மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஜனவரி 24 அன்று மினியாபோலிஸில் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு செவிலியராக பணிபுரிந்துவந்த அலெக்ஸ் பிரெட்டி, மத்தியிலுள்ள கூட்டாட்சி அரசின் முகவர்களால் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையானது, ட்ரம்ப் நிர்வாகத்தின் குற்றச் செயல்களை எதிர்த்து மற்றும் அவற்றை ஆவணப்படுத்திவரும் மினியாபோலிஸ் குடிமக்களை அச்சுறுத்துவதற்காக, ட்ரம்ப் நிர்வாகத்தின் துணை இராணுவப் படைகளால் நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட படுகொலை என்பதை வளர்ந்து வரும் சான்றுகள் வலுவாக உணர்த்துகின்றன.
செவ்வாய்க்கிழமை வெளியான CNN செய்தி அறிக்கையின்படி, பிரெட்டி கொல்லப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாக, மத்திய அரசின் முகவர்களுடன் அவருக்கு ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. “பழிவாங்கப்படுவோம் என்ற அச்சத்தில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஆதாரத்தின்படி, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையின் (ICE) முகவர்கள் ஒரு குடும்பத்தை கால்நடையாக துரத்துவதைக் கண்ட பிரெட்டி, தனது காரை நிறுத்திவிட்டு, கூச்சலிட்டு விசிலடிக்கத் தொடங்கினார்” என்று CNN தெரிவித்துள்ளது.
மேலும் CNN கூறுகையில், “ஐந்து முகவர்கள் அவரைத் தள்ளி கீழே வீழ்த்தியதாகவும், ஒருவர் அவரது முதுகில் ஏறி அழுத்தியதாகவும், இந்த மோதலில் அவருக்கு விலா எலும்பு முறிந்ததாகவும், பிரெட்டி அந்த ஆதாரத்திடம் தெரிவித்தார். முகவர்கள் அவரை அந்த இடத்திலேயே விடுவித்தனர். “அன்று தான் இறந்துவிடுவேன் என்று பிரெட்டி நினைத்தார்” என அந்த ஆதாரம் கூறியது. மேலும், பிரெட்டி “மத்திய அரசின் முகவர்களுக்கு நன்கு தெரிந்தவர்” என்றும் அந்த ஆதாரம் தெரிவித்ததாக CNN குறிப்பிட்டுள்ளது.
குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை மற்றும் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு துறையின் (CBP) முகவர்கள் பிரெட்டியை ஒரு எதிரியாக அடையாளம் கண்டிருக்கின்றனர் என்ற இந்த வெளிப்பாடு, ஜனவரி 24 அன்று உண்மையில் என்ன நடந்தது என்பதன் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. அங்கு எடுக்கப்பட்ட வீடியோவில், தரையில் தள்ளப்பட்ட ஒரு பெண்ணைப் பாதுகாக்க பிரெட்டி தலையிடுவதைக் காண முடிகிறது. பின்னர் அவர் மடக்கப்பட்டு, தரையில் முகம் குப்புற வைத்துத் தாக்கப்படுகிறார். ஒரு முகவர், பிரெட்டி சட்டப்பூர்வமாக வைத்திருந்த, ஆனால் கையில் ஏந்தியிராத துப்பாக்கியைப் பறிக்கிறார். பிரெட்டியின் கைகள் தரையோடு சேர்த்து அழுத்தப்பட்டிருந்த நிலையில், முதல் தாக்குதலில் ஈடுபடாத மற்றொரு முகவர், தாக்குதலில் ஈடுபட்ட முகவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பிரெட்டியின் முதுகில் நான்கு முறை சுடுகிறார். அந்த முகவரும், மற்றொரு முகவரும் சேர்ந்து அசையாமல் கிடந்த பிரெட்டியின் உடலில் மேலும் ஆறு முறை சுட்டனர்.
37 வயதான ரெனீ நிக்கோல் குட் கொல்லப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிரெட்டியின் படுகொலை நடந்துள்ளது. அந்தப் படுகொலை வீடியோவைப் பார்க்கும்போது, துப்பாக்கியால் சுட்ட ஜொனாதன் ரோஸ் என்பவர், திட்டமிட்டு ஒரு வேலையைச் செய்பவரைப் போல, காரின் ஜன்னல் வழியாக மிக அருகாமையில் இருந்து ரெனீ நிக்கோலை சுடுவதற்காகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது தெளிவாகத் தெரிகிறது.
ரெனீ குட் படுகொலை வீடியோவில் ஒரு முக்கியமான தருணம், துப்பாக்கிச் சூடு நடப்பதற்குச் சற்று முன்பு வெளிப்படுகிறது. அப்போது அவருடன் கூட இருந்தவர், “நாங்கள் ஒவ்வொரு காலையிலும் எங்கள் வண்டி எண்ணை (Plate) மாற்றுவதில்லை... நீங்கள் பின்னர் வந்து எங்களிடம் பேசும்போது அதே எண் தான் இருக்கும்” என்று கூறுகிறார். இதிலிருந்து அந்த இரண்டு பெண்களும் தாங்கள் கண்காணிக்கப்படுவதை அறிந்திருந்தனர் என்பது தெரிகிறது. ICE மற்றும் CBP முகவர்கள், பாலன்டிர் (Palantir) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து, தங்களது நடவடிக்கைகளைப் படம்பிடிப்பவர்கள் மற்றும் போராட்டக்காரர்களின் பட்டியலைத் தயாரித்து வருகின்றனர். CNNக்கு கிடைத்த உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) குறிப்பு ஒன்று, “கிளர்ச்சியாளர்களின்” வண்டி எண்கள், அடையாள அட்டைகள் மற்றும் புகைப்படங்களை ஒரு மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு தரவுத் தளத்திற்காகச் சேகரிக்குமாறு முகவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கொல்லப்பட்ட பிரெட்டி மற்றும் ரெனீ நிக்கோல் குட் ஆகிய இருவரும், ICE மற்றும் CBP முகவர்களின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்தும், ஆவணப்படுத்தியும், ஒரு சட்டப்பூர்வ பார்வையாளர்களாகவே செயல்பட்டனர். இவர்களின் படுகொலைகள், ICE மற்றும் CBP முகவர்களின் குற்றச் செயல்களை வெளிப்படுத்துபவர்களை அச்சுறுத்தும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில், பிரெட்டியைச் சுட்டக்கொன்ற முகவர்கள் கவலைப்பட்டது அவர் வைத்திருந்த “துப்பாக்கியைப்” பற்றி அல்ல, மாறாக அவரது கைத் தொலைபேசியைப் பற்றித்தான் இருந்தது.
முதலில் குட், பின்னர் பிரெட்டி ஆகியோரின் கொலைகளுக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் எதிர்வினையானது, கொல்லப்பட்டவர்களை உடனடி “பயங்கரவாதிகள்” என்று அறிவித்தது மட்டுமல்லாமல், குடிமக்களைக் கொலை செய்வதற்கு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று கூறும் ஒரு பாசிசக் கோட்பாட்டை விரிவுபடுத்துவதாகவும் அமைந்தது.
ரெனி குட் படுகொலைக்கு பிறகு, துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இதை பகிரங்கமாகத் தெரிவித்தார். கொலையாளி “முழுமையான சட்டப் பாதுகாப்பால் பாதுகாக்கப்பட்டவர்... அவர் தனது கடமையைத்தான் செய்தார்” என்று அவர் அறிவித்தார். இது நடுக்கத்தை உண்டாக்கும் மற்றும் முற்றிலும் தவறான ஒரு கூற்றாகும். ஒருவரைக் கொன்றதற்காக அரசாங்க முகவர்களுக்குத் தண்டனையிலிருந்து “முழுமையான விலக்கு” அளிக்கும் சட்டம் அமெரிக்காவில் எதுவுமில்லை.
அரசு முகவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு இரகசிய அந்தஸ்தைக் கொண்டுள்ளனர் என்றும், அவர்கள் தங்கள் செயல்களுக்காகப் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்றும் துணை ஜனாதிபதி வான்ஸ் கூறுகிறார். அவர்களுக்கு “கொலை செய்வதற்கான உரிமம்” வழங்கப்பட்டுள்ளது. இது ஜூலை 2024-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் (ட்ரம்ப் எதிர் அமெரிக்கா) நீட்சியாகும். அதாவது, ஜனாதிபதியாக இருந்து செய்யும் செயல்களுக்காக, அவர் மீது வழக்குத் தொடர முடியாது என்ற அந்தத் தீர்ப்பை, அரசு முகவர்களுக்கும் விரிவுபடுத்துவதாகும்.
வான்ஸ் பிரகடனப்படுத்திய கொள்கைகள் அமெரிக்கச் சட்டத்தைச் சார்ந்தவை அல்ல. மாறாக நாஜிக்களின் சட்டக் கோட்பாடுகளைச் சார்ந்தவை. ஹிட்லரின் சர்வாதிகாரத்தை நியாயப்படுத்துவதற்காக, பாசிசக் கோட்பாட்டாளர் கார்ல் ஷ்மிட் “விதிவிலக்கான நிலை” என்ற கருத்தை உருவாக்கினார். ஷ்மிட்டின் கூற்றுப்படி, “விதிவிலக்கைத் தீர்மானிப்பவனே இறையாண்மை கொண்டவன்.” ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில், “இறையாண்மை” கொண்டவர் சட்டத்தையே நிறுத்தி வைக்க முடியும் மற்றும் அதற்குப் பதிலாக நிர்வாக அதிகாரத்தின் தன்னிச்சையான ஆட்சியை அமல்படுத்த முடியும். இங்கு, சட்ட நெறிமுறைகள் இரத்து செய்யப்படுகின்றன, உரிமைகள் பறிக்கப்படுகின்றன மற்றும் தனிநபர்கள் சட்டத்தின் பாதுகாப்பிற்கு வெளியே நிறுத்தப்படுகிறார்கள்—இதைத்தான் ஷ்மிட் “மத்தியஸ்தமற்ற நேரடி நீதி” என்று அழைத்தார். இதில் தலைவர் மட்டுமே குற்றத்தையும் தண்டனையையும் தீர்மானிக்கிறார்.
இந்தக் கட்டமைப்பின்படி, அரசால் குறிவைக்கப்படுபவர்கள் குடிமக்களாகக் கருதப்படாமல், எதிரிகளாகவும், “சபிக்கப்பட்டவர்களாகவும்” அதாவது சட்டப் பாதுகாப்பு இல்லாத மற்றும் கொல்லப்படக்கூடிய தனிநபர்களாகவும் கருதப்படுகிறார்கள். ட்ரம்ப்பின் ஆட்சியின் கீழ் ICE முகவர்களின் நடவடிக்கைகள் இந்த அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. இவர்கள் அனைத்து நோக்கங்களிலும் ஒரு “கொலைகாரக் குழு” போலவே செயல்படுகின்றனர்.
இந்த நிகழ்வுகளில், ட்ரம்ப்பின் ஆட்சியின் உண்மையான குற்றத்தன்மை வெளிப்படுகிறது. இத்தகைய ஆட்சிக்கு வரலாற்று முன்னுதாரணங்கள் உள்ளன. குறிப்பாக, விதேலாவின் ஆர்ஜென்டினா, பினோஷேயின் சிலி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, ஹிட்லரின் ஜேர்மனி மற்றும் முசோலினியின் இத்தாலி ஆகியவற்றின் இராணுவக் குழுக்கள் இதற்கு உதாரணங்களாக இருக்கின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சர்வாதிகாரத்தை நோக்கிய மாற்றம் என்பது அதிகரித்துவரும் வன்முறையால் மட்டுமல்ல, சட்ட ஒழுங்கின் மாற்றத்தினாலுமே அடையாளப்படுத்தப்பட்டது.
இந்தச் சூழலில், கடந்த இரண்டு நாட்களாக ட்ரம்ப் நிர்வாகத்தின் சூழ்ச்சியான நகர்வுகளை ஒரு பெரிய மாற்றமாகப் பாராட்டுபவர்கள், மெத்தனத்தையும் பொய்களையுமே பரப்புகிறார்கள். அடிப்படையான எதற்கும் தீர்வு காணப்படவில்லை. ட்ரம்ப் நிர்வாகம் பின்வாங்கவில்லை—அது கால அவகாசத்தை எடுத்துக் கொள்கிறது, மீண்டும் ஒன்றிணைகிறது மற்றும் தனது திட்டங்களை மறுசீரமைக்கிறது.
உண்மையில், ட்ரம்ப்பிற்கும் மற்றும் மினசோட்டாவின் உள்ளூர் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள “ஒப்பந்தம்” என்பது வெறும் மக்கள் தொடர்புக்கான அலங்காரமே தவிர வேறில்லை. மத்திய அரசின் முகவர்களைத் திரும்பப் பெறுவதற்கு ட்ரம்ப் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை. பத்திரிகையாளர் கென் கிளிப்பன்ஸ்டீன் வெளியிட்ட சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையிலிருந்து கசிந்த உள்நாட்டுக் குறிப்பு உண்மையை விளக்குகிறது: “மினியாபோலிஸில் படைகளை நிலைநிறுத்துவது நிலையானது மற்றும் திட்டமிட்டபடி நடவடிக்கை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.”
மேலோட்டமான மாற்றங்களோடு புதிய அத்துமீறல்களும் சேர்ந்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ ஒன்றில், மினசோட்டாவில் உள்ள ஒரு மத்திய அரசின் குடியேற்ற முகவர், ஒரு குடிமகனைக் கொலை செய்வதாக மிரட்டுகிறார்: “நீ குரலை உயர்த்தினால், நான் உன் குரலையே அழித்துவிடுவேன்” என்று அந்த முகவர் கூறுகிறார். அதே நாளில், ஓரிகானின் யூஜின் நகரில் போராட்டக்காரர்களை ICE முகவர்கள் தாக்கினர். தற்போது மைனே (Maine) மாகாணத்தில் ஒரு பயங்கர தாக்குதலை இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை இரவு மினியாபோலிஸில் நடந்த ஒரு நகரமன்றக் கூட்டத்தில் பிரதிநிதிகள் சபை (பாராளுமன்ற உறுப்பினர்) உறுப்பினாரான இலான் உமர் தாக்கப்பட்டார். ஒருவர் மேடைக்கு விரைந்து வந்து அவர் மீது அடையாளம் தெரியாத ஒரு திரவத்தைத் தெளித்தார். ஓஹியோவில் நடந்த ஒரு பேரணியில் டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய பாசிச உரையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்தது. அந்தப் பேரணியில் ட்ரம்ப், உமரின் பெயரைச் சொல்லி அவரை தனிமைப்படுத்தியதுடன், மினசோட்டாவில் சுற்றி வளைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தவர்களை “கடுமையான, கொடூரமான, பயங்கரமான குற்றவாளிகள்” என்று சாடினார்.
ட்ரம்ப்புடன் ஜனநாயகக் கட்சியினர் பிரகடனப்படுத்திய “அமைதி” என்பது பாசிச அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதல்ல, மாறாக மக்கள் எதிர்ப்பை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டது. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, “கூடுதல் குழப்பத்தைத் தவிர்க்க” வால்ஸ் மற்றும் பெரேயுடன் “ஆக்கபூர்வமாகச் செயல்படுமாறு” ட்ரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்தி கூறியிருந்தார். இங்கே “குழப்பம்” என்பதன் மூலம் ஒபாமா எதைக் குறிக்கிறார்? அலெக்ஸ் பிரெட்டி அல்லது ரெனி நிக்கோல் குட்டின் கொலைகளையல்ல. பாரிய சுற்றி வளைப்புகள், காலவரையற்ற தடுப்புக் காவல் அல்லது அரசியலமைப்பு உரிமைகளை நிறுத்தி வைப்பதையுமல்ல. “குழப்பம்” என்பது கீழிருந்து வெடிக்கும் மக்கள் எதிர்ப்பாகும். ஜனநாயகக் கட்சியின் முதன்மையான கவலை என்னவென்றால், அரசை நிலைநிறுத்துவதும், இரண்டு கட்சிகள் இயங்கும் முறை சரியாகச் செயல்படுவது போன்ற மாயையைத் தக்கவைப்பதுமே ஆகும்.
ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கான சதி —இதில் மினியாபோலிஸ் நிகழ்வுகள் ஒரு பகுதி மட்டுமே— தொடர்கிறது. முன்னாள் ஜனாதிபதி ஒபாமா முதலாளித்துவ தன்னலக்குழுவின் பிரதிநிதியாகப் பேசுகிறார் மற்றும் செயல்படுகிறார். இந்த ஆட்சி, அதிகரித்து வரும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது, அனைத்து ஜனநாயக மற்றும் சட்ட நெறிமுறைகளையும் தகர்க்கிறது. இந்த உண்மையை மறைப்பதும், மக்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஏமாற்றுவதும், கீழிருந்து எந்தவொரு சுயாதீனமான இயக்கமும் உருவாவதைத் தடுப்பதுமே ஜனநாயகக் கட்சியினரின் பங்காகும்.
மினியாபோலிஸில் கிடைத்த “வெற்றி” குறித்த எந்தவொரு கொண்டாட்டமும் அப்பாவித்தனமானது, முதிர்ச்சியற்றது மற்றும் தேவையற்றது. இந்த “தந்திரோபாயப் பின்வாங்கல்” என்பது ஒரு சூழ்ச்சி மட்டுமே. சர்வாதிகாரத்தின் ஆபத்து விலகி விடவில்லை, மாறாக அது தீவிரமடைந்து வருகிறது. மினியாபோலிஸில் மத்திய அரசின் படைகளின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது, மேலும் புதிய தாக்குதல்கள் நடக்கவிருக்கிறது—மினசோட்டாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் அவை தொடரும்.
கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள், ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பும் அரசு இயந்திரத்திற்குள் நடக்கும் சூழ்ச்சிகள் மூலம் முன்னெடுக்க முடியாது என்பதைக் காட்டுகின்றன. ஒரு சோசலிச வேலைத் திட்டத்துடன் கூடிய, தொழிலாள வர்க்கத்தின் நனவு பூர்வமான, ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இதைத் தடுக்க முடியும். இது ட்ரம்பிற்கு எதிராக மட்டுமல்ல, அவரை உருவாக்கிய முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிராகப் போராட வேண்டும். சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குதல், பல்வேறு தொழில்துறைகளில் உள்ள தொழிலாளர்களை அணிதிரட்டுதல் மற்றும் ஒரு பொது வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தல் ஆகியவற்றின் மூலம், இந்த இயக்கத்தைக் கட்டியெழுப்பும் பணி தொடர வேண்டும்.
