்தார்.

அடுத்த நாள், வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையுடன் இந்தியா பதிலளித்தது. “இந்தியத் தலைவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் செல்வது போல் அவ்வப்போது அருணாச்சலப் பிரதேசத்திற்குச் செல்கிறார்கள்,” அது “எப்போதும் இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறது, இருக்கும்,” என்றார்.

இந்தியாவின் எல்லைக் கோரிக்கைகளுக்கு வெளிப்படையாக தனது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல், “அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பிரதேசமாக அமெரிக்கா அங்கீகரிப்பதுடன் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் இராணுவம் அல்லது பொதுமக்கள் மூலம் ஊடுருவல் அல்லது அத்துமீறல்கள் ஊடாக பிராந்திய உரிமைகோரல்களை முன்னெடுக்கும் எந்தவொரு ஒருதலைப்பட்ச முயற்சியையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்,” என்று மார்ச் 20 அன்று கூறினார். வாஷிங்டன் இந்திய நிலைப்பாட்டை முழுமையாக ஆதரித்து வாதிடுவது என்பது 2020க்கு முன்னர் எல்லைப் பிரச்சனை குறித்த விஷயத்தில் கேள்விப்பட்டிராத விடயமாகும். இந்த நிலைப்பாட்டை எதிர்த்த பெய்ஜிங், இது இரு நாடுகளுக்கும் இடையேயான விவகாரம் என்றும் இதில் அமெரிக்காவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அறிவித்தது.

புது தில்லி தனது இராணுவவாத வாய்சவடாலை முடுக்கிவிட்டுள்ளது. தெளிவாக சீனாவை இலக்காகக் கொண்ட கருத்துக்களில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மார்ச் 7 அன்று, “நிலம், வானம் அல்லது கடல், இவற்றில் எங்கிருந்தாவது யாரேனும் இந்தியாவைத் தாக்கினால், நமது படைகள் உறுதியாக பதிலடி கொடுப்பதோடு யாராவது நம்மை ஆச்சரியப்படுத்த நினைத்தால் நாங்கள் தகுந்த பதிலடி கொடுக்கும் நிலையில் இருக்கிறோம்,” என்று கூறினார்.

இந்திய முதலாளித்துவம் உலக அரங்கில் ஒரு முக்கிய ஆட்டக்காரனாக மாறும் நோக்கத்துடன் உள்ளது. இருப்பினும், ஆளும் உயரடுக்கின் திமிர்பிடித்த அபிலாஷைகள் இந்திய முதலாளித்துவத்தின் உண்மையான திறன்களுடன் ஒத்துப்போகவில்லை. மதிப்பீடுகள் வேறுபட்டிருந்தாலும் கூட, சீனப் பொருளாதாரம் இந்தியாவை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு பெரிதாகவும் பெரும்பாலான தொழில்நுட்ப தளங்களில் சீனா இந்தியாவை விஞ்சியும் உள்ளது. அதற்கேற்ப, புது தில்லியை விட பெய்ஜிங் மேலதிக இராணுவ வலிமையை கொண்டுள்ளது.

பெய்ஜிங்குடன் ஒப்பிடுகையில், சீனாவிற்கு எதிரான அமெரிக்க மூலோபாயத் தாக்குதலில் தன்னைத் தானே முழுமையாக ஒருங்கிணைத்துக்கொள்வதன் மூலமும் சீனாவிற்கு எதிராக மாற்று மலிவு-தொழிலாளர் உற்பத்தி சங்கிலி மையமாக இந்தியாவை ஏகாதிபத்திய சக்திகளுக்கு அர்ப்பணிப்பதன் மூலமும், புது தில்லி தனது குறிப்பிடத்தக்க பலவீனத்தை ஈடுகட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதே சமயத்தில் இந்தியா தனது சொந்த இராணுவ வலிமையை உயர்த்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மார்ச் 11 அன்று, இந்தியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, பல்வேறு முன் இணைப்பு வசதிகொண்ட அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை பரிசோதித்தது. இவை முதன்மையாக சீனாவை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. 2021 ஆம் ஆண்டில், இந்தியா முதன்முதலில் சீனாவின் அனைத்து பகுதிகளையும் சென்றடையும் திறன் கொண்ட அக்னி-5 ஐசிபிஎம் ஏவுகணையை பரிசோதித்ததுடன் அது 5,000 கிமீ தூரம் செல்லக்கூடியது என்று பெருமிதம் கொண்டது.

பூட்டான், நேபாளம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதி

தெற்காசியா முழுவதும் அதன் மூலோபாய செல்வாக்கை அதிகரிக்க புது தில்லியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்திய வாரங்களில், இந்த முயற்சிகள், இந்தியா நீண்ட காலமாக தான் பாதுகாத்து வரும் அரசாக கருதுகின்ற சிறிய இமயமலை பகுதி அரசான பூட்டானை மையமாகக் கொண்டுள்ளன. பூட்டானுடன் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கான சீனாவின் நகர்வுகள் குறித்து கவலை கொண்ட இந்தியா, அதன் செல்வாக்கை வலுப்படுத்த, மார்ச் 14 முதல் 18 வரை இடம்பெறும், பூடான் பிரதமர் தஷோ ஷேரிங் டோப்கேயின் வருகையை பயன்படுத்திக் கொண்டது. மோடியும் டோப்கேயும் உள்கட்டமைப்பு, இணைப்பு, ஆற்றல் மற்றும் மக்களுக்கு மக்கள் பரிமாற்றம் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடியதுடன் இரு நாடுகளுக்கு இடையேயான “தனித்துவமான” மற்றும் “நிலையான” நட்பை வலுப்படுத்துவதற்கான அவர்களின் “அர்ப்பணிப்பை” மீண்டும் உறுதிப்படுத்தினர்.

டோப்கேயின் பயணத்தைத் தொடர்ந்து மோடி இரண்டு நாள் பயணமாக மார்ச் 22-23 தேதிகளில் பூட்டானுக்கு சென்றார். திம்புவில், பல்வேறு பகுதிகளில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த மோடி பேச்சுவார்த்தை நடத்தினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் பூட்டானின் ஐந்தாண்டு திட்டத்திற்கான இந்திய உதவியை 50 பில்லியன் ரூபாயில் (US$600 மில்லியன்) இருந்து 100 பில்லியன் ரூபாயாக இரட்டிப்பாக்குவதும் அடங்கும்.

திம்புவும் பெய்ஜிங்கும் எல்லை ஒப்பந்தத்தை எட்டுவதில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளன என்ற செய்திகளால் புது தில்லி கவலை கொண்டுள்ளது. அதாவது அத்தகைய ஒப்பந்தம் பூட்டானுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொள்வதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு குறுக்கீடாக இருக்கும் என்றே கவலை கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், டோக்லாம் பீடபூமி எல்லைப் பிரச்சனையில், பூட்டானுக்கு ஆதரவு தரும் பெயரில் இந்தியா தலையிட்டது. தனது செல்வாக்கைத் தக்கவைத்து கொள்ளவும் திம்பு வேறு எங்காவது பிரதேச பரிமாற்ற சலுகைகள் வழங்கும் போது டோக்லாமை பெய்ஜிங்கிற்கு விட்டுக்கொடுக்காமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் பூடான், சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடும் இமயமலைப் பகுதிக்கு இந்தியா தனது சொந்த படைகளை அனுப்பியது.

ஒரு போர் வெடிக்கும் சமயத்தில், இந்தியாவை அதன் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கின்ற பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், சீனா ஆகியவற்றிற்கு இடையே இந்தியப் பகுதியின் குறுகிய துண்டாக இருக்கும் தீர்க்கமான சிலிகுரி நுழைவாயிலின் கட்டுப்பாட்டை, சீனப் படைகள் கைப்பற்றக்கூடிய நிலையில் இருக்கும் என்று இந்திய மூலோபாயவாதிகள் நீண்ட காலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுதலாக, புது தில்லியும் வாஷிங்டனும் இலங்கை மற்றும் நேபாளத்தையும் தங்கள் மூலோபாய சுற்றுப்பாதையில் ஒருங்கிணைப்பதை ஆழப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு (ISR) விமான காட்சிப்படுத்தலை மையமாகக் கொண்டு, இந்தியப் பெருங்கடலில் சீன நடவடிக்கைகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்கு மார்ச் 12-14 திகதிகளில், அமெரிக்க பாதுகாப்பு துறையும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமும் இலங்கை விமானப்படைக்கு பயிற்சி அமர்வுகளை நடத்தின. இதற்கு முன்னதாக, பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா உட்பட நான்கு சிரேஷ்ட அமெரிக்க அரசாங்க அதிகாரிகளின் பயணம் இந்த விடயத்தில் பிரதானமாக அமைந்தது. பங்களாதேஷைக் கூட சீனத் தொடர்புகளை தளர்த்துமாறு இந்தியா நெருக்கி வருகின்றது.

பெப்ரவரி பிற்பகுதியில், மேற்கு இந்தியப் பெருங்கடலில் அதன் இருப்பை வலுப்படுத்தும் புது தில்லியின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, இந்தியா மற்றும் மொரீஷியஸ் அதிகாரிகள் சிறிய மொரிஷியஸ் தீவான அகலேகாவில் இந்திய நிதியில் அமைக்கப்பட்ட ஒரு விமான ஓடுதளத்தையும் படகுத்துறையையும் திறந்து வைத்தனர். அகலேகா, ஆப்பிரிக்காவிற்கு அருகாமையில் அமைந்துள்ள, இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு முக்கியமான மூலோபாய புறக்காவல் நிலையமாகும். இதற்கு மேலாக, ஓமானின் டுக்ம் துறைமுகத்திற்கு இந்தியா இடைமாற்று வசதி அணுகலைப் பெற்றுள்ளது.

மாலைத்தீவில் சீன-சார்பு அரசாங்கத்தையும் பெய்ஜிங்குடனான அதன் சமீபத்திய இராணுவ ஒப்பந்தத்தை எதிர்கொள்ள, புது தில்லி அதன் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்தியாவின் லட்சத்தீவு தீவுக்கூட்டத்தில் உள்ள மினிகோய் தீவில், INS ஜடாயு என்ற புதிய கடற்படை தளத்தை அமைத்துள்ளது. இது மாலத்தீவில் இருந்து 800 கிமீ தொலைவில் உள்ள தீவுக்கூட்டத்தில் இந்தியாவின் இரண்டாவது கடற்படை தளமாக இருக்கும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மாலைத்தீவிற்கு, அதன் பிரதான வெளிநாட்டு நாணய வருமானமாக இருக்கும் சுற்றுலாவிற்கு இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. இந்த குறைப்பை மாலைத்தீவின் தலைநகரான மாலேவுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு வழியாக புது தில்லி பார்க்கிறது.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தின் கீழ் தொடங்கப்பட்டு, மோடியின் 10 ஆண்டுகால பாராதீய ஜனதா கட்சி ஆட்சியின் போது பெரிதும் விரிவுபடுத்தப்பட்ட, சீனாவிற்கு எதிரான “இந்தோ-அமெரிக்க பூகோள மூலோபாய கூட்டானது” இந்தியா, ஆசியா மற்றும் உலக மக்களை ஒரு பூகோளரீதியான மோதல் மற்றும் அணுஆயுதப் போர் பேரழிவுக்குள் சிக்க வைக்கும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் வெளிவரும் இந்தியாவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்த அச்சுறுத்தல் பற்றி எந்த விவாதமும் இருக்காது. ஏனென்றால், பா.ஜ.க. தொடக்கம் ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிபிஐ-ஆதரவு கொண்ட காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா எனப்படும் எதிர்கட்சி தேர்தல் கூட்டணி வரை, அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துப் பிரிவுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்திய முதலாளித்துவத்தின் போர்க் கூட்டணிக்கு பின்னால் உறுதியாக நிற்கின்றன.

மேலும் படிக்க

Loading