மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் பதவிக்கான வில் லேமனின் பிரச்சாரத் தொடக்கம் என்பது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் மிக முக்கியமான ஒரு அரசியல் நிகழ்வாகும். மேக் ட்ரக்ஸ் நிறுவனத் தொழிலாளியான லேமன், UAW-வை நிர்வாகத்தினதும் அரசினதும் ஒரு கருவியாக மாற்றியுள்ள ஒரு ஒட்டுண்ணி அதிகாரத்துவத்திற்கு எதிராக, சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சியை ஒருங்கிணைக்கப் போட்டியிடுகிறார்.
லேமனின் கொள்கைத் திட்டம், அதிகாரத்தை தொழிற்சங்க எந்திரத்திடமிருந்து பறித்து, சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலைப்பின்னல் மூலம் தொழிற்சாலை தளத்தில் உள்ள தொழிலாளர்களிடம் ஒப்படைப்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும், நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படும் முறையை முடிவுக்குக் கொண்டுவருவது, தொழிலாளர்களை எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஒருவருக்கொருவர் மோதவிடும் தேசியவாத விஷத்தை எதிர்ப்பது மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் போருக்கு எதிராகவும் தொழிலாளர்களின் தொழில்முறை வலிமையைத் திரட்டுவது ஆகியவற்றை அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
லேமனின் இணையத் தளமான WillforUAWPresident.org-இல் வெளியிடப்பட்ட தொடக்கப் பிரச்சார வீடியோ பல இலட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடமிருந்து இப்பிரச்சாரத்திற்கு ஆதரவுச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
துல்லியமாக இந்த வரவேற்புதான், ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவான அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பிடமிருந்து லேமனின் பிரச்சாரத்திற்கு எதிராக ஒரு வெறித்தனமான, தீங்கிழைக்கும் தாக்குதலைத் தூண்டியுள்ளது.
DSA-வின் தேசிய தொழிலாளர் ஆணையத்தின் வழிகாட்டுதல் குழு உறுப்பினரான ஹோண்டா வாங், லேமனின் பிரச்சார வீடியோவிற்குப் பதிலளிக்கும் விதமாக ‘X’ தளத்தில் பதிவிட்ட ஒரு வெளிப்படையான அறிக்கையில் இவ்வாறு எழுதியுள்ளார்: “இந்த பைத்தியக்காரத்தனமான தொழிற்சங்க விரோத விசித்திர மனிதர்களை நம்பி ஏமாறாதீர்கள்... இவர்கள் தொழிலாளர்களிடம் சங்க சந்தா செலுத்துவதை நிறுத்துமாறும், சங்க அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறும், தங்களது கட்சியுடன் இணைந்து குழுக்களை அமைக்குமாறும் போராட்டக் களங்களில் கூறுகிறார்கள்... இது எனக்குத் தெளிவான தொழிற்சங்க விரோத நடவடிக்கையாகவே தெரிகிறது.”
கடந்த கால இழப்புகளை மீட்டெடுக்கும் ஊதிய உயர்வு, ஆட்குறைப்பு இல்லாத கொள்கை, நிறுவனத்தால் செலுத்தப்படும் மருத்துவக் காப்பீடு மற்றும் ஊதியக் குறைப்பு இல்லாத 30 மணிநேர வேலை வாரம் போன்ற லேமன் எழுப்பும் அடிப்படைப் பிரச்சனைகளை ஹோண்டா வாங் புறக்கணிக்கிறார். அதுமட்டுமின்றி, தேசியவாத பேரினவாதத்திற்கு எதிராக எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவது மற்றும் போருக்கு எதிராக தொழிலாளர் வலிமையைத் திரட்டுவது போன்ற அம்சங்களையும் அவர் கண்டுகொள்ளவில்லை. மாறாக, ஹோண்டா வாங் சந்தா என்ற விவகாரத்தில் மட்டுமே குறியாக இருக்கிறார். இது ஒரு முக்கியமான விஷயம், ஏனெனில் தொழிற்சங்க எந்திரத்தைப் பொறுத்தவரை விடயத்தின் மையப்புள்ளி அதுதான்: அதிகாரத்துவத்தின் வருமானம்.
உண்மையைச் சொல்லப்போனால், லேமன் எங்கும் UAW உறுப்பினர்களை “சந்தா செலுத்துவதை நிறுத்துமாறு” கோரவில்லை. இருப்பினும், ஹோண்டா வாங் அத்தகைய ஒரு அச்சத்தை கிளப்புகிறார். அவர் அதிகாரத்தையும் விதிகளையும் பாதுகாப்பதில் குறியாக இருக்கும் அதிகாரி போலப் பேசுகிறார். தொழிலாளர்களைக் கண்காணிப்பதற்கும், அவர்களுக்கு எதிராக சலுகைகளை நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுப்பதற்கும் மட்டுமே இருக்கின்ற ஒரு தொழிற்சங்க அதிகாரத்துவத்துவம், தொழிலாளர்களிடமிருந்து தாமாகவே சந்தாவை கறந்தெடுக்கும் பணத்திற்கு ஏதேனும் அச்சுறுத்தல் வந்துவிடுமோ என்ற ஆத்திரத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார்.
இருப்பினும், தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் ஓர் அமைப்பிற்கு நிதி வழங்குவதா வேண்டாமா என்று தீர்மானிக்கும் முழு உரிமை தொழிலாளர்களுக்கு உண்டு. ஒரு தொழிற்சங்கம் தங்களின் நலன்களுக்காகப் போராடுகிறது, அதாவது ஆட்குறைப்பு, வேலைப் பளு அதிகரிப்பு மற்றும் விட்டுக்கொடுத்தல்களுக்கு எதிராக உண்மையான போராட்டத்தை முன்னெடுக்கிறது என்று தொழிலாளர்கள் நம்பினால், அவர்கள் தாமாகவே முன்வந்து சந்தாவை செலுத்துவார்கள்.
வரலாற்று ரீதியாக, சோசலிஸ்டுகளும் சாமானிய தொழிலாளர் போராளிகளும், அதிகாரத்துவம் தாங்களாகவே சந்தாவை வசூலிக்கும் முறையை மிகுந்த சந்தேகத்துடனேயே பார்த்தனர். ஏனெனில், இது எந்தத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சங்கம் கூறுகிறதோ, அந்தத் தொழிலாளர்களிடமிருந்து அந்த அதிகாரத்துவத்திற்கு ஒரு சுதந்திரத்தை வழங்கியது. முதலாளி தொழிலாளியின் ஊதியத்திலிருந்து சந்தாவைப் பிடித்து நேரடியாகச் சங்கத்திற்கு அனுப்பிவிடுவதால், சாமானியத் தொழிலாளர்களின் நேரடி மற்றும் ஜனநாயக ஒப்புதல் இன்றி அந்த அமைப்பு இயங்க முடிகிறது. இது சந்தா வசூலிப்பவர் என்ற முறையில் அந்தச் சங்கத்தை நிறுவன நிர்வாகத்துடன் நிறுவன ரீதியாகப் பிணைத்துவிடுகிறது.
இரண்டாம் உலகப் போரின்போது, அரசு, முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் இணைந்து தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தச் செய்துகொண்ட ஒரு பரந்த கூட்டு ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, இந்தச் சந்தா பிடித்தம் முறை பெருமளவில் விரிவுபடுத்தப்பட்டது. UAW உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், போர்க்கால வேலைநிறுத்தத் தடை வாக்கை அமல்படுத்தின. ஊதியங்களைக் குறைப்பதற்கும் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் நோக்கமாகக் கொண்ட கூட்டு உற்பத்தி ஒப்பந்தங்களில் பங்கேற்றன. அதற்குப் பரிகாரமாக, முதலாளிகள் சந்தாப் பணம் தடையின்றி வருவதை உறுதி செய்தனர். இது ஒரு முதலாளித்துவ சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவத்தை பலப்படுத்த உதவியது.
ஹோண்டா வாங்கும் DSA-வும், அதிகாரத்துவம் தாங்களாகவே சந்தாவை வசூலிக்கும் முறை முடிவுக்கு வருவதைக் குறித்துப் பேசும்போது, அவர்கள் எதைப் பாதுகாக்கிறார்கள் என்றால், லேமன் தனது பிரச்சார அறிக்கையில் எதை அம்பலப்படுத்தினாரோ அதைத்தான் பாதுகாக்கிறார்கள். அதாவது, தொழிலாளர்களின் சந்தாப் பணத்தில் கட்டப்பட்ட, ஒரு மேல்தட்டு நடுத்தர வர்க்க அதிகாரிகளால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்டமான நிதி அமைப்பைத்தான் அவர்கள் பாதுகாக்கிறார்கள். லேமன் விளக்குவது போல, “தற்போதுள்ள அமைப்பின்படி, UAW என்பது பெயரளவில் மட்டுமே ஒரு தொழிற்சங்கம். இது நம்மைத் தனிமைப்படுத்தவும், நம்மை ஒடுக்கவும், நிறுவனங்களுடனும் அரசாங்கத்துடனும் நெருக்கமாக இருக்கும் ஒரு சலுகை பெற்ற அதிகாரத்துவத்தின் நலன்களைப் பாதுகாக்கவும் மட்டுமே செயல்படுகிறது.”
ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கம் 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களைக் கொண்டுள்ளது. சுமார் 1,000ம் ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ள இந்த தொழிற்சங்கம், கிட்டத்தட்ட 470 அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு 100,000 டாலர்களுக்கும் அதிகமான ஊதியத்தை வழங்குகிறது என்று லேமன் குறிப்பிடுகிறார். இதில் UAW ன் தலைவர் ஷான் பெயினுக்கு 270,000, டாலர்களும், செயலாளர்-பொருளாளர் மார்கரெட் மோக்கிற்கு 247,000 டாலர்களும், துணைத் தலைவர்கள் சராசரியாக 235,000 டாலர்களும், பிராந்திய இயக்குநர்கள் சராசரியாக 220,000 டாலர்கள் வரையிலான நிதியை ஊதியமாகப் பெறுகின்றனர். இந்த அதிகாரிகள் அதிக வருமானம் ஈட்டும் மேல்மட்ட 5 சதவீதத்தினருக்குள் அடங்குவர் என்றும், தொழிலாளர்களை வாட்டியெடுக்கும் பொருளாதார அதிர்ச்சிகளிலிருந்து இவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் லேமன் சுட்டிக்காட்டுகிறார். மேலும், ஆண்டுக்கு 140,000 முதல் 160,000 டாலர்கள் வரை ஊதியம் பெற்று “அதிக ஊதியம் பெறும் தொழில்முறை போலீஸாக” செயல்படும் 500-600 “சர்வதேசப் பிரதிநிதிகள்” குறித்தும் லேமன் விளக்குகிறார். இவர்கள் ஆண்டுக்கு 90 முதல் 100 மில்லியன் டாலர்கள் வரையிலான நிதியை ஊதியமாகவே விழுங்கி விடுகின்றனர்.
திட்டமிட்ட வாக்காளர் ஒடுக்குமுறை நடந்த ஒரு தேர்தலின் மூலம், 2023-இல் ஷான் பெயின் பதவியில் அமர்த்தப்பட்ட பிறகு, DSA மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் நேரடியாக UAW அதிகாரத்துவத்தின் உயர்மட்டப் பதவிகளுக்குக் கொண்டு வரப்பட்டன. DSA மற்றும் Labor Notes ஆகிய இரண்டுமே பெயினை ஆதரித்து, வில் லேமனின் பிரச்சாரத்தைப் பழித்துரைத்தன. அதிகாரத்தை சாமானியத் தொழிலாளர்களிடம் ஒப்படைக்கும் லேமனின் கோரிக்கையை எதிர்த்த அதே வேளையில், பெயின் ஒரு “சீர்திருத்தவாதி” என்ற மோசடியை அவர்கள் முன்னெடுத்தனர். அந்தப் பொய் கடந்த மூன்று ஆண்டுகளில் முழுமையாக அம்பலமாகியுள்ளது.
அதிகாரத்துவத்தின் ஆலோசகர்களாகவும், அதிகாரிகளாகவும் பணியாற்றுவதற்காக அவர்கள் நல்ல ஊதியம் பெற்று வருகின்றனர். பெயினின் தலைமை அதிகாரி கிறிஸ் ப்ரூக்ஸ் —இவர் ஒரு DSA உறுப்பினர் மற்றும் முன்னாள் லேபர் நோட்ஸ் அமைப்பின் எழுத்தாளர்— 2024-ஆம் ஆண்டில் 211,968- டாலர்களை ஊதியமாகப் பெற்றார். அதே வேளையில், அவரது உதவியாளரும் லேபர் நோட்ஸ் அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான ஜோனா பர்மன் 175,318 டாலர்களை சம்பாதித்தார்.
ஹோண்டா வாங்கின் “தொழிற்சங்க விரோதம்” என்ற குற்றச்சாட்டு, ஒரு சலுகை பெற்ற தொழிற்சங்க எந்திரம் சாமானியத் தொழிலாளர்களின் சவாலைச் சந்திக்கும்போது வழக்கமாக வெளிப்படுத்தும் எதிர்வினையே ஆகும். ஹோண்டா வாங்கிற்கும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திகளுக்கும் சங்கம் என்பது அந்த அதிகாரத்துவம் மட்டுமே ஆகும். தொழிலாளர்கள் வெறும் நிர்வகிக்கப்பட வேண்டிய பொருட்கள் மட்டுமே. அதனால்தான், பேச்சுவார்த்தைகள், வேலைநிறுத்தங்கள், தகவல் தொடர்புகள் மற்றும் அவர்களின் சந்தா எவ்வாறு வசூலிக்கப்பட வேண்டும் என்பது வரை, தொழிலாளர்கள் தங்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிலைநாட்ட முயல்வதை அவர் “தொழிற்சங்க விரோதம்” என்று அழைக்கிறார்.
DSA இவ்வளவு தீவிரமாகப் பாதுகாக்கும் இந்த அதிகாரத்துவமானது, கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக வர்க்கப் போராட்டங்களைத் திட்டமிட்டு ஒடுக்கி வருகிறது.
இந்தக் காலகட்டத்தில், தொழிலாளர்களின் மிக வலிமையான ஆயுதமான வேலைநிறுத்தம் என்பது அமெரிக்க வாழ்க்கையிலிருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. 1970-இல் 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற 381 பெரிய வேலைநிறுத்தங்கள் நடந்தன. 2010-களுக்குள் அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு மிகச் சிலவாகக் குறைந்துவிட்டது. தொழிலாளர்கள் திருப்தியாக இருந்ததால்தான் இது நடக்கவில்லை என்பது அல்ல. மாறாக, தொழிற்சங்க அதிகாரத்துவம் பல தசாப்தங்களாகக் கூட்டு நடவடிக்கைகளுக்கான ஒவ்வொரு முயற்சியையும் நசுக்கி, தொழிற்சங்கங்களை போராட்ட அமைப்புகளிலிருந்து நிறுவன நிர்வாகத்தின் சேவையில் இருக்கும் தொழிலாளர் ஒழுங்குமுறைக் கருவிகளாக மாற்றியதால் இது நடந்தது.
ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் சங்கத் தேர்தலில், லேமன் சாமானியத் தொழிலாளர்களின் பிரதிநிதியாகப் போட்டியிடுகிறார். அதனால்தான் அவரது முதன்மையான உறுதிமொழி அந்த அதிகாரத்துவத்தினாலும் அதன் ஆதரவாளர்களாலும் சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகக் கருதப்படுகிறது. லேமன் கூறுவது போல: “உண்மை என்னவென்றால், இந்த அதிகாரத்துவத்தைச் சீர்திருத்த முடியாது. இது ஒழிக்கப்பட வேண்டும். நிர்வாகத்துடனும் அரசுடனும் கைகோர்த்துச் செயல்படும் தொழிற்சங்க ஒட்டுண்ணிகள் நீக்கப்பட வேண்டும். சங்கத்தின் வளங்கள் அவர்களின் கைகளிலிருந்து பறிக்கப்பட்டு, சாமானிய தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.”
UAW தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் வேட்பாளரான ஷான் பெயினை DSA-வில் உள்ள அவரது ஆதரவாளர்கள் பாதுகாப்பதற்கான காரணம், அவர்களின் சொந்தப் பதவிகளும் வருமானமும் இந்த அதிகாரத்துவத்தைப் பாதுகாப்பதிலும் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதிலும் பிணைக்கப்பட்டுள்ளன.
