இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சுகாதார ஊழியர் நடவடிக்கைக் குழு (HWAC), பெப்ரவரி 20 அன்று இரவு 8 மணிக்கு, 'இலங்கை மருத்துவர்களின் பிரச்சாரமும் இலவச சுகாதார சேவையைப் பாதுகாப்பதற்கான போராட்டமும்' என்ற தலைப்பில் ஒரு பகிரங்க சூம் கூட்டத்தை நடத்தவுள்ளது.
ஜனவரி 23 முதல், சுமார் 20,000 இலங்கை அரசாங்க மருத்துவர்கள், தங்களுக்குரிய சட்டரீதியான கொடுப்பனவுகளை உயர்த்தக் கோரி, ஜனவரி 23–24 ஆம் திகதிகளில் நடத்திய இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தம் உட்பட, பல்வேறு போராட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். போராடும் மருத்துவர்களுக்கு எதிராக நிராகரிப்பும் அச்சுறுத்தல்களுமே அரசாங்கத்தின் பதில்களாக இருந்தன.
ஜனாதிபதி அநுரகுமார திசநாயக பெப்ரவரி 6 அன்று, 'எத்தகைய தெருப் போராட்டங்கள் அல்லது வேலைநிறுத்தங்களை நடத்தினாலும், எந்தப் கொடுப்பனவுகளோ அல்லது சம்பள உயர்வுகளோ வழங்கப்படாது' என்று பகிரங்கமாக அறிவித்தார். அரசு செலவினங்களைக் குறைப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதல்களை மட்டுமே அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், போராடும் மருத்துவர்கள் மற்றும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் இந்த அச்சுறுத்தலை விடுத்தார்.
மருத்துவர்களின் கொடுப்பனவுகள் மற்றும் வேலை நிலைமைகள் குறித்த கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கும் அதேவேளை, அவை ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டு, தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள, இலவச பொது சுகாதார அமைப்பின் மீதான பரந்த தாக்குதலிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை ஆகும்.
சுகாதாரப் பராமரிப்பை தனியார்மயமாக்குவதை நோக்கிய ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக, ஜனவரி 6 அன்று, தனியார் நிறுவனங்களிடமிருந்து அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளைப் பெறுவதற்காக அரச-தனியார் கூட்டாண்மை முறையை சட்டப்பூர்வமாக்க அமைச்சரவை முடிவு செய்தது.
பொது சுகாதார அமைப்பு விளிம்பில் இருக்கின்றது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை ர்களின் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் முடங்கியுள்ளன. அத்தியாவசிய உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது, மருந்துப் பற்றாக்குறை பரவலாக உள்ளதுடன் உள்கட்டமைப்பு சிதைந்து வருகிறது.
சுகாதார ஊழியர்களுக்கான சிறந்த வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளுக்கான போராட்டம், ஏழைகளின் ஆதரவுடன் தொழிலாள வர்க்கத்தின் கசப்பான போராட்டங்கள் மூலம் வென்றெடுக்கப்பட்ட இலவச சுகாதார சேவையை பாதுகாப்பதோடு பிரிக்க முடியாத வகையில் பிணைந்துள்ளது.
இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவங்களே பிரதான தடையாக உள்ளன. மருத்துவர்களின் கோரிக்கைகள் முழுமையாக நிராகரிக்கப்பட்டமையால், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் சுகாதார ஊழியர்களின் நலன்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று, தற்போதைய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட, தொழிற்சங்கத் தலைமைத்துவங்கள் பரப்பிய மாயை, மீண்டும் ஒருமுறை தகர்ந்துபோனது.
அனைத்து அரச மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு நாங்கள் அழைப்பு விடுப்பதோடு, தனியார் சுகாதார நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களையும் அவ்வாறே செய்ய வலியுறுத்துகிறோம். இந்தக் குழுக்கள் இலவச பொது சுகாதார சேவையை பாதுகாக்கும் போராட்டத்தில் ஏனைய தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் பக்கம் திரும்ப வேண்டும்.
நமது போராட்டத்தை சர்வதேச தொழிலாளர் ஒற்றுமையுடன் இணைக்க வேண்டிய மூலோபாய தேவையையும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் புனரமைக்கவும் அவசியமான பரந்த சோசலிச முன்னோக்கையும் பற்றி நமது கூட்டத்தில் கலந்துரையாடப்படும்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு உங்களை அழைக்கிறோம்.
திகதி மற்றும் நேரம்: வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 20, இரவு 8 மணி
கூட்டத்தில் பங்குபற்ற இந்த இணைப்பில் பதிவு செய்துகொள்ளவும்.
