மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த சனிக்கிழமை, வெனிசுவேலா மீதான அமெரிக்கத் தாக்குதல் மற்றும் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் உலகளாவிய கொள்ளை நடவடிக்கையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ரஷ்ய கடற்படையுடனான நேரடி மோதலுக்கு மத்தியில், நடுக்கடலில் ரஷ்யக் கொடியுடன் பயணித்த எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. அத்துடன் பில்லியன் கணக்கிலான டாலர் மதிப்புள்ள வெனிசுவேலாவின் எண்ணெயைச் சூறையாடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதுடன், கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்காக நேட்டோ நட்பு நாடான டென்மார்க் மீது இராணுவத் தாக்குதலை நடத்துவதே ஒரு “விருப்பத் தேர்வாக” இருப்பதாக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று, அமெரிக்கப் படைகள் மேலும் இரண்டு எண்ணெய் கப்பல்களைக் கைப்பற்றின. இதன் மூலம் தற்போது அமெரிக்காவின் வசம் உள்ள மொத்தக் கப்பல்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
இந்த எண்ணெய் கப்பல் கைப்பற்றல்கள் என்பது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் வெனிசுவேலா மற்றும் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் மேலாதிக்கம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான முற்றுகை மற்றும் போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் ட்ரம்ப், அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளான அனைத்து எண்ணெய் கப்பல்களும் வெனிசுவேலாவுக்குள் நுழைவதற்கும் அல்லது அங்கிருந்து வெளியேறுவதற்கும் “முழுமையான முற்றுகைக்கு” உத்தரவிட்டார்.
கடந்த புதன்கிழமை இரண்டு எண்ணெய் கப்பல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஐஸ்லாந்திற்கு தெற்கே வட அட்லாண்டிக் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்ட ரஷ்யக் கொடி ஏந்திய மெரினேரா (Marinera) என்ற கப்பலும், கரீபியன் அருகே சீன நிறுவனத்தால் இயக்கப்படும் ‘சோபியா’ (Sophia) என்ற கப்பலும் கைப்பற்றப்பட்டுள்ளன. மெரினேரா கப்பல் கைப்பற்றப்பட்ட நிகழ்வு அமெரிக்க-ரஷ்ய மோதலின் தீவிரத்தை அதிகரித்துள்ளது. ரஷ்ய கடற்படைக் கப்பலும் நீர்மூழ்கிக் கப்பலும் பாதுகாப்புக்கு வந்துகொண்டிருந்த போதே, அமெரிக்கச் சிறப்புப் படையினர்கள் அந்தத் எண்ணெய்க் கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.
ரஷ்ய போர்க்கப்பல்களுடன் நேரடி மோதல் தவிர்க்கப்பட்ட போதிலும், இது ஒரு மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டது. இதில் “இரவு வேட்டைக்காரர்கள்” என்று அழைக்கப்படும் அமெரிக்க இராணுவத்தின் 160-வது சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் விமானப்படை, P-8 போஸிடான் நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள், F-35 போர் விமானங்கள் மற்றும் AC-130J துப்பாக்கி ஏந்திய போர்க் கப்பல்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
முன்னர் ‘பெல்லா 1’ என்று அழைக்கப்பட்ட ‘மெரினேரா’ எண்ணெய் கப்பல், டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட முதல் அமெரிக்கக் கைப்பற்றல் முயற்சியை முறியடித்த பிறகு, கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்க முற்றுகையிலிருந்து தப்பிச் சென்றுகொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலைக் கடந்து தப்பிச் செல்லும்போது, அந்தக் கப்பல் தனது பெயரை மாற்றியதுடன், பக்கவாட்டில் ரஷ்யக் கொடியை வரைந்து ரஷ்யாவில் பதிவு செய்தது. இருப்பினும், இவை எதுவும் அமெரிக்க இராணுவத்தைத் தடுத்து நிறுத்தவில்லை.
இது குறித்து ரஷ்ய போக்குவரத்து அமைச்சகம் கூறுகையில், “மற்றொரு நாட்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு முறையாகப் பதிவு செய்யப்பட்ட கப்பல்களுக்கு எதிராக எந்தவொரு நாடும் பலத்தைப் பிரயோகிக்க உரிமை கிடையாது” என்று தெரிவித்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், வெனிசுவேலா சுமார் 30 மில்லியன் முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் வரையிலான எண்ணெயை அமெரிக்காவிற்கு “வழங்கும்” என்று தெரிவித்தார். இது, அந்த நாட்டின் ஆண்டு உற்பத்தியில் 15 சதவீதம் ஆகும். இதன் மதிப்பு 1.5 பில்லியன் டாலர் முதல் 2.5 பில்லியன் டாலர் வரை இருக்கும்.
“இந்த கச்சா எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும், மேலும் அந்தப் பணம் அமெரிக்க ஜனாதிபதியாகிய எனது கட்டுப்பாட்டில் இருக்கும்,” என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் ரைட் புதன்கிழமை கூறுகையில், அமெரிக்கா வெனிசுவேலா எண்ணெயை “காலவரையறை இன்றி” விற்கும் என்று தெரிவித்தார்.
மியாமியில் நடைபெற்ற கோல்ட்மேன் சாக்ஸ் மாநாட்டில் பேசிய அமைச்சர் கிறிஸ் ரைட், “வெனிசுவேலாவிலிருந்து வரும் கச்சா எண்ணெயை நாங்கள் சந்தைப்படுத்துவோம்—முதலில் தேக்கி வைக்கப்பட்டுள்ள எண்ணெயையும், அதன்பின்னர் காலவரையறை இன்றி அங்கிருந்து உற்பத்தியாகும் எண்ணெயையும் சந்தையில் விற்பனை செய்வோம்,” என்றார். மேலும், வெனிசுவேலாவின் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை அமெரிக்கா கொண்டு வரும் என்றும் அவர் கூறினார்.
மதுரோ கடத்தப்பட்ட பிறகு, திங்கள்கிழமை பதவியேற்ற வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்கேஸிற்கு எதிராக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். “அவர் சரியானதைச் செய்யவில்லை என்றால், அவர் ஒரு மிகப்பெரிய விலையைச் கொடுக்க வேண்டியிருக்கும், அது அநேகமாக மதுரோ கொடுத்ததை விடப் பெரியதாக இருக்கும்,” என்று ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தி அட்லாண்டிக் இதழிடம் தெரிவித்தார். ரஷ்யா, சீனா மற்றும் ஈரானுக்கு எண்ணெய் விற்பனை செய்வதை வெனிசுவேலா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் புதன்கிழமை கூறுகையில், ட்ரம்ப் “தேவைப்பட்டால் அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமையைத் தக்க வைத்துள்ளார்” என்றார். மேலும் அவர், “தற்போது வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகளிடம் எங்களுக்கு முழுமையான செல்வாக்கு உள்ளது என்பது வெளிப்படையானது,” என்றும் குறிப்பிட்டார்.
துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் பொக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்: “நாங்கள் வெனிசுவேலாவை எப்படிக் கட்டுப்படுத்துகிறோம் என்றால், அவர்களின் பணப்பையை (Purse strings) நாங்கள் கட்டுப்படுத்துகிறோம், அவர்களின் எரிசக்தி வளங்களை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். மேலும் அந்த ஆட்சியிடம், ‘அமெரிக்காவின் தேசிய நலனுக்கு சேவை செய்யும் வரை மட்டுமே நீங்கள் எண்ணெயை விற்க அனுமதிக்கப்படுவீர்கள்’ என்று கூறுகிறோம்,” எனத் தெரிவித்தார்.
அணு ஆயுதம் ஏந்திய ஒரு வல்லரசுக்கு எதிராகப் போர் தொடுக்கும் குற்றவியல் நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினரான டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தைக் கைப்பற்ற, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக அமெரிக்கா இராணுவ பலத்தைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அரசியல் செய்தித் தொடர்பாளர் லெவிட் அறிவித்தார். கிரீன்லாந்தைப் கையகப்படுத்துவது “தேசிய பாதுகாப்பு முன்னுரிமை” என்றும், “அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்துவது, எப்போதும் ஒரு விருப்பத் தேர்வாக உள்ளது” என்றும் அவர் கூறினார்.
வெள்ளை மாளிகையின் துணைத் தலைமை அதிகாரி ஸ்டீபன் மில்லர் திங்களன்று கூறுகையில், கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்பதே அமெரிக்காவின் “அதிகாரப்பூர்வ நிலைப்பாடு” என்றார். “கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்து யாரும் அமெரிக்காவுடன் இராணுவ ரீதியாக மோதப்போவதில்லை,” என்று மில்லர் ஏளனமாகத் தெரிவித்தார். அவரது மனைவி, கிரீன்லாந்தின் வரைபடத்தின் மேல் அமெரிக்கக் கொடி பதிக்கப்பட்ட ஒரு படத்தை “விரைவில்” (SOON) என்ற வாசகத்துடன் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டார்.
கிரீன்லாந்திற்கு எதிரான இந்த மிரட்டல்கள் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளன. கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் நடவடிக்கை நேட்டோ அமைப்பின் இறுதி முடிவாக அமையும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தெரிவித்தார். செவ்வாயன்று, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். அதில், கிரீன்லாந்தின் எதிர்காலம் என்பது “டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து, அவர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம்” என்று அறிவித்தனர்.
புதன்கிழமை அன்று, டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் பேர்லிங்ஷ் என்ற பத்திரிகையிடம் உறுதிப்படுத்தியபடி, ஆக்கிரமிப்புப் படைகளை “உடனடியாக” எதிர்த்துத் தாக்குமாறு தனது படையினர்களுக்கு உத்தரவிடும் 1952-ஆம் ஆண்டின் வழிகாட்டி இப்போதும் நடைமுறையில் உள்ளது என்று தெரிவித்தது. அந்த வழிகாட்டி கூறுவதாவது: “தாக்குதலுக்கு உள்ளான படைகள், சம்பந்தப்பட்ட தளபதிகளுக்குப் போர் பிரகடனம் அல்லது போர்ச் சூழல் பற்றித் தெரியாவிட்டாலும் கூட, உத்தரவுகளுக்காகக் காத்திருக்காமல் அல்லது தேடாமல் உடனடியாகப் போரில் ஈடுபட வேண்டும்.”
சர்வதேச சட்டத்தின்படி கடற்கொள்ளை நடவடிக்கையாகக் கருதப்படும் நடுக்கடலில் எண்ணெய் கப்பல்களைக் கைப்பற்றுவதும், முற்றுகையை விதிப்பதும் ஆக்கிரமிப்புப் போர்ச் செயல்களாகும். நூரம்பேர்க் விசாரணையில் நாஜி தலைவர்கள் எத்தகைய குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டார்களோ, அதே போன்ற குற்றங்களே இவை.
ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்பின் நடவடிக்கைகள் மீதான தங்களது விமர்சனங்களை நடைமுறைச் சிக்கல்கள் குறித்தே மையப்படுத்தியுள்ளனர். புதன்கிழமை நடைபெற்ற செனட் விசாரணையைத் தொடர்ந்து, செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர் வருத்தத்துடன் கூறுகையில், “இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கான பதில்கள் எங்களுக்குத் தேவை. எத்தனைப் படைகள், எவ்வளவு பணம் செலவிடப்படும், இதற்குத் தடுப்பு அரண்கள் உள்ளனவா, நாம் செய்யக்கூடாத விஷயங்கள் எவை போன்ற பல கேள்விகளுக்குப் பதில்கள் தேவை. நாம் விவாதித்த பல விஷயங்கள் மிகவும் கவலையளிக்கின்றன,” என்றார்.
கடந்த மாதம், வெனிசுவேலாவில் ஒருவித ஆட்சி மாற்றம் தேவை என்ற அவசியத்தை ஷுமர் ஒப்புக்கொண்டார். “நிச்சயமாக மதுரோ அவராகவே நாட்டை விட்டு வெளியேறினால், அதை அனைவரும் விரும்புவார்கள்,” என்று அவர் கூறினார்.
ஜனநாயகக் கட்சியின் தலைமை, மதுரோ கடத்தப்பட்டதைக் கண்டிக்கத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. வெனிசுவேலா மீதான தாக்குதலுக்குப் பதிலளித்த ஷுமர், “மதுரோ ஒரு சட்டவிரோத சர்வாதிகாரி” என்று அறிவித்தார். அதே நேரத்தில், ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சபையின் பிரதிநிதி ஹக்கீம் ஜெஃப்ரிஸ் அவரை “ஒரு கெட்ட மனிதர்” என்று குறிப்பிட்டார். கடந்த டிசம்பர் மாதம், ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினருடன் இணைந்து சாதனை அளவாக 895 பில்லியன் டாலர் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றினர். தற்போது நடைபெற்று வரும் இந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான நிதியை இதுவே வழங்குகிறது.
