இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும் (PWAC) ஏற்பாடு செய்யதுள்ள, “மவுசாகலையில் விஜயகுமார், கிரிபோருவவில் ரஜனிகாந்த ஆகியோரின் மரணங்கள்: இலாபத்திற்காக உயிர்களைத் தியாகம் செய்யா!” என்ற தலைப்பிலான பொதுக் கூட்டம், டிசம்பர் 21 அன்று பிற்பகல் 2 மணிக்கு மஸ்கெலியா, சாமிமலை வீதியில் உள்ள பி.எம்.டி. மண்டபத்தில் மண்டபத்தில் நடைபெறும்.
கடந்த மாதத்தின் முதல் வாரத்தில், மஸ்கெலியா மவுசாக்கலை தோடத்தில் விஜயகுமார் (49), யடியந்தொட்ட கிரிபோருவ தோட்டத்தில் ரஜனிகாந்த(25) ஆகிய இரண்டு தோட்டத் தொழிலாளர்கள் தொழில்துறை விபத்துகளில் மரணித்தனர். இது உலகளவில் அதிகரித்து வரும் தொழில்துறை விபத்துகளின் ஒரு பகுதியாகும்.
பாதுகாப்புக் கவசங்கள் பொருத்தப்படாத தேயிலை கொழுந்து அரைக்கும் இயந்திரத்தில் சிக்கியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு விஜயகுமார் மரணித்தார். சரியான தரநிலைகள் மற்றும் பராமரிப்பு இல்லாமல் பல தசாப்தங்களாக பயன்பாட்டில் இருந்த ஒரு கொதிகலன் வெடித்ததால் ரஜினிகாந்த கொல்லப்பட்டார். மற்ற தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.
இவை வெறும் “தொழில்துறை மரணங்கள்” அல்ல. அவை முதலாளிகளின் இலாபத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறைத்ததாலும் வேலைகளை துரிதப்படுத்தியாதாலும் நடந்த தொழில்துறை கொலைகள் ஆகும்.
நவம்பர் 30 அன்று நடைபெறவிருந்த இந்தக் கூட்டம், தீவைத் தாக்கிய சூறாவளி காரணமாக ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது. முதலாளித்துவ இலாபங்களுக்காக மனித உயிர்களை அடிபணியச் செய்யும் கொடூரமான கொள்கையின் விளைவே இந்த இரண்டு தொழிலாளர்களின் மரணமும் சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவும் ஆகும். பேரழிவின் சூழலில் இந்தக் கூட்டம் இன்னும் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
காலாவதியான சமூக அமைப்பான முதலாளித்துவ முறைமை, சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தொழிலாளர்களை நசுக்கிக்கொண்டு, மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறது. பொது சுகாதாரம் மற்றும் கல்வியை அழித்தல், தொழில்களை அழித்தல், கண்மூடித்தனமான தொழில்துறை நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றம், தொற்றுநோய்கள், இனப்படுகொலைப் போர்கள் மற்றும் தொழில்துறை விபத்துக்கள் உட்பட பல வழிகளில் இந்தத் தாக்குதல்களை மேற்கொள்கிறது.
தொழில்துறை விபத்துகளைத் தடுக்கவும், வேலைத் தளத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தொழிலாள வர்க்கமானது நிறுவனங்களின் கருவிகளாக செயற்படும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாகவும் முதலாளித்துவ இலாப நலன்களுக்கு எதிராகவும் அதன் சொந்த போராட்ட அமைப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
இதற்காக, ஒவ்வொரு தொழிற்சாலை, பெருந்தோட்டம் மற்றும் வேலைத் தளத்திலும் சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சியும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களும் தொழிலாளர்களை வலியுறுத்துகின்றன.
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உற்பத்தி நிறுத்தப்படுவதுடன் அனைத்து பாதுகாப்புத் தரவுகளும் வெளியிடப்படுவதோடு மரணங்கள் மற்றும் காயங்களுக்குப் பொறுப்பான அனைவருக்கும் எதிராக சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று இந்தக் குழுக்கள் கோரவேண்டும்.
இந்தப் போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒத்துழைப்பை நிறுவுவது அவசியமாகும். முதலாளித்துவத்திற்கு எதிரான சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில், சர்வதேச அளவில் தொழிலாளர்களை அணிதிரட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேச கூட்டணி போராடுகிறது.
மேற்கண்ட வேலைத்திட்டம் கலந்துரையாடப்படும் இந்த முக்கியமான கூட்டத்தில் பங்கேற்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை சோசலிச சமத்துவக் கட்சியும் பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களும் அழைப்பு விடுக்கின்றன.
