முன்னோக்கு

2025-ல் பில்லியனர்களின் சொத்து மதிப்பு பாரியளவில் அதிகரித்துள்ளது என ஒக்ஸ்ஃபாம் அறிக்கை காட்டுகிறது: செல்வத்தை சமூக நலனுக்காக பறிமுதல் செய்ய வேண்டிய அவசியம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உள்ள உலக பொருளாதார மன்றத்திற்கு முன்னதாக ஒரு ஹோட்டலின் கூரையில் ஒரு போலீஸ் பாதுகாப்புக் காவலர் காவல் காக்கிறார், ஜனவரி 20, 2020 திங்கள்கிழமை. [AP Photo]

உலகப் பொருளாதார, சமூக மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் (World Economic Forum) இந்த வாரம் உலகின் பில்லியனர்கள் ஒன்று கூடுகின்றனர். கிரீன்லாந்தை இணைப்பதற்கான ட்ரம்பின் முயற்சி தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது. அதே வேளையில், அமெரிக்காவிற்குள் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவும் முயற்சியின் ஒரு பகுதியாக, மினியாபோலிஸ் நகரத்தை ட்ரம்ப் இராணுவ-போலீசின் ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ஒக்ஸ்பாம் திங்களன்று வெளியிட்ட வருடாந்திர அறிக்கை, இந்த வெடிப்புமிக்க முதலாளித்துவ நெருக்கடியின் அடிப்படை சமூக மற்றும் பொருளாதார வேர்களை ஆவணப்படுத்தியுள்ளது. சர்வாதிகாரம் மற்றும் போரின் வன்முறை விரிவாக்கமானது, உலகளாவிய சமூக சமத்துவமின்மையின் வன்முறை முடுக்கத்திற்கு இணையாக உள்ளது என்பதை ஆவணப்படுத்துகிறது.

“செல்வந்தர்களின் ஆட்சியை எதிர்த்தல்” என்று தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கை, உலகம் ஒரு “முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது” என்றும், அதில் நிலவும் “கடுமையான சமத்துவமின்மை” ஜனநாயக அரசாங்க முறைகளை அழித்து வருவதாகவும் விளக்குகிறது.

[Photo: Oxfam]

பல தசாப்தங்களாக சமத்துவமின்மை அதிகரித்து வருகின்ற அதேவேளையில், 2025 ஆம் ஆண்டு முதலாளித்துவ தன்னலக்குழுவின் சொத்துக் குவிப்பு ஒரு சாதனை அளவிலான வேகத்தை எட்டியுள்ளது. அந்த அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள சில உண்மைகள் பின்வருமாறு:

  • 2025 ஆம் ஆண்டில், உலகளாவிய பில்லியனர்களின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளை விட மூன்று மடங்கு வேகமாக வளர்ந்து, 18.3 டிரில்லியன் டாலர்கள் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இது 2020 ஆம் ஆண்டிலிருந்து 81 சதவீத அதிகரிப்பாகும். பில்லியனர்களின் எண்ணிக்கை வரலாற்றிலேயே முதல்முறையாக 3,000-ஐத் தாண்டியுள்ளது.
  • உலகின் மிகவும் செல்வாக்குமிக்க 12 பில்லியனர்கள், தற்போது மனிதகுலத்தின் ஏழ்மையான மக்கள் தொகையையில் பாதியளவு அல்லது 4 பில்லியன் மக்களைவிட (அதாவது 400 கோடி மக்கள்) அதிக சொத்துக்களைக் கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு பில்லியனர்கள் குவித்த சொத்துக்களில் 2.5 டிரில்லியன் டாலர்கள் தொகையைக் கொண்டு, உலகிலுள்ள கடுமையான வறுமையை 26 மடங்கிற்கு மேலாக ஒழிக்க முடியும்.
  • அமெரிக்காவில், ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற முதல் ஆண்டில் கோடீஸ்வரர்கள் 1.5 டிரில்லியன் டாலர்கள் ஆதாயம் அடைந்துள்ளனர். இது 22 சதவீத உயர்வோடு, அவர்களின் மொத்தச் சொத்தை 8.2 டிரில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது. தற்போது அமெரிக்காவின் மிகவும் பணக்காரர்களான 14 பில்லியனர்கள் வைத்துள்ள சொத்தானது, 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்த அனைத்துக் பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பையும் விட அதிகமாகும்.
  • டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (Tesla and SpaceX) நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க்கின் சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக உயர்ந்துள்ளது. இது 1997 ஆம் ஆண்டில் இருந்த ஒட்டுமொத்த போர்ப்ஸ் 400 (Forbes 400) பட்டியலின் சொத்தை விட அதிகமாகும். தனிநபர் சொத்து மதிப்பில் அரை டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சொத்துச் சேர்த்த வரலாற்றின் முதல் நபர் இவராவார்.
[Photo: Oxfam]

சமூக சமத்துவமின்மையின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சி, “ஜனநாயக அரிப்பு” மற்றும் ஜனநாயக ஆட்சி முறைகளின் வீழ்ச்சிக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை ஒக்ஸ்பாம் ஆய்வு செய்கிறது. இதர சாதாரண மக்களை விட பில்லியனர்கள் அரசியல் பதவிகளை வகிக்க 4,000 மடங்கு அதிக வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 2024 அமெரிக்கத் தேர்தலில் செலவிடப்பட்ட ஒவ்வொரு 6 டாலரிலும் 1 டாலர் வெறும் 100 பில்லியனர் குடும்பங்களிடமிருந்து வந்துள்ளது.

இந்த தன்னலக்குழுவின் பெரும் சொத்துக்கள், பிரம்மாண்டமான நிறுவனங்களின் மீதான அவர்களின் கட்டுப்பாட்டுடன் நேரடியாகத் தொடர்புடையவை. உதாரணமாக, உலகின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை பில்லியனர்களுக்கு சொந்தமானவை. உலகின் முதல் 10 சமூக ஊடகத் தளங்களில் ஒன்பதை வெறும் ஆறு பில்லியனர்கள் இயக்குகின்றனர். முதல் 10 செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்களில், எட்டு நிறுவனங்கள் பில்லியனர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

ட்ரம்பின் அமைச்சரவை 7 பில்லியன் டாலருக்கும் அதிகமான கூட்டுச் சொத்துக்களைக் கொண்டு அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பணக்கார அமைச்சரவையாகத் திகழ்கிறது. நியூ யோர்க் டைம்ஸ் செய்தியின்படி, ட்ரம்ப் தனது பதவிக் காலத்தை பயன்படுத்தி, ஓராண்டில் குறைந்தது 1.4 பில்லியன் டாலர்கள்வரை வருமானம் ஈட்டியுள்ளார். இதில் வெளிநாட்டு அரசாங்கங்கள் அவரது குடும்பத்திற்கு நேரடியாகப் பணம் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கும் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) முயற்சிகள் மூலம் கிடைத்த 867 மில்லியன் டாலர்கள் மற்றும் கட்டாரிடமிருந்து பெறப்பட்ட 400 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஜெட் விமானம் ஆகியவை அடங்கும். 1953-இல், முன்னாள் ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் பதவியிலிருந்து வெளியேறியபோது, அவருக்கு ஒரு கார் கூட சொந்தமாக இருக்கவில்லை. ட்ரம்பின் இந்த ஓராண்டு வருமானம், அமெரிக்காவின் ஒரு சராசரி குடும்ப வருமானத்தைவிட 16,822 மடங்கு அதிகமாகும்.

டெஸ்லாவின் எலோன் மஸ்க், அமேசானின் ஜெஃப் பெசோஸ், மெட்டாவின் மார்க் ஜுக்கர்பெர்க், கூகுளின் சுந்தர் பிச்சை, ஆப்பிளின் டிம் குக் மற்றும் ஓபன்ஏஐ-யின் சாம் ஆல்ட்மேன் ஆகியோர் ட்ரம்பின் பதவியேற்பு விழாவின் போது நாடாளுமன்றத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். அதற்கேற்ப அவர்கள் பெரும் பலன்களைப் பெற்றுள்ளனர். உலகின் மிகப் பெரும் பணக்காரர்களான இந்த 15 நபர்கள், 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கள் கூட்டுச் சொத்தை 747 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளனர் — இது 31 சதவீத உயர்வாகும். எலோன் மஸ்க் மட்டும் 308 பில்லியன் டாலர்கள் (73 சதவீதம்) ஆதாயம் அடைந்துள்ளார். கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் முறையே 106 பில்லியன் மற்றும் 93 பில்லியன் டாலர்கள் இலாபமடைந்தனர். மார்க் ஜுக்கர்பெர்க் 24 பில்லியன் டாலர்களையும், என்விடியா (Nvidia) நிறுவனத்தின் ஜென்சன் ஹுவாங் 49 பில்லியன் டாலர்களையும் தங்கள் சொத்தில் சேர்த்துள்ளனர்.

“செல்வந்தர்களின் ஆட்சியை எதிர்த்தல்” என்ற ஓக்ஸ்பாம் அறிக்கையின் தலைப்பு, சமூக சமத்துவமின்மையின் இந்த பெரும் எழுச்சிக்கு ஒரு அரசியல் தீர்வை வழங்குவதாக உறுதியளிக்கிறது. ஆனால், வாசகர்களுக்குக் கிடைப்பதோ மிதமான சமூக சீர்திருத்தங்களின் தொகுப்பு மட்டுமே: பில்லியனர்கள் மீது வரி விதிப்பது, தேர்தல் நிதிச் சீர்திருத்தம் மற்றும் வரி ஏய்ப்பு வழிகளை அடைப்பது போன்றவையே அவை.

செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், இந்த தன்னலக் குழுக்கள் தங்களுக்குரிய “நியாயமான பங்கை” வழங்க வேண்டும் என்று கோருவதில் சோர்வடைவதே இல்லை. ஆனால், அவர்களின் நியாயமான பங்கு என்பதுதான் என்ன? அமெரிக்க தெற்கின் அடிமை உரிமையாளர்களையும், புரட்சிக்கு முந்தைய பிரான்சின் பிரபுக்களையும் போலவே, இந்த முதலாளித்துவ வர்க்கம் செல்வத்தை உருவாக்குவதில்லை: சமூகத்தின் அனைத்துச் செல்வங்களையும் உருவாக்கும் உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டுவதன் மூலமே அவர்கள் செல்வத்தை அபகரிக்கிறார்கள். கடந்த கால புரட்சிகர காலகட்டங்களைப் போலவே, இப்போதும் பிரச்சனை என்பது ஒரு வேரூன்றிய ஆளும் வர்க்கத்திடமிருந்து மிதமான சீர்திருத்தங்களைப் பெறுவது அல்ல. அவர்கள் அதை அனுமதிக்கவும் மாட்டார்கள். மாறாக, அவர்களின் அதிகாரத்தைத் தக்கவைக்கும் முழு சமூகக் கட்டமைப்பையும் மாற்றியமைப்பதே ஆகும்.

சமூகத்திலுள்ள இந்த தன்னலக்குழுவின் தன்மை, மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளுடன் எவ்விதத்திலும் ஒத்துப்போகாது. இந்த உண்மைதான், நான்காம் அகிலத்தின் நிறுவன வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கி முன்வைத்த “தனித்தனி முதலாளித்துவக் குழுக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தல்” என்ற கோரிக்கையின் அவசியத்தைச் சான்றளிக்கின்றது. அதே வழியில் டிரொட்ஸ்கி, “யுத்தத் தொழில்கள், இரயில்வே பாதைகள், மூலப்பொருட்களின் மிக முக்கியமான ஆதாரங்கள் போன்றவற்றில் ஏகபோகத்தைக் கொண்டுள்ள நிறுவனங்களை அரசுடைமையாக்க வேண்டும் (பறிமுதல் செய்ய வேண்டும்) என்று நாங்கள் கோருகிறோம்” என வலியுறுத்தினார்.

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வின் மீது இந்த தன்னலக்குழு கொண்டுள்ள பிடியானது, அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதன் மூலமும், உற்பத்தி சக்திகள் மீதான அவர்களின் கட்டுப்பாட்டை நீக்குவதன் மூலமும் உடைக்கப்பட வேண்டும். இதனை வெறும் வேண்டுகோள்கள் அல்லது சீர்திருத்தங்கள் மூலம் சாதிக்க முடியாது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய சமூகப் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே இதைச் சாதிக்க முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பில்லியனர்களுக்குப் பின்னால் நவீன ஆயுதங்களை ஏந்திய பிரம்மாண்டமான இராணுவங்களும் போலீஸ் படைகளும் நிற்கின்றன. இந்தச் செல்வத்தைத் வைத்திருப்பவர்கள், தாங்கள் பெரும்பான்மையான மக்களுடன் புறநிலை ரீதியாக மோதலில் உள்ளனர் என்பதை நன்கு அறிவார்கள். மினியாபோலிஸில் ட்ரம்ப் படைகளைக் குவித்தது என்பது ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான வளர்ந்து வரும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். எவ்வாறிருப்பினும், ட்ரம்ப் முதலாளித்துவ தன்னலக்குழுவான ஒரு வர்க்கத்தின் நலன்களுக்காக பேசுகிறார் மற்றும் செயல்படுகிறார்.

இந்த அமைப்பு முறையை ஆதரிக்கும் ஜனநாயகக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுமே, நிதித்துறை அதிகாரக் கும்பலை எதிர்ப்பதில் அடிப்படையில் இலாயக்கற்றவை. குறிப்பிடத்தக்க வகையில், ஒக்ஸ்பாம் அறிக்கை வெளியான அதே நாளில், அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) உறுப்பினரும் தற்போதைய நியூ யோர்க் மேயருமான ஜோஹ்ரான் மம்தானியின் “பணக்காரர்களுக்கு வரி விதிக்கும் திட்டம் கைவிடப்படுவதாக” நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக சமத்துவமின்மைக்கு எதிரான பரந்த மக்களின் ஆதரவால் பதவியைப் பிடித்த மம்தானி, பதவியேற்ற சில வாரங்களிலேயே சர்வாதிகாரியாக துடிக்கும் ட்ரம்புடன் நெருக்கம் காட்டத் தொடங்கிவிட்டார். மேலும், சமூக சமத்துவமின்மையைக் குறைப்பதற்காக அவர் அளித்த மிகச் சாதாரணமான தேர்தல் வாக்குறுதிகளைக் கூட கைவிட்டுவிட்டார். அரசியல் என்பது எப்போதும் போல ஒரு வர்க்க தர்க்கத்தையே (class logic) பின்பற்றுகிறது.

பாசிசம், சர்வாதிகாரம், வறுமை, சுற்றுச்சூழல் பேரழிவு, போர் மற்றும் மலைப்பூட்டும் சமத்துவமின்மை என மனிதகுலம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெரிய சமூகப் பிரச்சனைக்கும் தீர்வு காண, முதலாளித்துவ தன்னலக்குழுவின் அதிகாரத்தின் மீது நேரடியான மற்றும் நனவு பூர்வமான தாக்குதல் தேவைப்படுகிறது. இந்த நெருக்கடிகளைச் சீர்திருத்தங்கள் மூலமாகவோ அல்லது ஆளும் வர்க்கத்திடம் முறையிடுவதன் மூலமாகவோ தீர்க்க முடியாது. இவை பில்லியனர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், பொருளாதாரத்தின் மீது அவர்களுக்குள்ள கட்டுப்பாட்டைத் தகர்க்கவும், முதலாளித்துவ அமைப்பு முறையையே ஒழிக்கவும் கோருகின்றன.

2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று வாரங்களில், மினியாபோலிஸில் நிலவும் இராணுவ-போலீஸ் ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாரிய மக்கள் போராட்டங்கள் மற்றும் நியூ யோர்க் நகரத்தில் 15,000 செவிலியர்களின் வேலைநிறுத்தம் எனப் பல்வேறு வடிவங்களில் வளர்ந்து வரும் எதிர்ப்பு வெளிப்படுகிறது. ஆனால், இந்த வளர்ந்து வரும் இயக்கம் ஒரு தெளிவான அரசியல் மூலோபாயத்துடன் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி, முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்க எந்திரத்தில் இருந்து சுயாதீனமாக, தொழிலாள வர்க்கத்தை அதன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான ஒரு பொதுத் தாக்குதலில் ஐக்கியப்படுத்த, ஒவ்வொரு பணியிடத்திலும், பள்ளியிலும் மற்றும் அண்டை பகுதிகளிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைக்க அழைப்பு விடுக்கிறது. இது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு உறுதிபூண்டுள்ள தொழிலாள வர்க்கத்தில், ஒரு புரட்சிகரத் தலைமையை அபிவிருத்தி செய்வதுடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading