முன்னோக்கு

மினசோட்டா பொது வேலைநிறுத்தமும் அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வார தொடக்கத்தில், மினியாபோலிஸில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) அதிகாரியால் கொல்லப்பட்ட ரெனீ குட் என்ற பெண்மணியை கௌரவிக்கும் வகையில் மக்கள் ஒன்றுகூடியுள்ளார்கள். மினசோட்டா மாநில தலைநகர் செயின்ட் போல், வெள்ளிக்கிழமை, ஜனவரி 9, 2026. [AP Photo/John Locher]

ஜனவரி 8 அன்று, மினியாபோலிஸில் ரெனீ நிக்கோல் குட் என்ற பெண்மணி குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையால் (ICE) படுகொலை செய்யப்பட்ட மறுநாள், உலக சோசலிச வலைத்தளம் (WSWS) ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை, “நிகழ்வுகளின் தர்க்கம் தவிர்க்க முடியாமல் ட்ரம்ப் ஆட்சிக்கு எதிரான ஒரு பொது வேலைநிறுத்தத்தை நோக்கி நகர்கிறது: ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் இயந்திரத்தை தடுத்து நிறுத்துவதற்கு ஒவ்வொரு தொழில்துறையிலும் உள்ள தொழிலாளர்களின் ஒரு ஒருங்கிணைந்த பாரிய தலையீடு இது,” என்று விளக்கியது.

ஒரு வாரம் கழித்து, ட்ரம்பின் துணை இராணுவப் படைகளால் தினசரி நிகழ்த்தப்படும் அட்டூழியங்களைக் கண்டு ஆத்திரமடைந்த உழைக்கும் மக்களின் பெருகிவரும் அழுத்தத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, மினியாபோலிஸில் உள்ள உள்ளூர் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு, ஜனவரி 23 அன்று பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மினசோட்டா AFL-CIO தொழிற் சங்கமானது, இதுவரை இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கத் தவறிவிட்டது. அதன் அதிகாரப்பூர்வ வலைத் தளம் — “உண்மை மற்றும் சுதந்திரத்தின் நாள்” என்ற முழக்கத்தின் கீழ்—”வேலைநிறுத்தம்” என்ற வார்த்தையை கவனமாகத் தவிர்த்துள்ளது. அதற்குப் பதிலாக, தொழிலாளர்களை மருத்துவ விடுப்பு எடுக்குமாறும், நுகர்வோரை எதையும் வாங்க வேண்டாம் என்றும், வணிக நிறுவனங்களை தாமாக முன்வந்து மூடுமாறும் வலியுறுத்துகிறது. ஜனநாயகக் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடைய இந்த தொழிற்சங்க எந்திரம், மக்களிடையே பரவலாக நிலவிவரும் பொது வேலைநிறுத்தத்திற்கான ஆதரவைத் தடுக்க முயற்சிக்கிறது.

இருப்பினும், பொது வேலைநிறுத்தம் என்பது அரசியல் கலந்துரையாடலுக்கு வந்திருப்பது என்பதே, அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம் மற்றும் சமூக-அரசியல் துருவமுனைப்பு ஆகியவற்றின் புதிய கட்டத்தின் வெளிப்பாடாகும். நீதிமன்ற சவால்கள், அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வைப்பது, தேர்தல் சூழ்ச்சிகள் மற்றும் அழுத்தப் பிரச்சாரங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் வழிகளால், சர்வாதிகாரத்தை நோக்கிய இந்த விரைவான நகர்வைத் தடுக்க முடியாது என்ற தொழிலாள வர்க்கத்தின் பெருகிவரும் உணர்வையே இது பிரதிபலிக்கிறது.

உடனடி மட்டத்தில், மினசோட்டாவில் விடுக்கப்பட்டுள்ள பொது வேலைநிறுத்த அழைப்பானது, மினியாபோலிசிலும் பிற நகரங்களிலும் ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் ICE ஆகியவற்றால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு எதிர்வினையாகும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டுவரும் பாரிய சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள், தற்போது ஒரு முக்கிய அமெரிக்க நகரத்தை துணை இராணுவப் படைகள் ஆக்கிரமிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது. இந்தத் தாக்குதலானது, அனைத்து ஜனநாயகப் பாசாங்குகளையும் தவிடுபொடியாக்கியுள்ளதுடன், கிளர்ச்சிச் சட்டம் (Insurrection Act) உள்ளிட்ட அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தப் போவதாகவும், மக்களுக்கு எதிராக இராணுவத்தைத் திரட்டப் போவதாகவும் ட்ரம்ப் விடுக்கும் அச்சுறுத்தலை உணர்த்துகிறது.

எதிர்ப்புகளுக்கு ட்ரம்பின் பதில், ஒடுக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துவதே ஆகும். ரெனீ குட்டின் படுகொலையைத் தொடர்ந்து ஒடுக்குமுறை அலைகள், கூடுதல் படைப் பரவல்கள் ஆகியவற்றுடன் “கிளர்ச்சி” மற்றும் “பயங்கரவாதத்தில்” ஈடுபடுவதாக போராட்டக்காரர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமையன்று, மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் மற்றும் மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே ஆகியோர் மத்திய கூட்டாட்சி குடியேற்ற அமலாக்கத்தைத் “தடுத்தனர்” என்ற மோசடியான குற்றச்சாட்டின் கீழ், நீதித்துறை அவர்கள் மீது குற்றவியல் விசாரணையைத் தொடங்கி சம்மன் அனுப்பியுள்ளது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதித்துறை பயன்படுத்தப்படும் ஒரு அசாதாரணமான முறையாகும்.

இருப்பினும், இதில் இன்னும் பரந்த அளவிலான விவகாரங்கள் அடங்கியுள்ளன. அரசியல் வீழ்ச்சியின் அளவும், வர்க்க மோதல்களின் தீவிரமும், நனவில் ஆழமான மாற்றங்களை உருவாக்கும் நிலையை அமெரிக்கா எட்டியுள்ளது. முதலாளித்துவ தன்னலக்குழுவின் சார்பாகப் பேசும் மற்றும் செயல்படும் ட்ரம்ப் நிர்வாகம், ஜனநாயக உரிமைகளைச் சிதைத்து, எஞ்சியிருக்கும் பொதுக் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற சமூக சேவைகளை அழித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்கப் பில்லியனர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 18 சதவீதம் உயர்ந்து கிட்டத்தட்ட $7 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ள நிலையில், தொழிலாளர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த வேலைப்பறிப்பு, விண்ணைத் தொடும் பணவீக்கம் மற்றும் ஆழமடைந்து வரும் கடன் சுமை ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்.

விஷயங்கள் இனி “பழைய வழியில்” தொடர முடியாது என்ற பெருகிவரும் உணர்வை ஒருவித எதிர்ப்பு மனநிலை பிரதிபலிக்கிறது. எதிர்ப்பு உணர்வை எப்போதும் குறைத்து மதிப்பிடும் கருத்துக்கணிப்புகள் கூட, ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆழமான பகையை வெளிப்படுத்துகின்றன. பெரும்பான்மையான அமெரிக்கர்கள் ICE-இன் உத்திகளையும், குடியேற்ற விவகாரம் கையாளப்படும் விதத்தையும் எதிர்க்கின்றனர். மேலும், வெனிசுவேலா மீதான படையெடுப்பு மற்றும் ஈரானுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகளையும் பலர் எதிர்க்கின்றனர்.

நியூ யோர்க் நகரின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான 15,000 செவிலியர்களின் வேலைநிறுத்தம், 2026-இல் வளரப்போகும் எதிர்ப்பின் ஆரம்ப அறிகுறியாகும். அதேபோல், இந்த வார தொடக்கத்தில் ட்ரம்பை பகிரங்கமாக எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்ட டெட்ராய்ட் வாகனத் தொழிலாளிக்கு, சில நாட்களிலேயே பல்லாயிரக்கணக்கான மக்களிடமிருந்து ‘GoFundMe’ வழியாக 800,000 டாலருக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டதும் மற்றொரு வடிவிலான எதிர்ப்பாகும்.

இந்த வளர்ந்து வரும் எதிர்ப்பு ஒரு நனவுபூர்வமான, ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கமாக மாற்றப்பட வேண்டும். அமெரிக்காவில் பொது வேலைநிறுத்தம் உள்ளிட்ட வர்க்கப் போராட்டத்தின் நீண்ட மற்றும் வலிமையான பாரம்பரியம் உள்ளது. 1835-இல் பிலடெல்பியா, 1877-இல் செயின்ட் லூயிஸ், 1919-இல் சியாட்டில் மற்றும் 1934-இல் சான் பிரான்சிஸ்கோ மற்றும் டோலிடோ ஆகிய இடங்களில் நடந்த போராட்டங்களில், போராட்ட அழைப்பின் தீவிரம் மட்டுமே தீர்மானிக்கும் காரணியாக இருந்ததில்லை; மாறாக, தொழிலாள வர்க்கம் தன்னைத் தடுத்து நிறுத்த முயலும் நிறுவனங்களுக்கு எதிராக, எவ்வளவு நனவுபூர்வமாகவும் சுயாதீனமாகவும் போராட்டத்தில் இறங்கியது என்பதே முக்கிய காரணியாக இருந்தது.

மினியாபோலிஸ் நகரம் வர்க்க மோதல்களின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. டீம்ஸ்டர்ஸ் லோக்கல் 574 இல் (Teamsters Local 574) இருந்த ட்ரொட்ஸ்கிச தொழிலாளர்களால் வழிநடத்தப்பட்ட 1934 மினியாபோலிஸ் பார ஊர்தி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம், ஒரு உள்ளூர் ஒழுங்கமைப்பை ஒட்டுமொத்த நகரத்தையே முடக்கும் பொது வேலைநிறுத்தமாக மாற்றியது. இது முதலாளிகள், பொலிஸ், தேசிய பாதுகாப்புப் படை, உழவர்-உழைப்பாளர் கட்சி மற்றும் ரூஸ்வெல்ட் நிர்வாகம் ஆகியவற்றின் கூட்டுப் படைகளை எதிர்கொண்டது. அந்த வெற்றி 1930-களின் பாரிய தொழில்துறை தொழிற்சங்க மயமாக்கலுக்கு வித்திட்டதுடன், தொழிலாள வர்க்கம் தனது சொந்த தலைமையின் கீழும் தெளிவான அரசியல் பார்வையுடனும் போராடும்போது எதைச் சாதிக்க முடியும் என்பதற்கான ஒரு சக்திவாய்ந்த சான்றாக இன்றும் உள்ளது.

அமெரிக்காவில் நீண்டகாலமாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்க எதிர்ப்பு இல்லாததன் விளைவாகவே ட்ரம்பின் அப்பட்டமான தண்டனை விலக்குரிமை உள்ளது. பல தசாப்தங்களாக, தொழிலாளர் அதிகாரத்துவம் தொழிலாளர் இயக்கத்தைச் சிதைத்தது. அதே நேரத்தில், ஆளும் வர்க்கம் ஏகாதிபத்தியப் போர் மற்றும் பாரிய செல்வப் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் தன்னை வளப்படுத்திக் கொண்டது. இந்த வெற்றிடத்தில், முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் இரக்கமற்ற பிரிவினர் எவ்விதக் கட்டுப்பாடுமின்றித் தாங்கள் செயல்பட முடியும் என்று நம்பத் தொடங்கியுள்ளனர்.

தொழிலாள வர்க்கம் ஒரு சமூக சக்தியாக இருப்பதையே மறுப்பதற்கான ஒரு கருத்தியல் பிரச்சாரத்தின் மூலம் அவர்கள் மீதான இந்தத் தாக்குதல் வலுப்படுத்தப்பட்டது. அடிக்கடி நடைபெறும் வேலைநிறுத்தங்கள் மற்றும் உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையிலான பாரிய மோதல்களால் ஒரு காலத்தில் அறியப்பட்ட ஒரு நாட்டில், ஜனநாயகக் கட்சி, அதிகாரப்பூர்வ கல்வியாளர்கள் மற்றும் அரசியல் போலி-இடதுகள் சில கருத்தியல்களை —முக்கியமாக இனம் மற்றும் பாலின அடையாள அரசியலை— முன்னெடுத்தனர். இவை மார்க்சியத்தை நிராகரித்தன, வர்க்கப் போராட்டத்தின் எதார்த்தத்தை மறுத்தன மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சக்தியாக இருக்கும் பாத்திரத்தைத் தள்ளுபடி செய்தன.

ட்ரம்பின் மறுதேர்வு என்பது அமெரிக்காவில் தன்னலக்குழு ஆட்சியின் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அரசின் ஒரு வன்முறை மறுசீரமைப்பைக் குறிக்கிறது. மேலும், அதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான நடவடிக்கைகளின் தீவிரத் தன்மை, அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொள்ளும் நெருக்கடியின் தீவிரத்தைப் பிரதிபலிக்கிறது—இது டாலரின் மதிப்பு வீழ்ச்சி, மலைக்க வைக்கும் கடன் குவிப்பு மற்றும் தன்னலக்குழுவின் செல்வத்திற்கு அடிப்படையாக இருக்கும் கட்டுப்பாடற்ற ஊக வணிகம் ஆகியவற்றில் வெளிப்படுகிறது.

சமூக மற்றும் அரசியல் வாழ்வின் மைய அச்சாக, வெளிப்படையான வர்க்க மோதல்கள் மீண்டும் எழுச்சி பெற்று வருவதன் மூலம், கீழிருந்து உருவாகத் தொடங்கும் ஒரு மறுசீரமைப்பிற்கான பின்னணி இதுவே ஆகும். மேலும், அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது மிகப்பெரிய சர்வதேச தாக்கங்களை ஏற்படுத்தும். அமெரிக்கத் தொழிலாளர்கள் தனித்துவமான பிற்போக்குவாதிகள் அல்லது கூட்டுப் போராட்டத்திற்குத் திறனற்றவர்கள் என்ற கட்டுக்கதையை இது தகர்த்தெறியும்.

மினியாபோலிஸ் நிகழ்வுகள் ஒரு புதிய தொடக்கக் கட்டத்தின் ஆரம்பத்தைக் குறிக்கின்றன. இது இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தாலும், இரட்டை நகரங்களுக்குள்ளும் (Twin Cities) நாடு முழுவதும் வர்க்கப் போராட்டமானது முதலாளித்துவ நெருக்கடியின் தீவிரத்தால் தூண்டப்பட்டு மிக வேகத்தில் வளர்ச்சியடையும் என்று நம்பிக்கையுடன் கணிக்க முடியும். ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள கோபம், மினசோட்டாவில் நடப்பவற்றிற்கும் முதலாளித்துவ அமைப்பு முறையின் பரந்த நெருக்கடிக்கும் இடையிலான தொடர்பை இன்னும் தெளிவாக்கும்.

ஆனால், இந்த நிகழ்வுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் பாடங்கள் உள்ளன. இந்த அட்டூழியங்களைத் தடுக்க வழி தேடுபவர்கள், பாசிசத்திற்கு எதிரான எந்தவொரு பாரிய இயக்கத்திற்கும் இருக்கும் ஆழமான மற்றும் வேரூன்றிய எதிர்ப்பைப் புரிந்துகொள்வது அவசியம். இது ட்ரம்பிடம் இருந்து மட்டுமல்ல, ஜனநாயகக் கட்சியிடமிருந்தும் வருகிறது. வோல் ஸ்ட்ரீட் மற்றும் ஏகாதிபத்தியப் போரின் கட்சியாக இருக்கும் ஜனநாயகக் கட்சியினர், ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும், ட்ரம்பிற்கு எதிரான ஒரு சுயாதீனமான போராட்டத்தின் எழுச்சியைத் தடுக்கவும், அது தன்னலக்குழு மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான பரந்த போராக வளர்வதைத் தடுக்கவும் முயல்கின்றனர்.

மேலும், ட்ரம்ப் நிர்வாகம் முன்னணி ஜனநாயகக் கட்சியினரைத் தாக்கினாலும் கூட, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களைப் பாதுகாப்பதில் ட்ரம்ப் அவர்களின் ஆதரவை நம்பியிருக்க முடியும்.

ட்ரம்பிற்கு எதிரான போராட்டத்திற்கு, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பை தொழிலாளர்களின் வளர்ந்து வரும் சமூகப் போராட்டங்களுடன் இணைக்கக்கூடிய புதிய அமைப்புகளை தொழிலாள வர்க்கத்திற்குள் கட்டியெழுப்புவது அவசியமாகும். வளர்ந்து வரும் இந்த வர்க்க இயக்கத்திற்கு ஒரு தெளிவான அரசியல் மூலோபாயத்தை வழங்குவது அவசியமாகும். அதாவது, பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் சுரண்டல், போர் மற்றும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்க வேண்டும். இது எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்திற்குள் மார்க்சிய இயக்கத்தின் நனவுபூர்வமான தலையீட்டைப் பொறுத்தே அமைகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) முன்னோக்கு, சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு தீர்க்கமான அங்கமாக இருக்கும் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது.

தொழிலாளர்களை ஜனநாயகக் கட்சிக்கும் அதன் இணை அமைப்புகளுக்கும் அடிபணிய வைக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் எதிராக SEP தொடர்ச்சியாகப் போராடி வருகிறது. சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மூலம், ICFI பெருநிறுவன சார்பு தொழிற்சங்க எந்திரத்திற்கு எதிரான கிளர்ச்சிக்கான ஒரு நிறுவன வடிவத்தை உருவாக்கியுள்ளது. மிக சமீபத்தில், ICFI மற்றும் WSWS ஆகியவை 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டுகளின் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொடுக்கவும், குறிப்பாக மார்க்சிய இயக்கத்தின் மூலோபாய அனுபவங்களை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்குக் கொண்டு செல்லவும் சோசலிசம் AI என்ற முக்கியக் கருவியைத் தொடங்கியுள்ளன.

ட்ரம்ப் ஆட்சியின் நடவடிக்கைகளில், அமெரிக்காவின் தன்னலக்குழு ஒரு மீள முடியாத நிலையை கடந்து செல்கிறது. அதனால், அங்கிருந்து பின்வாங்குவதற்கு வழியில்லை. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை மிகவும் அடிப்படையானது: சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா?

பாசிசம் மற்றும் போருக்குள் இறங்குவதை தடுத்து நிறுத்த விரும்புவோர், சமத்துவம், ஜனநாயகம் மற்றும் அமைதியின் அடிப்படையிலான எதிர்காலத்திற்காகப் போராட விரும்புவோர் அனைவரும் தேவையான முடிவுகளை எடுத்து, சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு உலக சோசலிச வலைத்தளம் வலியுறுத்துகிறது.

Loading