வெனிசுவேலா அருகே சீனாவுக்குச் சென்ற எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பெய்ஜிங்குடனான அமெரிக்காவின் மோதல் தீவிரமடைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அமெரிக்க கடலோர கடல்படையின் ஹெலிகாப்டர்களில் ஒன்று, சீனாவுக்குச் செல்லும் வெனிசுவேலாவின் எண்ணெய்க் கப்பலை சர்வதேச கடல் பகுதியில் வைத்து கைப்பற்ற தயாராகி வருகிறது. டிசம்பர் 20, 2025 [Photo: @Sec_Noem]

வெனிசுவேலா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்டு வாஷிங்டன் கடற்படை முற்றுகையைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று வெனிசுலா கடல் பகுதிக்கு அப்பால் சீனாவை நோக்கிச் சென்ற எண்ணெய்க் கப்பலை அமெரிக்க கடலோர காவல்படை கைப்பற்றியது. கடந்த இரண்டு வாரங்களில் நடைபெறும் இரண்டாவது கப்பல் கைப்பற்றல் இதுவாகும்.

கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் (ஈக்வடார் மற்றும் கொலம்பியாவுக்கு அருகில்) பொதுமக்கள் படகுகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 104 பேர் கொல்லப்பட்டதைப் போலவே, இந்த எண்ணெய்க் கப்பல்களை கைப்பற்றுவதற்கு சர்வதேச சட்டத்தில் எந்த அடிப்படையும் இல்லை. இது, நடுக்கடலில் நடத்தப்படும் ஒரு கடற்கொள்ளைச் செயலாகும். மேலும் வெனிசுவேலா மீது முற்றுகையை விதிப்பது என்பது சர்வதேச சட்டத்தின்படி ஒரு குற்றமான ஆக்கிரமிப்புப் போர் நடவடிக்கையாகும்.

சமீபத்திய இந்த கப்பல் கைப்பற்றல், சீனாவுடனான அமெரிக்காவின் மோதலை தீவிரப்படுத்தியுள்ளது. இலத்தீன் அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாஷிங்டனின் புதுப்பிக்கப்பட்ட முயற்சி என்பது, ரஷ்யா மற்றும் சீனாவுடனான அமெரிக்க மோதலில் இருந்து பின்வாங்குவது அல்ல. மாறாக, உலகளாவிய இராணுவ மோதலுக்குத் தேவையான ஒரு வளத்திற்கான தளத்தை, மேற்கு அரைக்கோளத்தில் (அமெரிக்கக் கண்டம்) உருவாக்குவதற்கான திட்டத்தின் ஒரு பகுதி என்பதை இது தெளிவுபடுத்துகிறது.

கடந்த சனிக்கிழமை அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட செஞ்சுரிஸ் என்ற கப்பல், சீன வர்த்தக நிறுவனத்தால் வாங்கப்பட்ட வெனிசுவேலா கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றது. முன்னதாக டிசம்பர் 10 அன்று, கியூபாவை நோக்கிச் சென்ற ‘ஸ்கிப்பர்’ என்ற மிகப்பெரிய கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. மூன்றாவது கப்பலான ‘பெல்லா 1’, ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்கப் படைகளின் சோதனைகளுக்கு உட்பட மறுத்து அட்லாண்டிக் கடலுக்குள் தப்பிச் சென்றது. சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் அதனைத் துரத்தியபோது, அது 75-க்கும் மேற்பட்ட அபாய சமிக்ஞைகளை ஒலிக்க விட்டது.

கடந்த திங்கட்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் இந்த கப்பல் கைப்பற்றல்களை “சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறுவதாகும்” என்று கண்டித்தார். மேலும், சீனா “அனைத்து ஒருதலைப்பட்சமான அடாவடித்தனங்களையும் எதிர்க்கிறது” என்றும் அவர் கூறினார். வெனிசுவேலாவின் எண்ணெயை இறக்குமதி செய்யும் உலகின் மிகப்பெரிய நாடு சீனாவாகும்.

ட்ரம்ப் நிர்வாகம் உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பலான USS ஜெரால்ட் ஆர். போர்டு (USS Gerald R. Ford) உள்ளிட்ட சுமார் ஒரு டசின் போர்க் கப்பல்களையும், சுமார் 15,000ம் படையினர்களையும் கரீபியன் பகுதிக்கு அனுப்பியுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களில், இப்பகுதி இவ்வளவு பெரிய அளவிலான அமெரிக்க இராணுவப் பிரசன்னத்தைக் கண்டதில்லை. இந்த முற்றுகையின் பொருளாதார விளைவுகள் ஏற்கனவே கடுமையாக உள்ளன. வெனிசுவேலா எண்ணெயைச் சார்ந்துள்ள கியூபா, தனது முக்கிய பொருளாதார வாழ்வாதாரத்தை இழந்து வருகிறது. மேலும் அங்கு பரவலான பசி, தொடர் மின்வெட்டு மற்றும் மருத்துவத் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைப் பதவியிலிருந்து விலக்க அழுத்தம் கொடுப்பதுதான் உங்கள் இலக்கா என்று திங்களன்று கேட்டபோது, “அவர் அதைச் செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று ட்ரம்ப் பதிலளித்தார். மேலும், “அவர் பிடிவாதம் காட்டினால், அதுவே அவர் அவ்வாறு காட்டும் கடைசி முறையாக இருக்கும்” என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

வெனிசுவேலா மீதான இந்த முற்றுகை, சீனாவுடனான மோதலுக்கு ஒரு அதிகாரத் தளமாக இலத்தீன் அமெரிக்காவைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அமெரிக்காவின் பரந்த திட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது. கடந்த மாதம், வெள்ளை மாளிகை வெளியிட்ட தேசிய பாதுகாப்பு மூலோபாயம், “மன்ரோ கோட்பாட்டிற்கான ட்ரம்ப்பின் திருத்தம்” என்பதை அறிவித்தது. இது, “மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை” மீட்டெடுப்பதையும், சீனா “எங்கள் அரைக்கோளத்தில் உள்ள மூலோபாய ரீதியாக முக்கியமான சொத்துக்களைச் சொந்தமாக்குவதையோ அல்லது கட்டுப்படுத்துவதையோ” தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆவணம் இரண்டு கண்டங்களையும் — “எங்கள் அரைக்கோளம்” என்று குறிப்பிட்டு — அமெரிக்காவின் உடைமையாகக் கோருகிறது. ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதலுக்குத் தேவையான ஒரு அதிகாரத் தளமாக, இந்த கண்டங்களின் வளங்களைக் கைப்பற்ற வாஷிங்டன் திட்டமிட்டுள்ளது.

சீனாவுடனான மோதலுக்கான அமெரிக்காவின் ஆயத்தங்களில் இலத்தீன் அமெரிக்காவின் முக்கியத்துவம், அங்குள்ள ஏராளமான தாது வளங்களை மையமாகக் கொண்டுள்ளதை காட்டுகிறது. உலகின் லித்தியம் (lithium) இருப்பில் பாதியளவு இலத்தீன் அமெரிக்காவிலேயே உள்ளது. இது நவீன ஆயுத அமைப்புகள், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு அவசியமான ஒன்றாகும். தற்போது, அரிய வகை தனிமங்களின் (rare earth elements) உலகளாவிய சுத்திகரிப்பு திறனில் 90 சதவீதம் வரை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இது, பெய்ஜிங்கிற்கு ஒரு பெரிய செல்வாக்கை அளிக்கிறது. இதை உடைப்பதற்கு அமெரிக்க வியூகவாதிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

பனாமா கால்வாயை அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ளப் போவதாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சீனா அணுகுவதைத் தடுக்க வேண்டிய ஒரு முக்கியமான உலகளாவிய முனையமாக, இக்கால்வாயை ட்ரம்ப் நிர்வாகம் முன்னிறுத்துகிறது.

“எங்கள்” அரைக்கோளத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளியான டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருக்கும் கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்றும் ட்ரம்ப் கோரியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, லூசியானா கவர்னர் ஜெஃப் லான்ட்ரியை கிரீன்லாந்திற்கான சிறப்புத் தூதராக ட்ரம்ப் நியமித்தார். வார இறுதியில், எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட லான்ட்ரி, “கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்ற” தாம் முயற்சிப்பதாகக் கூறினார்.

திங்கட்கிழமை அன்று, ஒரு “தங்கக் கடற்படையின்” (Golden Fleet) அங்கமாக புதிய “ட்ரம்ப் கிளாஸ்” (Trump Class) போர்க் கப்பல்களைக் கட்டும் திட்டத்தை ட்ரம்ப் அறிவித்தார். மார்-ஏ-லாகோ மாளிகையில் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் முன்மொழியப்பட்ட போர்க் கப்பல்களின் வரைபடங்கள் சூழ உரையாற்றிய ட்ரம்ப், “இவை ஒவ்வொன்றும் நமது நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போர்க் கப்பலாகவும், உலக வரலாற்றிலேயே இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய போர்க் கப்பலாகவும் இருக்கும்” என்று பிரகடனப்படுத்தினார். இந்த போர்க் கப்பல்கள் “மிகவும் வேகமானவை, மிகப்பெரியவை மற்றும் இதுவரை கட்டப்பட்ட எந்தவொரு போர்க் கப்பலையும் விட 100 மடங்கு சக்தி வாய்ந்தவை” என்று அவர் கூறினார். இவை அணு ஆயுதங்களை ஏந்திய குரூஸ் ஏவுகணைகள், அதிவேக ஒலியை மிஞ்சும் (hypersonic) ஆயுதங்கள் மற்றும் லேசர் அமைப்புகளுடன் கூடியவை என்றும் அவர் கூறினார். முதல் கப்பலுக்கு ‘யுஎஸ்எஸ் டிஃபையன்ட்’ (USS Defiant) என்று பெயரிடப்படும். உடனடியாக இரண்டு கப்பல்களைக் கட்ட ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மொத்தம் 20 முதல் 25 கப்பல்களைக் கட்டத் திட்டமிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

வெனிசுவேலாவுக்கு எதிரான ட்ரம்பின் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ஜனநாயகக் கட்சி எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. கடந்த வாரம், அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய இராணுவ பட்ஜெட்டை நிறைவேற்றுவதில் ஜனநாயகக் கட்சித் தலைமை குடியரசுக் கட்சியினருடன் இணைந்து கொண்டது. 901 பில்லியன் டாலர் மதிப்பிலான தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்திற்கு (NDAA), பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், சிறுபான்மை கொறடா (whip) கேத்தரின் கிளார்க் மற்றும் ஜனநாயகக் கட்சி காகஸ் தலைவர் பீட் அகுய்லர் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.

Loading