மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஐரோப்பிய மனித உரிமைகள் சாசனத்தின் (ECHR) முக்கிய விதிகளை கைவிடுவது குறித்து ஐரோப்பிய அரசாங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் டிசம்பர் 10ம் திகதி ஸ்ட்ராஸ்பேர்க்கில் (Strasbourg) தொடங்கின.
சமூக ஜனநாயகவாதிகள் தொடங்கி பாசிசக் கட்சிகள் வரை அனைவரும், 2026 வசந்த காலத்திற்குள் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்கள் புரிந்த பயங்கரமான மானுடத்திற்கு எதிரான குற்றங்களைத் தொடர்ந்து, ECHR சாசனத்தில் அறிவிக்கப்பட்ட “அனைவருக்குமான பொதுவான கொள்கைகளுக்கான” அர்ப்பணிப்பை இந்த உடன்பாடு முடிவுக்குக் கொண்டுவரும்.
அரசியல் ஸ்தாபனத்திற்குள் நிலவும் ஏகோபித்த கருத்தொற்றுமையை கோடிட்டுக் காட்டும் வகையில், டென்மார்க் நாட்டின் சமூக ஜனநாயகவாத பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் மற்றும் இத்தாலியின் பாசிச பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. மே மாதத்தில், இவர்கள் இருவரும் இணைந்து — மேலும் ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் கையெழுத்துடன் — ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டனர். அக்கடிதத்தில், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், தேசிய அரசியல் முடிவுகளில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டியதுடன், ஐரோப்பிய மனித உரிமைகள் சாசனத்தின் (ECHR) கட்டுப்பாடுகளிலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்று கோரினர்.
“சட்டவிரோத” குடியேற்றத்தால் ஐரோப்பா “நாகரிக அழிவை” எதிர்கொள்கிறது என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் சமீபத்திய அறிவிப்பிலிருந்து சற்றும் வேறுபடாத வகையில், இந்த பகிரங்கக் கடிதமும் “குற்றப் பின்னணி கொண்ட வெளிநாட்டவர்கள்” மற்றும் ஐரோப்பாவிற்கு எதிராக புலம்பெயர்ந்தோரை “ஆயுதமாகப் பயன்படுத்த” முயலும் “பகைமை நாடுகள்” குறித்தும் கடுமையாகச் சாடியது.
ஐரோப்பிய ஆளும் வர்க்கம், தொழிலாள வர்க்கம் மற்றும் தனது ஏகாதிபத்தியப் போட்டியாளர்களுக்கு எதிராக, தனது நலன்களைக் கொடூரமாக நிலைநாட்ட முயலும் வேளையில், சர்வதேச சட்டக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிவதற்கான ஒரு தீர்க்கமான மாற்றத்தின் வெளிப்பாடே இந்தக் கடிதமாகும். ஐரோப்பிய ஏகாதிபத்தியம் தனது உலகளாவிய போட்டியாளர்களுடன் போரிடுவதற்கு ஏதுவாக நடத்தப்படும் பிரம்மாண்டமான மீள் ஆயுதமேந்தும் திட்டம் (rearmament program), பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான ஆதரவு மற்றும் உக்ரேன்-ரஷ்யா இடையிலான இரத்தக் களரியான போர் ஆகியவை இந்த நிகழ்ச்சி நிரலின் குற்றவியல் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது புலம்பெயர்ந்தோர் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் உரிமைகள் மீது கட்டுப்பாடற்ற தாக்குதலைக் கோருகிறது.
பாரிய நாடு கடத்தல்களை முடுக்கிவிடவும், ஐரோப்பியச் சட்டத்திற்கு உட்படாத சர்வாதிகார நாடுகளில் அகதிகளுக்கான சித்திரவதை முகாம்களை (concentration camps) உருவாக்குவதை எளிதாக்கவும், ஐரோப்பிய ஒன்றிய குடிவரவு அமைச்சர்கள் டிசம்பர் 8 அன்று, ஒரு திட்டத் தொகுப்பிற்கு ஒப்புதல் அளித்தனர். இதில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அகதிகளை அனுப்பக்கூடிய “பாதுகாப்பான மூன்றாவது நாடுகள்” பட்டியலின் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் மற்றும் புகலிடக் கோரிக்கைகளை பரிசீலிக்க ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளுக்கு வெளியே “திருப்பி அனுப்பும் மையங்களை” (return hubs) உருவாக்குவதற்கான ஒப்புதல் ஆகியவையும் அடங்கும்.
“ஜேர்மனியில், சான்சலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கம், அதற்கு முந்தைய சமூக ஜனநாயகக் கட்சித் தலைமையிலான அரசாங்கத்தைப் போலவே, பாசிச ‘ஜேர்மனிக்கான மாற்று’ (AfD) கட்சியின் குடியேற்றக் கொள்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மெர்ஸ் ஜேர்மனியின் ‘நகரக் கட்டமைப்புகள்’ பெருமளவிலான குடியேற்றத்தால் அடையாளம் காண முடியாத அளவிற்கு மாறிவிட்டன என்று வெளிப்படையான இனவாத சொற்களில் அறிவித்தபோது, பாசிச வலதுசாரிகளின் உற்சாகமான ஆதரவைப் பெற்றார்.
ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஜேர்மன் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட் பாசிச AfD கட்சியின் பாணியிலேயே முழங்கினார். “கடந்த 10 ஆண்டுகளில், சட்டவிரோதக் குடியேற்றம் ஐரோப்பாவில் சீர்குலைவைக் கொண்டு வந்துள்ளது. எங்களது ஐரோப்பிய கூட்டாளிகளுடன் இணைந்து, இப்போது ஐரோப்பிய குடியேற்றக் கொள்கையில் மீண்டும் ஒழுங்கைக் கொண்டு வருகிறோம்” என்று தனது இலக்குகளைச் சுருக்கமாகக் கூறிய டோப்ரிண்ட், “வலிமையான எல்லைகள், விரைவாக அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புதல், புதுமையான நாடு கடத்தல் மையங்கள்” என்று பிரகடனம் செய்தார்.
பிரிட்டனில், கெய்ர் ஸ்டார்மரின் வலதுசாரி தொழிற் கட்சி அரசாங்கம், கடந்த மாதம் ஒரு தீவிர வலதுசாரி குடியேற்றத் திட்டத்தை முன்வைத்தபோது, டென்மார்க்கை ஒரு முன்மாதிரியாகக் குறிப்பிட்டது. குடும்ப வாழ்க்கைக்கான உரிமை, சித்திரவதை மற்றும் இழிவான நடத்தையிலிருந்து பாதுகாப்பிற்கான உரிமை உள்ளிட்ட ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமைகளை ரத்து செய்வதும், நாடு கடத்தல்களை பெருமளவில் அதிகரிப்பதுமே தொழிற் கட்சியின் இலக்குகளாக உள்ளன.
ஐரோப்பிய அரசாங்கங்கள் “ஐரோப்பிய கோட்டையை” நிறுவுவதற்காக நீண்டகாலமாகவே கொடூரமான குடியேற்ற எதிர்ப்பு கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றன. இந்தக் கண்டத்தை அடைவதற்கான அனைத்து சட்டப்பூர்வ வழிகளும் அடைக்கப்பட்டதாலும், கடல்வழி மீட்பு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டதாலும், ஆயிரக்கணக்கான மக்களின் இடுகாடாக மாறியுள்ள மத்திய தரைக்கடலில், இக்கொள்கைகளின் மிகக் கொடிய வெளிப்பாட்டைக் காணலாம். சர்வதேச குடியேற்ற அமைப்பின் (IOM) “காணாமல் போன புலம்பெயர்ந்தோர் திட்டத்தின்” படி, 2014-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மத்திய தரைக்கடலில் சுமார் 33,220 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டிற்கான மொத்த எண்ணிக்கை 2,000-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இருப்பினும், தற்போதைய மாற்றம் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. அனைத்து அரசியல் பிரிவுகளையும் சேர்ந்த அரசாங்கங்கள், சர்வதேச சட்டத்தின் மேலோட்டமான தோற்றத்தைக் கூட வெளிப்படையாகத் தகர்த்து வருகின்றன. இரண்டாம் உலகப் போரின் கொடூரங்கள் காரணமாக, முந்தைய காலத்தில் முதலாளித்துவ வர்க்கம் வழங்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளான அடிப்படை ஜனநாயக உரிமைகள் இனிப் பொருத்தமற்றவை என்றும், அவை தேசிய மற்றும் சர்வதேச சட்ட அமைப்புகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவை பகிரங்கமாக அறிவிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், அனைத்து முக்கிய ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள அரசியல் கட்சிகள் பாசிச சக்திகளை அதிகாரத்தில் ஒருங்கிணைக்க முறையாகப் பணியாற்றி வருகின்றன; இத்தாலி மற்றும் செக் குடியரசில் இச்செயல்முறை ஏற்கனவே வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் உள்ள அரசியல், வலதுசாரிக் கொள்கைகளை நோக்கித் தீவிரமாகச் சாய்ந்துள்ள நிலையில், 1959-ல் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் — ECHR-ல் உள்ள உரிமைகளை நடைமுறைப்படுத்த நிறுவப்பட்டது— புலம்பெயர்ந்தோர்கள், அரசியல் அதிருப்தியாளர்கள் மற்றும் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் மீது அரசு கட்டவிழ்த்துவரும் ஒடுக்குமுறைக்கும், அவர்களது உரிமைகள் முறையாக மீறப்படுவதற்கும் எதிராக சவால் விடுக்கக்கூடிய ஒரு சில இடங்களுள் ஒன்றாக இப்போதும் இருந்து வருகிறது
உதாரணமாக, அக்டோபர் 2024-ல், புகலிடம் கோருவோருக்கு வழங்கப்பட வேண்டிய சட்டரீதியான தீர்வுகளைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பை வழங்காமல், அவர்களைத் தானாகவே முன்வந்து வெளியேற வைப்பதன் மூலம் ஜேர்மனியும், கிரேக்கமும் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை மீறியுள்ளதாக நீதிமன்றம் கண்டறிந்தது. இந்த குறிப்பிட்ட வழக்கு H.T. என்ற தனிநபரைப் பற்றியது. அவர் ஜேர்மன் அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக கிரேக்கத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் அகதிகளுக்கான மிகவும் மோசமான தடுப்பு முகாம்களில் ஒன்றில் மனிதாபிமானமற்ற சூழலில் அடைத்து வைக்கப்பட்டார். இது, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய உடன்படிக்கையின் 3-வது பிரிவான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தையிலிருந்து பாதுகாப்பைப் பெறும் உரிமையை இரு நாடுகளும் மீறியுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜூலை 2025-ல், உக்ரேனிய சோசலிசவாதியான போக்டன் சிரோடியுக் (Bogdan Syrotiuk) தாக்கல் செய்த புகாரை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஏப்ரல் 2024-ல் ஜெலென்ஸ்கி அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட இவர் மீது “இராணுவச் சட்டத்தின் கீழ் தேசத்துரோகம்” குற்றம் சுமத்தப்பட்டது. ‘போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்’ (Young Guard of Bolshevik-Leninists) அமைப்பின் தலைவரான போக்டன், தற்போதைய போரையும், ஜெலென்ஸ்கி மற்றும் புட்டின் ஆட்சிகளையும் எதிர்ப்பதாலும், ஏகாதிபத்திய போருக்கு எதிராக உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காகப் போராடுவதாலும், அவர் சமூகத்திற்கு ஆபத்தானவர் என்று அந்தப் புகாரில் வாதிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை “போருக்குத் தயார்” (war-ready) நிலைக்குக் கொண்டுவருவதற்காக, வரும் ஆண்டுகளில் கண்டம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் திட்டமிட்டுள்ள தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் மிகவும் விரிவானவை. எனவே, முதலாளித்துவ சட்டக் கட்டமைப்பிற்குள் வெளிப்படுத்தப்படும் எதிர்ப்பைக் கூட அவர்களால் சகித்துக்கொள்ள முடியாது. ஜேர்மனியில், அனைத்துக் கட்சிக் கூட்டணியும் 1 டிரில்லியன் யூரோவை போர்ச் செலவினங்களுக்காக அங்கீகரித்துள்ளது. தற்போதைய சமூக நலத்திட்ட முறை இனி மலிவானது அல்ல என்று மெர்ஸ் (Merz) அறிவித்துள்ள நிலையில், பொதுச் செலவுகள் மற்றும் சமூக நலத் திட்டங்களை அழிப்பதன் மூலம் இந்தத் தொகை தொழிலாள வர்க்கத்திடமிருந்து பிழிந்தெடுக்கப்பட வேண்டும். அதேபோல், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், இராணுவ வரவுசெலவுத் திட்டத்திற்கு, பாரியளவில் நிதியளிப்பதற்காக பத்து பில்லியன் கணக்கான செலவின வெட்டுக்களுக்கு உறுதிபூண்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் 850 பில்லியன் யூரோ மதிப்பிலான கூட்டு இராணுவச் செலவினத் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கான நிதி, சிக்கன நடவடிக்கைகளின் மூலம் திரட்டப்படவுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், சிவில் தொழில்துறைகள் போர் உற்பத்திக்கு மாற்றப்படுவதாலும், சிதைந்து வரும் முதலாளித்துவத்தினால் உருவாகியுள்ள ஆழமான நெருக்கடியை முதலாளிகள் தொழிலாளர்களின் முதுகில் சுமத்துவதாலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிலிருந்து தூக்கியெறியப்படுகின்றனர். தொழிலாள வர்க்கத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரான புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு எதிராக ஆளும் வர்க்கத்தால் கையாண்டு செம்மைப்படுத்தப்பட்ட அதே கொடூரமான முறைகள், இப்போது இந்த வர்க்கப் போர் நிகழ்ச்சி நிரலை எதிர்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் எதிராகத் திருப்பப்பட உள்ளன.
உலக சோசலிச வலைத் தளம் (World Socialist Web Site) எப்போதும் வலியுறுத்துவது போல, புலம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பது அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய அங்கமாகும். போர்வெறி கொண்ட மற்றும் தேசியவாத முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டம், ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான நாட்டில் வாழவும், வேலை செய்யவும் இருக்கும் தடையற்ற உரிமையை நிலைநாட்ட வேண்டும். இது, அனைத்துக் குடியேற்ற ஒதுக்கீடுகள் (quotas) மற்றும் தேசிய இனம் அல்லது இனக்குழுவின் அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழிப்பதற்காகப் போராட வேண்டும்.
ஏகாதிபத்திய போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேச அளவிலான வேலைத்திட்டம் அவசியமாகும். இது, காலாவதியான தேச-அரசு எல்லைகளை ஒழிப்பதையும், தொழிலாள வர்க்க ஐக்கியத்தை தடுப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கத்தினர் பயன்படுத்தும் தேசியவாதக் கருத்துக்களை நிராகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். போருக்கும் முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக, தொழிலாளர்கள் ஒரு பாரிய அரசியல் மற்றும் தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்க வேண்டும். அத்துடன், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் போர் முழக்கத்தை தங்கள் தாரக மந்திரமாக மாற்றிக்கொள்ள வேண்டும்: “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!”
