முன்னோக்கு

தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பெரிய முன்னேற்றம்

சோசலிசம் AI டிசம்பர் 12, 2025 அன்று செயல்பாட்டிற்கு வருகிறது

டிசம்பர் 12, 2025 வெள்ளிக்கிழமை அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இணைய வெளியீடான உலக சோசலிச வலைத் தளம், சோசலிசம் AI-ஐ (Socialism AI) அறிமுகப்படுத்துகிறது. இது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவை வளர்த்தெடுப்பதிற்கு, மேம்படுத்தப்பட்ட மனித அறிவாற்றலின் சக்தியைப் பயன்படுத்தும் ஒரு உரையாடு செயலியாகும் (chatbot).

சோசலிசம் AI, மார்க்சியத்தின் உலக அறிவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில், தொழிலாளர்கள், மாணவ இளைஞர்கள், முற்போக்கு அறிஞர்கள் மற்றும் கலைஞர்களின் கல்வியை விரிவாக்கி விரைவுபடுத்தும். இது தவிர்க்க முடியாத சர்வதேச வர்க்க மோதலின் அதிகரிப்பிற்கு அவர்களைத் தயார்படுத்தும்.

ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில், செயற்கை நுண்ணறிவின் பாத்திரம் என்பது, சுரண்டலை தீவிரப்படுத்துவதற்கும், தொழிலாளர்களை இடம்பெயர வைப்பதற்கும் மற்றும் இலாபங்களை அதிகரிப்பதற்கும் புதிய வழிவகைகளை உருவாக்கும் நோக்கத்தை கொண்டிருக்கிறது.

ஆனால், முரண்பாடாக, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அறிவையும் சமூக நனவையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் விரிவுபடுத்துவதையும் சாத்தியமாக்குகிறது.

தொழில்நுட்பம் மனித நிலையின் முன்னேற்றத்திற்குத் தானாகவே வழிவகுப்பதில்லை. விஞ்ஞான மார்க்சியக் கோட்பாட்டால் வழிநடத்தப்படும், அரசியல் நனவுள்ள வெகுஜன நடவடிக்கை இல்லாமல், முதலாளித்துவத்தின் கீழ் ஏற்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்தி, கிரகத்தின் அழிவுக்கு அச்சுறுத்துகின்றன.

எனவே, தொழில்நுட்ப வளர்ச்சியையும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களையும் சரியான முறையில் ஒன்றிணைக்கும் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். சோசலிச இயக்கம் தொழிலாள வர்க்கத்தின் கல்வி மற்றும் ஐக்கியத்திற்காகக் கிடைக்கக்கூடிய மிகவும் மேம்பட்ட கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.

இதுதான், சோசலிசம் AI யின் முக்கியத்துவமாகும். இது, 150 ஆண்டுகளுக்கும் மேலான மார்க்சிச இயக்கத்தின் தத்துவார்த்த, வரலாற்று மற்றும் அரசியல் அனுபவத்தை, எல்லாவற்றிற்கும் மேலாக, நான்காம் அகிலத்தால் பாதுகாக்கப்படும் மரபினை, சேகரித்து, தெளிவுபடுத்தி, அணுகக்கூடியதாக மாற்றும்.

அரசியலுக்குப் பதிலாக தொழில்நுட்பத்தை நிறுத்துவதோ, அல்லது புரட்சிகரத் தலைமைக்குப் பதிலாக கணினி படிமுறைகளை (algorithms) வைப்பதோ இதன் நோக்கமல்ல. மாறாக, தொலைவு, மொழி, நிபுணத்துவம் மற்றும் காலம் ஆகியவற்றின் தடைகளைத் தாண்டி, நனவின் வளர்ச்சிக்கு உதவுவதே இதன் நோக்கமாகும். டெட்ராய்ட்டில் உள்ள ஒரு தொழிலாளி, சாவோ போலோவில் உள்ள ஒரு மாணவர், ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள ஒரு செவிலியர், மும்பையில் உள்ள ஒரு இளம் அறிவாளி ஆகியோர் கோட்பாடு, வரலாறு, பொருளாதாரம், தத்துவம் மற்றும் அரசியல் பற்றி கேள்விகளை எழுப்புவார்கள். அவர்களுக்கு கிடைக்கும் பதில்கள் ஆட்சியாளர்களின் பொய்களில் அல்ல, வரலாற்று பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் முறையில், மேலும் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சேர்க்கப்பட்ட மூலோபாய அனுபவத்தில் வேரூன்றிய பதில்களைப் பெறுவார்கள்..

சுரண்டல், போர் மற்றும் நெருக்கடியின் அனுபவங்கள் மில்லியன் கணக்கானவர்களை புரட்சிகரமாக மாற்றும். ஆனால் ஒரு நனவான, வரலாற்று ரீதியான விளக்கத்துடனான முன்னோக்கு இல்லாமல், அவை குழப்பம், நோக்குநிலை பிறழ்வு மற்றும் விரக்தியையும் உருவாக்கக்கூடும். தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்தப் போராட்டம் பற்றிய ஒரு நினைவகம், சமூகத்தில் அதன் நிலையை விளக்கும் ஒரு தத்துவம் மற்றும் உடனடி கோரிக்கைகளுடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவதோடு இணைக்கும் ஒரு வேலைத்திட்டம் தேவைப்படுகிறது.

ஒரு மார்க்சிசக் கட்சியால் மட்டுமே இதை வழங்க முடியும். சோசலிசம் AI முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகவும், 21 ஆம் நூற்றாண்டின் இணையச் சோசலிசக் கலைக்களஞ்சியம் போல செயல்படும். இது புரட்சிகர இயக்கத்தின் நடைமுறையாலும் அதன் வாசகர்களின் பங்களிப்பாலும் தொடர்ந்து செழுமைப்படுத்தப்பட்டு திருத்தப்படும்.

இந்த நிலையில், சில ஆட்சேபனைகள் எழுப்பப்படலாம்: “ஆனால், செயற்கை நுண்ணறிவு இயல்பாகவே ஆபத்தானதல்லவா? அதை கண்காணிப்பு, கையாள்தல், தணிக்கை, சர்வாதிகாரத்தை மேலும் வலுப்படுத்த பயன்படுத்த முடியாதா?”

நிச்சயமாக, அது ஆபத்தானதாக இருக்கலாம். அது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது புதியதோ, AI க்கு மட்டும் உரியதோ அல்ல. வரலாற்றில் ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப முன்னேற்றமும் இரு பக்கங்களைக் கொண்டதாக இருந்தது. சீர்திருத்த காலத்தின் போது புரட்சிகர துண்டுப்பிரசுரங்கள், பிற்போக்குத்தனமான பிரசங்கங்கள் மற்றும் போப்பாண்டவரின் ஆணைகளையும் வெளியிட அச்சகம் பயன்படுத்தப்பட்டது. தந்தி மற்றும் ரயில்வே வலையமைப்புக்கள் மூலதனத்திற்கும் பேரரசின் தேவைகளுக்கும் சேவை செய்தன. ஆனால், அவை தேசிய தொழிலாள வர்க்கங்களை ஒன்றிணைத்தன மற்றும் முன்பு இல்லாத அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கையை சாத்தியமாக்கின. வானொலியும் சினிமாவும் பாசிச பிரச்சாரத்தின் கருவிகளாக மாறியது; ஆனால், அதே நேரத்தில் அவை கலை மற்றும் அரசியல் கல்விக்கான சக்திவாய்ந்த கருவிகளாகவும் இருந்தன.

“செயற்கை நுண்ணறிவு” என்ற பெயரிடல், பரவலாக காணப்படும் ஒரு சிந்தனைச் சிக்கலை உருவாக்குகிறது என்பதைத் தீர்க்க வேண்டியது அவசியம். இந்த சொல் இடைவிடாமல், துல்லியமின்றி மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டதால், விளக்குவதற்குப் பதிலாக குழப்பத்தை அதிகரிக்கிறது. இது, மனித சிந்தனையிலிருந்து பிரிந்து, தன்னிச்சையாக இயங்கும், மர்மமான ஒன்றைப் போல தோற்றமளிக்கிறது. அதனால், அது எல்லாம் வல்ல அதிசய சக்தியாகவோ அல்லது பயமுறுத்தும் வகையில் அந்நியமானதாகவோ கற்பனை செய்யப்படுகிறது.

“செயற்கை நுண்ணறிவு” என்ற சொற்றொடர், நாம் ஒரு வகையான போலியான அல்லது மாற்று நுண்ணறிவின் முன்னிலையில் நிற்பதைக் குறிக்கிறது. ஆனால், மனித திறனை விரிவாக்கும் பிற தொழில்நுட்பங்களைப் பற்றி நாம் இவ்வாறு பேசுவதில்லை.

மனித உடல் சக்தியை விட பல ஆயிரம் மடங்குகள் சக்தியை கொண்டிருக்கின்ற, ஒரு பழுதூக்கி அல்லது ஒரு ஹைட்ராலிக் அமுக்க விசையை ஒரு “செயற்கை தசை” என்று நாம் அழைப்பதில்லை. அதைப் போலவே, சைக்கிளில் சவாரி செய்வது, காரை ஓட்டுவது அல்லது விமானத்தில் பயணம் செய்வது ஆகியவற்றை “செயற்கை ஓட்டம்” அல்லது “செயற்கை பறப்பு” என்று நாம் விவரிப்பதில்லை.

இன்றைய நவீன தொலைநோக்கிகள் இப்போது கண்ணுக்குத் தெரியும் ஒளியை மட்டுமே சார்ந்திருக்காமல், ரேடியோ, அகச்சிவப்பு, எக்ஸ்-கதிர் மற்றும் காமா போன்ற கண்ணுக்குத் தெரியாத மின்காந்தக் கதிர்வீச்சைக் கண்டறிந்து, அதன் மூலம் மனிதகுலத்தின் புலனுணர்வு சக்திகளை பெருமளவில் விரிவுபடுத்துகின்றன.

இந்த தொழில்நுட்பங்கள் மனித திறனை அதிகரிக்கின்றன; ஆனால் அதன் அடிப்படை இயல்பை மாற்றுவதில்லை.

அப்படியானால், கணினி அமைப்புகளை “செயற்கை நுண்ணறிவு” என்று முத்திரை குத்துவதில் ஏன் இவ்வளவு வலியுறுத்தல்? இந்த சொல் விஞ்ஞான ரீதியாக நடுநிலையானது அல்ல. இது நுண்ணறிவு மனித அறிவாற்றலிலிருந்து பிரிந்து, தனித்துவமாக உருவாக்கப்படலாம் என்ற தவறான எண்ணத்தைத் தருகிறது; அது, ஒரு வேதியியல் சேர்மம் போல செயற்கையாகக் கலக்கப்படக்கூடிய தன்னிச்சையான பொருளாகக் காட்டப்படுகிறது.

இது வெறுமனே தவறானது மட்டுமல்ல; இது ஆளும் வர்க்கத்திற்கு கருத்தியல் ரீதியாக பயனுள்ளதாகும். இது செயலற்ற நிலையை ஊக்குவிக்கிறது. இது பிரமிப்பை ஊக்குவிக்கிறது. மேலும், தொழில்நுட்பம் சமூகக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு, அதற்கு மேல் இருப்பதாக நம்பிக்கையை ஊக்குவிக்கிறது.

உண்மையில் “செயற்கை நுண்ணறிவு (AI)” என்று அழைக்கப்படுவது, மனித அறிவாற்றல் உழைப்பின் ஒரு நீட்டிப்பு மற்றும் விரிவாக்கமான மேம்படுத்தப்பட்ட அறிவாற்றலாகப் புரிந்துகொள்வது சிறந்தது. அதன் அடித்தளங்கள், தர்க்கம், கணிதம், மொழியியல், பொறியியல், கணினி அறிவியல் மற்றும் மொழி, படங்கள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி உருவாக்கும் பில்லியன் கணக்கான மக்களின் கூட்டு அனுபவம் ஆகிய நூற்றாண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட மனித நடைமுறை மற்றும் அறிவில் அமைந்துள்ளன. படிமுறைகள் (algorithms) அர்த்தத்தை உருவாக்குவதில்லை; ; அவை மனிதர்களால் உருவாக்கப்பட்ட பரந்த தரவுக் களஞ்சியங்களிலிருந்து கற்றுக்கொள்கின்றன. அவற்றின் வடிவமைப்பு மனித பொறியாளர்களால் செய்யப்படுகிறது; அவற்றின் அளவுருக்கள் மனித தலையீட்டால் வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன; அவற்றின் தோல்விகள் மனிதப் பயிற்சியின் வரம்புகளை வெளிப்படுத்துகின்றனவே தவிர, ஏதோ ஒரு அந்நிய மனத்தின் இருப்பை அல்ல.

நுண்ணறிவு செயற்கையானது அல்ல; செயற்கையானது தானியக்கமாகும். முன்பு குறிப்பிட்ட வகையான மனித உழைப்பைக் கோரிய செயல்பாடுகளான வகைப்பாடு, தேடல், மீட்டெடுத்தல், வடிவக் கண்டறிதல், மொழி முன்னறிவிப்பு போன்றவற்றைத்தான் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் தானியக்கமாக்குகின்றன.

“மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு” என்ற சொல் மனிதகுலத்திலிருந்து ஒரு முறிவை வலியுறுத்தாமல், ஒரு ஆழமான தொடர்ச்சியை வலியுறுத்துகிறது. இந்த அமைப்புகள் மனித உழைப்பு மற்றும் அறிவின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதையும், மனித நோக்கத்தால் வடிவமைக்கப்பட்டு, மனித திறன்களைப் பெருக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் இது அங்கீகரிக்கிறது. மேலும் மிக முக்கியமாக, இது தொடர்புடைய முக்கிய சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துகிறது.

செயற்கை நுண்ணறிவு என்பது மனித நுண்ணறிவின் ஒரு மேம்பாடு என்றால், கேள்வி “அது என்ன செய்யும்?” என்பதல்ல. மாறாக அதை யார் கட்டுப்படுத்துகிறார்கள், யாரின் நலனுக்காக அது உருவாக்கப்படுகிறது, எந்த சமூக நோக்கங்களுக்காக அது பயன்படுத்தப்படுகிறது என்பதே உண்மையான கேள்வியாகும்.

செயற்கை நுண்ணறிவு, முதலாளித்துவ தன்னலக்குழுவின் கைகளில், சுரண்டலைத் தீவிரப்படுத்துவதற்கும், கண்காணிப்பை விரிவுபடுத்துவதற்கும், மக்களை சூழ்ச்சி செய்து கையாள்வதற்கும் மற்றும் போரை நடத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது தொழில்நுட்பத்தில் உள்ள எந்தவொரு உள்ளார்ந்த தீய நோக்கத்திலிருந்தும் எழுவதில்லை. இது இலாபம், போட்டி, இராணுவவாதம் மற்றும் தனியார் முதலாளித்துவ உடைமை ஆகியவற்றின் கட்டாயங்களிலிருந்து எழுகிறது.

“செயற்கை நுண்ணறிவை” தன்னிச்சையான அச்சுறுத்தலாகக் கருதுவது, பிரச்சினையை தவறாக அடையாளப்படுத்துவதாகும். ஆபத்து இயந்திரத்தில் இல்லை, ஆனால் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தும் வர்க்கத்தில்தான் உள்ளது.

செயற்கை நுண்ணறிவு தனிப்பட்ட படைப்பாற்றலை அடக்கிவிடும் என்று அஞ்சும் அறிவுஜீவிகளும் கலைஞர்களும், இந்த தொழில்நுட்பத்தை “அறிவுசார் சொத்துரிமைக்கு” அச்சுறுத்தலைக் கொண்டிருப்பதாக எதிர்க்கின்றனர். ஆனால் இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் அறிவியல் மற்றும் கலையின் முதலாளித்துவப் பண்டமாக்கலை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும், மனித முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான அவர்களின் படைப்புகளை, அனைத்து வகையான முதலாளித்துவச் சொத்துரிமைக்கு எதிரான சமூகப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே பாதுகாக்கப்பட முடியும் என்பதை உணரத் தவறுகிறார்கள்.

செயற்கை நுண்ணறிவு “அறிவுசார்” உழைப்பை குறுகிய அர்த்தத்தில் தனித்தன்மையற்றதாக மாற்றுவதில்லை. அது மனித உழைப்பு மற்றும் கலாச்சாரத்தின் முழு வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியின் விளைவாகும்— மனிதகுலம் இயற்கைக்கு எதிராக, இயற்கையின் சக்திகளில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்தும் செயல்முறையாக மார்க்ஸ் விவரித்தார். இந்த வரலாற்றுச் செயல்பாடு மனித உணர்வின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்குகிறது. மார்க்ஸ் விளக்கியது போல: “ஐந்து புலன்களின் உருவாக்கம் என்பது இன்றைய காலம் வரையிலான உலகின் முழு வரலாற்றின் உழைப்பாகும்.”

செயற்கை நுண்ணறிவு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித உடல் உழைப்பும் அறிவாற்றலும் உருவாக்கிய மனித மனத்தின் விளைபொருளாகும். இது உலகை பகுப்பாய்வு செய்யவும், சுருக்கவும், அடையாளப்படுத்தவும் மற்றும் மாதிரியாக்கவும் மனித திறனை உள்ளடக்கியுள்ளது. ஜனநாயகரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்டு — தனியார் திரட்டலுக்குப் பதிலாக சமூகத் தேவைக்குக் கீழ் வைக்கப்படும்போது — இது இதுவரை உருவாக்கப்பட்ட மனித விடுதலைக்கான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாக மாறும். இது உழைப்பின் சுமையைக் குறைக்கும், வேலை நேரத்தைக் குறைக்கும், கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தும், மேலும் முன்பு கற்பனை செய்ய முடியாத அளவுகளில் பில்லியன் கணக்கான மக்கள் கலாச்சார மற்றும் அறிவியல் வாழ்வில் பங்கேற்க அனுமதிக்கும்.

மேலும், இது கலைஞர்களின் பணியில் அதிகமாக இணைக்கப்படும்போது, உலகைப் புரிந்துகொள்ளவும், மனித அனுபவங்களும் உணர்வுகளும் கொண்ட பரந்த வரம்பை உணரவும், ஒரு சக்திவாய்ந்த புதிய உந்துதலை வழங்கும்.

ஒரு சோசலிச முன்னோக்கு தொழில்நுட்பத்தை மர்மமாக்காமல் தெளிவுபடுத்துகிறது. தொழிற்சாலைகள், சுரங்கங்கள், தரவு மையங்கள், போக்குவரத்து வலையமைப்புகள், வங்கிகள் மற்றும் பிற உற்பத்தி கருவிகள் அனைத்தையும் கைப்பற்றுவதைப் போலவே, தொழிலாளி வர்க்கம் செயற்கை நுண்ணறிவையும் கைப்பற்றி, அதை மனித விடுதலையின் கருவியாக மாற்ற வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கண்டு பயப்படுவதல்ல; மாறாக, நமது இயந்திரங்களில் உள்ள நுண்ணறிவு, மனிதகுலத்தின் உணர்வுபூர்வமான, ஜனநாயக, கூட்டு நுண்ணறிவு மற்றும் சமூகத் தேவைகளுக்குச் சேவை செய்வதை உறுதி செய்வதே முக்கியமாகும்.

“சோசலிசம் AI” என்பது ஒரு நடைமுறைத் திட்டமாகவும், இந்த பரந்த கொள்கையின் சிறிய எடுத்துக்காட்டும் ஆகும். தகவல் செயலாக்கம் மற்றும் மீட்டெடுப்பு ஆகிய மிக முன்னேற்றமான நுட்பங்களை, வணிக ரீதியான அற்பமான விஷயங்கள், தன்னலக்குழுக்களின் செல்வச் சேர்க்கை, கருத்தியல் மயக்கம் மற்றும் போர் திட்டமிடல் ஆகியவற்றிலிருந்து விலக்கி, வரலாற்று உண்மையைத் தெளிவுபடுத்தவும், ஒரு புரட்சிகரமான முன்னணியின் கல்விக்கும் பயன்படுத்த முடியும் என்பதை இது காட்டுகிறது. தொழிலாள வர்க்கம் தொழில்நுட்பத் துறையை தன்னலக்குழுவிடம் விட்டுவிடக்கூடாது என்ற ஒரு நடைமுறை வலியுறுத்தலாகும். உலகின் மக்கள் தொகையில் மிகச் சிறிய பகுதியைக் கொண்ட இந்த பிற்போக்கு சமூக அடுக்கின் ஆட்சியின் கீழ், அறிவியலே முற்றுகையிடப்பட்டுள்ளது. முதலாளித்துவ அரசு அனைத்து வகையான பிற்போக்குத்தனத்திற்கும் அறியாமைக்கும் ஒரு கோட்டையாக மாறி வருகிறது. தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், தடுப்பூசிகளுக்குப் பதிலாகப் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு, தடுப்பூசி போடுவதற்குப் பதிலாக இரத்தம் சிந்தும் நிலை விரைவில் வரக்கூடும்.

சோசலிசம் AI என்பது, புரட்சிகர இயக்கத்தின் நனவான தயாரிப்பின் ஒரு பகுதியாகும். இது டிடெரோ (Diderot) மற்றும் அவரது பங்காளிகள் இணைந்து உருவாக்கிய கலை அறிவுக்களஞ்சியத்தின் (Encyclopedia) பணிக்குச் சமமான — ஒரு உயர் வரலாற்று மற்றும் தொழில்நுட்ப மட்டத்தில் உள்ள — ஒரு நவீன வடிவமாகும்; மேலும், சோசலிச இயக்கத்தின் வரலாற்று அனுபவத்தைக் குறிப்பிடுவதென்றால், லெனினின் இஸ்க்ரா (Iskra) செய்தித்தாள் மற்றும் கடந்த மூன்று தசாப்தங்களாக இணைய அடிப்படையிலான உலக சோசலிச வலைத் தளம் ஆகியவற்றுக்குச் சமமானதாகும்.

சோசலிசம் AI என்பது அன்றாட அரசியல் வழிகாட்டல், வரலாற்று மற்றும் தத்துவார்த்த கல்வி மற்றும் நடைமுறை புரட்சிகர அமைப்பிற்காக தொழிலாள வர்க்கத்தால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகவும் ஆயுதமாகவும் இருக்கும்.

எப்பொழுதும் போலவே, ஒரு விஞ்ஞான வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்ட ஒரு புரட்சிகரக் கட்சியால் தலைமை தாங்கப்படும் தொழிலாள வர்க்கத்தின் நனவான தலையீடுதான் தீர்க்கமான கேள்வியாக உள்ளது.

1939 செப்டம்பரில், இரண்டாம் உலகப் போர் தொடங்கி சில நாட்களுக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

ஆகவே கேள்வி பின்வருமாறு எழுகிறது: நீண்ட காலப்போக்கில், புறநிலையான வரலாற்றுத் தேவை தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையின் நனவில் தனக்கான ஒரு பாதையை உருவாக்கிக் கொள்ளுமா? அதாவது, இந்தப் போரின் செயல்பாட்டிலும், அது உருவாக்கவிருக்கும் ஆழ்ந்த அதிர்ச்சிகளிலும், பாட்டாளி வர்க்கத்தை அதிகாரத்தைக் கைப்பற்ற வழிநடத்தக்கூடிய ஒரு உண்மையான புரட்சிகரத் தலைமை உருவாகுமா?

அதே கேள்வி இன்று மீண்டும் எழுகிறது, ஆனால் 1939-இல் இருந்ததை விட மிக முன்னேற்றமானதும் ஆபத்தானதுமான சூழ்நிலைகளில். அந்தக் காலத்தில், முதலாளித்துவத்திற்கு இந்த கிரகத்தை பௌதீக ரீதியாக வாழ முடியாததாக மாற்றும் திறன் இல்லை. ஆனால் இப்போது அதற்கு அந்தத் திறன் உள்ளது.

எமது கட்சி, புறநிலை யதார்த்தத்தை மிக நுணுக்கமாக பகுப்பாய்வு செய்வதன் அடிப்படையில் அதன் நடைமுறையை அமைக்கிறது. இறுதியில் எல்லாமே தானாகச் சரியாகிவிடும் என்று நம்பும் “கற்பனை உலகில் வாழும் நம்பிக்கையாளர்கள்” நாங்கள் அல்ல. மனிதகுலம் ஒரு பேரழிவு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை நாங்கள் நன்கு புரிந்துகொள்கிறோம். ஆனால், சர்வதேச தொழிலாளர் வர்க்கம் என்ற ஒரு உண்மையான சமூக சக்தி இருப்பதையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம்—அது தலைமைத்துவ நெருக்கடியைத் தீர்க்க முடிந்தால்—அது அதிகாரத்தைக் கைப்பற்றி, சோசலிசத்தை நிறுவுவதன் மூலம் பேரழிவைத் தடுக்க முடியும். எங்கள் நம்பிக்கையான கண்ணோட்டம், புறநிலைச் சூழ்நிலையில் உள்ள புரட்சிகரமான ஆற்றலை உண்மையாக மதிப்பீடு செய்வதில்தான் அடிப்படையாகக் கொண்டது.

கடந்த ஐந்து ஆண்டுகள், முதலாளித்துவ-ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் எழுச்சியால் மட்டும் குணாம்சப்படுத்தப்படவில்லை என்பதை வலியுறுத்த வேண்டும். இது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் சமூக எதிர்ப்பின் தொடர்ச்சியான வளர்ச்சியையும் கண்டுள்ளது.

இந்த எதிர்ப்புப் போக்கு தொடர்வதோடு மட்டுமல்லாமல், இன்னும் தீவிரமடையும். ஆர்ப்பாட்டங்களின் பௌதீக அளவை விடவும், அவை பிரம்மாண்டமானதாக இருக்கும் என்பதை விடவும் முக்கியமானது அதன் சமூகத் தன்மையாகும். அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், போராட்ட இயக்கங்களின் தொழிலாளர் வர்க்கத் தன்மை மேலும் மேலும் வெளிப்படையாகத் தெரியும். இந்தப் போராட்டங்கள், முதலாளித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சோசலிசத் தன்மையுடைய சமூக மற்றும் அரசியல் கோரிக்கைகளை முன்னெப்போதையும் விட மிகப் பெரிய தெளிவுடன் வெளிப்படுத்தும்.

நியூயார்க் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மம்தானியின் செயல்திட்டத்தின் மையமாக விளங்கும் பேருந்துக் கட்டணக் குறைப்புக்கான கோரிக்கைகளுக்கு மட்டும் அவை (போராட்டங்கள்) மட்டுப்படுத்தப்படாது. தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் மிக அற்ப சீர்திருத்தங்களால் திருப்தியடையப் போவதில்லை. இந்தச் சீர்திருத்தங்களை, மம்தானி என்ற மந்திரவாதி நம்புவது போல, டொனால்ட் ட்ரம்ப்பின் உதவியுடன் ஒவ்வொரு பேருந்து நிறுத்தமாக அடைந்துவிட முடியாது. அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யக் கோருவார்கள்.

இது தானாகவே நடக்காது. சாத்தியத்தை நிஜமாக மாற்றுவதிலும், சாத்தியமானதை உண்மையாக்குவதிலும் நாம் செய்வது ஒரு தீர்மானிக்கும் காரணியாகும் என்ற எங்கள் புரிதலின் அடிப்படையில் எங்கள் புரட்சிகர நம்பிக்கை உள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் சோசலிச நனவால் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதனால்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு டிசம்பர் 12, 2025 அன்று சோசலிசம் AI ஐ அறிமுகப்படுத்துகிறது.

வரும் வெள்ளிக்கிழமை, உலக சோசலிச வலைத்தளத்தில் உள்ள சோஷலிசம் AI-ஐப் பயன்படுத்துமாறு நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம். தொழிலாளர்களின் அதிகாரம், சோசலிசம் மற்றும் மனிதகுல விடுதலைக்கான போராட்டத்தில் இந்த சக்திவாய்ந்த புதிய ஆயுதத்தைப் பயன்படுத்தும் முதல்வர்களில் ஒருவராகவும், முன்னோடிகளாகவும் இருங்கள்.

Loading