மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஜனவரி 24 சனிக்கிழமை காலை, சில மணி நேரங்களுக்கு முன்பு, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் (ICE) முகவர்கள் மினியாபோலிஸ் குடிமகன் ஒருவரை இரண்டாவது முறையாகக் திட்டமிட்டு சுட்டுக் கொன்றுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு ரெனி நிக்கோல் குட் கொல்லப்பட்ட இடத்திலிருந்து சில தெருக்கள் தள்ளியே இந்தக் கொலை நடந்துள்ளது.
இந்தக் கொடுமையின் காணொளி, பாதிக்கப்பட்ட நபர் தற்காப்பற்ற நிலையில் தரையில் விழுந்து கிடந்தபோதும், ICE முகவர்கள் அவரது உடலில் மீண்டும் மீண்டும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதைக் காட்டுகிறது.
மினியாபோலிஸின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக ICE நடத்தி வரும் பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக ஜனவரி 23 வெள்ளிக்கிழமை நடைபெற்ற சக்திவாய்ந்த மற்றும் அமைதியான போராட்டத்திற்கு ட்ரம்ப் நிர்வாகம் அளித்துள்ள பதிலடி தான் இந்தக் குற்றமாகும்.
இந்தக் கொலைகளும் பிற வன்முறைச் செயல்களும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முழு ஆதரவுடன் அரங்கேற்றப்படுகின்றன. ரெனி நிக்கோல் குட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் அந்தப் பெண்ணை ஒரு பயங்கரவாதி என்று பழி சுமத்தியதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீதான சூழல்கள் குறித்து எந்தவொரு குற்றவியல் விசாரணையும் நடத்தப்படாது என்றும் அறிவித்தது. அவரைக் கொலை செய்த அந்த ICE முகவர் எந்தத் தண்டனையுமின்றி தப்பித்துவிட்டார்.
நகரம் தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஒரு நாள் முன்னதாக, துணை ஜனாதிபதி வான்ஸ் மினியாபோலிஸிற்கு வந்தார். அங்கு அவர் ரெனி நிக்கோல் குட்டின் படுகொலையை மீண்டும் ஒருமுறை நியாயப்படுத்தியதோடு, ICE அமைப்பின் வன்முறை வெறியாட்டங்களை எதிர்ப்பவர்களை “தீவிர இடதுசாரி கிளர்ச்சியாளர்கள்” என்று கண்டித்தார். வான்ஸ் தனது தனிப்பட்ட சந்திப்புகளின் போது, ICE தனது நடவடிக்கைகளைத் தொடருமாறு அறிவுறுத்தியிருப்பார் என்றும், அதன் முகவர்களுக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவு இருக்கும் என்று உறுதியளித்திருப்பார் என்றும் எவரும் உறுதியாக நம்பலாம்.
ட்ரம்பின் ICE அடக்குமுறைப் படையினர் நடத்தி வரும் இந்தப் பயங்கர ஆட்சி நிறுத்தப்பட வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கோரிக்கைகளுடன் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை ஒருங்கிணைக்க முன்மொழிகிறது:
- மினியாபோலிஸ் மற்றும் அனைத்து நகரங்களிலிருந்தும் ICE முகவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்; அந்த அமைப்பு கலைக்கப்பட வேண்டும்; மேலும் கொலைகள் மற்றும் பிற வன்முறைச் செயல்களுக்குப் பொறுப்பான அதன் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடூரமான துன்புறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- ICE அமைப்பின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் சிக்கித் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் புலம்பெயர்ந்தவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
- அமெரிக்க அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை மீறியதற்காக, ட்ரம்ப் நிர்வாகத்தில் உள்ள அதற்குப் பொறுப்பான அனைத்து உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் மற்றும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் மற்றும் பயனுள்ள நடவடிக்கைக்கான பிற நடைமுறை முன்மொழிவுகளை கலந்துரையாட தொழிற்சாலைகள், பணியிடங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் பள்ளிகளில் கூட்டங்களை கூட்டுங்கள். ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்க தொழிலாள வர்க்கத்தின் முன்முயற்சி அவசியம். ஒரு வலிமையான நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புகளை தொழிற்சங்க அதிகாரத்திடமோ, அல்லது ஜனநாயகக் கட்சியிடமோ விட்டுவிடக் கூடாது. அவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு தொழிற்சாலை, பணியிடம் மற்றும் சுற்றுப்புறங்களிலும் சாமானியர்களின் குழுக்களை உருவாக்குவது அவசியமாகும். ஜனநாயக ரீதியாகச் செயல்படும் இந்தக் குழுக்கள், நகரம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, தங்கள் சக ஊழியர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் நம்பிக்கையைப் பெற்ற தொழிலாளர் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மினியாபோலிஸில் இப்போது அரங்கேறி வருவது, நாடு முழுவதும் ஒரு இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். நாட்டைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரு சில டசின் கோடீஸ்வர தன்னலக்குழுக்களாலும், பிரமாண்டமான நிறுவனங்களாலும் ஜனநாயகத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
இந்தச் சதி நிறுத்தப்பட வேண்டும். அமெரிக்காவில் பாசிசம் வெற்றிபெற அனுமதிக்கப்பட மாட்டாது.
1770-ஆம் ஆண்டில் போஸ்டனில் பிரிட்டிஷ் படைகளால் ஐந்து குடியேறிய மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு, மன்னராட்சியை தூக்கியெறிந்து 1776-இல் அமெரிக்காவை நிறுவிய புரட்சிகர இயக்கத்தை முடுக்கிவிட்டது.
இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2026-ஆம் ஆண்டின் மினியாபோலிஸ் படுகொலைகளுக்கு, தன்னலக்குழுக்களின் சர்வாதிகாரத்தை நிறுவும் முயற்சிக்கு எதிராக, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு இயக்கத்தின் மூலம் பதிலளிக்கப்பட வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சக்தியைத் திரட்டுவதற்கான நேரம் இது.
