முன்னோக்கு

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர்: ரஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை அமெரிக்கா செயல்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தனது இனப்படுகொலை தாக்குதலை, ஆக்கிரமிக்கப்படாமல் இருந்த கடைசி பகுதியான ரஃபா மீதும், மற்றும் காஸா பகுதி முழுவதிலும் இந்த வாரத்திலிருந்து முடுக்கி விட்டுள்ளது.

நினைத்துப்பார்க்க முடியாதளவு பிராமண்டமான பேரழிவு தெற்கு காஸாவில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில், இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தெற்கு காஸாவில் தங்கள் இறுதித் தாக்குதலைத் தொடங்கி, சுற்றுப்புறங்களில் ஷெல் வீசி, அங்குள்ள துருப்புக்கள் மற்றும் டாங்கிகளை நகர்த்தியதால் கூடுதலாக 300,000 பாலஸ்தீனியர்கள் ரஃபாவிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

பிரதேசத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள மாவாசி பகுதியை நோக்கி இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனிய மக்களை வெளியேற்றுகிறது. அங்கு அவர்கள் இஸ்ரேலியப் படைகள், எகிப்திய எல்லை மற்றும் மத்தியதரைக் கடல் ஆகியவற்றுக்கு இடையில் சிக்கி, உணவு மற்றும் நீர் விநியோகம் இன்றி இஸ்ரேலிய குண்டுகள் மற்றும் ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பு இல்லாமல் ஒரு திறந்தவெளி சிறையில் அடைக்கப்படுவார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாலஸ்தீனிய ஆளும் கட்சியான ஹமாஸ் வடக்கு காஸாவில் தனது அரசியல் மற்றும் இராணுவ வலையமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதாகக் கூறி, 100,000க்கும் அதிகமான போருக்கு முந்தைய மக்கள்தொகை கொண்ட அந்த பிரதேசத்தின் ஜபாலியா அகதிகள் முகாமுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் மீண்டும் உழன்றன. காஸா நகரம் மற்றும் ஜபாலியாவை உள்ளடக்கிய காஸாவின் வடக்குப் பகுதி முழுவதிலும் உள்ள பகுதிகளுக்கு மருத்துவ சேவைகள் அல்லது மனிதாபிமான உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று காஸா அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதி முழுவதும் கடுமையான பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகளின் நிவாரண அதிகாரிகள் தெரிவித்தனர். ஊடகச் செய்திகளின்படி, வடக்கில் 200,000 பேர் வரையான மக்கள் போரில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

அமெரிக்க-நேட்டோ அச்சின் ஏகாதிபத்திய சக்திகள், குறிப்பாக பைடென் நிர்வாகம், ஏழு மாத கால காஸா இனப்படுகொலையின் இந்த சமீபத்திய கட்டத்திற்கு முழுக் குற்றவாளியாக இருக்கிறது.

இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாரிய எதிர்ப்பை தணிக்கும் நோக்கில், பைடென் தற்போது அரசியல் தோரணையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவருடைய சிடுமூஞ்சித்தனமான மற்றும் நேர்மையற்ற “விமர்சனங்கள்” இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளின் உண்மையான நடத்தையில் சிறிதளவு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை அல்லது அத்தகைய விளைவை அவர்கள் ஏற்படுத்த விரும்பவில்லை.

காஸாவில் மனிதாபிமானப் பேரழிவு குறித்து பல ஜனநாயகக் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை கையைப் பிசைந்து கவலை தெரிவித்த நிலையில், குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் இப்பகுதியில் அமெரிக்கக் கொள்கையின் சாராம்சத்தை சுருக்கமாகக் கூறினார்.

NBC தொலைக்காட்சியின் “Meet the Press” நிகழ்ச்சியில் பேசுகையில், கிரஹாம் தன்னை நேர்காணல் செய்த கிறிஸ்டன் வெல்கரின் பரிந்துரைகளை கண்டித்தார். பைடென், ரஃபா போன்ற நெரிசலான இடத்தில் பயன்படுத்தினால் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய 2,000-பவுண்டு வெடிகுண்டுகள் போன்ற மிகப்பெரிய ஆயுதங்களை மட்டுமே தடுத்து வைத்திருந்தார். துல்லியமான ஆயுதங்களைக் கொண்டும் மக்கள் படுகொலைகளை குறைத்தும் இஸ்ரேலால் அதன் நோக்கத்தை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்று வெல்கர் கேட்டார்.

இதற்கு கிரஹாம் பதிலளிக்கையில்:

சரி, ஹமாஸ் தனது சொந்த மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் வரை காஸாவில் பொதுமக்களின் மரணத்தைத் தணிக்க இயலாது என்று நான் நினைக்கிறேன்... கேளுங்கள், உங்களுக்குத் தெரியும், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கொல்ல விரும்பும் எதிரியுடன் போரிடுவது பற்றி இங்கே நான் கூறுவேன். ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது ஏன் இரண்டு அணு குண்டுகளை வீசினோம்? எங்களால் இழக்க முடியாத ஒரு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக... பேர்ல் துறைமுகத்திற்குப் பிறகு, ஜேர்மனியர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் எதிராக ஒரு தேசமாக அழிவை எதிர்கொண்டபோது, ​​ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு ஆயுதங்களைக் கொண்டு போரை முடிக்க முடிவு செய்தோம். அதுதான் சரியான முடிவு. அவர்கள் இழக்க முடியாத போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுக்கு தேவையான குண்டுகளை கொடுங்கள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்.

ஒரு வரலாற்று உண்மையாக, ட்ரூமன் நிர்வாகத்திற்கு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகளை வீசி “ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவதற்கு” எந்தவொரு அவசியமும் இருக்கவில்லை. மாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலகளாவிய ஆதிக்கத்தை உறுதிப்படுத்த, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும், பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவிக்கவும் தயாராக உள்ளது என்பதை நிரூபிப்பதை நோக்கமாக கொண்டிருந்தது.

ஐந்து வாரங்களுக்கு முன்பு பிரதிநிதிகள் சபையின் பிரதிநிதியான டிம் வால்பெர்க்கின் இதே போன்ற அறிக்கைகளை எதிரொலிக்கும் கிரஹாம், காஸாவில் எஞ்சியிருக்கும் பாலஸ்தீனியர்கள் வெறுமனே கொல்லப்பட வேண்டும் என்ற பாரிய படுகொலைக் கொள்கையை ஆதரிக்கிறார்.

அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்திற்குள் ஒரு குறிப்பிடத்தக்க மோதலாக, அதிகபட்சமாக ஊடகங்கள் முன்வைப்பது தந்திரோபாயங்களை உள்ளடக்கிய பரிசீலனைகளையாகும்.

இஸ்ரேல் ரஃபா மீதான இனப்படுகொலைத் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகையில், பைடென் நிர்வாகம், இஸ்ரேலுக்கு ஆயுதம் மற்றும் பாதுகாப்பை வழங்குவதைத் தொடர்கிறது. ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் கடந்த மாதம் உக்ரேன் மற்றும் காஸாவில் உள்ள போர்களுக்கும் சீனாவுக்கு எதிரான போருக்கான தயாரிப்புகளுக்கும் கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் கூடுதல் நிதியை அர்ப்பணித்தனர். மேலும் அமெரிக்காவில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதில் அவர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

குறிப்பாக, “Meet the Press” நிகழ்ச்சியில் தோன்றிய செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் போன்ற நபர்கள் வஞ்சத்தனமான பாத்திரம் வகிக்கின்றனர். இஸ்ரேலுக்கு அமெரிக்க இராணுவ உதவியை நிறுத்துவதை தான் விரும்புவதாக அவர் வெல்கரிடம் கூறினார்.

இருப்பினும் சாண்டர்ஸ், பைடென் மற்றும் காஸாவில் இனப்படுகொலைக்கான முக்கிய ஊக்கியாக இருக்கும் அமெரிக்காவின் பங்கு பற்றி எதுவும் கூறவில்லை. அது வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரப் பாதையில் பைடெனின் முக்கிய ஆதரவாளராகவும், பினாமியாகவும் சாண்டர்ஸ் உள்ளார். அமெரிக்க ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு பைடென் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது அவசியம் என்று அவர் விவரிக்கிறார்.

காஸா பைடெனின் வியட்நாமாக மாறும் அபாயம் இருப்பதாக இந்த வார தொடக்கத்தில் வெல்கர் அவரிடம் கேட்டபோது, ​​“என்னைக் கவலையடையச் செய்வது என்னவென்றால், இப்போது காஸாவில் நடக்கும் இந்தப் போரை இளைஞர்கள் மட்டும் கடுமையாக எதிர்க்கவில்லை, ஆனால் ஜனநாயக தளத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் கடுமையாக எதிர்க்கிறார்கள்” என்று சாண்டர்ஸ் பதிலளித்தார்.

இது தெளிவாக இருக்க முடியாது. பைடெனின் மறுதேர்தல் பிரச்சாரத்தைப் பாதுகாப்பதற்காகவும், காஸா இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜன மக்களின் எதிர்ப்பை முட்டுச்சந்தில் வைப்பதற்காகவும், போரைப் பற்றிய சில விமர்சனங்களை முன்வைத்து, சாண்டர்ஸ் தனது பொது தோரணையை மாற்றியுள்ளார்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் கூறியது போல்: “2024 ஜனாதிபதித் தேர்தலில், பைடென் மற்றும் டிரம்ப், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு இடையிலான மோதலில் ‘குறைந்த தீமை’ பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.”

இதுவே காஸா இனப்படுகொலையை எதிர்க்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் எடுக்கப்பட வேண்டிய அரசியல் முடிவு ஆகும். இனப்படுகொலை, ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீடுதான் முக்கியமான கேள்வியாகும்.

உலக சோசலிச வலைத் தளமானது, காஸாவில் இனப்படுகொலை அதிகரித்து வருவதற்கு, உலகெங்கிலும் பாரிய எதிர்ப்பு போராட்டங்களை விரிவுபடுத்துவதுடன் பதிலளிக்க அழைப்பு விடுக்கிறது. தங்களை சுரண்டுகின்ற, அதே ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக நடத்தப்படும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தை தொழிலாளர்களே முன்னெடுக்க வேண்டும். ரஃபா மீதான தாக்குதலை நடத்த இஸ்ரேலால் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதற்கு, வேலைநிறுத்தங்கள் மற்றும் ஏனைய வடிவத்திலான நடவடிக்கைகள் மூலம் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

Loading