ரஷ்யாவிற்கு எதிரான போரை ஐரோப்பா முழுவதும் நேட்டோ விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேனிய இராணுவத்தின் எதிர்த்தாக்குதல் கடந்த ஆண்டு தோல்வியடைந்ததில் இருந்து, நேட்டோ நாடுகள் ரஷ்யாவின் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த கியேவ் ஆட்சிக்கு அதிகாரம் அளித்துள்ளது. இதன் மூலமும், உக்ரேனுக்கு தங்கள் சொந்த துருப்புக்களை அனுப்புவதாக உறுதியளித்ததன் மூலமும், உக்ரேனில் ரஷ்யாவுடனான தங்கள் போரை இடைவிடாமல் தீவிரப்படுத்தி வருகின்றன. பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் நேற்று வெளியான மூத்த நேட்டோ அதிகாரிகளுடனான நேர்காணலில், “ஐரோப்பாவில் போர் ஏற்பட்டால் நேட்டோ தரைவழிப் பாதைகள் ஊடாக அமெரிக்கத் துருப்புக்களை போர் முன்னரங்கிற்கு துரிதமாக அனுப்பும்” என்ற தலைப்பில் வெளியான கட்டுரை, நேட்டோ ஐரோப்பா முழுவதும் உக்ரேனிலிருந்து போரைத் தீவிரப்படுத்த பரிசீலித்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

போலந்து மற்றும் பிற நேட்டோ துருப்புக்கள் மார்ச் 24, திங்கட்கிழமை, போலந்தின் கோர்செனிவோவில் (Korzeniewo) Steadfast Defender 2024 இராணுவ பயிற்சிகளில் பங்கேற்கின்றன. [AP Photo/Czarek Sokolowski]

டெலிகிராப் கட்டுரையின் ஆய்வு, ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் விரிவாக்கமானது, உக்ரேனின் எல்லைகளையோ அல்லது ஐரோப்பிய ஜனநாயகத்தையோ பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்ற வாதங்களுக்கு வக்காலத்து வாங்குகிறது. நேட்டோ ஒரு கண்டப் போருக்குத் தயாராகி வருகிறது, ரஷ்யாவின் முழு மேற்கு எல்லையிலும், பின்லாந்திலிருந்து பால்கன் வரையிலுமான நடவடிக்கைகளுக்காக நூறாயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்புகிறது. நேட்டோ இந்த திட்டங்களைச் செயல்படுத்துவது, அணு ஆயுதப் போரை உடனடியாகத் தூண்டவில்லை என்றாலும், இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஐரோப்பாவை பாரிய படுகொலைக்குள் மூழ்கடிக்கிறது.

நேட்டோவின் ஆயுத தளபாட விநியோக கட்டளைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் அலெக்சாண்டர் சோல்ஃப்ராங்க் டெலிகிராப்பிடம், கண்டம் முழுவதும் ஐரோப்பாவின் அட்லாண்டிக் துறைமுகங்களுக்கு வரும் அமெரிக்க துருப்புக்களை ரஷ்யாவிற்கு அனுப்புவதற்காக, ஐரோப்பாவின் துறைமுகம் மற்றும் தரைவழி போக்குவரத்து உள்கட்டமைப்பை கையகப்படுத்துவது குறித்து நேட்டோ பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். இந்த போக்குவரத்து வழித்தடங்களில், நேட்டோ பேரழிவு தரும் வான் தாக்குதல்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கிறது. இதற்கு இந்த வழித்தடங்களில் உள்ள நாடுகளின் சட்டங்கள் இடைநிறுத்தப்படும்.

ஐரோப்பா முழுவதும் திட்டமிடப்பட்ட “போக்குவரத்து வழித்தடங்களின்” வரைபடத்தை டெலிகிராப் வெளியிட்டது. நேட்டோவின் ஆரம்ப திட்டங்கள், அமெரிக்க துருப்புக்கள் வடமேற்கு ஐரோப்பாவில் உள்ள ரோட்டர்டாம் அல்லது ஹாம்பர்க்கில் தரையிறங்குவதற்கு அழைப்பு விடுக்கின்றன. இருப்பினும், அவர்கள் மேற்கு இத்தாலியிலுள்ள ஜெனோவா துறைமுகத்திற்கும், அல்லது ஏதென்ஸில் லா ஸ்பெசியா, நோர்வே துறைமுகமான பெர்கன் அல்லது துருக்கிய துறைமுகங்களுக்கும் வரலாம். நேட்டோ இராணுவ அதிகாரிகள் முக்கிய சாலை மற்றும் இரயில் உள்கட்டமைப்பை எடுத்துக்கொண்டு ஐரோப்பா முழுவதிலும் இருந்து அமெரிக்க துருப்புக்களை ரஷ்ய எல்லைக்கு அனுப்புவார்கள். இதுபற்றி டெலிகிராப் பின்வருமாறு எழுதியது:

ரஷ்யாவுடன் ஒரு பெரிய ஐரோப்பிய தரைவழிப் போர் ஏற்பட்டால், போர் முனைக்கு அமெரிக்க துருப்புக்கள் மற்றும் கவச வாகனங்களை அனுப்ப நேட்டோ பல “தரை வழிப்பாதைகளை” உருவாக்கி வருகிறது. அமெரிக்க துருப்புக்கள் ஐந்து துறைமுகங்களில் ஒன்றில் தரையிறங்கி, மாஸ்கோவின் சாத்தியமான தாக்குதலை எதிர்கொள்வதற்கு முன் திட்டமிடப்பட்ட ஆயுத தளவாடங்களை கொண்டு செல்லும் வழிகளில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் டெலிகிராப்பிடம் தெரிவித்தனர். .... ஆனால், மாஸ்கோவின் படைகளால் தரைவழித் தொடர்புகளை துண்டிக்க முடியாது என்பதை உறுதி செய்வதற்காக இதர துறைமுகங்களுக்கு பாதைகளை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகளும் திரைக்குப் பின்னால் இடம்பெற்று வருகின்றன.

“இந்த வழித்தடங்களிலுள்ள நாடுகளின் இராணுவங்கள் உள்ளூர் விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்பட மாட்டார்கள் என்பதால், சாதாரண கட்டுப்பாடுகள் கூட இல்லாமல் உபகரணங்களை சுதந்திரமாக கொண்டு செல்லலாம்” என்று டெலிகிராப் மேலும் கூறியது.

இராணுவ ஆட்சி மற்றும் போருக்கான இந்த திட்டங்கள், உக்ரேனில் குறைந்தபட்சம் ஒரு வருடமாக, மக்களின் முதுகுக்குப் பின்னால் நடக்கும் போர்த் திட்டமிடலின் விளைவாக இருக்கிறது. “கடந்த ஆண்டு லிதுவேனியாவில் உள்ள வில்னியஸில் நடந்த உச்சிமாநாட்டில், நேட்டோ கூட்டணியைப் பாதுகாக்க 300,000 துருப்புக்களை தயார் நிலையில் வைக்க அதன் தலைவர்கள் ஒப்புக்கொண்டதில் இருந்து ஆயுத தளவாட விநியோக வழிகள் முக்கிய முன்னுரிமையாகிவிட்டன” என்று டெலிகிராப் மேலும் குறிப்பிட்டது.

ரஷ்யாவிடம் அணுஆயுத அல்லது வழக்கமான போர்க்கப்பல்களுடன் கூடிய ஆயிரக்கணக்கான உயர் துல்லியமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன. இதனால், நேட்டோ அதன் “தரை வழிப் பாதைகள்” தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு இலக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. “நேட்டோ அதன் கிழக்குப் பகுதிக்கு தேவையான வான் பாதுகாப்புகளில் 5 சதவிகிதம் மட்டுமே உள்ளது” என்று டெலிகிராப் கூறியது. உண்மையில், ஐரோப்பாவின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் போக்குவரத்து மையங்களைப் பாதுகாக்கும் பணி நம்பிக்கையற்றுள்ளது என்று இராணுவத் தளபதி சோல்ஃப்ராங்க் டெலிகிராப்பிடம் கூறினார்.

“வான் பாதுகாப்பைப் பொறுத்தவரை, அது இன்னும் பற்றாக்குறையாக உள்ளது. உங்களிடம் போதுமான வான் பாதுகாப்பு இருக்கும் சூழ்நிலையை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை” என்று அவர் கூறினார். மேலும், “உக்ரேனில் ரஷ்யப் போரைக் கவனித்து மதிப்பீடு செய்ததில், ரஷ்யா உக்ரேனிய ஆயுத தளவாடத் தளங்களைத் தாக்கியதைக் கண்டறிந்தோம். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் எங்களுக்குத் தெரிந்த பெரிய ஆயுத தளவாட தளங்கள் இனி சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது, ஏனெனில் அவை மோதல் சூழ்நிலையில் மிக விரைவாக தாக்கப்பட்டு அழிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

நேட்டோ, அதன் முக்கிய துறைமுகங்கள் அழிக்கப்படுவதற்கு முன்பே, இதர அடையாளம் தெரியாத ஐரோப்பிய துறைமுகங்களில் அமெரிக்க துருப்புக்களை பரவலாக வைத்திருக்க திட்டமிட்டுள்ளது. “நெதர்லாந்தில் இருந்து நுழையும் நேட்டோ படைகள் ரஷ்ய குண்டுவீச்சால் பாதிக்கப்படலாம் அல்லது வடக்கு ஐரோப்பிய துறைமுகங்கள் அழிக்கப்படலாம் என்ற சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, மாஸ்கோவின் படைகளால் தரைவழித் தகவல் தொடர்பு துண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மற்ற துறைமுகங்களுக்கு பாதைகளை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகளும் திரைக்குப் பின்னால் இடம்பெற்று வருகின்றன” என்று டெலிகிராப் கூறியது.

டெலிகிராப் பத்திரிகையின் இந்த வரிகள், நேட்டோ நாடுகளில் உள்ள முழு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனத்திலும் ஊடுருவியுள்ள பொறுப்பற்ற குற்றவியல் மனநிலையை வெளிப்படுத்துகின்றன. ஜேர்மன் நாசிக்களால், நெதர்லாந்திலுள்ள ரோட்டர்டாம் மீது வீசப்பட்ட தீக்குண்டுகளும், பிரிட்டிஷ் விமானப்படையால் ஜேர்மனியிலுள்ள ஹாம்பர்க் மீது வீசப்பட்ட குண்டுகளும், இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற பயங்கரமான ஏகாதிபத்திய போர்க்குற்றங்கள் ஆகும். ஆயினும்கூட, உயிர்களின் விலை மற்றும் இது ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் பேரழிவுகரமான தாக்கம் அல்லது எல்லாவற்றிற்கும் மேலாக, அத்தகைய முடிவை நோக்கிய அதிகரிப்பைத் தவிர்க்க என்ன செய்ய முடியும் என்பதுபற்றி கேட்காமல், டெலிகிராப் இந்த துறைமுகங்களின் அழிவைப் பற்றி குறிப்பிடுகிறது.

ஆனால், அவர்களின் உலகளாவிய பொருளாதார நிலையின் விரைவான சரிவுக்கும், அதே போல் உள்நாட்டில் வெடிக்கும் சமூக கோபத்திற்கும் விடையிறுக்கும் வகையில், ஏகாதிபத்திய நேட்டோ சக்திகள் முன்னோக்கி அழுத்துகின்றன. ரஷ்யாவின் மீது “மூலோபாய தோல்வியை” ஏற்படுத்தவும், மாஸ்கோவில் ஆட்சி மாற்றத்தை திணிக்கவும், ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு மற்றும் பிற இயற்கை வளங்களின் பரந்த இருப்புக்களை சூறையாடவும் அவர்கள் உறுதியாக உள்ளனர். காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கான அவர்களின் ஆதரவு, COVID-19 தொற்றுநோய்களின் போது தங்கள் சொந்த குடிமக்களின் மில்லியன் கணக்கான தடுக்கக்கூடிய மரணங்கள் பற்றிய அவர்களின் முழுமையான அலட்சியத்தைபோல, பேரழிவு தரும் உயிர் இழப்பு அபாயத்தால் அவர்கள் தடுக்கப்பட மாட்டார்கள் என்பதற்கான எச்சரிக்கையாகும்.

உண்மையில், டெலிகிராப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள திட்டங்களை நேட்டோ செயல்படுத்தத் தயாராகி வருவதை அது உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், அதன் சமீபத்தில் முடிவடைந்த பாரிய ‘உறுதியான பாதுகாவலர்’ (Steadfast Defender) என்ற போர் பயிற்சியைப்பற்றி அது அறிக்கை செய்கிறது. பெல்ஜியத்தின் மோன்ஸ் நகரிலுள்ள நேட்டோ தலைமையகத்தில் இருந்து மே 31 செய்திக்குறிப்பு பின்வருமாறு கூறியது:

உறுதியான பாதுகாவலர் என்ற பயிற்சியானது, பெரிய அளவிலான நேட்டோ பயிற்சிகளின் முதல் தொடராகும். இதன் போது வில்னியஸ் உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய பிராந்திய பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 32 நேட்டோ நட்பு நாடுகளைச் சேர்ந்த 90,000 க்கும் மேற்பட்ட படைகள், 50 க்கும் மேற்பட்ட கப்பல்கள், நூற்றுக்கணக்கான பறப்புக்களை மேற்கொண்ட 80 க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 1,100 க்கும் மேற்பட்ட போர் வாகனங்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றன. … இந்த பயிற்சியின் முதல் பகுதியானது, வட அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா கண்டத்துக்கு, மூலோபாய ரீதியாக படைகளை நிலைநிறுத்துவதை ஒத்திகை பார்க்கும் பல்வேறு தலைமையகங்களை உள்ளடக்கிய கடல் சார்ந்த நேரடி பயிற்சியாகும். இரண்டாவது பகுதியானது, நேட்டோ மற்றும் தேசிய மற்றும் பன்னாட்டு இராணுவ திறன்களின் பல துறைகளில் ஆர்ப்பாட்டமாக ஐரோப்பா கண்டம் முழுவதும் நடைபெற்றிருந்தது.

வில்னியஸில் நேட்டோவின் திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது என்று நேட்டோவும் கிரெம்ளினும் எதிர்பார்க்கின்றன என்பதற்கான மற்றொரு அறிகுறி, அட்லாண்டிக் சமுத்திரத்தில் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் நடவடிக்கைகளின் சமீபத்திய அதிகரிப்பு ஆகும். அமெரிக்க துருப்புக்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்து ரஷ்யாவிற்கு எதிராக போர் தொடுத்தால், ரஷ்ய தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் நீண்ட தூர வழிகாட்டப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி, அமெரிக்க துருப்புக்களின் போக்குவரத்தை ஐரோப்பாவிற்கு வருவதற்கு முன்பே அழித்தொழிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படலாம்.

கடந்த ஏப்ரல் மாதம், ஐரோப்பாவிற்கான நேட்டோ உச்ச நட்பு நாடுகளின் தளபதி ஜெனரல் கிறிஸ்டோபர் கவோலி அமெரிக்க காங்கிரஸில், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலின் செயல்பாடு பற்றி சாட்சியம் அளித்தார்: “அட்லாண்டிக் மற்றும் அதன் பகுதி முழுவதிலும் அவர்களின் ரோந்து நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக நாம் பார்த்ததை விட, பெரும்பாலான நேரங்களில் உயர்ந்த மட்டத்தில் உள்ளன”. அப்போதிருந்து, ஒரு டசின் ரஷ்ய தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் அட்லாண்டிக் பகுதியில் ரோந்து வருவதாக பல தகவல்கள் வந்துள்ளன.

இன்றைய முக்கிய ஆபத்து என்னவென்றால், பரந்த அளவிலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், இந்த ஆபத்தின் தீவிரம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசரத் தேவை பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை என்பதாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, “அணு ஆயுதப் போரை நோக்கிய அமெரிக்கா-நேட்டோ விரிவாக்கத்தை நிறுத்து! ஏகாதிபத்திய போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்து!“ என்ற அதன் சமீபத்திய அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.

28. இந்தப் பேரழிவை நோக்கிய சுழல் தவிர்க்கப்படுவதற்கும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இருக்கும் ஒரே ஒரு வழி, தொழிலாள வர்க்கத்தின் தலையீடாகும். காஸாவிற்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவரும் போராட்டத்துடன் இந்தக் கோரிக்கை இணைக்கப்பட வேண்டும். … 

29. பேரழிவை நோக்கி விரைவாக சென்று கொண்டிருக்கும் இந்தப் போரைத் தடுத்து நிறுத்த தொழிலாள வர்க்கம் அதன் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்த சக்தியை அணிதிரட்டுவதற்கு உலகளாவிய அரசியல் நெருக்கடியின் மேம்பட்ட கட்டத்திற்கும் வெகுஜனங்களின் தற்போதைய அரசியல் நனவின் மட்டத்திற்கும் இடையிலான இடைவெளியைக் கடந்தே ஆக வேண்டும். இந்த வரலாற்றுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, ஒரு மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச தலைமையின் வளர்ச்சியும், சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் புரட்சிகரப் புதுப்பித்தலும் அவசியமானதாகும்.

Loading