செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சியும் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கார்ல் மார்க்ஸால் அபிவிருத்தி செய்யப்பட்ட விஞ்ஞான வரலாற்றுப் சடவாத வழிமுறையின் மையத்தில், புரட்சியின் புறநிலை அடித்தளங்கள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் அவை அபிவிருத்தி அடைந்துள்ள சமூக உறவுகளுக்கும் இடையிலான முரண்பாட்டில் காணப்படுகின்றன என்ற புரிதலில் உள்ளது.

இந்த அடித்தள கருத்தாக்கம் முதன்முதலில் விரிவாக விளக்கப்பட்டதிலிருந்து, கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலத்தில், இந்த முரண்பாடு பொருளாதார நெருக்கடிகள், போர்கள், வர்க்கப் போராட்டத்தின் தீவிரமடைதல் மற்றும் சமூகப் புரட்சி, குறிப்பாக அக்டோபர் 1917 ரஷ்யப் புரட்சி ஆகியவற்றின் வடிவத்தில் வெடித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவின் (AI) (அல்லது இன்னும் சரியாக மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு) அபிவிருத்தி மற்றும் அது ஒரு பெரிய பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடிகளைத் தூண்டும் திறனைக் கொண்டுள்ளது என்ற வளர்ந்து வரும் கவலை ஆகியவை மார்க்ஸால் அடையாளம் காணப்பட்ட முரண்பாடு மீண்டுமொருமுறை வேகமாக மேற்பரப்புக்கு வருகிறது என்பதைக் காட்டுகிறது.

பொருளாதார நடவடிக்கைகளின் ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்தி சக்தியின் ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்திற்கான சாத்தியத்தை AI தனக்குள் கொண்டுள்ளது, இது மனித வரலாற்றில் மிகப்பெரியதாக இருக்கலாம்.

ஆனால் அது, தனக்குள்ளே தனியுடைமையை அடிப்படையாகக் கொண்ட சமூக உறவுகளின் அமைப்புமுறையான முதலாளித்துவ சந்தை மற்றும் இலாப அமைப்புமுறையுடன் ஒரு நேருக்கு நேர் மோதலுக்கு உள்ளாகிறது. இந்த மோதல் உற்பத்தித்திறனில் அளப்பரிய வளர்ச்சிகளைக் கொண்டுவரும் அதேவேளை, இந்த அபிவிருத்தியே பொருளாதார மற்றும் நிதிய நெருக்கடிகள் மற்றும் சமூகப் பேரழிவை விளைவிக்கும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அச்சங்கள் இரண்டு அடிப்படை வடிவங்களில் வெளிப்படுகின்றன. முதலாவதாக, டிரில்லியன் கணக்கான டாலர்களில் இயங்கும் AI தரவு மையங்களில் மிகப்பெரியளவிலான முதலீடுகள், லாபத்தைத் திரும்பப் பெறுவதற்கு போதுமான வருவாயை உருவாக்காது என்பதற்கான சாத்தியக்கூறு. இரண்டாவதாக, பொருளாதார மற்றும் நிதி நடவடிக்கைகளின் ஒரு பரந்த பிரிவில் AI-ஐப் பயன்படுத்துவது, பல தசாப்தங்களாக இருந்து வரும் பல நிறுவனங்களை முற்றிலுமாக அழித்துவிடும், மேலும் அவற்றுக்கு ஆதரவளித்த நிதி நிறுவனங்கள், குறிப்பாக தனியார் கடன் நிறுவனங்களுக்கு, ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும்.

நவம்பர் 2022-ல் OpenAI-யின் ChatGPT வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து முன்னேற்றமடைந்த AI-க்கான ஆரம்ப வணிக மாதிரி என்னவென்றால், அமேசான்(Amazon), கூகுள்(Google), மைக்ரோசாப்ட்(Microsoft), மெட்டா(Meta) மற்றும் பலர் ஹைப்பர்ஸ்கேலர்கள் (hyperscalers) எனப்படும் நிறுவனங்கள் செய்யும் பிரம்மாண்டமான முதலீடுகளும், என்விடியா (Nvidia) உருவாக்கிய உயர்தர சிப்புகளும் இணைந்து, AI-யில் ஒரு ஏகபோக ஆதிக்கத்தை உருவாக்கி, அதன் மூலம் அவர்கள் அதி-இலாபங்களைப் பெற்று தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாகும்.

செயற்கை நுண்ணறிவு முதலீடுகளைப் பற்றிய CNBC‑யின் விளக்கப்படம் [Photo: CNBC]

ஆனால் இந்த “மகிழ்ச்சியான நிலைமைகள்” பல முனைகளில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. முக்கிய நிறுவனங்களுக்கிடையேயான நிதி ஏற்பாடுகள், குறிப்பாக ஒரு நிறுவனம் அதன் தயாரிப்புகளை வாங்குவதற்கு உதவும் வகையில் மற்றொரு நிறுவனத்திற்குப் பணம் வழங்கும் சுழற்சி முறை, நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட dot.com குமிழிக்கு ஒப்பான ஒரு போலியான நிலையை உருவாக்கியுள்ளதா என்பது குறித்து கவலை நிலவுகிறது.

சுழற்சி முறையிலான ஒப்பந்தங்கள் தற்காலிகமாக ஒரு நம்பிக்கையையும் பொருளாதார வளர்ச்சியையும் வெளிப்படுத்துவது போல் தோன்றலாம், ஆனால் இறுதிப் பகுப்பாய்வில்,  இந்த எல்லைகளுக்கு வெளியே, AI-ஐ எவ்வளவு அளவில் சமூகமும் தொழில்துறையும் ஏற்றுக்கொள்கின்றன என்பதே லாபகரத்தன்மையை நிர்ணயிக்கும்.

இந்த மாத தொடக்கத்தில் அமேசான் வெளியிட்ட ஒரு அறிவிப்பிற்கு கிடைத்த எதிர்வினையில், AI-க்கான மூலதனச் செலவு லாபத்தை விட அதிகமாக உள்ளது என்ற கவலைகள் காணப்பட்டன. 2026-ஆம் ஆண்டில் அதன் முதலீடு, கடந்த ஆண்டு இருந்த 130 பில்லியன் டாலரிலிருந்து அதிகரித்து 200 பில்லியன் டாலராக இருக்கும் என்ற செய்தியால், அதன் பங்கு விலை வீழ்ச்சியடைந்தது. கடந்த நவம்பரில் உச்சத்திலிருந்த அமேசான் பங்குகள்  இப்போது 20 சதவீதம் சரிந்துள்ளன.

மைக்ரோசாப்ட், என்விடியா மற்றும் மெட்டா ஆகியவற்றின் பங்கு விலையிலும் குறிப்பிடத்தக்க சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய பைனான்சியல் ரிவ்யூ (Australian Financial Review) ஒரு  சமீபத்திய கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல, “திடீரென, அமேசான் போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்யும் பிரம்மாண்டமான தொகைகள் வருவாயை வழங்கும் என்பதில் முதலீட்டாளர்கள் மிகவும் சந்தேகத்துடன் உள்ளனர்.”

போதுமான வருமானத்தை ஈட்ட முடியுமா என்ற கேள்விக்கு அப்பால், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஏற்படும் மதிப்பு இழப்பு என்ற ஒரு பிரச்சினையும் உள்ளது. அதாவது, பயன்பாட்டினால் ஏற்படும் தேய்மானம் அல்ல, மாறாக, ஒரு சிறந்த தயாரிப்புப் பொருள் உருவாக்கப்படுவதால் ஏற்படும் மதிப்பு குறைவதைக் குறிக்கிறது

ஒரு கட்டத்தில் மேம்பட்ட தன்மையையும் அதிக இலாபத்தையும் அனுபவிக்கும் ஒரு கண்டுபிடிப்பு, அதை விரைவாக இழக்கக்கூடும் என்பதை தொழில்நுட்பத்தின் வரலாறு காட்டுகிறது. நீண்ட காலத்திற்கு முன்பு Blackberry  செல்போன் மிகவும் பிரபலமாக இருந்தது —அதன் புதிய கண்டுபிடிப்புகள் காரணமாக ஒவ்வொருவரும் அதனை வைத்திருக்க விரும்பினர். ஆனால் அது மிக விரைவாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டு பெரும்பாலும் வரலாற்றிலிருந்து மறைந்துவிட்டது.

இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ள AI-இன் வளர்ச்சியில் இதேபோன்ற ஒரு நிலை உருவாகும் வாய்ப்பு நிச்சயமாக உள்ளது. இதன் விளைவாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட பிரம்மாண்டமான முதலீடுகள் “ மதிப்பிழந்து சிக்கித் தவிக்கும் சொத்துக்களாக” மாறக்கூடும். ஆனால் அவை தங்கள் மதிப்பை இழந்தாலும், அவற்றுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்ட கடன்கள் நீடிக்கும்.

2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கா விதித்த தடைகளின் காரணமாக குறைந்த சக்தி கொண்ட சிப்புகளைப் பயன்படுத்தி, சந்தையில் உள்ளவற்றுக்கு நிகரான தரத்தில் செயல்படும், ஆனால் மிகக் குறைந்த செலவில், ஒரு சாட்பாட்டை சீன தொடக்க நிறுவனமான (start-up)  டீப்‑சீக் (DeepSeek) உருவாக்கியது என்ற செய்தியால் முக்கிய AI நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் அதிர்ச்சியடைந்தபோது, இந்த சாத்தியக்கூறுக்கான ஒரு அறிகுறி தெரிந்தது.

இந்த பிரச்சினைகள், இலாப அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் AI‑யின் “தோல்விகள்” என்று வகைப்படுத்தப்படக்கூடியவற்றைச் சார்ந்தவையாகும். அதாவது, இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய மூலதன முதலீடுகளுக்கு போதுமான இலாபத்தை ஈட்டுவதற்கு தேவையான வருவாயை உருவாக்க முடியாத நிலை உருவாகும் விளைவுகளும், அதனால் பேரழிவான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகள் உருவாகும் சாத்தியமும் இதில் அடங்கும்.

ஆனால், AI-யின் “வெற்றிகள்” என்று கருதப்படுபவை, இலாப அமைப்புமுறையின் மற்றும் அதன் நிதி அமைப்புகளின் ஸ்திரத்தன்மைக்கு எந்த வகையிலும் குறைவான அபாயகரமானவை அல்ல. ஏனெனில், AI-யை அறிமுகப்படுத்துவது, உழைப்பை ஒழிப்பதன் அடிப்படையிலும், இப்போது AI-யால் மாற்றப்பட்டு வரும் ஒரு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட முழு நிறுவனங்களையும் துடைத்தெறியும் சாத்தியக்கூறுகளிலும் செலவுகளைக் குறைத்து கூடுதல் இலாபத்தை உருவாக்குகிறது.

இந்த மாதம் இதுவரை நடந்த நிகழ்வுகள், ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் வெளிப்படுத்துகின்றன. குறியீடுகளை உருவாக்கும் திறன் உட்பட பல செயல்களைச் செய்யக்கூடியதுடன், வாடிக்கையாளர் சேவை மற்றும் சட்ட சேவைகள் போன்ற பணிகளை தானியக்கப்படுத்தும் திறனும் கொண்ட Claude Cowork தளத்தை AI நிறுவனம் ஆன்த்ரோப்பிக் (Anthropic ) வெளியிட்டது. இது மென்பொருள் நிறுவனங்களின் உலகில் ஒரு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

JP மோர்கனின் மென்பொருள் பங்குகள் குறியீடு 7 சதவீதம் சரிந்தது, இதனால் இந்த ஆண்டின் மொத்த சரிவு 18 சதவீதமாக உயர்ந்தது.

இந்த மாதத்தில் மட்டும், உலகின் இரண்டு பெரிய மென்பொருள் நிறுவனங்களான சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce) மற்றும் சர்வீஸ்நவ் (ServiceNow) ஆகியவற்றின் சந்தை மதிப்பு ஐந்தில் ஒரு பங்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்று பைனான்சியல் டைம்ஸின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

மென்பொருள் சந்தை தனியார் கடன் நிறுவனங்களின் இலக்காக இருப்பதால், இதில் பெரியளவு நிதியியல் தாக்கங்கள் உள்ளன. கடந்த பத்தாண்டுகளில், தனியார் பங்கு நிதிகளால் நிதியளிக்கப்பட்ட மென்பொருள் நிறுவனங்களின் கையகப்படுத்துதல்கள், அவற்றின் டிரில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்த நடவடிக்கைகளில் சுமார் 40 சதவீதத்தைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய முதலீட்டு வங்கியான UBS, மிக மோசமான சூழலில், பெருநிறுவனக் கடன் வாங்குபவர்களிடையே AI மூலம் உருவாக்கப்பட்ட “தீவிரமான” சீர்குலைவு காரணமாக, அமெரிக்காவில் தனியார் கடன் துறையில் திவால் விகிதங்கள் 13 சதவீதம் வரை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ளது. UBS ஆய்வாளர்களின்படி, 1.7 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள  தனியார் கடன் சந்தையில் 35 சதவீதம் வரை AI-யால் ஏற்படும் சீர்குலைவு அபாயத்திற்கு ஆளாகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட நிதி‑தொழில்நுட்ப (fintech)  நிறுவனமான ஆல்ட்ரூயிஸ்ட் (Altruist), தனது AI தளமான ஹேசலில் (Hazel) ஒரு வரித் திட்டமிடல் கருவியை அறிமுகப்படுத்தியதால், இந்த வாரம் சந்தைகள் மற்றொரு AI அதிர்ச்சியைச் சந்தித்தன. சார்லஸ் ஷ்வாப் (Charles Schwab) மற்றும் மோர்கன் ஸ்டான்லி (Morgan Stanley) உள்ளிட்ட நிதிச் சேவை நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக விற்கப்பட்டன.

வரி அறிக்கைகள் மற்றும் ஊதியச் சீட்டுகளைப்  படித்த பிறகு, நிமிடங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்காக உத்திகளை உருவாக்க இந்த புதிய கருவி ஆலோசகர்களுக்கு உதவுகிறது என்று அது கூறியது. ஓரளவு மிகைப்படுத்தல் இருந்தாலும், ஆல்ட்ரூயிஸ்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் வெங்கின் கருத்துக்கள் இந்த வளர்ச்சிகளின் திசையைக் குறிக்கின்றன.  

செல்வ மேலாண்மை (wealth management) துறையில் உள்ள “எந்த தளத்தையும்” ஹேசல் மாற்றக்கூடும் என்றும், முன்பு முழு அணிகளின் பணியாளர்களால் தேவைப்பட்ட பணிகளை AI மூலம் “ஒரு மாதத்திற்கு 100 டாலருக்குள்” திறம்படச் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

கார்ல் மார்க்ஸ், AI‑யின் குறிப்பிட்ட வளர்ச்சியை முன்கூட்டியே கணிக்கவில்லை. ஆனால், அதை உருவாக்கிய புறநிலை தர்க்கத்தை அவர் சுட்டிக்காட்டினார். மூலதனத்திற்கான (Capital) தனது “ முதற்கட்ட வரைவான” க்ருண்ட்ரிஸ்ஸில் (Grundrisse), மூலதனம் “அறிவியலின் மற்றும் இயற்கையின் அனைத்து சக்திகளையும் உயிர்ப்பிக்கிறது” என்றும், அதன் மூலம் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளத்தை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் அதே நேரத்தில், ஊதிய உழைப்பின் சுரண்டல் மற்றும்  இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பின் கட்டமைப்புக்குள் இந்த வளர்ச்சிகளை அது கட்டுப்படுத்தி வைத்துள்ளது.

“உற்பத்தி சக்திகளும் சமூக உறவுகளும்—சமூக தனிநபரின் வளர்ச்சியின் இரண்டு வேறுபட்ட பக்கங்கள்—மூலதனத்திற்கு வெறும் கருவிகளாகவே தோன்றுகின்றன; அதன் வரையறுக்கப்பட்ட அடித்தளத்தில் உற்பத்தியை முன்னெடுக்கப் பயன்படும் சாதனங்களாக மட்டுமே அவை கருதப்படுகின்றன. ஆனால் உண்மையில், இந்த சக்திகளே அந்த அடித்தளத்தை முழுவதுமாக தகர்த்தெறியக்கூடிய பொருள்சார்ந்த நிபந்தனைகளாக உள்ளன.”  (மார்க்ஸ் க்ரூண்ட்ரிஸ் ப.706.)

இந்த “தகர்த்து எறிதல்” என்பது பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளின் வடிவத்தில் வெளிப்படும். அது வர்க்கப் போராட்டத்தின் ஒரு வெடிப்பைக் கொண்டுவரும். அதன் ஆரம்ப அறிகுறிகள் ஏற்கனவே காணப்படுகின்றன. இதில் தொழிலாளர் வர்க்கம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின்  அடிப்படையில் போராட வேண்டும்.  

அந்தப் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கம்  கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெருமளவில் வலுப்பெறும். ஏனெனில் சோசலிசத்தின் “சாத்தியமின்மை” குறித்து முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஆதரவாளர்களும் முன்வைக்கும் அனைத்து எதிர்ப்புகளும்—பொருளாதாரத்தை நனவுபூர்வமாக திட்டமிட்டு நடத்த முடியாது, உண்மையான சமூக சமத்துவத்தை உறுதிசெய்யப் பொருள் வளங்கள் பற்றாக்குறையாக உள்ளன, மனிதர்களை இழிவான உழைப்பிலிருந்து விடுவிப்பது சாத்தியமற்றது, முதலாளித்துவ அமைப்புமுறை மிகவும் சிக்கலானது என்பதால் சந்தையின் கண்மூடித்தனமான அழிவூட்டும் சக்தியை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பைத் தவிர வேறு எதுவும் சாத்தியமில்லை என்பன போன்றவை—AI-யின் வருகையால் “முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டுள்ளன”.

Loading