மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஜூன் 9 அன்று நடந்த ஐரோப்பிய தேர்தல்கள் அதி தீவிர வலதுசாரிகளை பலப்படுத்தியுள்ளது. இவர்கள், இப்போது ஐரோப்பிய பாராளுமன்றத்தின் (MEPs) 720 உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவர். ஜேர்மனியில், பாசிச ஜேர்மனிக்கான மாற்றீட்டு (AfD) கட்சி 15.9 சதவீதத்துடன் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்கு (CDU/CSU) பின்னால் இரண்டாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது.
கிழக்கு ஜேர்மனியில், முன்னாள் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் (GDR) பிரதேசத்தில், வலதுபுறத்துக்கான மாற்றம் குறிப்பாக உச்சரிக்கப்படுகிறது. இங்கே, ஐரோப்பிய தேர்தல்களில் இருந்து, 30 சதவீதத்திற்கும் சற்று குறைவான வாக்குகளைப்பெற்று பலமான கட்சியாக AfD வெளிப்பட்டுள்ளது. செப்டம்பரில் மாநில பாராளுமன்றத்திற்கு அடுத்த தேர்தல் நடைபெறவுள்ள சாக்சோனி மற்றும் துரிங்கியாவில் இந்த எண்ணிக்கை 30 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். அதே சமயம் பிராண்டன்பர்க்கில் தேர்தல்கள் நடக்கவிருந்த நிலையில், அது சற்று குறைவாக இருந்தது.
நாசிசத்தின் பாசிச மரபுகளில் தொடரும் ஒரு கட்சியின் (AfD) எழுச்சிக்கான காரணம் என்ன?
சிடுமூஞ்சித்தனமாக போலி-இடதுகள் வாக்காளர்களை அவமதிப்பதன் மூலம் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்வினையாற்றுகின்றனர். ஸ்ராலினிச பள்ளியின் பழைய மாணவரான அர்னால்ட் ஸ்கொல்செல், Junge Welt பத்தரிகையில், “தேர்தல் முடிவுகள் ஒரு பேரழிவு... அரச கட்டளைப்படி பிற மக்களைக் கொல்வதற்கு நிச்சயமாக இந்த நாடு பாரிய அடித்தளத்தைக் கொண்டுள்ளது. ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இதே நிலைதான் உள்ளது' என்று எழுதினார்.
ஜேர்மனி, கிரீஸ் மற்றும் இத்தாலி தேர்தல்களில் தோல்வியுற்ற MERA25 கட்சியின் முன்னாள் கிரேக்க நிதியமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ் X/Twitter இல், 'தீவிரவாத மையத்திற்கும் நவ-பாசிசத்திற்கும் இடையில் சிக்கியுள்ள நமது நோய்வாய்ப்பட்ட சமூகங்கள், இறக்கும் பாலஸ்தீனத்திற்கும், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேனுக்கும் மற்றும் நமது சொந்த மக்களுக்கும் உதவ முடியாது' என்று புலம்பினார்.
இந்த வாக்காளர் மீதான துஷ்பிரயோகங்கள் அதி தீவிர வலதுசாரிகளின் எழுச்சிக்கான இந்தக் கட்சிகளின் சொந்தப் பொறுப்பிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கத்தைக் கொண்டுள்ளன. இது கீழிருந்து ஒரு வெகுஜன இயக்கத்தின் விளைவு அல்ல, மாறாக மேலே இருந்து வலது பக்கம் மாறியதன் விளைவாகும். ஏகாதிபத்தியப் போர், இனப்படுகொலை, சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரம் போன்ற கொள்கைகளை முன்வைப்பதற்காக, ஆளும் உயரடுக்கிற்குத் தேவைப்படும் பாசிஸ்டுகள் அதிகாரம் பெற்று வருகின்றனர். முழு ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரமும் இதன் மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Junge Welt ஷால்செல் கூறுவது போல், 'அரச கட்டளை பிறப்பித்த கொலையை ஆதரிப்பது மக்கள் அல்ல', மாறாக, சமூக ஜனநாயகவாதிகள் (SPD), பசுமைவாதிகள் மற்றும் தாராளவாத ஜனநாயகவாதிகள் (FDP) போன்ற கூட்டணி அரசாங்கக் கட்சிகளில் இருந்து, CDU/CSU, AfD மற்றும் இடது கட்சி வரையிலான ஸ்தாபனக் கட்சிகளே இதனை ஆதரிக்கின்றன. இவர்கள் அனைவரும் காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நெதன்யாகு ஆட்சி செய்து வரும் இனப்படுகொலையை முழுமையாக ஆதரிக்கின்றனர் மற்றும் அதற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் கண்டித்து, அடக்கி, குற்றமாக்குகின்றனர்.
பாலஸ்தீனிய சார்பு ஆர்ப்பாட்டங்களின் மீதான தணிக்கை, தடை மற்றும் வன்முறையை கட்டவிழ்த்து, முழு ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தையும் இவை கட்டமைத்துள்ளன. மாணவர்களின் போராட்ட உரிமைகளைப் பாதுகாத்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூட, பொருளாதாரத் தடைகள் மற்றும் அவர்களுக்கான நிதியைத் திரும்பப் பெறுவதாக அச்சுறுத்தப்பட்டனர். இந்த வழியில், அனைத்து வகையான சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பையும் ஒடுக்கும் ஒரு சர்வாதிகார பொலிஸ் அரசு நிறுவப்படுகிறது. இது மிகவும் அதி வலதுசாரி சக்திகளை பலப்படுத்தி வருவதுடன், AfDயின் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துகிறது.
உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரின் தீவிரம் ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக இருந்தது. உக்ரேனை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும், ரஷ்யாவை இராணுவ ரீதியில் அடிபணிய வைப்பதற்கும் நேட்டோ அணு ஆயுதப் போரை எதிர்கொள்கிறது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உக்ரேனுக்கு பிரெஞ்சு துருப்புக்களை அனுப்புவதாக அறிவித்தார். அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், ஜேர்மன் ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யப் பகுதி மீது தாக்குதல் நடத்துவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். வரூஃபாகிஸ்கின் MERA25 மற்றும் இடது கட்சியும் உக்ரேனில் போரை ஆதரிக்கின்றன.
அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யாவுடன் நல்லிணக்கத்தை ஆதரிக்கும் AfD, தன்னை போரின் எதிர்ப்பாளராகக் காட்டிக்கொள்ள முடிந்தது. இருப்பினும், அது ஆக்கிரமிப்பு இராணுவவாதத்தையும் நேட்டோவிற்கு ஆதரவையும் வழங்குகிறது. அதன் ஐரோப்பிய தேர்தல் அறிக்கையானது, ஜேர்மனியின் பாதுகாப்புத் திறன்களை உடனடியாக மீட்டெடுப்பது, பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்பு, புதிய ஆயுத அமைப்புகளின் விரிவான கொள்முதல், கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துதல் மற்றும் ஜேர்மன் ஆயுதத் தொழில் விரிவாக்கம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
அதி தீவிர வலதுசாரிகளின் முக்கியப் பிரச்சினையான அகதிகளுக்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையில், மற்ற அனைத்துக் கட்சிகளும் வலதுபுறத்தில் AfD-ஐ விஞ்ச முயன்றன. புகலிடக் கோரிக்கையாளர்களை விரட்டுவது முழுத் தேர்தல் பிரச்சாரத்தின் மையக் கருப்பொருளாக இருந்தது. ஜேர்மன் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் பாசிஸ்டுகள் கோருவதை நடைமுறைக்குக் கொண்டு வருகின்றன: இந்த செயல்பாட்டில் ஆயிரக்கணக்கானோர் இறந்தாலும், 'ஐரோப்பிய கோட்டைக்கு' காற்றுப் புகாதளவு முத்திரையிட்டு பூட்ட வேண்டும்.
பாசிஸ்டுகளுடன் ஒத்துழைப்பதற்கு எதிராக ஸ்தாபனக் கட்சிகளால் மீண்டும் மீண்டும் தூண்டப்பட்ட தடுப்பு அரண் என்பது ஒரு கேலிக்கூத்து ஆகும். 'தலைவர்' முசோலினியின் நீண்டகால அபிமானியான ஜார்ஜியா மெலோனி, அனைத்து ஐரோப்பிய அரசாங்கத் தலைவர்களாலும், குறிப்பாக ஜேர்மன் சான்சிலர் ஸ்கோல்ஸ் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரால் கடுமையாகப் பாராட்டப்படுகிறார்.
ஜனாதிபதி மக்ரோன் தனது கட்சியின் தேர்தல் தோல்விக்குப் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து, அதி தீவிர வலதுசாரி தேசிய பேரணி அரசாங்கத்தில் நுழைவதற்கு சிவப்பு கம்பளத்தை விரித்துள்ளார். உக்ரேனில், பாரிய படுகொலைகாரர்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் நாசி ஒத்துழைப்பாளர்களுக்கு நினைவுச் சின்னங்களை எழுப்புகின்ற மற்றும் அரசியல் எதிர்ப்புக்களை கொடூரமாக ஒடுக்கி வருகின்ற ஒரு அதி தீவிர வலதுசாரி ஆட்சியை நேட்டோ ஆயுதபாணியாக்குகிறது.
அதே வழியில் ஸ்தாபனக் கட்சிகள், AfDயின் தலைவர்களான Chrupalla, Weidel, Höcke கம்பெனியை வரவேற்கும். மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் அமைச்சகங்கள் மற்றும் மாநில முதல்வர்கள் அவ்வாறு செய்யாமல் இருப்பதற்கு எந்த அரசியல் காரணமும் இல்லை. அவர்களின் கொள்கைகள் ஏற்கனவே நுணுக்கங்களில் மட்டுமே வேறுபடுகின்றன.
ஸ்தாபனக் கட்சிகளின் வலதுசாரிக் கொள்கைகளால், குறிப்பாக இடதுசாரிக் கட்சிகள் என்று அழைக்கப்படுபவை, AfD க்கு வழி வகுத்தது மட்டுமல்லாமல், அதி தீவிர வலதுசாரி வாய்வீச்சாளர்கள், அவநம்பிக்கையான குட்டி முதலாளித்துவ அடுக்குகள் மற்றும் தொழிலாளர்களின் கோபத்தை சுரண்டுவதற்கான சூழ்நிலையையும் உருவாக்கி கொடுத்துள்ளனர்.
ஜேர்மனியில் நடந்த ஐரோப்பிய தேர்தல்களின் முடிவு, எல்லாவற்றிற்கும் மேலாக SPD, பசுமைவாதிகள் மற்றும் இடதுசாரிகளின் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பு ஆகும். 137 வருடங்களில் இல்லாதளவுக்கு, 13.9 சதவீதத்துடன் SPD அதன் மோசமான தேசிய தேர்தல் முடிவை சந்தித்தது. பசுமைக் கட்சியினர் 20.5 சதவீதத்திலிருந்து 11.9 சதவீதமாகக் வீழ்ச்சியடந்துள்ளனர். இடது கட்சி பாதிக்கு மேல் வாக்குகளை இழந்து 2.7 சதவீதத்துடன் முடிந்தது.
25 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை ஆட்சியில் இல்லாத கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் பசுமைக் கட்சிக்கு வாக்களித்தனர், இன்று 11% மட்டுமே அதற்கு வாக்களித்துள்ளனர். அவர்கள் இப்போது பசுமைக் கட்சியை ஒரு சுற்றுச்சூழல் கட்சியாக உணரவில்லை, மாறாக ஒரு போர்க் கட்சியாகவே கருதுகின்றனர்.
மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், சிறு தொழில் நடத்துபவர்கள் மற்றும் இளைஞர்கள் நீண்ட காலமாக சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைவாதிகள், இடது கட்சி மற்றும் தொழிற்சங்கங்களை சமூக வெட்டுக்கள் மற்றும் செல்வந்தர்களை வளப்படுத்துவதற்கான முன்னோடிகளாக அவர்களுடன் கூட்டணி வைத்ததுள்ளதை கண்டுள்ளனர். ஹார்ட்ஸ் சட்டங்கள் சமூக நலன்களை வெட்டித் தள்ளுவதை அறிமுகப்படுத்தியது, தொழிலாளர் பாதுகாப்பை மோசமாக்கியது, ஓய்வூதிய வயதை 67 ஆக உயர்த்தியது, சுகாதாரம், கல்வி மற்றும் சமூக செலவினங்களில் வெட்டுக்கள், பணக்காரர்களுக்கான வரிக் குறைப்புக்கள் மற்றும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான பரிசுகள் அனைத்தும் தொழிலாளர் பாதுகாப்பை மோசமாக்கின.
ஜேர்மன் கூட்டாட்சியிலுள்ள கூட்டணி, உக்ரேனில் நடந்துவரும் போருக்கு மொத்தம் 23 பில்லியன் யூரோக்கள் ஆயுதங்களை வழங்குவதன் மூலம் ஆதரவு அளித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இராணுவ வரவு செலவுத் திட்டத்தை 68லிருந்து 91 பில்லியன் யூரோக்களாக அது உயர்த்தியுள்ளது. சமூக வெட்டுக்கள், உண்மையான ஊதியங்களில் வீழ்ச்சி, அதிகப்படியான எரிசக்தி விலைகள் மற்றும் கட்டுப்படியாகாத வீட்டு வாடகைகள் போன்ற வடிவங்களில் இந்த செலவுகளை உழைக்கும் மக்கள் மீது அது திணிக்கிறது.
இதற்கான எதிர்ப்பு மகத்தான புரட்சிகர ஆற்றலைக் கொண்டுள்ளது. இருப்பினும், இது தற்போதுள்ள நிறுவனங்கள் மற்றும் கட்சிகளுக்குள் நனவான அரசியல் வெளிப்பாட்டைக் காணவில்லை. AfD சமூகப் பேரழிவை ஒரு பகுதியாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது, ஏனெனில் போலி-இடது கட்சிகளும், அதன் அமைப்புகளும் இந்தச் சூழ்நிலையின் மீதான கோபத்தையும் சீற்றத்தையும் முழு ஆளும் வர்க்கத்திற்கும் அதன் முதலாளித்துவ அமைப்புக்கும் எதிராகத் திருப்பி விடுவதைத் தடுத்து வருகின்றன.
இடது வாய்வீச்சுகள் என்ற போர்வையில் பணக்காரர்கள் மற்றும் மிகவும் வளமான நடுத்தர வர்க்கங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தப் போலி-இடது அரசியல்வாதிகளின் முன்மாதிரியாக யானிஸ் வரூஃபாகிஸ் இருக்கிறார். தீவிர இடது கூட்டணி (சிரிசா) வியக்கத்தக்க வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனக் கட்டளைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வாக்குறுதியின் பேரில் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், யானிஸ் வரூஃபாகிஸ் 2015 இல் கிரேக்கத்தின் நிதி அமைச்சரானார்.
சிரிசா, அதி தீவிர வலதுசாரி சுதந்திர கிரேக்கம் என்ற கட்சியுடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது. சிக்கன நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, அது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் பிரதிநிதிகளுடன் இன்னும் மோசமான சிக்கனத் திட்டத்தில் உடன்பாட்டை எட்டியதுடன், கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை சீரழித்தும் உள்ளது. சிக்கன நடவடிக்கைக்கு எதிரான எதிர்ப்பை முதலாளித்துவ சொத்துக்கு அச்சுறுத்தலாக இருந்து தடுத்ததோடு, மேலும் அதன் துரோகம் வலதுசாரிகளுக்கு மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தது.
வரூஃபாகிஸ் ஐரோப்பிய தேர்தல்களில் இந்த ஏமாற்று வித்தையை மீண்டும் செய்ய முயன்றார். MERA25 (யானிஸ் வரூஃபாகிஸ் தலைமையிலான ஐரோப்பிய DiEM25 இயக்கத்தின் ஜேர்மன் கிளை) காசாவில் நடந்த வருகின்ற இனப்படுகொலையின் எதிர்ப்பாளராக தன்னைக் காட்டிக் கொண்டது. அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரை ஆதரிக்கிறது. இருப்பினும் இனப்படுகொலைக்கு உந்து சக்தியாக ஐரோப்பிய ஒன்றியம், NATO மற்றும் அமெரிக்கா ஆகியவை இருந்து வருகின்றன.
ஜேர்மனியில், சிரிசாவின் அரசியல் இரட்டையரான இடது கட்சி, நீண்ட காலமாக இதேபோன்ற பாத்திரத்தை வகித்து வருகிறது. ஹார்ட்ஸ் சட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பின் எதிர்வினையாக 2007 இல் வெளிப்பட்ட இடது கட்சி, உடனடியாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. 10 ஆண்டுகளாக துரிங்கியா மாநில இடது கட்சி முதல்வராக இருந்த போடோ ராமேலோவின் கீழ் சமூக நிலைமை பேரழிவை ஏற்படுத்தியது. துரிங்கியாவில் 'வறுமை மற்றும் சுகாதார சமத்துவமின்மை ஆகியவை எங்கும் நிறைந்துள்ளன' என்று சமமான சுகாதார வாய்ப்புகளுக்கான ஒத்துழைப்பு நெட்வொர்க்கின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ராலினிச DKP (ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி) உறுப்பினரான ஆர்னோல்ட் ஷோல்செல், 2000 முதல் 2016 வரை Junge Welt ன் தலைமை ஆசிரியராக இருந்தார். இடது கட்சியின் அழுகிய கொள்கைகளை மூடிமறைப்பதில் இந்த வெளியீடு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இடது கட்சிக்குள்ளும் அதைச் சுற்றியும் உள்ள பல்வேறு ஸ்ராலினிச மற்றும் போலி-இடது போக்குகளுக்கு இது ஒரு தளமாக செயல்படுகிறது. அவர்கள் அவ்வப்போது அதன் கொள்கைகளில் ஏதாவது ஒரு அம்சத்தை விமர்சிக்கிறார்கள், ஆனால் கட்சிக்கான தங்கள் ஆதரவை உறுதியாக பராமரித்து வருகிறார்கள்.
இப்போது, இடது கட்சி முக்கியத்துவமற்ற நிலையில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. முன்பு இடது கட்சி கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற Sahra Wagenknecht (BSW), தேசியவாதம் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான விரோதம் ஆகியவற்றின் அடிப்படையில் AfD உடன் போட்டியிடுகிறது.
AfD முதன்மையாக போர் மற்றும் ஆளும் கட்சிகளின் சமூகக் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகளைப் பெறுகிறது என்ற உண்மை, அதை குறைவான ஆபத்தானதாக ஆக்கவில்லை. ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்த நாஜிகளைப் போல தீவிரமான மற்றும் வன்முறையான வெகுஜன இயக்கத்தை அவர்கள் வழிநடத்துவதால் மட்டும் இன்று இந்த ஆபத்து வரவில்லை. AfD, அரசு மற்றும் பாதுகாப்பு எந்திரத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதுடன், பிற கட்சிகளால் முறையாக ஆதரிக்கப்படுகிறது என்பதிலிருந்து இந்த ஆபத்து வருகிறது.
AfD க்கு ஆதரவளித்த அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான அலுவலகத்தின் (ஜேர்மனியின் உள்நாட்டு இரகசிய சேவை என அழைக்கப்படுகிறது) தலைவர் ஹான்ஸ்-ஜார்ஜ் மாசென், சோசலிச சமத்துவக் கட்சியை 'இடதுசாரி தீவிரவாத' அமைப்புகளின் உத்தியோகபூர்வ பட்டியலில் வைப்பது மிகப் பெரிய சூழ்நிலையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே. வலதுசாரி தீவிரவாதிகள் மற்றும் பாசிஸ்டுகளின் அதிகரித்து வரும் செல்வாக்கு முழு ஆளும் உயரடுக்கின் வலதுசாரி மாற்றத்தின் விளைவாக உள்ளது. பாரிய மறுஆயுதமாக்கல், போர் மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவை ஜனநாயகத்துடன் ஒத்துப்போகவில்லை. சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை அடக்குவதற்கு பாசிச வழிமுறைகள் தேவை.
இதற்கு எதிரான போராட்டம் என்பது பாராளுமன்ற எண்கணிதத்தின் பிரச்சினை அல்ல, மாறாக வர்க்கப் போராட்டத்தின் பிரச்சினையாகும். 'ஜனநாயக' கட்சிகள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் AfD இன் எழுச்சியை தடுத்து நிறுத்த முடியாது. SPD, பசுமைவாதிகள் மற்றும் இடது கட்சியின் கொள்கைகள் AfD ஐ பலப்படுத்தியுள்ளன, இதை யாரும் எதிர்க்கவில்லை என்றால் அது தொடரும்.
அதி தீவிர வலதுசாரி அரசாங்கத்தின் வாய்ப்பு கடுமையான எதிர்ப்பை சந்தித்துவரும் பிரான்சில், மெலோன்சனின் போலி-இடது அடிபணியாத பிரான்ஸ் கட்சி, சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமைவாதிகள் இணைந்து 'புதிய மக்கள் முன்னணியை' (NFP) உருவாக்கியுள்ளனர். NFP ஒரு வலதுசாரி சூழ்ச்சியாகும். அது தேர்தலில் வெற்றிபெறும் பட்சித்தில், அனைத்து அரசியல் மற்றும் சமூக விளைவுகளுடன், ஜனாதிபதி மக்ரோனின் போர் சார்பு கொள்கையை தொடர தனது விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளது.
AfD க்கு எதிரான போராட்டத்திற்கு SPD, பசுமைவாதிகள், இடது கட்சி, BSW மற்றும் அவர்களது கூட்டணி தொழிற்சங்கங்கள் நிபந்தனையின்றி நிராகரிக்கப்பட வேண்டும். இதற்கு தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஒரு சுயாதீனமான இயக்கத்தின் வளர்ச்சி தேவைப்படுகிறது. இது, போர், பாசிசம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான எதிர்ப்பை, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கிறது.
அத்தகைய இயக்கத்திற்கான நிலைமைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. சமூக நெருக்கடி மற்றும் அதிருப்தியின் அளவு மிகப்பெரிய அளவில் உள்ளது. ஆனால், இந்த இயக்கத்திற்கு ஒரு தெளிவான முன்னோக்கு மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை எவ்வாறு ஐக்கியப்படுத்துவது என்பதை அறிந்த ஒரு அரசியல் தலைமை தேவை. இந்த தலைமை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் கட்டியெழுப்பப்படுகிறது.