முன்னோக்கு

வெள்ளை மாளிகை இரவு விருந்தில் UAW தலைவர் ஃபெயின்: மூன்றாம் உலகப் போருக்கான பெருநிறுவன கூட்டணி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

சீனாவுடனான பொருளாதார மற்றும் இராணுவ மோதலை தீவிரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, ஜப்பானிய பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடாவுக்காக, வாகன தொழிலாளர் சங்கத் (UAW) தலைவர் ஷான் ஃபெயின் கடந்த புதன்கிழமை இரவு விருந்தில் கலந்து கொண்டார். UAW தலைவர் ஃபெயினின் பங்கேற்பானது, தனிப்பட்ட அழுகல் தன்மையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சமூக செயல்பாட்டையும் அம்பலப்படுத்துகிறது.

ஒரு பிரச்சார நிகழ்வில் கலந்து கொள்வதற்காக செல்ஃப்ரிட்ஜ் விமான தேசிய காவலர் தளத்திற்கு வரும் போது, ​​ஜனாதிபதி ஜோ பைடெனை, UAW தலைவர் ஷான் ஃபெயின் இடதுபுறம், மற்றும் டேரன் ரிலே, ஒரு உள்ளூர் தொழில்முனைவோரால் வரவேற்கப்படுகிறார். [AP Photo/Evan Vucci]

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கூட்டாட்சி புலனாய்வாளர்கள் பல உயர் அதிகாரிகளை லஞ்சம் வாங்கியதற்காகவும், தொழிலாளர்களின் சந்தாப் பணத்தை திருடியதற்காகவும் சிறைக்கு அனுப்பிய பின்னர், UAW ஐ “ஜனநாயகப்படுத்துவேன்” என்று பொய்யாகக் கூறி ஃபெயின் பதவிக்கு வந்தார். ஆனால், கடந்த ஆண்டு, வரையறுக்கப்பட்ட மற்றும் சக்தியற்ற வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, விற்றுத்தள்ளும் ஒப்பந்தத்தை திணித்த ஃபெயின், ஆயிரக்கணக்கான வாகனத் தொழிலாளர்களின் வேலை இழப்புக்கு வழிவகுத்தார்.

இதற்கிடையில், டெட்ராய்ட் நகரத்திலுள்ள லண்டன் சோப்ஹவுஸ் உணவகத்தில் அவரது முன்னோடிகள் சுருட்டுகளை புகைத்தும் இறைச்சித் துண்டுகளை சுவைத்து அனுபவித்துக் கொண்டிருந்தபோது ஃபெயின், நாட்டுத் தலைவர்கள், ஜேமி டிமோன் மற்றும் டிம் குக் போன்ற கோடீஸ்வரர்கள் மற்றும் “இனப்படுகொலை ஜோ” பைடென் உட்பட பல்வேறு போர்க் குற்றவாளிகளுடன் வெள்ளை மாளிகையில், திறந்தவெளிச் சூழலில் வைத்து உலர வைக்கப்பட்ட எலும்புடன் கூடிய மாமிசத்தை புசித்துக்கொண்டிருந்தார்.

UAW தொழிற்சங்கம், பாரிய பணிநீக்கங்களுக்கு ஒத்துழைத்து வருவதால், அதன் தலைவர் ஃபெயினின் அரசியல் நட்சத்திரம் உயர்ந்து வருகிறது. இது, ஆளும் வர்க்கம், குறிப்பாக ஜனநாயகவாதிகள் மற்றும் பைடென் நிர்வாகம் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கவும், விற்றுத்தள்ளவும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை நம்பிக்கொண்டிருக்கிறது என்பதற்கான சமீபத்திய சான்றாகும். வாகனத் துறையின் அனுபவம், UPS உட்பட, இதர தொழில்களில் எண்ணற்ற முறை திரும்பத் திரும்ப வந்துள்ளது. அங்கு கடந்த ஆண்டு டீம்ஸ்டர்ஸ் ஒப்பந்தம், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவும், 200 ஆலைகளை மூடவும் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், புதன்கிழமை வெள்ளைமாளிகை வரவேற்பறையில் ஃபெயினின் பிரசன்னம், முதலாளித்துவ வர்க்கத்திற்கு தொழிற்சங்க அதிகாரத்துவம் வகிக்கும் இன்னும் முக்கியமான பாத்திரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: இது உலகப் போரின் விரிவாக்கத்துக்கு வழி வகுக்கிறது.

ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதும், தனது நாட்டின் மீள்இராணுவமயமாக்கலை தீவிரப்படுத்துவதும் ஜப்பானிய பிரதமரின் அமெரிக்க பயணத்தின் குறிக்கோளாக இருந்தது. இந்த கூட்டணியின் முக்கிய இலக்கு சீனா ஆகும். அதன் பொருளாதார வளர்ச்சி அமெரிக்க ஏகாதிபத்திய உலக மேலாதிக்க இருப்புக்கு அச்சுறுத்தலாக வாஷிங்டனால் பார்க்கப்படுகிறது. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான போருக்கான திட்டங்கள் நன்கு முன்னேறியுள்ளன. 2025 இல் தொடங்கும் அத்தகைய மோதலுக்கு காங்கிரஸ் தயாராகிறது. இது தவிர்க்க முடியாமல் நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான அமெரிக்க துருப்புக்களை உள்ளடக்கும்.

வெள்ளை மாளிகையின் வரவேற்பறையில் ஃபெயினின் இருப்பு முற்றிலும் யூகிக்கக்கூடியதாக இருந்தது. விரிவடைந்துவரும் உலகப் போரில், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பாத்திரம், “உள்நாட்டு போர்முனையில்” தொழிலாள வர்க்கத்தை ஒழுங்குபடுத்துவதும், இராணுவ உபகரணங்களை தொடர்ந்து உற்பத்தி செய்து, அதனை போரில் பயன்படுத்துவதை உறுதிசெய்வதும், போருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவதும் மற்றும் போருக்கான விலையை செலுத்துவதற்கு சுரண்டலை அதிகரிப்பதும் ஆகும்.

உலகப் போர் ஏற்கனவே உக்ரேனின் போர்க்களங்களிலும், காஸா பகுதியின் இஸ்ரேலிய போர்க்களங்களிலும் வேகமாக தொடங்கியுள்ளது. இவை தனித்தனியான மோதல்கள் அல்ல, ஆனால் ஒரு வளர்ந்து வரும் உலகளாவிய மோதலின் கூறுகள் ஆகும். அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்திய நட்பு நாடுகளும் விநியோகச் சங்கிலிகள் மற்றும் இயற்கை வளங்கள் மீதான தங்கள் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த போரைப் பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளன.

ஜப்பானிய பிரதமர் கிஷிடாவின் அமெரிக்க விஜயம், சமீபத்திய வாரங்களில் ஏகாதிபத்திய சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட பெரிய இராணுவ விரிவாக்கங்களின் ஒரு தொடரின் சமீபத்தியதாகும். நேட்டோ துருப்புக்களை உக்ரேனுக்கு அனுப்பும் யோசனையை பிரெஞ்சு ஜனாதிபதி பகிரங்கமாக முன்வைத்துள்ளார். இது, மேற்கத்திய மற்றும் ரஷ்ய துருப்புக்களுக்கு இடையில் சண்டையிடும் அபாயத்தை எழுப்புகிறது. இது விரைவில் அணு ஆயுத யுத்தமாக மாறக்கூடும். உலக வரலாற்றில் மிக மோசமான அட்டூழியங்களை நிகழ்த்திய ஜேர்மனி, மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் நாடு “போருக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்று அறிவித்து, அதன் இராணுவ மரபுகளை புதுப்பித்து வருகிறது.

உலக ஏகாதிபத்தியத்தின் தலைமை சக்தியான அமெரிக்கா, சமீபத்தில் $825 பில்லியன் டொலர்களுடன் தனது இராணுவ வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதே நேரத்தில், காஸாவில் இனப்படுகொலை மற்றும் ஈரானுடன் ஒரு முழுமையான போரில் ஈடுபடும் அச்சுறுத்தலைக் கொண்டிருந்தாலும், உக்ரேனிலும் இஸ்ரேலிலும் தொடர்ந்து ஆயுதங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.

இதற்கு ஒட்டுமொத்த அமெரிக்க சமூகமும் போருக்கு அணிதிரட்டப்பட வேண்டும். “அமெரிக்க வரலாற்றில் மிகவும் தொழிலாளர் சார்பு ஜனாதிபதி” என்று தன்னை அழைத்துக் கொள்ளும் பைடென், முதலாளித்துவ அரசு மற்றும் பெரிய பெருநிறுவனங்களுடன் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை ஒன்றிணைத்து, ஒரு பெருநிறுவனக் கூட்டணியை உருவாக்க நனவுடன் முயன்று வருகிறார். 2022 இல் புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை அறிவித்த பைடென், தனது நிர்வாகம் “உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளுக்கு இடையே உள்ள பிளவுக் கோட்டை உடைத்துவிட்டது” என்று பெருமிதம் கொண்டார்.

அவர் “ஜனநாயகத்தின் ஆயுதக் களஞ்சியம்” என்று அழைக்கப்படுவதை, இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவின் போர்ப் பொருளாதாரத்தைக் குறிப்பிட்டு, தனது சொந்தக் கொள்கைகளுக்கு முன்மாதிரியாகக் குறிப்பிடுகிறார். உண்மையில், இரண்டாம் உலகப் போரின் போது போர்க்கால உற்பத்திக்கான திறவுகோல், பெரும் மந்தநிலையின் போது வெளிப்பட்ட வெடிக்கும் வர்க்கப் போராட்டங்களை மூடிமறைக்க தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் செயல்படுத்தப்பட்ட “வேலைநிறுத்தம் இல்லாத உறுதிமொழி” ஆகும். இதன்போது, போருக்கு எதிரான சோசலிஸ்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜனவரியில், தனது மறுதேர்தலுக்கு UAW தொழிற்சங்கத்தின் ஒப்புதலை ஏற்றுக்கொண்ட பைடென் மற்றும் ​​தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், காஸா இனப்படுகொலைக்கு எதிர்ப்பானவர்களை தொழிற்சங்க மண்டபத்திலிருந்து வெளியேற்றி, “விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் டாங்கிகளை” தொழிலாளர்கள்தான் கட்ட வேண்டும் என்று அறிவித்தனர்.

“வேலைநிறுத்தம் இல்லாத உறுதிமொழியின்” நவீன பதிப்பை செயல்படுத்த UAW தொழிற்சங்கம் உதவுகிறது. இந்த தொழிற்சங்கம் உக்ரேன் மற்றும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் பெரிய வெடிமருந்து தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களை “பிரதிநிதித்துவப்படுத்துகிறது”. காஸாவிற்கு அனுப்பப்பட்ட இஸ்ரேலிய போர் வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களை உருவாக்கும் அல்லிசன் டிரான்ஸ்மிஷனில் வேலைநிறுத்தத்தைத் தடுக்க, இது சமீபத்தில் ஒரு சரணாகதியை கட்டாயப்படுத்தியது.

அரசுடன் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஒன்றிணைவது, வெறுமனே அதன் விருப்பமான கொள்கை அல்ல. மாறாக, இது ஏகாதிபத்தியத்தின் சகாப்தத்தில் ஒரு அடிப்படைப் போக்காக உள்ளது. 1940 இல், ஏகபோக முதலாளித்துவத்தின் “மையப்படுத்தப்பட்ட கட்டளையால், பல்வேறு நிறுவனங்களுக்கிடையேயான போட்டியால் லாபம் ஈட்டுவதில்” இருந்து இழந்ததைக் கவனித்த லியோன் ட்ரொட்ஸ்கி, தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ அரசுக்கு “தங்களைத் தகவமைத்துக் கொண்டு, அதன் ஒத்துழைப்பிற்காகப் போராடுகின்றன” என்று விளக்கினார்.

ட்ரொட்ஸ்கி தொடர்ந்தார்:

இந்த நிலைப்பாடு, தொழிலாளர் பிரபுத்துவம் மற்றும் தொழிலாளர் அதிகாரத்துவத்தின் சமூக நிலைப்பாட்டுடன் முற்றிலும் இணக்கமாக உள்ளதால், ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பெரும் இலாபங்களின் பங்கில் ஒரு சிறு துண்டுக்காக அவர்கள் போராடுகிறார்கள்.

தொழிலாளர் அதிகாரத்துவத்தினர், சமாதானக் காலங்களிலும் குறிப்பாகப் போர்க் காலங்களிலும் தாங்கள் எவ்வளவு நம்பகமானவர்கள் மற்றும் இன்றியமையாதவர்கள் என்பதை “ஜனநாயக” நிலைக்கு நிரூபிப்பதற்காக, வார்த்தையிலும் செயலிலும் தங்களால் இயன்றதைச் சிறப்பாகச் செய்கிறார்கள். தொழிற்சங்கங்களை அரசு உறுப்புகளாக மாற்றுவதன் மூலம், பாசிசம் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை; அது ஏகாதிபத்தியத்தில் உள்ளார்ந்த போக்குகளை மட்டுமே அவர்களின் இறுதி முடிவுக்கு தள்ளுகிறது.

இது ட்ரொட்ஸ்கியின் காலத்தை விடவும் உண்மையாகும். அதிகாரத்துவவாதிகள் கடந்த 40 ஆண்டுகளாக பாரிய வேலை மற்றும் ஊதிய வெட்டுக்களை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், அவர்களது சொந்த சம்பளம் உயர்ந்துள்ளது. இவை முற்றிலும் அரசு மற்றும் பெருநிறுவன வாரியங்களால் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் ஆவர்.

டொனால்ட் டிரம்பின் “அமெரிக்கா முதலில்” என்ற வாய்வீச்சு, பல தசாப்தங்களுக்கு முன்னர் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் தொடங்கப்பட்டதுடன், ஜனநாயகக் கட்சியினரால் சாராம்சத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேலைகளை பெருமளவில் அழிப்பதில் அமெரிக்க நிறுவனங்களுடன் தீவிரமாக ஒத்துழைக்கும் அதே வேளையில், “அமெரிக்கன்” வேலைகளை காப்பாற்றுவதற்கான ஒரு வழியாக, அமெரிக்க நாடுகடந்த நிறுவனங்களுடன் இணைந்து, வர்த்தகப் போர் நடவடிக்கைகளை தொழற்சங்க எந்திரம் முன்வைத்துள்ளது. இந்த தேசியவாதம் பல்வேறு நாடுகளின் தொழிலாள வர்க்கத்தில், தொழிலாளர்களை அவர்களது கூட்டாளிகளுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் அவர்களை முடக்கியது.

ஜப்பானியப் பிரதமரின் வரவேற்பில் ஃபெயின் முன்னிலையில் ஒரு வரலாற்று முரண்பாடு உள்ளது. 1980 களில் UAW, ஜப்பானிய வாகனங்களுக்கு எதிராக ஆவேசமான இனவெறி பிரச்சாரத்தை நடத்தியது. இது ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிரான வன்முறைக்கு வழிவகுத்தது. இன்று, நிப்பான் ஸ்டீல் மற்றும் யுஎஸ் ஸ்டீல் ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்புக்கு எதிரான தேசியவாத பிரச்சாரத்திற்கு ஐக்கிய எஃகுத் தொழிலாளர்களில் உள்ள ஃபெயினின் கூட்டமைப்பு ஆதரவளிக்கிறது.

அதே நேரத்தில் அமெரிக்க தொழிற்சங்கங்கள், மெக்ஸிகோ மற்றும் லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூலிப்படையின் பாத்திரத்தை வகிக்கின்றன. உண்மையில் இந்த நாடுகளில் அமெரிக்க தூதரகத்தால் கட்டுப்படுத்தப்படும் புதிய “சுயாதீன” தொழிற்சங்கங்களை உருவாக்க உதவுகின்றன. இது பனிப்போரின் போது கம்யூனிச எதிர்ப்பு சதிகளை ஆதரிப்பதில் பல தசாப்தங்களாக CIA ஆற்றிய பங்கின் தொடர்ச்சியாகும்.

பல தசாப்தகால சரணாகதிக்குப் பிறகு, நம்பகத்தன்மையின் தோற்றத்தை இழந்துள்ள நவீன தொழிற்சங்க அதிகாரத்துவமானது, அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் மற்றும் தொழிலாளர் குறிப்புகள் போன்ற போலி-இடது சக்திகளை அதிகளவில் சார்ந்துள்ளது. ஃபெயின் மற்றும் பிற “சீர்திருத்த” வேட்பாளர்களுக்கு அவர்களின் ஆதரவின் மூலம், போலி-இடதுகளால் ஆதரிக்கப்படும் குழுக்கள் இப்போது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் நுழைந்துள்ளன.

இந்த போலி-இடது அமைப்புகள், உண்மையில் சோசலிச-விரோத மற்றும் ஏகாதிபத்திய-சார்பு, ஜனநாயகக் கட்சியின் பின்னால் செல்வதன் மூலம், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே போருக்கான எதிர்ப்பை திசை திருப்பவும், கழுத்தை நெரிக்கவும் வேலை செய்கின்றன. கடந்த டிசம்பரில், UAW காஸா மீது ஒரு “போர்நிறுத்த” தீர்மானத்தை நிறைவேற்றியது, சில வாரங்களுக்குப் பிறகு “இனப்படுகொலை ஜோ” பைடெனுக்கு ஒப்புதல் அளித்தது.

ஒட்டுமொத்தமாக போலி-இடதுகள், முதலாளித்துவ ஆட்சியின் அனைத்து நிறுவனங்களின், குறிப்பாக ஜனநாயகக் கட்சியின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதில் பெருகிய முறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. போரின் மீதான பாரிய கோபம் மற்றும் சமூக சமத்துவமின்மையின் திகைப்பூட்டும் நிலைகளுக்கு மத்தியில், இவர்கள் மீதான மக்கள் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது.

“ஜனநாயகத்தின் ஆயுதக் களஞ்சியம்” என்ற சொற்றொடரை பைடென் பயன்படுத்துவது, இராணுவ உற்பத்தியை வேலைகளுக்கு நல்லது என்று சித்தரிப்பதன் மூலம் போருக்கான ஆதரவைப் பறை சாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்காவில் வேலையின்மை மற்றும் ஊதிய அதிகரிப்பில் ஒரு பெரிய சரிவைக் கண்டது.

ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அது வேறு ஒரு காலகட்டமாகும். ஜப்பானிய அமெரிக்கர்களை அடைத்து வைத்தல், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஜேர்மன் குடிமக்கள் மீது தீக்குண்டு வீசுதல் போன்றவற்றை உள்ளடக்கிய அமெரிக்கப் போர் முயற்சி ஒருபோதும் “ஜனநாயகத்திற்காக” அல்ல, மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முன்னணி உலக வல்லரசாக ஸ்தாபிப்பதைப் பற்றியது. ஆனால், அந்த நேரத்தில் இன்னும் எழுச்சி பெறும் சக்தியாக இருந்த அமெரிக்கா, தொழிலாளர்களை அமைதிப்படுத்த, தொழிலாள வர்க்கத்திற்கு சில சலுகைகளை வழங்க தள்ளப்பட்டது. மேலும் ரூஸ்வெல்ட் முறையீடு செய்யக்கூடிய அளவிற்கு, ஜேர்மன் பாசிசத்திற்கு தொழிலாள வர்க்கத்தில் பரந்த எதிர்ப்பு இருந்தது.

இன்று அமெரிக்க முதலாளித்துவம் இறுதி வீழ்ச்சியில் உள்ளது மற்றும் பூகோளத்தை அழிக்கும் திறன் கொண்ட ஒரு போருக்கு தயாராகிறது. இது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவுடன் தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கு பாரிய வேலையின்மையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட உள்நாட்டின் கொள்கைகளுடன் இணைக்கிறது. இதனை “ஜனநாயகத்தின்” எந்த சாயலுடனும் செய்ய முடியாது. ஆனால், சர்வாதிகார மற்றும் பாசிச வழிமுறைகள் மூலம் மட்டுமே இதனை திணிக்க முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பெரு நிறுவன கூட்டணி தொழிலாள வர்க்கத்தில் சோசலிசத்தின் வளர்ச்சியை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சோசலிச சர்வதேசியத்தின் அடிப்படையில் ஒரு பாரிய தொழிலாள வர்க்க இயக்கத்தின் மூலம் மட்டுமே, வளர்ந்து வரும் மூன்றாம் உலகப் போரை நிறுத்த முடியும்.

போரைத் தயார் செய்வதில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முக்கிய பங்கு, இந்த இயக்கம் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராக வளர்ந்து வரும் கிளர்ச்சியுடன் முற்றிலும் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது. நிர்வாகம், தொழிற்சங்க எந்திரம் மற்றும் முதலாளித்துவ அரசு ஆகியவற்றை எதிர்த்துப் போராடத் தயாராக இருக்கும் சாமானிய தொழிலாளர் கமிட்டிகள், போருக்கு மூல காரணமான முதலாளித்துவ இலாப அமைப்பு முறைக்கு எதிரான அரசியல் இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading