மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
வாஷிங்டனில் உள்ள பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்திடம் இருந்து தொடர்ந்து ஆதரவு கிடைக்கும் என்ற உத்தரவாதங்களைப் பெற்றதில் இருந்து, இஸ்ரேலிய ஆட்சி உடனடியாக அதன் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் குன்றுகளில் (Golan Heights) 12 அரபு ட்ரூஸ் (Arab Druze) குழந்தைகளைக் கொன்ற ராக்கெட் தாக்குதல் என்று கூறப்படுவதை பற்றிக் கொண்டு, லெபனானுக்கு எதிரான ஒரு தாக்குதலை அச்சுறுத்துகிறது. இது அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரானுக்கு எதிராக ஒரு பரந்த போரைத் தூண்டக்கூடும்.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ஒரு சிறிய கால்பந்து மைதானத்தை தாக்கிய தாக்குதலைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் தெளிவாக இல்லை. மஜ்டால் ஷாம்ஸின் ட்ரூஸ் கிராமத்தில் சனிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 10 முதல் 16 வயதிற்குட்பட்ட பன்னிரண்டு சிறுவர்களும் சிறுமிகளும் கொல்லப்பட்டனர். மேலும் டசின் கணக்கானவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சில குடியிருப்பாளர்கள் இஸ்ரேலிய ஆட்சிதான் இந்த அட்டூழியத்திற்கு பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளனர். இஸ்ரேலின் ஆரம்ப எச்சரிக்கை முறையின் செயல்பாட்டை அவர்கள் கேள்விக்குள்ளாக்குகின்றனர், ஏனெனில் சைரன்கள் ஒலித்த ஐந்து வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றதால், குழந்தைகள் தஞ்சம் புகுவதற்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை.
இஸ்ரேலின் அதி தீவிர வலதுசாரி நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச், இந்த இறப்புகளை சுரண்டும் முயற்சியில் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்தபோது, சில குடியிருப்பாளர்கள் கூச்சலிட்டனர். தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில், “லெபனான் ஒட்டுமொத்தமாக இதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும்” என்று அவர் அறிவித்தார். “[தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர்] பென்-க்விர் மற்றும் ஸ்மோட்ரிச் தான் இங்கு குற்றவாளிகள்” என்று குடியிருப்பாளர்கள் கூச்சலிட்டனர், மேலும் பதட்டங்களைத் தூண்டுவதாக அவர்கள் மீது குற்றம் சாட்டினர்.
காஸா மக்கள் மீது தங்கள் இனப்படுகொலை தாக்குதலை தீவிரப்படுத்தும் அதேவேளையில், இஸ்ரேலிய தலைவர்கள் லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு போராளி குழுவான ஹெஸ்பொல்லா கோலன் குன்றுகளில் பகுதியில் நடந்த குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர், இருப்பினும் ஹெஸ்பொல்லா தாக்குதலின் பின்னணியில் இல்லை என்று “திட்டவட்டமாக” மறுத்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவ இலக்குகள் மீது ஹெஸ்புல்லா பல தாக்குதல்களை நடத்திய பின்னர், இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணை அமைப்பில் இருந்து விழுந்த ராக்கெட் எதிர்ப்பு இடைமறிப்பு எறிகணையே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்று ஹெஸ்புல்லா கூறியது.
எவ்வாறிருந்த போதினும், பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகு டெல் அவிவ் இல் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் செய்வதற்காக, தனது அமெரிக்க விஜயத்தை வியத்தகு முறையில் குறைத்தார். இதன்பின் அவர் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் மற்றும் இராணுவ, உளவுத்துறைப் பிரிவுகளின் தலைவர்களுடன் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, ஹெஸ்பொல்லா “இதற்காக பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும், இதற்கு முன்னர் அது கொடுத்திராத விலை” என்று உறுதியளித்தார்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு, நெதன்யாகுவின் அலுவலகம், இஸ்ரேலின் பதிலின் “வகை” மற்றும் “நேரத்தை” தீர்மானிக்க, பிரதம மந்திரி மற்றும் பாதுகாப்பு அமைச்சருக்கு பாதுகாப்பு அமைச்சரவை அதிகாரம் அளித்துள்ளதாக தெரிவித்தது.
ஒரு ஆரம்ப தாக்குதலில், அந்த கூட்டத்திற்கு முன்பு, இஸ்ரேலிய போர் விமானங்கள் ஹெஸ்பொல்லா இலக்குகளுக்கு எதிராக “லெபனிய எல்லைக்கு உள்ளேயும்” எல்லையை ஒட்டிய இலக்குகளுக்கு எதிராகவும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின என்று ஞாயிறு காலை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.
காஸாவில் பத்தாயிரக் கணக்கான குழந்தைகளின் மரணங்களுக்குப் பொறுப்பான ஒரு போர் குற்றவாளியான நெதன்யாகு, கோலன் குன்றுகளில் நடந்த “கொலைகார தாக்குதலால்” “அதிர்ச்சியடைந்ததாக” தெரிவித்தார். பாசாங்குத்தனம் அசிங்கமாக இருந்தது. கடந்த ஒன்பது மாதங்களில் 186,000 பாலஸ்தீனியர்களின் மரணங்களுக்கு நெதன்யாகு பொறுப்பு என்று மிகவும் மதிக்கப்படும் லான்செட் மருத்துவ இதழின் மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலன் குன்றுகள் பகுதியில் வெடிப்பு நடந்த அதேநாளில், இந்த இரத்தக்களரி காஸாவில் முந்தைய “பாதுகாப்பு மண்டலத்தில்” தொடர்ந்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படை மத்திய காஸாவின் டெய்ர் அல்-பலாவில் ஒரு பள்ளி மற்றும் கள மருத்துவமனையைத் தாக்கி சுமார் 30 பேரைக் கொன்றது, எப்போதும் போல, ஹமாஸ் அப்பகுதிக்குள் இருந்து ராக்கெட்டுகளை ஏவியதாகக் கூறியது.
நெதன்யாகுவைப் போலவே, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடிய அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் ஹெஸ்பொல்லாவைக் குற்றம் சாட்டினார். டோக்கியோவில் இருந்த வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனும் ஹெஸ்பொல்லாவைக் குற்றம் சாட்டினார்.
ஹாரிஸின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பில் கோர்டன், “இஸ்ரேல் அதன் பாதுகாப்புக்கு தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு [ஹாரிஸ்] ஆதரவு இரும்பு போன்றது” என்று கூறினார். காஸா மோதலுக்கு ஒரு “இராஜாங்க தீர்வில்” அமெரிக்கா செயல்பட்டு வருவதாக அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் இனப்படுகொலை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த கூற்று பல மாதங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
கோர்டனின் கருத்துக்கள் கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் நெதன்யாகுவுடனான தனிப்பட்ட சந்திப்புக்குப் பின்னர் ஹாரிஸ் கூறியதை எதிரொலித்தன. சியோனிச அரசுக்கும் காஸாவில் அதன் தொடர்ச்சியான இன சுத்திகரிப்பு தாக்குதலுக்கும் தனது வாழ்நாள் ஆதரவை ஹாரிஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அந்த ஆதரவை அவர் குறிப்பாக ஈரானுக்கு எதிரான பரந்த செயற்பட்டியலுடன் தொடர்புபடுத்தினார்.
“எனவே நான் பிரதமர் நெதன்யாகுவுடன் ஒரு வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பை நடத்தினேன்” என்று ஹாரிஸ் கூறினார். மேலும், “ஈரான் மற்றும் ஹமாஸ் மற்றும் ஹெஸ்புல்லா போன்ற ஈரான் ஆதரவு போராளிகள் குழுக்களிடமிருந்து, இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை நான் எப்போதும் உறுதி செய்வேன் என்று நான் அவரிடம் கூறியதாக” அவர் தெரிவித்தார்.
அமெரிக்க காங்கிரசின் கூட்டு அமர்வு ஒன்றில் நெதன்யாகு உரையாற்றியபோது அவர் பாராட்டப்பட்டதை எதிர்த்த ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களை “தேசபக்தியற்றவர்கள்” என்று ஹாரிஸ் கண்டனம் செய்தார். அவருடைய கருத்துக்கள் இஸ்ரேலிய ஆட்சி மோதலை விரிவாக்குவதற்கு பச்சைக்கொடி காட்டும் அரசியல் பச்சை விளக்கு என்றுதான் விளக்கப்பட முடியும்.
கோலன் குன்றுகள் பகுதியில் நடந்த தாக்குதலுக்கு பின்னர் ஸ்மோட்ரிச் மட்டும் போர்வெறி அறிக்கையை வெளியிடவில்லை. வெளியுறவு மந்திரி இஸ்ரேல் காட்ஸ் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலிடம் (The Times of Israel) ஹெஸ்புல்லா “அனைத்து சிவப்பு கோடுகளையும் கடந்துவிட்டது” என்று கூறினார்.
இஸ்ரேல் “ஹெஸ்பொல்லா மற்றும் லெபனானுக்கு எதிரான ஒரு முழு அளவிலான போரின் தருணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது” என்று கூறிய காட்ஸ், ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா அவரது அமைப்புடன் சேர்ந்து அழிக்கப்படுவார் என்றும், லெபனான் கடுமையாக சேதப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, லெபனானில் எந்த புதிய இஸ்ரேலிய இராணுவ “சாகசங்களும்” “எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும் “ என்று எச்சரித்தார். இதில் “பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மை, பாதுகாப்பின்மை மற்றும் போரின் நோக்கம் விரிவடைந்து வருகிறது” என்று எச்சரித்தார்.
1967 ஆம் ஆண்டில் ஆறு நாள் போரின் போது சிரியாவிடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றி 1981 ஆம் ஆண்டில் இணைத்துக்கொண்ட கோலன் குன்றுகளில் சுமார் 20,000 ட்ரூஸ் அரேபியர்கள் வாழ்கின்றனர். சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகக் கருதப்படும் இப்பகுதி, சுமார் 25,000 இஸ்ரேலிய யூத குடியேற்றக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ட்ரூஸ் மக்கள் சிரியர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இஸ்ரேலிய குடியுரிமை பெறுவதை நிராகரித்துள்ளனர். கொல்லப்பட்ட 12 குழந்தைகளில் எவருக்கும் இஸ்ரேலிய குடியுரிமை இல்லை என்று மஜ்தல் ஷாம்ஸின் பிராந்திய கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க காங்கிரசுக்கு நெதன்யாகுவின் பாசிச உரையின் இரண்டாம் பாதி, காஸா இனப்படுகொலையை மத்திய கிழக்கு முழுவதும் ஒரு பரந்த அமெரிக்க தலைமையிலான போரின் ஒரு பகுதியாக வழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
அமெரிக்காவை “மேற்கத்திய நாகரிகத்தின் பாதுகாவலரும் உலகின் மிகப்பெரிய சக்தியும்” என்று அறிவித்த நெதன்யாகு, “நீங்கள் ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருந்தால், இந்த பேச்சைப் பற்றிய ஒரு விஷயம், இதை நினைவில் கொள்ளுங்கள்: எங்கள் எதிரிகள் உங்கள் எதிரிகள், எங்கள் சண்டை உங்கள் சண்டை, எங்கள் வெற்றி உங்கள் வெற்றியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
இது யதார்த்தத்தை தலைகீழாக நிறுத்துகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் “பாலஸ்தீன பிரச்சினைக்கான இறுதி தீர்வை” ஈரானுக்கு எதிரான போரின் முதல் கட்டமாக பார்க்கிறது. ஈரானுக்கு எதிரான போரானது ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் போர் மற்றும் சீனாவுடன் அபிவிருத்தி அடைந்து வரும் மோதலின் பாகமாக உள்ளது.
ஹெஸ்பொல்லாவிற்கு எதிரான ஒரு முழு அளவிலான இஸ்ரேலிய தாக்குதல், மத்திய கிழக்கில் பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தின் மூலோபாய இலக்குடன் இயைந்ததாக இருக்கும். அது அப்பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு நீண்டகாலமாக ஒரு தடையாக கருதப்படும் ஈரானிய ஆட்சியை கவிழ்ப்பதாகும். இந்த இலக்கு, ரஷ்யா மற்றும் சீனாவை அடிபணியச் செய்வதற்கும் ஒட்டுமொத்த யுரேஷிய நிலப்பகுதி மீதான கட்டுப்பாட்டிற்கும் இன்றியமையாததாகும்.
கடந்த அக்டோபரில் காஸாவில் இஸ்ரேல் அதன் இனப்படுகொலையை தொடங்கியதில் இருந்து, அது ஹெஸ்பொல்லாவுடன் ஒப்புமையில் குறைந்த அளவிலான மோதலில் ஈடுபட்டுள்ளது; ஹெஸ்பொல்லா பலமுறை முழு அளவிலான போருக்கு நெருக்கமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, லெபனானில் இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதல்களில் சுமார் 100 பொதுமக்கள் உட்பட 350 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு லெபனானில் சுமார் 100 நகரங்கள் மற்றும் கிராமங்களை குண்டுவீச்சு அச்சுறுத்தலின் கீழ், விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் 90,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அமெரிக்க ஆதரவுடன் லெபனான் மீது முழு அளவிலான இஸ்ரேலிய தாக்குதல் நடத்தப்பட்டாலும், 1980களில் இருந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய முந்தைய சட்டவிரோத, மிருகத்தனமான படையெடுப்புக்கள் மீண்டும் நடத்தப்படுவது போல் இருக்காது. காஸாவில் செய்வது போல், இஸ்ரேல் ஹெஸ்பொல்லாவின் இராணுவப் பிரிவை அழிக்க முற்படுவது மட்டும் இல்லாமல், லெபனானின் வறிய ஷியா மக்களிடையே இருக்கும் அதன் சமூக அடித்தளத்தையும், நாட்டின் முழுப் பகுதிகளையும் அழிப்பதற்கு முயற்சிக்கும்.
காஸா இனப்படுகொலை அல்லது மத்திய கிழக்கில் ஈரான், உக்ரேனில் ரஷ்யா அல்லது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான ஏகாதிபத்திய போரில் பைடென் நிர்வாகம் செய்துவரும் ஆக்ரோஷத்திற்கு சற்றும் குறைந்ததல்ல என்பதற்கு ஹாரிஸின் பகிரங்க அறிக்கைகள் சமீபத்திய உறுதிப்படுத்தல் மட்டுமே ஆகும்.
அமெரிக்க காங்கிரசில் நெதன்யாகு தனது பகட்டான உரையை பரவச பாராட்டுக்களுக்கு மத்தியில் அளித்தபோது, உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் ஐக்கிய அமெரிக்க காங்கரஸ் கட்டிடத்திற்கு (Capitol) வெளியே ஒரு பேரணியை நடத்திக் கொண்டிருந்தன. அது இனப்படுகொலை மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க ஒரு வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை முன்னெடுத்தது.
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் பேரணியில் வெளியிட்ட அவரது கருத்துக்களில், நெதன்யாகுவின் உரை, காஸா இனப்படுகொலை மற்றும் அந்த இனப்படுகொலைக்கு ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவு ஆகியவற்றில் இருந்து ஊற்றெடுக்க வேண்டிய அவசியமான முடிவுகளை எடுத்தார்:
ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு தொழிலாள வர்க்கத்தை ஒரு சர்வதேச சக்தியாக அணிதிரட்டுவது அவசியமாகும். இதற்கு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிதம் செய்வது அவசியமாகும். அதற்கு முதலாளித்துவவாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோ, ஒரு அமைதியான கொள்கையை ஏற்குமாறு அவர்களுக்கு முறையிடுவதோ அதன் நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, தொழிலாள வர்க்கம் இந்தக் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால், அவர்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பினால், அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்கும் ஒரு முன்னோக்கு அவசியப்படுகிறது.