இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
டிட்வா சூறாவளியானது ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் இலங்கையின் தோட்டத் தொழிலாளர்கள் மீது பல தசாப்தங்களாக மேற்கொண்ட சமூகக் குற்றத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக தலைமையிலான ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் வாக்குறுதி அளித்த நிவாரண உதவிகள் பலருக்கு இதுவரை வழங்கப்படாததால், தொழிலாளர்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது.
புயலில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் பெரும்பாலும் வறிய தொழிலாளர்கள் வாழும் பகுதிகளான் கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை, கேகாலை, குருநாகல் போன்ற மாவட்டங்களில் சுமார் 50 தோட்டத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகியுள்ளதோடு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஸ்டாக்ஹொம் தோட்டத்தில் சிறுவர்கள் உட்பட சுமார் 200 பேர் அடங்கிய 65 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. அவர்களின் லயன் அறைகள் புயலால் கடுமையான சேதத்திற்கு உள்ளானதுடன், சுவர்கள் மற்றும் தரைகளில் பரவலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், குடும்பங்கள் தோட்டத்தின் பாரதி தமிழ் வித்தியாலயத்தில் தங்கியுள்ளன.
டிசம்பர் 17 அன்று, ஸ்டாக்ஹொம் தோட்டத்தில் சுமார் 700 தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தேயிலைத் தொழிற்சாலையின் முன்பாக நடத்திய மறியல் போராட்டம் உட்பட ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் பொருத்தமான வீடுகள் கட்டுவதற்கான நிலத்தை கோரினர்.
ஆபத்து வெளிப்படையாகத் தெரிந்த போதும், தோட்ட நிர்வாகமும் அரசாங்க அதிகாரிகளும் தொழிலாளர்களின் கவலைகளைப் புறக்கணித்துள்ளனர். தொழிலாளர்களின் கூற்றுப்படி, தோட்ட முகாமையாளர், நில ஆய்வு அதிகாரி, கிராம உத்தியோகத்தர் மற்றும் சுகாதார நலன் அதிகாரியும் சூறாவளி தாக்கி சில நாட்களுக்குப் பின் சேதமடைந்த வீடுகளை மேலோட்டமாக பார்த்தனர். சேதம் “சிறியது” என்று கூறிய அவர்கள், வீடுகளை நீங்களே திருத்திக்கொண்டு மீண்டும் குடியேறுங்கள் என அறிவுறுத்தினர்.
லயன் அறைகள் பல தசாப்தங்கள் பழமையானவை. ஒவ்வொரு வீடும் வெறும் 100 சதுர அடி பரப்பளவே கொண்டதுடன் முழுக் குடும்பங்களும் அதில் வாழ்கின்றன. சிலவற்றைத் தொழிலாளர்கள் தங்கள் குறைந்த வறுமானத்தில் சிறிது மேம்படுத்தியுள்ளனர். ஸ்டாக்ஹொம் தோட்டத்தில் நிருபர்கள் சுவர்களில் பரவலான விரிசல்களைக் கண்டனர். கடந்த சம்பவங்களில், கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் லயன் அறைகள் இடிந்து விழுந்துள்ளன.
போராட்த்தின்போது ஒரு இளம் யுவதி ஊடகத்திடம் பேசினார்: “அடிமைத்தனமான லைன் அறை முறைமையை ஒழிக்கும் வரை இந்தப் போராட்டத்தை நாங்கள் நிறுத்தமாட்டோம். நாங்கள் கண்ணியமான வீடுகளையே கோருகிறோம்.”
33 வயதான சுபாஷினி அதிகாரிகளின் உதாசீனத்தை உலக சோசலிச வலைத் தளத்திற்கு விளக்குகையில், “புயலின்போது எங்களின் வீட்டுச் சுவர்கள், தரைகளில் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அதிகாரிகள் இதை ‘சிறிய சேதம்’ என்று சொல்கிறார்கள். தோட்ட நிர்வாகம் பாதுகாப்பான இடத்தில் நிலம் அல்லது வீடு வழங்குவதற்கு மறுக்கிறது,” என்றார்.
“ஏற்கனவே தொழிலாளரின் வீட்டுத்திட்டத்திற்காக 7 கெக்டர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் இப்பொழுது கோப்பி மற்றும் வேறுபயிர்கள் கம்பனியால் பயிரிடப்பட்டு வருகின்றது” என அவர் விளக்கினார்.
65 வயதான ஓய்வுபெற்ற தொழிலாளியான அவரது தந்தை கருப்பையா, அரச அதிகாரிகள் தோட்ட நிர்வாகத்தின் கருவிகளாகத் தொழிற்படுவதை அம்பலப்படுத்தினார். “அவர்கள் முதலில் தோட்ட மேலாளரின் அலுவலகத்திற்குப் போய், மாலை நேரத்தில் தான் எங்கள் வீடுகளுக்கு வந்தார்கள்” என்று அவர் கூறினார். “நில ஆய்வு அதிகாரி இங்கு வாழ்வது பாதுகாப்பானதா என மண்ணைப் பரிசோதிக்க வேண்டும், ஆனால் எதுவும் செய்யப்படவில்லை. அவர்கள் எப்படி நாங்களே திருத்திக்கொண்டு அதே இடத்தில் தங்கும்படி சொல்லலாம்? அரசாங்கமும் தோட்ட நிர்வாகமும் எங்கள் உயிர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.”
77 வயதான ஓய்வுபெற்ற தொழிலாளி வி. வேம்பன் கூறியதாவது: “நான் 18 வயதில் இங்கு வேலை செய்யத் தொடங்கினேன். என் மனைவி 65 வயது. இருவரும் நோயாளிகள். எங்களது மூன்று பெண்களும் திருமணமாகி வேறு இடங்களில் வாழ்கின்றனர். இப்போதுதான் மருத்துவமனையிலிருந்து திரும்பினோம், ஆனால் அரசாங்கத்திலிருந்தோ தோட்டத்திலிருந்தோ உதவி இல்லை. ஓய்வூதியமும் இல்லை. தோட்ட முகாமையாளரும் அதிகாரிகளும் எங்கள் வீட்டை ஐந்து நிமிடங்கள் மட்டுமே பார்த்துவிட்டு சென்றார்கள். யாரும் உதவவில்லை.”
பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களின் வகிபாகம் தொழிலாளர்களின் கோபத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. டிசம்பர் 22 அன்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி மற்றும் ஆளும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த தொழிற்சங்கத் தலைவர்களும் தோட்ட முகாமையாளரைச் சந்தித்து, இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தற்காலிக வீடுகளுக்குப் பாதுகாப்பான நிலத்தைக் கோரினர். “கம்பனி மற்றும் அரசாங்கத்தினதும் அனுமதியின்றி ஒரு அங்குல நிலம்கூட கொடுக்க முடியாது” என்று முகாமையாளர் வெளிப்படையாக மறுத்தார். தொழிற்சங்கத் தலைவர்கள் நிர்வாகத்திடம் கெஞ்சிய போதிலும், பொருத்தமான வீட்டுவசதிக்காக தொழிலாளர்களை அணிதிரட்டி போராட மறுத்துவிட்டனர்.
உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் தலவாக்கலையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள எல்ஜின் தோட்டத்திற்கு மீண்டும் சென்றிருந்தனர். அங்கு தொழிலாளர்கள் உள்ளூர் தேவாலயத்தில் தங்கியுள்ளனர். சில பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சேதமடைந்த லயன் அறைகளுக்குத் திரும்பியிருந்தாலும், 26 குடும்பங்கள் கிராம உத்தியோகத்தரின் உத்தரவை மீறி வீடு செல்ல மறுத்துள்ளன. “எங்கள் வீட்டின் அனைத்து சுவர்களும் சூறாவளியில் சேதமடைந்தன. நிலச்சரிவு எந்த நேரத்திலும் ஏற்படலாம்; அங்கு வாழ்வது மிகவும் ஆபத்தானது,” என ஒரு தொழிலாளி விளக்கினார்.
அரசு அமைப்பான தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம், ஆபத்தை ஒப்புக்கொண்டாலும், குடியிருப்பாளர்களை திரும்பிச் சென்று “எச்சரிக்கையுடன்” இருக்குமாறு பரிந்துரைக்கிறது.
தொழிலாளர்களுடன் பேசிய சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள், ஏனைய தொழிலாளர்களுடன் ஒன்றுபட்டு பாதுகாப்பான, பொருத்தமான வீட்டுவசதிக்காக போராடுவதற்கு சுயாதீன நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும் என விளக்கினர். சுமார் 15 தொழிலாளர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
பாதுகாப்பான மற்றும் வசிப்பதற்கு தகுந்த வீடுகள் வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையாகும். எனினும் அரசாங்கமும் தோட்டக் கம்பனிகளும் இந்த அடிப்படைக் கோரிக்கைக்கு எதிராகவே இருந்து வந்துள்ளன. டிட்வா புயலினால் 25 மாவட்டங்களில் ஏற்பட்ட அழிவின் தாக்கத்தினால் மீண்டும் இந்தப் பிரச்சனை முன்னுக்கு வந்துள்ளது.
உத்தியோகப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, 639 பேர் உயிரிழந்துள்ளடன் 213 பேர் காணாமல் போயுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்—சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். சுமார் 6,000 வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன; 100,000 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் மீளமைப்புக்கு உதவி வழங்குவதாக வாக்குறுதி அளித்தாலும், பல தொழிலாளர்கள் அதை நம்பவில்லை. இந்த ஆட்சி தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் மீறி, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளின் படி சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தி வருகிறது.
பெரும் தோட்ட மாவட்டங்களில், அரசாங்கத்திற்கும் கம்பனிகளுக்கும் எதிராக தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவதை தடுப்பதில் தொழிற்சங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிலத்திற்கும் வீட்டுக்குமான தொழிற்சங்கங்களின் கோரிக்கை போலியானது மட்டுமன்றி சுரண்டலை அதிகரிப்பதற்காக பெருந்தோட்டக் கம்பனிகளால் முன்மொழியப்பட்ட புதிய முறைமையான வருமானப் பங்கீடு முறையை அமுல்படுத்துவதுடன் பிணைக்கப்பட்டதாகும்.
இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்ட தேயிலை செடிகளை பராமரிக்க வேண்டும். அதற்கான மூலப் பொருட்களை கம்பனி வழங்கினாலும் விற்பனைக்குப் பின்னர் கம்பெனி அதன் செலவு மற்றும் இலாபத்தை கழித்துக்கொண்டு எஞ்சிய மிகக் குறைவான தொகையை தொழிலாளர்களுக்கு கொடுக்கும். இது ஒரு புதிய குத்தகைய விவசாய முறையாகும். இதனை தொழிலாளர்கள் எதிர்க்கின்றபோதும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவுடன் இது ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
பாதுகாப்பான இடத்தில் நிரந்தர வீடுகளுக்காக மீண்டும் மீண்டும் விடுக்கப்படும் கோரிக்கைகளை அனுரகுமார திசாநாயக அரசாங்கமும், தோட்ட நிர்வாகமும் உள்ளூர் அதிகாரிகளும் புறக்கணித்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த பேரிடரை மனித பேரழிவாக அன்றி, ஒரு தங்குமிட இடையூறாகவே பார்க்கின்றனர்.
இந்த பேரழிவு, தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து விலகி, ஒவ்வொரு தோட்டத்திலும் வேலைத் தளத்திலும் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டிய தேவையை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறது. ஜனநாயக ரீதியான கலந்துரையாடல் ஊடாக, அரசாங்கத்திற்கும் கம்பனிக்கும் எதிராக வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்கள் மற்றும் மறியல் போராட்டங்கள் ஊடாக, தோட்டத் தொழிலாளர்களை ,பரந்த தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்தும் போராட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
ஒழுக்கமான வீட்டுவசதிக்கான போராட்டம், ஓய்வூதியத்துடன் கூடிய மாத ஊதியம், உத்தரவாதமான விடுமுறை மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கான மருத்துவ சலுகைகளுக்கான பரந்த போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
இது, பெருந்தோட்டங்களையும், பெரிய நிறுவனங்களையும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கி, தொழிலாளர்–விவசாய அரசாங்கத்தை உருவாக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கில் ஆயுதபாணியாக்கி தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே, இந்த பேரழிவிற்கு வழிவகுத்த நிலைமைகளை சமாளிக்க முடியும். சோசலிச சமத்துவக் கட்சி தோட்டத் தொழிலாளர்கள் இந்தப் பாதையை எடுக்க அழைப்பு விடுப்பதுடன் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவதற்கும் சிக்கன நடவடிக்கைகள், அடக்குமுறை மற்றும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு உதவுவதாக உறுதியளிக்கிறது.
மேலும் படிக்க
- இலங்கை மற்றும் ஆசியாவில் பாரிய வெள்ளத்தால் ஏற்பட்ட மனிதப் பேரழிவு: எப்படி நடந்தது?
- இலங்கை: மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தில் டிட்வா சூறாவளியில் இருந்து தப்பியவர்கள் நிரந்தர வீடுகளைக் கோருவதோடு தோட்ட நிர்வாகத்தைக் கண்டிக்கின்றனர்.
- இலங்கையில் ஒரே வாரத்தில் 2 தொழிலாளர்கள் தொழில்துறை விபத்துக்களில் உயிரிழந்தனர்
