மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவரும் அசுத்தமான பாசிச சாக்கடை, இந்த வாரம் ஒரு புதிய கட்டத்தை எட்டியது. கடந்த செவ்வாயன்று, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சோமாலியாவைச் சேர்ந்த அனைத்து மக்களையும் குறிவைத்து ஒரு இனவெறித் தாக்குதலைத் கட்டவிழ்த்துவிட்டார். பதவியில் இருக்கும் ஒரு அமெரிக்க ஜனாதிபதியால் இதுவரை பகிரங்கமாக உச்சரிக்கப்படாத மொழியை ட்ரம்ப் பயன்படுத்தினார்.
புலம்பெயர்ந்த மக்களை, சோமாலியா உட்பட 19 நாடுகளுக்கு பெருமளவில் நாடுகடத்துவதை ஆதரித்தும், புகலிடம் மற்றும் அகதிகளின் விண்ணப்பங்களைத் தடுப்பதை ஆதரித்தும் பேசிய ட்ரம்ப், “நாம் ஒரு வழியிலோ அல்லது வேறு வழியிலோ செல்லலாம், எமது நாட்டிற்குள் குப்பைகளை தொடர்ந்து கொண்டு சென்று, நாம் தவறான வழியில் செல்லப் போகிறோம்” என்று குறிப்பிட்டார்.
சோமாலியாவைச் சேர்ந்த அனைத்து மக்களையும் “குப்பை” என்று குறிப்பிட்ட ட்ரம்ப், மினசோட்டா காங்கிரஸ் பிரதிநிதி பக்கம் திரும்பினார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணியும், காங்கிரசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சோமாலியா அமெரிக்கருமான இல்ஹான் உமரைப்பற்றி குறிப்பிடும்போது, “அவள் ஒரு குப்பை. அவளுடைய நண்பர்களும் குப்பைகள். இவர்கள் வேலை செய்பவர்கள் அல்ல. போகலாம் வாருங்கள், இந்த இடத்தை சிறப்பானதாக ஆக்குவோம் என்று இவர்கள் சொல்பவர்களும் அல்ல” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை ட்ரம்ப் இதனை இரட்டிப்பாகினார். மினியாபோலிஸ் நகரத்தின் மேயர் ஜேக்கப் ஃப்ரே, நகரத்திலுள்ள சோமாலிய சமூகத்தின் பெருமையை வெளிப்படுத்தியதைப் பற்றி ஒரு நிருபரின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “நல்லது, அவர் ஒரு முட்டாள். மிகப்பெரியளவில் சோமாலியர்கள் இருப்பதில் நான் பெருமைப்பட மாட்டேன். அவர்களின் தேசத்தைப் பாருங்கள், அவர்களின் தேசம் எவ்வளவு மோசமானது என்று பாருங்கள். இது ஒரு தேசமே இல்லை, ஒருவரையொருவர் கொன்று திரியும் மக்கள் மட்டுமே” என்று குறிப்பிட்டார்.
இந்த வார்த்தைகள், நாஜிக்கள் மற்றும் அவர்களின் வெளியீடான டெர் ஸ்டுர்மர் பத்திரிகையின் மொழியாகும். இது, முழு மக்களையும், குறிப்பாக யூதர்களை, “ஒட்டுண்ணிகள்”, “ஜந்துக்கள்” மற்றும் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டிய அல்லது அழித்தொழிக்கப்பட வேண்டிய துணை மனிதர்கள் என்று சித்தரித்தது.
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், ட்ரம்பின் எரிச்சலூட்டும் அறிக்கைகளைக் பார்த்து, உண்மையான “குப்பை” வெள்ளை மாளிகைக்குள்தான் இருக்கிறது என்ற பொருத்தமான முடிவுக்கு வருவார்கள். ரியல் எஸ்டேட் மோசடியாளரும், இனவெறிப் பேச்சாளரும், ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நீண்டகால கூட்டாளியுமான ட்ரம்ப், அமெரிக்க முதலாளித்துவத்தின் நாற்றம்பிடித்த அழுகிய உருவகமாக இருக்கிறார்.
அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் வார இறுதியில், ட்ரம்ப் கூறிய இனவெறி கருத்துக்களைத் தொடர்ந்து, அவரது சமீபத்திய அறிக்கைகள் வெளியாகியுள்ளன. மினியாபோலிஸில் உள்ள சோமாலியர்கள் COVID-19 நலத் திட்டங்கள் தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்தக் கருத்துகள் தூண்டப்பட்டன. மோசடியில் சம்பந்தப்பட்ட 86 பேரில், பெரும்பான்மையானவர்கள் பிறப்பால் அல்லது இயற்கையாகவே அமெரிக்க குடிமக்கள் என்பதை டைம்ஸ் ஒப்புக்கொள்கிறது.
மினசோட்டா மற்றும் நாடு முழுவதிலும் உள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும் அனைத்து வெள்ளை அல்லாத மக்களுக்கும் எதிராக, ஒரு இனப்படுகொலை போன்ற சூழ்நிலையைத் தூண்டும் முயற்சியில் அனைத்து சோமாலியர்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் அறிக்கையை ட்ரம்ப் பற்றிக் கொண்டார். கடந்த செவ்வாயன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதிற்கு, மினியாபோலிஸ்-செயிண்ட் பால், மினசோட்டா மற்றும் நியூ ஓர்லியன்ஸ், லூசியானா ஆகிய இடங்களுக்கு குடியேற்ற கெஸ்டபோ முகவர்கள் நிலைநிறுத்தப்படுவதை ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ட்ரம்பின் போர்வெறி, ஊழல் மற்றும் சுய-நலம் ஆகியவற்றின் காரணமாக அவரது செல்வாக்கு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமைகளின் கீழ், அவரது இனவாத தாக்குதல்கள், வோல் ஸ்ட்ரீட் மற்றும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் பில்லியனர் தன்னலக்குழுக்களில் இருந்து சமூக கோபத்தை திசைதிருப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவரது அசிங்கமான பேச்சுவழக்கு பாசிச பரபரப்பு கிளர்ச்சியாகும். பல தசாப்தங்களாக தொழில்மயமாக்கல் மற்றும் சிக்கன நடவடிக்கைகளால் தோற்றுவிக்கப்பட்ட சமூகச் சீரழிவுக்கு அவர் புலம்பெயர்ந்தோரைக் குற்றம் சாட்டுகிறார். கொலராடோவில் உள்ள ஆரோராவை வெனிசுலா கும்பல்கள் கைப்பற்றியுள்ளதாகவும், ஓஹியோவின் ஸ்பிரிங்ஃபீல்டில் ஹைட்டியிலிருந்து குடியேறியவர்கள் “செல்லப்பிராணிகளை சாப்பிடுகிறார்கள்” என்றும், அவதூறு செய்வது போன்ற பிரச்சார பாதையில், முந்தைய பொய்களை அவர் பின்பற்றுகிறார்.
இந்த இனவாத தாக்குதல்கள் சம்பந்தமாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரந்த வெறுப்பு நிலவுகிறது. பாசிஸ்டுகளும் வெளிப்படையான இனவாதிகளும் மட்டுமே உற்சாகத்துடன் இதற்கு பதிலளிக்கின்றனர். அவரது டிசம்பர் 2 நிகழ்ச்சியில், ட்ரம்பின் கருத்துக்களை “காவியம்” என்று பாராட்டிய நவ-நாஜிக்களின் தலைவர் நிக் பியூன்டெஸ், “அவர் பேசுகிறார், நம்மைப் போலவே ஒலிக்கிறார். அவரைப் போல யாரும் செய்வதில்லை. நாம் எல்லோரும் என்ன நினைக்கிறோமோ அதையே அவர் சொல்கிறார்” என்று குறிப்பிட்டார். இதுதான் துல்லியமாக ட்ரம்ப் திரட்டி வைத்துள்ள பார்வையாளர்கள் ஆகும்.
ஒரு பில்லியனரும், டுவிட்டர் X இன் உரிமையாளரும், உலகின் தனித்த, மிகப் பெரிய பணக்காரருமான எலோன் மஸ்க், நவ-நாஜிக் கணக்குகளில் இருந்து பாசிச மீம்ஸை ஊக்குவிக்க தனது தளத்தைப் பயன்படுத்தி வருகிறார். ஒரு பதிவில், “மினசோட்டாவில் ஒபாமா கைவிட்ட 80,000ம் சோமாலியர்களால் ஒமர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக்” கூறுவதை அவர் ஊக்குவித்தார். மற்றொரு பதிவு, வெள்ளையர்கள் “அழிவின் விளிம்பில்” இருப்பதாக அறிவித்து, “பெரிய மாற்று” சதிக் கோட்பாட்டை ஊக்குவிக்கிறது. மினசோட்டாவிலுள்ள ஜனநாயகக் கட்சியினர் ஏற்கனவே ட்ரம்ப்பின் ஆதரவாளர்களால் படுகொலைக்கு இலக்காகியுள்ள சூழ்நிலையில், ஜனாதிபதியின் வாய்வீச்சும், எலோன் மஸ்க்கின் பிரச்சாரமும் அதிதீவிர வலதுசாரிகளால் அரசியல் வன்முறையை நியாயப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த தாக்குதலை உருவாக்குகின்றன.
சோமாலியா, ஒரு நீண்ட மற்றும் வளமான வரலாற்றைக் கொண்ட ஒரு நாடு என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அதன் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். சோமாலியாவின் தற்போதைய நெருக்கடி, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிராந்தியத்தை துண்டுபோட்ட பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஏகாதிபத்தியங்கள், பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பல தசாப்த கால காலனித்துவ கொள்ளையடிப்பின் விளைவாக ஏற்பட்டது.
1992 இல் கிளிண்டனின் மேற்கொண்ட படையெடுப்பு, புஷ் மற்றும் ஒபாமாவின் கீழ் டிரோன் படுகொலை தாக்குதல்கள், அமெரிக்க ஆதரவிலான படைகளின் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள், மற்றும் ட்ரம்பின் முதல் பதவிக்காலம் மற்றும் பைடெனின் நிர்வாகத்தின் போது வான்வழித் தாக்குதல்கள் போன்ற தொடர்ச்சியான அமெரிக்க இராணுவத் தலையீடுகளால் சோமாலியா சீரழிக்கப்பட்டுள்ளது. இந்த தலையீடுகள் நாட்டின் உள்கட்டமைப்பை அழித்தன, மில்லியன் கணக்கானவர்களை இடம்பெயர்த்தன மற்றும் அகதிகளை வெளியேற தூண்டும் நிலைமைகளை உருவாக்கின.
உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டதைப் போல, ட்ரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தின் ஏடன் தோட்டத்தில் ஒரு தலையீட்டாளர் அல்ல. அடிப்படையில், ஒரு சமூக வர்க்கத்தின், அதாவது முதலாளித்துவ தன்னலக்குழுவின் பிரதிநிதியாக அவர் பேசுகிறார்.
வெள்ளை மாளிகையிலிருந்து வெளிப்படும் அப்பட்டமான பாசிசத் தூண்டுதலை எதிர்கொண்டுள்ள ஜனநாயகக் கட்சி, உண்மையான எதிர்ப்பை வழங்கவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப்புக்கு உதவியுள்ளனர். மிக சமீபத்தில் ட்ரம்பின் நிபந்தனைகளின் பேரில் அரசாங்க பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் உதவியுள்ளனர். மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ், “குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடுப்பதை நாங்கள் ஆதரித்து வரவேற்கிறோம். ஆனால், ஒரு மக்கள் தொடர்பு தந்திரத்தை மேற்கொள்வதும், புலம்பெயர்ந்தோரை கண்மூடித்தனமாக குறிவைப்பதும் ஒரு பிரச்சினைக்கு உண்மையான தீர்வாகாது” என்று ட்ரம்பின் குடியேற்ற சோதனைகளுக்கு சமூக ஊடகங்களில் எழுதுவதன் மூலம் பதிலளித்தார்.
சமீபத்தில் நியூ யோர்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சோஹ்ரான் மம்தானியை ஆதரித்த பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மை தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், ட்ரம்புக்கு எதிரான பதவி நீக்கக் கோரிக்கைகளை முன்வைக்க அப்பட்டமாக மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக, வெனிசுலா கடற்கரையில் படகுகளை குறிவைத்து நடத்தப்பட்ட கொலைகாரத் தாக்குதல்கள் குறித்து “இரு கட்சி” விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். “மேசையில் இருப்பது ஒரு அர்த்தமுள்ள விசாரணை, இது இரு கட்சி சார்ந்ததாக இருக்கும் என்று நாங்கள் நம்பலாம்,” என்று அவர் கூறினார்.
அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் ஒரு அங்கத்தவரான மம்தானி வெள்ளை மாளிகைக்கு புனித யாத்திரை மேற்கொண்டு பாசிச நிர்வாகத்துடன் “கூட்டாண்மையுடன்” வேலை செய்வதாக சூளுரைத்த இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்திற்குள், ட்ரம்பின் இந்த வசைபாடல்கள் வந்துள்ளன. புன்னகைக்கும் கைகுலுக்கலுக்கும் இடையே, இந்த ஜோடி புகைப்படங்களை எடுத்து, நியூ யோர்க் நகரத்திற்கான அவர்களின் பகிரப்பட்ட பார்வையில் இணைந்து கொண்டது.
ஜனநாயகக் கட்சியின் முக்கிய கவலை, மம்தானி உட்பட, கீழிருந்து வெடித்தெழுந்து வரும் சமூக சீற்றத்தை இட்டேயாகும். தொழிலாள வர்க்கம் தாங்க முடியாத சமத்துவமின்மை, கடன் மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவற்றுக்கு முகங்கொடுக்கிறது. தனியார் துறை முதலாளிகள் நவம்பரில் 32,000 வேலைகளை வெட்டியதாக ஊதிய நிறுவனமான ADP புதனன்று தெரிவித்துள்ளது. டெட்ராய்டில், தொழிற்சாலைக்கு தேவைப்படும்போது அழைக்கப்படும் 1,100 க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிரந்தர பணிநீக்கங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
அனைத்திற்கும் மேலாக, புலம்பெயர்ந்தோர் மீதான ட்ரம்பின் தாக்குதல்கள் ஒரு சர்வதேச நிகழ்வுப்போக்கின் வெளிப்பாடாகும். நாஜிக்களின் கீழ் முதலில் தற்காப்பு கோட்டையாக இருந்த ஐரோப்பிய கோட்டை, 1990களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவடைந்து வரும் எல்லை ஆட்சியை விவரிக்க மீண்டும் உருவாக்கப்பட்டது. இதில், தொலைதூர தடுப்பு மையங்கள் மற்றும் மத்தியதரைக் கடலில் பல்லாயிரக்கணக்கான அகதிகளை மூழ்கடித்த குற்றவியல் “திருப்பி அனுப்புதல்” நடவடிக்கைகளும் அடங்கும். அமெரிக்காவைப் போலவே, ஐரோப்பாவிலும் உள்ள ஆளும் வர்க்கம், முதலாளித்துவ நெருக்கடிக்கு, ஒடுக்குமுறை, புலம்பெயர்ந்தோர்-விரோத பேரினவாதம் மற்றும் பாசிசத்தின் சித்தாந்த மற்றும் அரசியல் அழுக்கை மீண்டும் தோண்டியெடுத்து பதிலளித்து வருகிறது.
ட்ரம்பின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் பலவீனத்தின் அறிகுறியே தவிர வலிமையின் அறிகுறி அல்ல. புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் பாரிய சீற்றத்தைத் தூண்டிவிடுகின்றன. கடந்த மாதம் வட கரோலினாவில் 56,000 க்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையினரின் (ICE) தேடுதல் சோதனைகளுக்கு எதிராக வெளிநடப்பு செய்தனர். சிக்காகோ மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் முழுவதிலும் உள்ள சுற்றுப்புறங்களில், தொழிலாளர்களும் மாணவர்களும் ICE நடவடிக்கைகளைத் தடுக்கவும், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களைப் பாதுகாக்கவும் அணிதிரண்டனர்.
அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களுக்கு முன்னால் உள்ள பணி, ஜனநாயகக் கட்சியினரிடம் மன்றாடுவதோ அல்லது “இயல்பு நிலை” திரும்பும் என்ற நம்பிக்கையோ அல்ல. முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் இரு பிரிவுகளையும் நிராகரித்து, ஒட்டுமொத்த சுரண்டல் மற்றும் போர் அமைப்புமுறைக்கு எதிராக ஒரு புரட்சிகர போராட்டத்திற்கு தயாரிப்பு செய்து, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். இதுதான், சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளும் முன்வைக்கும் முன்னோக்காகும்.
தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச சக்தியாகும், இது எல்லைகள், மொழிகள் மற்றும் தேசிய இனங்களைக் கடந்து பகிரப்பட்ட நலன்களால் பிணைக்கப்பட்டுள்ளது. பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தன்னலக்குழுவின் பிடியை உடைத்து, ஒரு ஜனநாயக மற்றும் சமத்துவ அடித்தளத்தின் மீது சமூகத்தை மீளக் கட்டியெழுப்பும் திறன் கொண்ட இந்த புவியின் மிக சக்திவாய்ந்த சமூக சக்தியாக தொழிலாள வர்க்கம் உள்ளது. ஆளும் உயரடுக்கு இந்த சக்தியைக் கண்டு பீதியடைந்துள்ளது. இதை உணர்வதற்கு, தொழிலாள வர்க்கம் ஒரு நனவான, சர்வதேசிய மற்றும் சோசலிச மூலோபாயத்துடன் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.
