முன்னோக்கு

உச்ச நீதிமன்றமும் ஜூலை 1, 2024 தினத்தின் எதிர்ப்புரட்சியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ட்ரம்ப் எதிர் அமெரிக்கா (Trump v. United States) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது, உச்ச நீதிமன்ற வரலாற்றில் மிகவும் நீண்டகால மற்றும் பிற்போக்குத்தனமான முடிவாகும். இது ஜூலை 1, 2024 தினமானது எதிர்ப்புரட்சியாக வரலாற்றில் இடம்பெறும்.

உச்ச நீதிமன்றம், வாஷிங்டன். [AP Photo/Alex Brandon]

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது, அரசியலமைப்பை மீறுவதற்கும் எந்தவொரு சட்டத்தையும் மீறுவதற்கும் ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. நீதிபதி சோனியா சோடோமேயர் அவரது கருத்து வேறுபாட்டில் குறிப்பிட்டதைப் போல, இப்போது சட்ட நடவடிக்கைகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் நடவடிக்கைகள், ஜனாதிபதி ‘ஒரு அரசியல் எதிரியை படுகொலை செய்வதற்கு’ இராணுவத்திற்கு கட்டளையிடுவதையும், ‘அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியை’ தொடங்குவதையும், மற்றும் ‘மன்னிப்புக்கு பிரதிபலனாக ஒரு கையூட்டை’ பெறுகின்றதையும் உள்ளடக்கியதை ஏற்றுக்கொள்கிறார்.

மற்றொரு அதிருப்தியில், நீதிபதி கேதன்ஜி பிரவுன் ஜாக்சன், கொலை உள்ளிட்ட குற்றங்கள் “உத்தியோகபூர்வ கடமை” என்ற எல்லைக்குள் வரக்கூடும் என்று அடிக்கோடிட்டுக் காட்டினார். நீதிமன்றத்தின் முன்னால் உள்ள கேள்வி, ஜனாதிபதியால் சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்ய முடியுமா என்பதல்ல, மாறாக “சட்டமா அதிபருக்கு விஷம் கொடுத்து கொலை செய்வதன் மூலம் அவரை நீக்குவதற்கான தெரிவு ஜனாதிபதிக்கு இருக்கிறதா என்பதே” என்று அவர் எழுதினார்.

ஜூன் 1934 இல் அடோல்ஃப் ஹிட்லர் நீண்ட கத்திகளின் இரவில் (on the Night of the Long Knives) அன்று செய்ததைப் போல, அரசியல் எதிரிகளை நூற்றுக்கணக்கில் படுகொலை செய்ய ஜனாதிபதி இப்போது இரகசிய சேவை, பெடரல் புலனாய்வு அலுவலகம் (FBI), அல்லது இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியும், மேலும் அவர் அதற்கு சட்டபூர்வமாக பொறுப்பேற்க மாட்டார். 

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

குடியரசு பிறந்து 250 ஆண்டுகள் நிறைவடைய இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில், சுதந்திர தின விடுமுறைக்கு சில நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட இந்த முடிவானது, அதிகாரப் பிரிவினை, சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்கள் இறையாண்மை போன்ற முக்கிய குடியரசுக் கொள்கைகள் உட்பட அமெரிக்க அரசியலமைப்பு கட்டமைப்பை குழிதோண்டிப் புதைக்கிறது. ட்ரம்ப் எதிர் அமெரிக்கா (Trump v. United States)  வழக்கானது ஒரு கட்டுப்பாடற்ற ஜனாதிபதி சர்வாதிகாரத்தை, நடைமுறையிலும் சட்டப்படியும் சட்டபூர்வமாக்குகிறது. ஒரு உத்தியோகபூர்வ திறனில் செயல்படுவதாக அவர் கூறும் போதெல்லாம் தலைமை நிர்வாகியை இது வெளிப்படையாக சட்டத்தின் எல்லைக்கு மேலே உயர்த்துகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பானது ஜனாதிபதியின் “தனிப்பட்ட” குற்றங்களுக்கு விதிவிலக்கு அளிக்க முடியாது என்பதற்கான சாத்தியக்கூறை திறந்து விடுகிறது என்று கூறி பெரும்பாலான ஊடகங்கள் தங்களை ஆறுதல்படுத்திக் கொள்ளவும், மக்களுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் முயற்சிக்கின்றன. ஆனால் எது தனிப்பட்டதோ, எது உத்தியோகபூர்வமானது என்பது ஜனாதிபதியின் விருப்புரிமைக்கு விடப்படும் என்பதை தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது. அதிகபட்சமாக, புதிய முடிவால் ஊனமுற்ற நீதிமன்றங்களால் ஜனாதிபதியின் குற்றங்கள் நடைமுறைப்படுத்திய பின்னர் மீளாய்வு செய்யப்படலாம். இருப்பினும் மீளாய்வை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நீதிபதிகளை படுகொலை செய்ய உத்தரவிடுவதன் மூலம் ஜனாதிபதியால் இந்த மீளாய்வு முன்கூட்டியே தவிர்க்கப்படலாம். ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் தனிப்பட்ட விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளால் எழுந்த “மெளனமாக்கும் பணம்” (“hush money”) மூலம் தேர்தலில் மோசடி செய்ததற்காக நியூயார்க்கில் தண்டனையிலிருந்து விதிவிலக்கு கோரினார், மேலும் அவருக்கு அது வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த முடிவானது ட்ரம்பையும் தாண்டி வெகுதூரம் செல்கிறது. நீதிமன்றம் வழங்கியுள்ள பிரம்மாண்டமான அதிகாரங்கள் ஒரு தனிநபரிடம் அல்ல, ஒரு அலுவலகத்தில் முதலீடு செய்யப்படுகின்றன. ஜனாதிபதி யாராக இருந்தாலும், வெள்ளை மாளிகையில் இருப்பவர் சர்வாதிகார அதிகாரங்களைக் கொண்டிருப்பார். அத்தகைய அதிகாரம் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெளிவாக உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, ட்ரம்ப் தனது தேர்தல் தோல்வியின் முடிவுகளை மாற்றியமைக்கவும், அவ்விதத்தில் அரசியலமைப்பை இடைநிறுத்தவும் ஜனவரி 6, 2021 அன்று ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியை இரகசியமாக ஏற்பாடு செய்ததே கேள்விக்குரிய “உத்தியோகபூர்வ நடவடிக்கை” ஆகும்.

ஒரு பாசிச எழுச்சியானது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கடமைகளுக்குள் வந்தால், பின்னர் எல்லாமே இந்த வகைக்குள் வரும்.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதை அது “காண்கிறது”. கடந்த நூற்றாண்டின் பாசிச அரசுகளான முசோலினி மற்றும் ஹிட்லரிடம் குவிந்திருந்த அதிகாரத்தை ஒத்த, வெள்ளை மாளிகையில் அமர்ந்திருப்பவரைச் சுற்றி ஒரு நிரந்தர சர்வாதிகார ஆட்சி நிலவுகிறது. “உத்தியோகபூர்வ கடமைகளுக்குள்” செயற்பட்டால், ஜனாதிபதியால் செய்ய முடியாதது எதுவுமில்லை.

ஆனால் தொழிலாள வர்க்கம் இன்னும் அதன் தீர்ப்பை அறிவிக்கவில்லை.

இன்று, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் ஜூலை நான்காம் தேதியைக் கொண்டாடுவார்கள். எவ்வாறிருப்பினும், இந்த விடுமுறையானது ஜூலை 4, 1776 அன்று சுதந்திரப் பிரகடனம் (The Declaration of Independence ) என்ற புரட்சிகர அறிக்கையை அங்கீகரிப்பதைக் குறிக்கிறது என்பது பொதுவாக அறியப்படாமல் இருக்கலாம், ஜூலை 2, 1776 அன்று லீ தீர்மானத்தின் (Lee Resolution) மூலம் பெரிய பிரித்தானியாவுடன் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளவில்லை. தொழிலாளர்களும் இளைஞர்களும் இப்பிரகடனம் பற்றி நன்கு அறிந்துகொள்வது முக்கியமாகும். இப்பிரகடனம் இப்பொழுது உச்ச நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டுள்ள சர்வாதிகார அச்சுறுத்தல் பற்றி அதிகம் கூறுகிறது.

ஜான் ட்ரம்புல்லின் ஓவியம், “சுதந்திரப் பிரகடனம்”, கான்டினென்டல் காங்கிரஸுக்கு தங்கள் பணிகளை முன்வைக்கும் வரைவுக் குழுவை சித்தரிக்கிறது. நடுவில் ஜெபர்சன், இடதுபுறம் பிராங்க்ளின், வலதுபுறம் ஆடம்ஸ்.

முதன்மை எழுத்தாளரான தோமஸ் ஜெபர்சன் மற்றும் பெஞ்சமின் பிராங்க்ளின் மற்றும் ஜோன் ஆடம்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழுவால் பிலடெல்பியாவில் வரைவு செய்யப்பட்ட அந்த ஆவணமானது, “மனிதகுலத்தின் கருத்துக்களுக்கு கண்ணியமான மரியாதை” கொடுப்பதற்கு, ஓராண்டாக நடந்து கொண்டிருந்த புரட்சியின் காரணங்களுக்காக “ஒரு நேர்மையான உலகத்திற்கு” ஒரு விளக்கம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறி தொடங்குகிறது. பின்வருவது உலக வரலாற்றிலேயே மிகவும் புரட்சிகரமான அறிக்கையாக இருக்கலாம் —அதன் பரந்த மற்றும் வெடிப்பார்ந்த தாக்கங்கள் அனைத்திலும், அது 1776 இல் இருந்ததைப் போலவே இன்றும் சக்திவாய்ந்ததாக இருக்கிறது: அதாவது “எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர் என்ற இந்த உண்மைகள் சுய-வெளிப்படையானவை என்று நாங்கள் கருதுகிறோம்.”

பின்னர் ஜெபர்சன் “அமெரிக்க கோட்பாடு” அல்லது அரசாங்கத்தின் “குடியரசு கோட்பாடு” என்று அறியப்பட்டவற்றின் கோட்பாடுகளை முன்வைக்கிறார். அரசுகள் மக்களுக்கு உரிமைகளை “வழங்குவதில்லை”. மக்கள் “பறிக்க முடியாத உரிமைகளுடன்” பிறக்கிறார்கள் - அரசாங்கங்கள் உருவாவதற்கு முன்பு தோன்றிய உரிமைகள். அரசாங்கங்கள் தங்கள் “அதிகாரங்களை குடிமக்களின் ஒப்புதலிலிருந்து அரசாங்கங்கள் தங்கள் சட்டபூர்வமான தன்மையைப்” பெறுகின்றன - அதற்கு மேல் ஒரு துளி கூட இல்லை. உண்மையில், இந்த உரிமைகளை நிலைநிறுத்தும் வரையில் அரசுகள் நியாயமாக இருக்கலாம்; அதனால்தான் “அவை மனிதர்கள் மத்தியில் நிறுவப்பட்டுள்ளன.”

அங்கிருந்து, பிரகடனமானது “எந்த அரசாங்க வடிவமும் இந்த இலக்குகளை அழிக்கக்கூடியதாக மாறும் போதெல்லாம்” புரட்சிக்கான உரிமையை வலியுறுத்துகிறது. இன்றைய உச்ச நீதிமன்றத்திற்கும் மற்றும் சதிகார அதிகாரத்தின் ஏனைய கோட்டைகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக வாசிக்கக்கூடிய ஒன்றில், ஜெபர்சன் நமக்குக் கூறுகிறார், புரட்சிக்கான உரிமையானது “துஷ்பிரயோகங்கள் மற்றும் அபகரிப்புகளின் ஒரு நீண்ட வரிசையில்... மக்களை “முழுமையான சர்வாதிகாரத்தின் கீழ்” வைக்க ஒரு சூழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. அத்தகைய தருணத்தில், “அத்தகைய அரசாங்கத்தைத் தூக்கியெறிவது” மக்களின் உரிமை மட்டுமல்ல, அவர்களின் “கடமை”யாகிறது.

சுதந்திரப் பிரகடனம், மூலத்தின் நகல்

இந்தப் பிரகடனமானது மனித சிந்தனையில் நீடித்த வளர்ச்சியின் உச்சக்கட்டமாக இருந்தது. அதன் மூலங்கள் அறிவொளிக் காலத்தில் இருந்தும், தெய்வீகமாக அனுமதிக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ அமைப்புமுறைக்கு அது விடுத்த சவால்களிலிருந்தும் வந்தவையாக இருக்கிறது. ஆனால் 1763 இல், ஏழாண்டுப் போரில் (Seven Years’ War) பிரான்சை பெரிய பிரித்தானியா வென்ற மகிழ்ச்சியின் மத்தியில், ஒரு தசாப்தத்திற்கும் சற்று அதிகமான காலத்திற்குப் பின்னர், மனித சமத்துவக் கொள்கையின் அடிப்படையிலான ஒரு புரட்சியானது பேரரசை சிதறடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

என்ன மாறிவிட்டது? அந்தப் பிரகடனம் விவரித்த “துஷ்பிரயோகங்களின் நீண்ட தொடர்” தான் புரட்சிக்கு மக்களின் நனவை தயார் செய்தது. ஜான் ஆடம்ஸ் பின்னர் ஜெபர்சனுக்கு எழுதினார், “புரட்சி மக்களின் மனதில் இருந்தது, இது 1760 முதல் 1775 வரை, லெக்சிங்டனில் (Lexington) ஒரு துளி இரத்தம் சிந்துவதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.”(1) 

1776 ஜனவரியில் வெளியிடப்பட்ட ரொம் பெயினின் பொதுப் புத்தி (Common Sense) மூலம் “மக்களின் மனங்களுக்கு” பாதையை அணுகுவதில் இருந்த கடைசித் தடையும் அகற்றப்பட்டது. ஏகாதிபத்திய நெருக்கடியின் அந்தக் கட்டம் வரை, பேரரசுக்குள் பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சினையில் இங்கிலாந்துடனான போராட்டத்தின் கருத்தியல் அம்சத்தை குடியேறிய புலம்பெயர்ந்தவர்கள் (colonists) எதிர்த்துப் போராடினர். 1775 வாக்கில், நாடாளுமன்றத்துடன் முறிவு அவசியம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் இன்னும் அரசருடனான உறவை முறித்துக் கொள்ளத் தயாராக இல்லை. ஒரு தனி நாடாளுமன்றத்துடன் ஒரு “அதிகாரமளிக்கப்பட்ட” அமெரிக்கப் பேரரசை பலர் கற்பனை செய்தனர், ஆனால் அரசரை அரசுத் தலைவராகக் கொண்டிருந்தனர், இந்த யோசனை பிற்போக்குத்தனமான காமன்வெல்த் கோட்பாட்டை எதிர்பார்த்தது, பின்னர் தெற்காசியர்கள், கனடியர்கள் மற்றும் ஆஸ்திரேலியர்கள் மீது திணிக்கப்பட்டது.

ரொம் பெயின், லாரன்ட் டாபோஸின் ஓவியம், c. 1792

பெயின் தனது தாக்குதலை அரசர் மீதும் பொதுவாக அரச அதிகாரத்தின் மீதும் ஒருமுனைப்படுத்தினார். ஒரு ஆங்கிலேய புலம்பெயர்ந்தவர், ஒரு தொழிலாளி மற்றும் ஒரு தீவிர கடவுள் மறுப்பாளர் —”வர்த்தகத்தால் ஒரு கோர்செட் தையல்காரர், தொழிலால் ஒரு பத்திரிகையாளர், மற்றும் விருப்பத்தால் ஒரு பிரச்சாரகர்”— பெயின் 1774 இல் ஃபிராங்க்ளின் உதவியுடன் பிலடெல்பியாவுக்கு வந்திருந்தார். ஒரு வருடம் கழித்து அவர் பொது புத்தி என்ற புத்தகத்தை வெளியிட்டார். ஒரு அரசர் இல்லாத ஒரு அரசாங்கம் குறித்த அச்சங்களைத் தணித்து, பெயின் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் ஒரு அரசர் என்ற கருத்தை கேள்விக்குள்ளாக்கினார், இன்றைய உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக சமமாக சுமத்தக்கூடிய வார்த்தைகளில் பின்வருமாறு கூறினார்:

ஆனால் அமெரிக்காவின் அரசர் எங்கே என்று சிலர் கேட்கிறார்கள்? நான் சொல்கிறேன் நண்பரே, அவர் மேலிருந்து ஆட்சி செய்கிறார், பெரிய பிரித்தானியாவின் முடியாட்சி மிருகத்தைப் போல மனிதகுலத்தை நாசம் செய்யமாட்டார் ... முடியாட்சியை நாம் எந்த அளவுக்கு அங்கீகரிக்கிறோமோ, அந்த அளவுக்கு அமெரிக்காவில் சட்டம் தான் அரசர் என்பதை உலகம் புரிந்துகொள்ளும்படி, அதன் மீது ஒரு கிரீடம் வைக்கப்பட வேண்டும்.

பொதுப் புத்தி நூலானது, விண்கல் சக்தியுடன் தாக்கியது, புரட்சிகர சிந்தனைகளால் மக்களை செறிவூட்டியது. முதல் இரண்டு மாதங்களில் 100,000 பிரதிகளும், 1776 ஆம் ஆண்டின் முடிவில் 500,000 பிரதிகளும் விற்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இன்று அமெரிக்காவில் அதற்கு சமமான ஒரு அறிக்கையானது 60 மில்லியன் பிரதிகள் விநியோகிக்கப்பட வேண்டியிருக்கும்—பெயினின் காலத்திற்குப் பின்னர் இருந்து எழுத்து வடிவிலான வார்த்தைகளின் ஏராளமான தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டு பார்க்கையில், துல்லியமாக யதார்த்தமானதாக இருக்கும். பொதுப் புத்தி நூலானது, சுதந்திர பிரகடனத்திற்கு வழி வகுத்தது. அது இன்னும் பரவலாக விநியோகிக்கப்பட்டது. 1776 ஜூலை மாதம் முழுவதும் கொன்டினென்டல் இராணுவம் மற்றும் அரசுக் குடிப்படைகளுக்கு அது உரக்கப் படித்துக் காட்டப்பட்டது.

பொதுப் புத்தி நூலின் அசல் அட்டையின் நகல்

பிரகடனத்தின் புரட்சிகர கோட்பாடுகளுக்குப் பின்னால், சுதந்திரத்திற்கான போர் நடத்தப்பட்டு இறுதியில் 1783 இல் வெல்லப்பட்டது—அதுவும் மிக உயர்ந்த விலையில். மக்கள்தொகையின் ஒரு பங்காக, இரண்டாம் அமெரிக்கப் புரட்சி, உள்நாட்டுப் போர் தவிர மற்ற அனைத்தையும் விட அதிகமான அமெரிக்கர்கள் இந்தப் போரில் இறந்தனர். ஆனால் அமெரிக்கர்கள் தங்களை எப்படி ஆட்சி செய்து கொள்வார்கள் என்ற கேள்வி நீடித்தது. நிலவும் ஒவ்வொரு அரசாங்கத்திலும் இறுதியான, பிரிக்க முடியாத இறையாண்மையின் களஞ்சியம் இருக்க வேண்டும் என்ற சிந்தனை நிலவியது. ஒரு ஆயிரம் ஆண்டுகளாக ஐரோப்பாவை ஆட்சி செய்த முடியாட்சி அமைப்புமுறை இந்த இறுதி இறையாண்மையை அரசரிடம் கண்டது. அது பிரிட்டனின் “பாராளுமன்றத்தில் அரசர்” அமைப்பாக இருந்தாலும் சரி, அல்லது பிரான்ஸ், ஆஸ்திரியா, ஸ்பெயின் மற்றும் ரஷ்யாவின் சர்வாதிகார முடியாட்சிகளாக இருந்தாலும் சரி. மேலும், இறையாண்மையின் பிரிக்க முடியாத தன்மையின் காரணமாக, ஹாலந்து, இத்தாலிய நகர அரசுகள் போன்ற குடியரசுகள் சிறியதாக இருக்க வேண்டும் என்று குடியரசுக் கோட்பாட்டிலும் கருதப்பட்டது.

பிரிட்டிஷ் டோரிகள் அமெரிக்க வாதத்தின் இந்த பலவீனத்தை உள்வாங்கிக் கொண்டனர். அவர்கள் முன்னாள் குடியேறிய புலம்புயர்ந்தவர்களுக்கு ஏளனமாக சவால் விடுத்தனர்: பதின்மூன்று புதிய அரசுகளில் எதில் இறையாண்மை இருக்கும்? ஒவ்வொன்றிலும் யார் இறையாண்மையுடையவர்களாக இருப்பார்கள்? அமெரிக்கர்கள், பெரும் போராட்டத்திற்குப் பிறகு, அரசியலமைப்பின் ஆரம்ப சொற்றொடரில் தங்கள் பதிலை வழங்கினர்: “மக்களாகிய நாம்...” “மக்கள்” இறையாண்மை கொண்டவர்கள், ஜனாதிபதியல்ல, நீதிமன்றங்கள் அல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல, அரசியலமைப்பு கூட இல்லை—ஏனெனில், லிங்கன் பின்னர் சுட்டிக் காட்டியது போல, அரசியலமைப்பே சுதந்திரப் பிரகடனத்தின் அடிப்படையில் செயல்படும் “மக்களால்” முன்வைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

அதன் காலத்தில், இது ஒரு புரட்சிகர நெறியாக இருந்தது.

நிச்சயமாக, முதல் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளின் சித்தாந்தத்தின் அளப்பரிய மிதமிஞ்சிய வளர்ச்சி, பங்கேற்பாளர்களுக்கே கூட அவை தெளிவற்றதாக இருக்கும் அளவுக்கு வர்க்க நோக்கங்களை மூடிமறைத்தது. சொத்துடைத்த வர்க்கங்கள் 1787 ஆம் ஆண்டின் அரசியலமைப்பை உருவாக்குவதில் “மக்களுக்காக” பேசுவதாக கற்பனை செய்தன. 1789 ஆம் ஆண்டில், அவர்களின் பிரெஞ்சு சகாக்கள் ‘தேசத்தின்’ குரலாக செயல்பட்டனர். எல்லா இடங்களிலும் முதலாளித்துவக் குடியரசு சித்தாந்தமானது சமத்துவம், சகோதரத்துவம், மனித உரிமைகள் ஆகியவற்றை அறிவித்தது. ஆயினும் புரட்சிகள் பழைய வர்க்க ஆதிக்கத்திற்குப் பதிலாகப் புதிய வர்க்க ஆதிக்க வடிவங்களையே மாற்றியமைத்தன. மார்க்சும் ஏங்கெல்சும், இந்த புதிய முதலாளித்துவ ஒழுங்கின் மீது பொருளாதார, வரலாற்று மற்றும் அரசியல்ரீதியிலான மிகவும் ஆழமான பகுப்பாய்வு மற்றும் செயல்திறனான விமர்சனத்தின் மூலமாக விஞ்ஞானபூர்வ சோசலிசத்தை அபிவிருத்தி செய்தனர், இது அதன் சமத்துவம் குறித்த பிரகடனங்களுக்கும் இரண்டாம் அமெரிக்க புரட்சிக்கு இட்டுச் சென்ற சொத்துடைமை அடிமைத்தனம் உட்பட மிருகத்தனமான சுரண்டலின் உண்மையான இருப்புக்கும் இடையிலான வெடிப்பார்ந்த முரண்பாட்டை அம்பலப்படுத்தியது.

அமெரிக்க அரசியலமைப்பு, மூலத்தின் நகல்

அரசியலமைப்பானது வர்க்க மேலாதிக்கத்தை மறைத்திருந்தாலும் —அல்லது, சிறப்பாகச் கூறினால், துல்லியமாக சொன்னால், அது அதைச் செய்தது என்பதால்— அது முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான ஒரு பயனுள்ள கட்டமைப்பை நிரூபித்தது. கிட்டத்தட்ட 750,000 அமெரிக்கர்கள் மடிந்த உள்நாட்டுப் போரின் ஆழத்தில்கூட லிங்கன் அரசியலமைப்பை நிலைநிறுத்த விடாமுயற்சியுடன் முயன்றார் என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும். சான்றாக, அதனால் தான், அவர் வெறுமனே அடிமைகளை விடுவிக்க “உத்தரவிடவில்லை”, அதற்கு பதிலாக ஜனவரி 1, 1863 அன்று அடிமை ஒழிப்பு பிரகடனத்தை வெளியிட போரில் இராணுவத்தின் தலைமைத் தளபதி என்ற முறையில் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தினார், இந்த முடிவானது வரலாற்றின் இனவாத கோட்பாடுகளை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

லிங்கன் படுகொலை செய்யப்பட்டு அரை நூற்றாண்டிற்குள், ஜனாதிபதி பதவி அதன் நவீன, ஏகாதிபத்திய வடிவத்தை எடுக்கத் தொடங்கியது. வில்லியம் மெக்கின்லி இருந்து, ஜனாதிபதிகள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு “மக்களின் ஆணையை” மறுக்கும் ஒரு அமெரிக்க சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்தை ஏற்பாடு செய்தனர். அமெரிக்காவில், அவர்கள் வேலைநிறுத்தங்களை முறியடிக்க இராணுவத்தை நிலைநிறுத்தினர், தீவிர எதிர்ப்பாளர்களை வேட்டையாட போலீஸ் உளவாளிகளையும் நிலைநிறுத்தினர்.

சோசலிஸ்டுகள் மற்றும் போர்க்குணமிக்க தொழிலாளர்களை இலக்கு வைப்பதே அதன் ஸ்தாபக நோக்கமாக இருந்த ஜனாதிபதியின் கீழ் ஒரு உள்நாட்டு போலிஸ் படையான, FBI இன் முன்னோடி 1908 இல் உருவாக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் சிஐஏவை (CIA) நிறுவி, உலகம் முழுவதும் புரட்சியை சீர்குலைக்கும் பணியில் ஈடுபட்டார். 1960 களில், ஜனாதிபதி ஜான்சன் சிஐஏவுடன் அவருக்கு முன்பிருந்த ஜனாதிபதி கென்னடி, வெள்ளை மாளிகையில் இருந்து “ஒரு இரக்கமற்ற படுகொலை அமைப்பு” ஐ நடத்தி வந்தார் என்று கூற முடிந்தது. அமெரிக்க ஜனாதிபதி இப்போது ஒரு பரந்த ஒடுக்குமுறை இயந்திரத்தின் மீது அமர்ந்திருந்தார், இது ஜனாதிபதி ஐசனோவரை 1961 ஆம் ஆண்டின் தனது பிரியாவிடை உரையில் இவ்வாறு எச்சரிக்கத் தூண்டியது,

ஒரு பிரமாண்டமான இராணுவ அமைப்பும் ஒரு பெரிய ஆயுதத் தொழிற்துறையும் இணைந்திருப்பது அமெரிக்க அனுபவத்தில் புதியதாகும். பொருளாதாரம், அரசியல், ஆன்மீகம் போன்ற மொத்த செல்வாக்கும் ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு மாநில அவையிலும், கூட்டாட்சி அரசாங்கத்தின் ஒவ்வொரு அலுவலகத்திலும் உணரப்படுகிறது. இந்த வளர்ச்சிக்கான இன்றியமையாத தேவையை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆயினும் அதன் பாரதூரமான உட்பொருளை நாம் புரிந்து கொள்ளத் தவறக்கூடாது

1970 களில் தொடங்கி நம்மை நிகழ்காலத்திற்கு கொண்டு வருகின்ற அமெரிக்க முதலாளித்துவத்தின் அரை நூற்றாண்டு வீழ்ச்சியானது, அதிகரித்தளவில் ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் பொருத்தமற்றதாக உள்ள சமூக சமத்துவமின்மையின் கொடிய வளர்ச்சியால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவியானது, இந்த நேரத்தில், பிரிக்க முடியாத இரண்டு பாத்திரங்களை வகிக்க வந்தது. முதலாவதாக, உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்புரட்சியின் போர்க்களம் என்ற வகையில் ஆகும். இரண்டாவதாக, மக்களின் உரிமைகளுக்கு எதிரான சதிக் களம் ஆகும். இந்த நேரத்தில், “ஏகாதிபத்திய ஜனாதிபதி பதவி” முன்னெப்போதையும் விட வெளிப்படையாகவும் ஈவிரக்கமின்றியும் செயற்பட்டிருக்கிறது.

ஈரான்-கொன்ட்ரா ஊழலுக்காக ஜனாதிபதி றேகன் எந்த தண்டனையையும் எதிர்கொள்ளவில்லை, அதில் காங்கிரஸ் சட்டத்திற்கு முரணாக ஒரு இரகசிய நிதி நடவடிக்கையின் மூலம் மத்திய அமெரிக்க கொலைப் படைகளை வெள்ளை மாளிகையில் இருந்து செயற்படுத்தியது. ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் பயங்கரவாதத்தின் மீதான போர் என்றழைக்கப்படுவதை நடத்த “நிறைவேற்று அதிகாரக் கோட்பாட்டைக்” கையிலெடுத்தார், ஈராக்கில் அபு கிரைப் மற்றும் கியூபாவில் குவாண்டநாமோ வளைகுடா உட்பட சித்திரவதைச் சிறைகளின் ஒரு சர்வதேச குலாக்கில் சந்தேகத்திற்குரியவர்களை பலவந்தமாக காணாமல் ஆக்குவதற்கு ஒழுங்கமைக்க அது அனுமதித்ததாக அவரது நிர்வாகம் கூறியது. ஜனாதிபதி ஒபாமா 2010 இல், எதிரி போராளிகள் என்று அவர் அறிவிக்கும் குடிமக்களைப் படுகொலை செய்வதற்கான தலைமை நிர்வாகியின் தனியுரிமையை வலியுறுத்தினார் (ட்ரம்பில் அவரது உடன்பட்ட கருத்தில் ஆமி கோனி பாரெட்டால் சாதகமாக மேற்கோள் காட்டப்பட்ட ஒரு முன்னுதாரணம்). ஜனாதிபதி ட்ரம்ப், 2020 இல், ஓரிகானின் போர்ட்லேண்டில் ஒரு அமெரிக்க எதிர்ப்பாளரான மைக்கேல் ரெய்னோஹலை படுகொலை செய்ய உத்தரவிட்டதாக வெளிப்படையாக பெருமைபீற்றினார்.

2002 இல் கியூபாவின் குவாண்டனாமோ விரிகுடா சிறையில் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” கைதிகள். புஷ் நிர்வாகத்தின்படி, கைதிகள் அரசியலமைப்புக்கோ, ஜெனிவா உடன்படிக்கைக்கோ கட்டுப்பட்டவர்கள் அல்ல

மீண்டும் மீண்டும் நீதிமன்றங்கள் ஜனாதிபதியின் அதிகாரத்தை உயர்த்துவதை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் கடந்த திங்கட்கிழமை தீர்ப்புக்கு முன்னர் ஒருபோதும் அரசியலமைப்பை நிலைநிறுத்த பணிக்கப்பட்டதாக கூறப்படும் அதே “மேன்மையான அமைப்பால்” அரசியலமைப்பின் மீது இத்தகையதொரு திமிர்த்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதில்லை. ஒரு அரசியல் நகர்வு (Rubicon) கடக்கப்பட்டுள்ளது. 1,000 பில்லியனர்களைக் கொண்ட ஒரு செல்வந்த தன்னலக்குழுவானது சமூகத்தின் செல்வ வளத்தின் பரந்த பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள நிலைமைகளின் கீழ், போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சி ஆகிய அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளை முன்னெடுக்க ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரம் அவசியம் என்று நடைமுறையில் உச்ச நீதிமன்றம் இப்போது தீர்ப்பளிக்கிறது.

அமெரிக்க அரசியலமைப்பானது உலகின் மிகப் பழமையான எழுதப்பட்ட அரசியலமைப்பாகும்; அமெரிக்கக் குடியரசு உலகின் மிகப் பழமையான தொடர்ச்சியாக இருக்கும் குடியரசு ஆகும். அமெரிக்க ஆளும் வர்க்கம் அண்மித்து 250 ஆண்டுகளாக எந்த மாளிகையில் இருந்து ஆட்சி செய்து வந்திருக்கிறதோ அந்த மாளிகையை நோக்கி அது ஒரு சிதைக்கும் பந்தை எடுத்துச் செல்கிறது என்பது ஆழ்ந்த புரட்சிகர தாக்கங்களின் ஒரு அபிவிருத்தியாகும்.

ஆயினும்கூட, அமெரிக்காவின் ஸ்தாபக ஆவணங்கள் —இன்று கொண்டாடப்படும் சுதந்திரப் பிரகடனம், அத்துடன் அரசியலமைப்பு மற்றும் உரிமைகள் சாசனம்— வர்க்க ஆட்சிக்கு எந்த அளவுக்கு அடிப்படையானதாக இருந்திருக்கிறதோ, அதேயளவுக்கு அவை அமெரிக்க தொழிலாள வர்க்கத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஜனநாயக-மனோபாவத்திற்கு பங்களிப்பு செய்திருக்கின்றன என்பது இன்னும் முக்கியமானதாக நிரூபணமாகும். ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கவியலாமல் பின்னிப்பிணைந்துள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு இப்போது தொழிலாள வர்க்கத்தின் தோள்களில் விழுகிறது. தொழிலாள வர்க்கத்திற்கு மட்டுமே ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான நலன்களும் வழிவகைகளும் உள்ளன.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் பர்க் 1775 இல் அமெரிக்கர்களைப் பற்றி “ஒவ்வொரு கறைபடிந்த தென்றலிலும் கொடுங்கோன்மையின் அணுகுமுறையை அடக்குங்கள்” என்று கூறினார். இன்று கொடுங்கோன்மை தென்றலில் வருவதில்லை, புயல் காற்றில் வருகிறது. 250 ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்கத் தொழிலாளர்கள் அவர்களின் புரட்சிகர பாரம்பரியங்களை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும்.

ஐரோப்பாவில் நவீன உலகின் எழுச்சியைத் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக நடந்த அரச வம்ச உள்நாட்டுப் போர் மற்றும் மத மோதல்களுக்கு முற்போக்கான மற்றும் புரட்சிகர பதிலாக அமெரிக்காவில் குடியரசு அமைப்புமுறை இருந்தது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் சேர்ந்து வந்த அசாதாரணமான சமூக மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திகளால் அது சாத்தியமானது, அது மத்திய கால உலகின் சமூக வடிவங்களைக் கரைத்து “காற்றில்” பறக்கவிட்டது.

இன்று, உலகமானது மனிதகுல வரலாறு அனைத்திலும் மிக விரைவான மற்றும் வெடிப்பார்ந்த தொழில்நுட்ப மாற்றத்தைக் கண்டு வருகிறது, இது சமூக சமத்துவமின்மை, வர்க்க ஒடுக்குமுறை, போர், வறுமை, நோய், மற்றும் சமூக காட்டுமிராண்டித்தனத்தின் ஏனைய அத்தனை வடிவங்கள் என வரலாறு தோன்றிய காலம் முதல் இருந்து மனிதகுலத்தை பீடித்துள்ள அத்தனை பிரச்சினைகளையும் அகற்றுவதற்கான நிலைமைகளை உருவாக்குகிறது. முதலாளித்துவம் இந்த முற்போக்கான மற்றும் புரட்சிகர சமூக போக்குகளுக்கு காலங்காலமாக “ஜீரணிக்க முடியாத காட்டுமிராண்டித்தனத்தை வாந்தி எடுப்பதன் மூலமாக” விடையிறுத்து வருகிறது: அதாவது அது போர், சர்வாதிகாரம் மற்றும் பாரிய மரணங்களை அதன் மிக உயர்ந்த கோட்பாடுகளாக வலியுறுத்துகிறது.

முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தால் தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்கப்பட்ட தளைகளில் இருந்து சமூக கட்டமைப்பில் அடிப்படையான முற்போக்கான மற்றும் புரட்சிகர மாற்றங்களை விடுவிப்பது தொழிலாள வர்க்கத்தின் பணியாகும். தொழிலாளர்கள் தான் அமெரிக்கப் புரட்சியின் உண்மையான வாரிசுகள் என்பதும், சோசலிசப் புரட்சியின் மூலமாக “அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர்” என்ற பிரகடனத்தை மீளவலியுறுத்துவதே அவர்களின் பணியாகும் என்பதும் இந்த ஜூலை நான்காம் தேதி, முன்னெப்போதையும் விட தெளிவாக உள்ளது.

***

(1) 1760 முதல் 1775 வரை, பதினைந்து ஆண்டுகள் லெக்சிங்டனில் எந்த வன்முறை மோதல் அல்லது இரத்தக்களரியும் ஏற்படாமல் கடந்தது. இந்த கால இடைவெளி குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இது ஆயுத மோதல்கள் வெடிப்பதற்கு முன்னர், குறிப்பாக அமெரிக்க புரட்சிகரப் போரின் தொடக்கமாகும். இது ஏப்ரல் 1775 இல் லெக்சிங்டன் மற்றும் கொன்டினென்டல் முதல் துப்பாக்கிச் சூடுகளுடன் தொடங்கியது. இந்த பதினைந்து ஆண்டுகளில், அமெரிக்க காலனிகளுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் இடையிலான பதட்டங்களும் கருத்து வேறுபாடுகளும் அதிகரித்து வந்தன, ஆனால் லெக்சிங்டனில் நடந்த நிகழ்வுகள் மோதலில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் வரை வெளிப்படையான போர் இன்னும் வெடிக்கவில்லை. ஆகவே, இந்த சொற்றொடர் காலனித்துவ அமெரிக்காவில் பெரும் ஆயுதமேந்திய மோதல் வெடிப்பதற்கு முன்னர் ஒப்பீட்டளவில் அமைதியான மற்றும் அரசியல் சூழ்ச்சிகளின் ஒரு காலகட்டத்தை எடுத்துக்காட்டுகிறது.

Loading