இலங்கையில் பழிவாங்கப்பட்ட மிச்செலின் தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்து! மிச்செலின் தொழிலாளர்களின் போராட்டத்தைப் பாதுகாக்க தொழிலாள வர்க்க ஆதரவை அணிதிரட்டு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் தென் பகுதியில் மிதிகமவில் உள்ள மிச்செலின் டயர் தொழிற்சாலையில் வேலை இடை நீக்கம் செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் மீண்டும் வேலையில் அமர்த்தக் கோருமாறு இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களுக்கு இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அழைப்பு விடுக்கிறது.

பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட சர்வதேச நிறுவனத்தின் மறுசீரமைப்பு தாக்குதல்களுக்கு எதிராக தங்கள் தொழில்கள் மற்றும் ஊதியங்களைப் பாதுகாக்க மே 23 முதல் போராடி வரும் மிதிகம ஊழியர்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தை அடக்குவதற்கான நிர்வாகத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்தத் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்த தொழிற்சாலை, இந்தியாவை தளமாகக் கொண்ட சியட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது, இந்த கைமாறல் இந்த மாதம் நிறைவடையும்.

சம்பத் கருணாசேன, சிரங்கிவி செனவிரட்ன மற்றும் பிரியங்க திமுத்து குமார ஆகியோரே பழிவாங்கப்பட்ட மூன்று தொழிலாளர்கள் ஆவர். மூன்று நாட்களுக்கு முன்பு அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஒரு விசாரணையை அடுத்து அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்று கூறிய நிறுவனம், எந்த விசாரணையும் இல்லாமலேயே அவர்களை திடீரென வேலை இடை நீக்கம் செய்தது.

இது இலங்கையில் தற்போதுள்ள தொழிற்சட்டங்களை அப்பட்டமாக மீறுவதும் அவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும் ஆகும். நிர்வாகம் அனுமதியின்றி தொழிற்சாலைக்குள் நுழைந்ததாகக் கூறியதைத் தொடர்ந்து, வெலிகம பொலிசுக்கு மூன்று தொழிலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்,

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களையும் அவர்களின் அனைத்து தொழில்களையும் பாதுகாக்க வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மிச்செலின் மிதிகம தொழிலாளர்களின் நியாயமான தொழில்துறை போராட்டத்தை நிறுவனம் 'சட்டவிரோதமானதாக' முத்திரை குத்தியுள்ளது.

ஜூன் 1 அன்று, ஒரு செய்தியில், தொழிலாளர்கள் 'ஊடகங்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதன் மூலம் நிறுவனத்தின் 'நற்பெயருக்கு சேதம் விளைவித்ததாக' நிர்வாகம் குற்றம் சாட்டியதுடன், நிறுவனத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைவதாக எச்சரித்தது. 'உற்பத்தியைத் தொடர ஒத்துழைப்பு கொடுக்காததால்' 'கடுமையான நிதி இழப்புகளுக்கு' தொழிலாளர்களே பொறுப்பு என்றும் அது குற்றம் சாட்டியது.

தொழிலாளர்களின் தொழில்துறை போராட்டத்தை நாசப்படுத்த முயன்ற நிர்வாகம், ஜூன் 1 அன்று, இரவு வேலை முறை முதல் ஜூன் 3 இரவு வேலை முறை வரை மிதிகம தொழிற்சாலையில் அதன் செயல்பாடுகளை மூடியது.

தொழிற்சாலை இந்தியாவுக்குச் சொந்தமான சியட் கூட்டுத்தாபனத்துக்கு விற்கப்பட்டதை அறிந்த பின்னர், மே 23 அன்று மிச்செலின் ஊழியர்கள் தங்கள் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் குறித்து பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

மே 26 அன்று கொழும்பில் உள்ள தொழில் ஆணையர் அலுவலகத்திற்கு தொழிலாளர்கள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பியபோது, அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் (ICEU) மிச்செலின் மற்றும் CEAT உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டதாகக் கூறப்பட்டது. பரிமாற்றம் இறுதி செய்யப்பட்டவுடன் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 200,000 ரூபாய் (US$650) இழப்பீடு வழங்கப்படும் என்று தொழில் ஆணையர் கூறினார்.

மிச்செலின் மற்றும் ஆளும் மக்கள் விடுலை முன்னணி (ஜே.வி.பி.) உடன் இணைந்த அனைத்து நிறுவன ஊழியர் சங்கம், நிறுவன பரிமாற்றம் அல்லது அவர்களின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் குறித்து தொழிலாளர்களிடம் எதுவும் கூறவில்லை. இந்த ரகசிய ஒப்பந்தம் அனைத்து நிறுவன ஊழியர் சங்க உறுப்பினர்களின் முதுகுக்குப் பின்னால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும். அனைத்து நிறுவன ஊழியர் சங்கத் தலைவர் வசந்த சமரசிங்க, ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சரும் ஆவார்.

மிச்செலின் தொழிலாளர்கள் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் ஒப்பந்தத்தை நிராகரித்து பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்: (1) தொழிலை இழக்கும் ஒவ்வொரு மிச்செலின் தொழிலாளிக்கும் மூன்று மில்லியன் ரூபாய் இழப்பீடு வேண்டும்; (2) மிச்செலின்-சியெட் பரிமாற்றம் நிகழும்போது அவர்களின் சேவையின் தொடர்ச்சியிலும் ஏனைய நிபந்தனைகளிலும் எந்த இடையூறும் இருக்கக் கூடாது; (3) இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், மிச்செலின் கூட்டுத்தாபன இழப்பீட்டுத் திட்டத்திற்கு ஏற்ப மிச்செலின் தொழிலாளர்கள் சுயவிருப்பில் ஓய்வு  பெற அனுமதிக்கப்பட வேண்டும்.

மிச்செலின் மற்றும் சியெட்டுடன் ஏற்கனவே ஒரு ஒப்பந்தம் செய்துவிட்டதாக அறிவித்து, இந்த நியாயமான கோரிக்கைகளை அனைத்து நிறுவன ஊழியர் சங்க தலைமைத்துவம் நிராகரித்தபோது,​​ தொழிலாளர்கள் தங்கள் தொழில்துறை போராட்டத்தைத் தொடர முடிவு செய்தனர்.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் நடந்து வரும் வேலைநிறுத்தத்தை முறியடிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஜே.வி.பி. சார்ந்த அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தை அதன் கருவியாகப் பயன்படுத்துவதற்கும் மேலாக, இலங்கையின் பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, தொழிலாளர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். மிச்செலின்-சியட் பரிமாற்றம் முடிந்ததும் தொழிலாளர்களுக்கு எதுவும் நடக்காது என்று அவர் மே 29 அன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை, 'முதலீட்டாளர்களையும் ஊழியர்களையும் பாதுகாப்பதே' என்று அவர் வஞ்சத்தனமாக அறிவித்தார்.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாகவும் பதட்டமாகவும் கண்காணித்து வருகிறது. மிச்செலின் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் சட்டப்பூர்வமான உரிமைகள் குறித்து அதற்கு எந்த அக்கறையும் இல்லை, மாறாக, ஆடம்பரமான சலுகைகளை வழங்குவதன் மூலம் சர்வதேச முதலீட்டாளர்களை பராமரிக்கவும் ஈர்க்கவும் தீவிரமாக முயற்சிக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, மிச்செலின் ஊழியர்களின் சுயாதீனமான போர்க்குணமிக்க நிலைப்பாடு பற்றியும் அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் மற்றும் ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவங்களை அவர்கள் மீறுவது குறித்தும் ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சி கடுமையாக கவலை கொண்டுள்ளது. மிச்செலின் தொழிலாளர்களின் நடவடிக்கை, அரசாங்கம் முன்னெடுக்கும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கும் தொழிலாள வர்க்கத்தின் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கும் எதிராகப் போராட ஒரு வழியைத் தேடிவரும் ஏனைய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் என்று அது கவலை கொண்டுள்ளது.

மிச்செலின் கூட்டுத்தாபனம் தனது மிதிகம தொழிற்சாலையை விற்பனை செய்வதானது ஆழ்ந்த உலகளாவிய நெருக்கடியின் மத்தியில் இலாபத்தை அதிகரிப்பதற்காக அது முன்னெடுக்கும் உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும். இந்த மாபெரும் பன்னாட்டு நிறுவனம், 'இயக்குவதற்கான அதிக செலவுகள்', 'ஆசியாவில் குறைந்த-செலவு உற்பத்தியாளர்களிடமிருந்து தீவிரமடைந்து வரும் போட்டி' ஆகியவற்றை அதன் மறுசீரமைப்பின் பின்னால் உள்ள உந்து சக்திகளாகக் சுட்டிக்காட்டுகிறது.

மே மாத தொடக்கத்தில், போலந்து மற்றும் சீனாவில் உள்ள ஆலைகளில் டிரக்-டயர் உற்பத்தியை படிப்படியாக நிறுத்திய மிச்செலின், உற்பத்தி திறன்பாட்டை 'இலக்கு வைக்கப்பட்ட சந்தைகளுடன்' சிறப்பாக ஒழுங்கமைக்க இது அவசியம் என்று அறிவித்தது.

மிச்செலின் குழுமம் 'சந்தை மறுசீரமைப்புகள்', 'அதிகப்படியான திறன்' மற்றும் 'அதிகரித்துவரும் உற்பத்தி செலவுகள்' ஆகியவற்றைக் காரணம் காட்டி, அலை அலையாய் தொழிற்சாலை மூடல்களை அறிவித்துள்ளது. கடந்த நவம்பரில், மேற்கு பிரான்சில் உள்ள அதன் இரண்டு தொழிற்சாலைகளை - சோலெட் மற்றும் வான்னெஸ் - மூடும் திட்டங்களை வெளிப்படுத்தியது. இதனால் சுமார் 1,250 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்.

இலங்கையில் உள்ள மிச்செலின் தொழிலாளர்கள், இப்போது சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான தங்கள் வர்க்க சகோதர சகோதரிகள் எதிர்கொள்ளும் அதே பிரச்சினைகளை, குறிப்பாக தொழில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் போன்ற, அரசாங்க சார்பு தொழிற்சங்கங்கள் மற்றும் கம்பனி சார்பு தொழிற்சங்கங்கள், மற்றும் ஆடைத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் தொழிற்சங்கங்களும், இந்தத் தொழில்களில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான யதார்த்தத்தை வேண்டுமென்றே மூடி மறைக்கின்றன. இது தொழிலாளர்கள் தங்கள் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் கடந்த காலப் போராட்டங்களின் மூலம் கடுமையாகப் வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாக்கும் திறனுக்கு குழிபறிப்பதாகும்.

இலங்கையில் மில்லியன் கணக்கான அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தொழில்கள் மற்றும் வேலை நிலைமைகள் மிச்செலின் ஊழியர்களின் தொழில்களை விட பாதுகாப்பானவை அல்ல என்று சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கிறது. 400 க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்களை மறுசீரமைப்பதன் மூலம் அரை மில்லியனுக்கும் அதிகமான அரசதுறை தொழில்களை அழிக்க திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

மிதிகம தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தங்கள் நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளனர். மிச்செலின் தொழிலாளர்கள் இலங்கை முழுவதும் உள்ள அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள தொழிலாளர்களின் பக்கம் திரும்பி, தங்களுக்கு ஆதரவைத் திரட்ட வேண்டும், அத்துடன், தொழில்கள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க இதேபோன்ற நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க அவர்களை வலியுறுத்த வேண்டும்.

அரசாங்கம் மற்றும் பெருவணிக தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச அளவில் தங்கள் போராட்டங்களை ஒன்றிணைக்க, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் மிச்செலின் மற்றும் ஏனைய தொழிலாளர்களும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.

இலங்கை மிச்செலின் தொழிலாளர்கள் தங்கள் சர்வதேச சகோதர சகோதரிகளின் ஆதரவைக் கோரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். பழிவாங்கப்பட்டுள்ள மிதிகம தொழிலாளர்களைப் பாதுகாப்பது என்பது சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் தொழில்கள், ஊதியங்கள், வேலை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் மிச்செலின் நிறுவனத்திற்கு கடிதங்களை அனுப்புமாறும் பின்வரும் கோரிக்கைகளுடன் அறிக்கைகளை வெளியிடுமாறும் கேட்டுக்கொள்கிறது.

  • மூன்று மிச்செலின் தொழிலாளர்களை உடனடியாக வேலக்கு அமர்த்து! அனைத்து ஊழியர்களுக்கும் எதிரான பொலிஸ் முறைப்பாடுகளை விலக்கிக்கொள்!
  • மிதிகவில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்களின் சேவையை மீறாமல் அவர்களின் தொழில்கள், ஊதியங்கள், வேலை நிலைமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதை எழுத்துப்பூர்வமாக உத்தரவாதப்படுத்த வேண்டும்!

கடிதங்கள் மற்றும் அறிக்கைகளை பின்வரும் முகவரிக்கு அனுப்புங்கள். அவற்றின் நகலை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் அனுப்பி வையுங்கள்.

மிச்செலின் லங்கா பிரைவேட் லிமிடெட்,

இலக்கம். 218, மினுவாங்கொட வீதி, ரீஜண்ட் கோர்ட்ஸ், ஏகல, ஜா-எல, இலங்கை.

சோசலிச சமத்துவக் கட்சியின் மின்னஞ்சல் முகவரி: wswscmb@sltnet.lk

Loading