வாஷிங்டன் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கு தயாராகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜூலை 2022-இல் நடைபெற்ற பசிபிக் விளிம்பு நாடுகளின் கூட்டுப் கடற்படைப் பயிற்சியின் போது அணிவகுப்பில் இருந்தவாறு, தற்போது ஈரான் அருகே நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பல். [Photo: Canadian Armed Forces photo by Cpl. Djalma Vuong-De Ramos]

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் தயார் நிலையில் உள்ளது. பல வாரங்களாக போர்க்கப்பல்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் துருப்புக்களை இப்பகுதியில் பெருமளவில் நிலைநிறுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட நாடாகவும், பல தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வரும் நாடாகவும் இருக்கும் ஈரானுக்கு எதிராக அணிவகுத்துள்ள படைகளில் பின்வருவன அடங்குகின்றன:

  • தற்போது ஈரானின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் அரபிக் கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் தலைமையில் ஒரு பிரம்மாண்டமான கடற்படை திரட்டப்பட்டுள்ளது. இதில் டோமாஹாக் க்ரூஸ் நெடுந்தூர இலக்கு ஏவுகணைகள், F-35 மற்றும் F-18 போர் விமானங்கள் மற்றும் EA18 குரோலர் மின்னணு போர் விமானங்கள் நிரம்பியுள்ளன.
  • மூலோபாய ரீதியாக மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு நாசகாரி கப்பல்களும், கத்தார் கடற்கரைக்கு வடக்கே மேலும் மூன்று போர்க் கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
  • பிராந்தியம் முழுவதிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட பலத்த ஆயுதமேந்திய தளங்களில், கூடுதல் போர் விமானங்கள், உளவு விமானங்கள், வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் 40,000ம் துருப்புக்கள் தயார் நிலையில் உள்ளன.
  • அநேகமாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களும் இதில் அடங்கும். (பென்டகனின் அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் படை எங்கிருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.)

அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளும் போருக்குத் தயாராகி வருகின்றன. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது சட்டவிரோத மற்றும் தூண்டுதலற்ற 12 நாள் போரை நடத்திய இஸ்ரேல், தனது இராணுவப் படைகளை “உயர்ந்தபட்ச தயார் நிலையில்” வைத்துள்ளது. கடந்த வார இறுதியில் இருந்து, பிரிட்டன் தனது ஆறு F-35 ஸ்டெல்த் போர் விமானங்களை சைப்ரஸில் நிலை நிறுத்தியுள்ளது. இவை ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் டைபூன் போர் விமானக் குழுக்களுடன் இணைந்துள்ளன.

ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் தீக்கிரையாக்கும் விளிம்பில் ட்ரம்ப் நிர்வாகம் இருக்கும் நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது திட்டமிட்ட வாஷிங்டன் பயணத்தை ஒரு வாரம் முன்னதாக மாற்றியுள்ளார். ஈரானை அடிமைப்படுத்துவதற்கான தங்களின் கூட்டுத் திட்டம் குறித்து விவாதிக்க அவர் இந்த புதன்கிழமை ட்ரம்பைச் சந்திப்பார். “பாலிஸ்டிக் ஏவுகணைகள் தொடர்பாக நாங்கள் நிர்ணயித்த சிவப்புக் கோட்டை ஈரான் தாண்டினால், நாங்கள் தனித்தே தாக்குவோம் என்று நெதன்யாகு அமெரிக்கர்களிடம் கூறுவார்” என்று உயர் மட்ட இஸ்ரேலிய ஆதாரங்கள் தெரிவித்ததாக ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசாங்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியர்கள் சொத்துக்களை வாங்குவதற்கும் குடியேற்றங்களை அமைப்பதற்கும் வசதியாக சட்ட மாற்றங்களைக் கொண்டு வந்தது. இது “பாலஸ்தீன அரசு என்ற கருத்தையே கொல்வதற்காக” எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அவரது பாசிச நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் பெருமையாகக் கூறிக்கொண்டார்.

இராணுவக் குவிப்பு மற்றும் நசுக்கும் பொருளாதாரத் தடைகளை மேலும் கடுமையாக்குவதற்கான வாஷிங்டனின் நடவடிக்கைகள் ஆகியவை, ஈரானை அடிபணியச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பலமுனை உத்திகளின் முக்கிய கூறுகளாகும். ஈரானின் எரிசக்தி வளங்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சேவைக்கு உட்படுத்துவதும், சீனா மற்றும் ரஷ்யாவுடனான தெஹ்ரானின் மூலோபாய உறவுகளைத் துண்டிப்பதும் இதன் குறிக்கோளாகும்.

கடந்த ஆண்டு பிற்பகுதியிலிருந்து, அமெரிக்காவின் பாசிச, சர்வாதிகார எண்ணம் கொண்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் சிவில் அணுசக்தி திட்டத்தை ஒழிப்பது முதல், ஈரான் அரசின் ஒடுக்குமுறையிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை “பாதுகாப்பது” வரை பல்வேறு சாக்குபோக்குகளை கூறி ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலா மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்தி, அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்தி, அந்நாட்டின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றியதாக அறிவிப்பதற்கு முன்பு பயன்படுத்திய படைகளை விட, தற்போது ஈரானை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க கடற்படை மிகப் பெரியது என்று ட்ரம்ப் பெருமையடித்துக் கொண்டுள்ளார்.

எட்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலை விட, தற்போதைய தாக்குதல் மிகப் பெரியதாகவும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்று ட்ரம்ப் சபதம் செய்துள்ளார். அந்த முந்தைய தாக்குதலில் 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் ஆவர். ஜூன் 2025 போரின் போது இஸ்ரேல் நடத்தியதை விட பெரிய அளவிலான ஒரு “தலைமை அழிப்புத் தாக்குதலை” அமெரிக்காவின் இரண்டாவது தாக்குதல் கொண்டிருக்கக்கூடும் என்றும், அது ஈரானின் 86 வயதுடைய உச்ச தலைவர் அயதுல்லா கொமேனியை இலக்கு வைக்கக்கூடும் என்றும் ட்ரம்பும் அவரது உதவியாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதப் போரைத் தொடர்ந்து அது செய்ததைப் போலவே, ஈரானின் நெருக்கடி நிறைந்த, ஷியா மதகுருமார்கள் தலைமையிலான முதலாளித்துவ தேசியவாத ஆட்சி, தீவிரமடைந்து வரும் இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக, பேச்சுவார்த்தை நடத்துமாறு ட்ரம்ப் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்கு ஈடாக, தனது சிவில் அணுசக்தி திட்டத்தில் முக்கிய சலுகைகளை வழங்கத் தயாராக இருப்பதாக தெஹ்ரான் தெரிவித்துள்ளது. இந்தச் சலுகைகளின்படி, ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாட்டின் வெளியே அனுப்புவது மற்றும் அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) கீழ் ஈரானின் இறையாண்மை உரிமையை நிலைநாட்டும் வகையில் மிகக்குறைந்த அளவிலான சிவில் அணுசக்தி திட்டத்தை மட்டும் பராமரிப்பது ஆகியவையும் இதில் அடங்கும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், வாஷிங்டன் தனது கோரிக்கைகளைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரானிய இஸ்லாமியக் குடியரசு கடுமையாக பலவீனமடைந்துள்ளது என்று அது கணக்கிடுகிறது.

ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் உதவியுடன், ஈரானியப் பொருளாதாரத்தைச் சிதைப்பதில் வாஷிங்டன் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது. இது ஏகாதிபத்தியத்துடனான மோதலின் சுமையை ஈரானிய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதால், மக்கள் மத்தியில் பெரும் வறுமையையும் ஆட்சிக்கு எதிரான கோபத்தையும் தூண்டியுள்ளது.

கடந்த டிசம்பர் இறுதி முதல் ஜனவரி நடுப்பகுதி வரை ஈரானை உலுக்கிய போராட்டங்களில், அமெரிக்க ஆதரவு பெற்ற இரத்தக் கறை படிந்த பஹ்லவி (Pahlavi) முடியாட்சியை மீண்டும் கொண்டு வரக் கோரும் வலதுசாரி மற்றும் குட்டி-முதலாளித்துவ சக்திகள் அதிகரித்தளவில் மேலாதிக்கம் செலுத்தின. இருப்பினும், அரசு ஒடுக்குமுறையின் அளவு, அதன் தன்னிச்சையான போக்கு, உலகத்துடனான இணையத் தொடர்பை தெஹ்ரான் இன்னும் மீட்டெடுக்காத நிலை மற்றும் தொடரும் பாரிய கைது நடவடிக்கைகள் ஆகியவை, அந்த ஆட்சி சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதையும், மக்கள் ஆதரவு தொடர்ந்து குறைந்து வருவதையுமே காட்டுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேல்/பாலஸ்தீனம் உள்ளிட்ட பிராந்தியங்களில் ஈரானின் நட்பு நாடுகள் சந்தித்த பின்னடைவுகள் ஈரானின் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. அக்டோபர் 2023 முதல், வாஷிங்டனும் அதன் தாக்குதல் நாயான இஸ்ரேலும், ஆக்கிரமிப்பு, போர் மற்றும் காஸாவில் நேரடி இனப்படுகொலை ஆகியவற்றின் மூலம், தடையற்ற அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் ஒரு “புதிய மத்திய கிழக்கை” உருவாக்கும் முயற்சியை வியத்தகு முறையில் தீவிரப்படுத்தியுள்ளன.

அமெரிக்க இராணுவம் ஈரானைச் சூழ்ந்துகொண்டு போருக்குத் தயாராகி வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தெஹ்ரானுடன் தொடங்கப்பட்ட “பேச்சுவார்த்தைகள்” வாஷிங்டனைப் பொறுத்தவரை ஒரு உளவு பார்க்கும் நடவடிக்கையே ஆகும். இவை ஈரானிடம் இருந்து சலுகைகளை மிரட்டிப் பெறுவதையும், இஸ்லாமியக் குடியரசின் அரசியல் மற்றும் இராணுவப் பாதுகாப்புப் படைகளுக்குள் இருக்கும் பிளவுகளைத் தூண்டிவிட்டு அதைப் பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் போருக்குச் செல்வதற்கான ஒரு மூடிமறைப்பாகவும் செயல்படக்கூடும். கடந்த ஜூன் மாதம், இஸ்ரேலியத் தாக்குதலுக்கு ஏற்கனவே பச்சைக்கொடி காட்டிய பிறகும், தான் பேச்சுவார்த்தைகளில் ஆர்வம் காட்டுவதாக ஈரானியர்களை ட்ரம்ப் நம்ப வைத்தார்.

ஈரானின் வற்புறுத்தலின் பேரில், அமெரிக்கா/நேட்டோ நட்பு நாடான துருக்கியில் நடத்தப்படாமல், ஓமானின் மஸ்கட் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் “மிகவும் சிறப்பாக” இருந்ததாக ட்ரம்ப் கூறினார். “ஈரான் எப்படியாவது ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள விரும்புவது போல் தெரிகிறது” என்றும் அவர் கூறினார். இந்த வாரம் மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அதே நாளில், வாஷிங்டன் ஒருதலைப்பட்சமாக விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறி ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் மீது இறக்குமதி வரி விதிப்பதற்கான நிர்வாக ஆணையில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். ஈரானியப் பொருளாதாரத்தின் உயிர்நாடியான எண்ணெய் ஏற்றுமதியை மேலும் முடக்கும் நோக்கில், ஈரானிய எண்ணெயைக் கடத்துவதில் தொடர்புடையதாகக் கூறப்படும் கப்பல் நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீது அவர் கூடுதல் தடைகளை விதித்தார்.

அனைத்திற்கும் மேலாக, ஈரான் மீதான இராணுவத் தாக்குதல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்பதற்கான சமிக்ஞைகளை ட்ரம்பும் அவரது நிர்வாகமும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

தெஹ்ரானுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் எந்த வகையிலும் இராணுவத் தாக்குதல் அச்சுறுத்தலில் இருந்து பின்வாங்குவதைக் குறிக்காது என்று வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் கடந்த வியாழக்கிழமை வலியுறுத்தினார். “இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், நான் ஈரானிய ஆட்சிக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்,” என்று கூறிய லெவிட், “உலகின் சக்திவாய்ந்த இராணுவத்தின் தலைமைத் தளபதி என்ற முறையில், ஜனாதிபதியிடம் இராஜதந்திரத்தைத் தாண்டி பல விருப்பத் தேர்வுகள் கைவசம் உள்ளன” என்றார்.

இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், ஓமானில் ட்ரம்பின் முக்கிய பேச்சுவார்த்தையாளர்களான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அடுத்த நாளே ‘யுஎஸ்எஸ் லிங்கன்’ கப்பலுக்குச் சென்றனர். அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகத்தின் தலைவர் அட்மிரல் பிராட் கூப்பரின் அழைப்பின் பேரில் அவர்கள் அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைப் (இதை முற்றிலும் முடக்கப்போவதாக ட்ரம்ப் சபதம் செய்துள்ளார்) பற்றி மட்டுமே இருந்தபோதிலும், அவரது நிர்வாகம் ஒரு தொடர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இக்கோரிக்கைகள் ஈரானை ஒருதலைப்பட்சமாக நிராயுதபாணியாக்குவதோடு, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அச்சுறுத்தல்களுக்கு முன்னால் அந்த நாட்டை தற்காப்பற்றதாகவும், சக்தியற்றதாகவும் மாற்றும். அக்கோரிக்கைகளில் முதன்மையானவை: ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஏமனின் ஹவுதிகள் மற்றும் “எதிர்ப்பு அச்சு” என்று அழைக்கப்படும் பிற நட்பு நாடுகளுக்கான அனைத்து ஆதரவுகளையும் நிறுத்துதல், மற்றும் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திறனை பாரியளவில் குறைத்தல், இதில் இஸ்ரேலைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை ஈரான் வைத்திருப்பதற்கு சட்டப்பூர்வத் தடை விதிப்பதும் அடங்கும்.

நிலைமையைச் சாதகமாகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கும் தெஹ்ரான், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவு நேர்மறையானது என்று கூறுவதில் ட்ரம்புடன் இணைந்துள்ளது. இது குறித்து ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்சி ஈரானிய அரசுத் தொலைக்காட்சியிடம் கூறுகையில், “பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதில் ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது. ... இந்த செயல்முறை தொடர்ந்தால், ஒரு புரிந்துணர்விற்கான நல்லதொரு கட்டமைப்பை நாம் எட்டுவோம் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த ஒரு “பிராந்திய இராஜதந்திரி” அளித்த தகவலின்படி, “தனது அணுசக்தித் திட்டத்தை பெருமளவில் குறைப்பதற்கும், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) வழக்கமான ஆய்வுகளை மீண்டும் அனுமதிப்பதற்கும் ஈடாக, வங்கி மற்றும் எண்ணெய் வர்த்தகம் உள்ளிட்ட உடனடி பொருளாதாரத் தடை நீக்கம் மற்றும் ஈரானுக்கு அருகிலுள்ள அமெரிக்க இராணுவத் தளவாடங்களை அப்புறப்படுத்துதல்” ஆகியவற்றை ஈரான் கோரியுள்ளதாகத் தெரிகிறது.

பகிரங்கமாக, எந்தவொரு பேச்சுவார்த்தையும் தனது அணுசக்தித் திட்டத்துடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று ஈரானிய ஆட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டால், பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் அது சூசகமாகத் தெரிவித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பிரதிநிதித்துவப்படுத்தும் ஈரானிய ஆட்சியின் ஒரு முக்கிய பிரிவினர், பல தசாப்தங்களாக ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் வாஷிங்டனுடன் சமரச உறவை ஏற்படுத்தவும், ஈரானியப் பொருளாதாரத்தை மேற்கத்திய முதலீட்டிற்குத் திறக்கவும் பரிந்துரைத்து வருகின்றனர். “கடும்போக்குடைய” கொள்கைவாதி பிரிவினரும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமையும் இதனைப் பொதுவாக எதிர்த்து வருகின்றனர். அதற்குப் பதிலாக சீனா மற்றும் ரஷ்யாவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். உச்ச தலைவர் அயதுல்லா கொமேனி இந்த இரு பிரிவினருக்கும் இடையில் சமநிலையைப் பேண முயற்சி செய்து வருகிறார்.

எவ்வாறிருப்பினும், வாஷிங்டன் தெஹ்ரானின் சமரச முயற்சிகளை மீண்டும் மீண்டும் நிராகரித்து வருகிறது. ஈரானில் ஷா மன்னரின் கொடுங்கோல் முடியாட்சி வீழ்ந்ததை அமெரிக்காவால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார வலிமை மற்றும் உலகளாவிய நிலைப்பாடு சரிந்து வருவது, அதனை மேலும் ஆக்ரோஷமடையச் செய்துள்ளது. ஈரானிய வளங்களைச் சூறையாடவும், தனது எதிரிகளை மூலோபாய ரீதியாக பலவீனப்படுத்தவும், ஈரானிய மக்களை மீண்டும் ஒரு புதிய காலனித்துவ அடிமைத்தனத்திற்குள் தள்ளவும் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. சீனாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக ஈரான் உள்ளதுடன், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை சீனாவையே சென்றடைகின்றன.

அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவக் குவிப்புக்கு மத்தியில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், கடந்த ஆண்டை விட மிகவும் வித்தியாசமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று தெஹ்ரான் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா பகிரங்கமாகப் போரில் இணைந்து, உலகின் மிகவும் சக்திவாய்ந்த அணுக்கரு அல்லாத குண்டைக் (Non-nuclear bomb) கொண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கியபோது, தெஹ்ரான் ஒரு அடையாளமான பதிலடித் தாக்குதலை மட்டுமே நடத்தியது. அதையும் வாஷிங்டனுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டது. திட்டமிட்டபடியே, அந்தத் தாக்குதலில் உயிர்ச் சேதமோ அல்லது கணிசமான சேதமோ ஏற்படவில்லை.

வாஷிங்டனின் பிராந்திய நட்பு நாடுகள் பலவும், ஒரு பிராந்தியப் போர் வெடிக்குமோ என்றும், அது தங்கள் பொருளாதாரங்கள் மற்றும் அதிருப்தியில் உள்ள மக்கள் தொகையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் அச்சம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா-ஈரான் போர் என்பது பிராந்திய சக்திகளை மட்டுமல்லாது, வல்லரசுகளையும் உள்ளே இழுக்கக்கூடும் என்பது வெளிப்படையாகச் சொல்லப்படாத ஒரு செய்தியாக உள்ளது. ஏனெனில், இது உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி பிராந்தியமாகவும், ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் இணைப்பு மையமாகவும் திகழும் மத்திய கிழக்கை மறுபங்கீடு செய்வதற்கான அமெரிக்கத் தலைமையிலான முயற்சியின் ஒரு முக்கிய புதிய கட்டத்தைக் குறிக்கும்.

Loading