ட்ரம்ப் – மம்தானி உடன்படிக்கையையும் முதலாளித்துவ அரசையும் ஜாகோபின் இதழ் ஆதரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நியூ யோர்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஹ்ரான் மம்தானியுடன் கைகுலுக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். வாஷிங்டன், வெள்ளிக்கிழமை, நவம்பர் 21, 2025 [AP Photo/Evan Vucci]

“ஜனநாயக சோசலிஸ்ட்” என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட நியூ யோர்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஹ்ரான் மம்தானிக்கும், சர்வாதிகார இலட்சியங்களைக் கொண்ட பாசிச டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையே வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, இருவரும் மகிழ்ச்சியான வார்த்தைகளையும் பரஸ்பர பாராட்டுகளையும் பரிமாறிக் கொண்டனர். அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) அதிகாரப்பூர்வமற்ற செய்தித் தாளான ஜாகோபின் இந்த சந்திப்பை பாராட்டி, மம்தானி ட்ரம்பிடம் சரணடைந்ததை ஒரு அரசியல் பயணமாக தொடர் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

இந்தக் கட்டுரைகளில் மிக முக்கியமான ஒன்று கிறிஸ்டோபர் மார்க்கிஸ் எழுதிய “அரசு என்பது குறித்து ட்ரம்ப்பும் மம்தானியும் உடன்படுகிறார்கள், ஆனால் அது யாருக்குச் சேவை செய்கிறது என்பதில் அல்ல” என்ற தலைப்பிலான வர்ணனையாகும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறைப் பேராசிரியரான மார்க்கிஸ், இக்கட்டுரையில் முதலாளித்துவ அரசு என்பது இயல்பாகவே தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு விரோதமானது அல்ல என்றும்; “இடது” தரப்பிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் மூலம், அந்த அரசை உழைக்கும் மக்களின் தேவைகளுக்குச் சேவை செய்ய வைக்க முடியும் அல்லது அதை அப்படியே கைப்பற்ற முடியும் என்றும் வாதிடுகிறார்.

இந்த வாதமானது, ஜனநாயகக் கட்சி மீதான மாயைகளை ஊக்குவிப்பதிலும், பாசிசம் மற்றும் உலகப் போரை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்பைத் தாங்கிப் பிடிப்பதிலும், தொழிலாள வர்க்கத்திடமிருந்து வரவிருக்கும் புரட்சிகர சவாலில் இருந்து அதைப் பாதுகாப்பதிலும் DSA மற்றும் நடுத்தர வர்க்க போலி-இடதுகளின் பங்கிற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஜாகோபின் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒரு கல்விசார்ந்த ஆய்வு அல்ல. இது அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் மற்றும் ஜாகோபின் இதழுடன் தொடர்புடைய சலுகை பெற்ற குட்டி-முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு அரசியல் அறிக்கையாகும். இது, ஒரு பாசிச நிர்வாகத்துடனான அவர்களின் பகிரங்கமான ஒத்துழைப்பை நியாயப்படுத்துவதுடன், முதலாளித்துவ அரசு இயந்திரத்தை பாதுகாக்கிறது. “ட்ரம்ப்பும் மம்தானியும் அரசு குறித்து உடன்படுகிறார்கள்” என்ற தலைப்பின் கூற்று சரியானது. தற்போதுள்ள அரசு புனிதமானது என்பதில் அவ்விருவருக்கும், அதே போல் DSA-விற்கும் இடையே ஒரு அடிப்படை உடன்பாடு உள்ளது.

மார்க்விஸும் ஜாகோபினும் பெருநிறுவன தன்னலக்குழு தட்டுக்களுக்கு, அவர்களின் “ஜனநாயக சோசலிசம்” என்றழைக்கப்படுவதில் இருந்து அஞ்சுவதற்கு எதுவுமில்லை என்று உறுதியளிக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கின்றனர்.

“பொருளாதாரம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்ற அடிப்படைக் கேள்விகளில், ட்ரம்ப் மம்தானியிடமிருந்து பெரிய அளவில் வேறுபட்டவர் அல்ல” என்று மார்க்கிஸ் எழுதுகிறார். ஒரு கட்டத்தில், மம்தானி மற்றும் அவரது கூட்டாளிகளின் பரிதாபகரமான இலக்கை, அரசுக்கு “பொது மதிப்பினை நோக்கி ஒரு சிறிய உந்துதல்” கொடுப்பது என்று அவர் சுருக்கமாகக் கூறுகிறார். எஞ்சியிருக்கும் கவலைகளையும் போக்கும் வகையில், “மம்தானி ஜனநாயக சோசலிசக் கொள்கைகளை முன்வைக்கும்போது, நாம் சந்தைகளை ஒழிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கவில்லை...” என்றும் அவர் எழுதுகிறார்.

மார்க்விஸ், “அடிப்படையான பிரச்சினை” என்பது “பொருளாதார நிர்வாகம்” என்று வரையறுக்கிறார் [மூலக் கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது]. இது எந்தவொரு சாதாரண ஜனநாயகக் கட்சி அரசியல்வாதியின் உரைகளிலிருந்தும் எடுக்கப்படக்கூடிய ஒரு பொய்யான கூற்றாகும்.

உண்மையில், அடிப்படையான பிரச்சினை என்பது முதலாளித்துவத்தின் கீழுள்ள உற்பத்தியின் சமூக உறவுகளே ஆகும்; இதில் உற்பத்தி சாதனங்களை முதலாளிகள் சொந்தமாகக் கொண்டிருக்கிறார்கள்; அனைத்து செல்வத்தையும் உருவாக்கும் தொழிலாளர்கள் தங்களுடைய உழைப்புத் திறனைத் தவிர வேறு எதையும் சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை. அந்த உழைப்புத் திறனையே அவர்கள் தங்களைச் சுரண்டும் முதலாளிகளுக்கு கூலிக்காக விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த உறவுகள், சமரசம் செய்ய முடியாத ஒரு வர்க்கப் போராட்டத்தை உருவாக்குகின்றன. இது ஒன்றில், தொழிலாள வர்க்கத்தால் முதலாளித்துவம் புரட்சிகரமான முறையில் தூக்கியெறியப்பட்டு, உற்பத்தி சாதனங்களின் பொது உடைமை, சமத்துவம் மற்றும் தனிப்பட்ட இலாபத்திற்காக அல்லாமல் சமூகத் தேவைக்கான உற்பத்தியின் அடிப்படையில் ஒரு தொழிலாளர் அரசையும் சோசலிசத்தையும் நிறுவுவதற்கு வழிவகுக்கும்; அல்லது பாசிசக் காட்டுமிராண்டித்தனத்திற்கும் அணு ஆயுதப் போருக்கும் செல்வதற்கு வழிவகுக்கும்.

ஜாகோபின் கட்டுரையிலோ, அல்லது அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் மற்றும் மம்தானியின் அரசியலிலோ வர்க்கப் போராட்டம் அல்லது தொழிலாளர் புரட்சி பற்றிய சிறிய குறிப்புக் கூட இல்லை. மாறாக, அதுவே அவர்களின் மிகப்பெரிய அச்சமாக இருப்பதால், அவர்களை தன்னலக்குழுவின் பாசிசப் பிரதிநிதியான ட்ரம்பின் அரவணைப்புக்குள் தள்ளுகிறது.

தன்னலக் குழுவின் ஆட்சி, தன்னலக்குழுவால் நடத்தப்படும் ஆட்சி, தன்னலக் குழுவிற்காக உள்ள ஆட்சி

அரசியல் நிலவரம் குறித்த மார்க்கிஸின் விளக்கக் காட்சி, அருவமான மற்றும் கல்விசார் சொற்கோப்பால் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், இன்றைய அமெரிக்காவில் நிலவும் திகைப்பூட்டும் மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான செல்வக் குவிப்பு மற்றும் சமூக சமத்துவமின்மை பற்றிய எந்தவொரு உணர்வையும் இது வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ட்ரம்ப்பின் பாசிசப் படுகொலை, முக்கிய நகரங்களுக்கு அவர் அரசியலமைப்பிற்குப் புறம்பாக துருப்புக்களை அனுப்புதல், சர்வாதிகார அதிகாரங்களை அவர் வலியுறுத்துதல், காஸாவில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு அவர் அளித்துவரும் ஆதரவு அல்லது ஈரான், வெனிசுவேலா மற்றும் பிற நாடுகள் மீதான அவரது சட்டவிரோத இராணுவத் தாக்குதல்கள் பற்றி எதுவும் மார்க்கிஸ் கூறவில்லை.

எவ்வாறிருப்பினும், அரசு இயந்திரம் அதன் இயல்பிலேயே ஆளும் வர்க்கத்தின் ஒரு கருவி அல்ல என்றும், குறைந்தபட்சம் ஓரளவாவது தொழிலாளர்களின் பக்கம் அதை வென்றெடுக்க முடியும் என்று அவர் வாதிடுவது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ட்ரம்ப் நிர்வாகம், மொத்த மக்கள் தொகையில் ஒரு சிறிய பகுதியினரைக் கொண்ட, யாருக்கும் பொறுப்பு கூறாத நிதியியல் தன்னலக் குழுக்களின் ஒரு அரசாங்கமாக இருக்கிறது என்ற உண்மைகளை ஒப்புக்கொள்வது, உண்மையில் அவர்களுக்கு சங்கடமாக இருக்கும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், தனது சமீபத்திய விரிவுரையான, அமெரிக்கா எங்கே செல்கிறது? தன்னலக் குழுக்கள், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவத்தின் புரட்சிகர நெருக்கடி,” என்ற தலைப்பில், சமகால அமெரிக்க சமூகத்தின் ஒரு பேரழிவுகரமான சித்திரத்தை வழங்கியுள்ளார். நேரடியாக அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஒரு பெரும் நிதியியல்  தன்னலக்குழுவின் வளர்ச்சியின் கீழ் “வரலாற்று ரீதியாக முன்னெப்போதும் இல்லாத அளவில், அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவு” பற்றி அவர் ஆய்வு செய்தார். அமெரிக்காவின் 813 பில்லியனர்களில் 16 பேர் ட்ரம்ப்பின் முதல் 25 நியமனங்களில் அடங்குவர் என்பதைக் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவில் பணக்காரர்களில் ஒரு சதவீதத்தினர் பல்லாயிரக்கணக்கான டிரில்லியன் டாலர் செல்வத்தை வைத்திருக்கும் அதே வேளையில், 75 சதவீத அமெரிக்கர்கள் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர் மற்றும் கிட்டத்தட்ட பாதியளவு பிள்ளைகள் ஏழைகளாகவோ அல்லது குறைந்த வருமானம் கொண்டவர்களாகவோ உள்ளனர். WSWS மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளபடி, இத்தகைய சமத்துவமின்மை நிலைகள் ஜனநாயக ஆட்சி முறைகளுடன் ஒருபோதும் ஒத்துப் போக மாட்டாது.

விளாடிமீர் லெனின், 1916 ஆம் ஆண்டில் தனது முக்கியப் படைப்பான “ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்”  என்ற நூலில், “அரசு ஏகபோக முதலாளித்துவத்தின்” கீழ், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் கொடூரமான சூறையாடல்களைப் பற்றியும், செல்வமும் பொருளாதார அதிகாரமும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பெருநிறுவன முதலாளிகளின் கைகளில் பெருமளவில்  குவிக்கப்பட்டிருந்ததைப் பற்றியும் எழுதியிருந்தார். மேலும், ஏகாதிபத்தியம் என்பது “அனைத்து நிலைகளிலும் பிற்போக்குத்தனமானது” என்று லெனின் எழுதினார். ஆனால், இன்று தன்னலக்குழுவின் ஆட்சியின் வளர்ச்சியானது, லெனினின் காலத்தில் இருந்ததைக் காட்டிலும், மிக மிக அதிகமாக செல்வக் குவிப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அரசின் வர்க்கச் செயல்பாடு இதற்கு முன் இவ்வளவு அப்பட்டமாக வெளிப்பட்டதில்லை. இது, முதலாளித்துவத்தின் தற்போதைய நிலையை மேலோட்டமாக சீரமைக்க முயலும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின்  அரசியலை அபத்தமானதாக ஆக்குகிறது.

மார்க்விஸின் வாதம் கோட்பாட்டளவில் தவறானது மட்டுமல்ல. இது ஒரு திட்டவட்டமான வர்க்கச் செயல்பாட்டிற்கு பயன்படுகிறது. ஜாகோபின் இதழ் என்பது DSA மற்றும் கல்வித்துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் குவிந்துள்ள ஒரு பரந்த வசதி படைத்த நடுத்தர வர்க்க அடுக்கின் கருவியாகும். இந்த அடுக்கானது, சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும், முதலாளித்துவ அரசைச் சார்ந்து வளர்ந்துள்ளது: அதாவது பொது மானியங்கள், நிரந்தரப் பதவிகள், அறக்கட்டளைகள் மற்றும் ஜனநாயகக் கட்சியால் வழங்கப்படும் நிர்வகிக்கப்பட்ட “இடதுசாரித்” தளங்களை இவை சார்ந்துள்ளன. “ஜனநாயக சோசலிசம்” மற்றும் அடையாள அரசியல் பற்றிய வாய்வீச்சுக்கள் மூலம் இடது பிம்பத்தை வளர்த்தாலும், அதன் பொருள்சார் நலன்கள் தற்போது இருக்கும் சமூக ஒழுங்கைப் பாதுகாப்பதில் பிணைந்துள்ளன.

அரசு குறித்து மார்க்சிசம்

ஜாகோபினுக்கும், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளுக்கும் எதிராக, அரசு பற்றிய மார்க்சிசத்தின் அடிப்படை அரிச்சுவடிகளை (ABCs) மீண்டும் வலியுறுத்துவது அவசியமாகும். 1917 செப்டம்பரில், அக்டோபர் புரட்சிக்கு முன்னதாக, தற்போது ஜாகோபின் பரப்பி வரும் சீர்திருத்தவாத வகையை எதிர்ப்பதற்காகவே லெனின் அரசும் புரட்சியும் (The State and Revolution) என்ற நூலை எழுதினார்.

1917 ஜூலை மாதத்தில் நடந்த தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் போராட்டங்களைத் தொடர்ந்து, முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் போல்ஷிவிக்குகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறையிலிருந்து தப்பி, லெனின் தலைமறைவாக இருந்தபோது இந்த நூலை எழுதினார். ஆகஸ்ட் இறுதியில், ஜெனரல் கோர்னிலோவ் நடத்திய தோல்வியடைந்த இராணுவ சதிக்குப் பிறகு, முதலாளித்துவ அரசாங்கத்தை ஆயுதமேந்திய முறையில் தூக்கியெறிவதற்கும், தொழிலாளர் அரசை நிறுவுவதற்கும் தொழிலாளர்களையும் படையினர்களையும் வழிநடத்தக்கூடிய கட்சியைத் தயார்படுத்த இந்த சிறுநூலை லெனின் எழுதினார்.

மார்க்சிசத்தை முதலாளித்துவ பாராளுமன்றவாதத்திற்கும் சமூக சீர்திருத்தவாதத்திற்கும் ஏற்ப மாற்றியமைக்க முயன்ற அனைவருக்கும் எதிராக, லெனின் தத்துவார்த்த ரீதியான மற்றும் அரசியல் ரீதியான போரை நடத்தினார். இதில், ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இரண்டாவது அகிலத்தின் முன்னணி தத்துவாசிரியரான கார்ல் காவுட்ஸ்கியும் அடங்குவார். இவர், முதலாளித்துவ அரசைப் புரட்சிகரமான முறையில் தூக்கியெறிவதையும், அழிப்பதையும் எதிர்த்து, சோசலிசத்தை நோக்கிய அமைதியான, பாராளுமன்ற வழியைப் போதித்தார். அதே நேரத்தில், போல்ஷிவிக் தலைமைக்குள் உள்ளே இருந்த வலது சாரிப் போக்குகளை எதிர்த்துப் லெனின் போராடிக் கொண்டிருந்தார்.

அரசும் புரட்சியும் என்ற நூலின் முன்னுரையின் தொடக்கத்தில், லெனின் பின்வருமாறு எழுதினார்:

பொதுவாக முதலாளித்துவத்தின் செல்வாக்கிலிருந்தும், குறிப்பாக ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் செல்வாக்கிலிருந்தும், உழைக்கும் மக்களை விடுவிப்பதற்கான போராட்டமானது, “அரசு” தொடர்பான சந்தர்ப்பவாத தப்பெண்ணங்களுக்கு எதிரான போராட்டம் இல்லாமல் சாத்தியமற்றது.

1871-ஆம் ஆண்டில், பாரிஸ் கம்யூன் வழங்கிய மையமான பாடம் என்னவென்றால், தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை அப்படியே கைப்பற்றி தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாது என்பதை அவர் விளக்கினார். அவர்கள் அதைத் தகர்த்து, அதற்குப் பதிலாக தொழிலாளர் அதிகாரத்தின் அமைப்புகளை நிறுவ வேண்டும்.

யுத்தம் மற்றும் புரட்சிகரமான எழுச்சியின் நிலைமைகளின் கீழ், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் போல்ஷிவிக் கட்சியையும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தையும் ஆயுதபாணியாக்கும் நோக்கில், அரசு குறித்து மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் கருத்துக்களை லெனின் முறையாக “வரலாற்று அகழ்வாராய்ச்சியை” மேற்கொண்டார். லெனின் இதை மிகவும் முக்கியமானதாகக் கருதினார் என்றும், படுகொலைக்கு அஞ்சி, தான் கொல்லப்பட்டால் “மார்க்சிசமும் அரசும்” என்ற தலைப்பில் தனது ஆயத்த குறிப்பேடுகளை வெளியிடுமாறு தோழர்களைக் கேட்டுக் கொண்டார் என்றும் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார். (பார்க்க, “ஜூலை நாட்களிலிருந்து கோர்னிலோவ்வின் சதிவரை: லெனினின் அரசும் புரட்சியும்“)

ஏங்கெல்ஸின் “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலிலிருந்து மேற்கோள் காட்டிய பிறகு, லெனின் பின்வருமாறு எழுதினார்:

அரசின் வரலாற்றுப் பங்கு மற்றும் அதன் பொருள் குறித்து மார்க்சிசத்தின் அடிப்படைக் கருத்தை இது மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. அரசு என்பது வர்க்க முரண்பாடுகளின் சமரசமற்ற தன்மையின் ஒரு விளைபொருளாகவும் வெளிப்பாடாகவும் உள்ளது. வர்க்க முரண்பாடுகள் புறநிலை ரீதியாக சமரசமற்றதாக இருக்கும் இடத்தில், எப்போது, எங்கு, எந்த அளவுக்கு அவை நிலவுகிறதோ, அங்கே அரசு தோன்றுகிறது. மேலும், இதற்கு நேர்மாறாக, அரசின் இருப்பு, வர்க்க முரண்பாடுகள் சமரசம் செய்ய முடியாதவை என்பதையும் நிரூபிக்கிறது.

அரசு என்பது சமூகத்திற்கு மேலே நிற்கும் ஒரு நடுவர் அல்ல, மாறாக ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை அடக்குவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரம் ஆகும். அதன் “சிறப்பு ஆயுதப்படைகள், சிறைகள்” போன்ற அமைப்புகள், சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவே இருக்கின்றன.

ஏகாதிபத்தியத்தின் கீழ் முதலாளித்துவ அரசின் அடக்குமுறை இயந்திரம் “அரக்கத்தனமான பரிமாணங்களை” எட்டியுள்ள அதே வேளையில், ஜனநாயகம் என்பது இராணுவவாதம் மற்றும் பொலிஸ் வன்முறைக்கான ஒரு மறைப்பாக மாறியுள்ளது என்று லெனின் வலியுறுத்தினார். பாட்டாளி வர்க்கத்தின் பணி, இந்த இயந்திரத்திற்குள் “எல்லைகளை மறுவரையறை செய்வது” அல்ல. மாறாக, அதை முற்றிலும் தகர்த்து, புதிய, தீவிர ஜனநாயக அமைப்புகளை (சோவியத்துகள்) அடிப்படையாகக் கொண்டு, தொழிலாளர் அரசை உருவாக்குவதே சோசலிச மாற்றத்திற்கான உண்மையான வழி என்று லெனின் வலியுறுத்தினார்.

இது இன்று இன்னும் உண்மையாக இருக்கிறது. கிரேக்கத்தில் சிரிசா (Syriza), ஸ்பெயினில் போடெமோஸ் (Podemos), ஜேர்மனியில் இடது கட்சி (Left Party), அமெரிக்காவில் சாண்டர்ஸ் என சமூக சீர்திருத்தம் குறித்த மாயைகளை விற்பனை செய்துவரும் மார்க்சிச எதிர்ப்பாளர்கள் அனைவரும் தொழிலாளர் வர்க்கத்திற்குத் துரோகம் செய்துள்ளனர். ஜனநாயகக் கட்சியினர் முதல் போலி இடதுகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் வரை முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து தொழிலாளர் வர்க்கம் தனது அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான சுயாதீனத்தை நிலைநாட்ட வேண்டும்.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பணிபுரியும் இடங்கள், பள்ளிகள் மற்றும் தொழிலாள வர்க்க சமூகங்களில், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியுடன் (IWA-RFC)) இணைந்த, சாமானிய தொழிலாளர் குழுக்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். புரட்சிகரக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதன் அமெரிக்கப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியும், தன்னலக்குழுக்களின் உடமைகளை பறிமுதல் செய்வதற்கும் முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிவதற்குமான போராட்டத்தை வழிநடத்துவதுக்கும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

சோசலிசப் புரட்சிக்கான புறநிலைமைகள் வேகமாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. தன்னலக்குழுவின் உயர்வுக்கு காரணமாக இருந்த அதே தொழில்நுட்ப மற்றும் பொருளாதார செயல்முறைகள் —உதாரணமாக, மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு (AI) —தொழிலாளர் வர்க்கத்தின் பாரிய அரசியல் தீவிரமயமாக்கலுக்கான சட ரீதியான அடிப்படையையும் உருவாக்கி வருகின்றன. இந்த புறநிலை இயக்கத்தை, அதிகாரத்திற்கான ஒரு நனவான போராட்டமாக மாற்றும் திறன் கொண்ட ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதே இன்று தீர்க்கமான கேள்வியாக இருக்கின்றது.

Loading