இலங்கையில் பகிரங்க இணையவழி கூட்டம்: ஆசிரியர்கள் மீதான பொலிஸ் தாக்குதலை கண்டனம் செய்! இலவச கல்வியைப் பாதுகாத்திடு! ஆசிரியர்களுக்கு சிறந்த ஊதிய உயர்வு வேண்டும்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் இலவசக் கல்வியைக் காப்பதற்கான ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நடவடிக்கைக் குழு (ACTSP) ஜூலை 11 அன்று இரவு 7 மணிக்கு பகிரங்க இணையவழி கூட்டத்தை நடத்தவுள்ளது. ஆசிரியர்கள் மீதான பொலிஸ் தாக்குதலைக் கண்டனம் செய்! இலவச கல்வியைப் பாதுகாத்திடு! ஆசிரியர்களுக்கு சிறந்த சம்பள உயர்வு வேண்டும்! என்ற தலைப்பில் இந்தக் கூட்டம் இடம்பெறும்.

ஜூன் 26 அன்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மீது விக்கிரமசிங்க அரசாங்கம் நடத்திய கொடூரமான பொலிஸ் தாக்குதலை இலவசக் கல்வியைக் காப்பதற்கான ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நடவடிக்கைக் குழு கடுமையாக கண்டிக்கின்றது.

இந்தத் தாக்குதலை நடத்தி ஒரு நாளின் பின்னர், ஜனாதிபதி விக்கிரமசிங்க, அஸ்கிரிய பௌத்த பீடாதிபதியுடனான சந்திப்பில், ஆசிரியர்களுக்கோ அல்லது அரச ஊழியர்களுக்கோ எந்தவொரு சம்பள அதிகரிப்பும் கொடுக்க பணம் இல்லை என்று கூறினார். அதே மூச்சில், ஆசிரியர் தொழிலை அத்தியாவசிய சேவையாக நியமிக்கப் போவதாக அச்சுறுத்தினார். அதாவது, தொழிற்சங்க நடவடிக்கையைத் தடைசெய்து கடுமையான தண்டனைகளை வழங்கும் அத்தியாவசியப் பொதுச் சேவைகள் சட்டத்தை செயல்படுத்தப்போவதாக மிரட்டினார்.

அரசாங்கத்துடன் இணைந்து, ஊடகங்கள் ஒழுக்கமான சம்பளம் மற்றும் பொதுக் கல்வியைப் பாதுகாப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன.

இந்த அரசியல் அச்சுறுத்தல்களை முறியடித்து நமது போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து ஆலோசிக்கவே இலவசக் கல்வியைக் காப்பதற்கான ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நடவடிக்கைக் குழு இந்தக் கூட்டத்தை நடத்துகிறது. இது ஆசிரியர் தொழிலில் உள்ளவர்களுக்கு மட்டுமன்றி, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் அனைவருக்கும் தீர்க்கமான பிரச்சினை ஆகும்.

விக்கிரமசிங்க ஆட்சியானது ஏற்கனவே அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களால் எலும்புவரை சுரண்டப்பட்டுள்ள இலவச கல்வி மீதான அதன் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க, இலவச கல்வி, சுகாதாரம் போன்ற இன்றியமையாத சமூகத் திட்டங்களுக்கான அரசாங்க ஒதுக்கீடுகள் குறைக்கப்படுவதோடு அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதுடன் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதை துரிதப்படுத்துவதன் பேரில் வருவாயை அதிகரிக்க வரிகளும் கட்டணங்களும் அதிகரிக்கப்படும் அதே நேரம், பெரிய வணிக இலாபங்கள் அதிகரிக்கப்படுகின்றன.

ஊதிய உயர்வுக்கான ஆசிரியர்களின் போராட்டத்திற்கு இணையாக அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு தொடர் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. ஏனைய துறைகளில் உள்ள அவர்களது தொழிற்சங்க சகாக்களைப் போலவே, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் இந்தத் தாக்குதல்களைத் தோற்கடிக்க ஐக்கியப்பட்ட நடவடிக்கையை ஒழுங்கமைப்பதை எதிர்க்கின்றன. மாறாக, தொழிற்சங்க அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட, சிதறிய மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைக்கின்ற அதேவேளை, அரசாங்கத்தின் சமூகத் தாக்குதல்களை நிறுத்துவற்கு அதற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று வலியுறுத்துகின்றன. இந்த முன்னோக்கு பயனற்றது மட்டுமன்றி நமது போராட்டங்களை தோற்கடிப்பதற்கும் அரசாங்கம் அதன் பிற்போக்கு நடவடிக்கைகளை திணிப்பதற்கும் அவகாசம் அளிக்கிறது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் போன்ற ஆசிரியர் தொழிற்சங்கங்களின் தலைவர்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் என்று ஆசிரியர்களிடம் கூறுகின்றனர். இது ஒரு பொய் ஆகும். தே.ம.ச./ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உட்பட இலங்கையின் அனைத்து முதலாளித்துவ எதிர்க்கட்சிகளும், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு முழுமையாக தங்களை அர்ப்பணிப்பணித்துக் கொண்டுள்ளன.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு பரந்த அரசியல் போராட்டத்தின் பாகமாகவே ஒழுக்கமான சம்பளம் பெறுவதும் இலவசக் கல்வியைப் பாதுகாப்பதும் சாத்தியமாகும். இன்றியமையாத பொதுக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்த பில்லியன் கணக்கான ரூபாய்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கும் முதலாளித்துவ அமைப்புக்கும் இந்த அவசியமான கோரிக்கைகள் ஏற்புடையவை அல்ல. அதனாலேயே ஒவ்வொரு பாடசாலையிலும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை உள்ளடக்கிய நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கி, இந்தப் போராட்டத்தை சொந்தக் கைகளில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்களுக்கு ஒழுக்கமான சம்பளம் மற்றும் போதுமான வசதிகளுடன் கூடிய இலவச உயர்தர கல்வி சேவை அவசியமாகும்.

எங்கள் பகிரங்கக் கூட்டத்தில் இந்த தீர்க்கமான பிரச்சினைகள் மற்றும் கல்வியைப் பாதுகாக்கப் போராடுவதற்கான சோசலிச வேலைத்திட்டம் பற்றியும் கலந்துரையாடப்படும். ஜூலை 11ல் நடக்கவிருக்கும் எமது கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

கூட்டத்தில் பங்குபற்ற இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்.

மேலும் தகவலுக்கு நடவடிக்கை குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்:

மின்னஞ்சல்: seplanka@gmail.com

தொலைபேசி: 077 3562327

WhatsApp: 077 3562327

Loading