முன்னோக்கு

ஜெஸ்ஸி ஜாக்சன்: சிவில் உரிமைகளிலிருந்து கறுப்பின முதலாளித்துவம் வரை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

புதன்கிழமை, பிப்ரவரி 14, 2018 அன்று, டென்னசி மாநிலத்தின் மெம்பிஸ் நகரில் உள்ள தேசிய சிவில் உரிமை அருங்காட்சியகத்தின் பால்கனியை ஐவா இ. கார்ருதர்ஸிற்கு வண. ஜெஸ்ஸி ஜாக்சன் சுற்றிக் காட்டினார். கார்ருதர்ஸ் பொதுச் செயலாளராக இருக்கும் சாமுவேல் டிவிட் ப்ராக்டர் மாநாடு அந்த அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 4, 1968 அன்று, லோரெய்ன் மோட்டலின் இதே பால்கனியில்தான் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சுட்டுக் கொல்லப்பட்டார். [AP Photo/Mark Humphrey]

சிவில் உரிமை ஆர்வலரும், இரண்டு முறை ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டவரும், ஒரு முழுமையான அரசியல் சந்தர்ப்பவாதியுமான வண. ஜெஸ்ஸி ஜாக்சன் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 84. வேறு எந்த தனிநபரையும் விடவும், ஜெஸ்ஸி ஜாக்சன் சிவில் உரிமை இயக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் உருவகமாகத் திகழ்ந்தார் — அதாவது, இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு பாரிய தொழிலாள வர்க்க இயக்கமாக இருந்த அதை, ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கும் ஒரு “நலன் சார்ந்த குழுவாகவும்”, கறுப்பின மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தின் ஒரு குறுகிய அடுக்கினரின் சமூக முன்னேற்றத்திற்கான ஒரு கருவியாகவும் மாற்றியதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

பல தசாப்தங்களாக அமெரிக்க அரசியலில் மிகவும் அடையாளம் காணக்கூடிய நபர்களில் ஒருவராக ஜாக்சன் திகழ்ந்தார். அவர் எல்லா இடங்களிலும் காணப்பட்டார்: போராட்டக் களங்களிலும், ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களிலும், அதே போல் பெரு நிறுவனங்களின் மேல்தட்டு ஆலோசனைக் கூட்டங்களிலும் மற்றும் கேபிள் செய்தி ஊடக அரங்குகளிலும் அவர் தென்பட்டார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் வாரிசாக ஊடகங்களால் வழக்கமாக முன்வைக்கப்பட்ட அவர், அந்த நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

ஜாக்சனின் மறைவு, ஆளும் வர்க்கத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் அஞ்சலிகளைத் தூண்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பைடென் அவரை “கடவுளுக்கும் மக்களுக்கும் உரிய ஒரு மனிதர்” என்று நினைவு கூர்ந்தார். அதே சமயம், செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர் அவரை “எமது நாட்டிலும் உலகிலும் நேர்மறையான மாற்றத்திற்கான மிகவும் பலம்வாய்ந்த சக்திகளில் ஒருவர்” என்று அழைத்தார். குடியரசுக் கட்சியின் நிக்கி ஹேலி அவரை “கொள்கைப் பிடிப்புள்ள போராளி” என்று பாராட்டினார். மேலும் டொனால்ட் ட்ரம்ப் அவரை “நிறைய ஆளுமை, மன உறுதி மற்றும் சாமர்த்தியம் கொண்ட ஒரு நல்ல மனிதர்” என்று குறிப்பிட்டார்.

முன்னணி ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர் மற்றும் பாசிசவாதியான ட்ரம்ப்பிடமிருந்தும் கூட இத்தகைய பாராட்டுக்கள் மிக எளிதாக வருவது, அமெரிக்க அரசியல் வாழ்க்கையில் ஜாக்சனின் பச்சோந்திப் பாத்திரத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறது. அவர் கட்டமைத்த பிம்பத்திற்கும், ஊடகங்கள் மற்றும் போலி-இடது ஆதரவாளர்களின் கற்பனைக்கும் மாறாக, ஜாக்சன் தனது வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் உண்மையான “இடது” அல்லது ஒரு எதிர்ப்பு சக்தியாக இருந்ததில்லை.

அவரால் உறுதியாக “இடதுசாரித் தனமாகப் பேச” முடிந்தது, மேலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர் கணிசமான மக்கள் ஆதரவையும் பெற்றிருந்தார். 1988-ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலின் உச்சக்கட்டத்தில் தொழிலாளர் கழகம் (Workers League) எழுதியது போல, ஜாக்சன் “தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமான அரசியல் போராட்டத்தின் பாதையிலிருந்து திசைதிருப்ப, அமெரிக்க முதலாளித்துவத்தால் மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்ட ஜனரஞ்சக வாய் வீச்சாளர்களின் மாதிரியாக இருந்தார். ஜனநாயகக் கட்சியை முற்போக்கான மாற்றத்திற்கான ஒரு நிறுவனமாக மாற்ற முடியும் என்ற மாயையை தொழிலாளர்கள், வேலையற்றோர் மற்றும் ஏழைகளிடம் உருவாக்குவதே” அவரது பணியாக இருந்தது.

1988 ஆம் ஆண்டு அவரது பிரச்சாரத்தின் மூலம் 13 தேர்வுத் தேர்தல்கள் மற்றும் குழுக் கூட்டத் தேர்தல்களை வென்று கிட்டத்தட்ட 7 மில்லியன் வாக்குகளைப் பெற்றார், தொழில்மயமாக்கல் வீழ்ச்சி மற்றும் ரீகன் காலத்து வாழ்க்கைத்தரத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடையே, சிவில் உரிமைப் போராட்டங்களின் எஞ்சியிருந்த செல்வாக்கை அவர் பயன்படுத்திக் கொண்டார். ஜிம்மி கார்ட்டரின் கட்டுப்பாடற்ற கொள்கையை “உள்நாட்டு நியூட்ரான் குண்டு” என்று அழைத்த அவரது வாய்வீச்சுக்கள் ஒருபுறம் இருந்தாலும், ஜாக்சன் மீண்டும் மீண்டும் கட்சியின் மிகவும் நம்பகமான பிரச்சாரகராகத் தன்னை நிரூபித்தார். மேலும் அவர், கார்ட்டர், மொண்டேல், டுகாகிஸ், கிளிண்டன், கோர், கெர்ரி, ஒபாமா, பைடென் மற்றும் ஹாரிஸ் என ஒவ்வொரு முறையும் முந்தையவரை விட வலதுசாரித் தன்மை கொண்ட ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்குகளைத் திரட்டிக் கொடுத்தார்.

ஆளும் வர்க்க வட்டாரங்களில் ஜாக்சனின் மறைவுக்காக இரங்கல் தெரிவிக்கப்படுகிறது என்றால், அது அவர் செய்த இந்தச் சேவைக்கானதாகும். அதாவது, போராட்டக் களத்தின் மொழியில் பேசிக்கொண்டே, அதே சமயம் அந்த ஆதரவை நடைமுறையில் உள்ள ஒழுங்கின் எல்லைகளுக்குள்ளேயே முடக்கி வைக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. ஓபாமா குறித்த ஜாக்சனின் பார்வை இதனை வெளிப்படுத்துகிறது. சிக்காகோவிற்குள் இறக்கப்பட்டு, அங்கிருந்து ஜனநாயகக் கட்சியின் அரசியல் இயந்திரத்தைப் பயன்படுத்தி தேசியப் பதவிக்குச் செல்ல வந்த ஒரு அன்னிய அரசியல் பிழைப்புவாதி என்றே அந்த இளைஞரை (ஓபாமா) அவர் மிகச் சரியாகக் கருதினார். 2008-இல், தனது ஒலிவாங்கி இயங்கிக் கொண்டிருப்பது தெரியாமல், “அவரது விதைகளை அறுக்க விரும்புவதாக” ஜாக்சன் கூறியது பதிவானது. மேலும், ஓபாமா “கறுப்பின மக்களைத் தாழ்வாகப் பேசுகிறார்” என்றும் அவர் சாடினார். இருப்பினும், இத்தகைய கசப்பான உணர்வுகள் அவர் ஓபாமாவை பகிரங்கமாக ஆதரிப்பதையோ, அல்லது ஓபாமா வெற்றி பெற்றபோது அவர் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் வடித்ததையோ தடுத்து நிறுத்தவில்லை.

ஓபாமாவைப் போலன்றி, ஜாக்சன் கறுப்பின தொழிலாள வர்க்கத்துடனும் சிவில் உரிமை இயக்கத்துடனும் உண்மையான தொடர்புகளைக் கொண்டிருந்தார். 1941-இல் இன ஒதுக்கல் நிலவிய தென் கரோலினாவின் கிரீன்வில்லில் பிறந்த ஜாக்சன், ஜிம் க்ரோ இனவெறி சட்டங்களின் கீழ், கடுமையான வறுமை மற்றும் அன்றாட அவமானங்களுக்கு மத்தியிலேயே வளர்ந்தார். அவரது பாட்டி வளர்த்த “ஒரு சிறிய குறுகிய வீட்டுக் குடியிருப்பிற்கு” குடிநீர் வசதியோ அல்லது கழிவுநீர் வசதியோ கிடையாது. ஒரு பதின்ம வயது மாணவர் ஆர்வலராகவும், பின்னர் கல்லூரியின் SCLC (தெற்கு கிறித்தவ தலைமை மாநாடு) அமைப்பாளராகவும் இருந்த ஜாக்சன், தெற்கு அமெரிக்காவில் ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டு, ஊனமாக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் சிவில் உரிமை இயக்கத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார்.

இருப்பினும், ஜாக்சன் தனது தனிப்பட்ட இலட்சியங்களை விரைவிலேயே வெளிப்படுத்தினார். 1968-இல் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலை செய்யப்பட்டபோது, மெம்பிஸில் உள்ள லோரெய்ன் மோட்டலில் ஜாக்சன் இருந்தார். அப்போதே அவர்களுக்கு இடையிலான உறவு ஏற்கனவே கசப்படைந்திருந்தது. சிக்காகோவில் ஜாக்சன் நடத்திய நிதிச் செயல்பாடுகள் குறித்து மார்ட்டின் லூதர் கிங்கிற்கு இருந்த சந்தேகங்களே அதற்கு முக்கியக் காரணமாகும். 1966-இல் வடக்கு நகரங்களில் சிவில் உரிமை இயக்கத்தின் ஒரு பிரிவான உணவு மற்றும் வாழ்வாதாரத்திற்கான ஒரு திட்ட அமைப்பிற்குத் தலைமை தாங்கவே அவர் சிக்காகோவிற்கு அனுப்பப்பட்டிருந்தார். மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்பட்ட சில மணிநேரங்களில், தேசியத் தொலைக்காட்சியில் தோன்றிய ஜாக்சன், இறந்து கொண்டிருந்த கிங்கைத் தான் மடியில் ஏந்தியிருந்ததாகவும், அவரது கடைசி வார்த்தைகளைக் கேட்டதாகவும் உரிமை கோரினார். அங்கிருந்த மற்றவர்களால் மறுக்கப்பட்ட இந்த உரிமை கோரல், கிங்கின் நெருங்கிய வட்டாரத்திற்குள் கசப்பை அதிகப்படுத்தியதுடன், ஜாக்சனின் அடுத்தடுத்த அரசியல் உயர்விலும் ஒரு கறையாக படிந்தது.

எந்த வகையிலும் மார்ட்டின் லூதர் கிங் ஒரு முற்றிலும் மாறுபட்ட குணாதிசயம் கொண்ட ஆளுமையாக இருந்தார் — அவர் ஒரு உண்மையான வெகுஜனத் தலைவர். அவரது அரசியல் பரிணாம வளர்ச்சி அவரை அமெரிக்க முதலாளித்துவத்துடனும், ஏகாதிபத்தியத்துடனும் மென்மேலும் நேரடி மோதலுக்கு இட்டுச் சென்றது. அவர் தலைமை தாங்கிய இயக்கம், அதன் நடுத்தர வர்க்கம் மற்றும் முக்கியமாக மதகுருமார்களின் பழமைவாத நோக்கங்களுக்கும், வெகுஜன மக்களின் புரட்சிகரமான போராட்டங்களுக்கும் இடையிலான ஆழமான உள்முரண்பாட்டைக் கொண்டிருந்தது.

அந்த முரண்பாட்டிற்கு மார்ட்டின் லூதர் கிங் அளித்த பதில் பெருகிய முறையில் தீவிரமானதாக இருந்தது. சிவில் உரிமை இயக்கத்தின் பலன்கள் “முக்கியமாகக் கறுப்பின நடுத்தர வர்க்கத்துடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்பதை அவர் ஒப்புக்கொண்டார். பெரும்பான்மையான மக்களின் சீரழிவைத் தீர்க்க ஏழைகளின் பன்முக மக்கள் இயக்கம் தேவை என்று அவர் வாதிட்டார். “முதலாளித்துவத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது... செல்வப் பகிர்வு சிறப்பாக இருக்க வேண்டும், ஒருவேளை அமெரிக்கா ஒரு ஜனநாயக சோசலிசத்தை நோக்கி நகர வேண்டும்” என்று அவர் தனது ஊழியர்களிடம் கூறினார்.

வாஷிங்டனை “இன்றைய உலகின் மிகப்பெரிய வன்முறையாளர்” என்று முத்திரை குத்திய அவரது அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, அவரை அமெரிக்க அரசின் எதிரியாக்கியது. இதனை FBI ஆவணங்கள் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன. இதுவே 1968-இல் அவர் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்திருக்கலாம் — அந்தக் குற்றத்திற்கான சரியான விளக்கம் இன்றுவரை விளக்கப்படவில்லை.

மார்ட்டின் லூதர் கிங்கின் மரணத்திற்குப் பிறகு, அவரது வாரிசுகள் — அவர்களில் ஜாக்சன் முக்கியமானவர் — வலதுசாரி கொள்கைகளை நோக்கி நகர்ந்தனர். அவர்கள் அமைப்பு ரீதியான மாற்றத்தைப் பற்றிய பேச்சுகளைக் கைவிட்டு, லிண்டன் ஜோன்சன் மற்றும் ரிச்சர்ட் நிக்சன் காலத்தில் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கையுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். நிக்சன் குறிப்பிட்டது போல, கறுப்பினத்தவர்களுக்கு “அதிகாரத்தில் ஒரு பங்கை” வழங்குவதன் மூலம், சலுகை பெற்ற ஒரு கறுப்பினத் தொழில்முறை அடுக்கை வளர்த்தெடுப்பதே இதன் நோக்கமாக இருந்தது.

மார்ட்டின் லூதர் கிங் அஞ்சியபடியே, அந்த இயக்கத்தின் தார்மீக மதிப்பைப் பயன்படுத்தித் தனது தனிப்பட்ட மற்றும் நிதி முன்னேற்றத்தை எப்படி அடைவது என்பதை ஜாக்சன் ஏற்கனவே கற்று வைத்திருந்தார். சிக்காகோவில் உணவு மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்ட அமைப்பின் தலைமையில் அவர் இருந்தபோது, தனது பொது வாழ்க்கையைத் தீர்மானித்த சில உத்திகளை மெருகேற்றினார்: அதாவது மேடைப் பிரசங்க வாய்வீச்சு, ஊடகங்களைக் கையாளுவதில் சாமர்த்தியம் மற்றும் இரகசிய பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை இணைத்து, போராட்டங்களை ஒப்பந்தங்களாக மாற்றினார்.

1971-இல் தெற்கு கிறித்தவ தலைமை மாநாட்டு (SCLC) அமைப்பிலிருந்து வெளியேறிய பிறகு, ஜாக்சனின் மனிதகுலத்தைக் காக்க ஒன்றிணைந்த மக்கள் (PUSH) அமைப்பு பெருநிறுவனங்களிடமிருந்து சலுகைகளைப் பெற்றது. நிறுவனங்கள் கறுப்பின அதிகாரிகளை வேலைக்கு அமர்த்தின மற்றும் கறுப்பினத்தவருக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை ஒதுக்கின. “1974-ஆம் ஆண்டிற்குள், ஜெஸ்ஸி ஜாக்சன் தனது சொந்தப் பொருளாதார ஆதரவு இயந்திரத்தை உருவாக்கிவிட்டார்” என்று அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய பார்பரா ரெனால்ட்ஸ் குறிப்பிடுகிறார். 1972-இல் நியூ யோர்க் டைம்ஸ் இதழ் ஜாக்சனைப் பற்றி எழுதுகையில், அவர் “ஊடகங்களுக்கு ஏற்றவர், ஆனால் ஆபத்தில்லாதவர்; அவரது பாணிதான் தீவிரமானது, செயல்பாடுகள் அல்ல. நிறுவப்பட்ட அதிகார அமைப்புகளுக்கு இன்றைய ஜெஸ்ஸி ஜாக்சனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று குறிப்பிட்டது.

அவரது 1988-ஆம் ஆண்டு வரித் தணிக்கை அறிக்கைகள் பொதுவெளியில் வந்தபோது, ஜாக்சன் “முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் ஜனநாயகக் கட்சியைப் பாதுகாப்பதற்காகத் தான் செய்த சேவைகளை, தனது தனிப்பட்ட சொத்துக்களாக மாற்றிக் கொண்டிருப்பதை” அவை வெளிப்படுத்திக் காட்டின என்று அக்காலகட்டத்தில் தி புல்லட்டின் (The Bulletin) பத்திரிகை செய்தி வெளியிட்டது. அவரது மொத்தக் குடும்ப வருமானம் 1984-இல் 59,000ம் டாலர்களிலிருந்து 1987-இல் 200,000ம் டாலர்களுக்கும் மேலாக உயர்ந்தது. ஆனால், அதில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே அவர் அறக்கட்டளைகளுக்கு வழங்கினார். ஜாக்சன் மறைந்தபோது அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 4 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டது — இன்றைய அமெரிக்க அரசியலைக் கட்டுப்படுத்தும் பெரும் தன்னலக் குழுக்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவுதான் என்பதில் ஐயமில்லை.

ஜாக்சனின் பிரதான நடவடிக்கை எப்போதுமே கறுப்பின உயரடுக்கை ஊக்குவிப்பதாக இருந்தது. அதே சமயம், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் நிலையுடன் சேர்ந்து, பெரும்பான்மையான கறுப்பினத் தொழிலாளர்களின் நிலையும் சீராக வீழ்ச்சியடைந்து வந்தது. அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் குறிப்பிட்டது போல, “கறுப்பினத் தொழில் முனைவோருக்கு, குறிப்பாகப் பெரிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு, ஜெஸ்ஸி ஜாக்சன் ஒரு கனிவான தந்தை போன்றவர்.” 2001-ஆம் ஆண்டு அவர் தனது மகன் ஜெஸ்ஸி ஜாக்சன் ஜூனியருடன் இணைந்து ஒரு சுய முன்னேற்றப் புத்தகத்தை வெளியிட்டார். அதன் தலைப்பு: “இது பணத்தைப் பற்றியது!: சுதந்திர சிம்பொனியின் நான்காவது இயக்கம்: செல்வத்தை உருவாக்குவது, மூலதனத்தைப் பெறுவது மற்றும் உங்கள் நிதி கனவுகளை எப்படி அடைவது“ என்றிருக்கிறது.

1980-களுக்குப் பிறகு, ஒரு அரசியல் ஆளுமையாக ஜாக்சனின் செல்வாக்கு மங்கத் தொடங்கியது. அந்தப் பத்தாண்டுகளில், எஃகு மற்றும் வாகன ஆலைகளின் மூடல் முதல் ஹார்மெல் (Hormel) மற்றும் பெல்ப்ஸ் டாட்ஜ் (Phelps Dodge) வேலைநிறுத்தங்கள் வரை, ஜாக்சன் மீண்டும் மீண்டும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மறியல் போராட்டக் களங்களுக்கு சென்று பிரார்த்தனைகளை முன்னெடுப்பதற்கும், “பொறுப்பான” சமரசங்களை வலியுறுத்துவதற்கும் அவர் பயன்படுத்தப்பட்டார். அந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் நினைவு கூர்வது என்னவென்றால், ஜாக்சன் அங்கு வருகிறார் என்றால், பொதுவாக அங்கு பிணம் தின்னும் கழுகுகள் வட்டமிடுகின்றன என்றும், தொழிலாளர்களை அவர்களின் அடிப்படை கோரிக்கைகள் இன்றி அல்லது அதைவிட மோசமான நிலையில் மீண்டும் வேலைக்குத் திருப்பி அனுப்ப ஒரு அழுக்கான துரோகம் தயாராகிவிட்டது என்றே அர்த்தமாகும்.

1989 பிட்ஸ்டன் நிலக்கரி வேலைநிறுத்தம் தொடங்கி 1995 டெட்ராய்ட் பத்திரிகை வேலைநிறுத்தம் மற்றும் 2016 பிளிண்ட் தண்ணீர் நெருக்கடி வரை, அவர் தான் உரிமை கோருவது போல ஒரு வழக்கறிஞராக அல்லாமல், ஒரு சமரசம் செய்பவராகவே தொடர்ந்து தோன்றினார். ஆனால் உழைக்கும் மக்கள் மீது அவருக்கு இருந்த ஆதிக்கம் கடுமையாகக் குறைந்திருந்தது. 2014-இல் மைக்கேல் பிரவுன் என்ற கறுப்பின இளைஞரை பொலிஸ் படுகொலை செய்த பிறகு, மிசூரியின் பெர்குசன் பகுதிக்கு ஜாக்சன் சென்றபோது, மக்கள் அவரை ஏளனமாக வரவேற்றனர்: “ஜெஸ்ஸி, எங்களை காட்டிக்கொடுப்பதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்?” மற்றும் “செயின்ட் லூயிஸில் நீங்கள் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை” என்று முழக்கமிட்டனர்.

ஜனநாயகக் கட்சிக்கு எதிரான எதிர்ப்புகளை அக்கட்சிக்குள்ளேயே அடக்கி வைத்ததன் மூலம், அமெரிக்க அரசியல் பல தசாப்தங்களாக வலதுசாரி கொள்கைகளை நோக்கிச் நகர்த்துவதற்கு வசதி செய்து கொடுத்ததோடு, ஜாக்சனும் அதில் ஒரு பகுதியாக இருந்தார். ட்ரம்ப் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதால், அது இப்போது ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. அரசியல் சாசனத்தின் மீது ஒரு போரைத் தொடுத்துக் கொண்டிருக்கும் ட்ரம்ப், பெரும் செல்வந்தர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, கடந்த காலத்தின் பிற்போக்குத்தனமான அழுக்குகள் அனைத்தையும், குறிப்பாக இனவாதம் மற்றும் பேரினவாதத்தின் மிகவும் பின்தங்கிய வடிவங்களையும் மீண்டும் முன்னுக்குக் கொண்டு வருகிறார்.

எவ்வாறிருப்பினும், ஆளும் வர்க்கம் இப்போது போராட்டக் களத்தில் இறங்கியுள்ள தொழிலாள வர்க்கம் எனும் ஒரு மாபெரும் சமூக சக்தியை எதிர்கொண்டுள்ளது. எப்போதும் திருப்தியடையாத முதலாளித்துவத்தின் நலன்களுக்காக, தொழிலாளர்களைச் சூறையாடும் அதிகார நிறுவனங்களுக்குள்ளேயே மக்களின் சமூகக் கோபத்தைத் திசைதிருப்பி விடுவதற்காகவே ஜாக்சன் சிவில் உரிமை இயக்கத்தின் நினைவுகளைப் பயன்படுத்தியுள்ளார். இப்போது ஜாக்சன் மீது ஆளும் வர்க்கம் காட்டும் இந்த ஏக்கமானது, அடிப்படையில், அதன் நம்பகத்தன்மையை வேகமாக இழந்து வரும் ஒரு வகையான சமூக வாய்வீச்சுக்கான ஏக்கமே ஆகும்.

Loading