உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போருக்காக ஐரோப்பிய ஒன்றியம் 90 பில்லியன் யூரோக்களை வழங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இடமிருந்து முன் வரிசையில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜேர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஸ்டீவ் விட்காஃப் நிற்கின்றனர். இடமிருந்து பின் வரிசையில், நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெட்ரிக்சன், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், டச்சு பிரதமர் டிக் ஸ்கூஃப், ஸ்வீடிஷ் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் ஆகியோர் ஜேர்மனியின் பேர்லினில் உள்ள சான்சலரியில் ஒன்றாக நின்றனர், திங்கள், டிசம்பர் 15, 2025. (AP புகைப்படம்/மார்கஸ் ஷ்ரைபர், பூல்) [AP Photo/Markus Schreiber]

ரஷ்யாவிற்கு எதிரான போரை உக்ரேன் தொடரவும், தன்னை மேலும் ஆயுதபாணியாக்கிக் கொள்ளவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 90 பில்லியன் யூரோக்களை வட்டி இல்லாத கடனாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) உக்ரேனுக்கு வழங்குகிறது. பல மணிநேரம் நீடித்த இரவு நேரக் கூட்டத்திற்குப் பிறகு, டிசம்பர் 19 அன்று, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இதற்குச் சம்மதம் தெரிவித்தனர்.

ஐரோப்பாவில் முடக்கப்பட்டிருக்கும் 210 பில்லியன் யூரோ மதிப்புள்ள ரஷ்யாவின் அரசுச் சொத்துக்களை உக்ரேனுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தும் ஆரம்பத் திட்டம், குறிப்பாக ஜேர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரால் முன்வைக்கப்பட்டது. ஆனால், பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எதிர்ப்பால் அது தோல்வியடைந்தது.

தற்போது ஐரோப்பிய ஒன்றியம் போருக்கு நிதியை வழங்கக் கடன்களைப் பெறுகிறது. இதன் மூலம் ஜேர்மனி எப்போதும் தடுத்து வந்த யூரோ பத்திரங்கள் (Eurobonds) எனப்படும் கூட்டு ஐரோப்பியக் கடன் திட்டத்தை மறைமுகமாக உருவாக்கியுள்ளது. போருக்காக ரஷ்யாவிடமிருந்து இழப்பீடு பெற்ற பின்னரே உக்ரேன் இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இதற்காக ரஷ்யாவின் அரச நிதிகள் தொடர்ந்து முடக்கப்படும். இருப்பினும், இராணுவ ரீதியாக சாதகமான நிலையில் இருக்கும் மாஸ்கோ, இத்தகைய இழப்பீட்டு ஒப்பந்தத்திற்கு உடன்படுவது மிகவும் சாத்தியமற்றது. எனவே, இந்தக் கடன் சுமை ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதே விழ வாய்ப்புள்ளது.

உக்ரேன் போரில் ஐரோப்பிய ஒன்றியம் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்வது, இது நேட்டோவிற்கும் (NATO) ரஷ்யாவிற்கும் இடையிலான ஒரு பினாமி யுத்தம் என்பதை உறுதிப்படுத்துகிறது. வெளிநாட்டு நிதி உதவி இல்லையென்றால், உக்ரேன் சில வாரங்களிலேயே திவாலாகிவிடும். போர் தொடங்கியதிலிருந்து சுமார் 400 பில்லியன் யூரோ இராணுவ மற்றும் நிதி உதவி கியேவிற்குச் சென்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கூடுதல் 90 பில்லியன் யூரோக்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான நிதித் தேவையை ஒரு பகுதி மட்டுமே பூர்த்தி செய்யும். சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தத் தேவையை 136 பில்லியன் யூரோக்களாக மதிப்பிட்டுள்ளது.

உக்ரேனுக்காகச் செலவிடப்படும் பில்லியன் கணக்கான நிதியையும், ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காகத் தங்கள் சொந்தப் படைகளை பாரியளவில் மீள் ஆயதமயப்படுத்துவதையும் அரசியல்வாதிகள், ஜெனரல்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நியாயப்படுத்தி வருகிறார்கள். “நமக்கு முன்னால் ஒரு எளிய தேர்வு உள்ளது: இன்று பணம் அல்லது நாளை இரத்தம்,” என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் கூறினார். உக்ரேன் போர்க் களங்களில் புட்டின் தடுத்து நிறுத்தப்படாவிட்டால், அவர் மற்ற நாடுகளையும் ஆக்கிரமித்து ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் அடிமைப்படுத்துவார் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆயிரக்கணக்கான முறை மீண்டும் மீண்டும் சொல்லப்படும் இந்தப் பிரச்சாரத்திற்கு யதார்த்தத்தில் எந்த அடிப்படையும் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கையும், பொருளாதார உற்பத்தியில் ஒன்பதில் ஒரு பங்கையும் மட்டுமே கொண்டுள்ள ரஷ்யாவிற்கு, ஐரோப்பாவைக் கைப்பற்ற எந்த வழியும் இல்லை, அதற்கு விருப்பமும் இல்லை. உக்ரேனில் இடம்பெற்றுவரும் நான்கு ஆண்டு காலப் போரில் இலட்சக்கணக்கான படையினர்கள் கொல்லப்பட்ட போதிலும், அதனால் சில பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

சோவியத் ஒன்றியத்தின் பொதுச் சொத்துக்களைச் சூறையாடி பணக்காரர்களான ரஷ்யாவின் பெரும் செல்வந்த தன்னலக் குழுக்கள், தங்கள் முதலீடுகளை மேற்கத்திய ஆடம்பர விடுதிகள், உல்லாசக் கப்பல்கள் மற்றும் கால்பந்து கிளப்களில் செய்துள்ளனர். அவர்கள் மேற்கத்திய பெரும் செல்வந்தர்களுக்கு இணையாக ஓர் இடத்தைப் பெறவே விரும்புகிறார்கள்.

1991-இல் வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டபோது, அதற்கு நேர்மாறாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், கிழக்கு ஐரோப்பா முழுவதும் நேட்டோ விரிவடைந்ததை புட்டின் அரசாங்கம் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டது. மேற்கத்திய இராணுவக் கூட்டணி உக்ரேன் மற்றும் ஜோர்ஜியா மீது கட்டுப்பாட்டைப் பெற முயன்று, ரஷ்யாவைச் சுற்றி வளைக்க அச்சுறுத்தியபோது மட்டுமே மாஸ்கோ எதிர்வினையாற்றியது. மக்களின் ஆதரவைப் பெற முடியாத நிலையில், அது உக்ரேன் மீது இராணுவத் தாக்குதலை நடத்தியது. இது, ரஷ்ய மற்றும் உக்ரேன் மக்களிடையே ஒரு ஆழமான பிளவை ஏற்படுத்தியதோடு, நேட்டோவிற்குப் போர்ப் பிரச்சாரம் செய்ய ஒரு நல்ல வாய்ப்பையும் வழங்கியது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போட்டி

உக்ரேன் போரானது இப்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு இடையே வளர்ந்து வரும் போட்டியால் மறைக்கப்பட்டுள்ளது. இராணுவத் தோல்விகள் மற்றும் ஜெலென்ஸ்கி ஆட்சியின் படிப்படியான வீழ்ச்சியால் ஏமாற்றமடைந்த வாஷிங்டன், தனது நிதி ஆதரவை பெருமளவு திரும்பப் பெற்றுக்கொண்டதோடு, ஐரோப்பியர்களின் இழப்பில் மாஸ்கோவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதுக்கு முயல்கிறது.

ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்காவின் வலிமைமிக்க இராணுவ இயந்திரத்தை அதன் முக்கிய எதிரியான சீனாவிற்கு எதிராக நிலைநிறுத்துகிறார். மேலும் 1823-ஆம் ஆண்டின் மன்ரோ கோட்பாட்டை (Monroe Doctrine) மேற்கோள் காட்டி தெற்கு, மத்திய மற்றும் வட அமெரிக்கா (கிரீன்லாந்து உட்பட) மீதான அமெரிக்க மேலாதிக்கத்தை மீட்டெடுக்க முயல்கிறார். இதில் ஐரோப்பா ஒரு பங்காளியாக இல்லை, மாறாக ஒரு போட்டியாளராகவே பார்க்கப்படுகிறது.

இதுவே ட்ரம்ப்பின் புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் (National Security Strategy) சாராம்சமாகும். இது ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது ரஷ்யாவை இனி ஒரு எதிரியாகக் குறிப்பிடவில்லை, மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தைத் தாக்கி, ஐரோப்பிய ஒன்றியத்தை நிராகரிக்கும் அதிதீவிர வலதுசாரிக் கட்சிகளை ஆதரிக்கிறது. பகிரங்கமாக கசிந்த இந்த மூலோபாயத்தின் நீண்ட பதிப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து “வெளியே இழுக்கப்பட வேண்டிய” போலந்து மற்றும் மூன்று நாடுகளின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த திசை மாற்றத்தால், ஐரோப்பிய மற்றும் குறிப்பாக ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தொடர்வது இன்னும் முக்கியமானதாகிவிட்டது. இதற்கு பொருளாதார மற்றும் மூலோபாய ரீதியான காரணங்கள் உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தால் மற்ற எந்த ஐரோப்பிய நாட்டையும் விட ஜேர்மனியே அதிகமாக பயனடைந்துள்ளது. ஜேர்மன் நிறுவனங்கள், ஜேர்மனியை விட மூன்றில் ஒரு பங்கு அல்லது பாதி அளவு மட்டுமே ஊதியம் பெறும் தொழிலாளர்களை, சில மணிநேர பயண தூரத்திலேயே சுங்கத் தடைகள் இன்றி அணுக முடிகிறது. மிகக் குறைந்த ஊதியம் மற்றும் மதிப்புமிக்க மூலப்பொருட்களைக் கொண்ட உக்ரேனை இணைப்பது, இந்த விரிவாக்கத்தின் தர்க்கரீதியான தொடர்ச்சியாகும்.

மேலும், ரஷ்யாவிலிருந்து கிடைக்கும் மலிவான இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் மீது ஜேர்மனி இன்னும் சார்ந்துள்ளது. உக்ரேன் போரின் காரணமாக அவற்றை அது தயக்கத்துடன் கைவிட வேண்டியிருந்தது. இப்போது அதை வலிமையின் மூலம் கைப்பற்ற முயல்கிறது. ஒரு கண்டம் சார்ந்த சக்தியாக, முதன்மையாக கிழக்கு நோக்கி விரிவடைய விரும்பும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் விரிவாக்கத்திற்கு, ரஷ்யா அதன் பரந்த நிலப்பரப்பு மற்றும் பெரிய இராணுவத்துடன் ஒரு தடையாக உள்ளது. இது, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களிலும் நடந்தது, அப்போது ரஷ்யாவைக் கைப்பற்றுவதற்காக ஜேர்மனி உக்ரேனை ஆக்கிரமித்தது—ஆனால் இரண்டு முறையும் அது தோல்வியடைந்தது.

ஜேர்மனி மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டு வரும் இந்த பிரம்மாண்டமான இராணுவக் குவிப்பிற்கு இதுவே காரணமாக இருக்குதே ஒழிய, மாறாக “சுதந்திரம்,” “தன்னாட்சி” அல்லது “ஐரோப்பிய பாதுகாப்பு” மீதான அக்கறை அல்ல.

இந்த கோடை காலத்தில், அலாஸ்காவில் ட்ரம்ப் மற்றும் புட்டின் சந்தித்து உக்ரேன் ஒப்பந்தத்திற்கான முதல் படிகளில் உடன்பட்டதிலிருந்து, ஐரோப்பிய தலைவர்கள் அந்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கத் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர். கடந்த நவம்பர் இறுதியில், ட்ரம்ப்பின் சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜெரெட் குஷ்னர், புட்டினின் பல கோரிக்கைகளை ஏற்கும் 28 அம்சத் திட்டத்துடன் மாஸ்கோவிலிருந்து திரும்பியபோது, ஐரோப்பியர்கள் அதை “துரோகம்” என்று கதறினர்.

அதன்பிறகு பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன. மாஸ்கோ ஒப்புக் கொள்ள முடியாத அளவிற்கு அந்த 28 அம்சங்களை மாற்ற ஐரோப்பியர்கள் முயன்றனர். உக்ரேன் அதிகாரப்பூர்வமாக நேட்டோவில் சேராவிட்டாலும், அதற்கு இணையான “பாதுகாப்பு உத்தரவாதங்களை” அவர்கள் கோரினர். மேலும், உக்ரேன் தனது நிலப்பகுதிகளை ரஷ்யாவிற்கு விட்டுக் கொடுப்பதை முடிந்தவரை தடுக்க முயன்றனர்.

இருப்பினும், அவர்களால் அமெரிக்காவுடன் வெளிப்படையான முறிவை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், உக்ரேன் உளவுத் தகவல் மற்றும் வெடிமருந்து கொள்முதலுக்கு இன்னும் அமெரிக்க இராணுவ ஆதரவையே சார்ந்துள்ளது.

டிசம்பர் நடுப்பகுதியில், அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்களான விட்கோஃப் மற்றும் குஷ்னர், உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் பல ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் பேர்லினில் சந்தித்து அந்த 28 அம்சங்களைத் திருத்தினர். இதற்குப் பிறகு ஐரோப்பிய ஊடகங்கள், அமெரிக்கா இப்போது “பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு” ஒப்புக்கொண்டதாகக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.

எட்டு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், இங்கிலாந்து மற்றும் நோர்வே ஆகியவற்றின் தலைவர்கள், 8,00,000ம் படையினர்களைக் கொண்ட நிரந்தர ஆயுதப் படையை உருவாக்க உக்ரேனுக்கு ஆதரவளிப்பதாகவும், அமெரிக்க ஆதரவுடன் “பன்னாட்டுப் படையை” நிறுவுவதாகவும், விரிவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் “ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு வலுவான ஆதரவு” வழங்குவதாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.

இதற்கிடையில், விட்கோஃப் மற்றும் குஷ்னர் மியாமியில் ரஷ்யா மற்றும் உக்ரேன் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்குப் பிறகு ஐரோப்பியர்களின் முன்மொழிவுகளில் மிகக் குறைந்த அளவே எஞ்சியிருக்க வாய்ப்புள்ளது.

ஐரோப்பாவிற்குள் அதிகரித்து வரும் மோதல்கள்

அமெரிக்காவுடனான மோதலானது ஐரோப்பிய சக்திகளை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக, அவர்களை மேலும் பிளவுபடுத்தி வருகிறது. 1914 மற்றும் 1939 ஆம் ஆண்டுகளின் இரண்டு உலகப் போர்களுக்கு வழிவகுத்த ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான போட்டியை சமாளிப்பது, ஐரோப்பாவிலும் நேட்டோவிலும் அமெரிக்க மேலாதிக்கத்துடன் நெருக்கமாக தொடர்புடையது. இப்போது அந்த மோதல்கள் மீண்டும் வெடிக்கின்றன.

இது, விக்டர் ஓர்பன் (ஹங்கேரி), ஆண்ட்ரேஜ் பாபிஸ் (செக் குடியரசு), ரொபர்ட் ஃபிகோ (ஸ்லோவாக்கியா) போன்ற அதிதீவிர வலதுசாரி அரசாங்கத் தலைவர்களுக்கும், பிரதமர் டொனால்ட் டஸ்க் போலல்லாமல், ட்ரம்பின் பக்கம் நின்று சமீபத்தில் அவரை வெள்ளை மாளிகையில் சந்தித்த போலந்து ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கிக்கும் பொருந்தும். இதில் முன்னணி ஐரோப்பிய சக்திகளான ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலியும் அடங்கும்.

உக்ரேன் போருக்கு நிதி திரட்டுவதற்காக முடக்கப்பட்ட ரஷ்ய அரசு நிதியைத் திருடும் மெர்ஸின் முயற்சி தோல்வியடைந்ததைப் பற்றி, முன்னணி ஜேர்மன் ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ள ஆக்ரோஷமான தொனி, ஐரோப்பாவில் தனது தலைமைத்துவ உரிமையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஆணவத்தை முன்னறிவிக்கிறது.

F.A.Z. பத்திரிகையின் ஆசிரியர் பெர்தோல்ட் கோலர், செக் குடியரசு, ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரியை “சுதந்திரமான பயணிகள்” என்றும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு “அவமானம்” என்றும் கண்டித்தார். அவர்கள் “ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்துப் பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு நலன்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்,” ஆனால் புட்டினின் ஏகாதிபத்திய மற்றும் திருத்தல்வாத ரஷ்யாவுடனான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலில் “சுயநலமான சமரசக் கொள்கையைப் பின்பற்றி, ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவெடுக்கும் திறனை பலவீனப்படுத்துகிறார்கள்” என்று அவர் சாடினார்.

கூட்டு ஐரோப்பியக் கடனுக்கு வழிவகுக்கும் ஒரு கடன் தீர்வை ஏற்குமாறு பிரான்ஸ் மெர்ஸை வற்புறுத்தியதாகவும், அதற்காக அவர் “ஒரு விரும்பத்தகாத விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது” என்றும் கோலர் குற்றம் சாட்டினார்.

உக்ரேன் மோதல் எதைப் பற்றியது என்பதையும் கோலர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்: இது அமைதி அல்லது ஜனநாயகத்தைப் பற்றியது அல்ல, மாறாக ஒரு வல்லரசாக இருக்க வேண்டும் என்ற ஐரோப்பாவின் விருப்பத்தைப் பற்றியது. “புட்டினைத் தடுப்பதற்கு மட்டுமல்லாமல், ஐரோப்பா ஒரு ஒருங்கிணைந்த சக்தியாக இருக்கிறதா என்பதை வாஷிங்டனும் பெய்ஜிங்கும் மிக நெருக்கமாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. உலகைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற முயலும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள், கணக்கில் கொள்ள வேண்டிய ஒரு சக்தியாக ஐரோப்பா இருக்குமா அல்லது சர்வாதிகாரிகள் நினைத்தபடி கையாளக்கூடிய ஒரு அமைப்பாக இருக்குமா என்பதே கேள்வி,” என்று அவர் எழுதினார்.

ஐரோப்பாவில் ஜேர்மனியின் தலைமைத்துவக் கோரிக்கையை பிரான்சின் ஆளும் வர்க்கம் சந்தேகத்துடன் பார்க்கிறது. ஜனாதிபதி மக்ரோனும் சான்சலர் மெர்ஸும் ஐரோப்பிய ஒற்றுமையைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் நடைமுறைப் பிரச்சனைகள் வரும்போது மோதல்கள் தாராளமாக உள்ளன. இது பிரான்ஸ் ஆதரிக்கும் மற்றும் ஜேர்மனி கடுமையாக எதிர்க்கும் கூட்டு ஐரோப்பியக் கடனுக்கு மட்டுமல்லாமல், கூட்டு ஆயுதத் திட்டங்கள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களுக்கும் பொருந்தும்.

2014 முதல் செயல்பாட்டில் இருக்கும் ஐரோப்பாவின் மிக முக்கியமான ஆயுதத் திட்டமான எதிர்கால போர் விமான அமைப்பு (FCAS), இப்போது அதன் இறுதி மூச்சில் உள்ளது. புதிய போர் விமானம் மற்றும் பிற பாகங்களை யார் உருவாக்குவது மற்றும் கட்டமைப்பது என்பதில் பிரான்சின் டசோல்ட் குழுமமும் (Dassault Group), ஜேர்மனி பெரும் பங்குகளைக் கொண்டுள்ள ஏர் பஸும் (Airbus) உடன்பட முடியவில்லை. இந்த சர்ச்சை 100 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தத்தில் யார் பணம் சம்பாதிப்பது என்பது பற்றி மட்டுமல்ல, ஐரோப்பாவின் இராணுவ மேலாதிக்கம் பற்றியும் சர்ச்சை உள்ளது. முக்கியமான இராணுவத் தொழில்நுட்பங்களுக்கு ஜேர்மனியோ அல்லது பிரான்சோ ஒன்றையொன்று சார்ந்து இருக்க விரும்பவில்லை.

26 ஆண்டுகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் வான் டெர் லேயன் கடந்த சனிக்கிழமை கையெழுத்திட விரும்பிய மெர்கோசூர் நாடுகளான பிரேசில், ஆர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகியவற்றுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், பிரஸ்ஸல்ஸில் விவசாயிகள் அதற்கு எதிராக உரத்த குரலில் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கடைசி நிமிடத்தில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் போலந்து ஆகியவற்றால் தடுக்கப்பட்டது. இது ஜேர்மன் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய பின்னடைவாகும்.

புட்டினுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த மக்ரோன் எடுத்த சமீபத்திய முயற்சியையும் பேர்லின் சந்தேகத்துடன் பார்க்கிறது. முன்னதாக, இது குறித்து ஜேர்மனிக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

வலதுசாரி தேசியவாத கட்சியான தேசிய பேரணியின் மரின் லூ பென் அல்லது ஜோர்டான் பார்டெல்லா ஜனாதிபதி பதவியைப் பிடித்தால், ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையிலான மோதல்கள் இன்னும் தீவிரமடையும்.

ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குள் நிலவும் இந்த மோதல்கள் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் ஏறி நடத்தப்படுகின்றன. இராணுவ நவீனமயமாக்கல் மற்றும் உக்ரேன் போருக்காகச் செலவிடப்படும் பிரம்மாண்டமான தொகைகள், ஓய்வூதியம் மற்றும் சமூக நலச் செலவுகளில் வெட்டுக்களைக் கோருகின்றன. அதே நேரத்தில், சர்வதேச வர்த்தகப் போரின் விளைவாகப் பெருமளவிலான ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு ஏற்பட்டுள்ளன. ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கையில் தங்களுக்கு வெறுப்பு இருந்தபோதிலும், ஐரோப்பாவின் அதிகார மையங்கள், அவர் புலம்பெயர்ந்தோரை வேட்டையாடும் விதம், ஊடகங்களைத் கையாளுதல், இடதுசாரி எதிர்ப்பாளர்களுக்கு எதிரான அவரது கிளர்ச்சி மற்றும் அவரது சர்வாதிகார ஆட்சி முறைகளால் ஈர்க்கப்பட்டுள்ளன.

இதனால்தான் ஜேர்மனிக்கான மாற்றுக் கட்சி (AfD), பிரான்சில் தேசிய பேரணி (RN), மற்றும் இத்தாலியின் ஃபிரடெல்லி (Fratelli) போன்ற வலதுசாரி அதி தீவிரவாதக் கட்சிகள் ஆளும் வர்க்கத்தினரிடையே வளர்ந்து வரும் ஆதரவைப் பெறுகின்றன. மேலும், அவர்களின் இனவெறி பிடித்த அகதிகள் கொள்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் செயல்படுத்தப்படுகின்றன. இன்றைய ஐரோப்பாக் கண்டம் பாசிசம் மற்றும் போருக்குள் விழுந்த 1930களை அதிகளவில் நினைவூட்டுகிறது.

ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம் மட்டுமே முதலாளித்துவத்துவம் மீண்டும் காட்டுமிராண்டித்தனத்திற்குச் செல்வதைத் தடுக்க முடியும். அது போர், சமூகச் செலவின வெட்டுக்கள், ஆட்குறைப்பு மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை, அவற்றிற்கு காரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்க வேண்டும். அது, போர் வெறியர்கள், பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மாற்றாக, ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகளை (United Socialist States of Europe) முன்னிறுத்த வேண்டும்.

Loading