மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
காஸா சுகாதார அமைச்சகத்தின் இறப்பு எண்ணிக்கையை “ஹமாஸின் பிரச்சாரம்” என்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிராகரித்து வந்த இஸ்ரேலிய இராணுவம், அக்டோபர் 2023 முதல் காஸாவில் சுமார் 70,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை இப்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தாமதமான ஒப்புதல், இஸ்ரேலிய அரசாங்கம், ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் ஆகியவற்றின் முறையான பொய்களை அம்பலப்படுத்துகிறது—இவர்கள் அனைவரும் இனப்படுகொலையின் அளவை மறைக்க ஒன்றிணைந்து செயல்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மூத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், சிதிலங்களுக்கு அடியில் புதைந்து காணாமல் போன 10,000-க்கும் மேற்பட்டோரைத் தவிர்த்து, சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களை இராணுவம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். “காணாமல் போனவர்களைச் சேர்க்காமல், போரில் சுமார் 70,000ம் காஸா மக்கள் கொல்லப்பட்டதாக நாங்கள் மதிப்பிடுகிறோம்,” என்று அந்த அதிகாரி கூறினார். ஜனவரி 27ம் திகதி நிலவரப்படி, காஸா சுகாதார அமைச்சகத்தின் எண்ணிக்கை 71,662 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 171,428 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, “வேறு என்ன குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கக்கூடும்?” என்று இஸ்ரேலிய நாளிதழான ஹாரெட்ஸ் கேள்வி எழுப்பியது. “காஸாவில் இஸ்ரேலின் நடத்தை குறித்து இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மை பற்றி இந்த தாமதமான அங்கீகாரம் என்ன உணர்த்துகிறது என்பதை இஸ்ரேலிய பொதுமக்களே தங்களை தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டது. இந்தக் கேள்விகளை ஹாரெட்ஸ் ஆசிரியர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டியவை. ஏனெனில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களும் சர்வதேச ஊடகங்களில் உள்ள அவர்களது சகாக்களும் ஆவணப்படுத்தப்பட்ட இந்த படுகொலையின் அளவை அவதூறு செய்யும் பிரச்சாரத்தில் பங்கெடுத்தனர்.
இஸ்ரேலிய இராணுவம் முன்னதாக காஸாவில் 22,000 போராளிகளைக் கொன்றதாகக் கூறியிருந்தது. அவர்களின் இந்த வாக்குமூலத்தின்படியே பார்த்தால், கொல்லப்பட்ட 70,000ம் பேரில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் பொதுமக்கள் ஆவர். ஆனால், இந்த புள்ளிவிவரம் கூட படுகொலையின் உண்மையான அளவை குறைத்து மதிப்பிடுகிறது. ஆகஸ்ட் 2025-ல் கசிந்த இஸ்ரேலிய இராணுவத் தரவுத்தளம், கொல்லப்பட்டவர்களில் 83 சதவீதம் பேர் பொதுமக்கள் என்பதைக் காட்டியது. இது, மனித உரிமை அமைப்புகள் ஆரம்பத்திலிருந்தே ஆவணப்படுத்தியதோடு ஒத்துப்போகிறது, மேலும் இதையே இஸ்ரேலும் அதன் நட்பு நாடுகளும் மறைக்க முயன்றன.
போரின் ஆரம்ப வாரங்களிலிருந்தே, இஸ்ரேலும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் பாலஸ்தீனிய இறப்பு எண்ணிக்கையை மதிப்பிழக்கச் செய்வதற்காக ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை மேற்கொண்டன. அக்டோபர் 2023-ல், தாக்குதல் தொடங்கி இரண்டு வாரங்களே ஆன நிலையில், அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடென், “பாலஸ்தீனியர்கள் பயன்படுத்தும் எண்ணிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை. எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து பாலஸ்தீனியர்கள் உண்மையைக் கூறுகிறார்கள் என்ற எண்ணம் எனக்கு இல்லை” என்று அறிவித்திருந்தார்.
அந்த நேரத்தில், காஸா சுகாதார அமைச்சகம் சுமார் 3,000ம் குழந்தைகள் உட்பட 7,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஆவணப்படுத்தியிருந்தது. அப்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளராக இருந்த ஜோன் கிர்பி, சுகாதார அமைச்சகத்தை “ஹமாஸின் ஒரு முன்னணி” அமைப்பு என்று அழைத்ததுடன், அதன் புள்ளிவிவரங்களை “அப்படியே உண்மையாக” எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பொதுமக்களின் பெருமளவிலான உயிரிழப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளை “அநீதியான இரத்தக்களரி அவதூறு” என்று கூறி நிராகரித்தார். ஆவணப்படுத்தப்பட்ட போர்க்குற்றங்களில் இருந்து திசைதிருப்ப, மத்திய காலத்து யூத எதிர்ப்பு அவதூறுகளை அவர் தூண்டிவிட்டார். மேலும், செப்டம்பர் 2024-ல், “நவீன கால நகர்ப்புற போர்களின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த அளவிலான பொதுமக்கள்-போராளிகள் இறப்பு விகிதத்தை” இஸ்ரேல் சாதித்துள்ளதாக தற்பெருமை பேசினார். இது ஒரு பொய், அதைச் சொல்லும்போதே அது பொய் என்பது நெதன்யாகுவுக்குத் தெரியும்.
காஸா சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டுவதற்கு அரசு நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வமாகத் தடை விதிக்கும் அசாதாரண நடவடிக்கையை அமெரிக்க காங்கிரஸ் எடுத்தது. ஜூன் 2024-ல், இரு கட்சிகளையும் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி) சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, காஸா சுகாதார அமைச்சகத் தரவுகளை மேற்கோள் காட்டுவதைத் தடுக்கும் வகையில் வெளியுறவுத் துறை செலவின மசோதாவில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதற்கு ஆதரவாக 269 வாக்குகள் கிடைத்தன. இதில் 207 குடியரசுக் கட்சியினருடன் 62 ஜனநாயகக் கட்சியினரும் இணைந்து கொண்டனர். அதே ஆண்டின் இறுதியில், பென்டகன் இந்த மதிப்பீடுகளை “அதிகாரப்பூர்வமானது” என்று பகிரங்கமாகக் குறிப்பிடுவதைத் தடுக்கும் வகையில் ஒரு பாதுகாப்புச் செலவின மசோதாவையும் காங்கிரஸ் நிறைவேற்றியது.
நியூ யோர்க் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி ரிச்சி டோரஸ் கூறுகையில்: “ஹமாஸின் பொது சுகாதாரப் பிரிவை அங்கீகரிப்பது என்பது அல்-கொய்தா மற்றும் ISIS அல்லது நாஜி ஜேர்மனி மற்றும் ஜப்பானிய பேரரசின் பொது சுகாதாரப் பிரிவுகளை அங்கீகரிப்பது போன்றது. இது தார்மீக ரீதியாகவும் அறிவுப்பூர்வமாகவும் ஊழல் நிறைந்தது” என்றார். மேரிலாந்தின் பிரதிநிதி ஸ்டெனி ஹோயர், சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களை “அல்-கொய்தா அல்லது ISIS வழங்கிய புள்ளிவிவரங்களைப் பார்க்கும் அதே சந்தேகக் கண்ணோட்டத்துடன் கையாள வேண்டும்” என்றார். தாங்கள் மறைக்க கடுமையாக உழைத்த அந்த புள்ளிவிவரங்களின் துல்லியத்தை இஸ்ரேலே ஒப்புக்கொண்ட பிறகு, டோரஸ் அல்லது ஹோயர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ள 70,000ம் என்ற எண்ணிக்கை, உண்மையான இறப்பு எண்ணிக்கையில் ஒரு சிறு பகுதி மட்டுமே. இந்த அதிகாரப்பூர்வ கணக்கீட்டில், இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலால் நேரடியாகக் கொல்லப்பட்டு, அடையாளம் காணப்பட்டவர்களின் உடல்கள் மட்டுமே அடங்கும். இடிபாடுகளுக்குள் புதைந்து காணாமல் போனவர்களை இது சேர்க்கவில்லை. பசியால் உயிரிழந்த நூற்றுக்கணக்கானவர்களை இது சேர்க்கவில்லை. இஸ்ரேல் திட்டமிட்ட முறையில் காஸாவின் சுகாதாரக் கட்டமைப்பை அழித்ததால், மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த ஆயிரக்கணக்கானவர்களையும் இது சேர்க்கவில்லை.
உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் என்று பல சுயாதீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஜூலை 2024-ல் லான்செட் (Lancet) இதழ் வெளியிட்ட ஆய்வொன்று, ஜூன் 30, 2024 வரையிலான காலப் பகுதியிலேயே (அதாவது ஓராண்டிற்கு முன்பே) கடுமையான காயம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64,260 என மதிப்பிட்டிருந்தது. மேக்ஸ் பிளாங்க் (Max Planck) மக்கள் தொகை ஆய்வு நிறுவனம், நவம்பர் 2025-ல் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, அக்டோபர் 2025-க்குள் வன்முறையால் ஏற்பட்ட மரணங்கள் “நிச்சயமாக 100,000-ஐத் தாண்டியிருக்கும்” எனக் குறிப்பிட்டது.
நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்ட ஒரு சுயாதீன வீட்டுவசதி கணக்கெடுப்பு, அக்டோபர் 2023 முதல் ஜனவரி 2025 தொடக்கம் வரை சுமார் 84,000ம் மரணங்கள் நிகழ்ந்திருப்பதைக் கண்டறிந்தது. ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ், உண்மையான இறப்பு எண்ணிக்கை 680,000 வரை இருக்கலாம் என்று ஒரு மதிப்பீட்டைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அழிவின் அளவை கற்பனை செய்து பார்ப்பதே கடினம். 20,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்—அதாவது கடந்த 23 மாதங்களாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை கொல்லப்பட்டுள்ளது. குறைந்தது 274 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; இது அமெரிக்க உள்நாட்டுப் போர், முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், கொரியப் போர், வியட்நாம் போர், யூகோஸ்லாவியப் போர்கள் மற்றும் செப்டம்பர் 11-க்குப் பிந்தைய ஆப்கானிஸ்தான் போர் ஆகியவற்றில் கொல்லப்பட்ட மொத்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். 1,700-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்ட ஐ.நா ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்—ஐநா பணியாளர்களுக்கு வரலாற்றிலேயே இது மிகவும் கொடிய பாதிப்பை ஏற்படுத்திய மோதலாகும்.
காஸாவின் மொத்தக் கட்டமைப்புகளில் 66 முதல் 84 சதவீதம் வரை சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. 92 சதவீத குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது தகர்க்கப்பட்டுள்ளன. 95 சதவீத விவசாய நிலங்கள் பாழடைந்துள்ளன. 500,000-க்கும் மேற்பட்ட மக்கள் பேரழிவு தரும் பசிக் கொடுமையை எதிர்கொள்கின்றனர். மக்களின் சராசரி ஆயுட்காலம் 2023-ல் 44 சதவீதமும், 2024-ல் 47 சதவீதமும் குறைந்துள்ளது. காஸாவின் 2.2 மில்லியன் மக்களில் தொண்ணூறு சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களில் பலர் பலமுறை இடம்பெயர வேண்டியிருந்தது.
காஸாவில் நடந்து வரும் இந்த இனப்படுகொலை, — தற்போது ட்ரம்பின் ஆதரவுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது— முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் ஊடகங்கள் பரப்பிய முறையான பொய்களால் சாத்தியமானது. பைடென் நிர்வாகம், அமெரிக்க காங்கிரஸ் மற்றும் முக்கிய செய்தி நிறுவனங்கள் என அனைவரும், ஆவணப்படுத்தப்பட்ட இந்தப் படுகொலையின் அளவைச் சந்தேகிப்பதன் மூலம், இஸ்ரேலைப் பொறுப்புக்கூறலில் இருந்து பாதுகாக்க உழைத்தனர். அதே நிறுவனங்கள் தான் இப்போது ஈரான் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிற இலக்குகளுக்கு எதிரான புதிய போர்களை ஆதரிக்குமாறு தொழிலாளர்களைக் கோருகின்றன. காஸாவைப் பற்றிய இந்தப் பொய்கள், ஏகாதிபத்தியத்தால் நடத்தப்படும் ஒவ்வொரு போரைப் பற்றியும் சொல்லப்படப்போகும் பொய்களை அம்பலப்படுத்துகின்றன.
