முன்னோக்கு

ஜேர்மன் ஏகாதிபத்தியம் "அதிகார அரசியலின் மொழியைப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று சான்சலர் மெர்ஸ் கோருகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

பேர்லினில் உள்ள சான்சலர் அலுவலகத்தில் நடைபெறும் சந்திப்பிற்காக, லிதுவேனியப் பிரதமர் இங்கா ருகினீனை ஜேர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் (நடுவில் இருப்பவர்) வரவேற்கிறார். ஜேர்மனி, ஜனவரி 29, 2026 வியாழக்கிழமை [AP Photo/Ebrahim Noroozi]

2026-ஆம் ஆண்டின் முதல் மாதம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பைக் கண்டுள்ளது. இது, வெனிசுவேலா மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் படையெடுப்பு மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்தியதுடன் தொடங்கியதோடு, கிரீன்லாந்தைச் சொந்தமாக்கிக் கொள்ளவும், அதன் இயற்கை வளங்கள் மற்றும் ஆர்க்டிக் கப்பல் வழித்தடங்களைக் கட்டுப்படுத்தவும் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையுடன் தொடர்ந்தது. இப்போது ஈரானைத் தாக்கத் தயாராக உள்ள அமெரிக்க போர்க் கப்பல்களின் “பிரமாண்டமான கடற்படை” மத்திய கிழக்கில் அணிதிரட்டப்படுவதன் மூலம் அதன் உச்சத்தை எட்டியுள்ளது.

ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரம் மற்றும் குற்றத்தன்மை, ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் ஆக்கிரமிப்பு நோக்கத்தை அடிக்கடி மறைத்து விடுகிறது. அல்லது பழைய காலனித்துவ சக்திகளான ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை தங்களின் அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையேயான போட்டியாளரை விட, அதிக “மனிதாபிமானம்” கொண்டவை என்ற தவறான நம்பிக்கையைத் தூண்டுகிறது. ஜேர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் இந்த வாரம் வெளியிட்ட கருத்துக்கள், உள்ளடக்கத்தில் நாஜித் தலைவர் அடொல்ஃப் ஹிட்லரை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன. இது போன்ற எந்தவொரு மாயைகளையும் அவை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மெர்ஸ், தனது கருத்துக்களை “பெரிய வல்லரசுகளுக்கு இடையிலான போட்டி” என்ற புதிய சகாப்தத்தின் பின்னணியில் வைத்தார். அவர் கூறுகையில், “கடந்த சில வாரங்களாக, ஒரு பெரிய வல்லரசு உலகம் உருவாகத் தொடங்குவதை நாம் மேன்மேலும் தெளிவாகக் கண்டு வருகிறோம். இந்த உலகில் ஒரு கடுமையான காற்று வீசுகிறது, அதை நாம் எதிர்வரும் காலங்களில் உணர்வோம்” என்று அறிவித்தார். இந்த சொல்லாடல், வெளியுறவுக் கொள்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட “புதிய யுகத்தை” நடைமுறைப்படுத்த உதவுகிறது. இதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போருக்காகத் தயாராவதற்கு 1 டிரில்லியன் யூரோக்களை செலவிடவும், அதற்காகச் சமூக நலச் செலவினங்களைக் வெட்டிக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளன.

மெர்ஸ் விவரித்த புதிய உலகச் சூழலுக்கு அவர் அளித்த பதிலானது, 1930-களின் தொடக்கத்தில் ஹிட்லர் ஆற்றிய கொள்கை விளக்க உரைகளில் ஒன்றிலிருந்து வெளிவந்ததைப் போலவே இருந்தது. “நாமே அதிகார அரசியலின் மொழியைப் பேசக் கற்றுக்கொண்டால், நாமே ஒரு ஐரோப்பிய சக்தியாக மாறினால் மட்டுமே, உலகில் நமது கருத்துக்களை ஓரளவாவது செயல்படுத்த முடியும்,” என்று அவர் உறுப்பினர்களிடம் கூறினார். அவர் குறிப்பிடுவது என்னவென்றால், ஜேர்மன் தலைமையின் கீழ் ஐரோப்பாவை ஒரு சுதந்திரமான இராணுவ வல்லரசாக மாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை.

மெர்ஸ் தொடர்ந்து கூறுகையில்: “முதலாவதாக, நமது பாதுகாப்பை நாம் எமது கைகளில் எடுக்க வேண்டும். இதற்கு மற்றவர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தேவை... நமது சொந்த ஐரோப்பிய பாதுகாப்புத் திறன்களில் நாம் பெருமளவில் முதலீடு செய்ய வேண்டும்.” இந்த “இறையாண்மை” மற்றும் “சுதந்திரம்” என்ற முழக்கங்கள், இரண்டு உலகப் போர்களுக்கு முன்னதாக நடந்த ஜேர்மன் இராணுவமயமாக்கலுக்கு நிகரான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மீள்ஆயுதமயமாக்கல் தாக்குதலுக்கான கருத்தியல் மூடுதிரையாகும்.

“இந்த அவையின் பெரும்பான்மையினருடன் இணைந்து, கடந்த ஆண்டு நமது தேசிய பாதுகாப்புச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஐந்து சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்தோம்,” என்று மெர்ஸ் பெருமையுடன் கூறினார். முழுமையான அர்த்தத்தில் பார்த்தால், இது ஆண்டுக்கு 200 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான ஜேர்மன் போர் வரவு-செலவுத் திட்டக்கணக்கை குறிக்கிறது. இது கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன்களுக்காகச் செலவிடப்படும் மொத்தத் தொகையை விட அதிகம். மெர்ஸ் இந்த வழியை ஒரு முன்மாதிரியாக வெளிப்படையாக முன்வைத்தார்: “நாங்கள் வழிகாட்டினோம், ஐரோப்பாவில் மற்றவர்கள் எங்களைப் பின்தொடர்ந்தனர்.”

இந்த மீள்ஆயுதமயமாக்கல் நடவடிக்கை, விரிவான சமூக நலச் செலவினக் குறைப்புகளுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது. வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் பொதுச் சேவைகள் மீதான தாக்குதல்கள் இராணுவத்திற்கு நேரடியாக நிதி வழங்க உதவுவது மட்டுமல்லாமல், ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தை உலக அரங்கில் “போட்டித்தன்மை” மிக்கதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. அமெரிக்கா மற்றும் சீனாவுடனான வளர்ந்து வரும் “வளர்ச்சி இடைவெளியை” சுட்டிக்காட்டி, “இரண்டாவதாக, நாம் எமது பொருளாதாரத்தை மீண்டும் போட்டித்தன்மை மிக்கதாக மாற்ற வேண்டும்,” என்று மெர்ஸ் வெளிப்படையாகத் தெரிவித்தார். சான்சலரின் கூற்றுப்படி, உலக அரசியலை வடிவமைக்கும் ஜேர்மனியின் திறன் “எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாதார வலிமையையே” சார்ந்துள்ளது—அதாவது, இலாபங்களை அதிகரிப்பதற்கும், இராணுவ வழிகள் உட்பட சந்தைகள் மற்றும் மூலப்பொருட்களைக் கைப்பற்றுவதற்குமான திறனைச் சார்ந்துள்ளது.

மெர்ஸ் மற்றும் ஆளும் வர்க்கத்தின் நோக்கம் ஒரு சர்வாதிகார “ஐரோப்பிய கோட்டையை” உருவாக்குவதாகும். இது அமெரிக்காவில் ட்ரம்ப் நிறுவ முயலும் சர்வாதிகாரத்தைப் போன்றது. ஜேர்மனியின் தலைமையின் கீழ் உலகெங்கிலும் தனது ஏகாதிபத்திய நலன்களை இது நிலைநாட்டும். “மூன்றாவதாக, இந்த விவகாரங்களில் நாம் ஐரோப்பாவில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்,” என்று கோரிய மெர்ஸ், “ஒற்றுமை என்பது உலகில் ஒரு அதிகாரத்தின் காரணியாகும்,” என்று வெளிப்படையாகக் கூறினார். ஐரோப்பிய ஏகாதிபத்திய நலன்களைப் பொருளாதார மற்றும் இராணுவ பலத்தின் மூலம், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக மட்டுமல்லாமல், அதிகரித்தளவில் அமெரிக்காவிற்கு எதிராகவும் ஒன்றிணைந்து செயல்படுத்துவதையே அவர் அர்த்தப்படுத்துகிறார்.

ஐரோப்பிய “அதிகாரத்திற்கு” உதாரணமாக, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரில் ஐரோப்பியர்களின் முன்னணிப் பாத்திரத்தையும், கிரீன்லாந்தை கைப்பற்றும் ட்ரம்பின் முயற்சிக்கு அடிபணியாத ஐரோப்பிய சக்திகள் மீது அவர் மிரட்டிய தண்டனை சுங்க வரிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையையும் மெர்ஸ் சுட்டிக்காட்டினார். “வரிகள் மூலம் ஐரோப்பாவிற்கு எதிராக கொள்கைகளை வகுக்க முடியும் என்று நம்புபவர்கள், எங்களை நாங்களே தற்காத்துக் கொள்ளத் தயாராகவும் திறமையுடனும் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்,” என்று சான்சலர் அறிவித்தார். அதே நேரத்தில், “ஏற்கனவே உள்ள கூட்டணிகளை நாங்கள் பொறுப்பற்ற முறையில் ஆபத்தில் தள்ள விரும்பவில்லை” என்றும் அவர் வலியுறுத்தினார்.

மிகப்பெரிய அளவிலான இராணுவ மீள் ஆயுதமயமாக்கலுக்கு ஐரோப்பாவிற்கு அவகாசம் தேவைப்படும் வரையிலும், எல்லாவற்றிற்கும் மேலாக, ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் முன்னெடுப்புகளில் வாஷிங்டனின் ஆதரவை தொடர்ந்து சார்ந்திருக்கும் வரையிலும், அமெரிக்காவுடன் நேரடி மோதலைத் தவிர்க்க மெர்ஸ் ஆர்வமாக உள்ளார். இந்த தந்திரோபாய நிதானம், ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஒரு சுயாதீனமான உலக சக்தியாக உருவெடுக்க மேன்மேலும் வெளிப்படையாக முயற்சிக்கிறது என்ற உண்மையை மாற்றிவிடாது.

“தற்போதைய உலகளாவிய மறுசீரமைப்பானது, தன்னிச்சையான போக்கை விட விதிகளை விரும்புபவர்களுக்கும், தனது சொந்த நலன்களை மட்டும் ஒருதலைப்பட்சமாகப் பின்தொடர்வதை விட சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்தில் அதிக நன்மைகளைக் காண்பவர்களுக்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது,” என்று மெர்ஸ் விளக்கினார். ஜேர்மனியை “இறையாண்மை நாடுகளின் ஒரு ஆற்றல்மிக்க, சுறுசுறுப்பான வலையமைப்பின் பாகமாக” விவரித்த அவர், குறிப்பாக இந்தியா மற்றும் இலத்தீன் அமெரிக்க மெர்கோசூர் (Mercosur - தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான ஒரு முக்கியமான பொருளாதார மற்றும் அரசியல் கூட்டமைப்பு) நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களைப் பாராட்டினார்.

உலக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தனது முயற்சியை, “விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப்” பாதுகாக்கும் செயலாகச் சித்தரிக்க மெர்ஸ் முயல்வது சிடுமூஞ்சித்தனமானது. உண்மையில், கடந்த முப்பது ஆண்டுகளில் கொசோவோ முதல் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா வரை அமெரிக்கா முன்னின்று நடத்திய ஒவ்வொரு ஆக்கிரமிப்புப் போரையும் ஜேர்மனியும் ஐரோப்பாவும் ஆதரித்துள்ளன. ஜேர்மன் சிப்பாய்கள் “2001 செப்டம்பர் 11 க்குப் பின்னர்” ஆப்கானிஸ்தானில் “எமது அமெரிக்க பங்காளிகளுடன் சேர்ந்து” போரிட்டனர் என்று மெர்ஸ் தனது உரையில் பெருமையடித்துக் கொண்டார், மேலும் இந்த பணியை “இழிவுபடுத்துவதை” அவர் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

ஜேர்மன் அரசாங்கம் அதன் சொந்த நலன்களுக்கு சேவை செய்யும் வரை, சர்வதேச சட்டத்தை மீறும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் மற்றும் போர்களை தொடர்ந்து ஆதரிக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெனிசுவேலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை மெர்ஸ் பகிரங்கமாக ஆதரித்தார். ஈரான் மீதான போர்த் தயாரிப்புகளை ஆதரிக்கிறார் மற்றும் காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையைத் தற்காத்து வருகிறார்.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, மெர்ஸின் உரைக்கு முந்தைய நாள் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ யூத இனப்படுகொலை நினைவுச் சடங்கு அப்பட்டமான பாசாங்குத்தனம் ஆகும். “இனி ஒருபோதும் வேண்டாம்” என்ற சடங்கு ரீதியான முழக்கத்தின் மூலம், ஆளும் வர்க்கம் தான் மீண்டும் அதையே செய்கிறது என்பதை மறைக்க முயல்கிறது: அதாவது, வெளிநாடுகளில் வல்லரசு அதிகார அரசியல், இராணுவவாதம் மற்றும் இனப்படுகொலை, மற்றும் உள்நாட்டில் சர்வாதிகார அரசியல். குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்காவில் நிலவும் பகிரங்கமான பாசிச வளர்ச்சிகள் குறித்தோ, அங்கு ட்ரம்பின் ICE துணை இராணுவப் படையினர் புலம்பெயர்ந்தோரை வேட்டையாடுவதையும், எதிர்ப்புத் தெரிவிப்பவர்களைக் குளிர் இரத்தத்துடன் கொலை செய்வதையும் பற்றி மெர்ஸ் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதற்கான காரணம் தெளிவானது: வெளிநாடுகளில் இராணுவவாதம் மற்றும் உள்நாட்டில் சர்வாதிகார ஆட்சி என்பதே ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தின் வேலைத் திட்டமாக உள்ளது.

ஐரோப்பிய அணு ஆயுதங்கள் குறித்த மெர்ஸின் அறிக்கைகள், இந்த வளர்ச்சி ஏற்கனவே எந்த அளவிற்கு முன்னேறியுள்ளது என்பதைக் காட்டுகின்றன. அவரது உரைக்குப் சில மணிநேரங்களுக்குப் பிறகு, லிதுவேனியப் பிரதமர் இங்கா ருகினியனுடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஐரோப்பிய அணு ஆயுதங்கள் குறித்த “மூலோபாயப் பேச்சுவார்த்தைகள்” நடைபெற்று வருவதை சான்சலர் உறுதிப்படுத்தினார். இந்தப் பேச்சுவார்த்தைகள் “ஆரம்ப நிலையில்” இருப்பதாகக் கூறிய அவர், “மூலோபாய ரீதியாகவும் இராணுவக் கொள்கை ரீதியாகவும் நாம் இங்கு சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம்” என்றார்.

ஜேர்மன் ஆயுதப் படைகளின் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் மூலோபாய இயக்குநரான பிரிகேடியர் ஜெனரல் ஃபிராங்க் பீப்பர், இதற்கு ஒரு படி மேலே செல்கிறார். ஸ்டெர்ன் இதழுக்கு அளித்த பேட்டியில், ஜேர்மனி தனது சொந்த அணு ஆயுதங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அரசியல்வாதிகள் “ஒரு உண்மையான மாற்றத்தை” கொண்டு வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். “ஜேர்மனிக்கு சொந்தமாக தந்திரோபாய அணு ஆயுதங்கள் தேவை,” என்று கோரிய அவர், ஆத்திரமூட்டும் வகையில்: “படுக்கையை விட்டு எழுந்து வேலையைத் தொடங்குங்கள்,” என்று கூறினார். ஜேர்மனியிடம் அணு குண்டு இருக்க வேண்டும் என்ற கோரிக்கை சட்டவிரோதமானது மட்டுமல்ல, அது மனிதகுலத்தை அணு ஆயுத உலகப் போரின் விளிம்பிற்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு செல்லும் ஒரு நடவடிக்கையாகும்.

இந்த பைத்தியக்காரத்தனத்தை மெர்ஸின் வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் அதிதீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றுக் (AfD) கட்சி மட்டுமல்லாமல், தங்களை “இடதுசாரி” அல்லது “முற்போக்கானவர்கள்” என்று கூறிக்கொள்ளும் கட்சிகளும் ஆதரிக்கின்றன. வசந்த காலத்தில் அரசாங்கத்தின் பயங்கரமான போர்க்கால நிதிகளுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்த இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சியின் பிரதிநிதிகள், மெர்ஸின் போர்க் கொள்கைக்காக அவரை விமர்சிக்கவில்லை. மாறாக, அவர் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக போதுமான அளவு ஆக்ரோஷமாகச் செயல்படவில்லை என்பதற்காகவே அவரைத் தாக்கினர்.

இடது கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோரன் பெல்மேன், மத்திய அரசு இப்போது “முடிவுகளை” எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது “பொருளாதாரக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் கொள்கை ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.” பின்னர் அவர், “அமெரிக்காவிற்கு ஜேர்மன் ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடை எங்கே? அடிபணிவதை நிறுத்துங்கள்! நடவடிக்கை எடுங்கள்!” என்று முழக்கமிட்டார்.

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்புகளின் வேகம் குறித்து பசுமைக் கட்சியின் போர்வெறியர்கள் பொறுமையிழந்துள்ளனர். 2029-ஆம் ஆண்டிற்குள் ரஷ்யாவிற்கு எதிரான போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் இலக்கைக் குறிப்பிட்டு, பசுமைக் கட்சியின் பாதுகாப்புக் கொள்கைப் பேச்சாளர் சாரா நன்னி, “எமக்கு இன்னும் 35 மாதங்கள் உள்ளன. முப்பத்தைந்து மாதங்கள்! ... 2029-ஆம் ஆண்டிற்கு இன்னும் 35 மாதங்களே உள்ளன. நான் உங்களைக் கேட்கிறேன்: அதுவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்ன ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன? நிழல் கடற்படை எப்போது நிறுத்தப்படும்? டாரஸ் (Taurus) ஏவுகணைகள் உக்ரேனுக்கு எப்போது வழங்கப்படும்? விரிவான பாதுகாப்பில் எப்போது முதலீடுகள் செய்யப்படும், மற்றும் ஒரு அவசரகாலச் சூழ்நிலைக்கான சாத்தியக்கூறுகளுக்கு மக்கள் எப்போது தயார் படுத்தப்படுவார்கள்?” என்று வெறித்தனமாக கூச்சலிட்டார்.

யுத்த பைத்தியக்காரத்தனத்துக்கு புறநிலைக் காரணங்கள் உள்ளன என்பதை ட்ரொட்ஸ்கிச இயக்கம் நீண்ட காலத்திற்கு முன்பே ஆய்வு செய்துள்ளது. 2014-ஆம் ஆண்டிலேயே, சோசலிச சமத்துவக் கட்சி (SGP) ஒரு தீர்மானத்தில், அனைத்து முதலாளித்துவக் கட்சிகளின் போர்க் கொள்கைகளுக்குப் பின்னால் உள்ள வரலாற்று மற்றும் அரசியல் சக்திகளை ஆராய்ந்து, ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள் வருகையினால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து பின்வருமாறு எச்சரித்தது:

வரலாறு ஒரு பழிவாங்கும் எண்ணத்துடன் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறது. நாஜிக்களின் குற்றங்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரில் அவர்கள் அடைந்த தோல்விக்குப் பிறகு கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டும் கெய்சரின் பேரரசு மற்றும் ஹிட்லரின் ஏகாதிபத்திய மகா அதிகார அரசியலைக் கையில் எடுத்துள்ளது...

நாஜிக்களின் கொடூரமான குற்றங்களிலிருந்து ஜேர்மனி பாடம் கற்றுக்கொண்டுள்ளது, அது “மேற்கத்திய நாடுகளுடன் இணைந்துவிட்டது,” ஒரு அமைதியான வெளியுறவுக் கொள்கையைத் தழுவியுள்ளது மற்றும் ஒரு நிலையான ஜனநாயகமாக வளர்ந்துள்ளது என்ற இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலப் பிரச்சாரங்கள் அனைத்தும் பொய்கள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் வரலாற்றில் அது வெளிப்பட்டபோது இருந்த அதே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆக்ரோஷத்துடன் மீண்டும் தனது உண்மையான நிறங்களைக் காட்டுகிறது.

ஆனால், சமூகத்தை தவிர்க்க முடியாமல் போரை நோக்கித் தள்ளும் முதலாளித்துவ அமைப்பு முறையின் அதே முரண்பாடுகள் —உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்பு முறைக்கும் இடையிலான முரண்பாடு, மற்றும் உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் அதன் தனியார் கையகப்படுத்தலுக்கும் இடையிலான முரண்பாடு—, சமூகப் புரட்சிக்கான புறநிலை அடிப்படையையும் உருவாக்குகின்றன. அமெரிக்காவில், ட்ரம்பின் பாசிசக் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. தொழிலாளர்களும் இளைஞர்களும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் (ICE) படுகொலைகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள், வேலைநிறுத்தங்களில் ஈடுபடுகிறார்கள் மற்றும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் சர்வதேச தொழிலாள வர்க்கம் என்ற இந்த வலிமைமிக்க சமூக சக்தியை நோக்கித் தங்களைத் திசைதிருப்பிக் கொள்ள வேண்டும்.

ட்ரம்பின் “வலிமையே நீதி” என்ற கொள்கைக்குப் பதில், ஜேர்மன் அல்லது ஐரோப்பிய “அதிகார அரசியலின் மொழி” அல்ல. மாறாக, அனைத்து ஏகாதிபத்திய போர்வெறியர்களுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அணிதிரட்டலே ஆகும். ஒரே முற்போக்கான முன்னோக்கு என்பது, முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிந்து ஒரு சர்வதேச சோசலிச சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் மட்டுமே உள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளும் இந்தத் வேலைத் திட்டத்திற்காகப் போராடி வருகின்றன.

Loading