பாலஸ்தீன காங்கிரஸ் மீதான தடை: ஜேர்மன் பொலிஸ் அரசை நோக்கிய மற்றொரு அடி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த வெள்ளிக்கிழமை பேர்லினில் நடந்த பாலஸ்தீனிய காங்கிரஸை நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் கலைத்ததில் இருந்து, போலீசார் சட்டத்தை மதிக்காமல் ஜனநாயக உரிமைகளை நசுக்கிய எதேச்சதிகாரம் மற்றும் இரக்கமற்ற தன்மை குறித்த புதிய விவரங்கள் ஒவ்வொரு நாளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அமைதிக்கான யூத குரல் செய்தித் தொடர்பாளர் உடி ராஸை ஜேர்மன் போலீசார் கைது செய்தனர், ஏப்ரல் 12, 2024 [Photo: @AliAbunimah]

ஜேர்மன் அரசாங்கம், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் போன்ற அதன் எதிரிகளை வழமையாக குற்றம்சாட்டும் அதே பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தை, காஸாவில் அது ஆதரிக்கும் இனப்படுகொலை எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் பயன்படுத்துகிறது. உள்துறை அமைச்சர் நான்சி பைசர் (எஸ்பிடி) கடந்த வெள்ளியன்று பிரயோகிக்கப்பட்ட கடுமையான போலிஸ் நடவடிக்கையை ஆதரித்தார். அவர் ட்விட்டரில் எழுதுகையில், பேர்லின் பொலிஸ் “பாலஸ்தீன காங்கிரஸ் என்றழைக்கப்படுவதை ஒடுக்குவது” “சரியானது மற்றும் அவசியமானது” என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் அமைப்பாளர்களுக்கு ஆலோசனை கூறும் வக்கீல்களின் கூட்டமைப்பு ஏப்ரல் 13 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் காங்கிரஸ் கூடுவதற்கான தயாரிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளின் போக்கு ஆகியவை விவரிக்கப்பட்டிருந்தன. காங்கிரஸ் கூடுவதற்கு முன்னதாக அமைப்பாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்கனவே பல பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் நடந்திருப்பதை இது வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் தொடங்கவிருந்த காலையில், நிகழ்ச்சி மற்றும் திட்டமிடப்பட்ட பேச்சாளர்கள் பொலிசாருடன் விவாதிக்கப்பட்டு அவர்களால் உறுதிப்படுத்தப்பட்டனர்.

எவ்வாறிருப்பினும், பொலிசாரின் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஏற்பாட்டாளர்கள் உடன்பட்ட போதிலும், அவை கேள்விக்குரியதாக இருந்தாலும் கூட, பொலிசார் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் நான்கு நாள் கூட்டத்திற்கு தடை விதித்து அதை கலைத்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் கிறிஸ்தோப் வன்ட்ரயர் பாலஸ்தீன காங்கிரஸ் மீதான தாக்குதலைக் கண்டிக்கிறார். வீடியோவில் ஆங்கில வசனங்கள் உள்ளன.

பல தசாப்தங்களாக பாலஸ்தீனிய பிரச்சனைக்காக பிரச்சாரம் செய்து வரும் 86 வயதான டாக்டர் சல்மான் அபு சித்தாவிடமிருந்து நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்ட வீடியோ செய்தி, இந்த தடைக்கு ஒரு சாக்குப்போக்காக இருந்தது. அபு சித்தா சட்டத்திற்கு புறம்பாக எதுவும் சொல்லவில்லை என்றாலும், அங்கிருந்த வக்கீலின் கூற்றுப்படி, சில நிமிடங்களுக்குப் பிறகு போலீசார் அந்த வீடியோ காட்சியை நிறுத்தினர்.

பேர்லினில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு சபாநாயகர் தடை விதித்துள்ளார் என்று காரணம் கூறப்பட்டது. எவ்வாறிருப்பினும், அமைப்பாளர்களோ அல்லது பொதுமக்களோ - வெளிப்படையாக காவல்துறையினரும் கூட சமீபத்தில் வரை இதை அறிந்திருக்கவில்லை. மேலும், நடவடிக்கைகளுக்கான தடை, வீடியோ இயக்குவதற்கு பொருந்தாது என்று முந்தைய வழக்குகளில் நீதிமன்றங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தன.

ஏற்பாட்டாளர்கள் வீடியோ ஒளிபரப்பை இயக்குவதைத் தவிர்க்க முன்வந்தபோதும், போலீசார் திருப்தி அடையவில்லை. இந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு உலகெங்கிலும் குற்றவியல் அறிக்கைகளை ஒளிபரப்ப பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் இப்போது கூறினர். நேரடி ஒளிபரப்பு இல்லாமல் செய்ய அமைப்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் அதுவும் அவர்களுக்கு உதவவில்லை.

அந்த நிகழ்வை நிறுத்தவதற்கான முடிவு நீண்டகாலத்திற்கு முன்னரே எடுக்கப்பட்டுவிட்டது என்பது வெளிப்படை. அதற்கு எந்த சட்டபூர்வ அடித்தளமும் இல்லை மற்றும் ஒரு நம்பத்தகுந்த காரணமும் கூட இல்லை. போலீஸ் நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த தலைவர், காஃப்காஸ்க் பயமுறுத்தும் வாதத்துடன் இந்த தடையை நியாயப்படுத்தினார். எந்தவொரு செயலையும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்ட ஒரு நபரின் வீடியோ செய்தியைக் காண்பிப்பதை காங்கிரஸ் தொடர்ந்தால், குற்றவியல் அறிக்கைகள் வெளியிடப்படும் என்று சந்தேகிக்க போதுமான காரணத்தை அவருக்கு வழங்கியது.

இது நாஜிக்களின் கீழ் இருந்ததைப் போலவே, ஒரு நபரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கருத்தியல் நீதியாகும். இங்கு தண்டிக்கப்படுவது கிரிமினல் குற்றமோ அல்லது தண்டனைக்குரிய அறிக்கையோ அல்ல. மாறாக, சம்பந்தப்பட்டவர்கள் அரசின் நிலைப்பாட்டுக்கு ஒவ்வாத விஷயங்களைச் சொல்லக்கூடும் என்ற வெறும் சந்தேகமே போதுமானது.

காங்கிரசுக்கு எதிராக எண்ணற்ற அடக்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உதாரணமாக, அறிவிக்கப்பட்ட பிற பேச்சாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. குறைந்தபட்சம் இரண்டு சம்பவங்களிலாவது தொடர்புத் தடைகள் விதிக்கப்பட்டு, மாநாட்டில் பங்கு பெறுபவர்களுடன் தொடர்பு கொள்ளவும், அடைக்கலம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டது.

முன்னாள் கிரேக்க நிதியமைச்சரும் பான்-ஐரோப்பிய கட்சியான DiEM25 இன் தலைவருமான யானிஸ் வாருஃபாகிஸ் மீது தடை விதித்துள்ள ஜேர்மன் உள்துறை அமைச்சகம், அவர் ஜேர்மனிக்குள் நுழைவதற்கும் இணைய அணுகலுக்கும் தடை விதித்துள்ளது. இதன் நடைமுறை அர்த்தம் என்னவென்றால், ஜேர்மனியில் வாருஃபாகிஸ் இனி பகிரங்கமாக பேச அனுமதிக்கப்படப் போவதில்லை என்பதாகும்.

கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் மருத்துவரும் முகவருமான டாக்டர் கசான் அபு சித்தாவும் கூட்டாட்சி போலீசாரால் குறுகிய அறிவிப்பின் பேரில் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார். பேர்லின் விமான நிலையத்தில் வந்தவுடன் அவர் காவலில் வைக்கப்பட்டு, மூன்று மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் லண்டனுக்கு ஒரு விமானத்தில் ஏற்றப்பட்டார். மேலும் அவர் இணையத்தில் உரையாற்றவும் தடை விதிக்கப்பட்டது.

போரின் போது காஸா மருத்துவமனைகளில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்புடன் பல வாரங்கள் பணியாற்றிய கசான் அபு சித்தா இது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். அங்கு ஜேர்மனி இனப்படுகொலைக்கு உதவுவதாகவும், உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காஸாவில் தனக்கு ஏற்பட்ட கொடூரமான அனுபவங்களை இந்த காங்கிரசில் தெரிவிக்க அவர் விரும்பினார்.

காங்கிரசில் இடம்பெறுவதற்கு முன்னதாக, அவர் கலந்து கொள்வதை தடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஏற்கனவே பல்வேறு மிரட்டல் வழிவகைகளை பயன்படுத்தினர்.

உதாரணமாக, காங்கிரசிற்காக நன்கொடை வசூலித்துக் கொண்டிருந்த நியாயமான அமைதிக்கான யூத குரல் சங்கத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. பாலஸ்தீன காங்கிரசுக்கு நிதி திரட்டுவதற்கு மாலை நடைபெறவிருந்த Cafe MadaMe க்கு எதிராக “பாதுகாப்பு எச்சரிக்கைகள்” இருந்தன. இது இறுதியில் அழுத்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

தீயணைப்பு பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு நிலைமைகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய, நிகழ்வு இடம்பெற இருந்த மண்டபத்தின் உரிமையாளருக்கும் பல்வேறு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர். இத்தகைய வழிமுறைகள் மாபியாவின் தொகுப்பிலிருந்து வரக்கூடும் அல்லது ஒரு எதேச்சதிகார சர்வாதிகாரத்தின் தொகுப்பிலிருந்து வரக்கூடும் என்று கூறுவது கடினம்.

அனைத்து மிரட்டல் நடவடிக்கைகளும் பலனளிக்காததால், எந்த சட்ட அடிப்படையும் இல்லாமல் காங்கிரஸ் தடை செய்யப்பட்டது. வழக்குரைஞர்களின் கூட்டு அபிவிருத்திகள் பற்றிய அதன் விளக்கத்தை பின்வரும் அறிக்கையுடன் முடிக்கிறது:

கூட்டத்தையும் அதில் பங்கெடுத்தவர்களையும் பாதுகாக்கவும், அது சுமூகமாகவும் சட்டபூர்வமாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் அனைத்து அரசியலமைப்பு முயற்சிகளும் பொலிசாரால் தகர்க்கப்பட்டன. கூட்டம் கூடுவதற்கான சட்டம், வழக்கு சட்டம் மற்றும் அரசியலமைப்பு விதிகள் ஆகியவற்றில் நிரூபிக்கப்பட்ட அனுபவங்களைத் தாண்டி, இங்கு சட்டப் பாதுகாப்பு குறைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உருவாக்கப்பட்டது.

இந்த தடையால் தைரியமடைந்த பேர்லின் பொலிஸ், அதைத் தொடர்ந்து வந்த நாட்களில் மேலும் பாலஸ்தீனிய சார்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.

கடந்த சனிக்கிழமையன்று, காங்கிரஸின் மீதான தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1,900 பேர் கூடினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடுமையான வெயிலில், போலீசார் அரை மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில், ஆர்ப்பாட்டத்தை இடைமறித்து, முன்னறிவிப்பு இல்லாமல் உள்ளே நுழைந்து பங்கேற்பாளர்களின் குழுவை அகற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதற்கடுத்த நாள், கூட்டாட்சி நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன்னால் நடந்த “ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆக்கிரமிப்பு” என்ற போராட்ட முகாமிற்கு எதிராக பொலிஸ் இன்னும் மிருகத்தனமான நடவடிக்கையை எடுத்தது. நடந்து வரும் இனப்படுகொலையில் ஜேர்மனியின் தீவிர பங்கைக் கண்டித்து பல நாட்களாக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த வாரத்தின் திங்கட்கிழமை இந்த எதிர்ப்பு முகாம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமைதியாக நடந்த போராட்டத்தின் மீது போலீசார் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டனர். இதில் யூதர்கள் உட்பட பலரைத் தாக்கி, மூச்சுத் திணறலை ஏற்படுத்தி, மக்கள் மீது மிளகுத்தூளை தூவி, அவர்களை தரையில் வீசி பொலிசார் காயமடையச் செய்தனர். இதில் பாதிக்கப்பட்ட பலரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது. யூத குரல் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த காங்கிரஸ் கூட்டத்தின் போது ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்ட வேறு சில சம்பவங்களும் நடந்தன. உதாரணமாக, காங்கிரசில் பங்கேற்ற ஒருவர் “பாலஸ்தீனத்தை விடுதலை செய்” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டையும், பாலஸ்தீனிய வண்ணங்களில் பகட்டான முஷ்டியையும் அணிந்திருந்ததால், அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டதாக taz தெரிவித்துள்ளது. இதனால், அவர் தனது டி-ஷர்ட்டை கழற்றி ஆதாரமாக போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது. பல பங்கேற்பாளர்களும் செய்தியாளர்களும் தாங்கள் பின்தொடரப்பட்டதாகவும், கண்காணிக்கப்பட்டதாகவும், அவர்களுடைய அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டதாகவும், வீட்டிற்கு செல்லும் வழியில் பொலிசாரால் சோதனையிடப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இவை சர்வாதிகார ஆட்சி முறைகளுக்கு நன்கு தெரிந்த வழிமுறைகள் ஆகும். ஜேர்மனியின் போர்-சார்பு கொள்கைகளை எதிர்க்கும் எவருக்கும் எதிராக இவை இயக்கப்படுகின்றன. ஆளும் வர்க்கம், அதன் போர்க் கொள்கைக்கு எதிர்ப்பு காட்டுவது குறித்த மிகப்பெரும் அச்சத்தையும் இது வெளிப்படுத்தி காட்டுகிறது. இனப்படுகொலை, போர்க் கொள்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு முடிவுகட்ட தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும்.

Loading