காஸா இனப்படுகொலையை எதிர்த்து நடைபெற்ற மாநாட்டை பேர்லின் பொலிஸ் சோதனை மேற்கொண்டு நிறுத்தியது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

கடந்த வெள்ளி பிற்பகல், ஜேர்மனிய தலைநகரான பேர்லின் நாஜி ஆட்சியின் சகாப்தத்தை நினைவூட்டும் காட்சிகளைக் கண்டது. காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக நடத்தப்பட்ட போர் எதிர்ப்பு மாநாட்டை நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் அச்சுறுத்தினர்; இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் அதைத் தடை செய்வதற்காக கலைத்தனர்.

ஏப்ரல் 12, 2024 அன்று, அமைதிக்கான யூத குரல் செய்தித் தொடர்பாளர் உடி ராஸை ஜேர்மன் போலீசார் கைது செய்கின்றனர். [Photo: @AliAbunimah]

மத்திய கிழக்கில் ஒரு நியாயமான அமைதிக்கான யூத குரல் (Jewish Voice for a Just Peace in the Middle East) ஏற்பாடு செய்திருந்த மற்றும் பல பாலஸ்தீனிய சார்பு அமைப்புக்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் முக்கிய பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் முன்னாள் கிரேக்க நிதி மந்திரி யானிஸ் வாருஃபாகிஸ், ஐரிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் போய்ட் பாரெட், பிரிட்டிஷ்-பாலஸ்தீனிய மருத்துவரும் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ரெக்டருமான காசன் அபு-சித்தே, 86 வயதான பாலஸ்தீனிய நிபுணர் சல்மான் அபு சித்தா, பாலஸ்தீனிய தேசிய கவுன்சிலின் முன்னாள் உறுப்பினர், யூத திரைப்படத் தயாரிப்பாளர் டிரோர் தயான் மற்றும் பாலஸ்தீனிய பத்திரிகையாளர் ஹெப் ஜமால் ஆகியோர் அடங்குவர்.

செய்தி ஊடகமும் அரசியல் ஸ்தாபனமும் முன்கூட்டியே மாநாட்டிற்கு எதிராக ஒரு தீய அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டன. பரபரப்பு ஏடான Bild இல் இருந்து “மரியாதைக்குரிய” Tagesspiegel பத்திரிகை வரையில், பங்கெடுத்தவர்களை “இஸ்ரேல்-வெறுப்பாளர்கள்” என்று அவைகள் கண்டனம் செய்தன. வெள்ளிக்கிழமை காலை Bild பத்திரிகை இவ்வாறு தலைப்பிட்டது: “இஸ்ரேல் வெறுப்பாளர்களின் மாநாடு. இந்த பயங்கரவாத ரசிகர்கள் இன்று பேர்லினில் சமூகமளிக்கிறார்கள்.”

வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் தொடங்கி இடது கட்சி வரையிலான அரசியல்வாதிகளை உள்ளடக்கிய ஒரு அனைத்துக் கட்சி “யூத-எதிர்ப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டணி” ஆனது, மாநாடு “யூத-எதிர்ப்பு வெறுப்பைப் பரப்பும்” என்றும் பேர்லின் “பயங்கரவாதிகளை பெருமைப்படுத்தும் மையமாக” ஆகக் கூடாது என்றும் அறிவித்தது. இடது கட்சியை பொறுத்தவரை, முன்னாள் பேர்லின் கலாச்சார செனட்டர் கிளவுஸ் லெடரர் மற்றும் முன்னாள் பேர்லின் தொழிற்கட்சி செனட்டர் எல்கே பிரெய்டென்பாக் இருவரும் முறையீட்டில் கையெழுத்திட்டனர்.

அதன்படி போலீசார் செயல்பட்டனர். பேர்லின் விமான நிலையத்தில் கஸ்ஸான் அபு-சிட்டேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. போர் தொடங்கிய பின்னர் காஸாவில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையில் பணியாற்றிய அந்த மருத்துவர் டிசம்பர் 6 அன்று Der Spiegel பத்திரிகைக்கு அங்கு தனக்கு ஏற்பட்ட கொடூரமான அனுபவங்கள் பற்றியும், கொடூரமான நிலைமைகள் குறித்தும் பேட்டி கொடுத்தார். மாலையில் மாநாட்டில் ஒரு விரிவுரையை அவர் வழங்குவதாக இருந்தது. மாறாக, ஏப்ரல் 14 வரை ஜேர்மனிக்குள் நுழைய அவருக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டது.

வெள்ளிக்கிழமை காலை மாநாடு நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டவுடன் (பாதுகாப்பு காரணங்களுக்காக அமைப்பாளர்கள் அதை இரகசியமாக வைத்திருந்தனர்), ஏராளமான போலீஸ் படை திரட்டப்பட்டது. மாநாட்டு வார இறுதி முழுவதும் திட்டமிடப்பட்டிருந்த 2,500 போலீஸ் அதிகாரிகளில், கிட்டத்தட்ட 900 பேர் டெம்பெல்ஹோஃப் இல் உள்ள மாநாட்டு மண்டபத்தை சுற்றி வளைத்து தடைகளை ஏற்படுத்தினர். கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மற்றும் சியோனிச குழுக்கள் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சுமார் 25 பேர் கலந்து கொண்டனர்.

“தீ பாதுகாப்பு நெறிமுறைகள்” என்ற சாக்குபோக்கின் கீழ், மாநாட்டு மண்டபத்திற்குள் நுழைவதை பொலிஸ் தடுத்தது. மண்டபம் 1,000 பேருக்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் 250 பேரை மட்டுமே நுழைய அனுமதித்தனர். உள்ளே அனுமதிக்கப்படாத மேலும் 250 பேரின் வரிசை, பிற்பகல் 3:00 மணிக்குள் கலைக்கப்பட வேண்டிய ஒரு கூட்டம் என்று பொலிசாரால் முறைகேடாகக் கருதப்பட்டது. அதே நேரத்தில், “இனப்படுகொலைக்கு எதிரான யூதர்கள்” என்று எழுதப்பட்ட பதாகையைப் பிடித்திருந்த யூத குரல் உறுப்பினர் உட்பட வரிசையில் காத்திருந்தவர்களை பொலிஸ் கைது செய்தது.

பதிவு செய்யப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு கூட்டத்திற்கு அனுமதி மறுத்த அதேவேளையில், பொலிஸ் பல டஜன் அங்கீகாரம் பெறாத பத்திரிகையாளர்களை கட்டிடத்திற்குள் பின்புற நுழைவாயில் வழியாக கடத்தியது, அவர்களில் பெரும்பாலோர் மாநாட்டிற்கு எதிரான மிக மோசமான கிளர்ச்சியாளரான ஸ்பிரிங்கர் பத்திரிகைகளில் இருந்து வந்தவர்கள் ஆவார்.

பங்கேற்பாளர்களை அச்சுறுத்துவதற்காக சீருடை அணியாத மற்றும் ஆயுதமேந்திய பொலிஸ் படைகளும் கூட்ட அறையில் இருந்தனர். போலீசாரின் இடையூறு காரணமாக, நீண்ட தாமதத்திற்கு பின்னரே மாநாடு தொடங்க முடிந்தது. அது கலைக்கப்படுவதற்கான சாக்குப்போக்கு பின்னர் சல்மான் அபு சித்தாவின் ஒரு வீடியோ விரிவுரையாகும். அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

1948ல் ஒரு குழந்தையாக பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அபு சித்தா தனது வாழ்க்கையை பாலஸ்தீனியர்களின் நலனுக்காக அர்ப்பணித்துள்ளார், இஸ்ரேலிய சமாதான ஆர்வலர்களான யூரி அவ்னெரி மற்றும் ரப்பி மைக்கேல் லெர்னர் ஆகியோருடன் பொது விவாதங்களில் ஈடுபட்டுள்ளார்.

அவரது வீடியோ விரிவுரை தொடங்கி இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர், 30 முதல் 40 பொலிஸ் அதிகாரிகள் சுமார் 4:00 மணியளவில் மேடையை முற்றுகையிட்டு வீடியோ ஒளிபரப்பு பரிமாற்றத்தைத் தடுத்தனர். அவர்கள் சட்டவிரோத உள்ளடக்கத்தை நியாயப்படுத்துவதாக மேற்கோள் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் கட்டுப்பாட்டு அறைக்குள் வன்முறையாக நுழைந்து மாநாட்டு மண்டபத்தில் மின்சாரம் மற்றும் விளக்குகளை அணைத்து மாநாட்டின் நேரடி ஒளிபரப்பை இடையூறு செய்தனர்.

ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில், மாலை 5:24 மணிக்கு, பொலிஸ் மாநாட்டைக் கலைத்து, அதில் பங்கெடுத்தவர்களை கூட்ட அறையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. இதற்கான காரணத்தை போலீசார் சம்பவ இடத்தில் தெரிவிக்கவில்லை. பின்னர், பேச்சாளர்கள் யூத இனப்படுகொலையை (ஹோலோகாஸ்ட்) மறுக்கலாம் அல்லது வன்முறையைப் பெருமைப்படுத்தலாம் என்ற அபாயத்தைக் கொண்டு அவர்கள் தான்தோன்றித்தனத்தை நியாயப்படுத்தினர்.

சிறிது நேரத்திற்குப் பின்னர், அமைதிக்கான யூத குரலின் குழு உறுப்பினரும் பாலஸ்தீன காங்கிரஸின் இணை அமைப்பாளருமான உடி ராஸ் கைது செய்யப்பட்டார். Junge Welt பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், தான் ஒரு போலீஸ் அதிகாரியை யூத எதிர்ப்பாளர் என்று அழைத்ததாகவும், இது ஒரு அவமதிப்பாக கருதப்பட்டது என்றும் கூறி தனது கைது நியாயப்படுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

ஒரு சர்வாதிகார பாணியில் போலீஸ் நடவடிக்கைகள் பேர்லின் மாநில அரசாங்கம் மற்றும் கூட்டாட்சி அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டன. பாலஸ்தீன காங்கிரஸ் தொடர்பாக, உள்துறை செயலர் கிறிஸ்டியான் ஹோச்கிரெப் (சமூக ஜனநாயகவாதிகள், SPD) முன்கூட்டியே உள்துறை கமிட்டியில் அறிவிக்கையில், “வெறுப்பைத் தூண்டுதல் மற்றும் தடைசெய்யப்பட்ட சின்னங்களைப் பயன்படுத்துவது போன்ற குற்றங்களைத் தடுக்க எங்களது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்தையும் செய்வார்” என்று அவர் அறிவித்தார்.

பேர்லின் மேயர் கை வெக்னர் (CDU) வெள்ளிக்கிழமை பிற்பகல் “இந்த வெறுப்பு சம்பவத்தில் அவர்களின் தீர்க்கமான தலையீட்டிற்கு” பொலிசாருக்கு நன்றி தெரிவித்தார். “பேர்லினில் இந்த விதிகள் பொருந்தும். இஸ்ரேல் மீதான வெறுப்புக்கு பேர்லினில் இடமில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். இதைக் கடைப்பிடிக்காத எவரும் அதன் விளைவுகளை அனுபவிப்பார்கள்” என்றார்.

பேர்லின் உள்துறை செனட்டர் ஐரிஸ் ஸ்ப்ராஞ்சர் (SPD) கூறினார்: “பொலிஸின் முடிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.” நான்சி ஃபைசர் (SPD) தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம் மாநாட்டிற்கு முன்னதாக ட்விட்டரில் எழுதியது: “பேர்லினில் பாலஸ்தீன காங்கிரஸ் என்றழைக்கப்படுவதன் மீது பேர்லின் பொலிஸ் ஒரு கடுமையான ஒடுக்குமுறையை அறிவித்திருப்பது நல்லது. நாங்கள் இஸ்லாமிய அரங்கை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்”.

SPD, CDU/CSU, சுதந்திர ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமை கட்சியினரின் இளைஞர் அமைப்புகளும் இந்த போலிஸ் நடவடிக்கையை ஆதரித்தன. மாநாட்டிற்கு முன்னதாக, அவர்கள் மாநாட்டில் இருந்து வெளிப்பட்டதாகக் கூறப்படும் “யூத-எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்தை பெருமைப்படுத்துவதற்கு எதிராக” ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

பாலஸ்தீன மாநாட்டுக்கு எதிராக ஜேர்மன் ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்பட்ட எதேச்சதிகார வழிமுறைகள் பிரிக்கவியலாமல் அவை இராணுவவாதத்திற்குத் திரும்புவதுடன் பின்னிப்பிணைந்துள்ளன. பாதுகாப்பு அமைச்சர் பிஸ்டோரியஸின் வார்த்தைகளில் கூறுவதானால், கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஒழிக்காமல் ஜேர்மனியை “போருக்கு பொருத்தமானதாக” ஆக்குவது சாத்தியமில்லை.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுக்கு மிகப் பெரிய ஆயுத விநியோகஸ்தராகவும், உக்ரேனுக்கு மிகப் பெரிய நன்கொடையாளராகவும் ஜேர்மனி உள்ளது. அரசாங்கம் பில்லியன்களை சமூக வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து இராணுவ வரவு-செலவுத் திட்டத்திற்கு மாற்றும் நிகழ்முறையில் உள்ளது மற்றும் மேலதிக போர்களுக்கு பீரங்கிகளுக்கு இரையாகும் பொருட்டு கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என்பதை இனியும் மறுக்க முடியாது என்றாலும், அரசாங்கம் நிபந்தனையற்ற முறையில் நெத்தன்யாகு ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து, அதற்கு எதிரான எந்த எதிர்ப்பையும் குற்றமாக்குகிறது.

இந்த மாநாடு மீதான தாக்குதல், போர்க் கொள்கைக்கு பெருகிவரும் எதிர்ப்பிற்கு எதிராக இயக்கப்படுகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஜேர்மனியின் மக்களில் 69 சதவீதம் பேர் காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை எதிர்க்கின்றனர். ஆனால், மக்களிடையே எதிர்ப்பு அதிகமாக இருப்பதால், ஆளும் வர்க்கம் இன்னும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குகிறது. சர்வாதிகார பொலிஸ்-அரச நடவடிக்கைகள், இந்த இராணுவவாத வேலைத்திட்டத்தை நிராகரிக்கும் எவரொருவரையும் அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Loading