முன்னோக்கு

அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஒரு ஏகாதிபத்திய மூலோபாயவாதியாக அறிமுகமாகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வாஷிங்டன் கேபிடோல் கட்டிடத்தில் நடைபெற்ற எரிசக்தி மற்றும் வர்த்தகத்திற்கான சபைக் குழுவின் சுகாதாரத் துணைக் குழு விசாரணையில், நியூ யோர்க் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் கலந்து கொள்கிறார். வியாழக்கிழமை, ஜனவரி 22, 2026 [Photo: Allison Robbert/WSWS]

இந்த வார இறுதியில் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் (MSC) பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் கலந்து கொள்வது, அவருக்கும் மற்றும் அவர் 2018-ல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியபோது இணைந்த அரசியல் அமைப்பான அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) ஆகிய இருதரப்பினரின் அத்தியாவசிய அரசியல் செயல்பாட்டிற்கும் ஒரு சான்றாகும்.

DSA என்பது ஒரு சோசலிச அமைப்பு அல்ல. மாறாக, அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் இரண்டு முக்கிய கட்சிகளில் ஒன்றான ஜனநாயகக் கட்சியின் ஒரு “இடதுசாரி” பிரிவாகும். DSA மற்றும் ஒகாசியோ-கோர்டெஸ் ஆகிய இருவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீவிர பாதுகாவலர்களாக உள்ளனர்.

ஜேர்மன் தேசிய பாதுகாப்பு நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்புடைய அந்நாட்டு ஏற்பாட்டாளர்களின் அழைப்பின் பேரில், ஒகாசியோ-கோர்டெஸ் இந்த மாநாட்டில் இரண்டு குழு விவாதங்களில் பங்கேற்பார். அங்கு அவர் ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுக் கொள்கையை முன்வைப்பார். பாசிச ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் பெரும்பாலும் ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேன் போருக்கு, அமெரிக்க இராணுவ ஆதரவை ட்ரம்ப் குறைப்பதையே மையமாகக் கொண்டு சுழல்கின்றன.

ஒட்டுமொத்த மூனிச் மாநாடும் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே அதிகரித்து வரும் மோதலில் கவனம் செலுத்துகிறது. உக்ரேன் தவிர, டென்மார்க் கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கை மற்றும் முன்னாள் நட்பு நாடுகளுக்கு எதிராக அவர் வர்த்தக வரிகளைப் பயன்படுத்துவது போன்ற பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களைத் தேடும் செயல்களும் இதில் அடங்கும்.

1963 இல் இருந்து ஆடம்பரமான பேயரிஷர் ஹோப் ஹோட்டலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மூனிச் பாதுகாப்பு மாநாடு, மேற்கத்திய இராணுவக் கூட்டணியை வலுப்படுத்தும் வெளிப்படையான நோக்கத்துடன், பனிப்போரின் போது எவால்ட்-ஹென்றிச் வொன் கிளேஸ்ட்-மென்சின் என்பவரால் (அதாவது, ஒரு பாதுகாப்பு ஆய்வுகள் கூட்டம்) இராணுவ ஆய்வுகள் மாநாடு என்ற பெயரில் நிறுவப்பட்டது. கிளேஸ்ட்-மென்சின் நாஜிக்களின் மூன்றாம் பேரரசில் இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஆண்டுதோறும் வழங்கப்படும் எவால்ட் வொன் கிளேஸ்ட் விருதைப் பெறுவதற்காக முனிச் வருவார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜனாதிபதி தேர்தல்களை ரத்து செய்த ஜெலென்ஸ்கி, ரஷ்ய இராணுவ அழுத்தத்தின் கீழ் நொறுங்கி வரும் ஒரு போலீஸ்-அரசு ஆட்சியின் தலைவராக தொடர்ந்து நீடிக்கிறார்.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, நேட்டோ (NATO) அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சர்கள், ஆயுதத் தொழில் நிர்வாகிகள், உளவுத்துறை தலைவர்கள் மற்றும் அட்லாண்டிக் கடந்த கொள்கை உயரடுக்குகள் ஒன்றுகூடும் ஒரு முதன்மையான இடமாக இந்த மூனிச் பாதுகாப்பு மாநாடு (MSC) இருந்து வருகிறது. மேற்கத்திய இராணுவ மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் மூலோபாய ஒருமித்த கருத்தை இவர்கள் இங்குதான் ஒருங்கிணைக்கிறார்கள்.

இதன் விருந்தினர் பட்டியலானது, ஈராக் போரைத் தொடங்கியவர்கள், மீண்டும் மீண்டும் எச்சரிக்கப்பட்ட போதிலும் நேட்டோவை கிழக்கு நோக்கி விரிவாக்கியவர்கள், ஏமனில் சவுதி அரேபியாவின் போருக்கு ஆயுதங்களை வழங்கியவர்கள் மற்றும் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற இராணுவ ஆதரவை வழங்கியவர்களின் ஒரு முகவரிப் புத்தகம் போலவே உள்ளது. லொக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin), ரேதியான் (Raytheon) மற்றும் பிஏஇ சிஸ்டம்ஸ் (BAE Systems) ஆகியவை இதன் பெருநிறுவன ஆதரவாளர்களில் அடங்கும். இந்த அருவருப்பான கூட்டத்தில்தான், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு “இடதுசாரி” பிரதிநிதியாக ஒகாசியோ-கோர்டெஸ் தனது முதல் வருகையைத் தரத் தேர்ந்தெடுத்துள்ளார்.

கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம், மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மர் மற்றும் அரிசோனா செனட்டர் ரூபன் காலெகோ உட்பட பல ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்கள் முனிச் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். ஒரு பத்திரிகை பேட்டியில் காலெகோ கூறுகையில், “ட்ரம்பின் உலகப் பார்வைதான் வெளியுறவுக் கொள்கையின் மேலாதிக்கப் பார்வை அல்ல என்பதை உலகம் அறிந்துகொள்வதை உறுதிசெய்ய நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்,” என்றார்.

ஆனால் ஒகாசியோ-கோர்டெஸின் வருகைதான் ஊடகங்களின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் இது, ஏகாதிபத்திய அரசியலின் பாம்புப் புற்றிற்குள் அவர் மேற்கொள்ளும் முதல் பெரிய முயற்சியாக உள்ளது. இந்த முயற்சி, 2028 ஆம் ஆண்டு நியூ யோர்க் மாநிலத்தின் அமெரிக்க செனட் சபையின் இடத்திற்காக, தற்போது செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமரால் வகிக்கப்படும் இடத்திற்காக, அல்லது ஜனாதிபதி தேர்தலுக்கான ஒரு தயாரிப்பாகவே பரவலாகக் கருதப்படுகிறது. ஒகாசியோ-கோர்டெஸே தனது அரசியல் அபிலாஷைகள் குறித்த ஊகங்களை ஊக்குவிக்கும் வகையில், 2028 ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை அவர் தோற்கடிப்பது போன்ற ஒரு கருத்துக் கணிப்பை ட்வீட் செய்திருந்தார்.

குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாக, அவரது அரசியல் அந்தஸ்தை உயர்த்தவும், நவம்பரில் பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சியினர் வென்றால் அவரை காங்கிரஸின் முன்னணித் தலைவராகவும், உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படக்கூடிய பாரிய தீவிரமயமாக்கலைத் திசைதிருப்புவதற்கான ஒரு சாத்தியமான ஜனாதிபதி வேட்பாளராகவும் நிலைநிறுத்த கவனமாகத் திட்டமிடப்பட்ட பத்திரிகைப் பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன.

கடந்த வாரம் நியூ யோர்க் டைம்ஸில் “அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் ஒரு பரந்த மேடையில் கால் பதிக்கிறார்” என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரை, அவரது முனிச் பாதுகாப்பு மாநாட்டு வருகையை அறிவித்தது. அவரது தலைமை அதிகாரி மைக் காஸ்காவின் கூற்றுப்படி, “பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் மிக முக்கியமான வெளிநாட்டுப் பயணம்” இதுவாகும். அங்கு, “உலக விவகாரங்களில் திரு. ட்ரம்பின் முன்னெச்சரிக்கையற்ற அணுகுமுறைக்கு மாற்றாக ஒரு இடதுசாரி மாற்றை அவர் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

இது “தகுதியானவராக மாற்றப்படுதல்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அதற்கு அவ்வளவு பெரிய முயற்சிகள் ஒன்றும் தேவையில்லை. தனது தலையில் ஒரு சுயாதீனமான சிந்தனை கூட இல்லாத ஒகாசியோ-கோர்டெஸ், தன்னை வழிநடத்துபவர்களின் கைகளில் ஒரு மென்மையான களிமண் போன்றவராக உள்ளா்.

அவரது போலித்தனமான தீவிர வாய்வீச்சுக்களும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் பரந்த சமூக ஊடக ஆதரவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒகாசியோ-கோர்டெஸை ஒரு மதிப்புமிக்க சொத்தாக மாற்றியுள்ளன. உக்ரேனில் ஜனநாயகக் கட்சியின் ஒட்டுமொத்த போர் கொள்கைக்கு ஒரு மக்கள் நலவாத முலாம் பூசுவதற்காகவே ஒகாசியோ-கோர்டெஸ் முன்னிறுத்தப்படுகிறார்.

போரிலும், அணு ஆயுதங்களைக் கொண்ட ரஷ்யாவுடன் நேரடி இராணுவ மோதலை மேற்கொள்வதிலும் மாற்றமில்லாத உறுதிப்பாட்டைக் கொண்டுள்ள அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் அந்தப் பிரிவிற்காகவே அவர் பேசுகிறார். இதில் அவர் DSA யின் அரசியல் பாரம்பரியத்திற்கு உண்மையாக இருக்கிறார். முன்னாள் ஷாட்மானிஸ்டுகளால் (Shachtmanites) நிறுவப்பட்ட இந்த அமைப்பு, பனிப்போர் கால கம்யூனிச எதிர்ப்பில் வேரூன்றியது. விளாடிமிர் புட்டின் ரஷ்யப் புரட்சியை பகிரங்கமாக நிராகரித்த போதிலும், இவர்கள் அவரை ஒரு அரக்கனாகச் சித்தரிக்கின்றனர்.

ஒகாசியோ-கோர்டெஸ் தனது அரசியல் வாழ்க்கையை 2018-ல் செனட்டர் எட்வர்ட் கென்னடியிடம் குடியேற்றம் மற்றும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் ஒரு உதவியாளராகப் பயிற்சி பெற்ற பிறகு தொடங்கினார். அவர் ஒரு கிளர்ச்சியாளராக போட்டியிட்டு, குவீன்ஸ் மற்றும் பிராங்க்ஸ் பகுதிகளில் இலத்தீன் அமெரிக்க மக்கள் அதிகம் வாழும் தொகுதியில் நீண்டகாலமாக பதவியில் இருந்த ஜோ குரோலியை ஜனநாயகக் கட்சித் தேர்தலில் தோற்கடித்தார். விரைவில் அவர் காங்கிரஸின் ஜனநாயகக் கட்சித் தலைமையுடன் சமரசம் செய்து கொண்டார், மேலும் நான்சி பெலோசியால் அவருக்கு முக்கியமான குழுப் பணிகளும் கட்சிப் பொறுப்புகளும் வழங்கப்பட்டன.

காங்கிரஸில் இருந்த தனது ஏழு ஆண்டுகால காலத்தில், ஒகாசியோ-கோர்டெஸ் 100,000 இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைத் சட்டவிரோதமாக்குவதற்கும், தொழிலாளர்கள் நிராகரித்த ஒரு ஒப்பந்தத்தை அவர்கள் மீது திணிப்பதற்கும் ஆதரவாக வாக்களித்தார். உக்ரேனில் உள்ள தீவிர வலதுசாரிப் படைகளுக்கு 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதற்கு அவர் வாக்களித்தார். மேலும், அணுவாயுத பேரழிவை அச்சுறுத்தும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க/நேட்டோ போரை ஆதரித்தார். காஸா இனப்படுகொலை முழுவதும் இஸ்ரேலுக்கான அமெரிக்க இராணுவ உதவிக்கு ஆதரவாக அவர் வாக்களித்தார். மேலும் அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களை யூத எதிர்ப்புவாதிகள் என்று கண்டனம் செய்தார்.

கடந்த வியாழக்கிழமை NBC நியூஸிற்கு அளித்த பேட்டியில், தனது மூனிச் பயணம் குறித்து ஒகாசியோ-கோர்டெஸ் கூறுகையில், “அமெரிக்காவின் பிரதிநிதித்துவம், தலைமை மற்றும் சிந்தனையின் முழு பரிமாணத்தையும் அவர்கள் காண்பது மிகவும் முக்கியமானது,” என்றார்.

ஒகாசியோ-கோர்டெஸின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகரும், செனட்டர் பேர்னி சாண்டர்ஸின் முன்னாள் உதவியாளருமான மேட் டஸ், வெளியுறவுக் கொள்கையில் அவர் ஒரு “தொழிலாள வர்க்க முன்னோக்கை” வழங்குவார் என்று உரிமை கோரினார். மேலும், “உலக அரங்கில் அமெரிக்கா ஒரு முக்கிய பங்கினை வகிக்க வேண்டும் என்று அவர் நம்புகிறார், ஆனால் இராணுவத் தலையீடு அதற்கான வழிமுறை அல்ல, நாட்டின் ஒரு வலுவான வாக்காளர் தொகுதி இதனை ஏற்றுக்கொள்கிறது, அந்தத் தொகுதியைத்தான் ட்ரம்ப் மற்றும் வான்ஸ் ஈர்க்க முயன்றனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ட்ரம்ப் மற்றும் வான்ஸ் ஆகியோர் “முடிவற்ற போர்களுக்கு” எதிரானவர்கள் எனப் பொய்யாக வேடமிட முயன்றது உண்மைதான். ஆனால், பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் இராணுவவாதத்தின் காரணமாகவே அவர்களால் இந்த வேடத்தைப் போட முடிந்தது. இந்தக் கொள்கைகளுக்கு ஒகாசியோ-கோர்டெஸ், சாண்டர்ஸ் மற்றும் DSA ஆகியோரின் முழு ஆதரவும் இருந்தது.

2023-ல் நியூ யோர்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் ஒகாசியோ-கோர்டெஸ் பைடெனுடனான தனது ஐக்கியத்தை வெளிப்படுத்தினார். இதைப் பற்றி உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இவ்வாறு கருத்து தெரிவித்தது:

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் ஒகாசியோ-கோர்டெஸ் கைவிட்டதுதான் அந்தப் பேட்டியின் மிக முக்கியமான அம்சமாகும். “எனது வெளியுறவுக் கொள்கை இலக்குகளை ஜனாதிபதிக்கோ அல்லது அமெரிக்காவிற்கோ எதிரானது என்று நான் வகைப்படுத்த மாட்டேன். நான் காங்கிரஸின் ஒரு உறுப்பினர். நான் இந்த நாட்டிற்காகப் சத்தியப்பிரமாணம் செய்துள்ளேன், அந்தப் பிரமாணத்தை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

மேலும் உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு குறிப்பிட்டது:

ஒகாசியோ-கோர்டெஸ் “இந்த நாட்டிற்கு சத்தியப்பிரமாணம் செய்துள்ளேன்” என்று கூறும்போது, உண்மையில் அவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நலன்களை நிலைநிறுத்த ஒரு சத்தியப்பிரமாணம் செய்துள்ளார் என்பதாகும்.

குறிப்பிடத்தக்க வகையில், அந்தப் பேட்டியில் “சோசலிசம்” என்ற வார்த்தை எங்கும் இடம்பெறவில்லை. உண்மையில், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சி.ஐ.ஏ அமைப்பிற்கும் சோசலிசத்திற்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறதோ, அவ்வளவு தொடர்புதான் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளுக்கும் (DSA) மற்றும் ஒகாசியோ-கோர்டெஸுக்கும் இருக்கிறது என்பதை அந்தப் பேட்டி உறுதிப்படுத்துகிறது. சொல்லப்போனால், கொள்கைகள் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் பார்த்தால், இந்த இரண்டு பெயர்களும் (DSA மற்றும் CIA) ஒன்றிற்கு மற்றொன்று மாற்றாகப் பயன்படுத்தக்கூடியவை.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த மதிப்பீட்டில் ஒரு வார்த்தையைக் கூட மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

Loading