முன்னோக்கு

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பைடென் கண்டனம்: ஏகாதிபத்திய பாசாங்குத்தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆய்வு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு ஏகாதிபத்திய சக்திகள் கண்டன மழையுடன் விடையிறுத்துள்ளன.

“நான் இந்த தாக்குதல்களை மிகப் பலமான வார்த்தைகளில் கண்டிக்கிறேன்” என்று அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், “இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் உறுதியான இரும்பு உறை போன்ற உறுதிப்பாட்டை” மீளஉறுதிப்படுத்தினார்.

ஏப்ரல் 14, 2024 ஞாயிற்றுக்கிழமையன்று, மத்திய இஸ்ரேலில் ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறிக்க இஸ்ரேலிய இரும்பு டோம் வான் பாதுகாப்பு அமைப்பு ஏவப்படுகிறது. [AP Photo/Tomer Neuberg]

ஏகாதிபத்திய சக்திகளின் ஜி7 குழுவானது ஒரு அறிக்கையில் கூறியது, “நாங்கள் ... இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் நேரடியான மற்றும் முன்னெப்போதும் இல்லாத தாக்குதலை சந்தேகத்திற்கு இடமின்றி வன்மையாகக் கண்டிக்கிறோம்.” “ஈரான் அப்பிராந்தியத்தின் ஸ்திரமின்மையை நோக்கி மேலும் அடி எடுத்து வைத்துள்ளதுடன், கட்டுப்படுத்தவியலாத பிராந்திய தீவிரப்பாட்டைத் தூண்டும் அபாயங்களையும் கொண்டுள்ளது,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

ஏகாதிபத்திய போர்வெறியர்களின் இத்தகைய அறிக்கைகள், ஒவ்வொரு பிரதான நேட்டோ சக்தியாலும் மீண்டும் மீண்டும் கூறப்படுவது, பாசாங்குத்தனத்தின் உச்சமாகும். மத்திய கிழக்கில் “கட்டுப்படுத்தவியலாத பிராந்திய தீவிரப்பாட்டைத் தூண்டும்” சக்தி இஸ்ரேலும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் ஆகும்.

கால வரிசையை துல்லியமாகப் பார்ப்போம். சிரியாவில் ஈரானிய தூதரகம் மீது ஏப்ரல் 1 அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானின் தாக்குதல் இருந்தது. அதில் இரண்டு தளபதிகள் உட்பட ஏழு உயர்மட்ட ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

நடைமுறையளவில் ஈரானிய பகுதியாக கருதப்படுகின்ற ஒன்றின் மீதான இஸ்ரேலின் அப்பட்டமான சட்டவிரோத மற்றும் கொலைகார தாக்குதலுக்கு விடையிறுப்பாக, ஏகாதிபத்திய சக்திகள் நடைமுறையளவில் அதை ஆமோதித்தன. ஐ.நா.விற்கான அமெரிக்கத் தூதர் ரோபர்ட் வூட், “பயங்கரவாதத் தலைவர்களும் அதன் கூறுகளும் இந்த இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது” என்று அறிவித்தார். இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தன.

இப்போது, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஈரானின் பதிலடியைக் கண்டிக்க ஏகாதிபத்தியவாதிகள் தாங்களாகவே விரைந்து கொண்டிருக்கிறார்கள். ஈரானின் நடவடிக்கை பெரும்பாலும் அடையாள நடவடிக்கையாக இருந்தது என்பதால் இது இன்னும் குறிப்பிடத்தக்கது. பாதிப்பைக் குறைக்கும் முயற்சியில் ஈரானிய அரசாங்கம் சனிக்கிழமை தாக்குதலை பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பே அறிவித்தது.

ஞாயிறன்று ராய்ட்டர்ஸ் அறிவித்ததைப் போல,

“இஸ்ரேல் மீதான சனிக்கிழமை ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக ஈரான் பரந்த முன்னறிவிப்பை வழங்கியது, இது பாரிய உயிரிழப்புகளையும் பரவலான தீவிரப்பாட்டையும் தவிர்க்க அனுமதித்தது.”

ஏகாதிபத்திய சக்திகளும், அவர்களின் பினாமிகளும் அவர்கள் விரும்பும் அளவுக்கு பலரைக் கொல்லலாம், இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளை நடத்தலாம் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு ஒத்த எதையும் முற்றிலும் மீறி செயல்படலாம் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இதற்கு எந்தவொரு பதிலடி நடவடிக்கையும், அது மிகக்குறைந்த தன்மையாக இருந்தாலும் கூட, ஒரு குற்றமாக கண்டிக்கப்படுகிறது. இதுதான் காலனியாதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் அடிப்படை விதி ஆகும்.

பைடென் ஈரானின் நடவடிக்கைகளை “கண்டிக்கிறார்” என்றாலும், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளால் நிதியுதவி, ஆயுதம் மற்றும் அரசியல்ரீதியாக ஆதரிக்கப்பட்டு வரும் காஸாவுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அவர் அதே மொழியை உச்சரிக்கவில்லை.

ஏற்கனவே குறைந்தது 40,000ம் மக்களைக் கொன்றுள்ள இஸ்ரேல் காஸா மக்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலையை தீவிரமாக நடத்தி வருகிறது. அது 2.2 மில்லியன் மக்களைக் கொண்ட முழு மக்களையும் திட்டமிட்டு இடம்பெயர்த்தல், பட்டினி போடல் மற்றும் குண்டுவீச்சு நடத்துவதோடு மருத்துவர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களை திட்டமிட்டும் வேண்டுமென்றும் கொலை செய்து வருகிறது.

காஸாவில் இனப்படுகொலையானது ஒரு பிராந்திய போராக அபிவிருத்தி அடைந்து வருகிறது, இது மிக விரைவாக முழு உலகையும் உள்ளிழுக்கக்கூடும்.

பைடென் நிர்வாகம், பொதுவாக உத்தியோகபூர்வ உச்சரிப்புக்களைக் காட்டிலும் பின்னணியில், இஸ்ரேல் உடனடியாக இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடாது என்று விரும்புகிறது என்றால், இது தந்திரோபாய பரிசீலனைகளால் தீர்மானிக்கப்படுகிறது.

இந்தப் பரிசீலனைகளில் சில நியூ யோர்க் டைம்ஸில் பிரெட் ஸ்டீபன்ஸ் ஆல் “இஸ்ரேலைப் பொறுத்தவரை, பழிவாங்குதலானது குளிர்ச்சியாக பரிமாறப்படும் ஒரு உணவாக இருக்க வேண்டும்” என்ற தலைப்பில் முன்வைக்கப்பட்டன.

ஸ்டீவன்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்:

தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் வகையில், ​​இஸ்ரேலுக்கு ஒவ்வொரு தார்மீக மற்றும் சட்டப்பூர்வ உரிமை உள்ளது —அதையும் விட அதிகமாக உள்ளது. வார இறுதியில் செய்தது போல், இஸ்ரேல் தன் பாதுகாப்பிற்கான திறனை நிரூபிப்பது மட்டும் போதாது. அது தடுக்கும் திறனையும் மீண்டும் நிலைநாட்ட வேண்டும். அதாவது, இஸ்ரேலுக்கு எதிரான அவர்களின் போரை நிழலில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கான விலை தாங்கவியலாத அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதையும், ஆகவே அது மீண்டும் நிகழக்கூடாது என்பதையும் ஈரானிய தலைவர்களுக்கு அது காட்ட வேண்டியுள்ளது.

ஆனால் ஸ்டீபன்ஸ் ஈரான் மீது முழு அளவிலான தாக்குதலுக்கு எதிராக ஆலோசனை கூறுகிறார். அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

காஸாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் ஒரு முடிவுறாத போரைக் கொண்டுள்ளது. ஈரான் மீதான ஒரு நேரடி இஸ்ரேலிய தாக்குதல் ஈரானுடன் இல்லாவிட்டாலும், லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக இரண்டாவது முழு அளவிலான போரைத் தூண்டக்கூடும். பெரும்பாலான இஸ்ரேலியர்கள் குறிப்பிட்ட போர் விரைவிலோ அல்லது தாமதமாகவோ —அனேகமாக கோடை முடிவதற்கு முன்னதாக— நடத்தப்பட வேண்டியிருக்கும் என்பதையும், காஸா போர் இதுவரையில் இருந்ததைக் காட்டிலும் அநேகமாக அவர்கள் மீது மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பதையும் புரிந்துகொண்டுள்ளனர்.

இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஈரானுடனான போர் என்ற “மிகவும் கடுமையான” நோக்கத்திற்கு திரும்புவதற்கு முன்னதாக, காஸாவில் இனப்படுகொலையை முடிப்பது முதலில் அவசியமாகும்.

அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகள் பகிரங்கமாக ஒரு முழு அளவிலான போருக்கு வாதிடுகின்றன, ஈரானுக்கு எதிரான ஒரு இஸ்ரேலியப் போரை ஆதரிப்பதில் பைடென் நிர்வாகம் போதுமானளவுக்கு செல்லவில்லை என்று வலியுறுத்துகின்றன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியது:

இந்தத் தாக்குதல் குறைந்தபட்சம் திரு. பைடெனும் அவரது சக ஜனநாயகக் கட்சியினரும் காஸா தொடர்பாக இஸ்ரேலுடனான அவர்களின் பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவரவும், இது உண்மையில் ஈரானுக்கு எதிரான ஒரு போர் என்பதை அங்கீகரிக்கவும் காரணமாக இருக்க வேண்டும்.

மேலும், இரு கட்சிகளின் தலைவர்களும் உலகளாவிய அச்சுறுத்தல்களின் புதிய உலகம் குறித்து அமெரிக்கர்களுக்கு உண்மையைக் கூறத் தொடங்க வேண்டும். ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வட கொரியா அனைத்தும் அணிவகுத்து ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

இஸ்ரேலிய மந்திரிசபை கடந்த தினம் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று விவாதித்து வருகிறது ஆட்சிக்குள்ளேயே பிளவுகள் வெளிப்படையாக உள்ளன. அனைத்திற்கும் மேலாக, இஸ்ரேல் மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் நாயாக இருந்தாலும், அது என்ன செய்யப் போகிறது என்பதை அமெரிக்கா முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை. எப்படியிருந்தாலும், இஸ்ரேல் நடவடிக்கை எடுத்தால், அதற்கு முழு ஆதரவு இருக்கும் என்று பைடென் நிர்வாகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Meet the Press என்ற நிகழ்ச்சியில் சமூகமளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி இவ்வாறு அறிவித்தார்.

“இஸ்ரேல் பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்தால், அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்குமா?” என்று கேட்கப்பட்டது. கிர்பி பதிலளித்தார், “இஸ்ரேலின் தற்காப்புக்கான அமெரிக்க ஆதரவு உறுதியான இரும்பு உறை கொண்டதாக இருக்கும். அது மாறாது” என்றார்.

அக்டோபர் 7 சம்பவங்களுக்கு விடையிறுக்கும் வகையில், அமெரிக்காவானது ஈரானை மைய இலக்காகக் கொண்டு மத்திய கிழக்கு முழுவதிலும் ஒரு பெரும் இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. சில நாட்களுக்குள், அமெரிக்கா கடந்த ஆறு மாதங்களில் டசின் கணக்கான சட்டவிரோத வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்குப் பயன்படுத்திய போர்க்கப்பல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான விமானங்களின் ஆயுதப் பிரளயத்தை இப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தாக்குதலானது ரஷ்யா மற்றும் சீனாவை பிரதான இலக்குகளாகக் கொண்டு கட்டவிழ்ந்து வரும் ஒரு உலகளாவிய போரின் ஒரு முக்கிய கூறுபாடு இதுவாகும். யூரேசியாவின் இதயத்தானத்தில் அமைந்துள்ள ஈரானை அடிபணிய வைப்பது, பூகோளரீதியான இராணுவ மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதலின் ஒரு இன்றியமையாத கூறுபாடாகும்.

வரவிருக்கும் நாட்களில் உடனடி அபிவிருத்திகள் என்னவாக இருந்தாலும், விரிவடைந்து வரும் பூகோளரீதியான போரின் பாகமாக, மத்திய கிழக்கு முழுவதிலுமான பிராந்தியப் போர் அபாயகரமாக கட்டுப்பாட்டை மீறி சுழன்று கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய எந்தக் காலத்தையும் விட, உலகமானது அணுஆயுத மோதலுக்கு நெருக்கமாக நிற்கிறது. தொழிலாள வர்க்கத்தை நோக்கி நோக்குநிலை கொண்டதும் மற்றும் அதை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதைத் தவிர, விரிவடைந்து வரும் இந்த பூகோளரீதியான போரை வேறு எதுவும் தடுத்து நிறுத்த முடியாது.

Loading