முன்னோக்கு

வெனிசுவேலாவிற்குப் பிறகு, ட்ரம்ப் ஈரானை இலக்கு வைக்கிறார் —ஏகாதிபத்திய வெறியாட்டம் தீவிரமடைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளிப் பகுதிக்கு மேலாக பி-2 ஸ்டெல்த் போர் விமானம் (B-2 stealth bomber) பறந்து செல்கிறது. சனிக்கிழமை, ஜூலை 4, 2020 [AP Photo/Alex Brandon]

ஈரான் மீது உடனடியாக இராணுவத் தாக்குதலைத் தொடுப்பதுக்கு ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது. 93 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்த மத்திய கிழக்கு நாட்டை மீண்டும் நவ-காலனித்துவ அடிமைத்தனத்திற்குள் தள்ளுவதையும், அதன் பரந்த எண்ணெய் வளங்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையின் அடுத்த கட்டம் இதுவாகும்.

அமெரிக்காவின் பாசிச சர்வாதிகாரியாகத் துடிக்கும் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது அடியாட்கள், ஈரானிய அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களை “பாதுகாப்பது என்ற” சிடுமூஞ்சித்தனமான ஒரு போலியான காரணத்தைக் கூறி, கடந்த சில நாட்களாக ஈரானைக் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கப் போவதாக அச்சுறுத்தி வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை, ஈரானியப் போராட்டக்காரர்களுக்கு விடுத்த செய்தியில் ட்ரம்ப், “உங்கள் நிறுவனங்களைக் கைப்பற்றுங்கள்... உதவி வந்து கொண்டு இருக்கிறது” என்று அறிவித்தார். ஈரானைத் தாக்குவதற்கான “விருப்பத் தேர்வுகள்” குறித்து பென்டகனில் உள்ள ஜெனரல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே இந்த அறிவிப்பு வெளியானது.

வெளிப்படையான மூலங்கள் மற்றும் பொதுவில் கிடைக்கும் தகவல்கள், விமானங்களை தடமறியும் தரவுகள் ஆகியவை, டிசம்பர் மாதம் முதல் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கப் போர்த் தளவாடங்களின் வருகை அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துகின்றன. இது, ஈரான் மீது போர் தொடுப்பதற்கான ஒரு அவசியமான முன்னேற்பாடாக உள்ளது.

ஈரானிய மக்களின் “விடுதலையாளர்” என்று தன்னை சித்தரிக்க ட்ரம்ப் முயல்வது ஒரு மிகப்பெரிய மோசடியாகும். இது ஹிட்லரின் “பெரிய பொய்” (Big Lie) என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

1979-இல் ஷா மன்னரின் கொடுங்கோல் ஆட்சியை தூக்கியெறிந்த மக்கள் எழுச்சியை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. ஈரான் மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், இராணுவ ஆக்கிரமிப்புகள் மற்றும் பொருளாதாரப் போர் ஆகியவற்றை அமெரிக்கா பல தசாப்தங்களாக மேற்கொண்டு வருகிறது. 2018-ஆம் ஆண்டில், ஐ.நா. ஆதரவு பெற்ற ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட ட்ரம்ப், ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைத்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரும் பகிரங்கமான நோக்கத்துடன், ஒருதலைப்பட்சமாக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார். இவை, பின்னர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பைடெனின் கீழ் வலுப்படுத்தப்பட்டன.

ஈரானிய மக்களை வறுமையிலும் துயரத்திலும் தள்ளுவதே வாஷிங்டனின் எப்போதும் விரும்பும் முடிவாக இருந்து வருகிறது. பொருளாதாரத் தடைகள் காரணமாக, மருந்துப் பொருட்கள் மற்றும் மேம்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கான அணுகல் துண்டிக்கப்பட்டதால் மட்டுமே பல்லாயிரக்கணக்கான, ஏன் இலட்சக்கணக்கானோர் கூட அகால மரணமடைந்துள்ளனர்.

எப்போதும் போல, அமெரிக்க பெருநிறுவன செய்தி ஊடகங்கள் அனைத்தும் வெள்ளை மாளிகை சொல்லிக் கொடுக்கும் ஒரே வசனத்தையே பேசுகின்றன. அவர்கள் எதையும் கேள்வி கேட்பதில்லை, எதையும் விசாரிப்பதும் இல்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, வாஷிங்டன் சட்டவிரோதமாக வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி, 80-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதுடன், அதன் ஜனாதிபதியை கடத்தி, உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கைப்பற்றியது. இதற்கு முந்தைய வாரங்களில், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ ஒரு போதைப்பொருள்-பயங்கரவாத ஆட்சிக்கு தலைமை தாங்குகிறார் என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளிப்படையான பொய்களை ஊடகங்கள் மீண்டும் மீண்டும் கூறின. 2003-ல் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக் மீது படையெடுப்பதற்கு முன்னதாக, சதாம் குசைனின் “பேரழிவுகரமான ஆயுதங்கள்” குறித்து ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் டிக் செனி கூறிய கூற்றுகளை ஊடகங்கள் மூச்சிரைக்கத் திரும்பத் திரும்பச் சொன்னதைப் போலவே இவையும் இருக்கின்றன.

இப்போது ட்ரம்ப், அவருக்குத் துணைபோகும் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஊடகங்கள், ஈரான் ஒரு “மக்கள் எழுச்சியின்” பிடியில் இருப்பதாகவும், அது ஈரானிய அதிகாரிகளால் “கொடூரமாக” நசுக்கப்படுவதாகவும் நாம் நம்ப வேண்டும் என்று விரும்புகின்றனர். இதுதான் தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய போருக்கான காரணமாகும். கடந்த ஜூன் மாதம், ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய 12 நாள் போரில் 1,000-க்கும் மேற்பட்ட ஈரானிய மக்கள் கொல்லப்பட்டனர். அந்தப் போரை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட காரணத்திற்குப் பதிலாக, இது இப்போது முன்வைக்கப்படுகிறது. டிசம்பர் 29 அன்று மார்-ஏ-லாகோவில் (ட்ரம்ப்பின் மாளிகை) ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு போர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியபோது, ஈரானின் சிவில் அணுசக்தி திட்டத்தால் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

ஈரானின் மதகுருமார் தலைமையிலான முதலாளித்துவ தேசியவாத ஆட்சி மீது பரவலான கோபமும் அதிருப்தியும் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆட்சி, தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு அரசியல் சுய-வெளிப்பாட்டையும் ஒடுக்கி வருவதுடன், ஷாவின் கொடுங்கோன்மை முடியாட்சி-சர்வாதிகாரத்தை தூக்கியெறிந்த 1979 புரட்சிக்குப் பின்பு உழைக்கும் மக்களுக்கு உடனடியாக வழங்கப்பட்ட சமூக சலுகைகளையும் முறையாக அகற்றியுள்ளது.

ஆனால், தற்போது ஈரானின் வீதிகளில் கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்திற்கான அல்லது அவர்களால் நடத்தப்படும் இயக்கம் அல்ல. இப்போராட்டங்களானது. அதில் ஈடுபட்டுள்ளவர்களின் சமூகப் பின்னணி, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் எதிர்கொள்ளும் அழுத்தமான சமூக-பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்க்கக் கோரும் கோரிக்கைகள் இல்லாமை, மற்றும் பாரிய வேலைநிறுத்தங்கள் போன்ற தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட தலையீடு இல்லாமை ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்றன.

இந்தப் போராட்டங்கள், பஜாரிகள் எனப்படும் கந்துவட்டிக்காரர்கள், வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களைக் கொண்ட முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவினரால் தொடங்கப்பட்டன. இவை உக்ரேன், ஜோர்ஜியா மற்றும் பிற நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்ட “வண்ணப் புரட்சிகளைப்” (color revolutions) போலவே, மென்மேலும் வெளிப்படையான வலதுசாரி மற்றும் ஏகாதிபத்திய ஆதரவுத் தன்மையைக் கொண்டுள்ளன.

சி.ஐ.ஏ. (CIA) மற்றும் பிற ஏகாதிபத்திய உளவு நிறுவனங்களின் முகவர்கள் வன்முறையைத் தூண்டுவதில் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இவர்களுடன், வெளிநாடுகளில் தங்கியிருக்கும் ஏகாதிபத்திய முகவர்களான ஷா மன்னரின் மகன் இளவரசர் ரேசா பஹ்லவி போன்றவர்களும் இணைந்துள்ளனர். அவர் கடந்த வார இறுதியில், “நகர மையங்களைக் கைப்பற்றி வைத்திருப்பதன்” மூலம் அரசாங்கத்தை வீழ்த்த அழுத்தம் கொடுக்குமாறு போராட்டக்காரர்களை வலியுறுத்தினார். கடந்த வியாழக்கிழமை அன்று, இஸ்ரேலிய முகவர்கள் ஈரானில் களத்தில் செயல்பட்டு வருவதாக, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி பாரம்பரியத் துறை அமைச்சர் அமிச்சாய் எலியாஹு பெருமையுடன் கூறினார்.

1953-ல் ஈரானில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான தேசியவாத மொசாடெக்கை தூக்கியெறிவதுக்கு சி.ஐ.ஏ மற்றும் பிரிட்டனின் MI5 இணைந்து சதித்திட்டம் தீட்டியதைப் போலவே, இப்போதும் ஏகாதிபத்தியம் ஈரானிய முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ பிரிவினரின் ஊடாகச் செயல்படுகிறது. இதில் இஸ்லாமியக் குடியரசின் அதிகார வர்க்கத்தில் இருக்கும் அதிருப்தி அடைந்த பிரிவினரும் அடங்குவர். இவர்கள் ஏகாதிபத்தியத்தின் நேரடி முகவர்களாகச் செயல்படுவதன் மூலம், தங்கள் செல்வம் மற்றும் சலுகைகளைப் பாதுகாக்க ஆர்வமாக உள்ளனர்.

“எனது இதயம் ஈரானுக்காக மட்டுமே துடிக்கிறது—காஸாவிற்காகவோ, லெபனானுக்காகவோ அல்ல!” என்ற முக்கியமான போராட்ட முழக்கம், ஆப்கானிய அகதிகளை போராட்டக்காரர்கள் குறிவைப்பது மற்றும் பஹ்லவி வம்சத்தை அவர்கள் அதிகளவில் ஆதரிப்பது போன்றவற்றின் மூலம் வெளிப்படுவது போல, இந்த சக்திகள் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலநிலை குறித்து மூர்க்கமாக பகைமை கொண்டவர்களாக இருந்து வருகின்றனர்.

இஸ்லாமியக் குடியரசின் தவறான ஆட்சி மற்றும் “ஜனநாயகம்” என்ற பெயரில் தீவிர வலதுசாரி சக்திகளுடன் ஐக்கியத்தைக் கோரும் ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள போலி-இடதுகளால் பரப்பப்படும் அரசியல் குழப்பத்தின் காரணமாக, துரதிர்ஷ்டவசமாக சில தொழிலாளர்களும் மாணவர்களும் இந்தத் தொடர்ச்சியான போராட்டங்களிலும் அரசின் ஒடுக்குமுறையிலும் சிக்கியுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், உலக சோசலிச வலைத்தளம் (WSWS) ஏற்கனவே விளக்கியுள்ளபடி, “ஈரானில் உள்ள எந்தவொரு முற்போக்கான போக்கும் உடனடியாக ட்ரம்பின் ‘ஆதரவை’ நிராகரிக்க வேண்டும், உடனடி அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் அச்சுறுத்தலைக் கண்டிக்க வேண்டும் மற்றும் ஈரானின் பொருளாதாரத்தை நெரிக்கும் தண்டனைக்குரிய பொருளாதாரத் தடைகளை உடனடியாக நீக்கக் கோர வேண்டும்.”

அனைத்து அறிகுறிகளின்படி, இந்தப் போராட்டங்களின் ஏகாதிபத்திய ஆதரவுத் தன்மை தெளிவாகத் தெரியத் தொடங்கியவுடன், அவை ஈரானிய சமூகத்தின் அதிக வசதி படைத்த பிரிவினருக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை, ஷா மன்னரின் ஆட்சியின் நினைவுகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அந்த ஆட்சி அடிபணிந்து இருந்தது, நாட்டின் செல்வத்தைத் தனிநபர்கள் ஏகபோகமாக அனுபவித்தது மற்றும் அந்த ஆட்சி எதன் அடிப்படையில் அமைந்திருந்ததோ அந்த கொடூரமான ஒடுக்குமுறை ஆகியவை இன்னும் மறையாமல் நீடித்து நிலைத்திருக்கின்றன.

ஈரானிய ஆட்சியின் “கொடூரம்” குறித்து இப்போது தங்களின் “அச்சத்தையும்” “அருவருப்பையும்” வெளிப்படுத்துபவர்கள், காஸாவில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டு கலங்கவில்லை. முதலாவதாக, பைடென் மற்றும் இப்போது ட்ரம்ப் என வாஷிங்டனின் முழு ஆதரவுடனும், இராணுவ உதவியுடனும் இஸ்ரேலால் நடத்தப்பட்டுவரும் அந்த ஒட்டுமொத்தப் பகுதி மக்களின் நாஜி பாணியிலான பட்டினிச் சாவுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெனிசுவேலாவைப் போலவே, ட்ரம்ப் நிர்வாகமும் அப்பட்டமான குற்றவியல் மற்றும் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து வருகிறது.

இருப்பினும், வெனிசுவேலா மீதான தாக்குதலையும், ஆட்சி மாற்ற நடவடிக்கையையும், ஈரான் மீது வரவிருக்கும் இராணுவத் தாக்குதலையும் வெறும் குற்றத்தன்மை மட்டுமே இணைக்கவில்லை. இவை ஒரு வளர்ந்து வரும் உலகப் போரின் ஒரு பகுதியாகும்.

சீனாவுடனான இராணுவ மோதலுக்குத் தயாராகும் வகையில், உலகின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்ற அமெரிக்கா முயன்று வருகிறது. சீனா தனது அன்றாட எண்ணெய் நுகர்வில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இறக்குமதி செய்கிறது. பல்வேறு மதிப்பீடுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த இறக்குமதியில் ஈரான் 11 சதவீதம் அல்லது அதற்கு மேலாகவும், வெனிசுவேலா 3-4 சதவீதமாகவும் பங்களிப்பு செய்துள்ளன. ஈரானிய எண்ணெய்க்கான அணுகலை இழப்பது சீனாவின் சுதந்திரமான தொழில்துறை தளத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் மூலோபாய ரீதியிலான அதிர்ச்சியாக அமையும்.

தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்: அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரான் மீது ஒரு புதிய போரைத் தொடங்கும் விளிம்பில் உள்ளது, அதன் விளைவுகள் கணக்கிட முடியாதவை. ஈரானை அச்சுறுத்தும் வகையில், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, “அவர் (ட்ரம்ப்) ஒன்றைச் செய்வேன் என்று சொன்னால், அதை நிச்சயம் செய்வார்,” என்று கூறியுள்ளார். தான் ஒரு சர்வாதிகாரியைப் போல ஆட்சி செய்வேன் என்று உறுதியளித்தது போலவே, ஈரானுக்கு எதிராக இராணுவ ஆவேசத்தை ஏவி விடுவதாகவும் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் சூளுரைத்துள்ளார்.

கடந்த வாரம் நியூ யோர்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், “எனக்கு சர்வதேச சட்டம் தேவையில்லை” என்று ட்ரம்ப் கூறினார். “என்னைத் தடுக்கக்கூடிய ஒரே விஷயம், எனது சொந்த விருப்பம் மட்டுமே,” என்று அவர் கூறினார்.

உண்மையில், அவரை தடுக்கக்கூடிய ஒன்று இருக்கிறது: அதுதான் சர்வதேச தொழிலாள வர்க்கம். ட்ரம்ப் ஈரான் மீதான போருக்குத் தயாராகி வரும் வேளையிலும், நியூ யோர்க் நகரில் 15,000 செவிலியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் —இது அந்த நகர வரலாற்றிலேயே மிகப்பெரிய செவிலியர் வேலைநிறுத்தமாகும். பிரான்சில் இலட்சக்கணக்கான மக்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இத்தாலி, நவம்பர் மாதம் ஒரு பொது வேலைநிறுத்தத்தைக் கண்டது. பெல்ஜியம் தொழிலாளர்கள் நாட்டின் கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக வெளிநடப்பு செய்தனர். ஜேர்மனியில் இருந்து ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் இலத்தீன் அமெரிக்கா வரை, முதலாளித்துவத்திற்கும் போருக்கும் எதிரான உலகளாவிய இயக்கத்திற்கான புறநிலை நிலைமைகள் உருவாகி வருகின்றன.

உலக சோசலிச வலைத்தளம் தனது புத்தாண்டு அறிக்கையில் எழுதியது போல: “ஆளும் வர்க்கம் 2026-ஆம் ஆண்டு எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது: அது கட்டுப்பாடற்ற இராணுவ வன்முறையின் ஆண்டாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. இதற்கு, 2026-ஐ வர்க்கப் போராட்டத்தின் ஆண்டாகவும், சோசலிசத்திற்கான ஒரு பாரிய இயக்கத்தின் வளர்ச்சிக்கான ஆண்டாகவும் மாற்றுவதே சரியான பதிலடியாக இருக்கும்.” இது தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய தலைமையைக் கட்டியெழுப்புவதைப் சார்ந்துள்ளது. அந்தத் தலைமை, மார்க்சியக் கொள்கைகளில் வேரூன்றியதாகவும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை உறுதிப்படுத்தவும், எல்லைகள் மற்றும் கண்டங்களைக் கடந்து அதன் போராட்டங்களை ஐக்கியப்படுத்தவும், நிரந்தரப் புரட்சி என்ற மூலோபாயத்துடன் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.

Loading