இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

தெஹ்ரானுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போர் முனைவு தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்ற நிலையில், அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும் ஈரானை இலக்கு வைத்து புதிய தடையாணைகளை உடனடியாக அறிவிக்கவிருக்கின்றன.

செவ்வாயன்று ஒரு அறிக்கையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அமெரிக்காவும் அதன் ஜி7 நட்பு நாடுகளும் “வரவிருக்கும் நாட்களில்” தடைகளை அறிவிக்கும் என்று கூறினார்.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஏப்ரல் 9, 2024 செவ்வாய்க்கிழமை வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பு அறையில் செய்தியாளர்களுடன் பேசுகிறார். (படம்: AP/Alex Brandon)

“ஈரானிய அரசாங்கத்தை அதன் தீங்கிழைக்கும் மற்றும் ஸ்திரமின்மையாக்கும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வைக்க, உலகெங்கிலும் உள்ள கூட்டாளிகள் மற்றும் பங்காளிகள் மற்றும் காங்கிரஸுடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்” என்று சல்லிவன் கூறினார். அமெரிக்க நடவடிக்கைகள் “ஈரானின் இராணுவ தகைமை மற்றும் செயல்திறனைக் கட்டுப்படுத்துவதற்கும் மதிப்பிழக்கச் செய்வதற்கும் மற்றும் அதன் சிக்கலான நடத்தைகளின் முழு வீச்சையும் எதிர்கொள்வதற்குமான அழுத்தத்தின் ஒரு நிலையான முரசொலியைத் தொடர்கின்றன” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன், “வரவிருக்கும் நாட்களில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை விதிக்கும்” என்று கூறினார். ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தலாமா என்று இஸ்ரேல் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இஸ்ரேலிய போர் மந்திரிசபை கூட்டத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பெருகிய முறையில் அமெரிக்கச் செய்தி ஊடகம் ஈரானுக்கு எதிராக இஸ்ரேலின் இராணுவ பதிலடி நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்று கருதுகிறது. “கட்டுப்பாடா அல்லது பழிவாங்கலா? ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதில் இஸ்ரேல் சங்கடத்தை எதிர்கொள்கிறது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் சி.என்.என் எழுதியது:

இஸ்ரேலின் இராணுவ பதிலடி நடவடிக்கை வரம்புக்குட்பட்டதாக இருக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்று ஒரு மூத்த நிர்வாக அதிகாரியும் உளவுத்துறையை நன்கு அறிந்த ஒரு ஆதாரமும் சி.என்.என் இடம் தெரிவித்தனர். ஈரானுக்குள் ஒரு குறுகிய மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலை இஸ்ரேல் பரிசீலித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவிக்கிறது என்று இரண்டாவது ஆதாரம் கூறியுள்ளது.

ஏகாதிபத்திய சக்திகள், கடந்த வாரயிறுதியில் ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களை, காஸா மீதான இனப்படுகொலை குறித்த அவற்றின் முந்தைய பெயரளவிலான விமர்சனத்தை கைவிடுவதற்கான ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தி, இஸ்ரேலுடன் தங்களை மேலும் மேலும் நேரடியாக அணிசேர்த்து வருகின்ற நிலையில், இந்த அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், செவ்வாயன்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஒரு தொலைபேசி அழைப்பில், “இஸ்ரேலின் பாதுகாப்புக்கு இங்கிலாந்தின் அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்” என்று பிரிட்டிஷ் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்கா நேரடியாக தாக்குதலில் பங்கேற்காது என்று அறிவித்தாலும், அமெரிக்க அதிகாரிகள் ஈரானைத் தாக்க இஸ்ரேலுக்கு பச்சைக் கொடி காட்டினர். இஸ்ரேலுக்கு வாஷிங்டனின் நிபந்தனையற்ற ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினர். திங்களன்று, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறுகையில், “சனிக்கிழமையன்று ஈரான் என்ன செய்ததோ அதற்கு அவர்கள் எவ்வாறு விடையிறுக்கப் போகிறார்கள் என்பது இஸ்ரேலிய முடிவாகும், அதைச் செய்வதை நாங்கள் அவர்களிடமே விட்டுவிடப் போகிறோம்,” என்றார்.

காஸா மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை இஸ்ரேல் தொடர்கின்ற நிலையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் அதிகரித்து வருகிறது. செவ்வாயன்று, காஸாவின் மகஜி அகதிகள் முகாமில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது, இதில் 11 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் ஆவர்.  இந்த தாக்குதலைத் தொடர்ந்து “டசின் கணக்கான” மக்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

மேலும், உணவு விநியோகத்தை பாதுகாக்கும் ஏழு பொலிஸ் அதிகாரிகள் அவர்களது வாகனத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஒரு அறிக்கையில், காஸாவின் உள்துறை அமைச்சகம், காஸா பகுதி முழுவதும் இஸ்ரேலிய இராணுவத்தின் “பாதுகாப்புப் படைகள் மீது மீண்டும் மீண்டும் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை” கண்டித்தது. அது மேலும் கூறியதாவது:

எமது மக்களுக்கு சேவை செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் தமது கடமைகளை ஆற்றிவரும் பொலிஸ் படை உறுப்பினர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு தாக்குதல்களை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் நாங்கள் அழைக்கிறோம்.

செவ்வாயன்று மற்றொரு வான்வழித் தாக்குதலில், மத்திய ரபாவிலுள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடத்தை இஸ்ரேலிய ஜெட் விமானம் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர் என்று அல் ஜசீரா அறிவித்தது. நூறாயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்து, கணக்கிலடங்கா ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்லும் என்று எதிர்பார்க்கப்படும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு இடையே, 1.5 மில்லியனுக்கும் மேலான இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் இந்த நகரத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையில், யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, இஸ்ரேலியப் படைகள் பெண்களின் அலறல் மற்றும் குழந்தைகள் அழும் பதிவு செய்யப்பட்ட ஒலிகளை ஒளிபரப்பி, இது குடிமக்களை மறைவில் இருந்து வெளியே இழுத்து அவர்களை சுடுவதற்காக என்று வலியுறுத்தியது. 

தி மானிட்டர் பின்வருமாறு தெரிவித்தது:

யூரோ-மெட் மானிட்டர் குழுவிற்கு வழங்கப்பட்ட முகாம் குடியிருப்பாளர்களின் சாட்சியங்கள், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பின்னிரவில் பெண்களின் அலறல் மற்றும் குழந்தைகளின் அழுகுரல் கேட்டது என்பதை உறுதிப்படுத்துகின்றன. குடியிருப்பாளர்களில் சிலர் விசாரணைக்கு வந்து உதவ முயன்றபோது, அவர்கள் இஸ்ரேலிய குவாட்காப்டர் ட்ரோன்களால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அவர்கள் கேட்ட ஒலிகள் உண்மையில் இஸ்ரேலிய டிரோன்களால் ஒலிபரப்பப்பட்ட ஒலிப்பதிவுகள், முகாமில் வசிப்பவர்களை தெருக்களுக்கு தள்ளுவதற்கு கட்டாயப்படுத்தும் முயற்சியில் ஒலிபரப்பப்பட்டன, அங்கு அவர்கள் ஸ்னைப்பர் மற்றும் பிற ஆயுதங்களால் எளிதில் இலக்கு வைக்கப்படலாம்.

மற்றொரு சாட்சி அல் ஜசீராவிடம் இந்த சம்பவத்தை விவரித்தார், “நேற்று, அப்பகுதி இஸ்ரேலிய ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது. சோதனைகள் நடந்து மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, குழந்தைகளின் அழுகுரல்களையும் ஒரு பெண்ணின் குரலையும் நாங்கள் கேட்டோம்.” “நாங்கள் வெளியே சென்றபோது, இஸ்ரேலிய இராணுவத்தின் கடுமையான துப்பாக்கிச் சூடுகளுக்கு ஆளானோம், நான்கு உந்துவிசைகளுடன் ஒரு இஸ்ரேலிய குவாட்காப்டரில் இருந்து சத்தம் வெளிவந்தது” என்று சாட்சி மேலும் கூறினார்.

செவ்வாயன்று ஒரு அறிக்கையில், சர்வதேச மீட்புக் குழு (ஐஆர்சி), “காஸாவில் மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்கள் பஞ்சம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் தொற்றுக்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்” என்று அறிவித்து, “காஸாவில் ஒரு பொது சுகாதார பேரழிவு நடந்து கொண்டிருக்கிறது” என்று எச்சரித்தது. உடனடி போர் நிறுத்தம் இல்லாவிட்டால், நோயின் விளைவாக 12,000 பேர் உயிரிழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்தக் குழு எச்சரிக்கை விடுத்தது.

இந்த அமைப்பின் அவசர நிலைகளுக்கான மூத்த சுகாதார தொழில்நுட்ப ஆலோசகர் டாக்டர் சீமா ஜிலானியை மேற்கோள் காட்டிய  அந்த அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:

காஸாவில் உள்ள எந்த மருத்துவமனைகளும் இப்போது முழுமையாக செயல்படவில்லை. காஸாவில் உள்ள ஐ.ஆர்.சி ஊழியர்கள் மற்றும் பங்காளிகள் எஞ்சியிருக்கும் சுகாதார வசதிகளில் பேரழிவை தொடர்ந்து காண்கின்றனர். முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்கள், மருத்துவப் பொருட்கள் முழுமையாக இல்லாமை மற்றும் தற்போதுள்ள சுகாதாரச் சேவைகளின் சுமை போன்றவற்றின் காரணமாக, பாலஸ்தீனியர்கள் மருத்துவமனைக்குச் செல்வதற்கு மரணத்தை ஆபத்துக்குள்ளாக்குவது மதிப்புள்ளதா அல்லது வன்முறையை எதிர்கொள்வது மதிப்புள்ளதா என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 4 மாத வயதுக்குட்பட்ட குழந்தை நோயாளிகள் நிமோனியா மற்றும் இரைப்பைக் குடல் அழற்சி போன்ற தடுக்கக்கூடிய அல்லது எளிதில் குணப்படுத்தக்கூடிய நோய்களால் இறக்கின்றனர்.

Loading