மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) முகவர் ஒருவரால் 37 வயதான ரெனீ நிக்கோல் குட் என்ற பெண் படுகொலை செய்யப்பட்டது, அமெரிக்கா முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலும் அதிகரித்து வரும் சீற்றத்தை உருவாக்கி வருகிறது. மூன்று குழந்தைகளின் தாயான இவர், பட்டப்பகலில் கொடூரமாகக் கொல்லப்பட்ட விதம், ட்ரம்ப் நிர்வாகத்தின் குற்றத்தன்மையையும், நாடு முழுவதிலும் உள்ள நகரங்களில் அது நிலைநிறுத்தியுள்ள கெஸ்டாபோ (Gestapo நாஜி ஆட்சியின் கீழ் இருந்த கொடூரமான இரகசிய பொலிஸ் படை) பாணியிலான ICE முகவர்களையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
கடந்த வியாழக்கிழமை மதியம் ஓரிகானின் போர்ட்லேண்டில், எல்லைப் பாதுகாப்பு முகவர்கள் பட்டப்பகலில் இருவரை துப்பாக்கியால் சுட்டனர். இது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், உள்ளூர் செய்திகளால் பெறப்பட்ட அவசரகால தகவல்தொடர்பு ஆடியோவின்படி, ICE முகவர்கள் தன்னையும் தனது மனைவியையும் சுட்டதாக ஒரு நபர் புகாரளித்துள்ளார். ரெனீ நிக்கோலின் படுகொலையைப் போலவே இதற்கும், ஒரு வாகன ஓட்டுநர் “தனது வாகனத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி” ICE முகவர்கள் மீது மோத முயன்றார் என்ற வழக்கமான காரணத்தைக் கூறி, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) இந்தத் தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையானது சிக்காகோ மற்றும் நியூ ஓர்லியன்ஸ் மீதான நடவடிக்கைகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட எல்லைப் பாதுகாப்பு முகவர்களை மினசோட்டாவிற்கு அனுப்பி வருகிறது. இந்த வார தொடக்கத்தில் மினியாபோலிஸில் நடந்த ஒரு சம்பவத்தில், ரெனீ நிக்கோல் குட் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, DHS முகவர்கள் ஒரு கார் துரத்தலில் ஈடுபட்டனர். அந்தக் கார் ஒரு பள்ளியின் வெளியே, வகுப்புகள் முடிந்து மாணவர்கள் வெளியேறும் நேரத்தில் மோதி நின்றது. இந்த சம்பவத்தில், இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தியதை ICE மறுத்துள்ளது. ஆனால், கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை வீடியோ ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், குறைந்தது ஒரு ஆசிரியர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் இந்தக் கொலையை வெளிப்படையாகவும் மன்னிப்புக் கோராமலும் ஆதரிப்பது, ரெனீ நிக்கோல் குட் படுகொலையின் திட்டமிட்ட மற்றும் வேண்டுமென்றே செய்யப்பட்ட தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தக் கொலையைப் பாராட்டுவதன் மூலம், ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தில் உள்ள பாசிசக் கும்பல், இது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வக் கொள்கையின் வெளிப்பாடு என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர்.
ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொன்றும் ஒரு பொய். அது பொய் என்பது அனைவருக்கும் தெரியும். வியாழக்கிழமையன்று, துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில், அவர் ரெனீ நிக்கோலை அவதூறாகப் பேசியதுடன், அவரைக் கொன்றவரைப் பாராட்டினார். அந்த மத்திய அரசின் முகவரின் நடவடிக்கைகள் “சட்டபூர்வமானவை” என்று அவர் கூறினார். மேலும், ஊடகங்கள் “இந்த நபரை ஒரு கொலையாளி என்பது போலப் பேசுவதை” கண்டித்தார். அத்தோடு, “கொஞ்சம் கவனமாக இருங்கள்” என்று மிரட்டும் தொனியில் எச்சரித்தார்.
வான்ஸின் கூற்றுப்படி, “அந்த வீடியோவின் அனைத்து கோணங்களையும் நீங்கள் பார்க்கும்போது, அவரது வாகனம் அந்த ICE முகவரை நோக்கி நேராகச் சென்றது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அவர் உண்மையில் முகவர் மீது மோதினார், அதன் பிறகுதான் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.”
ஆனால், பல கோடி மக்கள் அந்த வீடியோவைப் பார்த்துள்ளனர். அது இதற்கு நேர்மாறானதைக் காட்டுகிறது. நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கார்டியன் ஆகிய இதழ்கள் முடிவு செய்துள்ளபடி, ரெனீ நிக்கோல் சுடப்பட்டபோது, அவர் மத்திய முகவர்களின் கூட்டத்திலிருந்து தப்பிக்க முயன்றதை அந்த காட்சிகள் காட்டுகின்றன. அந்த ICE முகவருக்கு எப்போதாவது ஆபத்து இருந்ததற்கோ, அல்லது வாகனம் அவர் மீது “மோதியதற்கோ” வீடியோவில் எந்த ஆதாரமும் இல்லை. அந்த ICE முகவர் தனது துப்பாக்கியை உயர்த்தி மிக அருகிலிருந்து மூன்று முறை சுட்டபோது, கார் அவரை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்தது.
அரசியல் எதிர்ப்பாளர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதை ஒரு பரந்த அளவில் தீவிரப்படுத்துவதற்கு, ரெனீ நிக்கோலின் படுகொலையை ஒரு சாக்காக ட்ரம்ப் நிர்வாகம் பயன்படுத்திக்கொள்கிறது. ஜனாதிபதிக்கு நேரடியாகப் பதிலளிக்கக்கூடிய ஒரு புதிய உதவி அட்டர்னி ஜெனரல் பதவி உருவாக்கப்படுவதாக வான்ஸ் அறிவித்தார். “தீவிர இடதுசாரி கிளர்ச்சியாளர்களுக்கு” அவர் சொல்லும் செய்தி என்ன என்று கேட்கப்பட்டபோது, “இப்போது அவர்களிடம் ஒரு உதவி அட்டர்னி ஜெனரல் இருக்கிறார், அவர் அவர்களின் மோசடி மற்றும் வன்முறையை இதுவரை இல்லாத அளவிற்கு மிகத் தீவிரமாக விசாரித்துத் தண்டிப்பார்” என்று வான்ஸ் அறிவித்தார்.
அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கைகளை எதிர்ப்பதற்காக “இடதுசாரி தீவிரவாதிகளின் குழு” ஒன்று “உள்நாட்டு பயங்கரவாத நுட்பங்களைப்” பயன்படுத்துவதாக வான்ஸ் குற்றம் சாட்டினார்.
அவர் ஒருபோதும் ரெனீ நிக்கோல் குட்டின் பெயரைச் சொல்லி அழைக்கவில்லை. மாறாக, அவரை “அந்தப் பெண்” என்றும், “மூளைச்சலவை செய்யப்பட்ட” ஒரு “மனநிலை பாதிக்கப்பட்ட இடதுசாரி” என்றும் அவதூறு செய்தார். கொலையாளிக்கு “முழுமையான சட்ட விலக்கு பாதுகாப்பு” இருப்பதாக வலியுறுத்திய அவர், இந்தக் கொலை குறித்த உள்ளூர் விசாரணையைக் கண்டித்தார். மேலும், “முழுமையான சட்ட விலக்கு பெற்ற ஒரு மத்திய அரசு அதிகாரியை, உள்ளூர் அதிகாரி ஒருவர் விசாரித்துத் தண்டிக்க முடியும் என்ற எண்ணமே முன்னெப்போதும் இல்லாத ஒன்று” என்று அவர் அறிவித்தார்.
ட்ரம்ப் நிர்வாகம், சர்வாதிகார நிர்வாக அதிகாரங்களை மேன்மேலும் பகிரங்கமாக நிலைநாட்டி வரும் சூழலில், வான்ஸின் இந்த அச்சுறுத்தல்கள் வருகின்றன. கடந்த வியாழக்கிழமை வெளியான நியூ யோர்க் டைம்ஸ் நேர்காணலில், கிளர்ச்சிச் சட்டத்தை பயன்படுத்துவதற்கும், தேசிய பாதுகாப்புப் படைப் பிரிவுகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது உட்பட, அமெரிக்கா முழுவதிலும் உள்ள நகரங்களில் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும் தனது விருப்பத்தை ட்ரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தினார். “இதுவரை, அதைச் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு உண்மையில் ஏற்படவில்லை” என்று அவர் கூறினார்.
ஒரு அசாதாரணமான அறிக்கையில், தான் எந்த சட்டக் கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டு செயல்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார். பிற நாடுகளைத் தாக்கவோ, ஊடுருவவோ அல்லது வற்புறுத்தவோ அவருக்கு இருக்கும் அதிகாரம் குறித்து ஏதேனும் எல்லைகள் உள்ளதா என்று கேட்டபோது ட்ரம்ப், “ஆம், ஒரு விஷயம் இருக்கிறது. எனது சொந்த அறநெறி. எனது சொந்த சிந்தனை. என்னைத் தடுக்கக்கூடிய ஒரே விஷயம் அதுதான்” என்று பதிலளித்தார். “எனக்கு சர்வதேசச் சட்டம் தேவையில்லை” என்று அவர் சர்வதேசச் சட்டத்தை முற்றிலும் நிராகரித்தார். மேலும், சட்டக் கட்டுப்பாடுகளுக்குத் தாமே ஒரே நடுவராக இருப்பார் என்பதைத் தெளிவுபடுத்தி, “சர்வதேசச் சட்டம் குறித்த உங்கள் வரையறை என்ன என்பதைப் பொறுத்தே அது அமையும்” என்று பதிலளித்தார்.
இந்த அறிக்கைகள் வெளியுறவுக் கொள்கையின் பின்னணியில் கூறப்பட்டாலும், அவை அமெரிக்காவிற்குள்ளேயே நிலவும் சர்வாதிகாரக் “கோட்பாட்டிற்கு” சமமாகப் பொருந்தும். உண்மையில், அதனுடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. ரெனீ நிக்கோல் குட்டின் படுகொலை நிரூபிப்பது போல ஜனாதிபதிக்கு, ஒருவரின் வாழ்வு மற்றும் இறப்பின் மீது அதிகாரம் உள்ளது என்பதையும், ஒரு அமெரிக்கக் குடிமகன் ஈவு இரக்கமின்றி கொல்லப்படலாம் என்பதையும், அந்தப் பெண்ணினது கொலையாளிகள் பாதுகாக்கப்பட்டு பாராட்டப்படுவார்கள் என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது.
முன்னணி ஜனநாயகக் கட்சியினர் ரெனீ நிக்கோல் குட்டின் படுகொலைக்கு பதிலளிக்கும் விதமாக, நேர்மையற்ற அறிக்கைகளை வெளியிட்டாலும், அமெரிக்காவிற்குள் வெடித்து வரும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதே அவர்களின் முக்கிய கவலையாக உள்ளது.
மினியாபோலிஸில் நடந்த இந்தப் படுகொலை, ட்ரம்ப் முறையாக ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கான சதித்திட்டத்தை முன்னெடுத்த ஒரு ஆண்டைத் தொடர்ந்து நடந்துள்ளது. இந்த செயல்முறை முழுவதும், ஜனநாயகக் கட்சியினர் மக்களின் எதிர்ப்பை அடக்க வேலை செய்து வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் நடந்த “மன்னர்கள் வேண்டாம்” என்ற பாரிய போராட்டங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, அரசாங்க முடக்கத்தை ட்ரம்பின் நிபந்தனைகளின்படி, முடிவுக்குக் கொண்டு வந்து அவரிடம் அவர்கள் சரணடைந்தனர். வெறும் மூன்று மாதங்களுக்கு முன்பு, பெர்னி சாண்டர்ஸ் ட்ரம்பின் குடியேற்ற ஒடுக்குமுறையைப் பாராட்டி, “எமக்கு பாதுகாப்பான எல்லை இருக்க வேண்டும்” என்றும், பைடெனை விட ட்ரம்ப் “சிறந்த வேலையைச்” செய்துள்ளார் என்றும் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், செனட் சபை சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர் மற்றும் பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெப்ரீஸ் ஆகியோரிடம், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையை கட்டுப்படுத்த தங்களின் வரவு-செலவுத் திட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவீர்களா என்று கேட்கப்பட்டது. அவர்கள் இதற்குப் பதிலளிக்க மறுத்துவிட்டனர். பொலிட்டிகோ பத்திரிகை, “உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு நிதி ஒதுக்கும் மசோதா குறித்து பிரதிநிதிகள் சபையும் செனட்டும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன, இதற்கு 60 வாக்குகள் தேவை. ஆனால், ஷுமர் மற்றும் ஜெப்ரீஸ் ஆகியோர் நிதி ஒதுக்கீடு செயல்முறையை ஒரு அழுத்தக் கருவியாக பயன்படுத்த உறுதியளிக்கவில்லை” என்று எழுதியது.
உண்மையில், ஜனநாயகக் கட்சியினர் எதையும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால், அவர்களும் ட்ரம்பைப் போலவே அதே வர்க்க நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். கடந்த ஆண்டு, ட்ரம்பின் “ஒரு பெரிய அழகான” (One Big Beautiful Bill) மசோதாவிற்கு அவர்கள் பெயரளவு எதிர்ப்பை மட்டுமே தெரிவித்தனர். அந்த மசோதா ICE-இன் வரவு-செலவுத் திட்டத்தை 170 பில்லியன் டாலர்களாக உயர்த்தியது. இது ICE-ஐ அமெரிக்காவின் மிகப்பெரிய துணை இராணுவப் படைகளில் ஒன்றாக மாற்றியது.
தொழிற்சங்க எந்திரங்களைப் பொறுத்தவரை, அவை இதற்கு மேலோட்டமான அறிக்கைகளையே வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கைகள் ஆவேசமான சொல்லாடல்களையும் அதே சமயம் செயலற்ற தன்மையையும் ஒன்றாகக் கொண்டுள்ளன. மினசோட்டா AFL-CIO அமைப்பு, ரெனீ நிக்கோல் கொல்லப்பட்டதைக் கேட்டு தாங்கள் “அதிர்ச்சியும், மனவேதனையும், ஆத்திரமும்” அடைந்ததாக அறிவித்தது. ஆனால், தொழிற்சங்க அதிகாரத்துவம் எந்தவொரு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கவில்லை. மாறாக, மாநிலத்தின் குற்றவியல் புலனாய்வுப் பிரிவின் மீது நம்பிக்கை வைப்பதோடு அமைதி காக்குமாறும், “ட்ரம்ப் நிர்வாகம் மினசோட்டா மக்களைத் தூண்ட விரும்புகிறது... அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கிவிடாதீர்கள்” என்றும் கெஞ்சுகிறது.
குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் இந்தப் படுகொலைக்கு எதிரான மக்கள் ஆத்திரம் அதிகரித்து வருகிறது. மினியாபோலிஸில், கொலை நடந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடம், தொடர்ச்சியான அஞ்சலிக் கூட்டங்கள் மற்றும் போராட்டங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ளது; புதன்கிழமை இரவு நிலவிய உறைபனி குளிரையும் பொருட்படுத்தாமல் 10,000-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அன்றிலிருந்து நியூ யோர்க், கொலம்பஸ், சான் அன்டோனியோ, டக்சன், போர்ட்லேண்ட் மற்றும் பல நகரங்கள் உட்பட நாடு முழுவதும் போராட்டங்கள் பரவியுள்ளன. வரும் நாட்களில் இன்னும் பல போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் செயலற்ற தன்மை மற்றும் உடந்தையான போக்கிற்கு எதிராக, தொழிலாளர்களும் இளைஞர்களும் தொழிலாள வர்க்கத்தின் சொந்த வலிமையில் வேரூன்றிய ஒரு வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
ஜனவரி 7-ஆம் தேதி சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் ஒரு உண்மையான போராட்டத்திற்கான அடிப்படையை கோடிட்டுக் காட்டுகின்றன: கொலையாளியைக் கைது செய்து வழக்குத் தொடர வேண்டும்; மினியாபோலிஸ் மற்றும் ஒவ்வொரு நகரத்திலிருந்தும் அனைத்து ICE முகவர்கள், சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) படைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; இந்த கெஸ்டாபோ பாணியிலான அமைப்புகளை கலைக்க வேண்டும்; தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்; சோதனைகள், கடத்தல்கள் மற்றும் நாடுகடத்துதல்களை நிறுத்த வேண்டும்; அனைத்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முழுமையான சட்ட உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளை வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை அரசியல் ஸ்தாபனத்திற்கு முறையிடுவதன் மூலமோ அல்லது தார்மீக ஆத்திரத்தின் மூலமோ மட்டும் வென்றெடுக்க முடியாது. இதற்கு ஒரு பாரிய சமூகப் போராட்டம் தேவை. நிகழ்வுகளின் தர்க்கம் ஒரு பொது வேலைநிறுத்தத்தை நோக்கி இட்டுச் செல்கிறது: அதாவது, அடக்குமுறை மற்றும் சுரண்டல் இயந்திரங்களை ஒழித்துக்கட்ட ஒவ்வொரு தொழில்துறையிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த தலையீடு அவசியமாகிறது.
இதை ஒழுங்கமைக்க, தொழிலாளர்கள் பணியிடங்கள், குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் —தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் ஜனநாயகக் கட்சி ஏஜெண்டுகளிடமிருந்து சுயாதீனமான— சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க வேண்டும். இந்தக் குழுக்கள் தொழில்துறைகள் மற்றும் எல்லைகளைத் தாண்டி தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும்.
அதே நேரத்தில், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்பது ட்ரம்பிற்குப் பின்னால் நிற்கும் முதலாளித்துவ தன்னலக் குழுவிற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது. இது சர்வாதிகாரம், அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு பாரிய சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்பும் திசையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
