விமானம் தாங்கி போர்க்கப்பல் படைப்பிரிவை அரபிக் கடலுக்கு அனுப்பி புதிய அச்சுறுத்தல்களை ட்ரம்ப் விடுத்துள்ளதால், ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் விரைவில் நிகழக்கூடும் என்று தோன்றுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜூலை 28, 2022 அன்று, பசிபிக் பெருங்கடல் பிராந்திய கூட்டுப் பயிற்சிகளின் போது, நிமிட்ஸ்-வகுப்பைச் சேர்ந்த அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க் கப்பலான USS  ஆபிரகாம் லிங்கன் அணிவகுப்பில் பங்கேற்கிறது. [Photo: Canadian Armed Forces photo by Cpl. Djalma Vuong-De Ramos]

USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிப் போர்க்கப்பல் மற்றும் பல ஏவுகணைகளைக் கொண்டுள்ள நாசகாரிக் கப்பல்கள் அடங்கிய அமெரிக்காவின் ஒரு பிரமாண்டமான “கடற்படைப் பிரிவு” (armada) தற்போது அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளது. இது ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன், அந்நாட்டின் மீது அழிவுகரமான வான்வழித் தாக்குதலைத் தொடுப்பதற்கான நிலையில் உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு சற்றே அதிகமான காலத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரான் மீது நடத்தும் இரண்டாவது நேரடித் தாக்குதலுக்கான ஒரு மறைமுக ஏற்பாடாகக் கருதப்படக்கூடிய பல நாள் வான்வழி “பயிற்சியை” பென்டகனின் மத்திய கட்டளைத் தலைமையகம் செவ்வாயன்று அறிவித்தது.

இந்தப் பயிற்சியானது “வான்வழிப் போர் பலத்தை நிலைநிறுத்தவும், பரப்பவும் மற்றும் தக்கவைத்துக் கொள்ளவும் உள்ள திறனை நிரூபிக்கும்” என்று பென்டகன் கூறுகிறது. பிரிட்டனும் தனது போர் விமானங்களை கத்தாருக்கு அனுப்பியுள்ளது. மேலும் இரண்டு ஐரோப்பிய விமான நிறுவனங்கள் அந்தப் பிராந்தியத்திற்கான வணிக ரீதியான விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.

கடந்த வாரம் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்திலிருந்து வெளியேறியபோது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு மிரட்டல் விடுத்தார். பாரசீக வளைகுடா பகுதியை நோக்கிச் செல்லும் கப்பல்கள் குறித்து கவனத்தை ஈர்த்த அவர், எந்தவொரு தாக்குதலும் கடந்த ஆண்டு ஈரானிய யுரேனியம் செறிவூட்டல் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை “மிகச் சிறியதாக” மாற்றும் என்று எச்சரித்தார். இது கடந்த ஜூன் மாதம் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தூண்டுதலற்ற மற்றும் சட்டவிரோதமான 12 நாள் போரைக் குறிப்பதாகும். அந்தப் போரின் போது அந்நாட்டின் அணுசக்தி நிலையங்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டன மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

கடந்த புதன்கிழமை காலை, ஈரான் மீதான இராணுவத் தாக்குதல் மிக அருகில் இருப்பதை ட்ரம்ப் உறுதிப்படுத்தினார். அப்போது, USS ஆபிரகாம் லிங்கன் தலைமையிலான கடற்படை, வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்துவதற்கு முன்பு வாஷிங்டன் நிலைநிறுத்திய படையை விட மிகப் பெரியது என்று கூறிய அவர், இப்படை “தேவைப்பட்டால் அதன் பணிகளை மிக வேகமாகவும் வன்முறையுடனும் உடனடியாக நிறைவேற்றத் தயாராக உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

“நான் முன்பே ஈரானிடம் சொன்னது போல், ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்!” என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக கணக்கில் பதிவிட்டுள்ளார். “அவர்கள் செய்யவில்லை, அதன் விளைவாக ‘மிட்நைட் ஹேமர் நடவடிக்கை’ நடந்தது, அது ஈரானுக்கு ஒரு பெரும் அழிவை ஏற்படுத்தியது. அடுத்த தாக்குதல் இன்னும் மோசமானதாக இருக்கும்! அதை மீண்டும் நடக்க விட்டுவிடாதீர்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் மிரட்டல்கள், அங்குள்ள முதலாளித்துவ-மதகுருமார் ஆட்சியை கவிழ்த்து, எரிசக்தி வளம் மிக்க மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எளிதாக்கும் ஒரு மேற்கத்திய சார்பு பொம்மை அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்கான நீண்டகால முயற்சியின் ஒரு பகுதியாகும். அடுத்தடுத்து வந்த அமெரிக்க அரசாங்கங்கள், ஈரானின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கவும், அந்நாட்டு மக்களின் பெரும்பகுதியைத் துயரமான வறுமையில் தள்ளவும் கொடூரமான பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்தியுள்ளன. இது, ஈரானிய மக்களின் “விடுதலை” அல்லது “மனித உரிமைகள்” மீது தங்களுக்கு அக்கறை இருப்பதாக ட்ரம்ப் நிர்வாகம், அவருக்கு எதிர்ப்பாக காட்டிக்கொள்ளும் ஜனநாயகக் கட்சி மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் முன்வைக்கும் வாதங்களை ஒரு கேலிக்கூத்தாக மாற்றுகிறது.

கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு முன்னதாகப் பயன்படுத்திய அதே உத்திகளைப் பின்பற்றி, “இராஜதந்திரம்” இன்னும் ஒரு வாய்ப்பாக இருப்பதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். “அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள்” என்று அமெரிக்காவின் சர்வாதிகாரியாகத் துடிக்கும் ட்ரம்ப் கடந்த வாரம் ஈரானிய ஆட்சி குறித்துக் கூறினார். அதேவேளையில், பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்த ஈரானிய ஆட்சியும் மீண்டும் மீண்டும் முயன்று வருகிறது. “எனக்குத் தெரியும். அவர்கள் பல சந்தர்ப்பங்களில் அழைத்தார்கள். அவர்கள் பேச விரும்புகிறார்கள்,” என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டில், வாஷிங்டன் ஒரு பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காண விரும்புவதாக ஈரான் ஆட்சியின் உயர் மட்டத்தினரை நம்ப வைப்பதில் ட்ரம்ப் பெரும் வெற்றி பெற்றார். இதன் காரணமாக, வான்வழித் தாக்குதல்கள் தொடங்கியபோது பல உயர்மட்ட ஜெனரல்கள் இன்னும் தங்களது தனிப்பட்ட வீடுகளிலேயே தங்கியிருந்தனர். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பாக சியோனிச ஆட்சி நடத்திய இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களில் அவர்களை எளிதில் வீழ்த்த வழிவகுத்தது. இந்த முறை, உச்ச தலைவர் அயதுல்லா கொமேனியைப் படுகொலை செய்வது உட்பட, ஒரு தலைமை ஒழிப்பு நடவடிக்கையை இலக்கு வைத்து வாஷிங்டன் திட்டமிட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது ஒரு போர்க்குற்றமாகும். மேலும், இது பிராந்தியம் முழுவதும் ஒரு பெரும் மோதலைத் தூண்டக்கூடும். ஈரானிய ஆட்சிக்கு எதிரான ஊடகங்களின்படி, கொமேனி தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள ஒரு நிலத்தடி தங்குமிடத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். அதே நேரத்தில் அவரது மூன்றாவது மகன் மசூத், அலுவலகத்தின் அன்றாட மேற்பார்வையைப் பொறுப்பேற்றுள்ளார் மற்றும் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் முக்கிய நபராக இப்போது உருவெடுத்துள்ளார்.

தெஹ்ரானில் உள்ள முதலாளித்துவ-மதகுருமார்களின் ஆட்சியின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் கொள்ளவும், அமெரிக்காவின் போட்டியாளர்களான ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்கும் ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் உத்தேசித்துள்ளது. காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் ஏகாதிபத்திய ஆதரவு இனப்படுகொலை, லெபனான் மீதான பல மாத கால குண்டுவீச்சு, ஏமன் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் சிரியாவில் அசாத் ஆட்சி அமெரிக்க ஆதரவுடன் கவிழ்க்கப்பட்டது ஆகியவை பிராந்தியம் முழுவதும் ஈரானுடன் இணைந்த சக்திகளை கணிசமாக பலவீனப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் ஈரான் மீது நடத்தப்பட்ட சுமார் இரண்டு வார கால குண்டுவீச்சுக்கள், மற்றும் அதற்கு முன்னதாக இஸ்லாமிய குடியரசின் கௌரவ விருந்தினராக தெஹ்ரானுக்கு வருகை தந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டது ஆகியவை இந்த ஆட்சி எவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது என்பதை நிரூபித்தன.

இதற்குக் காரணம், இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க உளவுத்துறையின் ஒருங்கிணைந்த ஊடுருவலும், அதன் திவாலாகிவிட்ட முதலாளித்துவ-தேசியவாத முன்னோக்கும் ஆகும். ஈரானிய தொழிலாள வர்க்கம் மற்றும் உழைப்பாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளுக்கு விரோதப் போக்கைக் கொண்டுள்ள ஈரானிய ஆட்சி, மத்திய கிழக்கின் வெகுஜனங்களை ஏகாதிபத்தியம் மற்றும் அதன் சியோனிச வாடிக்கை அரசுக்கு எதிராக அணிதிரட்ட இயல்பாகவே இலாயக்கற்றுள்ளது. அதற்கு பதிலாக, இது பல தசாப்தங்களாக ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு சமரசத்தையே நாடி வருகிறது.

அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள்

தெஹ்ரானின் பிராந்திய நிலை பலவீனமடைந்துள்ளது என்பது மட்டுமல்லாமல், டிசம்பர் 28 அன்று வெடித்த மக்கள் போராட்டங்களாலும் அது உலுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆட்சிக்கு ஆதரவுத் தூணாக இருக்கும் சந்தை வியாபாரிகளால் (bazaar merchants) இந்தப் போராட்டங்கள் தொடங்கப்பட்டன. பல தசாப்தங்களாக அமெரிக்கா திணித்த பொருளாதாரத் தடைகள் மற்றும் மிக சமீபத்தில், கடந்த அக்டோபரில் ஐ.நா பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்த ஐரோப்பிய சக்திகள் பயன்படுத்திய, “மீள் அமலாக்கல்” வழிமுறை ஆகியவற்றால் ஏற்பட்ட வாழ்க்கைத் தர வீழ்ச்சி காரணமாக அமைதியின்மை வேகமாகப் பரவியது.

அரசியல் ரீதியாக, முடியாட்சியை மீட்டெடுக்கக் கோரும் சலுகை படைத்த பிரிவினர் மற்றும் குர்திஷ் மற்றும் பலூச்சி பிரிவினைவாதிகள் உட்பட வலதுசாரி, ஏகாதிபத்திய ஆதரவு சக்திகள் இப்போராட்டங்களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த அரசாங்கம், திடீரென தனது போக்கை மாற்றிக்கொண்டது. கொமேனியின் நேரடி உத்தரவின் பேரில், போராட்டங்கள் இரக்கமின்றி ஒடுக்கப்பட்டன. இதன் விளைவாக, குறைந்தது சில ஆயிரம் பேர் அல்லது அதற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1979 ஈரானியப் புரட்சியால் கவிழ்க்கப்பட்ட கொடுங்கோல் முடியாட்சி ஆட்சியாளர் ரேஸா பஹ்லவியின் அமெரிக்காவில் வசிக்கும் மகன், ஈரானின் முக்கிய நகரங்களின் மையங்களைக் “கைப்பற்றுமாறு” தனது ஆதரவாளர்களை ஏற்கனவே ஊக்குவித்த நிலையில், இப்போது ஆட்சிக்கு எதிராக “துல்லியமான தாக்குதல்களை” நடத்துமாறு அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

டிசம்பர் 28-ல் போராட்ட இயக்கம் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஈரானிய அதிகாரிகள் படிப்படியாக உயர்த்தி வருகின்றனர். தற்போது 3,117 பேர் கொல்லப்பட்டதை அது ஒப்புக்கொள்கிறது. இதில் சுமார் 2,225 பொதுமக்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் அடங்குவர், மீதமுள்ளவர்கள் “பயங்கரவாதிகள்” என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டு அரசாங்கங்களுக்குச் சேவை செய்யும் ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்களால் வன்முறையின் பெரும்பகுதி திட்டமிடப்பட்டதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரானியப் போராட்டக்காரர்களுடன் இணைந்து மொசாட் ஏஜெண்டுகள் களத்தில் செயல்படுவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் முன்னாள் சி.ஐ.ஏ இயக்குநர் மைக் பொம்பியோ ஆகியோர் பெருமையுடன் கூறிய அறிக்கைகளை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அனைத்து அறிக்கைகளின்படி, ஜனவரி இரண்டாம் வார தொடக்கத்தில், 12 ஆம் திகதி பாதுகாப்புப் படையினரின் ஒடுக்குமுறை தெருக்களில் இருந்து போராட்டக்காரர்களை அகற்றுவதில் வெற்றி பெற்றது. எவ்வாறாயினும், ஆரம்பத்தில் வாக்குறுதி அளித்த போதிலும், ஆட்சியானது இணைய வசதியை இன்னும் மீட்டெடுக்கவில்லை. இது அதன் நெருக்கடியைச் சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனமானது (HRANA), ஈரானுக்குள் இருக்கும் அதன் ஆர்வலர்களின் வலைப்பின்னலில் இருந்து சரிபார்க்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், 5,777 போராட்டக்காரர்கள், 214 அரசாங்க ஆதரவுப் படையினர், 86 குழந்தைகள் மற்றும் 49 பொதுமக்கள் உட்பட குறைந்தது 6,126 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செவ்வாயன்று தெரிவித்துள்ளது. இது, 1979ல் இருந்து முந்தைய எதிர்ப்பு இயக்கங்களில் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கையை விட மிக அதிகமாகும். மேலும் 27,700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலரை அரசாங்கம் “பயங்கரவாத” குழுக்களின் உறுப்பினர்கள் என்று வர்ணித்துள்ளதாகவும் HRANA கூறியுள்ளது.

ஏகாதிபத்திய தலைநகரங்களிலிருந்தும் அவர்களின் ஊடக ஊதுகுழல்களில் இருந்தும் எழும் இஸ்லாமியக் குடியரசின் கொடூரத்திற்கு எதிரான கண்டனங்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை மற்றும் சுயநலம் கொண்டவை. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் மீதான தனது பிடியை உறுதிப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்திய பயங்கரமான வன்முறையை இதே சக்திகள்தான் முன்னின்று நடத்தின அல்லது ஆதரித்து நியாயப்படுத்தின. இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே, வாஷிங்டனின் நவ காலனித்துவப் போர்கள் ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் பிற நாடுகளில் மில்லியன் கணக்கான மக்களின் இறப்புக்கும், இன்னும் பல மில்லியன்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படுவதற்கும் காரணமாகியுள்ளன.

மத்திய கிழக்கின் வளங்களை கொள்ளையடிக்கவும், மூலோபாய போக்குவரத்து வழிகளைப் பாதுகாக்கவும், சீனா மற்றும் பிற போட்டியாளர்களுக்கு எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக வழிகள் கிடைப்பதைத் தடுக்கவும் வாஷிங்டன் விரும்புகிறது. அத்தகைய ஒரு “புதிய மத்திய கிழக்கை” உருவாக்குவதற்கான ஒரு மேலதிக ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த, ஈரானிய மக்களின் அவலநிலையை ட்ரம்ப் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிற பிரதிநிதிகள் சிடுமூஞ்சித்தனமாக சுரண்டிக் கொள்கின்றனர்.

ஈரானின் கடற்கரைக்கு அருகே USS ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பல் வருகை தந்திருப்பது, வெனிசுவேலா மீது ட்ரம்ப் தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் பரந்த எண்ணெய் வளங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதாக அறிவித்த சில நாட்களிலேயே நடந்துள்ளது. வாஷிங்டன் இப்போது பெய்ஜிங்கின் மற்றொரு முக்கிய எண்ணெய் விநியோகஸ்தரை அச்சுறுத்தி வருகிறது. இதன் மூலம் சீனாவுக்கு எதிரான தனது பொருளாதாரப் போர் மற்றும் இராணுவ மோதலுக்கான தயாரிப்புகளைத் தொடர்கிறது. பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளான ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கான மையமாகவும், ஈரானுடன் இணைந்த ஹிஸ்புல்லாவின் வர்த்தக நடவடிக்கைகளுக்கான தளமாகவும் காரகாஸ் (Caracas) செயல்பட்டது.

பிராந்தியம் முழுவதையும் போர் சூழ்ந்து கொள்ளும் அச்சுறுத்தல் அதிகரிப்பு

மத்திய கிழக்கில் வாஷிங்டனின் பொறுப்பற்ற போர் விரிவாக்கம், பிராந்தியம் முழுவதும் ஒரு இரத்தக் களரியை கட்டவிழ்த்து விட அச்சுறுத்துகிறது. இந்த மாத தொடக்கத்தில், ஈரானிய பாதுகாப்புப் படைகள் அமைதியான முறையில் போராடுபவர்களைக் கொல்வதாகக் குற்றம் சாட்டி, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ட்ரம்ப் பலமுறை அச்சுறுத்தினார். மேலும், போராட்டக்காரர்களுக்கு “உதவி வரப்போகிறது” என்றும் உறுதியளித்தார். இருப்பினும், ஈரானிய ஆட்சியை வீழ்த்துவதற்கு வான்வழித் தாக்குதல்கள் மட்டுமல்லாமல், தரைப் படையினர்களும் தேவைப்படுவார்கள் என்று அவரது இராணுவ ஆலோசகர்கள் கூறியதாலும், ஈரான் மீதான தாக்குதல் பிராந்தியம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று அவரது வளைகுடா நட்பு நாடுகள் எச்சரித்ததாலும், அவர் அந்தத் தாக்குதலைத் தள்ளி வைத்தார். குறிப்பாக, அமெரிக்காவின் நட்பு நாடுகள், தாங்கள் சமூகக் கொந்தளிப்பு எனும் வெடிமருந்து பீப்பாய்களின் மீது அமர்ந்திருப்பதும் ஒரு காரணமாகும்.

இதற்குப் பதிலாக, போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஈரானியர்கள் மீது ட்ரம்ப் கூடுதல் தடைகளை விதித்தார். இதில் ஈரானின் தேசிய பாதுகாப்புக்கான உச்ச கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானி மற்றும் ஈரானின் சட்ட அமலாக்கப் படைகள் மற்றும் புரட்சிகர பாதுகாப்புப் படையின் நான்கு பிராந்திய தளபதிகள் ஆகியோர் அடங்குவர்.

ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டின் தயாரிப்புகள் மீதும் 25 சதவீத இறக்குமதி வரியை விதிக்கப்போவதாகவும் அவர் அறிவித்தார். ஆனால், இது வரை அதைச் செயல்படுத்துவதற்கான எந்தவொரு நிர்வாக உத்தரவையும் அவர் பிறப்பிக்கவில்லை.

மேலும், ஈராக்கின் அடுத்த அரசாங்கத்தில் ஈரானின் ஆதரவு பெற்ற போராளிக் குழுக்கள் சேர்க்கப்பட்டால், எண்ணெய் வருவாயைப் பெறுவதற்கான உரிமையைக் கட்டுப்படுத்துவோம் என்று மிரட்டி, ஈராக்கின் மத்திய அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தையும் ட்ரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. ஈராக் அரசாங்கம், ஈரான் ஆதரவு பெற்ற ஷியா தலைவரான நூரி அல்-மாலிகி தலைமையில் அமைய உள்ளது. ஈரான் நீண்டகாலமாக டாலர்களைப் பெறுவதற்கான அமெரிக்கக் கட்டுப்பாடுகளைக் கையாளுவதற்கு பாக்தாத்தின் வங்கி முறையைப் பயன்படுத்தி வருகிறது. இது ஒரு டசினுக்கும் மேற்பட்ட ஈராக்கிய வங்கிகள் மீது அடுத்தடுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்கள் தடைகளை விதிக்கத் தூண்டியது.

ஏப்ரல் 2025 முதல், வாஷிங்டனின் வளைகுடா நட்பு நாடுகளில் பல, சுமார் 40,000ம் அமெரிக்க துருப்புக்கள் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள தங்கள் நாட்டிலுள்ள தளங்களை ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பயன்படுத்த வாஷிங்டனை அனுமதிக்க பகிரங்கமாக மறுத்துவிட்டன. மக்களின் எதிர்வினை மற்றும் ஈரானின் பதிலடித் தாக்குதல்களுக்கு அஞ்சியே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும், அமெரிக்க இராணுவத்தின் அல்-தாப்ரா விமானத் தளம் அமைந்துள்ள இடமுமான ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ஈரானுக்கு எதிரான எந்தவொரு விரோதமான இராணுவ நடவடிக்கைகளுக்கும் தனது வான்வெளி, தரைவழி அல்லது கடல் எல்லையைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று திங்களன்று கூறியுள்ளது. இருப்பினும், ஜோர்டான் இதற்குச் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.

ட்ரம்ப் நிர்வாகம் தனது பிராந்தியத் தாக்குதல் நாயான இஸ்ரேலுடன் தனது முயற்சிகளை நெருக்கமாக ஒருங்கிணைத்து வருகிறது. அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், கடந்த வார இறுதியில் இஸ்ரேலில் உயர்மட்ட இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தியதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ட்ரம்ப்பின் மிரட்டல்களைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) மிகுந்த எச்சரிக்கையுடன் தயார் நிலையில் உள்ளன. இஸ்ரேலிய இராணுவத்தின் வடக்கு கட்டளையகத் தலைவர் ரஃபி மிலோ, டிவி சேனல் 12-ல் பேசுகையில், “பாரசீக வளைகுடாவிலும் பிராந்தியம் முழுவதிலும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் படைப் பெருக்கத்தை நாங்கள் காண்கிறோம். நாங்கள் மிகவும் விழிப்புடனும், வலுவான தற்காப்பு மற்றும் தாக்குதல் பதிலடிகளுக்குத் தயாராகவும் இருக்கிறோம்,” என்று கூறினார்.

எந்தவொரு தாக்குதலுக்கும் தாங்கள் அளிக்கப்போகும் பதிலடியானது, கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் 12 நாள் போருக்கு அளித்த எதிர்வினையை விட மிக மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்கா நேரடியாகப் போரில் ஈடுபட்ட பிறகு, ஈரானிய ஆட்சி கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதல் முன்கூட்டியே வாஷிங்டனுக்குத் தெரிவிக்கப்பட்டதால் உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

கடந்த வார இறுதியில் ஒரு மூத்த ஈரானிய அதிகாரி கூறுகையில், “இந்த இராணுவப் படைப்பெருக்கம் — இது ஒரு உண்மையான மோதலுக்காக இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம் — ஆனால் எங்களது இராணுவம் மிக மோசமான சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. இதனால்தான் ஈரானில் அனைத்தும் மிகுந்த எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளன,” என்றார். அவர் மேலும் கூறுகையில், “இந்த முறை எந்தவொரு தாக்குதலையும் — அது வரையறுக்கப்பட்டதோ, வரம்பற்றதோ, துல்லியமான தாக்குதலோ (Surgical) அல்லது இயக்க ஆற்றல் (Kinetic) சார்ந்த தாக்குதலோ, அவர்கள் அதை எப்படி அழைத்தாலும் — எங்கள் மீதான முழுமையான போராகவே கருதுவோம். மேலும், இதைத் தீர்க்க சாத்தியமான மிகக் கடினமான வழியில் பதிலடி கொடுப்போம்,” என்றார்.

ஈரானின் பதிலடி எந்த வடிவத்தில் இருக்கும் என்று அவர் கூறவில்லை என்றாலும், “அமெரிக்காவிலிருந்து தொடர்ச்சியான இராணுவ அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் ஒரு நாட்டிற்கு, ஈரானைத் தாக்கத் துணியும் எவருக்கும் எதிராகப் பதிலடி கொடுக்கவும், முடிந்தால் சமநிலையை மீட்டெடுக்கவும் தன்னிடம் உள்ள அனைத்தையும் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை,” என்று அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்காவுடன் ஒரு உடன்படிக்கைக்காக மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து வரும் ஈரானிய அரசியல் பிரிவின் உறுப்பினரும், ஈரானின் வெளியுறவு அமைச்சருமான அப்பாஸ் அராக்ஷி, மற்றவர்களை விடக் குறைவான போர்க்குணம் கொண்டவராகத் தெரியவில்லை. கடந்த வாரம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியான ஒரு கட்டுரையில், தாக்குதல் நடத்தப்பட்டால் தெஹ்ரான் “எங்களிடம் உள்ள அனைத்தையும் கொண்டு பதிலடி கொடுக்கும்” என்று அவர் எழுதியிருந்தார். அவர் கூறுகையில், “ஒரு முழுமையான போர் நிச்சயமாகக் கொடூரமானதாக இருக்கும். மேலும், இஸ்ரேலும் அதன் பினாமிகளும் வெள்ளை மாளிகைக்கு விற்க முயற்சிக்கும் கற்பனையான காலக்கெடுவை விட மிக மிக நீண்ட காலம் நீடிக்கும். போர் நிச்சயமாக பரந்த பிராந்தியத்தை சூழ்ந்து கொள்ளும் மற்றும் உலகெங்கிலும் உள்ள சாதாரண மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றார்.

ஒரு முக்கிய இராணுவ பிரமுகரான அலி அப்துல்லாஹி அலியாபாதி, ஈரான் மீதான எந்தவொரு இராணுவத் தாக்குதலும் இப்பகுதியில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்களையும் “சட்டபூர்வமான இலக்குகளாக” மாற்றும் என்று எச்சரித்தார். புரட்சிகர பாதுகாப்புப் படையின் தலைவரான ஜெனரல் முகமது பக்பூர், ஈரான் “முன்னெப்போதும் இல்லாத வகையில் தயாராக உள்ளது, விரல் தூண்டுதலில் உள்ளது” என்று கூறினார், மேலும் வாஷிங்டன் மற்றும் இஸ்ரேலை “எந்தவொரு தவறான கணக்கீட்டையும் தவிர்க்குமாறு” எச்சரித்தார்.

Loading