“இராணுவப் பெருமை — இரத்த மழையில் உதிக்கும் கவர்ச்சிகரமான வானவில்”

மெக்சிகோ-அமெரிக்கப் போரின் வரலாற்றை ட்ரம்ப் பொய்யாக்குகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்க அச்சு ஓவியக் கலைஞர் நதானியேல் குரியர் வரைந்த இந்த கல்லச்சு ஓவியம், மெக்சிகன் போரின் போது, மார்ச் 9, 1847 அன்று, ஜெனரல் ஸ்காட் தலைமையிலான அமெரிக்கப் படைகள் வேரா குரூஸில் தரையிறங்கியதைச் சித்தரிக்கிறது. [AP Photo]

“அமெரிக்கா 250” என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை கடந்த செவ்வாயன்று, “மெக்சிகன்-அமெரிக்கப் போரில் எமது வெற்றி” என்று நினைவுகூர்ந்து ஜனாதிபதியின் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இந்த அறிக்கை, 1846-48 காலகட்ட மோதலை, ஒரு அப்பாவி அமெரிக்கா மீது மெக்சிகோவால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட ஒரு தற்காப்புப் போராகச் சித்தரிக்கிறது. மேலும் இது, இந்தக் கண்டத்தை மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்ற “ஒவ்வொரு அமெரிக்க இதயத்திலும் துடித்துக்கொண்டிருந்த தெய்வீகக் கட்டளையின்” புனிதமான பணியை நிறைவேற்றிய ஒரு “புராண காலத்து” வெற்றியாகவும் இதை வர்ணிக்கிறது.

மெக்சிகோ நகரத்தைக் கைப்பற்றியதையும், அண்டை நாட்டின் நிலப்பரப்பில் பாதியை அபகரித்ததையும், ஓர்வெல்லியன் பாணியில் (உண்மையைத் தலைகீழாக மாற்றிச் சொல்லும் முறை) “அமெரிக்க இறையாண்மையின்” வெற்றியாக அது கொண்டாடுகிறது. மேலும், “மெக்சிகோவின் போர்க் களங்களில்” தொடங்கி இன்றைய இராணுவமயமாக்கப்பட்ட எல்லை மற்றும் 21-ஆம் நூற்றாண்டிற்காக மீண்டும் ஆயுதம் ஏந்திய, இரத்தத்தில் தோய்ந்த “மன்றோ கோட்பாடு” வரை, இது ஒரு நேரடித் தொடர்பை ஏற்படுத்துகிறது. இதன் மூலம், ட்ரம்ப் நிர்வாகம் 21-ஆம் நூற்றாண்டின் குற்றங்களை ஆயத்தப்படுத்த 19-ஆம் நூற்றாண்டின் குற்றங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.

வெள்ளை மாளிகையின் அறிக்கையில், போர் ஏன் தொடங்கப்பட்டது, அது யாருடைய நலன்களுக்காகச் செயல்பட்டது மற்றும் அதைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பது குறித்த எந்தவொரு உண்மையான விளக்கமும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த அனுபவத்தின் மிக அடிப்படையான பாடத்தை இந்த அறிக்கை புறக்கணிக்கிறது: “அடிமை முறைக்கான ஒரு சாம்ராஜ்யத்தை” கட்டியெழுப்ப மெக்சிகோவிற்கு எதிராக நடத்தப்பட்ட இந்த கொள்ளையடிக்கும் போர், நேரடியாக உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்றது. அந்த உள்நாட்டுப் போர் ஒரு மாபெரும் சமூகப் புரட்சியாக மாறி, மெக்சிகன்-அமெரிக்கப் போர் எதைத் தக்கவைக்கப் போராடியதோ, அதே அடிமை முறையை ஒழித்துக்கட்டியது.

ஆக்கிரமிப்புப் போர்களைத் திட்டமிடுபவர்கள், தங்கள் செயல்களின் புரட்சிகர விளைவுகளை ஒருபோதும் ஊகிப்பதில்லை என்பது ஒரு வரலாற்றுப் பொன்மொழி. 1840-களில் மெக்சிகோவின் நிலப்பரப்பில் பாதியை அபகரிக்கத் திட்டமிட்ட ஜனாதிபதி ஜேம்ஸ் கே. போல்க் (1845-1849) மற்றும் அடிமை முறையைப் போற்றிப் புகழ்ந்த மேட்டுக்குடியினரின் விஷயத்திலும் இதுதான் நடந்தது. இன்று, அமெரிக்க அதிகாரத்தை இந்த அரைக்கோளம் (hemisphere) மற்றும் உலகம் முழுவதும் இன்னும் ஆக்ரோஷமாக விரிவாக்க முயலும் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளும் அதே போன்ற சமூக மற்றும் அரசியல் வெடிப்புகளை கட்டவிழ்த்து விடுகின்றன. புதிய ஆக்கிரமிப்புப் போர்களை நியாயப்படுத்த வரலாற்றைப் பொய்யாக்கும் இந்தச் சதிகாரர்களின் திட்டப்படி இந்த விளைவுகள் அமையப்போவதில்லை.

வெள்ளை மாளிகையின் இந்த அறிவிப்பில் உள்ள ஆக்ரோஷத்திற்கு இணையாக அதன் அறியாமையும் உள்ளது. வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளத் தவறியவர்கள் அதனை மீண்டும் அனுபவிக்க நேரிடும் என்ற பழக்கமான எச்சரிக்கை இங்கே மிகுந்த வலிமையுடன் பொருந்துகிறது. ட்ரம்ப், எல்லா அளவுகோல்களின்படியும், அமெரிக்க வரலாற்றிலேயே வரலாறு குறித்த அறிவற்ற ஒரு ஜனாதிபதி ஆவார். அவரது முந்தைய அறிக்கைகள் வரலாற்றின் அடிப்படைக் காலவரிசையைக் கூட அவர் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன. அவரைச் சுற்றியுள்ள பாசிச சித்தாந்தவாதிகள் மற்றும் அடிவருடிச் சொம்புகளின் கூட்டம் அவரை விட அறிவாற்றல் மிக்கது என்று கருதுவதற்கும் எந்தக் காரணமும் இல்லை. அமெரிக்கா 250 அறிக்கை, இந்த மாபெரும் அறிவுசார் வெற்றிடத்தின் அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளது.

மெக்சிகன்-அமெரிக்கப் போரின் தோற்றம் சிக்கலானது. அதில் இரு நாடுகளின் அரசியல் வரலாறுகளும் அடங்கியுள்ளன. ஆனால், அதன் அடிப்படை தர்க்கத்தை எளிமையாகக் கூறிவிடலாம். ட்ரம்ப் கூறுவது போல, இது அமெரிக்காவிற்கு எதிராக மெக்சிகோ நடத்திய ஆக்கிரமிப்பு போர் அல்ல. மாறாக, அமெரிக்க அடிமை முறையை மெக்சிகோவிற்குள் விரிவாக்கம் செய்ததே இதன் அடிப்படை தர்க்கமாகும்.

1840-களுக்கு முன்னரே, ஆங்கிலோ-அமெரிக்க அடிமை உரிமையாளர்கள் அப்போதைய தேஜாஸ் என்று அழைக்கப்பட்ட டெக்சாஸ் பகுதிக்குள் பெருமளவில் புகுந்தனர். 1829-லேயே அடிமை முறையை ஒழித்துவிட்ட மெக்சிகோவிற்குள், தங்கள் பருத்திப் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. 1836-ல், அங்கிருந்த ஆங்கிலோ அடிமை முறை உயரடுக்கினர் தங்களுக்குச் சுதந்திரம் அறிவித்துக் கொண்டனர். அந்த நேரத்தில் மெக்சிகோவின் மத்திய அரசு யுக்கடான் (Yucatan) போன்ற தொலைதூரப் பகுதிகளில் நிலவிய கடுமையான உள்நாட்டுப் பூசல்கள் மற்றும் கிளர்ச்சிகளால் பலவீனப்பட்டிருந்தது. இதைப் பயன்படுத்தி, அன்டோனியோ லோபஸ் டி சாண்டா அன்னா தலைமையிலான மெக்சிகோ அரசு டெக்சாஸை மீண்டும் கைப்பற்ற எடுத்த முயற்சிகளை அவர்கள் முறியடித்தனர். குடியேறியவர்களின் இந்த வெற்றி, குறுகிய காலமே நீடித்த டெக்சாஸ் குடியரசை உருவாக்கியது.

இந்த நிகழ்வுகளின் போக்கைப் பற்றி சமகாலத்தவர்கள் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்கவில்லை. டெக்சாஸ் அமெரிக்காவுடன் இணைக்கப்படுவது உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. போல்க் நிர்வாகத்தின் முதல் ஆண்டிலேயே இது நிறைவேற்றப்பட்டது. இந்த இணைப்பானது, மெக்சிகன் அதிகாரத்திற்கு எதிராக அடிமை உரிமையாளர்கள் நடத்திய கிளர்ச்சியை நடைமுறையில் அங்கீகரித்து பாதுகாப்பதாக அமைந்தது. ஆனால் டெக்சாஸை இணைத்த பிறகு, அந்த வெற்றியப் பாதுகாக்கவும், மேற்கே விரிவாக்கம் செய்யவும் மெக்சிகோவிற்கு எதிரான ஒரு போர் மட்டுமே ஒரே வழியாக மாறியது.

1846-ஆம் ஆண்டின் அமெரிக்க வரைபடம்: டெக்சாஸ் இணைப்பையும், ரியோ கிராண்டே மற்றும் நியூசஸ் ஆற்றுக்கு இடைப்பட்ட சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியையும் காட்டுகிறது.

இந்தக் குறிக்கோளை மனதில் கொண்டுதான், நியூசஸ் ஆறு மற்றும் ரியோ கிராண்டே ஆற்றுக்கு இடைப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதிக்குள் - அதாவது மெக்சிகோ இன்னும் உரிமை கொண்டாடிய பகுதிக்குள் - ஜெனரல் சக்கரி டெய்லர் தலைமையிலான அமெரிக்கப் படைகளை நுழையுமாறு போல்க் உத்தரவிட்டார். இது துல்லியமாக ஒரு மோதலைத் தூண்டுவதற்காகவே செய்யப்பட்டது. தவிர்க்க முடியாத அந்த மோதல் நடந்தபோது (ட்ரம்பின் அறிக்கை இதனை ஒரு “பதுங்கியிருந்து நடத்திய தாக்குதல்” எனச் சித்தரிக்கிறது), போல்க் அதைப் போருக்கான கோரிக்கையாகப் பயன்படுத்திக்கொண்டார்.

“அமெரிக்க மண்ணில் அமெரிக்க இரத்தம் சிந்தப்பட்டுள்ளது” என்ற போல்கின் கூற்று, —இந்தக் கூற்றை ட்ரம்ப் ஒரு உண்மையான தகவல் போல மீண்டும் பயன்படுத்துகிறார்— அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் சிடுமூஞ்சத்தனமான காசஸ் பெல்லி (Casus belli - போருக்கான காரணம்) என்று வரலாற்றாசிரியர்களால் நீண்டகாலமாகக் கருதப்படுகிறது. இந்த வஞ்சகமான செயலை, அதன் மற்ற சமகாலப் போட்டிகளுடன் ஒப்பிடும்போதுதான் இதன் முழு அர்த்தம் புலப்படும்: குறிப்பாக, 1898-இல் ஸ்பெயினுடனான போரை நியாயப்படுத்தவும், புவேர்ட்டோ ரிகோ, கியூபா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றை அந்த நாட்டிடமிருந்து கைப்பற்றவும் யுஎஸ்எஸ் மெய்ன் (USS Maine) கப்பல் மூழ்கடிக்கப்பட்டதை மெக்கின்லி பயன்படுத்தியது; 1917-இல் ஜேர்மனிக்கு எதிரான முதல் உலகப் போரில் நுழைய சிம்மர்மேன் தந்திச் செய்தியை வில்சன் பயன்படுத்தியது; மற்றும் 1964-இல் வியட்நாமில் அமெரிக்கப் படைகளை பெருமளவில் விரிவுபடுத்த பொய்யான “டோன்கின் வளைகுடா சம்பவத்தை” லிண்டன் ஜோன்சன் பயன்படுத்தியது ஆகியவை அவை. அண்மைக்கால ஆண்டுகளில், ஈராக் மீது சுமத்தப்பட்ட “பேரழிவு ஆயுதங்கள்” (WMD) புகாரும், வெனிசுவேலா மீது சுமத்தப்பட்ட “போதைப்பொருள் பயங்கரவாதம்” குற்றச்சாட்டுகளும் இதற்கு உதாரணங்களாகும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பொருளாதார, அரசியல் மற்றும் மூலோபாய இலக்குகளைக் கொண்ட போர்களைத் தொடங்குவதற்கு, ஒரு புனையப்பட்ட அல்லது மிகைப்படுத்தப்பட்ட சாக்குப்போக்கே தூண்டுகோலாக செயல்பட்டது. அத்தகைய காரணங்கள் இல்லையென்றாலும் அந்தப் போர்கள் நிச்சயம் நடத்தப்பட்டிருக்கும்.

மெக்சிகோ-அமெரிக்கப் போரைப் பொறுத்தவரை, ஜனாதிபதி போல்க்கின் நடவடிக்கைகள் தெற்குப் பகுதி நில உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நிலத்தைக் கையகப்படுத்தும் உறுதியான எண்ணத்தின் விளைவாகவே இருந்தன. ஏனெனில், அடிமை முறை பிழைத்திருக்க வேண்டுமானால் அது விரிவடைய வேண்டும் என்பது பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. மேலும், அக்காலத்தில் அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள், நில விரிவாக்கத்தின் மூலம் ஏற்படும் தேசிய நாட்டுப்பற்று அலையானது, வெடிக்கக் காத்திருக்கும் “அடிமை முறை” என்ற சிக்கலான கேள்வியை மூழ்கடித்துவிடும் என்று நம்பினர்.

ஜேம்ஸ் கே. போல்க்

ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த ஊடகங்கள், இந்த விரிவாக்கவாதத்தை ஒரு அரை-மத மற்றும் இன ரீதியான போர்வையில் மூடிமறைக்கும் ஒரு சித்தாந்தத்தையே உருவாக்கியிருந்தன: அதுதான் “தெய்வீகச் சித்தம்”. 1845-ல் பத்திரிகையாளர் ஜோன் ஓ’சுல்லிவன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தச் சொல், செவ்விந்தியர்கள், மெக்சிகன்கள் மற்றும் கனேடியர்களின் இழப்பில் அமெரிக்கா விரிவடைவது என்பது கடவுளின் கட்டளை என்று முன்வைத்தது.

மெக்சிகோவிற்கு எதிரான போர் ஆரம்பத்தில் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது போலவே தோன்றியது. அமெரிக்கப் படைகள் மெக்சிகோவின் ஆயத்தமில்லாத இராணுவத்தைத் தோற்கடித்து, செப்டம்பர் 1847-ல் மெக்சிகோ நகரத்தைக் கைப்பற்றின—இந்த நிகழ்வையே ட்ரம்பின் பிரகடனம் கொண்டாடுகிறது. ஆனால், இராணுவ வரலாற்றின் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் கூட, அந்த வெற்றி அதன் துரதிர்ஷ்டவசமான விதியையே உணர்த்துகிறது. மெக்சிகோவிற்கு எதிராக இணைந்து பணியாற்றிய அதே அதிகாரிகள், அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு நடந்த உள்நாட்டுப் போரில் கூட்டமைப்பு (Confederate) மற்றும் யூனியன் இராணுவங்களை ஒன்றுக்கொன்று எதிராக வழிநடத்தினர். அவர்களில் பிரிவினைவாதிகளுக்காக ரொபர்ட் இ. லீ, தோமஸ் ஜே. “ஸ்டோன்வால்” ஜாக்சன் மற்றும் ஜேம்ஸ் லோங்ஸ்ட்ரீட் ஆகியோரும்; யூனியனுக்காக யூலிசஸ் எஸ். கிராண்ட், வில்லியம் டெகம்சே ஷெர்மன் மற்றும் வின்ஃபீல்ட் ஸ்கொட் ஹான்காக் ஆகியோரும் இருந்தனர்.

மார்க் டுவைனின் உதவியுடன் வெளிவந்த தனது முக்கியமான சுயசரிதையில் கிராண்ட் பின்னர் இதனை நினைவு கூர்ந்தார்...

என்னைப் பொறுத்தவரை, நான் அந்த நடவடிக்கையை (மெக்சிகோ உடனான போர்) கடுமையாக எதிர்த்தேன். ஒரு வலிமையான நாடு ஒரு பலவீனமான நாட்டிற்கு எதிராக நடத்திய போர்களிலேயே மிகவும் அநீதியானது இதுதான் என்று இன்றும் நான் கருதுகிறேன். கூடுதல் நிலப்பரப்பைக் கையகப்படுத்த வேண்டும் என்ற ஆசையில், நீதியைப் பொருட்படுத்தாமல் ஐரோப்பிய முடியாட்சிகளின் மோசமான முன்மாதிரியை ஒரு குடியரசு நாடு (அமெரிக்கா) பின்பற்றிய நிகழ்வு இதுவாகும்.

பின்னர் தனது நினைவுக் குறிப்புகளில், அவர் மெக்சிகோ போரை நேரடியாக உள்நாட்டுப் போரின் வருகையுடன் இணைத்து இவ்வாறு எழுதுகிறார்:

தெற்குப் பகுதியின் கிளர்ச்சியானது பெருமளவில் மெக்சிகோ போரின் விளைவாக உருவானதே ஆகும். தனி மனிதர்களைப் போலவே நாடுகளும் அவற்றின் தவறுகளுக்காகத் தண்டிக்கப்படுகின்றன. நவீன காலத்தின் மிகவும் இரத்தம் தோய்ந்த மற்றும் அதிகச் செலவு பிடித்த ஒரு போரின் மூலம் நாம் எமது தண்டனையைப் பெற்றோம்.

ஜனாதிபதி யுலிஸஸ் எஸ். கிராண்ட்

மெக்சிகோ போரைப் பற்றிய தேசபக்தி உற்சாகம் என்பது —அந்தப் போரை கிராண்ட் குறிப்பிட்டது போல ஒரு “கொடிய போர்” — அது நடந்த காலத்திலேயே மிகக் குறுகிய காலமே நீடித்தது. உண்மையில், போர் தொடங்குவதற்கு முன்பே, ஜனாதிபதி போல்க்கின் பேராசைகள் அமெரிக்க சமூகத்தில் விரிவடைந்து கொண்டிருந்த பிளவுகளை மேலும் ஆழமாக்கின. அமெரிக்க காங்கிரஸில் அடிமை முறைக்கு எதிரான மனுக்களை வாசிப்பதற்கிருந்த தடையான “வாய்ப்பூட்டுச் சட்டத்தை” இடைவிடாது எதிர்த்தவரும், 1840-ல் அமிஸ்டாட் கப்பலில் கிளர்ச்சி செய்த அடிமைப்படுத்தப்பட்ட ஆபிரிக்கர்களுக்காக வாதிட்ட வழக்கறிஞருமான முன்னாள் ஜனாதிபதி ஜோன் குவின்சி ஆடம்ஸ், போல்க் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார். பிப்ரவரி 21, 1848 அன்று, காங்கிரஸின் தளத்திலேயே ஆடம்ஸ் ஒரு கடுமையான பக்கவாதத்தால் சுருண்டு விழுந்தார். மெக்சிகோ வெற்றிக்கு தலைமை தாங்கிய தளபதிகளைப் பாராட்டுவதற்கு எதிராக அவர் அளித்த “இல்லை” என்ற வாக்குதான் அவரது கடைசி வார்த்தையாக அமைந்தது.

ஜோன் குவின்சி ஆடம்ஸ்

ஆடம்ஸுடன் ஒரு காலம் பதவியில் இருந்தவரும், அவரது இறுதிச் சடங்கில் சவப்பெட்டியைச் சுமந்தவருமான ஆபிரகாம் லிங்கனும் இந்தப் போரைக் கடுமையாக எதிர்த்தார். குறிப்பாக, அவரது புகழ்பெற்ற ஸ்பாட் தீர்மானங்களின் மூலம், அமெரிக்கப் படைகள் மீது மெக்சிகோ தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் அந்தத் குறிப்பிட்ட இடம் “எமது நிலம்தான்” என்பதை நிரூபிக்குமாறு போல்க் நிர்வாகத்திடம் அவர் கோரினார். வழக்கத்திற்கு மாறான கடுமையான சொற்களில் லிங்கன் குறிப்பிடுகையில், போல்க் “முற்றிலும் ஏமாற்று வேலை” செய்ததாகக் குற்றம் சாட்டினார். “ஆபேலின் இரத்தத்தைப் போலவே, இந்தப் போரின் இரத்தமும் அவருக்கு எதிராக வானத்தை நோக்கிக் கதறுகிறது” என்றார். பின்னர் மற்றொரு உரையில், ஒரு ஆக்கிரமிப்புப் போரை மறைக்கப் பயன்படும் ஒரு போதைப்பொருளாக ‘தேசியவாதத்தை’ லிங்கன் எச்சரித்தார். அந்தப் போரை அவர், “இரத்த மழையில் உதிக்கும் கவர்ச்சிகரமான வானவில்லே இராணுவப் பெருமை” என்று விவரித்தார்.

ஹென்றி டேவிட் தோரோ (தத்துவஞானி, இயற்கை ஆர்வலர் மற்றும் கவிஞர்) போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வரி செலுத்த மறுத்து சிறைக்கு சென்றார். அவர் கூறுகையில், “அனைத்து நேர்மையான மனிதர்களையும் சிறையில் அடைப்பது அல்லது போர் மற்றும் அடிமை முறையைக் கைவிடுவது—இவற்றுள் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் அரசாங்கம் தயங்காது” என்று முடிவுக்கு வந்தார். பிரெடெரிக் டக்ளஸ் (அமெரிக்க பேச்சாளர், அடிமை ஒழிப்பாளர்) தனது வழக்கமான நேரடியான பாணியில், இந்த மோதலை “அடிமை முறையை விரிவாக்கம் செய்வதற்கான போர்” என்று கண்டித்தார். இது சுதந்திரத்திற்காக அல்ல, அடிமைத்தனத்திற்காக; நீதிக்காக அல்ல, ஒடுக்குமுறைக்காக நடத்தப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார். ரொல்ப் வால்டோ எமர்சன் (ஒரு அமெரிக்க கட்டுரையாளர், தத்துவஞானி மற்றும் கவிஞர்) ஒரு எச்சரிக்கையை விடுத்தார்: “அமெரிக்கா மெக்சிகோவை வெல்லும், ஆனால் அது ஒருவன் ஆர்சனிக் நஞ்சை விழுங்குவதைப் போன்றது; அது அவனையே வீழ்த்தும். மெக்சிகோ நம்மை விஷமாக்கும்.”

எமர்சன் எதிர்பார்த்ததை விடவும் மிக விரைவாகவே அவரது தீர்க்கதரிசனம் பலித்தது. குவாடலூப் ஹிடால்கோ (Guadalupe Hidalgo) ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இது “சுதந்திர உழைப்பில்” நம்பிக்கை கொண்ட பல்லாயிரக்கணக்கான தங்கம் தேடுபவர்களையும், வணிகர்களையும் மற்றும் தொழில் முனைவோரையும் அங்கே ஈர்த்தது. 1850-ல் கலிபோர்னியா ஒரு சுதந்திர மாநிலமாக யூனியனில் இணைந்தது. இது பசிபிக் பெருங்கடல் வரை அடிமை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தெற்கு மாநிலங்களின் கனவைச் சிதறடித்தது.

கலிபோர்னியாவை இழந்த அதிர்ச்சியால், தெற்கிலிருந்த உயர் தட்டினர் (இதற்கிடையில், மெக்சிகோவிடமிருந்து கைப்பற்றப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் அடிமை முறையைத் தடுக்கத் தோல்வியுற்ற போதிலும் அதற்காக முயன்ற, பென்சில்வேனியாவின் டேவிட் வில்மோட் தலைமையிலான வடக்கத்திய ஜனநாயகக் கட்சியினரின் தாக்குதலும் இதில் அடங்கும்) இதற்குப் பரிகாரம் கோரினர். அவர்கள் 1850-ன் அவப்பெயர் பெற்ற “1850-ஆம் ஆண்டு சமரசம்” மூலம் அதனை அடைந்தனர். இந்தச் சமரசமானது, கலிபோர்னியாவை ஒரு மாநிலமாக இணைப்பதோடு சேர்த்து, மிகவும் கடுமையான “தப்பியோடிய அடிமைகளை பிடிக்கும் சட்டம்” உள்ளிட்ட பிற நடவடிக்கைகளையும் பிணைத்து வழங்கியது.

ஆபிரகாம் லிங்கன்

இந்த “சமரசம்” ஏற்கனவே பரவிக் கொண்டிருந்த நெருப்பில் எண்ணெயை ஊற்றியது. தப்பியோடிய அடிமைகளை பிடிக்கும் சட்டம், அடிமைப் பிடிப்பாளர்களின் தொழிலைத் தேசமயமாக்கியது. தப்பியோடியதாகக் கருதப்படும் நபர்களைக் கைது செய்ய உதவுமாறு வட மாநில அதிகாரிகளையும் குடிமக்களையும் அது கட்டாயப்படுத்தியது. இது மாசசூசெட்ஸ், விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள நகரங்களில் மக்களிடையே பெரும் எதிர்ப்பைத் தூண்டியது. வடக்கிலுள்ள நகரங்களில் விழிப்புணர்வுக் குழுக்கள் பரவி, தப்பியோடியவர்களுக்குப் புகலிடம் அளிக்கவும், அவர்களை மீண்டும் ஒப்படைப்பதைத் தடுக்கவும், கூட்டாட்சி அதிகாரத்தை பகிரங்கமாக எதிர்க்கவும் வலைப்பின்னல்களை உருவாக்கின.

அதன் முறைகளிலும் நோக்கங்களிலும், இந்தத் தப்பியோடிய அடிமைகளை பிடிக்கும் சட்டம், ட்ரம்பின் ICE (குடிவரவு அமலாக்கத் துறை) தேடுதல் சோதனைகள், நாடு கடத்துதல்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கான தடுப்பு முகாம்களுடன் வியக்கத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது—இவை இரண்டுமே ஒரு குறிப்பிட்ட இலக்கு வைக்கப்பட்ட மக்களை வேட்டையாடவும், அடிப்படை ஜனநாயக உரிமைகளைச் சிதைக்கவும் கூட்டாட்சி அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன. 1850-களில் அடிமை பிடிப்பாளர்களின் ஆட்சி எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பை உருவாக்கி உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்றதோ, அதேபோல் இன்றும் குடியேறியவர்கள் மீதான குற்றச்சாட்டு மற்றும் துன்புறுத்தலுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே மிகப்பெரிய அளவிலான எதிர்ப்பு வளர்ந்து வருகிறது.

சரியாக இந்த இடத்தில்தான், புலம்பெயர்ந்தவர்கள் குறித்த கேள்வி மெக்சிகோ-அமெரிக்கப் போரின் விரிவான வரலாற்றோடு மீண்டும் இணைகிறது. ட்ரம்ப் யாரை அந்நிய “ஊடுருவல்காரர்கள்” என்று இழிவுபடுத்துகிறாரோ, அவர்கள் கணிசமான அளவில், 1848-ல் வரையப்பட்ட புதிய எல்லைக் கோடுகளால் தங்களது நிலங்களும் சமூகங்களும் இரண்டாகப் பிரிக்கப்பட்ட மக்களின் வாரிசுகள் ஆவர்.

குவாடலூப் ஹிடால்கோ ஒப்பந்தம் இந்த பரந்த நிலப்பரப்பைக் கையகப்படுத்துவதை அதிகாரப்பூர்வமாக்கியது. இது கலிபோர்னியா, நெவாடா, உட்டா, அரிசோனா மற்றும் நியூ மெக்சிகோவின் பெரும்பகுதி மற்றும் கொலராடோ மற்றும் வயோமிங்கின் சில பகுதிகளை அமெரிக்காவிற்கு மாற்றியது. அதோடு டெக்சாஸின் முந்தைய இணைப்பையும் உறுதிப்படுத்தியது. இதற்கு முந்தைய எந்தவொரு அமெரிக்கப் போரும் இவ்வளவு பெரிய அளவிலான நிலப்பரப்பு ஆதாயங்களைத் தந்ததில்லை.

ஆனால் அந்தப் புதிய எல்லைக்கோடானது, நீண்ட கால அடிப்படையில் எதைப் பிரிக்க முடியாதோ அதைப் பிரிக்க முயன்றது: அதாவது ஒரு ஒருங்கிணைந்த பிராந்தியப் பொருளாதாரம் மற்றும் உழைப்பு, சமூகம் மற்றும் வணிகப் பிணைப்புகளால் பிணைக்கப்பட்ட மக்கள் தொகையை அது பிரிக்க நினைத்தது. 1848-ல், பல்லாயிரக்கணக்கான மெக்சிகோ குடிமக்களும் பழங்குடி அமெரிக்கர்களும் (Native Americans) அமெரிக்காவிற்குள் வெற்றி கொள்ளப்பட்ட சிறுபான்மையினராகத் திடீரென மாற்றப்பட்டனர். காலப்போக்கில், இன்னும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் அதே எல்லைக்கோட்டைத் தாண்டினர்—தனது வாழ்க்கையில் ஒரு நாள் கூட உழைத்திருக்காத ட்ரம்ப் கூறுவது போல, அவர்கள் படையெடுப்பாளர்களாக அல்ல, மாறாக அமெரிக்க முதலாளித்துவத்தின் இடைவிடாத தேவைகளால் வடக்கு நோக்கி ஈர்க்கப்பட்ட தொழிலாளர்களாக இருந்தனர்.

இன்று, 1840-களின் ஆக்கிரமிப்பின் முதன்மையான பரிசுகளான கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் ஆகியவை இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவோடு ஆழமாக இணைக்கப்பட்ட, பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட உழைக்கும் மக்களைக் கொண்ட பொருளாதார ஜாம்பவான்களாக உள்ளன. மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க தொழிலாளர்கள் அமெரிக்காவில் பிறந்த தொழிலாளர்களுடன் இணைந்து இந்த மாநிலங்களில் மட்டுமன்றி—இங்கு அவர்களும் அவர்களின் வாரிசுகளும் மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதமாக உள்ளனர். இவர்கள் ரியோ கிராண்டே நதி முதல் மினசோட்டாவின் பொதியிடும் ஆலைகள் மற்றும் வயல்வெளிகள் வரை நாடு முழுவதும் உழைத்து வாழ்கின்றனர். அவர்களை இலக்கு வைப்பதற்கான முயற்சி என்பது வரலாற்றையும் புறநிலை யதார்த்தத்தையும் மறுப்பதற்கான ஒரு அவநம்பிக்கையான முயற்சியாகும். மேலும் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகால பொருளாதார ஒருங்கிணைப்பின் மூலம் உருவான தொழிலாள வர்க்கத்தின் மீது தேசிய மற்றும் இனப் பிரிவினைகளை மீண்டும் திணிக்கும் முயற்சியாகும்.

ட்ரம்ப் மெக்சிகோ-அமெரிக்கப் போரைக் குறிப்பிடுவது என்பது வரலாற்றைத் தவறாகச் சித்தரிப்பது மட்டுமல்ல. சமூக முரண்பாடுகளைத் தேசியவாதம் மற்றும் போரின் மூலம் நசுக்க முயலும் ஒரு அரசியல் பாரம்பரியத்தை அது மீண்டும் உயிர்ப்பிக்கிறது. அந்தப் பரிசோதனையின் முடிவை வரலாறு பதிவு செய்துள்ளது: மெக்சிகோவிற்கு எதிரான போர் அமெரிக்க சமூகத்தை நிலைப்படுத்தவில்லை—மாறாக அது சமூகத்தைச் சிதைக்கவே உதவியது. அதே போன்ற பேரினவாதம் மற்றும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு முறைகளை இன்றும் கையாள்வது, வரவிருக்கும் கணக்குத் தீர்த்தலைத் தள்ளிப்போடாது, மாறாக அதை விரைவுபடுத்தவே செய்யும்.

Loading