டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் கிரீன்லாந்து குறித்த ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களே ஆதிக்கம் செலுத்தின

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில், உலக வணிகத் தலைவர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகிறார். புதன்கிழமை, ஜனவரி 21, 2026 [AP Photo/Evan Vucci]

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் திங்களன்று தொடங்கிய உலகப் பொருளாதார மன்றத்தில், கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சிகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே அதிகரித்துவரும் பிளவு மேலாதிக்கம் செலுத்தியது. புதன்கிழமை மாலை, கிரீன்லாந்தை இராணுவ பலத்தால் இணைக்கும் தனது முந்தைய மிரட்டல்களையோ அல்லது ஐரோப்பிய நாடுகள் மீதான வர்த்தக வரி விதிப்பையோ தான் கைவிட்டுள்ளதாகவும், அதற்கு ஈடாக அந்தப் பிரதேசத்தின் மீதான கட்டுப்பாடு குறித்து ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டதாகவும் ட்ரம்ப் அறிவித்தார்.

நேட்டோ (NATO) கூட்டணியின் ஸ்தாபக உறுப்பு நாடான டென்மார்க்கின் கீழ் இருந்துவரும் ஒரு சுயாட்சி பெற்ற பகுதியே கிரீன்லாந்து ஆகும். ட்ரம்ப் புதன்கிழமை அன்று நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவை சந்தித்து, ஒரு 'வருங்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை' அறிவித்தார். இருப்பினும், அதன் துல்லியமான விதிமுறைகள் இன்னும் தெளிவற்றதாகவும் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளன.

இந்தக் கலந்துரையாடல்களை நன்கு அறிந்த, பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், 'அமெரிக்கா, தனது இராணுவத் தளங்களை அமைப்பதற்கு ஏதுவாக, கிரீன்லாந்தின் சிறிய நிலப்பகுதிகள் மீதான இறையாண்மையை அமெரிக்காவிற்கு டென்மார்க் வழங்கும் ஒரு சமரசத் திட்டம்' குறித்து நேட்டோ இராணுவ அதிகாரிகள் கலந்துரையாடியதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு அதிகாரிகள் இந்த முன்மொழிவை சைப்ரஸில் உள்ள பிரிட்டனின் இறையாண்மை கொண்ட தளம் போன்ற பகுதிகளுடன் ஒப்பிட்டனர். கியூபாவில் உள்ள குவாண்டனாமோ விரிகுடா மீதான அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டைப் போன்றதொரு ஏற்பாட்டின் மூலம், டென்மார்க்கின் அனுமதி பெறாமலேயே அமெரிக்கா 'இராணுவ நடவடிக்கைகள், உளவுத்துறை மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ள' இந்த கட்டமைப்பு அனுமதிக்கும் என்று தி டெலிகிராப் கூறியுள்ளது.

கிரீன்லாந்து தொடர்பாக உண்மையான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்று கூறி டென்மார்க் அதிகாரிகள் இந்தத் தகவலை நிராகரித்தனர். கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் உரிமை என்பது டென்மார்க்கிற்கு ஒரு 'சிவப்புக்கோடு' (தாண்டக்கூடாத எல்லை) என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக் ராஸ்முசென் பொது ஒளிபரப்பு நிறுவனமான DR-இடம் தெரிவித்தார். டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர் சாசா பேக்ஸ், ஸ்கை நியூஸிடம் கூறுகையில், இந்த ஒப்பந்தம் 'உண்மையானது அல்ல' என்றும், 'இது இரண்டு நபர்கள் பேசிக்கொண்ட ஒரு உரையாடல் மட்டுமே, நிச்சயமாக இது ஒரு ஒப்பந்தம் கிடையாது' என்றும் கூறினார். இதற்கிடையில், ட்ரம்புடனான தனது பேச்சுவார்த்தையில் கிரீன்லாந்து டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் நீடிக்குமா என்ற கேள்வி 'எழவே இல்லை' என்று ரூட்டே Fox  நியூஸிடம் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து எட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான வரி விதிப்பு மிரட்டல்களை ட்ரம்ப் திரும்பப் பெற்றுக்கொண்டார். செவ்வாய்க்கிழமை அன்று, அக்டோபர் மாதத்திற்குப் பிந்தைய மிக மோசமான சரிவைச் சந்தித்த S&P 500 பங்குச் சந்தை, இந்த அறிவிப்பால் மீண்டும் அதிரடியாக உயர்ந்தது.

டாவோஸில் ஏற்பட்ட இந்த நெருக்கடி, அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையேயான கூட்டணியின் சிதைந்த நிலையை அம்பலப்படுத்தியது. செவ்வாய்க்கிழமை அன்று, மன்றத்தில் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி, உலகளாவிய நிலைமை குறித்த ஒரு கடுமையான மதிப்பீட்டை வழங்கினார். 'நான் நேரடியாகச் சொல்கிறேன்: நாம் ஒரு மாற்றத்தில் இல்லை, ஒரு பிளவின் நடுவில் இருக்கிறோம்,' என்று கார்னி அறிவித்தார். 'விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்குமுறை மங்கி வருகிறது' என்று எச்சரித்த அவர், பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர் துசிடைடீஸின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்: 'வலிமையானவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள், பலவீனமானவர்கள் தாங்க வேண்டியதைத் தாங்குகிறார்கள்.' கார்னியின் உரைக்கு அங்கிருந்தவர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பளித்தனர். ஆனால், ட்ரம்பின் உரைக்கு மிகக் குறைந்த அளவிலான கைதட்டல்களே கிடைத்தன.

ஐரோப்பாவை 'பலவீனப்படுத்தவும், அடிபணிய வைக்கவும்' மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி என ட்ரம்பின் வர்த்தக மூலோபாயத்தை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கண்டனம் செய்தார். அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பிளவின் ஆழத்தை, ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லாகார்ட்டின் செயல் வெளிப்படுத்திக் காட்டியது. ஐரோப்பிய பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்து அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் ஆற்றிய உரையின் போது, லாகார்ட் இரவு உணவு விருந்தை விட்டு வெளியேறி, வெளிநடப்பு செய்தார்.

இந்த ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் எதுவாக இருந்தாலும், அது ஆர்க்டிக் பிராந்தியத்தின் மீது அமெரிக்க இராணுவக் கட்டுப்பாட்டின் விரிவாக்கத்தையே குறிக்கிறது. மன்றத்தில் ஆற்றிய உரையில், ரஷ்யா மற்றும் சீனாவுடனான அமெரிக்க மோதலின் பின்னணியில், கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்துவதற்கான தனது முயற்சிகளை ட்ரம்ப் முன்வைத்தார்.

'கிரீன்லாந்து என்பது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே ஒரு முக்கிய மூலோபாய இடத்தில், பாதுகாப்பு ஏதுமின்றி இருக்கும் ஒரு பரந்த, பெரும்பாலும் மக்கள் வசிக்காத மற்றும் வளர்ச்சியடையாத நிலப்பரப்பாகும்,' என்று ட்ரம்ப் கூறினார். இந்த விசித்திரமான புவியியல் அமைப்பை (கிரீன்லாந்து சீனாவிலிருந்து 5,000 மைல்கள் அல்லது 8,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) மீண்டும் வலியுறுத்திய அவர், 'அது சரியாக அங்கேதான் இருக்கிறது, மிகச் சரியாக நடுப்பகுதியில் உள்ளது,' என்று கூறினார்.

இராணுவ பலத்தைப் பயன்படுத்துவேன் என்ற மிரட்டலில் இருந்து பின்வாங்கினாலும், தனது நோக்கங்களை அடைய பொருளாதார ரீதியான கட்டாயத்தை பயன்படுத்துவேன் என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தினார். 'நீங்கள் 'ஆம்' என்று சொல்லலாம், அதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்; அல்லது நீங்கள் 'இல்லை' என்று சொல்லலாம், அதை நாங்கள் நினைவில் கொள்வோம்,' என்று அவர் அறிவித்தார்.

கிரீன்லாந்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் உந்துதல், மேற்கு அரைக்கோளத்தை (அமெரிக்க கண்டம்) நேரடி அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் மறுஒழுங்கு செய்வதற்கான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய எதிரியான சீனாவுக்கு எதிராகத் தனது வலிமையைக் காட்டுவதற்கு, தனது 'அருகிலுள்ள வெளிநாடுகளின்' மீது அமெரிக்கா அதிகாரத்தை நிலைநிறுத்துவது அவசியம் என்று ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது. கனடா மற்றும் கிரீன்லாந்து ஆகியவை அவற்றின் பரந்த கனிம வளங்கள், எரிசக்தி இருப்புக்கள் மற்றும் ஆர்க்டிக் கடல் வழிகளுக்கான அணுகல்களின் முயற்சிக்கு முக்கியமானவை; அதேபோல் பனாமா கால்வாயும் முக்கியமானது. இந்த அரைக்கோள ஒருங்கிணைப்பு மூலோபாயமானது, பெரும் வல்லரசு மோதல்களுக்காக ஒரு கண்ட அளவிலான வளத்துக்கான தளத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

காலநிலை மாற்றம் ஆர்க்டிக் பகுதியை மாற்றியமைத்து வருவதால், கிரீன்லாந்தின் மூலோபாய மதிப்பு அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் ஆண்டின் பெரும்பகுதி கடக்க முடியாமல் இருந்த வடமேற்குப் பாதை (Northwest Passage), இப்போது பெருகிய முறையில் கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாறி வருகிறது. இது ஆசியாவிற்கும் அட்லாண்டிக் நாடுகளுக்கும் இடையிலான பயணங்களில் ஆயிரக்கணக்கான மைல்களையும் வாரக்கணக்கிலான பயண நேரத்தையும் குறைக்கிறது. ஆர்க்டிக் நீர்நிலைகள் மற்றும் அவற்றை ஒட்டிய நிலப்பகுதிகளைக் கட்டுப்படுத்துவது, அனைத்து முக்கிய ஏகாதிபத்திய நாடுகளின் முதன்மை அக்கறையாக உருவெடுத்துள்ளது.

ஆர்க்டிக் பகுதி தற்போது தீவிர இராணுவமயமாக்கப்படும் மண்டலமாக மாறியுள்ளது. வடமேற்கு கிரீன்லாந்தில், அமெரிக்கா தனது வடக்குக்கோடி இராணுவத் தளமான பிட்டுபிக் விண்வெளித் தளத்தை (Pituffik Space Base - முன்பு தூலே விமானத் தளம் என அழைக்கப்பட்டது) பராமரித்து வருகிறது. இந்தத் தளத்தில் முக்கியமான ஏவுகணை பாதுகாப்பு மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள் உள்ளன. இவை ரஷ்யா அல்லது சீனாவுடன் அணுஆயுதப் போர் ஏற்படும் பட்சத்தில், கூடுதல் சில நிமிடங்களுக்கு முன்னரே எச்சரிக்கை வழங்கக் கூடியவையாகும்.

ட்ரம்ப். தனது 'கோல்டன் டோம்' (Golden Dome) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு கிரீன்லாந்தின் அமைவிடம் ஈடுஇணையற்ற மதிப்பைக் கொண்டுள்ளது. வட துருவத்தின் (Arctic) இந்த நிலப்பரப்பு, அமெரிக்காவிற்கும் மற்றும் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான குறுகிய வான்வழிப் பாதையில் அமைந்துள்ளதால், தாக்குதல் மற்றும் பாதுகாப்பு ஆகிய இருவகை இராணுவ நடவடிக்கைகளுக்கும் இது மாற்றீடு செய்ய முடியாத இடமாக உள்ளது.

கிரீன்லாந்தின் மூலோபாய இருப்பிடத்திற்கு அப்பால், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஆயுத அமைப்புகளுக்கு அவசியமான அரிய வகை கனிமங்கள், யுரேனியம் மற்றும் அதன் கண்டத் திட்டுக்குக் கீழே கணிசமான எண்ணெய் இருப்புக்கள் ஆகியவற்றை கிரீன்லாந்து கொண்டுள்ளது.

உலகப் பொருளாதார மன்றத்தையொட்டி வெளியிடப்பட்ட ஒக்ஸ்பாம் அறிக்கையான 'செல்வந்தர்களின் ஆட்சியை எதிர்ப்போம்' என்பதில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளவாறு, பில்லியனர்களின் சொத்து மதிப்பு திகைப்பூட்டும் வகையில் வளர்ச்சியடைந்து வரும் பின்னணியில் டாவோஸில் உலக நிதிய மேலாதிக்கவாதிகளின் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கடந்த ஐந்து ஆண்டுகளை விட பில்லியனர்களின் செல்வம் மூன்று மடங்கு வேகத்தில் உயர்ந்துள்ளதாகவும், உலகின் 12 பெரும் பணக்காரர்கள் தற்போது மனிதகுலத்தின் ஏழ்மையான பாதி மக்கள் தொகையினரின் மொத்த செல்வத்தை விட அதிக செல்வத்தைக் கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.

கிரீன்லாந்து தொடர்பான இந்த நெருக்கடி, முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான சொத்துக்களை நோக்கித் தள்ளியது. விலைமதிப்பற்ற உலோகங்கள் பல மாதங்களில் இல்லாத அளவு பெரும் இலாபத்தைப் பதிவு செய்ததால், தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவு உச்சத்தைத் தொட்டது. தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்கப் பொருட்களை நோக்கி முதலீட்டாளர்கள் விரைவது, வல்லரசுகளுக்கு இடையிலான உறவுகளின் போக்கு மற்றும் ஒரு பரந்த மோதல் ஏற்படுவதற்கான வளர்ந்து வரும் அபாயம் குறித்து நிதிச் சந்தைகளுக்குள் இருக்கும் ஆழ்ந்த பதட்டத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த விலை உயர்வு முதலாளித்துவத்தின் உறுதியற்ற தன்மையைக் காட்டும் ஒரு அளவுகோலாகும். ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர், தற்போதைய நெருக்கடியை இன்னும் மோசமான ஒன்றின் அறிகுறியாகப் பார்ப்பதை இது குறிக்கிறது.

கிரீன்லாந்து மீதான இந்த இழுபறிக்குத் தற்காலிகத் தீர்வு எட்டப்பட்டாலும், இதன் அடிப்படைப் போக்கு அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே அதிகரித்து வரும் மோதலையே காட்டுகிறது. இதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஒரே முக்கிய அனுகூலமான இராணுவப் பலத்தை நம்பிச் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். உலக முதலாளித்துவ உயரடுக்கின் முதன்மையான கூட்டத்தில் இந்த நெருக்கடி வெடித்திருப்பது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முழு சர்வதேச ஒழுங்கின் நெருக்கடியையும் அம்பலப்படுத்துகிறது.

ட்ரம்பின் 'அமெரிக்கா முதலில்' தேசியவாதமோ அல்லது ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிபலிப்போ தொழிலாள வர்க்கத்திற்கு எந்த முன்னோக்கிய எந்த பாதையையும் வழங்கப்போவதில்லை. இவை இரண்டுமே, வன்முறை, பொருளாதாரப் போர் மற்றும் இறுதியில் இராணுவ மோதல்களைத் தவிர வேறு எந்த வழியிலும் அதன் மோதல்களைத் தீர்க்க இலாயக்கற்ற ஒரு ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளையே பிரதிநிதித்துவம் செய்கின்றன.

Loading