மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கெய்ரோவில் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் முறிந்துவிட்டதாக வந்த செய்திகளுக்கு மத்தியில் தெற்கு நகரமான ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் வியாழனன்று தொடர்ந்தன. சுமார் 1.5 மில்லியன் மக்கள் ஒன்றாக நெரிசலில் சிக்கியுள்ள காஸாவிலுள்ள பாலஸ்தீனியர்களின் கடைசி புகலிடம் மீது, நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட தாக்குதல், அப்பகுதிக்குள் உதவிக்காக பிரதான எல்லை கடக்கும் பாதைகளை அடைத்துள்ளது, இது மனிதாபிமான பேரழிவை இன்னும் மோசமாக்கியுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கிழக்கு ரஃபா மீது குண்டுவீசத் தொடங்கியதிலிருந்து எகிப்திற்கும் காஸாவிற்கும் இடையே உள்ள ரஃபா எல்லைக் கடப்பு மற்றும் இஸ்ரேலில் இருந்து சுற்றிவளைப்புக்குள் நுழையும் கரேம் அபு சலேம் (Karem Abu Salem) கடக்கும் பாதை ஆகியவை மூடப்பட்டுவிட்டன. கரேம் அபு சலேம் கடக்கும் பாதை புதனன்று மீண்டும் திறக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறியது, ஆனால் காஸாவிற்கு உதவிகள் சென்றடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை. காஸா அரசாங்க ஊடக அலுவலகத்தின் கூற்றுப்படி, கடந்த 48 மணிநேரங்களில் சுமார் 400 சரக்கு உதவி வாகனங்கள் செல்வதை இஸ்ரேல் தடுத்துள்ளது.
ஐ.நா. நிவாரண முகமைத் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் (Martin Griffiths) கூறுகையில், “எல்லைக் கடப்புகள் மூடப்பட்டிருப்பது எரிபொருள் இல்லாததைக் குறிக்கிறது. அதாவது லாரிகள் இல்லை, ஜெனரேட்டர்கள் இல்லை, தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, மக்கள் அல்லது பொருட்களின் இயக்கம் இல்லை. இது எந்த உதவியும் இல்லை என்று அர்த்தம்” என்று குறிப்பிட்டார். தெற்கு காஸாவில் எஞ்சியுள்ள மருத்துவமனைகள் எரிபொருள் பற்றாக்குறையால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மூடப்படும் கட்டாயத்திற்கு தள்ளப்படும்.
வியாழன் இரவு ஒரு இஸ்ரேலிய அதிகாரி ராய்ட்டர்ஸிடம், கெய்ரோவில் இஸ்ரேலிய மற்றும் ஹமாஸ் அதிகாரிகளுக்கு இடையே சாத்தியமான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தைகள் முறிந்துவிட்டதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ரஃபாவில் தங்கள் நடவடிக்கையைத் தொடரும் என்றும் கூறினார். வாரயிறுதியில் அப்பிராந்தியத்திற்கு பயணித்து ஒரு உடன்பாட்டை எட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சிஐஏ இயக்குனர் வில்லியம் பேர்ன்ஸ் (William Burns) அங்கிருந்து வெளியேறுகிறார் என்பதை வெள்ளை மாளிகை ஒப்புக் கொண்டது. இருப்பினும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி (John Kirby) பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன என்று வலியுறுத்தினார்.
ரஃபாவில் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பெரிய குண்டுகளையோ அல்லது பீரங்கி குண்டுகளையோ வழங்காது என்று புதன்கிழமை இரவு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் கூறிய கருத்துக்களை ஊடகங்கள் விரிவாக வெளியிட்டன. ஆனால், தாக்குதலை எவ்வாறு சிறப்பாக முன்னெடுப்பது என்பது குறித்த தந்திரோபாய வேறுபாடுகள் மட்டுமே இதில் உள்ளன என்று கிர்பி வியாழனன்று அவரது கருத்துக்களில் தெளிவுபடுத்தினார். பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசாங்கம், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை தீவிரப்படுத்த காஸா மீதான தாக்குதலை துரிதப்படுத்துவதை ஆதரிக்கிறது. அத்துடன் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிக்கும் எந்தவொரு ஒப்பந்தமும் ரஃபாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து “தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்” என்று இஸ்ரேலிய பிரதமர் கோரியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், பைடென் நிர்வாக அதிகாரிகள், மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சண்டையில் ஒரு தற்காலிக இடைநிறுத்தம் என்பது ரஃபாவில் வருங்கால படுகொலைக்கான சாத்தியக்கூறை இன்னும் திறந்து விடும் என்று கருதுகின்றனர்.
கிர்பி கூறுகையில்,
எந்தவொரு பெரிய ரஃபா மீதான தரைப்படை நடவடிக்கையும் உண்மையில் பேச்சுவார்த்தை மேசையில் ஹமாஸின் கரங்களை வலுப்படுத்துமே தவிர இஸ்ரேலின் கரங்களை அல்ல.
அவர் மேலும் கூறியதாவது:
ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்துவது குறித்து எல்லோரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆயுதங்கள் இன்னும் இஸ்ரேலுக்கு சென்று கொண்டிருக்கின்றன. அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவசியமான அனைத்தையும் அவர்கள் இன்னும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
வியாழனன்று வெளிவந்த அல் ஜசீரா செய்தியின்படி,
நேற்று இஸ்ரேலில் இருந்த சி.ஐ.ஏ. யின் தலைவர் வில்லியம் பேர்ன்ஸ் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு ஸ்தாபகத்தின் பிற உறுப்பினர்களை சந்தித்தார். இது போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக கருதப்படக் கூடாது, ஆனால் இது போருக்கான ஒரு இடைநிறுத்தமாக —ஒரு சாதகமான அபிவிருத்தி— கருதப்பட வேண்டும் என்றும், அதன்பிறகு மேலதிக நடவடிக்கைகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும் பேர்ன்ஸ் அவரது சகாக்களிடம் கூறியதாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இஸ்ரேல் அதன் கொலைகாரத் தாக்குதலை வியாழனன்று ரஃபாவின் பரந்த பகுதிகளுக்கு விரிவுபடுத்தியதாக கள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 100,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏற்கனவே ரஃபாவிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களில் பலர் ஏற்கனவே அக்டோபர் 7 முதல் பல முறை தப்பி இடம்பெயர்ந்து வந்தவர்களாவர்.
அல் ஜசீராவின் தாரிக் அபு அஸ்ஸூம் (Tariq Abu Azzoum), காஸாவின் மத்திய பகுதியில் உள்ள டேர் எல்-பல்லாவிலிருந்து (Deir el-Ballah) அறிக்கையிடும் போது, “பேரழிவு, கொலைப்படை”, “கிழக்கு பகுதிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், ரஃபாவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளுக்கும் எதிராக களத்தில் பயன்படுத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார். ரஃபாவில் தஞ்சமடைந்தவர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் தப்பிச் செல்லும்படி கட்டளையிடப்பட்ட பகுதிகளில் ஒன்று அல்-மவாசி (al-Mawasi) ஆகும். அங்கு ஏற்கனவே சுமார் 400,000 பேர் உள்ளனர். அபு அஸ்ஸூம் தெரிவிக்கையில், “அங்கு குண்டுவீச்சுக்கள் எந்தவிதமான இடைநிறுத்தமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
வடக்கில் காஸா நகரத்தின் செய்தூன் (Zeitoun) பகுதியிலும் ஒரு பெரிய குண்டுவீச்சுக்கள் நடந்ததாக அறிவிக்கப்பட்டது, அங்கு குறைந்தது 25 இலக்குகள் தாக்கப்பட்டு, டசின் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில், ஆயுதமேந்திய அதிவலது இஸ்ரேலியர்களின் ஒரு குழு, காஸாவிற்குள் உதவி வினியோகிப்பதற்கான மத்திய ஒருங்கிணைப்பு முகமையான பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமையின் (UNRWA) தலைமையகத்திற்கு தீ வைத்தது. உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், UNRWA அந்த இடத்தை மூட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.
“எங்கள் இயக்குநர் மற்ற ஊழியர்களின் உதவியுடன் தீயை தாங்களே அணைக்க வேண்டியிருந்தது, ஏனெனில் இஸ்ரேலிய தீயணைப்பு கருவிகள் மற்றும் போலீசார் வருவதற்கு சிறிது நேரம் பிடித்தது” என்று UNRWA இன் கமிஷனர் ஜெனரல் பிலிப் லாசரினி (Philippe Lazzarini) கருத்து தெரிவித்தார்.
உலக உணவுத் திட்டத்தின் பாலஸ்தீன நடவடிக்கைகளுக்கான இயக்குநர் மேத்யூ ஹோலோவே (Matthew Holloway), ரஃபாவில் உள்ள உதவி அமைப்பின் பிரதான பண்டகசாலையை அணுக முடியாது என்றும், நகரத்தில் ஒரே ஒரு பேக்கரி மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
வியாழக்கிழமை கூடிய இஸ்ரேலின் போர் அமைச்சரவையில், ரஃபா மீதான தாக்குதலை அதிகரிப்பதற்கு பெரும் ஆதரவு இருப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. “இஸ்ரேல் ரஃபாவில் தனது நடவடிக்கையை மேலும் தீவிரமாகத் தொடர வேண்டும், அதை விரிவுபடுத்தி நகரத்தை ஆக்கிரமிக்க வேண்டும்” என்று ஒரு அதிகாரி இஸ்ரேல் ஹயோம் (Israel Hayom) செய்தித்தாளிடம் தெரிவித்தார். “இந்த விவகாரத்தில் அமைச்சரவையில் ஒருமித்த கருத்து நிலவுகிறது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வியாழனன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டானியல் ஹகாரி (Daniel Hagari) 2,000 பவுண்டுகள் (900Kg) எடையுள்ள 1,800 குண்டுகளும், 500 பவுண்டுகள் (226Kg) எடையுள்ள மற்றொரு 1,700 குண்டுகளையும் அமெரிக்கா அனுப்பி வைத்ததாக பரவலாக கூறப்பட்டாலும், ரஃபா மீதான தாக்குதல் நடத்துவதற்கு தேவையான ஆயுதங்கள் இராணுவத்திடம் உள்ளன என்று அறிவித்தார்.
“இராணுவம் அது திட்டமிடும் பணிகளுக்கும், ரஃபாவில் உள்ள பணிகளுக்கும் ஆயுதங்களைக் கொண்டுள்ளது. எங்களுக்குத் தேவையானதை நாங்கள் வைத்திருக்கிறோம்” என்று ஹகரி கூறினார். இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் துணைத் தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழுவான இஸ்ரேலின் பாதுகாப்புக்கான தளபதிகளின் தலைமை நிர்வாகியுமான இட்டாமர் யார் (Itamar Yaar), இந்த மதிப்பீட்டை ஆதரித்து, குண்டுகள் அனுப்பும் கப்பல் இடைநிறுத்தப்பட்டதை ஒரு “அடையாளம்” என்று விவரித்தார்.
இட்டாமர் யார் மேலும் கூறியதாவது:
இது அமெரிக்க வெடிமருந்துகள் மீதான அமெரிக்கத் தடை அல்ல, ஆனால் இது நெதன்யாகுவுக்கு அவர் அமெரிக்க நலன்களை கடந்த சில மாதங்களாகக் கருத்தில் கொண்டதை விட அதிகமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற ஒரு வகையான இராஜதந்திரச் செய்தியாகும் என்று நான் நினைக்கிறேன்.
உலக சோசலிச வலைத் தளம், காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் பேரழிவுகரமான குண்டுவீச்சின் ஆரம்பத்திலிருந்தே விளக்கியது போல, ஈரானை குறிவைத்து பிராந்தியம் முழுவதும் ஒரு போரை முன்னெடுப்பதற்காக பாலஸ்தீனிய இனப்படுகொலையை சுரண்டுவதே அமெரிக்காவின் நலன்களாகும்.
பாலஸ்தீன பிரச்சினைக்கான இஸ்ரேலின் “இறுதி தீர்வான” தெஹ்ரானை அடிபணியச் செய்வதன் மூலமும், சீனா மற்றும் ரஷ்யாவைத் தோற்கடிப்பதன் மூலமும், எரிசக்தி வளம் மிக்க மற்றும் மூலோபாயரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மத்திய கிழக்கின் மீது அதன் மேலாதிக்கத்தை பலப்படுத்துவதற்கான உந்துதலின் ஒரு முக்கிய கூறுபாடாக வாஷிங்டன் இதனைப் பார்க்கிறது. மத்திய கிழக்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில், துரிதமாக அபிவிருத்தி அடைந்து வரும் மூன்றாம் உலகப் போரின் ஒரு போர் முனையாகும். இதில் பிரதான ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் நலன்களுக்கு ஏற்ப உலகை மறுபங்கீடு செய்ய தீர்மானகரமாக உள்ளன.
இந்த சூழலில் பார்க்கும் போது, குறுகிய கால போர்நிறுத்தத்தை வலியுறுத்துவதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதலை தற்காலிகமாக கட்டுப்படுத்த பைடென் நிர்வாகத்தின் வெளிப்படையான முயற்சிகள், அனைத்து போர்முனைகளிலும் உலகப் போரை தீவிரப்படுத்துவதற்கான காலக்கெடுவைப் பற்றிய பரந்த பரிசீலனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
95 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ ஆதரவு நிதிதொகுப்பில், உக்ரேனில் ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ போருக்கு 61 பில்லியன் டாலர்களும், இஸ்ரேலுக்கு 26 பில்லியன் டாலர்களும், மற்றும் தைவானை சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ தளமாக மாற்றுவதற்கு சுமார் 8 பில்லியன் டாலர்களும் அடங்கும். இது நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யாவிற்குள் தாக்கும் திறன் கொண்ட தீவிர வலதுசாரி கியேவ் ஆட்சிக்கு அனுப்ப உதவியுள்ளது.
இஸ்ரேலை ஆயுதமயமாக்குவதற்கான பெரும் தொகைகள், காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை அழிப்பதற்கு சியோனிச ஆட்சிக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டதோடு மட்டுமல்லாமல், ஈரானுடனான நெருக்கடியான போரில் வாஷிங்டனின் முன்னணி தாக்குதல் நாயாக செயல்படுவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. வியாழனன்று உதவிப் பொதி பற்றிக் குறிப்பிட்ட கிர்பி, இஸ்ரேலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள முழுத் தொகையும் செலவழிக்கப்பட்டுவிடும் என்று வலியுறுத்தினார்.
வெளிப்படையாக, அமெரிக்க ஏகாதிபத்தியம், பில்லியன் கணக்கான கூடுதல் இராணுவ உதவிகள் ஈரானுடனான போருக்கான அதன் கூட்டாளியை வலுப்படுத்தும் என்று நம்புகிறது, இது காஸாவில் ஏழு மாதங்களாக பாதுகாப்பற்ற பொதுமக்கள் மீதான படுகொலையை ஒரு பக்கத்துக்கு தள்ளுமளவிற்கு மோசமான மோதலாக இருக்கும்.
தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தின் தலையீட்டால் மட்டுமே ஏகாதிபத்திய ஆதரவிலான காஸா மீதான படுகொலையையும் தீவிரமடைந்து வரும் மூன்றாம் உலகப் போரையும் நிறுத்த முடியும். இஸ்ரேலின் இரத்தந்தோய்ந்த தாக்குதலில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் உடந்தையாக இருப்பதற்கு எதிராக உலகெங்கிலுமான மாணவர்களின் எதிர்ப்பு போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்ப வேண்டும். தொழிலாள வர்க்கம் இஸ்ரேலுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவ தளவாடங்களின் விநியோகம் மற்றும் உற்பத்தியை நிறுத்த அணிதிரள வேண்டும்.
இரக்கமற்ற அரச ஒடுக்குமுறைக்கு முகங்கொடுத்து போராடிவரும் மாணவர்களை பாதுகாக்க தொழிலாளர்கள் முன்வர வேண்டும். மற்றும் மனிதகுலத்தை காட்டுமிராண்டித்தனத்தில் மூழ்கடித்து வரும் முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் ஏகாதிபத்திய போர் மற்றும் இனப்படுகொலையை எதிர்த்துப் போராட ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
