சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் (Sosyalist Eşitlik Partisi – Dördüncü Enternasyona) கொள்கை அறிக்கை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) அரசியல் ஐக்கியம் கொண்டிருக்கும் சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலம் (துருக்கி), 2025 ஜூன் 13–15 தேதிகளில் அதன் ஸ்தாபக மாநாட்டை நடத்தியது. கட்சியின் அதிகாரப்பூர்வ உருவாக்க செயல்முறை கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. கட்சியின் காங்கிரஸில் ஒருமனதாக பின்வரும் மூன்று தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன: அவை, “கொள்கை அறிக்கை” (அதிகாரப்பூர்வ வேலைத்திட்டம்), “சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள்” மற்றும் “அரசியலமைப்பு” ஆகியவையாகும்.  இது அறிக்கையின் நான்காவது மற்றும் இறுதிப் பகுதியாகும். பகுதி 1, பகுதி 2, மற்றும் பகுதி 3-ஐப் பார்க்கவும்.

வெளிநாட்டவர் மீதான வெறுப்புக்கு எதிராகவும், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்காகவும்

44. துருக்கியில் வாழும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் ஜனநாயக உரிமைகளை நிபந்தனையின்றி பாதுகாப்பதே ஐக்கியத்தை உருவாக்குவதற்கான ஒரு அத்தியாவசிய முன்நிபந்தனையாகும். முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் பிராந்தியம் எங்கிலுமான நேட்டோவின் போர்களால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கான தங்கள் சொந்த பொறுப்பில் இருந்து கவனத்தை திசை திருப்பும் பொருட்டு, அனைத்து ஸ்தாபக கட்சிகளும் ஊடகங்களும் வெளிநாட்டவர் மீதான வெறுப்பைத் தூண்டிவிடுகின்றன. மேலும், அகதிகளுக்கு எதிரான வேட்டையாடல்களைத் தூண்டிவிடுகின்றன. பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மைக்காக ஏகாதிபத்திய போரில் இருந்து தப்பி வெளியேறி வரும் புலம்பெயர்ந்தோர் அல்லது அகதிகளை பலிகடா ஆக்குவதற்கான அத்தனை முயற்சிகளையும், பேரினவாத தப்பெண்ணங்களைத் தூண்டிவிடுவதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும், வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கும் எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளையும் சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது. ஐரோப்பாவை ஒரு கோட்டையாக மாற்றி, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்களின் மரணத்திற்கு வழிவகுக்கும் துருக்கியுடன் இணைந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனமான எல்லைக் கட்டுப்பாட்டு முறையை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது.

45. துருக்கி தனது புவிசார் அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக, ஏகாதிபத்தியத் தலையீடுகளால் சீரழிக்கப்பட்ட தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி, மனிதாபிமானமிக்க வாழ்க்கையைத் தேடி ஐரோப்பாவிற்குச் செல்லும் மக்களின் ஒரு இடைத்தங்கல் நாடாக இருந்து வருகிறது. சிரியாவில் நடந்த ஆட்சி மாற்றப் போரினால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய 3.5 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள், துருக்கிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான இழிவான ஒப்பந்தங்களின் விளைவாகத் துருக்கியில் சிக்கியுள்ளனர். ஒவ்வொரு நாட்டுத் தொழிலாளர்களும் தாங்கள் விரும்பும் இடத்தில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் உள்ள நிபந்தனையற்ற உரிமையை சோசலிச சமத்துவக் கட்சி ஆதரிக்கிறது. “பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள்” என வகைப்படுத்தப்பட்ட பொருளாதாரக் புலம்பெயர்ந்தோர் உட்பட அனைத்து குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளுக்கு முழுமையான ஜனநாயக மற்றும் குடியுரிமை உரிமைகளை வழங்குமாறு நாங்கள் கோருகிறோம்.

ஐக்கிய ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு சோசலிச அரசுகளுக்காக

46. உலக ஏகாதிபத்திய அமைப்புமுறையின் புவிசார் அரசியலில் துருக்கி வகிக்கும் இன்றியமையாத நிலையின் காரணமாக, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளால் துருக்கி நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள அதேவேளையில், இந்த நாட்டில் வர்க்கப் போராட்டம் பிரமாண்டமான பரிமாணங்களை எடுக்கும் என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது. இது, துருக்கியிலும் மத்திய கிழக்கு எங்கிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

47. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மத்திய கிழக்கில் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தியுள்ளதுடன், துருக்கியையும் விழுங்கக்கூடிய மிகக் கொடிய பிராந்தியப் போரின் அபாயத்தை முன்வைக்கிறது. ஈராக், சிரியா மற்றும் ஏமனைத் தொடர்ந்து, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளும் இஸ்ரேலும், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு மத்தியில் ஈரான் மீது ஒரு கொலைவெறி ஏகாதிபத்தியப் போரைத் தொடங்கியுள்ளன. மத்திய கிழக்கிலும் மற்ற இடங்களிலும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு எதிரான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை சோசலிச சமத்துவக் கட்சி கொள்கை ரீதியாக எதிர்க்கிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) கீழ் உள்ள தனது சகோதரக் கட்சிகளுடன் இணைந்து, இந்த ஆக்கிரமிப்பிற்கும் அதன் மூலமான முதலாளித்துவத்திற்கும் எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டலுக்காக இது போராடுகிறது. இந்த இரத்தக்களரி வரலாற்றில், பிராந்தியம் முழுவதும் உள்ள ஊழல் நிறைந்த ஆட்சிகளும் முதலாளித்துவ உயரடுக்குகளும் உடந்தையாக இருந்து, முழு சமூகங்களையும் பேரழிவிற்கு உட்படுத்துகின்றன. மத்திய கிழக்கின் தொழிலாள வர்க்கம்தான், போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே சமூக சக்தியாகும். இது, அனைத்து தேசிய, இன, மத மற்றும் குழுவாத பிளவுகளைக் கடந்து ஐக்கியப்பட்டு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. இப்பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு முதலாளித்துவ தேசியவாத ஆட்சியோ அல்லது கட்சியோ, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் கூட்டாளியாக இல்லை. ஏகாதிபத்தியம் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளான துருக்கிய, குர்திஷ், இஸ்ரேலிய, அரபு மற்றும் ஈரானிய ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக வெற்றிகரமான போராட்டத்தை முன்னெடுக்க, மத்திய கிழக்குத் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று மற்றும் சர்வதேச அனுபவத்தின் அடிப்படையில், ஒரு தெளிவான சோசலிச முன்னோக்கும், வேலைத்திட்டமும் தேவை. மத்திய கிழக்கை மறு பங்கீடு செய்வதையும் மறு காலனியாக்கம் செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம், மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்துடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது.

48. வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளால் நடத்தப்படும் முடிவற்ற போர்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களிடையே மத்திய கிழக்குத் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் தங்கள் கூட்டாளிகளைக் காண்பார்கள். மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக இப்பிராந்தியத்தில் உள்ள தங்கள் வர்க்க சகோதரர்களின் போராட்டத்திற்கு, அவர்கள் வலுவான ஆதரவை வழங்குவார்கள். ஐரோப்பாவிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடையே ஒரு பாலமாக இருக்கும் துருக்கியில் ஏகாதிபத்தியப் போருக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் பதில், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகள் என்பதாகும்.

தேசியவாதத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம்

49. சோசலிச சமத்துவக் கட்சி, இப்பிராந்தியத்தில் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின், குறிப்பாக குர்திஷ் மற்றும் பாலஸ்தீன மக்களின் ஜனநாயக, கலாச்சார மற்றும் அரசியல் உரிமைகளுக்காகப் போராடுகிறது. மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய போர்கள் மற்றும் தலையீடுகளின் மையத்தில் நான்கு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள குர்திஷ் மக்களின் ஜனநாயக மற்றும் கலாச்சார உரிமைகளும், சியோனிச இஸ்ரேலால் இன அழிப்பு மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளும், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு சோசலிச கூட்டமைப்பின் கீழ் மட்டுமே பாதுகாக்கப்பட முடியும்.

50. ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பது என்பது ஏகாதிபத்திய சார்பு, முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களை ஆதரிப்பதோ அல்லது பிரிவினைவாதத்தைப் பாதுகாப்பதோ அல்ல. குர்திஷ் மற்றும் பாலஸ்தீன மக்களின் கசப்பான வரலாறு, பல்வேறு முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசியவாத தலைமைகளின் காட்டிக்கொடுப்புகளால் குறிக்கப்படுகிறது. முதலாளித்துவ தேசியவாதம் வங்குரோத்து அடைந்துவிட்டது.

51. பொருளாதாரத்தின் உலகளாவிய ஒருங்கிணைப்பு, தேசிய-அரசு மற்றும் அனைத்து வகையான தேசியவாத மற்றும் சீர்திருத்தவாத வேலைத்திட்டங்களையும் பலவீனப்படுத்தி, இந்தத் தலைமைகளை ஏகாதிபத்திய அரசுகளுடன் ஒத்துழைப்பதற்கு அதிகளவில் இட்டுச் சென்றுள்ளது. பால்கன் பகுதியில், ஏகாதிபத்திய சக்திகளால் “மனித உரிமைகள்” என்ற போலி முழக்கத்தின் கீழ் யுகோஸ்லாவியா சிதைக்கப்பட்டதும், மிக சமீபத்தில் கொசோவோ என்ற துணை அரசு நிறுவப்பட்டதும் இதற்கு ஒரு தெளிவான உதாரணமாகும். மேலும், ரஷ்யாவை இலக்காகக் கொண்ட ஏகாதிபத்திய சக்திகளால் காகசஸில் தூண்டப்பட்ட இனப் பிரிவினைவாதத்தைப் பயன்படுத்துதல்; ஏகாதிபத்திய சக்திகள், இந்திய முதலாளித்துவம் மற்றும் இலங்கை அரசு ஆகியவற்றுக்கு இடையேயான சூழ்ச்சிகளால் அவர்களின் துயரமான மற்றும் இரத்தக்களரி முடிவைத் தயாரித்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்; தேசியவாதத் தலைமைகளுடன் மத்திய கிழக்கில் பாலஸ்தீனியர்கள் அனுபவித்த முடிவில்லா பேரழிவுகள்; இறுதியாக, ஈராக்கில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் ஒத்துழைப்பாளர்களாகச் செயல்பட்ட அல்லது சிரியாவில் நேட்டோவின் ஆட்சி மாற்றத்திற்கான போரில் ஒரு முக்கிய பினாமி சக்தியாக வெளிப்பட்ட குர்திஷ் தேசியவாத இயக்கங்கள் ஆகியவைகளும் அடங்கும். கடந்த முப்பது ஆண்டுகளின் முக்கிய எடுத்துக்காட்டுகளாக இருக்கும் இந்த முதலாளித்துவ அல்லது குட்டி முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் அனைத்தும், ஏகாதிபத்தியத்தை நோக்கிய “தேசிய விடுதலை” என்று அழைக்கப்படுவது பேரழிவைத் தவிர வேறொன்றையும் கொண்டு வரவில்லை என்பதைக் காட்டுகின்றன.

52. தாய்மொழியில் கல்வி கற்கவும், குர்திஷ் மொழிக்கான அரசியலமைப்பு உத்தரவாதத்திற்காகவும், மற்ற அனைத்து ஜனநாயக மற்றும் கலாச்சார உரிமைகளை அங்கீகரிக்கவும், அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் போராடும் சோசலிச சமத்துவக் கட்சி, உழைக்கும் மக்கள் ஏங்கும் நீடித்த அமைதி மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான ஒரே வழி, மத்திய கிழக்கிலும் ஏகாதிபத்திய நாடுகளிலும் உள்ள அனைத்து தேசிய இன தொழிலாளர்களும் உலகளாவிய சோசலிசத்திற்காகவும், போருக்கும் நவதாராளவாத ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒன்றிணைவது மட்டுமே என்று வலியுறுத்துகிறது. இதன் பொருள், உலக சோசலிசக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக அமையும் மத்திய கிழக்கின் சோசலிசக் கூட்டமைப்பிற்காகப் போராடுவதாகும்.

53. துருக்கியின் மக்கள்தொகை மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக இருந்து, முறையான அரசு கொள்கைகளால் மக்கள்தொகையில் படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருக்கு எதிரான பேரினவாதத் தாக்குதல்கள் மற்றும் வரலாற்றுத் திரிபுகளுக்கு எதிராகவும் சோசலிச சமத்துவக் கட்சி உறுதியுடன் போராடுகிறது. இந்தச் சமூகங்களை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையின் கீழ் ஐக்கியப்படுத்த இது முயன்று வருகிறது.

ஜனநாயக மத்தியத்துவம்

54. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்திற்கு அமைப்பு (organization) தேவை, ஒழுக்கம் (discipline) இன்றி அமைப்பு என்பது சாத்தியமற்றது. ஆனால், புரட்சிகரப் போராட்டத்திற்குத் தேவையான ஒழுக்கத்தை மேலிருந்து அதிகாரத்துவ ரீதியாகத் திணிக்க முடியாது. அது கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் உருவாக வேண்டும். இந்த நம்பிக்கையானது, ஜனநாயக மத்தியவாதக் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த சோசலிச சமத்துவக் கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்பில் வெளிப்பாட்டைக் காண்கிறது. கொள்கைகளை உருவாக்குவதிலும் பொருத்தமான தந்திரோபாயங்களை வகுப்பதிலும், கட்சிக்குள் முழுமையான ஜனநாயகம் நிலவ வேண்டும். கட்சியின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த உள்விவாதங்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை. தலைவர்கள் உறுப்பினர்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் விமர்சனத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டவர்கள். விமர்சனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத தலைமைத்துவ வேட்பாளர்கள், அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை நிறுவிய ஜேம்ஸ் பி. கேனனின் வார்த்தைகளைச் சிந்திக்க வேண்டும்: “உண்மையானவராக இருக்கும் பட்சத்தில், உண்மை யாரையும் காயப்படுத்தாது.” ஆனால் கொள்கை உருவாக்கம் என்பது பரந்த விவாதத்தையும் வெளிப்படையான, நேர்மையான விமர்சனத்தையும் கோருகிறது என்றால், அதன் அமலாக்கம் கடுமையான ஒழுக்கத்தைக் கோருகிறது. கட்சிக்குள் ஜனநாயக ரீதியாக எடுக்கப்படும் முடிவுகள் அனைத்து உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். முடிவுகளைச் செயல்படுத்துவதில் மத்தியத்துவத்தின் இந்த அத்தியாவசியக் கூறுகளை எதிர்ப்பவர்கள், ஒழுக்கத்திற்கான கோரிக்கையைத் தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை மீறுவதாகக் கருதுபவர்கள், புரட்சிகர சோசலிஸ்டுகள் அல்ல, மாறாக வர்க்கப் போராட்டத்தின் தாக்கங்களையும் தேவைகளையும் புரிந்து கொள்ளாத அராஜகவாத தனிநபர்வாதிகள் (anarchistic individualists) ஆவர்.

வர்க்க நனவு, கலாச்சாரம் மற்றும் உலக சோசலிச வலைத் தளம்

55. சோசலிசத்திற்கான போராட்டம், துருக்கியிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர் இயக்கத்தின் அரசியல், புத்திஜீவித மற்றும் கலாச்சார அந்தஸ்தில் ஒரு மகத்தான வளர்ச்சியைக் கோருகிறது. நடைமுறைவாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு மாறாக, மிக உயர்ந்த தத்துவார்த்த மட்டத்தில் செயல்படும் ஒரு இயக்கம் மட்டுமே தொழிலாள வர்க்கத்தை அதன் பதாகைக்கு ஈர்ப்பதற்கும், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கும், அதற்கும் அப்பாலும் ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் தகைமை நிரூபிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று சோசலிச சமத்துவக் கட்சி உறுதியாக நம்புகிறது. முதலாளித்துவ அரசியல்வாதிகள் தொழிலாள வர்க்கத்தைத் தங்களின் சொந்த அறிவுசார் தரம் குறைந்த மட்டத்திற்கு இழுக்க முயலும் வேளையில், சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தைத் தனது வரலாற்றுப் பணிகளுக்குத் தேவையான நிலைக்கு உயர்த்தப் பாடுபடுகிறது. அரசியல் மட்டுமல்ல, அறிவியல், வரலாறு, தத்துவம், இலக்கியம், திரைப்படங்கள், இசை, நுண்கலைகள் மற்றும் பண்பாட்டின் அனைத்துப் பகுதிகளும் சோசலிசக் கல்வியின் எல்லைக்குள் வருகின்றன. தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் மிக முக்கியமான கருவி உலக சோசலிச வலைத் தளம் (wsws.org) ஆகும். உலக அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்திகள் குறித்த அதன் தினசரி பகுப்பாய்வு, முதலாளித்துவத்தின் சமூக யதார்த்தங்களை அம்பலப்படுத்துதல், தொழிலாளர்களின் போராட்டங்கள் பற்றிய செய்திகள், கலாச்சாரத்தின் இன்றியமையாத பிரச்சினைகள் மீதான வர்ணனைகள், வரலாற்று மற்றும் தத்துவார்த்த கருப்பொருள்கள் மீதான விவாதம், மற்றும் புரட்சிகர மூலோபாயம், தந்திரோபாயங்கள் மற்றும் நடைமுறை ஆகியவற்றின் இன்றியமையாத பிரச்சினைகளை ஆராய்வதுடன், உலக சோசலிச வலைத் தளம் சமகால உலக மார்க்சிச இயக்கத்தை உருவாக்குவதில் ஒரு தீர்க்கமான பாத்திரம் வகிக்கிறது.

புரட்சிகர மூலோபாயமும் இடைமருவு கோரிக்கைகளும்

56. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட, சோசலிச சமத்துவக் கட்சியின் மூலோபாய நோக்கம், முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டத்திற்கும், தொழிலாளர்களின் அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கும் மற்றும் ஒரு சோசலிச சமூகத்தை உருவாக்குவதற்கும், தொழிலாள வர்க்கத்திற்கு கல்வியூட்டுவதும் தயாரிப்பதும் ஆகும். எமது நோக்கம் முதலாளித்துவத்தை சீர்திருத்துவது அல்ல, மாறாக அதை தூக்கியெறிவது ஆகும். எவ்வாறெனினும், இந்த இலக்கை அடைவதற்கு, பரந்த தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து மிகவும் கவனமாகவும் விரிவான கவனத்தை செலுத்துவதும், அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் கோரிக்கைகளை உருவாக்குவதும் அவசியமாகும். சோசலிசப் புரட்சியின் முன்னோக்கிற்கும் தொழிலாள வர்க்கம் ஈடுபட்டுள்ள உறுதியான போராட்டங்களுக்கும் இடையிலான ஒரு இணைப்பை நடைமுறையில் ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத்தை சோசலிச சமத்துவக் கட்சி அங்கீகரிக்கிறது. இந்த முயற்சியில், சோசலிச சமத்துவக் கட்சியின் பணியானது லியோன் ட்ரொட்ஸ்கி தனது இடைமருவு வேலைத்திட்டத்தில் பரிந்துரைத்த அணுகுமுறையால் வழிநடத்தப்படுகிறது: “தற்போதைய கோரிக்கைகளுக்கும் புரட்சியின் சோசலிச வேலைத்திட்டத்திற்கும் இடையில் ஒரு பாலத்தைக் கண்டறிய தினசரி போராட்டத்தின் செயல்பாட்டில் மக்களுக்கு உதவுவது அவசியம்” என்று அவர் எழுதினார். “இந்தப் பாலம், இன்றைய நிலைமைகளிலிருந்தும், தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளின் இன்றைய நனவிலிருந்தும் உருவாகும் இடைமருவு கோரிக்கைகளின் அமைப்பை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், மேலும் அது மாறாத வகையில் ஒரு இறுதி முடிவிற்கு இட்டுச் செல்ல வேண்டும்: அதுவே பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும்.”

57. இத்தகைய கோரிக்கைகளில் பின்வருவன அடங்கும்: அனைவருக்கும் வேலைவாய்ப்பு, தரமான மருத்துவப் பாதுகாப்பு மற்றும் கல்விக்கான தடையற்ற அணுகல், கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வீட்டுவசதி, கடனை அடைக்கத் தவறியதால் ஏற்படும் சொத்துப் பறிமுதல் (foreclosures) மற்றும் வெளியேற்றங்களை ரத்து செய்தல், பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியங்களை தானாகவே சரிசெய்தல், பணியிடங்களை ஜனநாயகப்படுத்துதல், பெருநிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதிப் பதிவேடுகளைப் பொதுமக்கள் தடையின்றி ஆய்வு செய்தல், நிர்வாகிகளின் ஊதியங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்தல், ஊதியக் குறைப்பு இன்றி வேலை நேரத்தைக் குறைத்தல், உண்மையான முற்போக்கான வருமான வரியை விதித்தல் மற்றும் பரம்பரை ரீதியாக மாற்றப்படும் பெரும் தனிநபர் சொத்துக்கள் மீது குறிப்பிடத்தக்கக் கட்டுப்பாடுகளை விதித்தல், தேசிய மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு அவசியமான பெருநிறுவனங்களைத் தேசியமயமாக்குதல் மற்றும் அவற்றின் மீது ஜனநாயக ரீதியிலான தொழிலாளர் கட்டுப்பாட்டை நிறுவுதல், மற்றும் பிற ஜனநாயக மற்றும் சமூக நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்குகின்றன.

58. இடைமருவு கோரிக்கைகள் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு பரந்த பிரச்சாரத்தின் பாகமாக இருக்கும் அளவிற்கு தொழிலாள வர்க்கத்தை அரசியல் அணிதிரட்டுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கும். இடைமருவு வேலைத்திட்டம் என்பது ஒரு விருப்பப்பட்டியலோ (á la carte menu) அல்லது பொருத்தமான அரசியல் சூழல் அல்லது பரந்த அரசியல் இலக்குகளின் குறிப்பு இன்றி தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கப்படும் கோரிக்கைகளோ அல்ல. இடைமருவு வேலைத்திட்டம், சோசலிசத்திற்கான ஒரு பாலமாகச் செயல்பட வேண்டுமானால், அதன் இலக்கை தொழிலாள வர்க்கத்திடமிருந்து இரகசியமாக வைத்திருக்க முடியாது.

தொழிலாள வர்க்கமும் சோசலிசப் புரட்சியும்

59. சோசலிச சமத்துவக் கட்சியின் பணியானது, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் மற்றும் அதன் தலைவிதி குறித்த அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டுள்ளது. இந்த நம்பிக்கை மேம்பட்ட அறிவியல் கோட்பாடு மற்றும் செழுமையான வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தது. ஆனால், சோசலிசப் புரட்சியின் வெற்றியானது தொழிலாளர்களின் நனவான போராட்டங்களிலேயே தங்கியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் விடுதலை என்பது, இறுதிப் பகுப்பாய்வில், தொழிலாள வர்க்கத்தின் சொந்தப் பணியாகும். எங்கெல்ஸ் மிகச்சிறப்பாகக் குறிப்பிட்டது போல: “சமூக அமைப்பின் முழுமையான மாற்றத்தைப் பற்றிய கேள்வி எழும் இடத்தில், வெகுஜன மக்களே அதில் ஈடுபட வேண்டும், எதற்காகப் போராடுகிறோம் என்பதைத் தங்களின் உடல் மற்றும் ஆன்மாவால் ஏற்கனவே அவர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.” எனவே, தொழிலாளர்கள் தாங்களாகவே விரும்பும் போது மட்டுமே சோசலிசத்தை நிறுவ முடியும். நெருக்கடியால் பாதிக்கப்பட்ட முதலாளித்துவத்தின் அடிகளின் கீழ் அந்த முடிவு எடுக்கப்படும் போது, துருக்கியத் தொழிலாளர்கள் உலக சோசலிசப் புரட்சியின் முன்னணிப் படையில் தங்கள் இடத்தைப் பிடிப்பதைத் தடுக்க பூமியில் எந்த சக்தியும் இல்லை.

Loading