இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) சிரேஷ்ட ட்ரொட்ஸ்கிசத் தலைவரான ஆனந்த தவுலகல, ஆகஸ்ட் 13 அன்று தனது 77ஆவது வயதில் காலமானார். அவர் தனது மனைவி ஸ்ரீயானி, மகள் விதுரங்கா, இரு மகன்களான சமந்த மற்றும் அசங்க மற்றும் எட்டு பேரப் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார்.
நீண்டகாலமாக நீடித்த நோய் அவரது பணியை மட்டுப்படுத்தும் வரை, சர்வதேச சோசலிசத்தின் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளுக்கான போராட்டத்தில் தவுலகல நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆகஸ்ட் 14 அன்று கண்டி மஹாய்யாவ மயானத்தில் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கான குடும்ப உறுப்பினர்கள், தோழர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.
தவுலகல, 1948 ஜனவரி 22 அன்று மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை, நுகபிட்டிய, ஊக்குவெலவில் பிறந்தார். ஆறு பிள்ளைகளில் அவர் இரண்டாவது பிள்ளையாவார். அவரது தந்தை பாடசாலை அதிபராகவும் தாயார் இல்லத்தரசியாகவும் இருந்தனர். மாத்தளையில் உள்ள புனித தோமஸ் கல்லூரியில் கற்ற அவர், கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கினார். கராத்தேவில் கறுப்புப் பட்டி பெற்றிருந்த அவர், சிறந்த நீச்சல் வீரராகவும் இருந்ததாகவும், நீரில் மூழ்கிய குறைந்தபட்சம் 10 பேரை காப்பாற்றியதாகவும் அவரது மனைவி ஸ்ரீயானி நினைவுகூர்ந்தார். 1969 இல், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல், பொருளாதாரம், சிங்களம் ஆகிய பாடங்களில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார்.
அந்தக் காலகட்டத்தில், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.), பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வலுவான இருப்பைக் கொண்டிருந்தது. ஒரு மாணவராக இருந்த தவுலகல, 1968 இல் பு.க.க. உருவாவதற்கு வழிவகுத்த விரோதய குழுவின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தார். அவர் இன்னும் அரசியலில் தீவிரமாக ஈடுபடாதிருந்தபோதிலும், ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தின் மீது ஆழ்ந்த மரியாதை கொண்டிருந்தார். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) குண்டர்களின் உடல்ரீதியான தாக்குதல்களிலிருந்து விரோதய குழு உறுப்பினர்களைப் பாதுகாத்தார். அடுத்த தசாப்தத்தில், அவர் மார்க்சிச இலக்கியங்களில் ஆழமாக ஈடுபட்டதுடன், பு.க.க. இன் சிங்கள மொழிப் பத்திரிகையான கம்கரு புவத் (தொழிலாளர் செய்திகள்), பின்னர் கம்கரு மாவத்த (தொழிலாளர் பாதை) எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட பத்திரிகையின் வழக்கமான வாசகரானார்.
1980 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கத்திற்கு எதிரான பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், தவுலகலின் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அந்த அரசாங்கம் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 100,000 அரச ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது. அப்போது கூட்டுறவுப் பரிசோதகராகப் பணியாற்றிய அவர், வேலைநிறுத்தத்தை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் போராட்டமாக மாற்ற வேண்டும் என்ற பு.க.க.யின் அழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் தீவிரவாதக் குழுக்கள் வேலைநிறுத்தம் “அரசியலற்றது” என வலியுறுத்தி, ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவை எதிர்கொள்ள மறுத்த நிலையில், தவுலகல பு.க.க.யின் நிலைப்பாட்டை ஆதரித்தார்.
பு.க.க.யின் வேலைத்திட்டத்தில் நம்பிக்கை கொண்ட தவுலகல, உடனடியாகக் கட்சியில் இணைய முடிவு செய்தார். அவர் அதன் கண்டிக் கிளையில் தீவிரமாகச் செயற்பட்டதுடன், பின்னர் பல ஆண்டுகள் கிளையின் செயலாளராகப் பணியாற்றினார். 1980 ஜூலை வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதில் அவர் உறுதியாக இருந்தார். இந்தக் காலகட்டத்தில், ஐ.தே.க. அரசாங்கம் தொழிலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தியதுடன், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்துவதற்காகத் தமிழர் விரோத பேரினவாதத்தைத் தூண்டிவிட்டது. இது, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு வழிவகுத்தது. பு.க.க.யின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தவுலகலவும் அவரது தோழர்களும் இனவாதப் போருக்கு எதிராகத் துணிச்சலான நிலைப்பாட்டை எடுத்தனர்.
கண்டியில், பு.க.க.யின் சிங்கள மற்றும் தமிழ் பத்திரிகைகளான கம்கரு மாவத்த மற்றும் தொழிலாளர் பாதை ஆகியவற்றுடன், தவுலகல தோழர்களை விரிவான வழக்கமான பிரச்சாரங்களில் வழிநடத்தினார். மஹாய்யாவ, ஹீரஸ்ஸகல மற்றும் ஹந்தான போன்ற பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள், கிராமப்புற வறிய மக்கள் மற்றும் சிறு வணிகர்கள் மத்தியில், அவர் “கம்கரு மாவத்த தோழர்” எனப் பரவலாக அறியப்பட்டார்.
அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுடன் வழக்கமான பிரச்சாரங்களையும் கலந்துரையாடல்களையும் ஏற்பாடு செய்தார். இந்த முயற்சிகள் 1987 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பல்கலைக்கழக வளாகத்தில் பு.க.க.யின் அப்போதைய இளைஞர் பிரிவான இளம் சோசலிஸ்டுகளின் (YS) கிளையொன்று உருவாவதற்கு பங்களித்தன. தற்போதைய சோ.ச.க. பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர, தவுலகலவால் அரசியல் ரீதியாகப் ஈர்க்கப்பட்டு கல்வியூட்டப்பட்ட மாணவர்களில் ஒருவராவார். தவுலகல தன்னுடன் நடத்திய பல தத்துவார்த்த மற்றும் அரசியல் கலந்துரையாடல்கள் தன்னை பு.க.க.யில் இணையத் தூண்டியதை ஜயசேகர அன்புடன் நினைவுகூருகிறார்.
தொழிலாள வர்க்கமே முதலாளித்துவ சமூகத்தில் தீர்க்கமான புரட்சிகர சக்தி என்றும், முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்ப வேண்டும் என்றும் தவுலகல தொடர்ச்சியாக வலியுறுத்தினார். ட்ரொட்ஸ்கிச முன்னோக்குடன் உடன்படாதவர்களும் கூட, அவரது செய்தியின் தீவிரத்தன்மையை அங்கீகரித்தனர். மார்க்சிசத்துடன் போலியான ஒற்றுமை சைகைகளை வெளிப்படுத்திய கல்வியாளர்களை அவர் கடுமையாக விமர்சித்ததுடன், அவர்களின் கோழைத்தனத்தையும் கண்டித்தார்.
கலந்துரையாடல்களில் தவுலகலவின் அரசியல் மற்றும் தத்துவார்த்த பங்களிப்புகளை நினைவுகூர்ந்த தோழர்கள், மார்க்சிசப் பகுப்பாய்வில் அவரது துல்லியத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர். பிரச்சாரங்களின்போது, வெறுப்பை எதிர்கொண்டாலும், பத்திரிகைகளை விற்பது மட்டுமே பணியல்ல, மாறாக கட்சியின் வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் சர்வதேச அரசியல் நிலைமையையும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொறுமையாக விளக்குவதே பணியாகும் என்று அவர் வலியுறுத்தினார். கட்சிப் பத்திரிகையின் மத்திய பாத்திரத்தை வலியுறுத்துவதற்காக, இஸ்க்ரா பத்திரிகையை “கூட்டுப் பிரச்சாரகர், கூட்டுக் ஆர்ப்பாட்டக்காரர் மற்றும் கூட்டுப் ஒழுங்கமைப்பாளர்” என்று லெனின் வர்ணித்ததை அவர் அடிக்கடி மேற்கோள் காட்டினார். இளம் தோழர்கள் ஆங்கிலம் கற்கவும், மார்க்சிச இலக்கியங்களைப் பரவலாக வாசிக்கவும், அமெரிக்காவில் சோ.ச.க. முன்னோடியான தொழிலாளர் கழகம் வெளியிட்ட புல்லட்டின் பத்திரிகையை வாசிக்கவும் தவுலகல வலியுறுத்தினார்.
தனது கொள்கைரீதியான அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக தவுலகல பல சந்தர்ப்பங்களில் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டார். கல்வியைத் தனியார்மயமாக்குவதற்கான ஐ.தே.க.யின் “வெள்ளை அறிக்கைக்கு” எதிராக பு.க.க. நடத்திய பிரச்சாரத்தின்போது, 1984 இல் அவர் கைது செய்யப்பட்டு 24 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார். கூட்டுறவுத் திணைக்களத்தில் அவர் வகித்த பதவி, பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பறிக்கப்பட்டது. இந்த அரசியல் வேட்டைக்கு எதிராக பு.க.க. நடத்திய பிரச்சாரத்தின் விளைவாக, அரசாங்கம் இறுதியில் அவரை மீண்டும் பணியில் அமர்த்த நிர்ப்பந்திக்கப்பட்டது.
நீண்டகாலமாகச் சீரழிந்து வந்த அதன் முன்னாள் பிரிட்டிஷ் பிரிவான தொழிலாளர் புரட்சிகரக் கட்சியுடன் (WRP), 1985–86 இல் அனைத்துலகக் குழு பிளவுபட்டதைத் தொடர்ந்து, தவுலகலவின் அரசியல் ஈடுபாடு மேலும் ஆழமடைந்தது. பு.க.க.யின் தீவிரமான தத்துவார்த்த மற்றும் அரசியல் பணிகளில் முழுமையாக ஈடுபட்ட அவர், அரசியல் முன்னேற்றங்களை நெருக்கமாகப் பின்தொடர்ந்தார். தொழிலாள வர்க்கத்தினரிடையிலும் இளைஞர்கள் மற்றும் கிராமப்புற வறிய மக்கள் மத்தியிலும் கட்சியின் வேர்களை வலுப்படுத்துவதற்கு தனது தோழர்களுடன் இணைந்து தன்னை அர்ப்பணித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாதப் போர் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், ஐ.தே.க. அரசாங்கம் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டது. 1987 ஜூலையில், ஜனாதிபதி ஜயவர்தன இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் தலையீட்டைக் கோரினார். இது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தினாலும் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச ஆட்சியினாலும் ஆதரிக்கப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு வழிவகுத்தது. புலிகளை நிராயுதபாணியாக்குவதற்கும் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களின் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கும் பல்லாயிரக்கணக்கான “இந்திய அமைதிப்படையினர்” என்று அழைக்கப்பட்ட துருப்புகள் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டனர். அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வந்த சமூக அமைதியின்மையை சமாளிப்பதற்காக இலங்கைத் துருப்புகள் தெற்கில் மீள்நிலைநிறுத்தப்பட்டனர்.
பு.க.க., பாட்டாளி வர்க்க அனைத்துலகவாதத்தின் நிலைப்பாட்டிலிருந்து இந்த உடன்படிக்கையை எதிர்த்ததுடன், இராணுவத் தலையீட்டிற்கு எதிராக இலங்கை மற்றும் இந்திய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்தது. அனைத்துலகக் குழு வெளியிட்ட “இலங்கையின் நிலைமையும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் பணிகளும்” என்ற தலைப்பிலான ஒரு முக்கிய அறிக்கை, ஸ்ரீலங்கா மற்றும் தமிழ் ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசுகளை ஸ்தாபிக்க அழைப்பு விடுத்தது. தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலமாக மட்டுமே நனவாக்க முடியும் என்பதை அது திட்டவட்டமாக வலியுறுத்தியது.
ஜே.வி.பி., சிங்களப் பேரினவாதத்தின் அடிப்படையில் இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக ஒரு பிற்போக்கு தேசியவாதப் பிரச்சாரத்தைத் தொடங்கியது. அந்த உடன்படிக்கை நாட்டின் “பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு” அச்சுறுத்தல் என்று அது கண்டனம் செய்த அதேவேளை, ஐ.தே.க. அரசாங்கத்தினதும் இந்திய அமைதிப்படையினரதும் ஒடுக்குமுறையைப் புறக்கணித்தது. தமிழ் சிறுபான்மையினருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் அதிகாரப் பகிர்வை வழங்குவதை அது நிராகரித்ததுடன், ஒற்றையாட்சி முதலாளித்துவ அரசைப் பாதுகாப்பதற்காக வன்முறையான கிளர்ச்சியையும் தொடங்கியது.
1987 இன் பிற்பகுதியில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உள்ள இளம் சோசலிஸ்டுகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஜே.வி.பி. குண்டர்கள் மரண அச்சுறுத்தல் விடுத்து, வளாகத்தில் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரினர். அச்சுறுத்தலுக்கு உள்ளான இளம் சோசலிஸ்டுகள் தோழர்களைப் பாதுகாப்பதற்காக துணிச்சலான பு.க.க./இளம் சோசலிசஸ்டுகள் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வதில் தவுலகல மத்திய பாத்திரம் வகித்தார். அந்தப் பிரச்சாரத்திற்காக இளைம் சோசலிஸ்டுகள் உறுப்பினர்களை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தவும் தயார்படுத்தவும் அவர் தனது வீட்டில் அவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தினார். அந்தப் பிரச்சாரம் ஜே.வி.பி. பின்வாங்குவதற்கு வெற்றிகரமாக நிர்ப்பந்தித்தது.
ஜே.வி.பி.யின் பாசிசக் குண்டர்களின் நடவடிக்கைகள் பரவலாக இருந்தன. அவை தொழிலாளர்களின் போராட்டங்களை நாசப்படுத்தியதுடன், வெகுஜன எதிர்ப்பைத் தடம்புரளச் செய்து, அதிருப்தியை பேரினவாத இந்திய-விரோத கிளர்ச்சியை நோக்கித் திருப்பின. இது இறுதியில் ஏகாதிபத்தியத்திற்கும் இலங்கை முதலாளித்துவ வர்க்கத்திற்கும் மேலும் வலுச்சேர்த்தது. தொழிற்சங்கவாதிகள் மற்றும் அதன் பிரச்சாரத்தை ஆதரிக்க மறுத்த அரசியல் எதிரிகள் உட்பட, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற வறிய மக்களை ஜே.வி.பி. துப்பாக்கிதாரிகள் படுகொலை செய்தனர். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற வறிய மக்களை ஒடுக்குவதற்காக ஐ.தே.க. அரசாங்கம் நடத்திய கொலைகார பொலிஸ் நடவடிக்கைக்கு சமாந்தரமாக அவர்கள் செயல்பட்டனர்.
ஜே.வி.பி. குண்டர்கள் பு.க.க.யின் மூன்று உறுப்பினர்களைச் சுட்டுக் கொன்றனர்—1988 நவம்பர் 12 அன்று வெலிமடவில் ஆர்.ஏ. பிட்டவெல, 1988 டிசம்பர் 23 அன்று பேராதனையில் பி.எச். குணபால மற்றும் 1989 ஜூன் 23 அன்று சிலாபத்தில் கிரேஷன் கீகியனகே ஆகியோர் கொல்லப்பட்டனர்.
அரசின் மற்றும் ஜே.வி.பி.யின பாசிசப் படைகளிடமிருந்து வந்த கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், தவுலகல கண்டிக் கிளையைத் துணிச்சலுடன் வழிநடத்தினார். அவரது வீடு இளம் கட்சி உறுப்பினர்களுக்கான பாதுகாப்பான தங்குமிடமாகச் செயல்பட்டது. ஜே.வி.பி.யின் உத்தரவுகளை மீறியதற்காக அந்த அமைப்பினால் படுகொலை செய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியரான பி.எச். குணபாலவின் இறுதிச் சடங்கில் பு.க.க.யின் பங்கேற்பை அவர் ஏற்பாடு செய்தார். ஜே.வி.பி. மற்றும் ஐ.தே.க. அரசாங்கம் இரண்டின் கொலைகார நடவடிக்கைகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஐக்கிய முன்னணிக்கான பு.க.க.யின் பிரச்சாரத்தில் தவுலகல முன்னணிப் பாத்திரம் வகித்தார்.
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடியவரான தவுலகல, அவரது நோய் அவரைத் தடுக்கும்வரை கட்சியின் மொழிபெயர்ப்புக் குழுவுக்குப் பொறுப்பாக இருந்தார். 1998 இல் உலக சோசலிச வலைத் தளம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், முக்கியமான ஆவணங்கள் உட்பட நூற்றுக்கணக்கான கட்டுரைகளை சிங்களத்தில் மொழிபெயர்த்தார். அவரது நீண்டகால நோயின் காரணமாக அவரது கைகளையும் விரல்களையும் பயன்படுத்தும் திறனை இழந்தபோது அவர் மிகவும் விரக்தியடைந்தார். ஆயினும், தனது வாழ்வின் இறுதி நாட்கள் வரை உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரைகளைத் தனது மனைவி ஸ்ரீயானியை வாசித்துக் காட்டுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
தவுலகல தனது பாசத்தை அரிதாகவே வெளிப்படுத்தியபோதிலும், ஆழமாக நேசித்தார் என்று ஸ்ரீயானி கூறினார். “அவரது கடினமான வெளித்தோற்றத்திற்குப் பின்னால், அவர் மென்மையான மற்றும் மிகவும் அன்பான மனிதராக இருந்தார்” என்று அவர் கூறினார். பண்டிதர் டபிள்யூ.டி. அமரதேவ பாடிய நித்திய காதலைப் பற்றிய தனது கணவரின் விருப்பமான பாடலை அவர் அன்புடன் நினைவுகூர்ந்தார். அந்தப் பாடல் தங்களுக்காகவே எழுதப்பட்டுப் பாடப்பட்டதாகக் கூறி, தவுலகல அதைப் பலமுறை அவருக்காக முணுமுணுத்துப் பாடுவார்.
இறுதிச் சடங்கில், தவுலகலவின் மகள் விதுரங்கா பேசிய போது, தனது பிள்ளைகள் தவுலகலவை இழந்து தவிப்பதாக கூறினார். அவர் தனது தந்தையை “மாபெரும் மனிதர்” என்று வர்ணித்தார். நினைவுக் கூட்டத்தில் உரையாற்றிய சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் பாணி விஜேசிறிவர்தன, விதுரங்காவுடனான ஒரு உரையாடலை நினைவுகூர்ந்தார். அதில், தனது தந்தையை அர்ப்பணிப்புடன் போராடிய ஒரு கட்சித் தோழராக அவர் வர்ணித்திருந்தார். அவர் தனது சொந்த பிள்ளைகளுக்காக மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
சோசலிச சமத்துவக் கட்சி இந்த நீண்டகால ட்ரொட்ஸ்கிசப் புரட்சியாளருக்கு தனது அஞ்சலியைச் செலுத்துகிறது.
