அழிவுகரமான "டிட்வா" புயல் இலங்கை முழுவதும் நூற்றுக்கணக்கானவர்களின் மரணத்துடன் பிரமாண்டமான பேரிடரை ஏற்படுத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் கொழும்பில், வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2025 அன்று, மழை வெள்ளத்தில் மூழ்கிய அறையில் தங்கியிருக்கும் ஒரு குடும்பம். [AP Photo/Eranga Jayawardena] [AP Photo/Eranga Jayawardena]

இலங்கையை தற்போது தாக்கி வரும் பயங்கரமான 'டிட்வா' சூறாவளியுடன் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்து, வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் பிற பேரழிவுகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. நவம்பர் 29, குறைந்தபட்சம் 159 பேர் கொல்லப்பட்டதாகவும், 203 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பேரழிவால் இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்தப் பேரழிவு மிகப் பரந்ததாகவும் மிக மோசமானதாகவும் உள்ளது.

வானிலை அவதான நிலையத்தின் கூற்றுப்படி, இந்தப் புயல் 26 ஆம் திகதி தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கையிலும் ஒரு தாழமுக்கமாக உருவானது. இது ஒரு ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி, 28 அன்று டிட்வா சூறாவளியாக தீவிரமடைந்து, இலங்கையைத் தாக்கியது. சமீபத்திய நாட்களில் வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து உட்பட தென்கிழக்கு ஆசியா முழுவதும் இதேபோன்ற புயல்கள் ஒரு பிராந்திய பேரழிவை உருவாக்கியதால் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதோடு மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயரத் தள்ளப்பட்டனர்.

வியாழக்கிழமை முதல், மலையகத்தின் தலைநகரான கண்டி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதுடன், சனிக்கிழமை காலை வரை தொடர்புகள் இல்லை. வெள்ளிக்கிழமை, சூறாவளி போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைத் தாக்கியது.

ஹெட்டிபொல, மஹதோவ, கண்டகெட்டிய, ஹபரண, வேவெஸ்ஸ மற்றும் லூல்கந்துர போன்ற பகுதிகள் ஒவ்வொன்றும் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையைப் பெற்றுள்ளன. 431 மில்லிமீட்டர் அதிகபட்ச மழைப்பொழிவு, கண்டியில், நில்லம்பேயில் பதிவாகியுள்ளது. மழையினால் ஊறிப்போன மலைப்பகுதிகள் நிலைகுலைந்து, நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள அதேநேரம், பிரதான நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன.

பேரழிவின் முழு அளவும் இன்னும் தெரியவில்லை, மரணமடைந்தோரின் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை. 28 ஆம் திகதி நிலவரப்படி, 25 மாவட்டங்களில் உள்ள 285 பிரதேச செயலகப் பகுதிகளில் 43,991 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையைம் தெரிவித்துள்ளது. நாற்பத்திரண்டு வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதுடன் 2,810 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகள் மற்றும் மத ஸ்தானங்கள் உட்பட தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

20 மாவட்டங்களில் உள்ள 93 பிரதேச செயலகப் பிரிவுகளில் பேரிடர் நிலைமைகள் இருப்பதுடன் ஏழு மாவட்டங்களில் உள்ள 41 பிரிவுகளுக்கு சிவப்பு வெளியேற்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. பதுளை, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உட்பட 10 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. நீர்ப்பாசனத் துறையால் நிர்வகிக்கப்படும் 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 42 இல் நீர் வெளியேற்றப்படுவதால், நூற்றுக்கணக்கான தாழ்நில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், மக்களுக்கு செல்வதற்கு பாதுகாப்பான இடங்கள் இல்லாததாலும், எச்சரிக்கைகளை விடுப்பதற்கு முன்பு அரசாங்கம் எதையும் ஏற்பாடு செய்திருக்காததால், இந்த எச்சரிக்கை பயனற்றது.

வெள்ளி நீரால் நிரம்பியுள்ள நுவரெலியா நகரம், 28 நவம்பர் 2025 (Photo: facebook/Danushka Wijekoon) [Photo: Danushka Wijekoon (via Facebook)]

ஏராளமான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே நிரம்பி வழிகின்றன அல்லது ஆபத்தான முறையில் பெருக்கெடுக்க உள்ளதால் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

நிலச்சரிவுகள், மலைச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கை சந்தித்து வரும் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் - 35 க்கும் மேற்பட்டவை - பதிவாகியுள்ளன. பதுளை, வெலிமட, லுனுகல, பசறை, கண்டகெட்டிய, ஊவா பரணகம, சொரணதொட்ட மற்றும் எல்ல ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களில் அநேகமானோர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். அவர்கள் சாதாரண மழைக்கு கூட பாதுகாப்பு அளிக்காத பாழடைந்த லைன் (வரிசை) அறைகளில் வசிக்கின்றனர். 27 அன்று, பதுளையில் ஏற்பட்ட ஒரு பெரிய நிலச்சரிவில் 11 பேர் கொல்லப்பட்டனர், பலரை இன்னும் காணவில்லை.

பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தலை கஹகல தோட்டத்தில் 28 நவம்பர் 2025 அன்று ஏற்பட்ட இந்த மலைச்சரிவினால் தோட்டத் தொழிலாளர் குடும்பமொன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். (Photo: facebook/srilankabreakingnews)

மஹாவலி கங்கை பெருக்கெடுத்து ஓடியதால் மஹியங்கனை மருத்துவமனை பேரழிவிற்கு உள்ளாகி, அதன் கீழ்தளம் ஆறு அடி நீரில் மூழ்கியது. விலையுயர்ந்த உபகரணங்கள் மற்றும் மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற தகவல்கள் பிற பகுதிகளிலிருந்தும் வெளிவருகின்றன.

மத்திய மாகாணத்தின் நவலப்பிட்டியில் நடந்த ஒரு துயரமான சம்பவத்தில், ஒரு பாட்டி, தாய் மற்றும் மூன்று மாத குழந்தையும் தங்கள் வீட்டின் மீது மலைச்சரிவு விழுந்ததில் கொல்லப்பட்டனர். போக்குவரத்துத் தடங்கல்கள் மற்றும் ஆபத்தான நிலப்பரப்பும் மீட்பு முயற்சிகளைத் தடுக்கின்றன.

மத்திய மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் உயிரிழப்புகளுக்கு மேலதிகமாக, தெற்கு மற்றும் ஏனைய மாகாணங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியுள்ளது. நீரில் மூழ்கியுள்ள நகரங்கள், கூரைகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் மற்றும் நீரில் மூழ்கிய வீடுகளில் சிக்கியவர்கள் உதவி கோரும் பயங்கரமான படங்களைக் காட்டும் நூற்றுக்கணக்கான கானொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. காணாமல் போன அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களைத் தேடித் தருமாறு கோரும் வேண்டுகோள்களையும் பலர் பதிவிடுகின்றனர்.

மத்திய ரயில் பாதையின் பல பகுதிகள் நிலச்சரிவுகளால் சேதமடைந்துள்ளதன் விளைவாக 28 அன்று காலை 6 மணி முதல் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் 75 பிரதான வீதிகளில் பயணிக்க முடியாததாகிவிட்டதால், பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் கொழும்பின் புறநகர் பகுதியான கடுவலை நகருக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது, 29 நவம்பர் 2025 [Photo: RJ Prabu (via Facebook)]

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டன்ம்பியின் கூற்றுப்படி, அதிவேக நெடுஞ்சாலைகளும் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்துள்ளன. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் 28 அன்று விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டது. மகாவலி கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால், பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை தாவரவியல் பூங்காவையும் அதிகாரிகள் மூடினர்.

2 – 4 மீட்டர் உயர கடல் அலைகளுடன் மணிக்கு 60–70 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், அது மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் மீன்பிடித்தல் மற்றும் கடற் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மின்சாரம் தடைபட்டுள்ளது. உத்தியோகப்பூர்வ அறிவிப்பின்படி, 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் தடைகள் ஏற்பட்டுள்ளன, அவற்றில் 26,000 மட்டுமே சரிசெய்யப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் உள்ளனர். பாதகமான வானிலை, பழுதுபார்ப்புகளை மிகவும் கடினமாக்கியுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரின் கூற்றுப்படி, தீவின் மின் விநியோகம் 25 முதல் 30 சதவீதம் வரை தடைபட்டுள்ளது.

வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் மின் தடையும் தொலைத்தொடர்புகளையும் கடுமையாக பாதித்துள்ளன. அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை, நுவரெலியா, பசறை, கடுகண்ணாவ மற்றும் வெலிமடை போன்ற பகுதிகளிலும், கண்டி மாவட்டத்தின் பெரும்பகுதியிலும் 24 மணி நேரத்திற்கும் மேலாக தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

பல முக்கிய விநியோக நிலையங்களில் ஏற்படும் இடையூறுகள் சுத்தமான குடிநீர் விநியோகத்தில் கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் எச்சரித்தார்.

மேலும் 28 அன்று, மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ஜனாதிபதி 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினரை அனுப்பியுள்ளார். நாடு முழுவதும் உள்ள சாதாரண மக்களும் தங்களால் இயன்ற வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருகின்றனர்.

நேற்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக, பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, மின்சாரம், சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் அனைத்து வீதி மற்றும் ரயில் பராமரிப்பு பணிகள் போன்ற பல சேவைகளை அத்தியாவசிய சேவைகள் விதிமுறைகளின் கீழ் கொண்டு வந்தார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக கொடூரமான அவசரகால நிலையை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்துள்ளனர். 28 ஆம் திகதி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட உறுப்பினர் ஜே.சி. அலவதுவல, பாராளுமன்றத்தில் இந்த அழைப்பை விடுத்த அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் அதற்கு ஆதரவு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இந்த அழைப்பில் இணைந்து கொண்டார்.

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள் மீதான உண்மையான அக்கறையால் இந்த அழைப்புகள் விடுக்கப்படவில்லை, மாறாக சமூக எழுச்சி குறித்த அச்சத்தாலேயே இந்த அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பேரழிவுக்குப் பிறகு, அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் உடனடியாக உயரக்கூடும் என்று அரசாங்க அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

திசாநாயக இன்னும் அவசரகால நிலையை அறிவிக்கவில்லை என்றாலும், இடம்பெயர்ந்த மக்களுக்காக இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் முகாம்களை அமைக்க அவர் முடிவு செய்துள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் நாட்களில், காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய உணவுகளின் விலைகள் உயர்ந்து, ஏற்கனவே போராடி வரும் மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். உணவுக் கலவரங்கள் உண்மையில் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகரிக்கின்றது. 600,000 ஏக்கர் நெல் மற்றும் காய்கறி விவசாய நிலங்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடு வெளிப்படுத்தியுள்ளது.

அரசாங்கம் 1.2 பில்லியன் ரூபாய் பேரிடர் நிவாரணத்தை அறிவித்துள்ளது - இந்தப் பேரழிவை எதிர்கொள்வதற்கு இந்தத் தொகை மிகவும் போதாது. 27 அன்று, திசாநாயக்க பேரிடரில் கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

அரசாங்கத்தின் உள்கட்டமைப்பால் அத்தகைய பேரழிவை நிர்வகிக்க இயலாததோடு அதன் நிவாரண நடவடிக்கைகள் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. இந்தக் கோபத்தைப் படம்பிடித்துள்ள 'தசத' யூடியூப் வெளியிடப்பட்டுள்ள ஒரு கானொளி, வெள்ளத்தில் மூழ்கிய கதுருவெல பகுதியில் வசிப்பவர்கள் எந்த உண்மையான உதவியையும் வழங்கத் தவறியதற்காக அரசாங்கத்தைக் கண்டிப்பதைக் காட்டுகிறது.

உலகெங்கிலும் உள்ள தங்கள் சகாக்களைப் போலவே, இலங்கையின் முதலாளித்துவ ஆட்சியாளர்களும் உயிர்களைப் பாதுகாக்கத் தேவையான உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய மறுத்துவிட்டனர். தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் 'பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை சமநிலைப்படுத்துவதற்காக' கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பொய்கள் என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு முதலாளித்துவ கட்டமைப்பின் கீழ், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு அத்தகைய தேசிய தீர்வுகள் எதுவும் கிடையாது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்பு கொண்டுள்ள ஜே.வி.பி./தே.ம.ச. மக்களிடமிருந்து பெறப்படும் வரிப் பணத்தில் ஒரு சதம் கூட மனித உயிர்களைப் பாதுகாக்க -சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும்- செலவிடுவதில்லை.

அதனால்தான் சாதாரண மழைப்பொழிவு கூட ஆண்டுதோறும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளங்களால் ஏற்படும் பேரழிவுகளுக்கும் அனர்த்தங்களுக்கும் வழிவகுக்கிறது. அரசாங்கம் சுற்றுச்சூழலை ஒழுங்கற்ற நிலைக்குள் தள்ளிவிட்டு, பேரழிவுகளின் போது மக்களை அவர்களின் தலைவிதியிடம் ஒப்படைத்துவிட்டதோடு, இயற்கை பேரழிவுகளைத் தாங்கும் திறன் கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆபத்து வலயங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றவோ அல்லது நீண்டகால பேரிடர் தயார்நிலைக்குத் தேவையான நிதியை ஒதுக்கவோ எந்த அக்கறையான திட்டங்களும் இல்லை.

மனித நடவடிக்கைகளால் - குறிப்பாக முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள பெரிய தொழில்துறைகளால் புதைபடிவ எரிபொருட்களை கட்டுப்பாடில்லாமல் எரிப்பதால் - பெருமளவில் உந்தப்படும் புவி வெப்பமடைதல், பாரதூரமான வானிலை நிகழ்வுகளின் எழுச்சியைத் தூண்டுகிறது. பெரிய அளவிலான காடழிப்பு, தொழில்துறை விவசாயம் மற்றும் நகரமயமாக்கலும் பிரச்சினையை தீவிரப்படுத்தி, வளிமண்டலத்தில் வெப்பத்தை தக்க வைக்கும் வாயுக்களை வெளியிடுகின்றன.

இவை பாரம்பரிய அர்த்தத்தில் 'இயற்கை' பேரழிவுகள் அல்ல, மாறாக, மனித தேவைக்காக அன்றி, இலாபத்தால் இயக்கப்படும் முதலாளித்துவ அமைப்பின் கணிக்கக்கூடிய மற்றும் தடுக்கக்கூடிய துணை தயாரிப்புகள் ஆகும். இதற்கான ஒரே தீர்வு, இந்த சமூக அமைப்பை, உயிர்களையும், கிரகத்தையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள ஒரு பகுத்தறிவு மிக்க, சோசலிச சமூகத்தால் பதிலீடு செய்வதே ஆகும்.

Loading