இஸ்ரேலிய போர் குற்றவாளிகள் மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

காஸாவில் இனப்படுகொலையைத் தூண்டிய மூத்த இஸ்ரேலிய அதிகாரிகள் மீது நடந்து வரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court - ICC) விசாரணைக்கு பைடென் நிர்வாகம் திங்களன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

நாசர் மருத்துவமனையில் ஒரு வெகுஜன கல்லறை [Photo: Bisan Owda]

பாதுகாப்பு மந்திரி யோவ் காலெண்ட் (Yoav Gallant), இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்ஸி ஹலேவி (Herzi Halevi) மற்றும் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து உடனடியாக கைது ஆணைகள் பிறப்பிக்கப்படலாம் என்று இஸ்ரேலிய ஊடக ஆதாரங்கள் சமீபத்திய நாட்களில் தெரிவித்துள்ளன.

“ICC விசாரணை குறித்து நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். அதை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவர்களுக்கு அதற்கான தகுதி இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை” என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரினே ஜீன்-பியர் (Karine Jean-Pierre) கூறினார்.

வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் (Vedant Patel), “எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பாலஸ்தீன நிலைமை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம்” என்று அதே புள்ளிகளை மீண்டும் வலியுறுத்தினார்,

வெள்ளை மாளிகையோடு, உயர்மட்ட காங்கிரஸ் குடியரசுக் கட்சியினர் இணைந்து கொண்டனர். குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜோன்சன் (Mike Johnson), இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு ICC கைது ஆணை பிறப்பிப்பது “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நலன்களை நேரடியாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும். பைன் நிர்வாகத்தால் சவால் செய்யப்படாவிட்டால், அமெரிக்க அரசியல் தலைவர்கள், அமெரிக்க இராஜதந்திரிகள் மற்றும் அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கைது ஆணைகளை பிறப்பிக்க ICC முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகாரத்தை உருவாக்கி எடுத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய போர்க்குற்ற குற்றவாளியான அமெரிக்கா, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய ரோம் சாசனத்தில் கையெழுத்திடவில்லை. மேலும், அமெரிக்க போர் குற்றங்களையோ அல்லது மத்திய கிழக்கில் அதன் பினாமியான இஸ்ரேலின் போர்க்குற்றங்களையோ விசாரிக்க அதன் அதிகாரத்தை அங்கீகரிக்கவில்லை.

செப்டம்பர் 2, 2020 அன்று, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர்க் குற்றங்கள் குறித்த நீதிமன்ற விசாரணைக்கு பதிலளிக்கும் விதமாக ICC வழக்கறிஞர் ஃபடோ பென்சவுடா (Fatou Bensouda) மீது அமெரிக்க அரசாங்கம் தடைகளை விதித்தது.

இருந்தபோதிலும், உக்ரேனில் நடந்துவரும் போர் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடத்திய போர்க்குற்ற விசாரணையை பைடென் நிர்வாகம் பகிரங்கமாக வரவேற்றுள்ளது.

ரஷ்ய அதிகாரிகள் மீதான ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை அமெரிக்கா ஏன் ஆதரிக்கிறது என்று வினவிய போது, பட்டேல், “இஸ்ரேலிய அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் [ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின்] மற்றும் கிரெம்ளின் மேற்கொள்ளும் விடயங்களுக்கு இடையே எந்த தார்மீக சமநிலையும் இல்லை,” என்று அறிவித்தார்.

ICC இன் பணிகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நெதன்யாகுவும் பைடனும் விவாதித்ததாக ப்ளூம்பெர்க் (Bloomberg) மற்றும் ஆக்ஸியோஸ் (Axios) தெரிவித்தன.

“அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி உட்பட அதன் பல நட்பு நாடுகளுடன் இஸ்ரேலிய அரசாங்கம் இரகசிய சந்திப்புகள், ஆலோசனைகள் மற்றும் உரையாடல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. கைது ஆணைகள் வெளியிடுவதைத் தடுத்து, பாலஸ்தீனிய வழக்கில் நீதிமன்றத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஒரு முயற்சி இது” என்று யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பு குறிப்பிட்டது.

ICC இன் தலைமை வழக்கறிஞர் கரீம் கான், இஸ்ரேலிய படைகளின் நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வருவதாகக் கூறினார். “எனது அலுவலகம் அதன் ஆணையின்படி நடவடிக்கை எடுக்கும் போது சட்டத்தை பின்பற்றாதவர்கள் பின்னர் புகார் செய்யக்கூடாது” என்று அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது, தனிநபர்கள் மீது வழக்குத் தொடராத சர்வதேச நீதிமன்றத்திலிருந்து (International Court of Justice - ICJ) தனியானதாக இருக்கிறது. தென்னாப்பிரிக்கா தொடர்ந்த ஒரு வழக்கில், காஸாவில் “இனப்படுகொலை நடவடிக்கைகளை” தடுக்கவும், பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவும் இஸ்ரேல் செயல்பட வேண்டும் என்று ICJ ஜனவரியில் தீர்ப்பளித்தது.

ICJ தீர்ப்பைத் தொடர்ந்து, குண்டுவீச்சுக்கள், பாரிய மரணதண்டனைகள் மற்றும் வேண்டுமென்றே பட்டினிக்கு தள்ளுதல் ஆகியவற்றால், பல்லாயிரக்கணக்கான காஸாவிலுள்ள மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்தனர்.

இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், அதன் அதிகார வரம்பை அங்கீகரிக்கவில்லை. ஆனால், பாலஸ்தீனம் 2015 முதல் உறுப்பினராக இருந்து வருகிறது.

ஞாயிறன்று, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz), இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக பிடியாணைகள் பிறப்பிக்கப்படலாம் என்ற “வதந்திகள்” குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

“பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டால், அவை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தளபதிகள் மற்றும் சிப்பாய்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் நாங்கள் போராடிவரும் ஈரான் தலைமையிலான தீவிரவாத அமைப்பான ஹமாஸ் மற்றும் தீவிர இஸ்லாத்தின் அச்சுக்கு தார்மீக ஊக்கத்தை வழங்கும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“தற்காப்புக்கான அதன் உள்ளார்ந்த உரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் எந்தவொரு முயற்சியையும் இஸ்ரேல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” என்று நெதன்யாகு கூறினார். இஸ்ரேலிய அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் வழக்குத் தொடரப்படுவது “மூர்க்கத்தனமானதாக” இருக்கும் என்று கூறிய அவர், “நாங்கள் அதற்கு அடிபணிய மாட்டோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

காஸா இனப்படுகொலையின் ஏகாதிபத்திய ஆதரவாளர்களை நோக்கிய ஒரு செய்தியில் நெதன்யாகு, “ஹேக் நீதிமன்றத்தின் முடிவுகள் இஸ்ரேலின் நடவடிக்கைகளை பாதிக்காது என்றாலும், குற்றகரமான பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் எந்தவொரு ஜனநாயகத்தின் சிப்பாய்களையும் அதிகாரிகளையும் அச்சுறுத்தும் ஒரு அபாயகரமான முன்மாதிரியாக இருக்கும்” என்று கூறினார்.

இதனை வேறுவிதமாகக் கூறினால், இஸ்ரேலிய தலைவர்கள் மீதான எந்தக் குற்றச்சாட்டும், நடைமுறையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் தலைவர்கள் மீது சுமத்தப்படும் ஒரு குற்றச்சாட்டாகத்தான் இருக்கும்.

திங்களன்று ராய்ட்டர்ஸ், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வக்கீல்கள் ஷிபா மற்றும் நாசர் மருத்துவமனைகளில் இருந்த மருத்துவ அதிகாரிகளை பேட்டி கண்டனர் என்ற தகவலை வெளியிட்டது. அங்கு இஸ்ரேலியப் படைகள் விசாரணையின்றி மரண தண்டனைகளை நிறைவேற்றியதாகவும், சடலங்களை பாரிய புதைகுழிகளில் வீசியதாகவும் கூறப்படுகிறது.

மொத்தமாக 500க்கும் மேற்பட்ட சடலங்களைக் கொண்ட இரண்டு மருத்துவமனைகளிலும் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து சில வாரங்களில், இஸ்ரேலிய படைகள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகளை கொன்றதற்கான சான்றுகள் பெருகி வருகின்றன.

ஒரு அறிக்கையில், யூரோ-மெட் ஆய்வகம் பின்வருமாறு எழுதியது: “புதை குழிகளில் இருந்து தோண்டி எடுக்கும் செயல்பாட்டின் போது, சிறுநீர் வடிகுழாய்கள் அல்லது உடைந்த எலும்புக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன, இன்னும் இறந்த சில நோயாளிகளின் உடல்களுடன் இணைக்கப்பட்டபடி காணப்படுகின்றன, அத்துடன் அல்-ஷிஃபா மருத்துவ வளாகத்தில் அவர்களுடன் புதைக்கப்பட்ட மருத்துவ பதிவுகள், நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் மரணதண்டனையை உறுதிப்படுத்துகின்றன.”

திங்களன்று அமெரிக்க, இங்கிலாந்து அதிகாரிகள் இஸ்ரேல் காஸாவில் ஒரு தற்காலிக போர்நிறுத்தத்திற்கான அதன் விதிகளை திருத்தியுள்ளது என்று கூறினர். அதே நேரத்தில், அப்பகுதியில் இருந்து இராணுவப் படைகள் நிரந்தரமாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதையும் நிராகரித்தனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இந்த முன்மொழிவை “அசாதாரணமான தாராள மனப்பான்மை” என்று அழைத்தார், ஹமாஸ் “காஸா மக்களுக்கும் போர்நிறுத்தத்திற்கும் இடையே உள்ள ஒரே விஷயம்” என்று அறிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஒசாமா ஹம்தான், “பாலஸ்தீனர்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவது தாராளமானதல்ல” என்று அல் ஜசீராவிடம் கூறினார்.

“இஸ்ரேலிய செய்தித்தாளில் இருந்து அவர்கள் இன்னும் இரண்டு முக்கிய பிரச்சினைகளை வலியுறுத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது. அவர்கள் ஒரு முழுமையான போர் நிறுத்தத்தை விரும்பவில்லை மற்றும் காஸாவில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது குறித்து அவர்கள் தீவிரமாக பேசவில்லை. உண்மையில், அவர்கள் இன்னும் தங்கள் இருப்பைப் பற்றி பேசுகிறார்கள்... இதன் அர்த்தம் அவர்கள் காஸாவை தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டே இருப்பார்கள் என்பதாகும்” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், காஸாவின் தெற்கு நகரமான ரஃபா மீதான தாக்குதலுக்கான தயாரிப்புகளை இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அங்கு 1.5 மில்லியன் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். நுசைராட் அகதிகள் முகாமில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட ஒரு தாக்குதல் உட்பட, நகரத்தின் மீது அன்றாடம் குண்டுவீச்சுக்கள் தொடர்கின்றன.

இன்றுவரை, 14,500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 34,488 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 8,000 க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர். காஸாவில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 77,643 ஆக உள்ளது.

திங்களன்று, Middle East Eye பத்திரிகை, இஸ்ரேல் “தெற்கு காஸா எல்லை நகரத்தின் மீதான அதன் தாக்குதலுக்கான தயாரிப்பில் ரஃபாவிலிருந்து இராணுவத்திற்கான வயதுடைய ஆண்கள் தப்பி ஓடுவதைத் தடுக்கும் சோதனைச் சாவடிகளின் ஒரு சிக்கலான அமைப்புமுறையை” அமைக்க திட்டமிட்டு வருவதாக அறிவித்தது.

அத்தோடு, “எதிர்பார்க்கப்படும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு முன்னதாக சில பெண்கள் மற்றும் குழந்தைகள் ரஃபாவை விட்டு வெளியேற அனுமதிக்கும் வகையில் சோதனைச் சாவடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், நிராயுதபாணியான பாலஸ்தீனிய ஆண்கள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, எதிர்பார்க்கப்படும் இஸ்ரேலிய தாக்குதலின் போது ரஃபாவில் சிக்கியிருப்பார்கள்” என்று அது மேலும் தெரிவித்தது.

இஸ்ரேல் தான் காலி செய்யுமாறு கட்டளையிட்டுள்ள பகுதிகளை சுதந்திர தாக்குதல் மண்டலங்களாக கருதியிருப்பதால், ரஃபா மீதான தாக்குதலானது, நகரத்தில் எஞ்சியிருக்கும் எவரையும் பாரிய மரணதண்டனைக்கு உள்ளாக்கும் களமாகத்தான் இருக்கும் என்பது தெளிவாகிறது.

Loading