மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
“1914-இல் ஜேர்மனியைப் போர் பாதைக்குத் தள்ளிய அதே பிரச்சினைகளைத்தான் அமெரிக்க முதலாளித்துவமும் இப்போது எதிர்கொள்கிறது. உலகம் பிரிக்கப்பட்டுவிட்டதா? அது மீண்டும் மறுபங்கீடு செய்யப்பட வேண்டும். ஜேர்மனியைப் பொறுத்தவரை அது ‘ஐரோப்பாவை ஒழுங்கமைக்கும்’ ஒரு கேள்வியாக இருந்தது. அமெரிக்காவோ உலகையே ‘ஒழுங்கமைக்க’ வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்பை, மனிதகுலம் நேருக்கு நேர் சந்திக்கும்படி வரலாறு இன்று கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.”
லியோன் ட்ரொட்ஸ்கி இந்த எச்சரிக்கையை விடுத்து 90 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அவர் விவரித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “எரிமலை வெடிப்பு” ஒரு புதிய மற்றும் வெடிப்புமிக்க கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஓராண்டிற்குப் பிறகு, அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புக் கொள்கையானது, அதன் கட்டுப்பாட்டில் உள்ள நாடுகள் மற்றும் அறிவிக்கப்பட்ட எதிரிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், ஐரோப்பாவிலுள்ள அதன் சொந்த ஏகாதிபத்திய நட்பு நாடுகளுக்கு எதிராகவும் பாரியளவில் தீவிரமடைந்து வருகிறது.
இந்த ஆண்டு, வெனிசுவேலா மீதான சட்டவிரோதத் தாக்குதல் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டதோடு தொடங்கியது. அதைத் தொடர்ந்து, அமெரிக்க ஆதரவு ஆட்சியை திணிப்பதற்காக ஈரான் மீது குண்டுவீசப்படும் என்ற பகிரங்க அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இப்போது இந்தக் கொள்கை, ஐரோப்பாவிற்கு எதிராகத் பகிரங்கமாகத் திருப்பி விடப்படுகிறது. கடந்த வார இறுதியில், கிரீன்லாந்து மீதான தனது உரிமை கோரல்களை ட்ரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தியதோடு, தனது திட்டங்களை எதிர்க்கும் ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு பாரிய வர்த்தகத் தடைகள் மற்றும் இராணுவ விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தினார். “கிரீன்லாந்தின் மீது நாம் முழுமையான கட்டுப்பாட்டைப் பெறும் வரை உலகம் பாதுகாப்பானது அல்ல” என்று நோர்வே பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், இராணுவ வலிமையைப் பயன்படுத்தத் தான் தயாராக இருப்பதை வெளிப்படுத்திய அவர், தான் இனி “அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்க” கடமைப்படவில்லை என்று சிடுமூஞ்சித்தனமாக கூறினார்.
கிரீன்லாந்து குறித்த இந்தத் தகராறு என்பது ஏதோ ஒரு நிலையற்ற ஜனாதிபதியின் மற்றொரு பைத்தியக்காரத்தனமான வெளிப்பாடு மட்டுமல்ல, மாறாக அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களின் வெளிப்பாடாகும். ஆர்க்டிக் பகுதி அதன் இயற்கை வளங்கள், உருவாகி வரும் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் பிரமாண்டமான இராணுவ முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக உலகளாவிய போட்டித்தன்மையின் மையக் களமாக மாறியுள்ளது. வட அட்லாண்டிக் பெருங்கடலில் தனது மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கும், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் எதிர்கொள்வதற்கும், கிரீன்லாந்தின் மீதான கட்டுப்பாடு அத்தியாவசியமானது என்று வாஷிங்டன் கருதுகிறது. டென்மார்க்கின் இறையாண்மையும் ஐரோப்பிய நட்பு நாடுகளின் நலன்களும் புறக்கணிக்கப்படுவது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அட்லாண்டிக் கடந்த ஒழுங்கு எந்த அளவுக்கு சிதைவடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் இருப்பது போலவே, ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் ஐரோப்பிய மக்களிடையே பரவலான கோபத்தையும் எதிர்ப்பையும் தூண்டிவிட்டுள்ளன. ஆனால், தொழிலாளர்களும் இளைஞர்களும், ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒரு முற்போக்கான அல்லது அமைதியான மாற்றீட்டை பிரதிநிதித்துவம் செய்கின்றன என்ற மாயைக்கு அடிபணிந்துவிடக் கூடாது. பேர்லின், பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஆளும் வர்க்கங்கள், வெள்ளை மாளிகையில் உள்ள பாசிசவாதிக்கும் ஏகாதிபத்திய போருக்கும் எதிராக மக்களைத் திரட்டுவதற்குப் பதிலாக, தங்கள் சொந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், பொருளாதார மற்றும் இராணுவ மோதலுக்கு பகிரங்கமாகத் தயாராவதன் மூலமுமே அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கின்றன.
ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், வரும் பிப்ரவரி மாதத்திலேயே 93 பில்லியன் யூரோ மதிப்புள்ள இறக்குமதிகள் மீது சிறப்பு ஐரோப்பிய ஒன்றிய வரிகள் அமலுக்கு வரக்கூடும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நடவடிக்கைகள் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட ஒரு விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் தேவைப்பட்டால் தானாகவே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதுக்கு ஒரு சிறப்பு உச்சிமாநாட்டை அறிவித்துள்ளார். முன்னணி அரசியல்வாதிகள் பழிவாங்குதல் மற்றும் மோதலைத் தீவிரப்படுத்துதல் குறித்து பகிரங்கமாகப் பேசி வருகின்றனர். ஐரோப்பிய மக்கள் கட்சியின் தலைவர் மான்பிரெட் வேபர், ஐரோப்பா “சக்தியற்றது அல்ல” என்று அறிவித்தார். வர்த்தக ஒப்பந்தங்களை முடக்குவது குறித்துப் பெருமையாகப் பேசிய அவர், இத்தகைய கட்டாயப்படுத்துதல் நடவடிக்கைகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள “வர்த்தக ஏவுகணையை” பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தினார். இது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்க பெருநிறுவனங்களை பொது ஒப்பந்தங்களிலிருந்து விலக்கவும், கொடுப்பனவுகளை நிறுத்தவும் மற்றும் கடுமையான பொருளாதார எதிர் நடவடிக்கைகளைத் திணிப்பதற்கும் அதிகாரம் அளிக்கும்.
முதலாளித்துவ சிந்தனைக் குழுக்களில், அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே போர் மூள்வது போன்ற சூழல்கள் கூட இப்போது பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. “நாம் ஒன்று வர்த்தகப் போரில் ஈடுபட வேண்டும், அல்லது உண்மையான போரில் இருக்கிறோம்” என்று பிரஸ்ஸல்ஸில் உள்ள ப்ரூகல் (Bruegel) ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஜேக்கப் பங்க் கிர்கேகார்ட் கூறியுள்ளார். இத்தகைய கூற்றுகள், இந்த மோதல் வெறும் பொருளாதாரத் தகராறுகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை என்பதையும், மாறாக, வளங்கள் மற்றும் செல்வாக்கு மண்டலங்களுக்காக ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு இடையே நடக்கும் சண்டையானது நேட்டோவையும், இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளையும் தகர்த்து, பகிரங்கமான வர்த்தகப் போராகவும், இறுதியில் போராகவும் வெடிக்கிறது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் “விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு” குறித்து, ஐரோப்பிய அரசாங்கங்கள் செய்யும் பாசாங்குத்தனமான கூக்குரல்கள் வெறுப்புக்கு மட்டுமே உரியவை. கடந்த மூன்று தசாப்தங்களாக, கொசோவோ முதல் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா வரை அமெரிக்கா தலைமையிலான ஒவ்வொரு ஆக்கிரமிப்புப் போரையும் இவை ஆதரித்து வந்துள்ளன. சில நாட்களுக்கு முன்புதான், வெனிசுவேலா மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்புடன் அவை தங்களை இணைத்துக்கொண்டன. காஸாவை இடிபாடுகளாக்கி, பல்லாயிரக்கணக்கில் —பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள்— கொன்று குவிக்கப்பட்டுவரும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையில், இவர்களும் உடந்தையாக உள்ளனர்.
உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரில், ஐரோப்பிய சக்திகள் இப்போது மிகவும் ஆக்ரோஷமான பாத்திரத்தை வகித்து வருகின்றன. இந்தப் போர் வேண்டுமென்றே ரஷ்யாவை நேட்டோ திட்டமிட்டு சுற்றி வளைத்ததன் மூலமாக தூண்டிவிடப்பட்டது. மேலும் இந்தப் போர், ஐரோப்பாவை இராணுவமயமாக்கவும், அணு ஆயுதம் ஏந்திய அந்த நாட்டுடன் நேரடி மோதலுக்குத் தயாராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரஷ்யாவுடனான மோதலில், முக்கிய ஐரோப்பிய சக்திகள் ட்ரம்ப் மாஸ்கோவுடன் மிகவும் “மென்மையாக” நடந்து கொள்வதாக விமர்சிக்கின்றன. ஏனெனில், ஐரோப்பிய நலன்களையும், குறிப்பாக மூலப்பொருட்களுக்கான அணுகலையும் ஓரங்கட்டும் ஒரு ஒப்பந்தத்தை, வாஷிங்டன் மாஸ்கோவுடன் ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில், ஜேர்மனியில் பசுமைக் கட்சியினரும், இடது கட்சியினரும் மிகவும் பிற்போக்குத்தனமான சக்திகளாக உள்ளனர். அவர்கள் கிரீன்லாந்தை இராணுவமயமாக்குவதை பகிரங்கமாக ஆதரிப்பதோடு, பேர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸிடமிருந்து இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கோருகின்றனர். இந்தப் பிராந்தியத்தில் ஜேர்மனியின் படைகளை நிலைநிறுத்துவதை அதன் முன்னனித் தலைவர்கள் வரவேற்கும் அதே வேளையில், அது போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். “கிரீன்லாந்துடன் ஐக்கியம்” என்ற போர்வையில், அவர்கள் ஒரு ஆக்கிரமிப்பு ஐரோப்பிய/ஜேர்மனிய உலக-வல்லரசுக் கொள்கையை ஊக்குவிக்கின்றனர். ஜேர்மன் தூதரகங்கள், இராணுவ இருப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுவான பங்கு ஆகியவற்றிற்கான கோரிக்கைகள், இந்தக் கட்சிகள் அரசு இயந்திரத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதையும், மறுஆயுதமேந்தலுக்கான கருத்தியல் ரீதியான முன் களப் படைகளாக அவை செயல்படுகின்றன என்பதையும் வெளிப்படுத்துகின்றன. ஒரு “நான்காம் உலக வல்லரசு ஐரோப்பா” குறித்த அவர்களின் பார்வை, ஏகாதிபத்திய போட்டி மற்றும் போர் தயாரிப்பின் ஒரு வேலைத்திட்டம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
சுருக்கமாகச் சொல்வதானால், ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “எரிமலை வெடிப்பை” மட்டுமல்ல, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்பையும் எதிர்கொண்டுள்ளனர் என்பதாகும். ஒரு வர்த்தகப் போர் கூட ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். இது பொருளாதார பெருமந்தநிலைக்கு இணையான அளவில், பாரிய வேலையின்மை மற்றும் வறுமைக்கு இட்டுச் செல்லும். அத்துடன், இத்தகைய மோதல், ஒரு நேரடிப் போராக மாறி, மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் அபாயத்தைக் கொண்டிருப்பதுபற்றி குறிப்பிட வேண்டியதில்லை.
ஐரோப்பிய சக்திகளின் மீள்ஆயுதமயமாக்கல் திட்டங்களின் அளவு, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு முந்தைய ஆண்டுகளை நினைவூட்டுகிறது. குறிப்பாக, ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டும் ஒருமுறை தனது வல்லரசு மரபுகளை பகிரங்கமாக மீட்டெடுத்து வருகிறது. அது ரஷ்யாவிற்கு எதிராகவும், அமெரிக்காவிற்கு எதிராகவும் மற்றும் உலகளாவிய ரீதியிலும் தனது நலன்களை நிலைநிறுத்துவதற்காக, ஐரோப்பிய கண்டத்தை இராணுவ ரீதியாக வழிநடத்தும் இலக்கைப் பின்தொடர்கிறது.
இந்த வளர்ச்சியை ட்ரொட்ஸ்கிச இயக்கம் நீண்ட காலத்திற்கு முன்பே எதிர்பார்த்திருந்தது. 1991-ஆம் ஆண்டிலேயே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) “ஏகாதிபத்திய போருக்கும் காலனித்துவத்திற்கும் எதிரான அறிக்கை”, ஈராக் மீதான தாக்குதல் ஒரு புதிய நவகாலனித்துவ போர்களின் சகாப்தத்தைத் தொடங்கி வைப்பது மட்டுமல்லாமல், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான மோதல்களையும் தீவிரப்படுத்தும் என்று எச்சரித்தது. குறிப்பாக, 20-ஆம் நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களில் ஒன்றையொன்று எதிர்கொண்ட அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான வரலாற்று ரீதியான பகையை, இது மீண்டும் தூண்டும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
ஐரோப்பிய.... ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் விதியை அமெரிக்காவின் கைகளில் விட்டுவிட விரும்பவில்லை. [ஈராக்கிற்கு எதிரான] போருக்குப் பிந்தைய காலத்தில், அமெரிக்கா இன்னும் முதன்மை வகிக்கும் நேட்டோ கட்டமைப்பிற்கு வெளியே, சுயாதீனமாக செயல்படும் ஒரு “துரித இராணுவப் படைப்பிரிவை” நிறுவ ஐரோப்பியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 21-ஆம் நூற்றாண்டின் உலக விவகாரங்களில் தனது நிலைப்பாடு, 20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தான் சந்தித்த இராணுவத் தோல்வியால் தீர்மானிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
இன்று வெளிப்படையாகவே, இந்த மோதல் நிலை எட்டப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மற்றொரு அடிப்படை பகுப்பாய்வும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. சமூகத்தை இடைவிடாமல் போரை நோக்கி உந்தித் தள்ளும் முதலாளித்துவ அமைப்பு முறையின் அதே முரண்பாடுகள்தான் —அதாவது, உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்பு முறைக்கும் இடையிலான முரண்பாடு, மற்றும் உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் அதன் தனியார் கையகப்படுத்தலுக்கும் இடையிலான முரண்பாடு— சமூகப் புரட்சிக்கான புறநிலை அடித்தளத்தையும் உருவாக்குகின்றன.
அமெரிக்காவிலேயே ட்ரம்ப்பின் பாசிசக் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. உலக நிதி மூலதனத்தின் மையமான நியூ யோர்க்கில், 15,000ம் செவிலியர்கள் அந்த நகரத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மினியாபோலிஸில், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையினரால் (ICE) ரெனீ நிக்கோல் குட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராகி வருகின்றனர். ஆளும் தன்னலக்குழுவும், அரசு இயந்திரமும் முன்னெப்போதையும் விட அதிக சர்வாதிகாரத்துடனும் பாசிசத்துடனும் செயல்பட்டுவரும் நிலையில், நாடு முழுவதிலும் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் தீவிரமடைந்து வருகின்றன.
ஐரோப்பாவிலுள்ள தொழிலாளர்களும், இளைஞர்களும் உலகத் தொழிலாள வர்க்கத்தின் பக்கமே தங்களை ஒருங்கமைத்துக் கொள்ள வேண்டும். பேர்லின், பாரிஸ், இலண்டன் அல்லது பிரஸ்ஸல்ஸில் உள்ள அரசாங்கங்களோ, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீள்ஆயுதமயமாக்கல் திட்டங்களோ, அல்லது ஐரோப்பிய இராணுவவாதத்திற்கு “முற்போக்கான” முலாம் பூசிவரும் போலி-இடது கட்சிகளோ, அவர்களின் கூட்டாளிகள் அல்ல. போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகாரத்தின் அதே வளர்ச்சியை எதிர்கொள்ளும் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்களே அவர்களின் இயல்பான கூட்டாளிகள் ஆவர்.
ட்ரம்ப்பின் “வலிமையே நீதி” என்ற பாசிசக் கொள்கைக்கான பதில், ஐரோப்பிய மீள்ஆயுதமயமாக்கல் அல்ல. மாறாக, அனைத்து ஏகாதிபத்திய போர்வெறியர்களுக்கும் எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தைத் அணிதிரட்டுவதே ஆகும். போரை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறையைத் தூக்கியெறிந்து, ஒரு சர்வதேச சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதே ஒரே முற்போக்கான முன்னோக்காகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் இந்தத் வேலைத்திட்டத்திற்காக போராடி வருகின்றன.
