மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13), 60-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள், சுமார் 100 வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், மற்றும் ஏராளமான உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை வல்லுநர்கள் 62-வது மூனிக் பாதுகாப்பு மாநாட்டிற்காக (MSC) ஒன்றுகூட உள்ளனர். அமெரிக்காவிலிருந்து மட்டும் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ஜனநாயகக் கட்சி ஆளுநர்களான கவின் நியூசம் (கலிபோர்னியா), கிரெட்சன் விட்மர் (மிச்சிகன்) ஆகியோர் இதில் கலந்துகொள்கின்றனர். அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்பின் உறுப்பினரும், போலி-இடது நாடாளுமன்ற உறுப்பினருமான அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸும் அமெரிக்க பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
இந்த மாநாடு அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான மோதல் குறித்து கவனம் செலுத்தும். மாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு வழக்கமாக வெளியிடப்படும் மூனிக் பாதுகாப்பு அறிக்கை, சர்வதேச ஒழுங்கை அழிப்பதாக ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளது. “அழிவின் கீழ்” என்ற தலைப்பில் அந்த அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:
உலகம் ஒரு அழிவுகரமான அரசியல் காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளது. கவனமான சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை திருத்தங்களுக்குப் பதிலாக, ஒட்டுமொத்தமான அழிவே இன்றைய நடைமுறையாக உள்ளது. நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறைகளின் கட்டுப்பாடுகளிலிருந்து தங்கள் நாட்டை விடுவித்து, மிகவும் வலிமையான, செழிப்பான தேசமாக மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று உறுதியளிப்பவர்களில் தற்போதைய அமெரிக்க நிர்வாகமே முதன்மையாக உள்ளது. இதன் விளைவு, 1945-க்குப் பிந்தைய அமெரிக்கா தலைமையிலான சர்வதேச ஒழுங்குமுறை கட்டமைக்கப்பட்டு 80 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அந்தக் கட்டமைப்பு இப்போது அழிவைச் சந்தித்து வருகிறது.
ஓராண்டிற்கு முன்பு, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மூனிக் நகரில் ஐரோப்பிய அரசாங்கங்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், ஜேர்மனிக்கான மாற்றுக் (AfD) கட்சி உள்ளிட்ட அதிதீவிர வலதுசாரி கட்சிகளுடன் பகிரங்கமாக தனது ஐக்கியத்தை வெளிப்படுத்தினார். ஐரோப்பிய இறக்குமதிகள் மீதான ட்ரம்பின் தண்டனை வரிவிதிப்புகள், ஐரோப்பிய ஒன்றியம் மீதான அவரது தாக்குதல்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, கிரீன்லாந்தை பலவந்தமாக இணைப்போம் என்ற அவரது அச்சுறுத்தல்கள், அத்திலாந்திக் நாடுகளுக்கிடையிலான உறவு மீட்டெடுக்க முடியாத அளவிற்கு முறிந்துவிட்டது என்பதை ஐரோப்பிய தலைவர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளன. எண்ணற்ற அரசியல் உரைகள், மூலோபாய ஆவணங்கள் மற்றும் தலையங்கங்கள் இந்த கருப்பொருளை ஆராய்ந்துள்ளன.
மூனிச் பாதுகாப்பு அறிக்கை, “ஏற்கனவே இருக்கும் விதிகள் மற்றும் நிறுவனங்களை கோடரியால் சிதைப்பவர்களில் ட்ரம்ப் மிகவும் சக்திவாய்ந்தவர்” என்று குற்றம் சாட்டியுள்ளது. அவர் அழிவை ஏற்படுத்தும் ஒரு “புல்டோசர் கொள்கையை” பின்பற்றுவதாகவும், “தற்போதுள்ள சர்வதேச ஒழுங்குமுறையின் முக்கிய கூறுபாடுகளை” நிராகரிப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. “வாஷிங்டன் ஒரு காலத்தில் தானே உருவாக்க உதவிய உலகளாவிய வர்த்தக விதிகளை இப்போது வெளிப்படையாக கைவிட்டுள்ளது.” இது “உலகின் பல்வேறு பிராந்தியங்களில்”, குறிப்பாக ஐரோப்பா மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கை ஏற்கனவே இருக்கும் மதிப்புகள், விதிகள் மற்றும் நிறுவனங்களைப் பாதுகாக்கும் மொழியில் தனது விமர்சனங்களை முன்வைத்தாலும், ஐரோப்பிய வல்லரசுகளும் ட்ரம்பின் அதே திசையிலேயே நகர்கின்றன. ஜேர்மனியின் சான்சலர் பிரெடெரிக் மெர்ஸ் சமீபத்தில் குறிப்பிட்டது போல, அவர்கள் “அதிகார அரசியலின் மொழியைத் தாங்களே பேசக் கற்றுக்கொள்ள” விரும்புகிறார்கள் மற்றும் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை குவித்து வருகின்றனர். இந்த தசாப்தத்தில் தனது இராணுவச் செலவை மூன்று மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ள ஜேர்மனி, இவ்விஷயத்தில் முன்னணியில் உள்ளது.
ஆனால் மீள்ஆயுதமயமாக்கலுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால்தான் ஐரோப்பிய வல்லரசுகள் அமெரிக்காவுடனான முழுமையான உறவு முறிவை முடிந்தவரை தாமதப்படுத்த முயல்கின்றன. மூனிக் பாதுகாப்பு அறிக்கை குறிப்பிடுவது போல, அவர்கள் ஒரு “இரட்டை வழி மூலோபாயத்தை” பின்பற்றுகிறார்கள்: அவர்கள் “அதிகப்படியான தன்னாட்சிக்குத் தயாராகும் அதே வேளையில், அமெரிக்காவைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்ளவும் முயற்சிக்கின்றனர்.”
உக்ரேன் போர், கிரீன்லாந்து மற்றும் வர்த்தகக் கொள்கை தொடர்பாக மோதல்கள் இருந்தாலும், மத்திய கிழக்கை அடிபணிய வைக்கவும், வளம் நிறைந்த மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிராந்தியத்திலிருந்து சீனா மற்றும் ரஷ்யாவை வெளியேற்றவும் வாஷிங்டன் எடுக்கும் முயற்சிகளுக்கு பேர்லின், பாரிஸ் மற்றும் இலண்டன் ஆதரவு அளிக்கின்றன. அவர்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிப்பது மட்டுமல்லாமல், ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா மேற்கொண்டு வரும் தீவிரப் போர் தயாரிப்புகளையும் ஆதரிக்கின்றனர்.
மூனிக் பாதுகாப்பு மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள், 1979-ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சியால் தூக்கியெறியப்பட்ட கடைசி ஷா மன்னரின் மகனான ரெசா பஹ்லவியை பங்கேற்க அழைத்துள்ளனர். அமெரிக்காவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழும் பஹ்லவி, அமெரிக்க இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் தெஹ்ரானில் அதிகாரத்தைக் கைப்பற்றவும், ஒரு ஏகாதிபத்திய பொம்மை ஆட்சியை நிறுவவும் விரும்புகிறார். சனிக்கிழமையன்று, மூனிக் நகரின் தெரேசியன்வீஸில் நடைபெறவுள்ள, சுமார் 1,00,000 பேர் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் ஈரானிய ஆட்சி எதிர்ப்பாளர்களின் பிரம்மாண்ட பேரணியில் அவர் உரையாற்றுகிறார்.
சீனாவைப் பொறுத்தவரையில், மூனிக் பாதுகாப்பு அறிக்கை ட்ரம்ப் நிர்வாகத்தை வலது புறத்திலிருந்து தாக்குகிறது. “எப்போதும் இல்லாத வகையில் வலிமை பெற்றுள்ள சீனா”, “பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் தூண்டுதல்கள் மற்றும் வற்புறுத்தல்கள் மூலம், பிராந்திய மேலாதிக்கத்திற்காக வலுவான முயற்சியை மேற்கொள்வதாக” அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. வளரும் சீனப் பொருளாதார வலிமைக்கு எதிராக ட்ரம்பும் அவரது சகாக்களும் முறையாகப் போருக்குத் தயாராகி வந்தாலும், அவர்களிடம் போதிய உறுதிப்பாடு இல்லை என்று அந்த அறிக்கை அவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்கிடையில், இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் அதன் மூலோபாய ஆர்வம் குறித்து சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. சீன மேலாதிக்கத்தை அமெரிக்கா எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டாலும், இப்பிராந்தியத்தில் அமெரிக்கா அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அந்த இலக்கிற்கு முரணானவை என அங்கிருக்கும் நாடுகள் கருதுகின்றன. இன்னும் சில நாடுகள், தனது நட்பு நாடுகளுக்கு ஆதரவளிப்பதை விட பெய்ஜிங்குடன் ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதற்கே வாஷிங்டன் இப்போது அதிக முக்கியத்துவம் அளிப்பதாகக் கவலைப்படுகின்றன.
மாநாட்டின் தலைவர் வொல்ப்காங் இஷிங்கரின் கூற்றுப்படி, பதட்டம் நிறைந்த அத்திலாந்திக் கடந்த உறவுகளுடன் சேர்த்து மேலும் மூன்று விஷயங்கள் இந்த மாநாட்டின் மையப்பொருளாக இருக்கும்: உக்ரேன் போர், ஐரோப்பா மற்றும் உலகில் ஜேர்மனியின் பங்கு, மற்றும் எதிர்காலத்தில் “ஐரோப்பா தனது சொந்த படைகளைக் கொண்டு தன்னைத் தானே வலுவாக நிலைநிறுத்திக்கொள்வது, தனது சொந்த நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மற்றும் ஒரே குரலில் பேசுவது” ஆகியவற்றிற்கான அதன் திறன் ஆகியவைகளாகும். ஜேர்மனியின் சான்ஸ்லர் பிரெடெரிக் மெர்ஸ் வெள்ளிக்கிழமை தொடக்க உரையாற்றுகிறார்.
உக்ரேன் விவகாரத்தில் அமெரிக்காவுடனான மோதல்கள் மிகவும் தீவிரமாக உள்ளன. அலாஸ்காவில் ட்ரம்ப் புட்டினைச் சந்தித்ததிலிருந்தும், போரைத் தீர்ப்பதற்காக அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதிலிருந்தும், ஐரோப்பிய வல்லரசுகள் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் ஏதேனும் ஒப்பந்தம் எட்டப்படுமோ என்று அஞ்சுகின்றன. எனவே, அவர்கள் ரஷ்யாவிற்கு எதிரான போர் தொடர வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அமெரிக்கா இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றாலும், போருக்கான நிதியுதவியை அது பெருமளவில் நிறுத்திவிட்டது. போரின் முதல் சில ஆண்டுகளில் இந்த நிதிச் சுமையின் பெரும்பகுதியை அமெரிக்காவே சுமந்தது. கீல் பயிலகத்தின் சமீபத்திய பகுப்பாய்வு அண்மையில் நடத்திய ஆய்வின்படி, கடந்த ஆண்டில் அமெரிக்காவின் இராணுவ, மனிதாபிமான மற்றும் நிதி ஒதுக்கீடுகள் 99 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
ஐரோப்பிய வல்லரசுகள் தங்களின் சொந்த போர் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் இதற்குப் பதிலளிக்கின்றன. கடந்த செவ்வாயன்று பல ஐரோப்பிய நாளிதழ்களுக்கு அளித்த விரிவான பேட்டியில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஏற்கனவே சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் எதிராக மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்க அழைப்பு விடுத்துள்ளார்.
வர்த்தக வரிகள் மற்றும் கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை நம்ப வேண்டாம் என்று மக்ரோன் எச்சரித்தார்: “ஒரு வினாடி கூட அதை நம்பாதீர்கள், இது இன்னும் முடிவடையவில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் புதிய அச்சுறுத்தல்கள் வரும்.” ஐரோப்பா ஒரு “இரட்டை நெருக்கடியை” எதிர்கொள்கிறது. “வணிக ரீதியாக ஒருபுறம் சீனச் சுனாமி உள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கத் தரப்பில் மைக்ரோ செகண்ட் (கணநேர) ஸ்திரமற்ற தன்மை நிலவுகிறது.”
“நாம் பார்வையாளர்களாக இருக்க விரும்புகிறோமா அல்லது நடிகர்களாக (செயல்படுபவர்களாக) இருக்க விரும்புகிறோமா? என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்” என்று மக்ரோன் கூறினார். அத்தோடு, பார்வையாளராக இருப்பது என்பது அடிபணிவதற்குச் சமம், “நாம் யாரையும் தொந்தரவு செய்யவில்லை, அமெரிக்கர்களிடம் கனிவாக இருக்க முயற்சிக்கிறோம், சீனர்களுடன் முன்பைப் போலவே தொடர்கிறோம். நான் உங்களுக்குச் சொல்கிறேன் நாம் எதுவும் செய்யாவிட்டால், ஐரோப்பா ஐந்து ஆண்டுகளில் துடைத்தெறியப்படும்”, ஆகவே, மிகவும் இறையாண்மை கொண்ட, சுயாதீனமான மற்றும் இராணுவ ரீதியாக வலிமையான ஐரோப்பா வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி வலியுறுத்தினார். “முதிர்ச்சியற்ற நிலையில் இருந்தும், புவிசார் அரசியல் சிறுபான்மை நிலையில் இருந்தும் வெளிவருவதற்கான நேரம் இது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது ட்ரம்பின் கொள்கையிலிருந்து வேறுபட்டதல்ல. ஐரோப்பிய அரசாங்கங்கள் வெள்ளை மாளிகையில் உள்ள பாசிசவாதியை எதிர்க்கவில்லை, மாறாக அவருடைய கொள்கைகளையே நகலெடுக்கின்றன. மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கும் செல்வந்தர்களின் இலாபத்திற்கும் நிதி திரட்டுவதற்காக, அத்திலாந்திக் சமுத்திரத்தின் இருபுறமும் உள்ள ஆளும் வர்க்கங்கள் உழைக்கும் மக்களுக்கு எதிராக பெருகிய முறையில் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவர்கள் ஊதியங்களை வெட்டிக் குறைத்தல், வேலைகளை அழித்தல், சமூக நலன்களைக் குறைத்தல் மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் வர்க்கப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துகிறார்கள். மேலும் போர், சமூக நலத் திட்டக் குறைப்பு மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பிற்கான புறநிலைச் சூழலை உருவாக்குகிறார்கள். முதலாளித்துவத்தை எதிர்த்து சோசலிச சமூகத்தை நிறுவுவதற்காகப் போராடும் உலகத் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்தால் மட்டுமே இவற்றை நிறுத்த முடியும்.
