மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த மூன்று நாட்களில், சுமார் 60 நாட்டுத் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அமைச்சர்கள், அரசியல்வாதிகள், உயர்நிலை இராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களை ஒருங்கிணைத்த மூனிச் பாதுகாப்பு மாநாடு (MSC), கடும் பதட்டங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது. ஆனால், ஒரு விஷயத்தில் அனைத்து பங்கேற்பாளர்களும் உடன்பட்டனர்: ஏகாதிபத்திய சக்திகளின் நலன்கள், இராஜதந்திர சூழ்ச்சிகளாலும் சர்வதேச நிறுவனங்களாலும் மறைக்கப்பட்டிருந்த காலம் முடிந்துவிட்டது. அவை இராணுவ வலிமை மற்றும் போரின் மூலம் வெளிப்படையாகத் தீர்மானிக்கப்படும் ஒரு புதிய யுகம் தொடங்கியுள்ளது.
இந்த மாநாட்டில் நடந்த விவாதங்கள் ஒரு மூன்றாவது உலகப் போரை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது பற்றி அமையவில்லை. மாறாக, அதற்கு எவ்வாறு சிறந்த முறையில் தயாராவது என்பது பற்றியே அமைந்தன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஆளும் வட்டாரங்கள் போரை அவசியமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் கருதுகின்றன.
ஜேர்மன் சான்சலர் பிரெட்ரிக் மெர்ஸ், “அதிகாரத்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, வல்லரசு அரசியலாலும் மீண்டும் வெளிப்படையாக அடையாளப்படுத்தப்படும் ஒரு யுகத்தின் வாசலை நாம் அனைவரும் ஒன்றாகக் கடந்துவிட்டோம்” என்ற வார்த்தைகளுடன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். உரிமைகள் மற்றும் விதிகளின் அடிப்படையில் இயங்கிய சர்வதேச ஒழுங்குமுறை இனி இல்லை என்று அவர் கூறினார். இந்த யதார்த்தத்தை அங்கீகரிப்பதும், “புதிய யுகத்திற்கான ஆயத்தங்களைச் செய்வதுமே” ஐரோப்பிய சக்திகளின் பணி என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு பாசிச வசைப் பொழிவில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, கடந்த தசாப்தங்களின் சர்வதேச அரசியலைத் தாக்கினார். 35 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி என்பது “வரலாற்றின் முடிவு” என்று கருதியது ஒரு “ஆபத்தான மாயை” என்றும், அது தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தால் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
“இந்த மாயையில் சிக்கி, கட்டுப்பாடற்ற தடையற்ற சுதந்திர வர்த்தகம் எனும் வறட்டுத்தனமான பார்வையை நாம் ஏற்றுக்கொண்டோம்...” என்று ரூபியோ கூறினார். மேலும் அவர், “சர்வதேச நிறுவனங்களிடம் எமது இறையாண்மையைத் தாரைவார்த்த அதே வேளையில், பல நாடுகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் திறனைப் பராமரிப்பதற்குப் பதிலாக, மக்கள் நல அரசுத் திட்டங்களில் பெருமளவு முதலீடு செய்தன... ஒரு காலநிலை வழிபாட்டுக் குழுவைத் திருப்திப்படுத்துவதற்காக, எமது மக்களையே ஏழைகளாக்கும் எரிசக்தி கொள்கைகளை எம்மீது திணித்துக் கொண்டோம்... எல்லைகளற்ற உலகத்தை உருவாக்கும் முயற்சியில், முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாரிய குடியேற்ற அலைக்கு எமது கதவுகளைத் திறந்துவிட்டோம். இது எமது சமூகங்களின் ஒருமைப்பாட்டிற்கும், பண்பாட்டுத் தொடர்ச்சிக்கும், எமது மக்களின் எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது” என்று கூறினார். மேலும், “இது மனித இயல்பையும் 5,000 ஆண்டுகால மனித வரலாற்றின் பாடங்களையும் புறக்கணித்த ஒரு முட்டாள்தனமான யோசனை. இதற்காக நாம் பெரும் விலை கொடுத்துள்ளோம்” என்று ரூபியோ தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஐரோப்பிய சக்திகளை நேரடியாகத் தாக்கிய நிலையில், ரூபியோ சற்று சமரசமான தொனியில் பேசினார். கம்யூனிச எதிர்ப்பு மற்றும் பாசிச சலிப்பூட்டும் கருத்துக்கள் நிறைந்த அவரது உரையில், “பல நூற்றாண்டுகளாக பகிரப்பட்ட வரலாறு, கிறிஸ்தவ நம்பிக்கை, கலாச்சாரம், பாரம்பரியம், மொழி, வம்சாவளி மற்றும் எமது முன்னோர்கள் ஒன்றாகச் செய்த தியாகங்களை” நினைவு கூர்ந்தார்: “ஐரோப்பா வலிமையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
அங்கு குழுமியிருந்த அரசுத் தலைவர்கள் அவருக்கு எழுந்து நின்று கைதட்டி நன்றியைத் தெரிவித்தனர். “எங்கள் நட்பு நாடுகள் குற்ற உணர்வினாலும் அவமானத்தினாலும் பிணைக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை” என்ற ரூபியோவின் அறிக்கை, அங்கிருந்த ஜேர்மனியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், நாஜிக்களின் குற்றங்கள் தங்களால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுவரும் “வல்லரசு” இலட்சியங்களைத் தடுத்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் நீண்டகாலமாக உறுதியாக இருந்து வருகின்றனர்.
இருப்பினும், அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு (ஐரோப்பா மற்றும் அமெரிக்கா) இடையிலான கடும் பதட்டங்களை ரூபியோவால் தீர்க்க முடியவில்லை. ட்ரம்பின் பாசிசக் கொள்கைகளான—ஜனநாயக உரிமைகளை அழித்தல், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) கெஸ்டாப்போ படைகளின் மூலம் புலம்பெயர்ந்த மக்களை வேட்டையாடுதல், இராணுவத்தை உள்நாட்டில் நிலைநிறுத்துதல், ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவுதல்—போன்றவற்றைப் பற்றி ஐரோப்பிய சக்திகள் கவலைப்படவில்லை. அதேபோல், அவரது ஏகாதிபத்திய போர்களான—காஸாவில் நடக்கும் இனப்படுகொலை, ஈரான் மீதான குண்டுவீச்சு, வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோவைக் கடத்தியது, அல்லது சீனாவுக்கு எதிரான அவரது போர் தயாரிப்புகள் குறித்தும் அவர்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இந்த விடயங்களில் ஐரோப்பிய ஆளும் வர்க்கம் முழுமையாக ஒத்துப்போகிறது.
ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக ஒரு பிரம்மாண்டமான கப்பற்படையைத் திரட்டி, அந்த நாட்டின் மீது கடுமையான இராணுவத் தாக்குதல்களை நடத்துவோம் என்று அச்சுறுத்தி வந்தாலும், இந்த மாநாட்டில் அதற்கு எதிராக ஒரு குரல் கூட எழுப்பப்படவில்லை. மாறாக, அடுத்த ஏகாதிபத்தியக் குற்றத்திற்கான ஒரு ஊக்குவிப்பு மேடையாகவே இந்த மாநாடு செயல்பட்டது. 1979ல் இடம்பெற்ற ஈரானியப் புரட்சியால் தூக்கியெறியப்பட்ட ஷா மன்னரின் மகன் ரெஸா பஹ்லவி ஒரு விருந்தினராக இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார். ஐரோப்பா முழுவதிலும் இருந்து அழைத்து வரப்பட்ட தனது ஆதரவாளர்களிடையே அவர் பேசினார். அவரது கோரிக்கை என்னவென்றால்: 1953ல் இடம்பெற்ற ஈரானிய ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு பிறகு சி.ஐ.ஏ தனது தந்தைக்குச் செய்ததைப் போலவே, அமெரிக்கா ஈரான் மீது குண்டுகளை வீசி தன்னை புதிய ஆட்சியாளராக அமர்த்த வேண்டும் என்பதே.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றங்கள் எதைப் பற்றியவை என்றால்: ஐரோப்பியப் பொருட்கள் மீதான ட்ரம்பின் அபராத வரிகள், கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக இணைப்பதற்கான அவரது அச்சுறுத்தல்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, ஐரோப்பியர்களைப் புறக்கணித்துவிட்டு ரஷ்யாவுடன் நேரடியாக ஒரு உடன்படிக்கைக்கு வர அவர் எடுக்கும் முயற்சிகள் ஆகியவைதான்.
ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தீவிரப்படுத்துவதுதான், ஜேர்மன் சான்சலர் மெர்ஸ் தனது மூனிச் மாநாட்டு உரையில் குறிப்பிட்ட “புதிய யுகத்திற்கான தயாரிப்புகளின்” மையமாக உள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், ஐரோப்பிய சக்திகள் எல்லைகளின்றி ஆயுதங்களைப் பெருக்கவும், தங்களின் சொந்த வல்லரசுத் திட்டங்களை முன்னெடுக்கவும் நீண்டகாலமாக ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ரஷ்யாதான் ஆக்கிரமிப்பாளர் என்றும் அது ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றத் திட்டமிடுகிறது என்றும் அவர்கள் கூறுவது யதார்த்தத்தைத் தலைகீழாக மாற்றுவதாகும்.
உண்மையில், வார்சா ஒப்பந்தம் மற்றும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து அனைத்து ஒப்பந்தங்களையும் மீறி, நேட்டோதான் ஜரோப்பாவின் கிழக்கு நோக்கி தொடர்ந்து முன்னேறி வருகிறது. இன்று ஒட்டுமொத்த கிழக்கு ஐரோப்பாவும் இந்த இராணுவக் கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளது. 2014-இல், அமெரிக்காவும் ஜேர்மனியும் உக்ரேன் தலைநகர் கீவில் ஒரு மேற்கத்திய சார்பு ஆட்சிக் கவிழ்ப்பை ஒருங்கிணைத்து, உக்ரேன் இராணுவத்திற்கு முறையாக ஆயுதம் வழங்கத் தொடங்கின. ரஷ்யாவுடன் 2,000ம் கிலோமீட்டர் நீள எல்லையைக் கொண்டுள்ள உக்ரேனை நேட்டோவில் இணைக்கும் திட்டங்கள், இறுதியில் ரஷ்யாவின் இருப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்ததால் மாஸ்கோவின் தாக்குதலைத் தூண்டின. நேட்டோ திட்டமிட்டே இந்தப் போரைத் தூண்டியது.
அப்போதிருந்து, நேட்டோ உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக ஒரு பினாமிப் போரை நடத்தி வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து, 380 பில்லியன் யூரோ அளவிலான மேற்கத்திய இராணுவ மற்றும் நிதி உதவி உக்ரேனுக்கு சென்றடைந்துள்ளது. இது இல்லையென்றால், இந்தப் போர் நீண்ட காலத்திற்கு முன்பே ஒரு முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், ட்ரம்ப் அமெரிக்க நிதி உதவியைப் பெருமளவு துண்டித்துள்ளதோடு, மேலும் ஐரோப்பியர்களே முழுச் செலவையும் ஏற்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். ஐரோப்பியர்கள் முன்கூட்டியே பணம் செலுத்தினால் மட்டுமே உக்ரேனுக்கு அமெரிக்காவின் ஆயுதங்கள் வழங்கப்படும்.
ஆனால், அவர்கள் பின்வாங்கத் தயாராக இல்லை. அவர்கள் ரஷ்யாவை அடிமைப்படுத்த விரும்புகிறார்கள், மேலும் தங்களின் சொந்த வல்லரசு இலட்சியங்களை நிறைவேற்ற இந்தப் போர் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து, ஜேர்மனி மட்டும் தனது ஆயுதப்படைகளை மீள் ஆயுதபாணியாக்குவதற்கும், போருக்கான உள்கட்டமைப்புகளைத் தயார் செய்யவும் 1 டிரில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது. ஒட்டுமொத்த சமூகமும் போர்க்கால அடிப்படையில் மாற்றப்பட வேண்டும் என்றும், கட்டாய இராணுவச் சேவை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
சான்சலர் மெர்ஸ் தனது மூனிச் உரையில் இவ்வாறு விளக்கினார்: “ஐரோப்பா ஆபத்துக்களைத் தவிர்ப்பதிலேயே கவனம் செலுத்திப் பின்வாங்கக் கூடாது. ஐரோப்பா வாய்ப்புகளைத் திறந்துவிட வேண்டும் மற்றும் தனது ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். ... அது தனது சொந்தப் பாதுகாப்பு மூலோபாயத்துடன் உலக அரசியலில் ஒரு முக்கியமான சக்தியாக மாற வேண்டும்.” ஜேர்மன் இராணுவத்தை “ஐரோப்பாவிலேயே மிக வலிமையான இராணுவமாக மிக விரைவாக மாற்றுவது” என்ற இலக்கை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஐரோப்பா ஒரு புவிசார் அரசியல் சக்தியாக மாற வேண்டும் என்று கோரினார். இதில், ஐரோப்பா அணுஆயுத வலிமை பெற வேண்டும் என்பதும் அடங்கும். இது தொடர்பாக சான்சலர் மெர்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன் ஏற்கனவே “மூலோபாய உரையாடலை” தொடங்கியுள்ளதாக மக்ரோன் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர், ஐரோப்பாவுடன் நெருக்கமான இராணுவ ஒத்துழைப்புக்கு உறுதி பூண்டுள்ளார். ஐரோப்பியர்கள் “தங்களின் கடின அதிகாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் அதுதான் இந்த யுகத்தின் செலாவணி. நாம் ஆக்கிரமிப்புகளைத் தடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும், ஆம், தேவைப்பட்டால் போரிடவும் தயாராக இருக்க வேண்டும்” என்றார்
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலையீடு இல்லையென்றால், தவிர்க்க முடியாமல் மூன்றாவது உலகப் போருக்கு இட்டுச் செல்லும் இந்த இராணுவ வல்லரசு கொள்கைக்கு, எந்தவொரு ஸ்தாபக அரசியல் கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பு இல்லை. ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி, இடது கட்சி மற்றும் அவற்றின் சகோதர அமைப்புகளும் இவற்றை ஆதரிக்கின்றன.
அமெரிக்காவிலிருந்து மூனிச்சிற்கு வந்திருந்த ஜனநாயகக் கட்சியினரும் ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற ஐரோப்பியக் கோரிக்கையை ஆதரித்தனர். அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ், “புட்டின் ஐரோப்பாவை மிரட்டவும், அங்குள்ள எமது நட்பு நாடுகளைத் துன்புறுத்தவும்” ட்ரம்ப் தனது விலகல் முடிவின் மூலம் சூழலை உருவாக்குவதாகக் குற்றம் சாட்டினார்.
போர் மற்றும் இராணுவவாதத்தின் செலவுகளைச் சுமக்கத் தள்ளப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தால் மட்டுமே போரின் அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த முடியும். இத்தகைய இயக்கம், சமூக நலத்திட்டக் குறைப்புக்கள், சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை, இவற்றுக்கு அடிப்படைக் காரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தோடும், ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தோடும் இணைக்க வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI), சோசலிச சமத்துவக் கட்சிகளும் (SEP) இந்த முன்னோக்கிற்காகவே போராடி வருகின்றன.
