மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த செவ்வாய்க்கிழமை உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய கனேடியப் பிரதமர் மார்க் கார்னி, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளால் சூழப்பட்ட உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறை, உலகப் போரை நோக்கி வேகமாகச் செல்வது குறித்த ஒரு கடுமையான சித்திரத்தை வரைந்து காட்டினார்.
முதலாளித்துவ அரசியல்வாதிகள், ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள், உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பில்லியனர் தன்னலக்குழுக்கள் அடங்கிய பார்வையாளர்கள் மத்தியில் பேசிய பிரதிமர் கார்னி, உலகம் ஒரு “திருப்புமுனையில்” இருப்பதாக அறிவித்தார். இது வெறும் மாற்றம் மட்டுமல்ல, மாறாக இது “உலக ஒழுங்கின் பிளவு” என்றும், “பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான புவிசார் அரசியல், எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதல்ல என்ற ஒரு கொடூரமான யதார்த்தத்தின்” தொடக்கமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா தலைமையிலான, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் ஒழுங்கின் வீழ்ச்சியானது, “பெரும் வல்லரசுப் போட்டிகளின்” ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது என்று கார்னி கூறினார். இதில் “வலிமையானவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள், பலவீனமானவர்கள் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த நூற்றாண்டில் ஏகாதிபத்திய உலகப் போர்களில் உச்சக்கட்டத்தை அடைந்ததைப்போல, உலகைப் பொருளாதார ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் மறுபங்கீடு செய்வதற்கான ஏகாதிபத்தியத் தலைமையிலான போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது என்பதை, G7 ஏகாதிபத்திய சக்திகளில் ஒன்றின் தலைவர் என்ற முறையில் கார்னியின் கருத்துக்கள் ஒரு குற்றச்சாட்டுப் பூர்வமான ஒப்புதலாக அமைந்தன.
சர்வாதிகாரியாகத் துடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பற்றி கார்னி எந்தக் குறிப்பையும் தெரிவிக்கவில்லை. மேலும் அமெரிக்காவைப் பற்றி ஒரே ஒருமுறை மட்டுமே அவர் குறிப்பிட்டார். ஆனால், வாஷிங்டன் தனது நட்பு நாடுகள் மற்றும் எதிரிகள் என இரு தரப்பையும் இலக்கு வைத்து கடந்த ஓராண்டாக தீவிரப்படுத்தி வரும் வர்த்தகப் போர் மற்றும் ஆக்கிரமிப்புப் போக்கிற்குப் பிறகு, கனடாவுடன் இணைந்து ஐரோப்பிய வல்லரசுகளும் அமெரிக்காவிற்கு எதிராகவும் கூட தங்களது சொந்த ஏகாதிபத்திய நலன்களை ஈவுஇரக்கமின்றி நிலைநிறுத்த வேண்டும் என்று கார்னி அழைப்பு விடுத்தது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது.
உலகப் பொருளாதார மன்றம் (WEF) தொடங்குவதற்கு முந்தைய மூன்று வாரங்களில் மட்டும், வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்துவதற்காக அந்நாட்டின் மீது படையெடுக்க ட்ரம்ப் உத்தரவிட்டதோடு, மேலும் அந்நாட்டின் பரந்த எண்ணெய் வளங்களைக் கைப்பற்றப்போவதாக அறிவித்தார். ஈரான் மீது போர் தொடுப்பதாகப் பலமுறை அச்சுறுத்திய ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றிய நாடும் நேட்டோ உறுப்பு நாடுமான டென்மார்க், கிரீன்லாந்தை அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் கோரினார். மேலும், அந்தத் தீவை இராணுவ பலத்தால் கைப்பற்றும் அவரது அச்சுறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கிரீன்லாந்திற்குத் துருப்புக்களை அனுப்பிய எட்டு ஐரோப்பிய நாடுகளின் மீது வர்த்தக வரி விதிப்பதாக அச்சுறுத்தினார்.
கடந்த எண்பது ஆண்டுகளாக அமெரிக்காவின் நெருங்கிய பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் இராணுவக் கூட்டாளியாக இருக்கும் கனடா அரசாங்கத்தின் தலைவரிடமிருந்து, கட்டுக்கடங்காமல் சீறிப்பாயும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இத்தகைய தாக்குதல் வெளிவந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, செப்டம்பர் 11 தாக்குதல்கள் வரை, சுமார் 5,500 மைல்கள் (8,800 கிலோமீட்டர்களுக்கும் அதிகமான) நீளமுள்ள உலகின் மிக நீண்ட தற்காப்பு அரண்கள் இல்லாத எல்லையை தாங்கள் பகிர்ந்து கொள்வதாக ஒட்டாவாவும் வாஷிங்டனும் பெருமையுடன் கூறிவந்தன.
எவ்வாறிருப்பினும், சீனா மற்றும் பிற பெரும் வல்லரசுகளுடனான போருக்குத் தயாராகும் வகையில், மேற்கு அரைக்கோளத்தின் (வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா) மீது அமெரிக்காவின் தடையற்ற மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ட்ரம்ப் கனடாவின் மீது அடுக்கடுக்கான வர்த்தக வரிகளை விதித்து, அமெரிக்கா-மெக்சிகோ-கனடா வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக அச்சுறுத்தியுள்ளார். மேலும், கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவதற்கு “பொருளாதார வலிமையைப்” பயன்படுத்துவேன் என்றும் அவர் சபதம் செய்துள்ளார்.
“யதார்த்தத்தை” அங்கீகரிக்குமாறு கனடாவின் நேட்டோ நட்பு நாடுகளுக்கு கார்னி அழைப்பு விடுத்தார்: “விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு” என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தனது உலகளாவிய மேலாதிக்கத்தை மறைக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்திய ஒரு நயமான சொல்லாடல் ஆகும். இதிலிருந்து கனடிய மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் பெரும் பலனைப் பெற்றன. ஆனால், இந்த ஒழுங்குமுறை இப்போது மீளமுடியாதபடி சிதைந்துவிட்டது. கடந்த இரண்டு தசாப்தங்களாக நிலவி வரும் “நிதி, சுகாதாரம், எரிசக்தி மற்றும் புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான நெருக்கடிகளை” சுட்டிக்காட்டிய கார்னி, “பெரும் வல்லரசுகள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதங்களாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. வர்த்தக வரிகளை ஒரு செல்வாக்கு செலுத்தும் கருவியாக, நிதி உள்கட்டமைப்பை ஒரு கட்டாயப்படுத்தும் கருவியாக, விநியோகச் சங்கிலிகளை சுரண்டப்பட வேண்டிய பலவீனங்களாகப் பயன்படுத்துகின்றன” என்று கூறினார்.
கார்னி. தான் நினைத்ததை விட அதிக உண்மைகளை வெளிப்படுத்தியவாறு, பின்வருமாறு தொடர்ந்தார் :
பல தசாப்தங்களாக, கனடா போன்ற நாடுகள் விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு என்று நாம் அழைத்த ஒன்றின் கீழ் செழிப்படைந்தன. நாம் அதன் அமைப்பு நிறுவனங்களில் இணைந்தோம், அதன் கொள்கைகளைப் பாராட்டினோம், அதன் முன்கூட்டிய, கணிக்கக்கூடிய தன்மையால் நாங்கள் பயனடைந்தோம்...
சர்வதேச விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கைப் பற்றிய அந்தக் கதை ஓரளவு பொய்யானது என்பதை நாம் அறிந்திருந்தோம். பலம் வாய்ந்தவர்கள் தங்களுக்குச் சௌகரியமான நேரங்களில் அந்த விதிகளிலிருந்து விலக்கு பெற்றுக்கொள்வார்கள் என்பதையும் நாம் அறிந்திருந்தோம். வர்த்தக விதிகள் சமமற்ற முறையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டன. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது பாதிக்கப்பட்டவர் யார் என்பதைப் பொறுத்து, சர்வதேசச் சட்டங்கள் வெவ்வேறு தீவிரத்துடன் பயன்படுத்தப்படுவதையும் நாம் அறிந்திருந்தோம்.
இந்த புனைகதை பயனுள்ளதாக இருந்தது. குறிப்பாக, அமெரிக்காவின் மேலாதிக்கம் பொதுவான நன்மைகளை வழங்க உதவியது: திறந்த கடல் வழிப்பாதைகள், நிலையான நிதி அமைப்பு, கூட்டுப் பாதுகாப்பு மற்றும் மோதல்களைத் தீர்ப்பதற்கான கட்டமைப்புகளுக்கான ஆதரவு...
இந்த பேரம் இனி வேலை செய்யாது.
கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் முந்தைய ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே நிலவிய கசப்பான மோதலால், உலகப் பொருளாதார மன்ற (WEF) உச்சிமாநாடு நிழலாடியது. கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கான தனது அச்சுறுத்தல்களை ட்ரம்ப் செயல்படுத்தினால், நேட்டோ மற்றும் அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கிடையிலான கூட்டணி சிதைந்துவிடும் என்று ஐரோப்பியத் தலைவர்கள் எச்சரித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களும் அதன் முக்கிய நாடுகளும், கார்னியின் உரையை விட சற்றே மென்மையான வார்த்தைகளைப் பயன்படுத்திய போதிலும், அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மையை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதே வேளையில், அவர்கள் “மூலோபாய சுயாட்சியை” வளர்த்தெடுக்க பாரிய மீள் ஆயுதமயமாக்கலுக்கு அழைப்பு விடுத்தனர். அதாவது, உலகை மறுபங்கீடு செய்வதற்கான போராட்டத்தில் அமெரிக்காவைச் சாராமல் சுயாதீனமாக செயல்படும் திறனைப் பெறுவதே இதன் நோக்கமாகும்.
அமெரிக்காவிலிருந்து அனைத்து “அரைக்கோளம் சாராத போட்டியாளர்களையும்” வெளியேற்றும் தனது “அமெரிக்கா முதலில்” என்ற மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, கிரீன்லாந்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டை ட்ரம்ப் விரும்புகிறார். அமெரிக்க “தேசிய பாதுகாப்பிற்கு” அவசியமானது எனக் கருதப்படும் எந்தவொரு சொத்துக்கள், வளங்கள், நிலப்பகுதிகள் அல்லது நீர்வழிகளைக் கைப்பற்றும் உரிமை உள்ளிட்ட — அதாவது “டோன்ரோ கோட்பாடு” (ட்ரம்ப்பின் புதிய மன்றோ கோட்பாடு) என்று அழைக்கப்படும் மேற்கு அரைக்கோளத்தின் மீதான முழுமையான மேலாதிக்கத்தை அவர் முக்கியமானதாகக் கருதுகிறார். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை மீட்டெடுக்க சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற வாஷிங்டனின் மிகவும் சக்திவாய்ந்த எதிரிகளுக்கு எதிராகப் போர் தொடுப்பதற்கு இது ஒரு அவசியமான முன்நிபந்தனையாக அவர் பார்க்கிறார்.
கடந்த புதன்கிழமை அன்று, ட்ரம்ப் கிரீன்லாந்து மீது வரிகளை விதிக்கும் தனது அச்சுறுத்தலில் இருந்து பின்வாங்கி, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருந்த 10 சதவீத கூடுதல் வரியை கைவிட்டார். உலகப் பொருளாதார மன்றத்தின் ஒரு பக்கக் கூட்டத்தில் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவுடன் எட்டப்பட்ட ஒரு “ஒப்பந்தத்தை” அவர் இதற்குக் காரணமாகக் குறிப்பிட்டார். இதில் டென்மார்க் அல்லது கிரீன்லாந்து பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த “ஒப்பந்தம்” பற்றிய எந்த விவரங்களும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஆனால், ஆர்க்டிக் தீவின் சில பகுதிகளில் இராணுவத் தளங்களை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுக்கப்படும் என்றும், அதன் நிலப்பரப்பு, வான்வெளி மற்றும் கடல் எல்லைகளின் மீது அமெரிக்காவிற்கு வரம்பற்ற இராணுவக் கட்டுப்பாடு வழங்கப்படும் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கை அச்சுறுத்தல்களும், திடீர் மாற்றங்களும் 1930-களின் பிற்பகுதியில் அடால்ஃப் ஹிட்லர் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போலவே இருக்கின்றன. நாடுகளுக்கிடையிலான தீவிரமடைந்து வரும் மோதல்கள், இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஆண்டுகளில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே நிலவிய அதிகாரப் போட்டியை நினைவூட்டுகின்றன. கிரீன்லாந்து தொடர்பாக ஒரு ஒப்பந்தம் உண்மையில் எட்டப்பட்டிருந்தால், அது செப்டம்பர் 1938-ல் செக்கோஸ்லோவாக்கியாவின் தலைவிதி குறித்து இத்தாலியின் முசோலினி, பிரிட்டிஷ் பிரதமர் நெவில் சேம்பர்லெய்ன் மற்றும் பிரெஞ்சு பிரதமர் எட்வார்ட் டலாடியே ஆகியோருடன் ஹிட்லர் செய்துகொண்ட ஒப்பந்தத்தைப் போன்றே தற்காலிகமானதாக இருக்க வாய்ப்புள்ளது. “எமது காலத்திற்கான அமைதியை”, தான் உறுதி செய்துவிட்டதாக சேம்பர்லெய்ன் அப்போது இழிவான முறையில் கூறினார். ஆனால், சில மாதங்களிலேயே புதிய கோரிக்கைகளை முன்வைத்த ஹிட்லர், எஞ்சியிருந்த செக்கோஸ்லோவாக்கிய குடியரசைத் துண்டு துண்டாக்கி, போலந்தின் மீது தனது பார்வையைத் திருப்பினார்.
“பெரும் வல்லரசுப் போட்டிகள்” அதிகரித்து வரும் நிலையில், ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவை எதிர்கொள்ள ஒரு மாற்று ஏகாதிபத்தியக் கூட்டணி அவசியம் என்ற முடிவுக்கு கார்னி வந்துள்ளார். தனது உலகப் பொருளாதார மன்ற உரையில், கனடா ஒரு ஏகாதிபத்திய சக்தி என்பதை மறைத்து, அதை ஒரு “நடுத்தர சக்தி” என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டதன் மூலம் இந்தத் திட்டத்தின் கொள்ளையடிக்கும் தன்மையை அவர் மூடி மறைக்க முயன்றார். கார்னி ஒப்புக்கொண்டது போலவே, கனடா இதுவரை அமெரிக்காவின் உலக மேலாதிக்கம், ஆக்கிரமிப்பு மற்றும் போர்களில் இருந்து இலாபம் ஈட்டிய ஒரு நாடாகும். “நடுத்தர சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஏனென்றால், நாம் மேசையில் (முடிவெடுக்கும் இடத்தில்) இல்லையென்றால், நாம் உணவாக மாற்றப்படுவோம்” என்று அவர் அறிவித்தார்.
அவர் குறிப்பிடும் “மேசை” என்பது ஏகாதிபத்தியத்தின் உயர் மட்ட மேசையாகும். அங்குதான் நாடுகள் துண்டு துண்டாகப் பிரிக்கப்படுகின்றன, இயற்கை வளங்கள் மற்றும் மலிவான உழைப்பைச் சுரண்டுவதற்கான ஏகபோக ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன, மேலும் நிதிய தன்னலக்குழுவினர், தமது இலாபத்திற்காக மக்களின் சதையை அறுத்து எடுக்கின்றனர்.
கார்னியின் “நடுத்தர சக்திகளின்” கூட்டணி என்பது முதன்மையாக பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களுடனான ஒரு கூட்டாண்மையாகும். இவர்களின் காலனித்துவப் பேரரசுகள் 1945 வரை உலகம் முழுவதும் பரவியிருந்தன. மேலும், கடந்த நூற்றாண்டில் தனது நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக ஐரோப்பாவைக் கைப்பற்ற இருமுறை முயன்ற ஜேர்மன் ஏகாதிபத்தியத்துடனும் இது கைகோர்க்கிறது. இன்று அவர்களின் உலகளாவிய அதிகாரம் குறைந்திருந்தாலும், ஐரோப்பிய சக்திகளின் ஏகாதிபத்திய பசி முன்பை விட இன்று அதிகமாகவே உள்ளது.
கடந்த ஓராண்டாக, ஐரோப்பிய நாடுகளின் இழப்பில் உக்ரேன் மற்றும் ரஷ்யாவின் மூலப்பொருட்கள், சந்தைகள் மற்றும் புவிசார் அரசியல் செல்வாக்கை அமெரிக்க நிறுவனங்கள் பெறுவதற்கு ஏதுவாக புட்டினுடன் இணக்கம் காண ட்ரம்ப் எடுத்த முயற்சிகளை ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் மீண்டும் மீண்டும் முறியடித்துள்ளன. ரஷ்யாவிற்கு எதிரான போரில் பெரும் முதலீடு செய்துள்ளதாலும், அதைத் தனியாகத் தொடர முடியாததாலும், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் அமெரிக்காவைத் தொடர்ந்து ஈடுபடுத்தி, கொள்ளைப் பொருட்களில் தங்கள் பங்கைப் பாதுகாப்பதற்காக மோதலைத் தீவிரப்படுத்தத் தீர்மானித்துள்ளன.
ஜேர்மன் சான்சலர் பிரெடெரிக் மெர்ஸ், தனது உரையில் கார்னியை வெளிப்படையாகப் பாராட்டியதோடு, போருக்காக 1 டிரில்லியன் யூரோக்களை செலவிடவும், ஜேர்மனியின் எஞ்சியிருக்கும் சமூக நலத்திட்டங்களை அழிக்கவும் உறுதிபூண்டுள்ள அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குகிறார். பிரான்சின் இம்மானுவேல் மக்ரோன் இராணுவச் செலவுகளை அதிகரித்துள்ளதுடன், தனது சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கும் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கத்தின் முழுப் பலத்தையும் பிரயோகித்து வருகிறார். கார்னி தனது உரையில், செல்வந்தர்களுக்கான வரி குறைப்பு, பொதுச் செலவினக் குறைப்பு, 2030-க்குள் இராணுவச் செலவை இருமடங்காக அதிகரித்தல் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் உரிமை மீதான தாக்குதல் உள்ளிட்ட தனது அரசாங்கத்தின் வலதுசாரி சாதனைகளைப் பற்றி பெருமையடித்துக் கொண்டார்.
அட்லாண்டிக்கின் இருபுறமும் உள்ள தொழிலாளர்கள், அனைத்து ஏகாதிபத்திய சக்திகளுக்கும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிராகத் தங்களது போராட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலம் மட்டுமே ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் மறு எழுச்சியை எதிர்க்க முடியும். உலகப் போரின் அச்சுறுத்தல் என்பது நெருக்கடியில் சிக்கியுள்ள முதலாளித்துவத்தில் வேரூன்றியுள்ளது; 20-ஆம் நூற்றாண்டில் இருமுறை செய்தது போல, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சோசலிச இயக்கத்தால் முதலாளித்துவம் தூக்கியெறியப்படாவிட்டால், அது மனிதகுலத்தை ஆதாள பாதாளத்திற்குள் தள்ளிவிடும்.
உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) போர், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் வளர்ந்து வரும் சமத்துவமின்மைக்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒன்றிணைத்து, முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கும் சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கும் ஒரு பாரிய தொழில்துறை மற்றும் அரசியல் இயக்கத்தை உருவாக்குவதற்குமான புரட்சிகரத் தலைமையை வழங்கப் போராடி வருகின்றன.
