மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நியூ யோர்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) உறுப்பினருமான ஜோஹ்ரான் மம்தானி, நவம்பர் 4 ஆம் திகதி தேர்தல் இரவில் ஆற்றிய உரையில், தனது வெற்றி ஒரு “மாற்றத்திற்கான தலைமுறைக்கு” வழிவகுப்பதாக அறிவித்தார். “இந்த துணிச்சலான புதிய பாதையை நாம் ஏற்றுக்கொண்டால், தன்னலக்குழு மற்றும் சர்வாதிகாரத்திற்கு நாம் அது விரும்பும் சமாதானத்தை அல்ல, அது அஞ்சும் வலிமையைக் கொண்டு பதிலளிக்க முடியும்” என்று அவர் கூறினார்.
ட்ரம்ப் குறித்து நேரடியாக பேசிய மம்தானி, “ஒரு சர்வாதிகாரியைப் பயமுறுத்த ஒரு வழி இருக்குமேயானால், அது அவர் அதிகாரத்தைக் குவிக்க அனுமதித்த நிலைமைகளை அகற்றுவதன் மூலம் மட்டுமே முடியும்” என்று கூறினார். வெறும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர், மம்தானி வெள்ளை மாளிகையில் இதே “சர்வாதிகாரியை” சந்தித்து, ட்ரம்ப்புடன் ஒரு “கூட்டாண்மைக்கு” உறுதியளித்தார். மம்தானியின் “துணிச்சலான புதிய பாதை” அது துணிச்சலானதோ அல்லது புதியதோ அல்ல. ஆனால், அது அவரை நேரடியாக பாசிச ஜனாதிபதியின் கரங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.
மம்தானியின் வருகையின் உடனடி அரசியல் விளைவு, அவரை பதவிக்கு அழைத்து வந்தவர்களை குழப்புவதாகவும் திசைதிருப்புவதாகவும் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, மம்தானியின் வெற்றிக்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணி ட்ரம்ப் மீது, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், பரவலான மற்றும் ஆழமாக உணரப்பட்ட வெறுப்பாகும். பரந்த அடுக்குகளிடையே, உலக முதலாளித்துவத்தின் நிதியியல் மையம் உட்பட, சோசலிசத்திற்கு கணிசமான ஆதரவு உள்ளது என்ற உண்மையை இது உறுதிப்படுத்தியது. ட்ரம்பை மம்தானி பகிரங்கமாக அரவணைப்பது, உண்மையில், இந்த உணர்வை விரக்தியடையச் செய்யும் நோக்கத்தை கொண்டுள்ளது.
DSA மற்றும் அதன் வெளியீடுகளின், குறிப்பாக ஜாக்கோபின் பத்திரிகையின் பதில் மிகவும் கொடூரமான சிடுமூஞ்சித்தனம் மற்றும் பொய் ஆகும். பென் புர்கிஸின் “ஜோஹ்ரான் மம்தானியுடன் என்ன செய்வது என்று வலதுசாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை” மற்றும் பீட்டர் டிரேயரின் “ஜோஹ்ரான் மம்தானி டொனால்ட் ட்ரம்பை எவ்வாறு கையாள்வது என்று அறிந்திருந்தார்” என்ற இரண்டு கட்டுரைகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் ட்ரம்பிற்கு மரியாதை செலுத்துவதை, மூலோபாய புத்திசாலித்தனத்தின் தாக்குதலாக ஜாக்கோபின் சித்தரிக்கிறது.
ட்ரம்ப் மம்தானியைத் தழுவிக் கொண்டதை விளக்குகையில், பாசிச ஜனாதிபதி “மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவரால் ஈர்க்கப்பட்டதாக” புர்கிஸ் எழுதுகிறார். “நான் நினைத்ததை விட பல விஷயங்களில் தானும் மம்தானியும் உடன்படுவதாக” அவர்களின் சந்திப்புக்குப் பிறகு ட்ரம்ப் குறிப்பிட்டதாக புர்கிஸ் குறிப்பிடுகிறார்.
எவ்வாறெனினும், பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டதைப் போல, இந்த உடன்பாட்டின் உண்மையான அரசியல் உள்ளடக்கத்தை புர்கிஸ் குறிப்பிடவில்லை. இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்கு வைத்த ட்ரம்ப்பின் கூட்டாளியான நியூ யோர்க் பொலிஸ் ஆணையர் ஜெசிகா டிஷை பதவியில் தக்கவைத்துக் கொள்வதற்கான மம்தானியின் முடிவுக்கு ட்ரம்ப் பாராட்டு தெரிவித்ததும்; காஸாவில் ட்ரம்பின் போலி “சமாதான” திட்டத்திற்கு மம்தானியின் ஆதரவும் (அந்த இரண்டு கட்டுரையிலும் இதுபற்றி குறிப்பிடப்படவில்லை); மிக முக்கியமாக, நிர்வாகத்தின் புலம்பெயர்ந்தோர்-விரோத நடவடிக்கைகளை அவர் தழுவிக்கொண்டதும் இதில் அடங்கும். பத்திரிகையாளர் சந்திப்பின் போது ட்ரம்ப், “கொடூரமான மக்களாக இருப்பதால், நாங்கள் அவர்களை வெளியேற்ற விரும்புகிறோம். … அவர் [மம்தானி] என்னை விட அவர்களை வெளியேற்ற விரும்புகிறார்” என்று கூறினார்.
ட்ரம்பின் வெளிப்படையான மனமாற்றத்திற்குக் காரணமான வகையில், புர்கிஸ் பாப் உளவியலை (pop psychology) வழங்குகிறார். ட்ரம்ப், “பாதிக்கப்படக்கூடியவர்களாகத் தோன்றுபவர்களை மிரட்டும் விலங்கு உள்ளுணர்வைக் கொண்டுள்ளார், ஆனால் கவர்ச்சிகரமானவர்களையும் பிரபலமானவர்களையும் புகழ்ந்து தள்ளுகிறார்” என்று புர்கிஸ் கூறுகிறார். மம்தானியை சந்தித்த பிறகு, எப்படிச் செயல்படுவது என்று தெரியாமல் ட்ரம்ப் ஒரு கணம் “மயங்கிப் போய் சிரித்தார்” என்று புர்கிஸ் ஊகிக்கிறார்.
கட்டுரையின் தலைப்பு “ஜோஹ்ரான் மம்தானியை என்ன செய்வது என்று வலதுசாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறுகிறது. உண்மையில், அது முடியும். அது மம்தானியின் பரிதாபகரமான சந்தர்ப்பவாதத்தை, அதன் மதிப்புக்கு ஏற்றவாறு கறக்கிறது.
ட்ரேயர் அதே அடிப்படை ஸ்கிரிப்டைப் பின்பற்றுகிறார். “புத்திசாலித்தனமான, அழகான மற்றும் கவர்ச்சியான” மம்தானி மீது “வசீகரமான தாக்குதலை” மேற்கொண்டதற்காக அவர் பாராட்டுகிறார். குறைந்து வரும் கருத்துக் கணிப்பு எண்ணிக்கைகள் மற்றும் நெருக்கடியின் பிற அறிகுறிகள் காரணமாக, “ட்ரம்ப் இப்போது சுய-பரிதாபத்தில் மூழ்கிக் கொண்டிருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, சில நல்ல புகைப்படங்கள் மற்றும் சில முகஸ்துதி அவருக்கு தேவைப்பட்டது. ட்ரம்பை விட புத்திசாலித்தனமான, மூலோபாய மற்றும் ஒழுக்கமான மம்தானி அவருக்கு இடமளித்தார்” என்று ட்ரேயர் குறிப்பிடுகிறார்.
மம்தானியின் வெற்றி உரையின் மொழியை நன்கு அறிந்திருந்த ட்ரேயர், “திருப்திப்படுத்துதல்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்தார். எப்படியிருந்தாலும், இது ஒரு மோசமான அளவிற்கு கண்டனத்திற்குரிய ஒப்புதலாகும். இதை ஜாக்கோபின் பத்திரிகை, ஒரு அரசியல் நல்லொழுக்கம் போல முன்வைக்கிறது. ட்ரம்பிற்கு முகஸ்துதி செய்யும் புகைப்படங்கள் “தேவைப்பட்டன”, மேலும் மம்தானி “அவரை ஏற்றுக்கொண்டார்” என்பது, வளர்ந்து வரும் நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்ப்பின் நிலைமைகளின் கீழ், மம்தானி ட்ரம்பிற்கு அவர் விரும்பியதை சரியாக வழங்கினார் என்பதற்கான ஒப்புதலாகும்.
எவ்வாறாயினும், மம்தானி-ட்ரம்ப் சந்திப்பு ஒரு திட்டமிட்ட மக்கள் தொடர்பு தந்திரம் அல்ல. இது ஒரு அரசியல் நடவடிக்கையாகும். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து வந்த சில நாட்களில், மம்தானி குழு வெள்ளை மாளிகையை அணுகி இந்த சந்திப்பைக் கோரியது. இது பாசிச ட்ரம்ப் நிர்வாகத்துடன் ஒரு “கூட்டாண்மையை” உருவாக்குவதையும், ஜனநாயக உரிமைகள் மீது போர் தொடுக்கும் ஒரு ஆட்சியை நியாயப்படுத்துவதையும், ட்ரம்ப் ஒருவித “ஜனரஞ்சகவாதியான” நபர், தன்னலக்குழுவின் பிரதிநிதி அல்ல என்ற கட்டுக்கதையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமிட்ட முடிவாகும்.
மம்தானியின் கூற்றுக்களை வேறு எந்த வகையிலும் விளக்க முடியாது. உண்மையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, NBCயின் “Meet the Press” நிகழ்ச்சி நேர்காணலில், ட்ரம்பை அவர் இன்னும் ஒரு “பாசிஸ்ட்” என்று கருதுகிறாரா என்று மம்தானியிடம் கேட்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், “இது நான் கடந்த காலத்தில் கூறிய ஒன்று. இன்று நான் இதைச் சொல்கிறேன், “ட்ரம்ப் உடனான உரையாடலில் எனக்குப் பிடித்தது என்னவென்றால், “நியூ யோர்க் மக்களுக்கு மலிவு விலை வீட்டுவசதி நெருக்கடி குறித்த பகிரப்பட்ட பகுப்பாய்வை வழங்குவது எப்படி இருக்கும் என்பதில் அவர்கள் கவனம் செலுத்த விரும்பினர்” என்று மம்தானி விரைவாகச் சொன்னார். வளர்ந்து வரும் புதிய அரசியல் கூட்டாளிகளுக்கு இடையே ஒரு சிறிய பாசிசம் என்ன?
நியூ யோர்க்கில் அல்லது வேறு எங்கும் “கட்டுப்படியாகக்கூடிய வீட்டுவசதி நெருக்கடி” குறித்து முதலாளித்துவ தன்னலக்குழுவின் பாசிச பிரதிநிதியுடன் “ஜனநாயக சோசலிஸ்ட்” என்று கூறப்படுபவர்கள் என்ன “பகிரப்பட்ட பகுப்பாய்வு” கொண்டிருக்க முடியும்?
இதற்கான விடை, ஜாக்கோபின் பத்திரிகையின் சாய்வு நாற்காலியில் இருந்து செய்யப்படும் உள ரீதியான பகுப்பாய்வில் காணப்படவில்லை. மாறாக, மார்க்சியத்தின் வர்க்கப் பகுப்பாய்வில் காணப்படுகிறது. செல்வத்தின் அடிப்படை மறுபங்கீட்டை ஆழமாக எதிர்க்கும் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவுகளுக்காக DSA பேசுகிறது. இது தன்னலக்குழு மற்றும் அரசு எந்திரத்தில் இருந்து சுயாதீனமாக இல்லை, ஒருபோதும் இருந்ததும் இல்லை. இது, அரசியல் ரீதியாக, ஜனநாயகக் கட்சி, வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை முகமைகளின் ஒரு பிரிவாகவே இருந்து வருகிறது.
உண்மையில், மம்தானி மற்றும் ட்ரம்புடனான அவரது காதல் விழாவைப் பற்றி DSA யில் எழுந்த ஒரு முக்கிய காரணி என்னவென்றால், இந்த அடுக்குகளுக்குள் ட்ரம்ப் அவ்வளவு மோசமானவர் அல்ல என்ற உணர்வு இருக்கிறது. உயர் நடுத்தர வர்க்கத்தின் போலி-இடதுகளுக்கு சிறிது இடமிருந்தால், சர்வாதிகாரம், பாசிசம், இனப்படுகொலை, பாரிய நாடுகடத்தல்கள் எல்லாம் சரியாகிவிடும்.
அதி தீவிர வலதுசாரிகளுடன் இந்த வகையான “இடது” ஒத்துழைப்புக்கு ஒரு முன்னுதாரணமும் உள்ளது. ஆகஸ்ட் 1939 இல், ஸ்டாலினின் சோவியத் யூனியன், மதிப்பிழந்த ஹிட்லர்-ஸ்டாலின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதோடு, நாஜி ஜேர்மனியுடன் ஒரு தற்காலிக “ஆக்கிரமிப்பு அல்லாத” ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டு, மில்லியன் கணக்கான தொழிலாளர்களை திசைதிருப்பி, இரண்டாம் உலகப் போருக்கு வழி வகுக்க உதவியது. இன்றைய மம்தானி மற்றும் ட்ரம்புக்கு இடையிலான கூட்டணி, இதேபோன்ற தர்க்கத்திலிருந்து உருவாகிறது. மேலும் DSA க்குள், குறிப்பாக ஜாக்கோபினுக்குள், ஸ்டாலினிசத்தின் மிகவும் வலுவான செல்வாக்கு உள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு, கிரேக்கத்தில் சிரிசாவின் அனுபவத்தைத் தொடர்ந்து, உலக சோசலிச வலைத் தளம் “போலி இடது என்றால் என்ன?” என்ற கேள்விக்கு பின்வருமாறு பதிலளிக்கிறது:
போலி-இடது, சோசலிசத்துக்கு எதிரானது, வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கிறது, தொழிலாள வர்க்கத்தின் மையப் பாத்திரத்தையும், சமூகத்தின் முற்போக்கான மாற்றத்தில் புரட்சியின் அவசியத்தையும் மறுக்கிறது. இது வர்க்கத்திற்கு மேலாக மக்கள் வாதத்தையும், சுயாதீன அரசியல் அமைப்பு மற்றும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் பாரிய அணிதிரட்டலையும் எதிர்த்து வருகிறது. போலி இடதுகளின் பொருளாதாரத் வேலைத்திட்டம், அதன் அடிப்படைகளில், முதலாளித்துவ சார்பு மற்றும் தேசியவாத வேலைத்திட்டமாகும்.
“போலி-இடது” என்ற வார்த்தையின் பயன்பாடு ஒரு அடைமொழி அல்லது தூக்கி எறியப்பட்ட சொற்றொடர் அல்ல. மாறாக, ஒரு அரசியல் மற்றும் வர்க்க குணாம்சப்படுத்தல் என்பதை மம்தானியின் நடவடிக்கைகள் மீண்டுமொருமுறை நிரூபிக்கின்றன. இந்த சக்திகளில் “இடது” என்று எதுவும் இல்லை.
மம்தானிக்கும் ட்ரம்புக்கும் இடையிலான சந்திப்பானது, சார்லோட்டில் கெஸ்டாபோவின் குடியேற்ற சோதனைகளை மேற்பார்வை செய்தும், காஸா இனப்படுகொலைக்கு தலைமை தாங்கியும், போராட்டங்களை வன்முறையாக ஒடுக்குவதற்கு இராணுவத்தை வழிநடத்த தயாரிப்பு செய்தும், ஜனநாயகக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களை மரணதண்டனைக்கு உட்படுத்துவதாக ட்ரம்ப் அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையிலுமே இடம்பெற்றது. இவை மிகவும் நீண்டகால தாக்கங்களைக் கொண்ட பரந்த குற்றங்களாகும். இதனை செயல்படுத்துபவர்களாக DSA உள்ளனர்.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் பாசிசத்தையும் சர்வாதிகாரத்தையும் உண்மையாக எதிர்க்கும் மற்றும் சோசலிசத்திற்காக போராட விரும்பும் அனைவருக்கும் ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டும்.
மம்தானி பதவியை பொறுப்பேற்பதற்கு முன்பே, ட்ரம்புடன் அவர் நடத்திய சந்திப்பு, அவரை எப்போதும் ஒரு அரசியல் கள்ளத்தனமான அயோக்கியனாக வரையறுக்கும். தேர்தலில் மம்தானியை ஆதரித்த நூறாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள், அவரது பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டவர்கள் மற்றும் அவரது வெற்றியை நம்பிக்கையின் அடையாளமாகக் கருதியவர்கள், இந்தப் பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கான, உண்மையான சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு, ஜனநாயகக் கட்சி மற்றும் போலி-இடதின் திவாலான அரசியலில் ஒரு சமரசமற்ற உடைவு தேவைப்படுகிறது. அவர்களின் மூலோபாயம் சோசலிசத்திற்கு இட்டுச் செல்லாது. மாறாக குழப்பம், விரக்தி மற்றும் காட்டிக்கொடுப்புக்கு இட்டுச் செல்கிறது.
இந்த அனுபவத்தில் இருந்து, லெனின் கூறியது போல், தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களை மையமாகக் கொண்ட வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியையும், புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதையும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பெருந்திரளுக்குள் ஆழமாகத் திருப்புவதே பணியாக இருக்க வேண்டும். இந்தப் போராட்டத்தின் அவசியத்தை உணரும் அனைவரையும், சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து முதலாளித்துவத்தையும், பாசிசத்தையும், போரையும் முடிவுக்கு கொண்டுவர தேவையான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப நாங்கள் வலியுறுத்துகிறோம்.
